மா. கிருஷ்ணனின் உலகங்கள்

எழுத்தாளர், இயற்கையியலர், “சூழல்சார் பற்றாளார்”, முனைப்பான இயற்கைப் புகைப்பட ஆர்வலர் என்ற பல ஆர்வங்களைக் கொண்டிருந்த மா. கிருஷ்ணன் (1912 -1996) இயற்கை குறித்து ஆங்கிலத்தில் மிகச் சுவாரசியமாக எழுதியவர்களில் தலைசிறந்தவர். இயற்கையைப் பற்றிய வெகுஜனப் புரிதலில் மாற்றம் ஏற்படுத்துவதற்கு கிருஷ்ணனைப் போல் செயல்பட்டவர்கள் வெகு சிலரே. காட்டுயிர் புகைப்படக்கலை, இந்திய இயற்கை வரலாறு போன்ற துறைகளில் அவர் அற்றிய பங்கு ஈடு இணையற்றது. இயற்கை, கோயில் கலை, நாட்டார்கதை, பழந்தமிழ் இலக்கியம், நாய்-கண்காட்சிகள், கிரிக்கெட் என்று பல தடங்களில் ஆறு தசாப்தங்களாக அவர் எழுதிய கட்டுரைகள் வாசகனை உடனழைத்துச் செல்கின்றன.


ன் முன் 1994-இல் எழுதப்பட்ட புதுவருட வாழ்த்து மடலொன்று இருக்கிறது. எண்பத்தோரு வயதாகிவிட்ட பெரியவர் ஒருவர் அவர் தொன்னூற்று ஒன்று வயது அக்காவிற்கு எழுதியது. வேர்த்து விறுவிறுக்கும் மெட்ராஸில் அவர் வசிக்கிறார், அவர் சகோதரியோ மைசூரில். கர்நாடக மேட்டுநிலத்தில் அமைந்திருக்கும் அக்காவின் ஊர் “டிசெம்பர் ஜனவரி மாதங்களில் ஆர்க்டிக் வடதுருவமாக” உருமாறுவதை தம்பி நினைவுகூர்கிறார். அவர் ஒரு ஓவியர், அவர் சகோதரியும்கூட. இத்தகவலையும் வானிலையையும் அடையாளப்படுத்துவது போல், அதன் சிகப்பு அலகும் கால்களும், வெள்ளையும் கருப்புமாக தோற்றம்தரும் அதன் சிறகுகளும், நீலமாய் ஓளிரும், வானத்தொடு போட்டியிடும்படியாக பொறிக்கப்பட்டிருக்கும் ஒரு பறவையின் பறத்தலைக் கைப்பற்றுவதற்காக அவர் வரைந்த ஒரு உருவப்படத்துடன் தொடங்குகிறது. அது ஒரு வெள்ளை நாரை (White Stork) என்று சுட்டிவிட்டு நினைவுபடுத்த உதவியாக இருக்கட்டுமே என்று அதன் லத்தீன், தமிழ்ப் பெயர்களையும் உடனளிக்கிறார்.

ஏன் வெள்ளை நாரை? “தொடர்பைப் புரிந்துகொண்டாயா?” என்று ஒவியர் சகோதரியைக் கேட்கிறார். சுமார் பதினான்கு நூற்றண்டுகட்கு முன், தன் குளிர்கால வசிப்பிடமான கன்னியாகுமரிக்கு மதுரையிலிருந்து வலசிக்கும் வழியில் அதை விளித்த கவிஞர் சாத்திமுத்துப் புலவரை அவருக்கு நினைவுபடுத்துகிறார். பிசறின்று முத்து முத்தான எழுத்துகளில் ஒரு செங்குத்து வரிசை அக்கவிதையை அளிக்கிறது; எதிர்வரிசையில் கவிதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது. தட்டச்சு செய்யப்பட்டிருக்கும் வரைவில் கையால் எழுதப்பட்டிருக்கும் பல திருத்தங்களும் காணக் கிடைக்கின்றன. கவிஞர் “பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பவளக் கூர்வாய்ச் செங்கால்” நாரையை அது மீண்டும் மேற்கே வீடு திரும்புகையில், அவர் சொந்த ஊரான சத்திமுத்தத்தில், அதன் குளக்கரையில், சற்று தாமதித்து “நனைசுவர்க் கூரை”-யைக் கொண்டிருக்கும் குடிசையில்” கனைகுரல் பல்லி” -யின் குரலில் “பாடு பாத்திருக்கும்” அவர் மனைவியைக் கண்டு

எங்கோன் மாறன் வழுதிக் கூடலில்
ஆடையின்றி வாடையில் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்தி
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே

Tell her that you saw this abject being
In Madurai, capital of the Pandya King,
Grown thin with no clothes against the north wind’s bite,
Hugging his torso with his arms,
Clasping his body with up-bent legs,
Barely existing
Like the snake within his basket

இதைத் தொடர்ந்து குடும்பத்தைப் பற்றி சில தகவல்கள். அதன்பின் மடலின் இறுதியில் வருத்தம் மிக்க சாத்திமுத்துப் புலவரின் வரைபடம், வண்ணத்தில். “நாரை சரியாகவே வந்திருக்கிறது, ஆனால் கவிஞரை வரைய நான் முற்பட்டிருக்கக் கூடாதோ என்று இப்போது தோன்றுகிறது. என் வரைபடத்தில் பேழையிலிருக்கும் பாம்பைக் காட்டிலும் தேரையைப் போல் தோற்றமளித்தாலும் வளர்கரு நிலையில் வரைந்திருப்பது பொருத்தம்தான் என்றே படுகிறது.”

இப்புதுவருட மடலை முத்து என்ற அவரது சகோதரிக்கு அனுப்பியவரின் பெயர் எம். கிருஷ்ணன். பீரியட் பீஸ் என்று அங்கிலத்தில் அழைக்கப்படுவது போல் (வரலாற்று ரீதியாகவும் பிற வகைகளிலும் அக்காலத்துடன் அது கொண்டிருக்கும் தொடர்புகளிலிருந்துதான் அதன் சுவாரசியம் உருவாகுகிறது என்று காலின்ஸ் சுருக்ககராதி இதைப் பொருட்படுத்துகிறது) ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பிரத்தியேமாக உரியது இம்மடல் – அதாவது, முதல் உலகப் போருக்கு முன்னதாக பிறந்த ஒருவாரால்தான் இதை எழுதியிருக்கவோ பெற்றிருக்கவோ முடியும். கலாச்சாரம், பாண்டித்யம், நுண்ணுணர்வு, நளினம் நிறைந்திருக்கும் இரு வயதானவர்களுக்கிடையே பல தசாப்தங்களாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் உரையாடலின் நீட்சியே இம்மடல். நம் நாட்டின் நுட்பமான இயற்கையியலராகவும் இயற்கையைப் பற்றி எழுதியவர்களுள் தலைசிறந்தவராகவும் பரிணமிக்க ஏதுவாக இருந்த அவரது திறமைகளின் செய்துகாண்பித்தலாகவும் இம்மடல் விளங்குகிறது. பதிப்பிக்கப்பட்ட படைப்புகளைப் போல் தனிப்பட்ட பரிமாற்றங்களிலும் பெருந்திறன், அபாரமான தன்னம்பிக்கை, மூர்க்கமான செம்மைவாதம் ஆகியவை தனித்துவமாகப் பிணைந்திருப்பதை நம்மால் காணமுடிகிறது. கலைஞராகவும், வித்வானாகவும், எழுத்தாளராகவும் அவர் செயலாற்றுவதை நாம் பார்க்கிறோம், அதனுடன் கலாச்சாரம், அல்லது இயற்கை அல்லது அறிவியலுக்கும் இயற்கைக்குமிடையே கோட்பாட்டினர் சுட்டும் தனிப்பட்ட வேறுபாடுளை தனியொரு ஆளாய்த் துடைத்தழிக்கும் மனிதரையும். தம்பட்டம் அடித்துக் கொள்ளுவதும்கூட– Ciconia ciconia ciconia என்று போதிக்கும் நுணுக்கத்துடன் நாரையின் லத்தீன் பெயரை அளிப்பதும்கூட – அவர் ஆளுமைக்குத் தக்கவகையில் பொருத்தமாகவே அமைகிறது.

