காலநிலை மறுப்பு: அரசியலும் உளவியலும்

நீங்கள் பதற்றப்பட வேண்டும், பீதியடைய வேண்டும். என்னை தினமும் உலுக்குகிற பயம் உங்களுக்கும் வரவேண்டும். பிறகு நீங்கள் செயல்படத் தொடங்கவேண்டும். ஒரு அவசரநிலையின் வேகத்துடன் நீங்கள் செயலில் இறங்கவேண்டும்.”

காலநிலைச் செயற்பாட்டாளர் கிரெட்டா துன்பர்க்கின் புகழ்பெற்ற வரிகள் இவை. மனித இனத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியிருக்கும் மிகப்பெரிய பிரச்சினைக்கு முன்னால் நாம் நின்றுகொண்டிருக்கிறோம். கொரோனா கொள்ளைநோய் பரவத் தொடங்கியபோது செய்தி ஊடகங்கள் ஒவ்வொன்றிலும் அது எவ்வாறு தலைப்புச் செய்தியாக பேசப்பட்டதோ, அதே தீவிரத்துடன் காலநிலை மாற்றமும் பேசப்படவேண்டும். ஆனால், திட்டங்களைத் தீட்டுவதற்கும் செயலில் இறங்குவதற்கும் முக்கியத் தடையாக இருக்கிறது காலநிலை மறுப்பு (Climate change denial).

முதலில் இது காலநிலை மாற்றம் தொடர்பான சந்தேகம் (Climate change skepticism) என்பதாகத்தான் இருந்தது. தொடர்ந்து அழுத்தமான தரவுகளை அறிவியலாளர்கள் முன்வைத்தபின்பும் “இல்லை” என்று சொல்பவர்களை மறுப்பாளர்கள் என்றுதானே சொல்லமுடியும்? அதனால் இது காலநிலை மறுப்பு என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது.

காலநிலை மறுப்பில் பல்வேறு அம்சங்களும் வகைமைகளும் உண்டு. காலநிலை மறுப்பாளர்கள் எழுப்பும் எல்லா கேள்விகளுக்குமே அறிவியல்பூர்வமான விளக்கங்களும் உண்டு. இந்தக் கட்டுரை அவர்களின் கேள்விகளுக்குள் செல்லாமல், காலநிலை மறுப்புக்கான அரசியல், உளவியல் காரணிகளை மட்டும் அலசுகிறது. மறுப்பிற்கான காரணங்களைப் புரிந்துகொள்வதன் மூலம் மட்டுமே காலநிலை சார்ந்த விவாதங்களை நாம் இன்னும் தெளிவாக முன்னெடுத்துச் செல்ல முடியும்.

காலநிலை மறுப்பின் அரசியல்

  1. எண்ணெய் நிறுவனங்களின் செயல்பாடுகள்

காலநிலை மாற்றத்தைப் பொறுத்தவரை, எண்ணெய் நிறுவனங்களின் லாபி மிகத் துல்லியமாகக் காய்நகர்த்துகிறது. BP, Shell, ExxonMobil உள்ளிட்ட நிறுவனங்கள், காலநிலை மாற்றம் நடக்கவேயில்லை என்று மக்களை நம்பவைக்கும் திட்டங்களுக்காக மட்டும் ஆண்டுக்குப் பல லட்சம் டாலர்கள் செலவழிக்கின்றன. “காலநிலை மாற்றம் நடக்கவேயில்லை”, “நடந்தாலும் அதற்கு மனிதன் காரணமில்லை”, “மனிதன் காரணம் என்றாலும் அதில் எண்ணெய் போன்ற எரிபொருட்களின் பங்கு குறைவுதான்” என்று அறைகூவல்களைத் திருத்திக்கொண்டேயிருக்கிற நிறுவனங்கள், தங்கள் தொழிலுக்கு எந்த பாதிப்பும் வராத அளவில் விவாதத்தைத் திசைதிருப்பிக் கொண்டிருக்கின்றன.

பெரு நிறுவனங்கள் என்பதால் சமூக வலைத்தளங்களில் காலநிலை மாற்றம் பற்றிய தகவல்களைக் கட்டுப்படுத்துவது, காலநிலை மறுப்பை விளம்பரப்படுத்துவது என்று பல உத்திகளை அவற்றால் கையாள முடியும். காலநிலை மாற்றம் சார்ந்த மொத்த ட்வீட்களில் நான்கில் ஒரு பங்கு இயந்திரங்களால் செயல்படுத்தப்படும் ட்விட்டர் கணக்குகளிலிருந்து (Twitter bots) வருகின்றன எனவும், அவை எல்லாமே காலநிலை மறுப்பை ஆதரிப்பவை என்றும் நியூயார்க் பல்கலைக்கழகத்தின் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. அடுத்த சில ஆண்டுகளில் இதுபோன்ற ட்விட்டர் பாட் கணக்குகள் காலநிலை மாற்றம் பற்றிய விவாதங்களின்போது மிகப்பெரிய இம்சையாக மாறும்.

பல எண்ணெய் நிறுவனங்கள் நேரடியாகவே களத்திலும் இறங்கி மிக மோசமாக எதிர்வினையாற்றத் தொடங்கிவிட்டன. 2020-இல் கனடாவைச் சேர்ந்த எக்ஸ்சைட் என்ற ஆற்றல் நிறுவனம், கிரெட்டா துன்பர்க்கைப் பாலியல் வன்புணர்வு செய்வது போன்ற குறியீட்டு படம் ஒன்றை ஸ்டிக்கராக அச்சிட்டு விநியோகித்தது. தன் வழக்கமான தைரியத்துடன் கிரெட்டா அதை எதிர்கொண்டார் என்றபோதும், நிறுவனங்கள் இந்த அளவுக்குக் கீழ்த்தரமாக எதிர்வினையாற்றும் என்பதை எதிர்பார்க்காத பலர் திகைத்துப்போனார்கள்.

காலநிலை மாற்றம் தொடர்பான எல்லா தீர்வுகளும் எண்ணெய் நிறுவனங்களின் தொழிலைக் குறிவைக்கின்றன என்பதால் அவற்றின் எதிர்வினையும் அடுத்த சில ஆண்டுகளில் தீவிரமடையும். உலக நாடுகள் எண்ணெய் நிறுவனங்களின் லாபியை எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

  1. குற்றம் சாட்டும் பெருவிளையாட்டு

காலநிலை மாற்றம் தொடர்பான விவாதங்களில் நடுநாயகமாக அமர்ந்திருக்கும் ஒரு கேள்வி – “யார் குற்றத்தை ஏற்றுக்கொள்ளபோகிறார்கள்?” என்பதுதான். இதைப் பற்றிய நுணுக்கமான ஒரு கட்டுரையை எழுதியிருக்கும் பீட்டர் ரூடியாக்-கௌல்ட், இந்தப் பழிபோடும் விளையாட்டில் இருக்கும் பல விவாதங்களை முன்வைக்கிறார்:

  1. காலநிலை மாற்றத்துக்கு எல்லாரும் பொறுப்பு, எல்லாருமே குற்றம் இழைத்தவர்கள். மொத்த மனித இனமே பொறுப்பு என்று சொன்னால், எல்லாருமே குற்றவாளிகள்தானே!
  2. காலநிலை மாற்றத்துக்கு யாருமே பொறுப்பு இல்லை. “மனித இனம் பொறுப்பு” என்று சொன்னால், அதற்கு ஒரு முகம் கிடையாது, அது ஒரு தெளிவற்ற சொல்லாடல், அதில் இருப்பவர்கள் பெயரற்ற கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஆகவே, காலநிலை மாற்றத்துக்கு நாம் யாருமே தனிப்பட்டுப் பொறுப்பேற்க வேண்டியதில்லை.
  3. ஒரு சிலர் அதிக குற்றம் இழைத்தவர்கள், சிலர் பாதிக்கப்பட்டவர்கள், எல்லாரின் குற்றமும் ஒரே மாதிரியானது இல்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டில் புதைபடிம எரிபொருட்களை அடிப்படையாகக் கொண்ட சமூகத்தை உருவாக்கிய ஒரு சிறிய வெள்ளையர்கள் குழுவுக்கு அதிகப் பொறுப்பு இருக்கிறது, அவர்கள் பெருங்குற்றவாளிகள். பொதுவாக மேலை நாடுகள், வளர்ந்த நாடுகள் அதிக குற்றம் இழைக்கின்றன, வளர்ந்துவரும் ஏழை நாடுகள் பாதிக்கப்படுகின்றன. இந்தத் தலைமுறை சென்ற தலைமுறையைக் குறை சொல்லிக்கொண்டிருக்கிறது.