இறுதியில் கடிதம் மைசூரைச் சென்றயடையாமலும் போகலாம் என்ற சந்தேகத்துடன்தான் இக்கடிதத்தை கிருஷ்ணன் எழுதினார் என்ற தகவலே அதன் மிகக் குறிப்படத்தக்க விஷயமாகவும் இருக்கலாம். ஏனெனில் டிசெம்பர் 1993-இல் தபால் வேலை நிறுத்தம்  நடந்துகொண்டிருந்தது. முத்துவுக்கு கிருஷ்ணன் எழுதியது போல்   “கடவுளுக்குத்தான் தெரியும் உன் கைக்கிது எப்போது வந்து சேருமென்று அல்லது வழக்கமான தபால்காரர்களுக்கு பதிலாக பணிசெய்யும் பயிற்றுவிக்கப் படாத தற்காலிக பணியாளர்களைக் கணக்கில் கொண்டால் உன் கைக்கு வந்துசேருவதே சந்தேகம்தான்.” நிச்சயமாக அக்காவின் மீதிருந்த அன்பின் பேரில்தான் கடிதம் எழுதப்பட்டது என்றாலும் எழுதுகையில் கிட்டிய உவகையும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்று அனுமானிப்பதை நம்மால் தவிர்க்க இயலாது. தன் வாழ்க்கைத்தொழிலில் பரிபூரணமாக திருப்தியுற்றிருந்த, உலகம் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறது என்பதைப் பற்றி சற்றும் கவலைப்படாத ஒரு மனிதரால்தான் அம்மடல் எழுதப்பட்டது.

2

ஜூன் 30 1912-இல் திருநெல்வேலியில் எழுத்தாளரும் சீர்திருத்தவாதியுமான ஆ.மாதவையாவின் (1872 – 1925) எட்டாவது குழந்தையாக எம். கிருஷ்ணன் பிறந்தார். மாதவையா மெட்ராஸ் அரசாங்கத்து உப்பு சுங்கத இலாக்காவில் பணியாற்றினார். சிற்றூர்களுக்கு நியமனம் செய்யப்பட்டதால், குதிரை மீதமர்ந்து கடத்தல்காரர்களையும் போதைப்பொருள் கடத்துபவர்களையும் பிடிப்பதே அவர் பணியில் பெரும்பங்கு வகித்தது. ஓய்வு நேரத்தில் அவர் வாசித்தார், எழுதவும் செய்தார். தமிழில் பதிப்பிக்கப்பட்ட முதல் எதார்த்த நாவல் (‘பத்மாவதி சரித்திரம்’, 1898) , லண்டனில் பதிப்பிக்கப்பட்ட ஒரு ஆங்கில நாவல் (Thillai Govindan, 1916), கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், குறுநாடகங்கள் என்று அவர் வெளிப்பாடு பரந்து விரிந்தது. 1920 வாக்கில் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று, ஓய்வூதியத்தை குறைத்துக் கொண்டதின் பேரில் கிடைத்த பணத்தைக் கொண்டு சென்னையில், மயிலாப்பூர் வட்டாரத்தில் வீடு கட்டிக்கொண்டார். குடும்ப இல்லத்திற்கு அடுத்தாற்போலிருந்த கொட்டாரத்தில், அவர் நடத்திய பஞ்சாமிர்தம் சஞ்சிகையைப் பதிப்பிப்பதற்காக ஒரு அச்சகத்தை அமைத்துக்கொண்டார். வாழ்நாள் மீதத்தை இலக்கியத்திற்காக அர்ப்பணிக்க மாதவையா முடிவு செய்திருந்தாலும் அவருக்கு அதிககாலம் மீந்திருக்கவில்லை. பி.ஏ. பட்டப்படிப்பில் தமிழை (அல்லது தாய்மொழியை) கட்டாயப் பாடமாக வைக்க வேண்டும் என்று ஆவேசத்துடன் வாதிட்ட கையோடு மெட்ராஸ் செனேட் இல்லத்தில் தனது ஐம்பத்தைந்தாவது வயதில் காலமானார்.

மாதவையா ஒரு குறிப்பிடத்தக்க மனிதர். கிருஷ்ணனின் நினைவுகளில் அவர் இன்னும் குறிப்பிடும்படியாக நமக்கு காட்சியளிக்கிறார். 1990-இல் அவர் தொகுத்த “ஊர்ஜிதம் செய்யப்பட்ட தரவுகள்” பட்டியலில், கேள்விகளுக்கு உட்படுத்தப்படாத, அவர் இயல்புக்கு மாறாக, எச்சரிக்கைகள் அளிக்கப்படாத இம்மெச்சுதல் வெளிப்படையாகவே தெரிகிறது. இந்நினைவுகூரலில் தந்தை அதிகாரத்துடன் எப்போதுமே முரண்பட்டு தனது காலத்தின் சமூக அரசியல் நடப்பிலிருந்து விலகியவராகவும் அவற்றின் வருங்கால வளர்ச்சியை தரிசித்த முன்னோடியாக வெளிப்படுகிறார். அன்னியோன்யமாக எழுதுகையில் தந்தையுடன் பால்ய காலத்தில் மேற்கொண்ட அதிகாலை குதிரைச் சவாரிகளையும், மெரீனா கடற்கரைக்கு தினமும் புலரிக்கு முன் கால்நடையாகச் சென்று திரும்பியதையும் நினைவுகூர்கிறார். வாழ்நாளின் இறுதி நான்கு ஆண்டுகளில் மாதவையா தன் கடைசிப் பையனுடன் உணவு அருந்தியதையும், இரவில் தன் கட்டிலை அவனது கட்டிலுக்கு அருகே போட்டுக்கொள்ளும் வழக்கத்தையும் நினைவுகள் மீட்டெடுக்கின்றன.