“தெற்கு வடக்கைக் குறை சொல்கிறது, சைக்கிள் ஓட்டுபவர்கள் கார் வைத்திருப்பவர்களைக் குறை சொல்கிறார்கள், சமூக செயற்பாட்டாளர்கள் எண்ணெய் நிறுவனங்களை மட்டும் குறை சொல்கிறார்கள், கிட்டத்தட்ட எல்லாருமே ஜார்ஜ் புஷ்ஷைக் குறை சொல்கிறார்கள்” என்று நகைச்சுவையாக எழுதுகிறார் அறிவியலாளர் மார்க் லினஸ்.

உலகளாவிய காலநிலை ஒப்பந்தத்தின்போது நிகழும் விவாதங்களில், இந்தப் பழிபோடும் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துக் குட்டையைக் குழப்பும். கரிம பட்ஜெட், நிதி ஒதுக்கீடு, உமிழ்வுகளின் உச்ச வரம்பு போன்ற எல்லாவற்றிலுமே “இது யாருடைய தவறு?” என்பதுதான் முதல் கேள்வி. யாருடைய தவறு என்று அனைவரும் ஒருமித்து முடிவெடுக்கிறார்களோ, அவர்களிடமே தவறைச் சரிசெய்யும் பொறுப்பும் ஒப்படைக்கப்படுகிறது என்பதாலேயே இது அரசியல் பிரச்சினையாக உருவெடுக்கிறது.

உதாரணமாக, நார்வே நாட்டின் பொருளாதாரத்தை எடுத்துக்கொள்வோம். மேற்குக் கடலின் எண்ணெய்க் கிணறுகளின் மூலம்தான் நார்வே நாட்டுக்கு அதிகபட்ச வருமானம் வருகிறது. ஆனால், அதைச் சுட்டிக்காட்டி ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளில் பேசும்போதெல்லாம் நார்வே பல்வேறு வழிகளில் அதை திசைதிருப்புகிறது:

  1. எங்கள் நாட்டின் ஒட்டுமொத்த கரிம கால்தடம் (Carbon footprint) குறைவு என்பதால் எண்ணெய் எடுப்பதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை.
  2. நாங்கள் பிற மேலை நாடுகளால் ஒடுக்கப்படுகிறோம்.
  3. எண்ணெய் எடுக்கிறோம்தான், ஆனால் மற்ற நாடுகள் அளவுக்கு எடுப்பதில்லை, சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதில்லை.
  4. உலகிலேயே சூழலியல் விழிப்புணர்வு அதிகம் உள்ள குடிமக்களை வரிசைப்படுத்தினால் நார்வே மக்களுக்கு அதில் முக்கிய இடம் உண்டு.

இவற்றை முன்வைத்து, தங்கள் மீதான பழியின் விகிதம் குறைக்கப்படவேண்டும் என்றும், அதனால் ஒப்பந்தங்கள் கடுமையாக இருக்கக்கூடாது என்றும் நார்வே எதிர்பார்க்கிறது.

இது ஒரு சிறு உதாரணம்தான். ஒவ்வொரு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையின் போதும் இதுபோன்ற சில புதிய வாதங்கள் தலைதூக்கி எல்லாரையும் வியப்பில் ஆழ்த்தும். “அவன நிறுத்த சொல்லு, நான் நிறுத்துறேன்” என்றபடி உலகமே பழியைப் பந்தாடிக்கொண்டிருக்கிறது.

  1. அறிவியல் மறுப்பு

இது உலக அளவில் இப்போது வேகமாகப் பரவி வரும் ஒரு பிரச்சினை. காலநிலை என்றில்லை, சமீப காலமாகவே அறிவியலாளர்கள் மீதான சந்தேகமும் அதிருப்தியும் அதிகரித்துவருகிறது. அடுத்தடுத்துத் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் அறிவியலின் ஆதாரத் தன்மையே இங்கு பிரச்சினையாகிவிடுகிறது. “இன்னைக்கு இப்படி சொல்லுவீங்க, நாளைக்கு புதுசா ஆராய்ச்சி பண்ணீட்டு நீங்களே அதை மாத்தி சொல்லுவீங்க, உங்களை எப்படி நம்புறது?” என்ற கேள்வி அடிக்கடி எழுப்பப்படுகிறது.

தொடர் ஆராய்ச்சிகளால் தன்னை செழுமைப்படுத்திக்கொள்வதுதான் அறிவியலின் தன்மை எனும்போது, இதை அறிவியலாளர்களாலும் எளிதில் எதிர்கொள்ள முடிவதில்லை. போலி அறிவியல் (Pseudoscience) வேறு ஒரு பெரிய சிக்கலாக உருவெடுத்திருக்கிறது. உலக அளவில் வலதுசாரிகளின் ஆதிக்கம் அதிகரித்திருப்பது இந்த மனப்பான்மைக்கு ஒரு முக்கியக் காரணம் என்கிறார்கள் மானுடவியல் ஆராய்ச்சியாளர்கள்.

அறிவியலாளர்களை நம்ப முடியாது என்று நிறுவிய பின்பு, அவர்கள் தரும் எச்சரிக்கையை அடிப்படையாகக் கொண்டு எந்தத் தயாரிப்பையும் மேற்கொள்ளத் தேவையில்லை இல்லையா? உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் “காலநிலை மாற்றம் ஒரு வெற்றுப்புரளி, கட்டுக்கதை” (Climate Change is a hoax) என்று அறிவிப்பதன் பின்னணி இதுதான்.

இதில் இன்னொரு நுணுக்கமான அம்சமும் இருக்கிறது. காலநிலை அறிவியல் என்பது மிகவும் சிக்கலானது என்பதால், காலநிலை மாற்றம் சார்ந்த தரவுகளும் சிக்கலானவையாகவே இருக்கின்றன. ஆகவே, “இவர்கள் போலியாக இந்தத் தரவுகளைத் தயாரித்திருக்கிறார்கள்” என்று ஒரு வரியில் ஆராய்ச்சியைத் தாக்கிப் பேசிவிடமுடிகிறது. காலநிலை அறிவியலின் இந்த அம்சம், அறிவியல் மறுப்பாளர்களுக்கு சாதகமாக முடிந்துவிடுகிறது.

  1. பொருளாதார அடிப்படையிலான மறுப்பு

காலநிலை மாற்றம் உண்மைதான் என்று ஏற்றுக்கொள்பவர்கள்கூட, அதை எதிர்கொள்வதற்கான பொருளாதார சூழல் நம்மிடம் இல்லை என்பதால் அதை ஒதுக்கிவிடுகிறார்கள். காலநிலை மாற்றம் ஒரு உலகளாவிய பிரச்சினை என்பதால் அதைத் தீர்க்கிற அளவுக்கு நிதி ஒதுக்க முடியாது என்பது அவர்களது வாதம்.

உண்மையில் இங்கு பிரச்சினையாக இருப்பது தாராளமய பொருளாதாரக் கருத்தாக்கம்தானே தவிர, நிதிப் பற்றாக்குறை அல்ல. இன்னும் சொல்லப்போனால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross Domestic Product) வெறும் ஒரு விழுக்காடு நிதியை செலவழித்தாலே காலநிலை மாற்றத்துக்கான தீர்வைக் கொண்டுவந்துவிட முடியும். ஆனால் பொருளாதாரம் யார் பிடியில் இருக்கிறது என்பதை முன்வைத்தே தீர்வுகள் நிராகரிக்கப்படுகின்றன.

உளவியல் காரணங்கள்

  1. காலநிலை மாற்றத்தைப் பற்றிய குறைவான புரிதல்

அறிவியல் மீதான சந்தேக மனநிலை, இப்போது அதிகரித்துவரும் Fake news பிரச்சினைகள் என்று இதில் பல அம்சங்கள் உண்டு.