கிருஷ்ணனின் தந்தை காலமாகிவிட்டபின், உடன் பிறந்தவர்களின் பராமரிப்பையும் அவர்களுக்கான நிதிசார் பொறுப்பையும் அவரது இரண்டாவது குழந்தை லக்ஷ்மி ஏற்றுக் கொண்டார். 1896-இல் பிறந்து 1905-இல் மணமுடித்து, கணவனின் குடும்பத்தாரால் புறக்கணிக்கப்பட்டு, தள்ளிவைக்கப்பட்டவரான லக்ஷ்மி தந்தை மரணிக்கையில் பிரசித்தி பெற்ற, பிற்காலத்தில் அதன் தலைமை ஆசிரியர் பொறுப்பிலிருந்த, ராணி மேரிக் கல்லூரியில், ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். கிருஷ்ணன் அச்சமயத்தில் ஹிந்து மேல்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தார்; “பரிசு வாங்கும்” மாணவன் என்று கூற முடியாவிட்டாலும் அவர் பரந்து வாசிப்பவராகவும் ஓவியத்தின் மீது நாட்டம் கொண்டவராகவும் ஆகிவிட்டிருந்தார். வாசிப்பு, ஒவியம் இவற்றுடன் இயற்கையின் மீதும் அவரது ஆர்வம் குவிந்தது. இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் ஒரு கட்டுரையில் (‘A City’s Bird Life’) கூறுவது போல் 1920-களில் மயிலாப்பூர். அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த வீடுகள், அவற்றிற்கிடையே ஏக்கர் கணக்கில் புதர்களும், மந்தைவெளியுமாக பரந்திருந்த ஒரு விதமான எல்லைப்புறக் குடியிருப்பாக இருந்தது. பலப்பல பறவையினங்களுக்கும் ஒருசில குள்ள நரி, புலவாய்களுக்கும் வசிப்பிடமாகவும் விளங்கியது. பூவுடன் சேர்ந்த நாரைப் போல், சூழலுடன் பிணைந்திருந்த மெத்தப் படித்த பிராமணரின் மகன் கிருஷ்ணனும் தனது பிதினோராம் வயதில் வளர்ந்துவிட்டிருந்த கீரியொன்றை வளர்ப்பு விலங்காக வைத்திருந்தார்.

1927-இல், இப்போது நலிந்துவிட்டிருந்தாலும் அப்போது பெருமைவாய்ந்த கல்லூரியாக விளங்கிய ப்ரெசிடென்சி கல்லூரியில் (மாநிலக் கல்லூரி) கிருஷ்ணன் சேர்ந்தார். இண்டர்மீடியேட் தேர்வு, 1931-இல் பி.ஏ. பட்டப்படிப்புத் தேர்வுகளை எழுதினார். தேர்வுக்கான பாடங்களில் அவர் தந்தை அவ்வளாவு ஆவேசமாகப் போராடிய தமிழும் இடம்பெற்றதென்பது குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் பி.பி. ஃபைசன் படிப்பித்த தாவரயிலையே கிருஷ்ணன் மிகவும் விரும்பிப் படித்தார். ஃபைசன் ஒரு அருமையான, களப்பணியில் பற்றுமிக்க அறிவியலாளர். பிற்காலத்தில் கிருஷ்ணன் குறிப்பிட்டதை வைத்துப்பார்த்தால் இளம் மாணவனிடமிடத்தே ஆழமான பாதிப்பை ஏற்படுத்தினார் என்பதையும் நம்மால் ஊகிக்க முடிகிறது. ஃபைசன் தம்பதியினருடன் கிருஷ்ணனும் அவர் மனைவியும் கொடைக்கானல், நீலகிரி மலைகளுக்குப் பல பயணங்களை மேற்கொண்டார்கள். பேராசிரியரிடமிருந்து அறிவியலையும், மனைவியிடமிருந்து நீர்வண்ண ஒவியத்தின் நுணுக்கங்களையும் கற்றறிய இப்பயணங்கள் வாய்ப்பளித்தன.

ஃபைசன்களுடன் ஆழ்ந்த நட்பிலிருந்தும்கூட, கிருஷ்ணனால் பி.ஏ. தேர்வில் மூன்றாம் பிரிவை மட்டுமே ஈட்ட முடிந்திருந்தது. வேலை கிடைக்க வாய்ப்பில்லை என்ற நிலை…ஆனால் அவர் பெரியண்னா எம். அனந்தநாராயணன் இந்தியக் குடிமைப் பணியில் இருந்தார். அவரது மாமனார் அவரைக் காட்டிலும் மாட்சிமை பொருந்தியவர். அவர்தான் ஆர். நாராயண அய்யர், ICS தேர்வில் முதன்முதலாக வெற்றி பெற்ற தமிழர்களில் அவருமொருவர். நாராயண அய்யர் கிருஷ்ணனை அவரைக் காட்டிலும் உயரிடத்தை அடைந்தவரான, Knight பட்டம்பெற்ற, சர். டி. விஜயராகவாச்சாரியிடம் அழைத்துச் சென்றார். விஜயராகவாச்சாரியின் பொறுப்பிலிருந்த பல நிறுவனங்களுள், பூசாவிலிருந்த இந்திய வேளாண்மை அய்வு நிறுவனமும் இருந்தது. ஏனாதானோ என்று மதிப்பெண்கள் வாங்கியிருந்தாலும் தாவரங்கள் மீது தீவிரமான அர்வமுள்ள வாலிபனுக்கு அது ஏற்ற இடமாக இருக்ககூடும் என்ற நம்பிக்கையில்தான் நாராயண ஐயர் அழைத்துச் சென்றிருந்தார். கிருஷ்ணனின் படிப்புப் பராக்கிரமங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டபின் சர். டி.வி. கிருஷ்ணனை எம்.ஏ மேல்படிப்பை முடித்துவிட்டு திரும்பிவருமாறு அறிவுறுத்தினார். இரண்டு வருடத்தில் அதே பயணம் மீண்டும் மேற்கொள்ளப்பட்டது. இச்சந்திப்பை ஐம்பத்து ஐந்து வருடங்களுக்குப் பின் கிருஷ்ணன் நினைவுகூர்கிறார்: ‘நைட்’ பெருந்தகை சாய்வு நாற்காலியில்; பக்கத்தில் நான் ஒரு பெண்ட்வுட் நாற்காலியில்; திரு. ஆர்.என். சற்று தள்ளி ஒரு சோஃபாவில்.’ “திரும்பவும் மூனாங் கிளாஸா” என்று நைட் கடுமையாக ஆட்சேபிப்பது போல் பொரிந்து தள்ளினார். ‘பிஏயிலோ எம்மேயிலோ ஒரு ஃபர்ஸ்ட் கிளாஸையாவது வாங்கியிருந்தாயனால் என்னால் ஏதாவாது செய்ய முடிந்திருக்கும்.’ ‘அது இருந்திருந்தா உங்ககிட்ட வரவேண்டிய அவசியம் இருந்திருக்காதே.’ என்று கூறிவிட்டு நாராயண ஐயர் கிருஷ்ணனைக் கூட்டிக் கொண்டு வெளியேறினார்.