ஊடகங்கள் இதைச் சரியாக எடுத்துச் செல்லவில்லை என்று பொதுவாக சொல்லிவிடலாம். ஆனால் ஒவ்வொரு இடத்திலும் சிக்கல் ஒவ்வொரு மாதிரியாக இருக்கிறது.

வளரும் நாடுகளின் ஊடகங்கள் இப்போதுதான் இதைப் பேசுபொருளாக எடுத்திருக்கின்றன. ஆகவே விழிப்புணர்வு ஏற்படுவதற்குத் தாமதமாகிறது.

வளர்ந்த நாடுகளின் செய்தி ஊடகங்களோ இதன் அறிவியலைப் புறக்கணித்துவிட்டு, எச்சரிக்கைச் செய்திகளை மட்டுமே பகிர்ந்துவருகின்றன. இது ஒரு முக்கியமான குற்றச்சாட்டு. தொடர்ந்த எச்சரிக்கைச் செய்திகளை மனித மனம் புறக்கணிக்கும் என்பதுதான் உளவியல். ஆகவே, சைரன் சப்தத்துடன் வரும் பேரிடர் செய்திகளைவிட, காலநிலை மாற்றத்தின் அறிவியலைப் பொறுமையாக விளக்கும் நிகழ்ச்சிகளே இப்போதைய முக்கியமான தேவை.

  1. காலநிலை மாற்றத்தின் பிரம்மாண்டம்

“கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு”, “2050 ஆண்டுக்குள் பூமியின் மொத்த பரப்பளவில் 12 சதவிகிதம்…” போன்ற வாக்கியங்களை மனித மூளையால் எதிர்கொள்ள முடிவதில்லை. அது நம் புரிதலுக்கும் பார்வைக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. “நூறு ரூபாய் கடன் இருக்கிறது என்றால் அதை எப்படிக் கட்டவேண்டும் என்று யோசிக்கலாம். நூறு லட்சம் கோடி கடன் இருக்கிறது என்றால் நிச்சயம் கடனைக் கட்டமுடியாது என்றபடி சிறைக்குச் செல்ல நாம் தயாராகிவிடுவோம் இல்லையா, அதைப் போலத்தான் காலநிலை மாற்றத்தையும் நாம் அணுகுகிறோம்” என்கிறார் காலின் ஜோஸ்ட். தரவுகளின் பிரம்மாண்டம் நம்மைக் குழப்புகிறது. இத்தனை பெரிய பிரச்சினையை எப்படி எதிர்கொள்வது என்பது புரியாமல் நாம் பியானோ வாசிக்கும் பூனையின் காணொளியைப் பார்க்கத் தொடங்கிவிடுகிறோம்.

காலநிலை மாற்றம் தொடர்பான விவரங்கள் புனைவுகளில் குறைவாக இருப்பதற்கும் இதே காரணத்தைத்தான் முன்வைக்கிறார் எழுத்தாளர் அமிதவ் கோஷ். “இந்தப் பிரச்சினையை, பிரச்சினையின் தீவிரத்தை மனிதனால் கற்பனை செய்ய முடியவில்லை, அதனால் கற்பனைகளிலும் புனைவுகளிலும் இது தென்படுவதேயில்லை” என்கிறார்.

  1. காலநிலை பதற்றம் (Climate anxiety)

ஓரளவு இதன் தீவரம் புரிந்தாலுமே, காலநிலை மாற்றத்தால் ஏற்படப்போகிற தாக்கங்கள் நம்மைப் பதற்றமடையச் செய்கின்றன. உணவுப் பஞ்சம், தண்ணீர்ப் பஞ்சம், கடற்கரையோர நகரங்கள் எதிர்கொண்டிருக்கும் கடல்மட்ட உயர்வு, வாழ்வாதார இழப்பு, வளங்கள் குறைவாக இருப்பதால் நிகழவிருக்கும் போர்கள் என்று எல்லா பாதிப்புகளும் நம்மைத் திகைக்கச் செய்கின்றன. நம் வாழ்வைப் பற்றிய நம் கற்பனைகளை, ஆசைகளை இது அடித்து நொறுக்குகிறது. நாம் நினைத்ததுபோன்ற மகிழ்ச்சியான வாழ்வு நமக்குக் கிடைக்காதோ என்ற எண்ணம் வருகிறது. ஒன்றுக்கொன்று முரணான எண்ணங்கள் இவ்வாறு நம்மைத் துரத்துவதை Cognitive dissonance என்பார்கள். இது நம் மூளையை மிகவும் அசௌகரியமாக உணரவைக்கும். இப்படி நிகழும்போதெல்லாம் மூளை இந்தப் புதிய செய்தியை (அதாவது காலநிலை மாற்றம் தொடர்பான எச்சரிக்கையை) மழுங்கடித்துவிடும்.

  1. தனிப்பட்ட நம்பிக்கைகள்

காலநிலை மறுப்புக்கு தனிப்பட்ட நம்பிக்கைகளும் வாழ்க்கை சூழலும் ஒரு முக்கியக் காரணம். 2003-இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், வெள்ளையர்கள், ஆண்கள், வலதுசாரிகள்/வலதுசாரி மனப்பான்மை கொண்ட நடுநிலையாளர்கள், சுற்றுச்சூழல் விழுமியங்கள் குறைவாகக் கொண்ட சமூகங்களில் வளர்க்கப்பட்டவர்கள் ஆகிய அனைவரும் காலநிலை மறுப்பாளர்களாக இருக்கிறார்கள் என்று தெரியவந்திருக்கிறது. பாலினம், வயது, சமூக விழுமியங்கள், அரசியல் சார்பு என்று எல்லாவற்றுக்கும் இந்த மனப்பான்மையில் பங்கு இருக்கிறது. இந்த ஒவ்வொரு அம்சத்தைப் பற்றியுமே தனித்தனிக் கட்டுரைகள் எழுதுமளவிற்குத் தரவுகள் இருக்கின்றன. அதே சமயம், இவை எல்லாமே ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதையும் நாம் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்.

  1. இடமும் காலமும்

காலநிலை மறுப்பின் மற்றொரு முக்கியமான உளவியல் அம்சம், “காலநிலை மாற்றம் இங்கு, இப்போது இல்லை” என்று நம்புவது. 2009-இல் பதினெட்டு நாடுகளைச் சேர்ந்த மூவாயிரம் நபர்களிடம் கருத்துக்கணிப்பு ஒன்று நடத்தப்பட்டது. அதில் கிட்டத்தட்ட 15 நாடுகளைச் சேர்ந்தவர்கள், “காலநிலை மாற்றம் நடந்துகொண்டிருப்பது உண்மைதான், ஆனால் அது எங்கள் நாட்டில் இல்லை” என்று சொல்லியிருக்கிறார்கள்.

மேலை நாடுகளைச் சேர்ந்தவர்கள், இது வளரும் நாடுகளையும் தீவு நாடுகளையும் மட்டும் பாதிக்கும் என்று நினைக்கிறார்கள். வெப்ப மண்டலங்களைச் சேர்ந்தவர்கள், “காலநிலை மாற்றம் என்றால் துருவப் பகுதிகளில் பனிக்கட்டி உருகுவது” என்று நினைக்கிறார்கள். இப்போதைய தலைமுறையினரோ, காலநிலை மாற்றம் என்பது அடுத்த தலைமுறைக்கான பிரச்சினை மட்டுமே என்று நம்புகிறார்கள். இங்கே, இப்போது இருக்கும் பிரச்சினை இது என்ற எண்ணம் வந்தால் மட்டுமே செயல்பாட்டை நோக்கி ஒருவர் செலுத்தப்படுவார்.

  1. “என்னால் என்ன செய்ய முடியும்?”

ஒரு தனிமனிதனால் எதிர்கொள்ளமுடியாத அளவுக்குக் காலநிலை மாற்றம் ஒரு பெரிய அச்சுறுத்தல்தான். ஆனாலும், இதன் பாதிப்பு ஒவ்வொரு தனிமனிதனையும் தாக்கிக்கொண்டிருக்கிறது என்பதே நிதர்சனமான உண்மை. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான சரியான திட்டங்களை முன்வைக்கும் அரசுகளைத் தேர்ந்தெடுப்பது, தீர்வுகளை முன்னெடுக்குமாறு தலைவர்களுக்கு அழுத்தம் கொடுப்பது, காலநிலை மாற்றம் தொடர்பான சரியான புரிதலை ஏற்படுத்திக்கொள்வது ஆகியவை தனிமனிதனால் செய்யக் கூடியவைதான்.