குடும்பத்தாரின் அறிவுறுத்தலுக்கு இணங்க சட்டத்துறையில் பட்டம் பெறுவதற்காக கிருஷ்ணன் இரண்டு ஆண்டுகள் உழைத்தார். 1936-இல் அப்பட்டத்தைத் பெறவும் செய்தார் என்றாலும் அதற்குப் பின் வழக்குகளுக்கான குறுங்குறிப்புகள், கோர்ட் ஆஜர்களுக்கான அதார ஆவணங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அந்தக் காலத்தில் ஊதியமில்லாதிருப்பது திருமணம் செய்துகொள்வதற்குத் தடையாக இருக்கவில்லை. ஆகவே மார்ச் 26 1937-இல் பெங்களூரைச் சேர்ந்த இந்துமதி ஹசாப்னிசை கிருஷ்ணன் மணம் புரிந்தார். வெறும் பதினைந்து வயதுமட்டுமே ஆகியிருந்தாலும் இந்துவிற்கு கணவனுக்கு நிகரானவளாகத் தன்னை நிறுவிக்கொள்ளும் அளவிற்கு மனத்திடமும், ஊக்கமும் இருந்தது.

என்னிடமிருக்கும் தரவுகளில், அவர் வேலை செய்தற்கான முதல் ஆவணத்தரவு 1937-ஆம் வருடத்தைச் சேர்ந்தது. அவ்வருடத்தில்தான் கிருஷ்ணன் மெட்ராஸ் மெய்ல்  இதழில் சில வரைபடங்களையும் கேலிச்சித்திரங்களையும் பதிப்பித்தார். அதற்கடுத்த வருடமே குறை-புழக்கத்திலிருந்தாலும் பெருங்கீர்த்தியைப் பெற்றிருந்த இந்தியன் அஃபேர்ஸ் இதழில் புத்தக வடிவமைப்பைப் பற்றிய கட்டுரைகளையும் அதைக்காட்டிலும் விளைவுமிக்கதாய் அமைந்த, இந்து, ஸ்டேட்ஸ்மன் இதழ்களில் இயற்கைக் குறிப்புகளையும் பதிப்பித்தார். இவ்வாரம்பகாலத்துக் குறிப்புகளில் (இத்தொகுப்பிலும் இரு குறிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன) அவரது அனைத்துப் படைப்புகளையும் அடையாளப்படுத்தும் அலங்காரமற்ற குறைநடையும் நுணுக்கமான அவதானிப்பும் காணக் கிடைக்கின்றன. ஆனால் கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் நாவலராக முனைந்து கொண்டிருந்த ஆர்.கே, நாராயணன் பட்டறிந்துகொண்டது போல், ஆசாரமும் தரித்தரமும் நிரம்பிய தமிழ் பிராமண உலகிற்கு “சாராவினைஞர்” என்ற கருத்தே அந்நியமாக இருந்தது. எனவேதான் திருமண வாழ்வின் ஆரம்ப வருடங்களில் கிருஷ்ணன் நிரந்திரமாக இல்லாவிட்டாலும் அவ்வப்போதாவது “வழமையான” பணிகளில் – முதலில் அசோசியேட்டட் ப்ரிண்டர்ஸ்-சிலும், அதன்பின் சென்னை கலைக் கல்லூரியிலும், இறுதியாக ஆல் இந்தியா ரேடியோவின் உள்ளூர் வானொலி நிலையமொன்றிலும் வேலை செய்தார்.

1942-இல் குடும்பத்தாரின் வற்புறுத்தலாலும் செல்வாக்கை பயன்படுத்தி அவர்கள் அளித்த உதவியாலும் தற்போதைய கர்நாடகாவின் வடக்கு பகுதியிலிருக்கும் சாந்தூரில், அதன் மகாராஜாவின் சமஸ்தானத்தில் வேலை கிடைத்தது. வேலையே ஒரு உபரி அனுகூலம் போலிருக்கிறது, ஏனெனில் அவர் மனைவின் மருத்துவர் அவர்களை மெட்ராஸைக் காட்டிலும் உலர்ந்த இடத்திற்கு பெயரும்படி அறிவுறுத்தியிருந்தார். கிருஷ்ணன் அம்மாநிலத்தில் எட்டு ஆண்டுகள் கழிக்க நேர்ந்தது – ஒரே முதலாளியின் கீழ் எட்டு வருடங்கள் என்றாலும் அவரது இயல்புக்கு ஏற்றதுபோல் பலதரப்பட்ட பணிகளில். சாந்தூரில் கிருஷ்ணன் – பள்ளியாசிரியர், நீதிபதி, விளம்பர அதிகாரி மகராஜாவின் காரியதரிசி – என்று பல பணிகளில் அடுத்தடுத்து பணியாற்றினார். பணி திராபையாக இருந்தாலும் தப்பிச் செல்லும் சந்தர்ப்பங்களும் எப்போதும் கைக்கெட்டும் தூரத்தில் இருந்தன. சாந்தூரில் மேற்கொண்ட பல பயணங்களில் கடமான் (சாம்பார்), காட்டுப்பன்றி, குள்ளநரிகள், காட்டுப்பூனைகள், முள்ளம்பன்றிகள், சிறுத்தைப்புலிகள் – என்று பல விலங்கினங்களை எதிர்கொள்ளும் வாய்ப்புகள் இயற்கையியலருக்குக் கிட்டின. குன்றுகளாலும் சூழப்பட்டு, காடுகள், புலங்கள், புதர்காடுகளையும் அவற்றினூடே ஓடிச்சென்ற துங்கபத்ரா நதியையும் கொண்ட, மாட்டு வண்டியில் சென்றால் ஒரு மணி நேரத்தில் பழம்பெரும் இடிபாட்டு நகரமான ஹம்பியை அடைந்துவிடக்கூடிய தொலைவிலிருந்த, இப்பள்ளத்தாக்கில், இயற்கை மற்றும் கலாச்சார வரலாற்றிலிருந்த தன் ஆர்வங்களில் கிருஷ்ணனால் ஈடுபட முடிந்தது. அவர் ஆடுகள் வளர்த்தார், அவ்வப்போது அவற்றை மேய்க்கவும் செய்தார். மாநிலத்தின் சிறுவர் சாரணப் பிரிவிற்காக நிகழ்த்திய ஒரு புறாவழித் தபால் சோதனை முயற்சிக்காகப் புறாக்களை இனப்பெருக்கம் செய்தார். காட்டிலும் ஹம்பி கோவில்களிலும் அலைந்து திரிந்துவிட்டு இரவில் லாந்த்தர் வெளிச்சத்தில் விஜயநகரத்து ராஜாக்கள் ஒருகாலத்தில் புரவர்களாகப் பேணிய தமிழ்ப் புலவர்களை வாசிப்பதற்காக வீடு திரும்பினார். தக்கணத்தின் உணவு ஆபாரணங்களில் ஒன்றான மண்டலு-மனசினகாய்க்கு – எண்ணெய்யில் வறுத்தெடுத்த மிளகாய்க்கு வாழ்நாள் முழுதும் நீடித்த பிரியத்தையும் வளர்த்துக் கொண்டார்.