காலநிலை மாற்றத்துக்கான செயல்பாடுகளில் உடனே பயன் கிடைத்துவிடாது, கிடைத்தாலும் அது நம் கண்ணுக்குத் தெரிந்துவிடாது. பலர் செயல்படாமல் இருப்பதற்கும், செயல்படுவதில் பலர் சுணக்கம் காட்டுவதற்கும் அது ஒரு முக்கியக் காரணம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, அறிவியல் மீதும் ஊடகங்கள் மீதும் சமீப காலங்களில் அதிகரித்துவரும் பொதுவான சந்தேகம் ஒரு முக்கியமான மனத்தடையாக இருக்கிறது என்று தோன்றுகிறது. ஒரு ஆராய்ச்சிக் கட்டுரைக்காக பொதுமக்களிடையே காலநிலை மாற்றம் பற்றி விவாதித்தபோது, “இயற்கை சார்ந்த, எளிமையான பழைய வாழ்க்கைக்குத் திரும்புவதுதான் ஒரே தீர்வு” என்று பலர் உறுதியாக சொன்னார்கள். இவர்கள் குறிப்பிடும் பழைய வாழ்க்கை என்ன என்பது முக்கியமான கேள்வி. இது தர்மசங்கடமான அரசியல் மற்றும் சமூகக் கேள்விகள் பலவற்றை எழுப்பக்கூடிய ஒரு சொல்லாடல். தவிர, அடிப்படைவாதமும் பழமைவாதக் கருத்தாக்கங்களும் பெருகிவரும் சூழலில், ஒரு சிறு தயக்கத்தோடுதான் “பண்டைய வாழ்க்கை முறை” என்பதை அணுகவேண்டியிருக்கிறது.

காலநிலை மறுப்பு பற்றிய உளவியல் ஆராய்ச்சிகள் மேலை நாடுகளிலேயே அதிக அளவில் நடத்தப்படுகின்றன. இங்கும் அதுபோன்ற ஆய்வுகள் விரிவாக நடத்தப்பட்டால் ஓரளவு தெளிவு கிடைக்கலாம்.

உயிருக்கு ஆபத்து என்று வரும்போது, நமக்குள் எங்கிருந்தோ அசுர பலம் வருவதை வரலாறு தொடர்ந்து நிரூபித்துவருகிறது. இதை அறிவியலாளர்கள் Hysterical strength என்கிறார்கள். ஆபத்து என்று தெரிந்ததும் ஒரு பெரிய வண்டியையே தனியாளாகத் தூக்கி அடியிலிருந்த குழந்தையை மீட்கும் தாய்மார்களின் பலம் அதனால் வருவதுதான்.

காலநிலை மாற்றம் என்பது அனைவருக்குமான ஆபத்து. காலநிலை மறுப்பை நோக்கி நம்மை உந்தித் தள்ளுகிற உளவியல், அரசியல் காரணங்களை உதறும் அசுர பலத்தை அறிவியல் தரும் என்று நம்புவோம்.

தரவுகள்

  1. Bots and online climate discourses: Twitter discourse on President Trump’s announcement of U.S. withdrawal from the Paris Agreement. Thomas Marlow et al, 2020.
  2. The Social Life of Blame in the Anthropocene, Peter Rudiak-Gould, 2015.
  3. A Revolt Against Expertise: Pseudoscience, Right-Wing Populism, and Post-Truth Politics, Taner Edis, 2020
  4. The Dragons of Inaction: Psychological Barriers That Limit Climate Change Mitigation and Adaptation, Robert Gifford, 2011.
  5. Scepticism and Uncertainty about Climate Change: Dimensions, Determinants and Change over Time, Lorraine Whitmarsh, 2011.

நாராயணி சுப்ரமணியன் – கடல் உயிரின ஆராய்ச்சியாளர், எழுத்தாளர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.