கிருஷ்ணனின் மனோபாவம் சமஸ்தானத்தின் முறைசாரா தந்தைவழி மரபு வழக்கங்களுடன் இயல்பாகவே இயைந்தது. இங்கு “பொருந்தியது” போல் அவரால் நியதிகளுக்குப் கட்டுப்படும் பிரிட்டிஷ் அரசின் நிர்வாகச் சார்பின்மையுடன் ஒருநாளும் “அட்ஜஸ்ட்” செய்துகொண்டிருக்க முடியாது. சாந்தூரே கிருஷ்ணனின் முடிப்புப் பள்ளி அல்லது உருவகத்தை சற்று மாற்றிக் கூறுவதானால், அங்கீகரிக்கப்படாத அவரது முனைவர் பட்டத்திற்காக அவர் ஆய்வு நடத்திய சோதனைக்கூடம். அங்கு கற்றதையே 1940-களில் இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியில் இயற்பெயரிலும் ஹிந்துவில் “Z” என்ற புனைப்பெயரிலும் எழுதிய இயற்கைக் கட்டுரைகளிலும் கலாச்சார குறுவெட்டுச் சித்திரங்களிலும், சிறுகதைகளிலும் வெளிப்படுத்தினார். பல ஆண்டுகள் கழித்தும், இத்தொகுப்பு வெளிப்படுத்துவது போல், அவர் தன் கட்டுரைகளைச் சாந்தூர் காலத்துச் சம்பவத்தைக் கொண்டு மெருகூட்டுவார். அம்மாநிலம் அவருக்கு அவ்வளவு முக்கியமாக இருந்தது, அதேபோல் அவரும் அதற்கு. சாந்தனூரை விட்டுச் சென்ற அரை நூற்றாண்டிற்குப் பின் அவர் மாணவர் ஒருவர் நினைவுகூர்கிறார்:

… தற்காப்பு நிறமாக்கல் குறித்த ஒரு குறிப்பிட்ட விரிவுரையொன்றில், அறிவியல் இயற்கைப் பாட ஆசிரியர், அவர் திறன்மிக்க ஒவியரும்கூட, எடுத்துச் செல்லவல்ல கரும்பலகையில் வரிக்குதிரையொன்றையும் குரங்கொன்றையும் வரைந்துவிட்டு பலகையை எங்களிடமிருந்து சிறிது சிறிதாக தொலைவுபடுத்தினார். அதன் உடைந்த படிவத்தால் தொலைவில் ஒற்றை நிறக் கட்டமாகத் தோன்றிய கழுதையைவிட அதன் உடைந்த படிவத்தால் வரிக்குதிரை கண்ணுக்கு அப்பட்டமாகப் புலப்படாது என்பதைக் காட்டவே அவர் அப்படிசெய்தார். கிட்டப் பார்க்கையில் வெள்ளைக் கருப்பு வரிகளுடன் அவ்வளவு துல்லியமாகத் தோற்றம்தரும் வரிக்குதிரை வேறுபாடுகளற்ற பழுப்பில் மந்தமாக காட்சிதரும் கழுதையைவிட குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் மங்கலாக காட்சியளிக்கக்கூடும் என்பதை கறப்னை செய்வதுகூட எங்களுக்குக் கடினமாக இருந்தது. எங்கள் ஆசிரியர் கிருஷ்ணனைத் தவிர வேறெவரும் இல்லை.

Image result for M. Krishnan

1949-இல் 520 பிற மாநிலங்களுடன் சாந்தூரும் இந்திய ஒன்றியத்தில் ஐக்கியமாகி மறைந்ததால், கிருஷ்ணன் மெட்ராஸிற்குத் திரும்பி தந்தை தனது அச்சகத்திற்காகக் கட்டிய ஓடு வேய்ந்த குடிலில் குடித்தனம் அமைத்துக்கொண்டார். அடுத்த நாற்பத்தேழு வருடங்களுக்கு அவர் பணிவேலை எதையும் ஏற்றுக்கொள்ளாது நிலையற்றதாக இருந்தாலும் நேர்மையான வழியில் எழுத்தாளராகவும், புகைப்படக் கலைஞராகவும் பிழைப்பு நடத்தினார். 1950-இல் கல்கத்தா ஸ்டேட்ஸ்மன் இதழிற்காக மாதமிருமுறை வந்த “Country Notebook” (“நாட்டுப்புறக் குறிப்பேடு”) பத்தியைத் தொடங்கினார். அதன் கடைசி பத்தி அவர் காலமான தினத்தன்று பதிப்பிக்கப்பட்டது. விழிப்புடன் உயிர்ப்பாக, ஒரே சமயத்தில் அறிவியல்பூர்வமாகவும் ஊகிப்பதாகவும், இலக்கிய, தொன்மச் சுட்டுதல்களை அள்ளி இரைத்தபடி, கொள்கைப் பிடிவாதத்துடன், அமிலம்போல் சுருக்கென்று சுட்டெரிக்கும் நகைச்சுவையுடன் மிளிர்ந்த இப்பத்தி இந்நாட்டு (ஏன், என்நாட்டு) ஆங்கில இதழியலின் அபாரமான சாதனைகளுள் ஒன்று என்பதில் சந்தேகமேதுமில்லை. ஸ்டேட்ஸ்மன்னே அவரது பிரதான படைப்பிடமாக இருந்தாலும், கிருஷ்ணன் த ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரெஸ், த இல்லஸ்ட்டிரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியா, சங்கர்ஸ் வீக்லி இன்னும் பிற இதழ்களிலும் வியப்பூட்டும் வகையில் பலவிதப்பட்ட விஷயங்களைப் பற்றி எழுதினார். அனைத்திற்கும் மேல், கிருஷ்ணன் ஒரு முன்னோடி இயற்கையியலராகவே அறியப்படுகிறார். அதுவே மிகச் சரியானதும்கூட. ஆனால் அவர் காலத்தில், கலை விமரிசகர், புனைவாசிரியர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், இலக்கிய வரலாற்றாசிரியர் என்ற பல துறைகளிலும் அவர் பரிணமித்தார். ஜனவரி 1952-இல் அவர் ஸ்டேட்ஸ்மன் இதழிற்காக மெட்ராஸில் நடந்த ஐந்து நாள் கிரிக்கெட் டெஸ்ட் பந்தயத்தைக்கூட “கவர்” செய்திருக்கிறார் அப்பந்தயத்தில் தான் வினு மங்கட் பன்னிரெண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்திற்கு எதிராக இந்தியா ஈட்டிய முதல் வெற்றிக்கு வழிவகுத்தார். இவ்விளையாட்டு அறிக்கைகளை ஸ்ட்டேஸ்மன் “ஸ்பெஷல் கிரிக்கெட் நிருபரிடமிருந்து” என்று அடையாளப்படுத்திற்று. வினோதமான அச்சுட்டுதல் தான் நினைத்திருந்ததை காட்டிலும் உண்மை என்பதை அவ்விதழ் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

நான் ஒருமுறை தொடக்க மட்டையாளர் கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்த்தைப் பற்றி எழுதுகையில் தமிழ் பிராமணர்களுள் அவரொருவருக்கு மட்டுமே பத்திரத்தன்மை தாரக மந்திரமாக இருந்ததில்லை என்று குறிப்பிட்டேன். கிருஷ்ணனை மறந்து விட்டிருந்தேன் போல. அவர் சகோதரர் ஐசிஎஸ்-சில் பணியாற்றி மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிப் பொறுப்பிற்கு உயர்ந்தார்; அவர் மகன் இந்திய காட்டுத் துறையில் பணியாற்றினார், தமிழ்நாட்டு காட்டுத்துறையின் பிரதான தலைமைப் பாதுகாவலராக அவர் இறுதியில் நியமிக்கப்பட்டார்; அவர் மருமகன் இந்திய அயல்துறைப் பணியில் ஜெர்மனி, ஜப்பான் நாடுகளுக்குத் தூதராகப் பணியாற்றி இருக்கிறார். ஆனால் கிருஷ்ணன் தனக்கு மட்டுமே பதில்கூற வேண்டியவராக இருந்திருக்கிறார், வேலை விஷயங்களுக்கு அப்பாற்பட்டதிலும்கூட.

3

இயற்கை வரலாறு என்ற நூலகம் பெருங்கடல்கள், மலைகள், பாலைவனங்கள் போன்ற அபாரமான வாழ்விடங்களாலும் திமிங்கிலம், யானை, புலி போன்ற வசீகரிக்கும் மாபெரும் முதுகெலும்புயிரிகளாலும் ஆக்கிரமிக்கபடுகிறது. ஆனால் கிருஷ்ணன் தீபகற்ப இந்தியாவின் பெரும்பாலும் உப்புச்சப்பற்ற சூழலை – ‘மேடு பள்ளங்கள், கற்கள், குழிகள், மெலிந்த பன்கிளைப் புதர்கள் முட்கள், உலர்ந்த புற்கள், அவவப்போது தென்படும் மனல் அல்லது பாறைகள் அல்லது சாறு நிறைந்திருக்கும் பாலைத் தாவரங்கள் அடர்ந்திருக்கும் இடங்கள்’ என துண்டிக்கப் பட்டிருக்கும் நாட்டுப்புறத்தை பற்றி எழுதுவதையே தன் பணியாகத் தேர்வு செய்தார். நிறங்களற்றதாக தோற்றம்தரும் இந்நிலத்தை தன் உலர் நகைச்சுவை மிளிரும் ஆற்றல்மிக்க நடையால் உயிர்த்தெழச் செய்ததே அவரது அருந்திறன் (அருங்கொடையும்கூட). புலியையும் யானையையும் பற்றி நன்கறிந்திருந்தாலும், இந்திய நாட்டுப்புறத்தில் ஆரவாரங்களற்று வசிக்கும் குள்ளநரி, கோர்பாட் என்றழைக்கப்படும் உடும்பு, புள்ளிக் கூகை போன்ற பகட்டற்ற சிற்றுயிர்களைப் பற்றியும் நேசத்துடன் எழுதினார். ஹிமலயத்தின் புலியைப் பற்றி எழுதாது ராணிபென்னூரின் ப்ளாக்பக் வெளிமான்களைப் பற்றி எழுதியதாலேயே அவர் ஜிம் கார்பெட் அளவிற்குப் பிரசித்தி பெறவில்லை. இந்நிலைமை இயற்கையியலாராகவோ எழுத்தாளராகவோ அவர்களுக்கு இருக்கும் திறனைச் சரியாகப் பிரதிபலிக்கவில்லை. ஒப்புமை செய்வதனால் இதையும் கூறிவிடுகிறேன் – கிருஷ்ணனின் நுணுக்கமான காட்சிப்படுத்தும் திறனின் உச்சத்தை இயற்கையைப் பற்றிய எழுதிய எந்த இந்திய எழுத்தாளருமே எட்டியதில்லை.

மேட்டிமைத்தனத்தின் உச்சாணிக் கொம்பிலிருந்து கிருஷ்ணன் ஒரு போதும் அவர் வாசகர்களிடம் பேசியதில்லை. தனக்கிருந்த அறிவும் பரந்த ஆர்வமும் அவர்களுக்கும் இருக்கலாம் என்றே அவர் அனுமானித்தார். அவர்கள் ப்ளேக்கை படித்திருக்கவில்லை என்றாலும் (அவர் கவிதைகளை மனனம் செய்திருக்கவில்லை என்றாலும்) அல்லது ‘Eha’ யாரென்று அறிந்திறாவிட்டாலும் நூலகம் சென்று தெரிந்து கொள்ளக்கூடும். படைப்பூக்கத்தின் உச்சம் என்று நான் கருதும் காலகட்டத்தில் (தோராயமாக 1948 – 1961) தன் மெத்தப் படித்தமையை அவ்வப்போது என்று வரையறுப்பதைக் காட்டிலும் சற்று அதிகமாகவே மின்னிய நகைச்சுவையைக் கொண்டு, ஆங்கிலப் பிரியர்களின் தலைசிறந்த வழக்கத்திற்கேற்ப அந்நகைச்சுவையைப் பொதுவாகவே தன்னை நோக்கியே திசைதிருப்பி, இலேசாக்கினார். ஆனால் வயதாக ஆக அத்தொனியில் இருண்மை அதிகரித்தது. அவை இன்னமும் அழகாகச் செய்யபட்டு நுணுக்கமான தகவல்கள் நிரம்பியதாகவே இருந்தன. இருந்தாலும் அவை தற்போது மானுட அல்லது கலாச்சார பின்னணியின் மீது அவற்றின் வழமையான கவனத்தைச் செலுத்தாது இயற்கை வரலாற்றை நேரடியான விதத்தில் பேசத் தொடங்கின. தேய்வழக்கில் கூற வேண்டுமானால் காலத்துடன் கிருஷ்ணனும் மாறினார்: 1970-களிலிருந்து அவரது தொனியின் தீவிரம் அதிகரித்ததென்றால், அதன் குரலில் எரிச்சலுற்ற கண்டனமும் சேர்ந்து கொண்டதென்றால், காடுகளும் காட்டுயிர்களும் இந்தியா நெடுகிலும் துரிதமாக அழிந்துகொண்டிருந்தது அதற்கான ஒரு காரணமாக இருக்கலாம்.

Image result for Nature's Spokesman: M. Krishnan and Indian Wildlife

கோடிக்கணக்கில் டாலர்களை ஆராய்ச்சி நிதியாகப் பெறக்கூடிய அளவிற்கு சூழலியல் வசீகரமாகியிருக்கும் காலத்தில் கிருஷ்ணன் பணியாற்றவில்லை என்பதை சூழலியலாளர் ராமன் சுகுமார் சுட்டிக்காட்டுகிறார். இவ்வியற்கையியலாளர் கிட்டத்தட்ட தன் அனைத்துக் களப்பணியையும் தானே செய்தார். அவரது அனைத்து புகைப்படங்களையும் சொந்தச் செலவில் அவரே எடுத்தார். சுகுமார் தன் அராய்ச்சியைத் தொடங்கிய போது கிருஷ்ணனிடம் சென்றார். “யானைகளை உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருக்கையில் தயவுசெய்து பின்னாடி பார்த்துக் கொண்டும் இரு” என்று அதன் சகாக்கள் அனைத்தும் கடந்து சென்றபின் திடீரென தோன்றும், கூட்டத்திலிருந்து பிரிந்தலையும் தனியானையின் அபாயத்தை கத்துக்குட்டி ஆராய்ச்சியாளருக்கும் சுட்டிக்காட்டுவதற்காக, கிருஷ்ணன் வலியுறுத்தினார். உலகின் தலைசிறந்த யானை நிபுணராகத் தற்போது கொண்டாடப்படும் சுகுமார் அதிகம் அறியப்படாத, 1972-இல் எழுதப்பட்ட குறிப்பொன்றில், கிருஷ்ணன் உயர்தொழில்நுட்ப அறிவியலை முன்கூட்டியே இரண்டு விதங்களில் அனுமானித்ததைப் பற்றி என்னிடம் கூறினார். அதில் மனிதர்களுக்கு எளிதில் கேட்க முடியாத அதிர்வெண்களில் யானைகள் தகவல்பரிமாற்றம் செய்துகொள்வதை கிருஷ்ணன் அவதானிக்கிறார். அவை பயன்படுத்திக் கொள்ளும் ஓசைகளை “மிடற்றில் ஒலிப்பது, சற்றே கேட்கும்படியாக, துடிப்பதிர் உருமல்” என்ற அடைமொழிகளைக் கொண்டு விவரிக்கிறார். பன்னிரெண்டு வருடங்கள் கழித்து, போர்ட்லண்ட் விலங்ககத்தில், அடைபட்டிருந்த யானைகளிடையே, விலையுயர்ந்த கருவிகளுடன் பணியாற்றிய மூன்று அறிவியலாளர்கள் அத்தோற்றப்பாட்டிற்கு இன்ஃப்ராசவுண்ட் (தாழ்வொலி) என்று பெயர் சூட்டி, மானுட செவிகள் செவிக்ககூடிய வீச்சைக் காட்டிலும் பல டெசிபல்கள் தாழ்ந்திருப்பதை குறிக்க 14 ஹெர்ட்ஸ் என்ற எண்ணையும் அதற்களித்தார்கள். ஆண் யானைகளிடையே நிலவும் ஆதிக்கப் படிநிலைகளே யானைகளின் புணர்வு வழக்கங்களைத் தீர்மானிக்கின்றன என்ற அறிவியலார்களிடையே பரவலான ஆமோதிப்பைப் பெற்றிருந்த கருத்திற்கு நேர்மாறாக பெண் யாணைகளும் சில சமயங்களில் தங்களை துணையைத் தேர்வு செய்கின்றன என்று துணிகரமான கருதுகோள் ஒன்றை கிருஷ்ணன் முன்வைத்தார். அண்மையில் நடந்த ஆப்பிரிக்க யானைகள் குறித்த ஆராய்ச்சியொன்று இதற்கு ஆதாரமளிப்பது போலிருக்கிறது. களத்தில் நுட்பமாக அவதானித்து முன்வைக்கப்பட்ட கிருஷ்ணனின் பிற கோட்பாடுகளும் இதே போல் தொழில்நுட்பத்தைக் கொண்டு நிகழ்த்தப்படும் ஆராய்ச்சியால் ஆமோதிக்கபட்டால் அதில் ஆச்சரியமேதும் இல்லை.

“யானையை யானைக்காக மட்டுமே ஆராய்ச்சி செய். அதிலிருந்து எதையுமே எதிர்பார்க்காதே” என்றும் ஆரம்பக் கட்டத்திலிருந்த ஆராய்ச்சியாளரை கிருஷ்ணன் அறிவுறுத்தினார். அவரேகூட அதை எப்போதும் பின்பற்றவில்லை என்றாலும், அது ஒரு துணிகரமான அறிவுரையே. நிறுவனத்திற்கு வெளியே பணியாற்றிய இம்மனிதர் அவ்வப்போது, இந்தியக் காட்டுயிர் வாரியம் (மூன்று தசாப்தங்களுக்கும் கூடுதலாக) மற்றும் பிராஜக்ட் டைகரின் வழிப்படுத்தும் குழுவிலும், அதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளவும் முனைந்தார். இயற்கையின் வரலாற்றாசிரியர் அவ்வப்போது அதன் பாதுகாப்பிற்கான போராளியாக மாறி எச்சரிக்கை மணியையும் ஒலித்தார். 1970-இல் எழுதப்பட்ட கட்டுரையொன்றில் (இத்தொகுப்பில் அதன் மீள்பதிப்பு இடம் பெற்றிருக்கிறது) “The Dwindling Animals of the Forest” பற்றி எழுதுகையில் “படிபறிவில்லாத எழை மக்களிடத்தேயோ, படித்த மக்களிடத்தேயோ இந்தியாவின் காட்டுயிர்களைக் குறித்த பரவலான உணர்வேதும் இல்லை” என்று குறைபட்டுக் கொள்கிறார். அதன் காட்டினங்கள் குறித்த ஒரு பாதுகாப்பு மனோபாவத்தை அமுல்படுத்தும்படி மத்திய அரசு மாநிலங்களை ஏன் வற்புறுத்துவதில்லை” என்று அவர் காத்திரமாக வினவினார். 18 பிப்ரவரி 1996-இல் வெளிவந்த அவரது கடைசி பத்தியில் அதற்கான பகுதி விடையை அவரே அளித்தார்: பிரச்சினை நம் அரசியலைமைப்பில் இருப்பதாக அவர் அடையாளப்படுத்தினார். ‘சட்ட அரசியல் விஷயங்களை நுணுக்கமாக கற்றறிந்தவர்களால் அது உருவாக்கப்பட்டது. அவர்களுக்கோ இந்தியாவின் உயிர்சார் வளங்களைப் பற்றி கிஞ்சித்தும் தெரியாது – ஒரு நாட்டின் அடையாளம் என்பது அதன் மாற்றத்திற்கு உட்பட்ட மானுட கலாச்சாரத்தை மட்டுமே சார்ந்திருப்பதில்லை, அதன் புவியமைப்பு, தாவரம், விலங்கினம் மற்றும் அதன் இயற்கை அடிப்படைகளும் அவ்வடையாளத்தை நிர்ணயிக்கின்றன என்பதை அவர்கள் உணர்ந்திருக்கவில்லை.’

கிருஷ்ணன் ஒரு சூழலியப் பற்றாளார். (இத்தொகுப்பில் இடம் பெறாத 1974-இல் வெளிவந்த ஒரு பத்தியில் கூறியது போல் “இந்தியாவையும் அதன் அபாரமான இயற்கை பாரம்பரியத்தையும் வருங்கால சந்ததியினருக்காகப் பாதுகாத்து தற்போது அச்சுறுத்தப்படும் நம் நாட்டின் பொருண்மை மற்றும் உயிர்சார்ந்த ஒருமைப்பட்டைத் தக்கவைத்துக் கொண்டால்தான் அவர்கள் பெருமைப்பட்டுக் கொள்ளத்தக்க ஒரு நாட்டை அவர்களுக்கு நம்மால் அளிக்க முடியும்” என்பதை அவர் மனதாற நம்பினார். இதன் இயல்பான விளைவென்பது, இயற்கையை அழிக்க முற்படும் விசைகளுக்கு – அணைகள், சுரங்கங்கள், வர்த்தக வனவியல், கால்நடை, அயல்நாட்டுத் தாவர மற்றும் காட்டினங்கள் – எதிராக எதிர்வினையாற்றி இயற்கையின் சமநிலையைப் பராமரித்து அதற்குப் பாதகமாக எதையும் செய்யாதிருப்பது.” “நம் தாவர விருப்பத் தேர்வுகளைப் பொருத்தவரையில் ஒரு விதமான குறுகிய பற்றை நாம் பேணி வளர்த்துக்கொள்ளும்” வேளை வந்துவிட்டது என்று அவர் எழுதினார். வெளியிலிருந்து கொண்டுவரப்படும் உயிரினங்களுக்கு எதிராக அவர் சில சமயங்களில் மூர்கமாகவும் எதிர்வினை ஆற்றினார்.

எல்லாராலும் இந்தியாவின் மிக அழகான வளாகம் என்று ஏற்றுக் கொள்ளப்பட்ட பெங்களூரின் இந்திய அறிவியல் கழகத்தில் உரையாற்றுவதற்காக ஒருமுறை கிருஷ்ணன் அழைக்கப்பட்டார், பிப்ரவரி இறுதி, கண்ணைப் பறிக்கும் மஞ்சள் பூக்கள் பூத்துக் குலுங்கும் tabebuia மரங்கள் வீதிகளை ஒளிரச் செய்தன, கழகத்தை அலங்கரித்த பிற தாவரயினங்களைப் போல் அல்லாது இந்தக் குறிப்பிட்ட மத்திய அமெரிக்க மரமானது மேலாளரின் மனைவியின் உந்துதலால் நடப்பட்டிருந்தன. அவருக்களிக்கப்பட்ட விருந்தொன்றில் அவ்வம்மணி வளாகத்தைப் பற்றி என்ன நினைத்தார் என்று கிருஷ்ணனிடம் கேட்டார். “மிக இழிவாக இருந்தது, அந்த வெளிநாட்டு மரங்கள் அனைத்தையும் தூக்கியெறிந்துவிட்டு நம்மூர் மரங்கள் சிலதை நீங்கள் நட வேண்டும்” என்று பதிலளித்தார். மற்றொரு முறை உறவினர் ஒருவர் தன் வீட்டிற்கு அருகே இருந்த ஒரு குல்மோஹர் மரமொன்று வெட்டி வீழ்த்தப்பட்டதைப் பற்றி எழுதிய போது கிருஷ்ணன் கோபமாக பதிலெழுதினார்: “வாடிய பூக்களை தரையில் இறைத்துக் குப்பையாக்கும் குல்மோஹரின் மரணத்தை, மடகாஸ்கரிலிருந்து வந்த அந்த சாதிலிங்கப் பொதுமகளின் மரணத்திற்காக ஏன் வருந்தவேண்டும். உண்மையிலேயே பிரமிப்பூட்டும் செம்மலர் மகுடத்தை அணிந்திருக்கும் மரத்தைப் பார்க்க வேண்டுமானால் நமக்கே உரிதான பலாச மரத்தை, Butea Monosperma-வைப் பாருங்கள். கோடையின் தொடக்கத்தில், மூன்று அல்லது நான்கு மரங்கள் கூடிய நெருக்கத்தில் அடிவானத்தை கொழுந்துவிட்டு எரியச்செய்வதைப் பாருங்கள்.”

Image result for Nature's Spokesman: M. Krishnan and Indian Wildlife

இயற்கை வளங்காப்பின் இரு அசலான இந்திய மரபுகளை, வேடந்தாங்கல், அசோக மரபுகளை, ஒப்புமை செய்வதை கிருஷ்ணன் விரும்பினார். முதல் மரபு செங்கல்பட்டிற்கு அருகே உள்ள கிராமத்தைக் குறித்தது. அங்கு தலைமுறை தலைமுறையாக வழமையும் சமயமரபும் பறவைகளின் இனப்பெருக்கத்தை வேடனின் அம்பிலிருந்தும் ஷிகாரியின் வேட்டைத் துப்பாக்கியிடமிருந்தும் காத்து வந்திருக்கிறது. இரண்டாவது மரபு தன் பிரஜைகளை அரிதான தாவரங்களையும் விலங்கினங்களையும் பாதுகாக்கும்படி ஆணைகளைப் பிறப்பித்த மௌரியப் பேரரசரைக் குறிக்கிறது. கிருஷ்ணன் வேடந்தாங்கலுக்கு (இத்தொகுப்பில் எழுதுவது போல்) முதன்முதலில் 1950-களின் தொடக்கத்தில் சென்றார். அதன் பறவையினத்தையும், அவை பாதுகாக்கப்பட்ட வரலாற்றையும் அராய்ந்து அதை முறைப்படி ஒரு “சரணாலயம்”-ஆக அமைக்க வழிவகுத்தார். கலாச்சார மரபு இயற்கையுடன் இயைந்திருக்க முடியும் என்பதை அவர் அறிந்திருந்தார் – இத்தொகுப்பிலிருக்கும் “The Bishnoi and Blackbuck” கட்டுரையைப் படித்துப் பாருங்கள், சல்மானகான் அமளி இதைப் பணக்கார சந்தைகளில் புழங்கும் இதழ்களுக்கு ஏற்ற கவர் ஸ்டோரியாக மாற்றியதற்குப் பல வருடங்கள் முன்னதாகவே அக்கட்டுரை எழுதப்பட்டது. ஆனால் மக்கள்தொகையும் பொருளாதாரமும் விரைவாக வளர்ந்துகொண்டிருக்கும் மாறுபட்ட நவீன சூழலில், மரபார்ந்த தடுப்புக்காப்பு பல சந்தர்பங்களில் பேராசைக்கு வளைந்து கொடுத்ததென்பதையும் அவர் உணர்ந்திருந்தார். நம் மண்ணின் பழக்க வழக்கங்கள் மீண்டும் கற்பனையூக்கத்துடன் காட்டுயிர்ப் பாதுகாப்பை ஊக்குவிக்கும் காலமும் என்றாவது ஒரு நாள் வசப்படும் என்று அவர் நம்பினார். அதுவரையில் எஞ்சியிருக்கும் உயிரினங்களையும் அவற்றின் இருப்பிடங்களையும் திறம்பட பாதுகாக்க மாநில அரசு  முனைப்புடன் செயலாற்ற வேண்டும் என்று அவர் வற்புறுத்தினார்.

இயற்கையியலராகக் கருதுகையில் கிருஷ்ணன் பல விதங்களில் தனித்து விளங்கினார் என்பது இப்புத்தகத்தைப் படிக்கும் வாசகருக்கு மிகத் தெளிவாகவே புலப்படும். ஆனால், வேடனாக இருந்துவிட்டு பாதுகாவலராக மாறி, வருத்தப்படும் கசாப்புகாரர்கள் சங்கத்தின் உறுப்பினராக அல்லாது இயற்கைப் பாதுகாப்பை அதன் உள்ளார்ந்த மெய்மையைக் கணக்கில் கொண்டு அவரது தலைமுறையின் விதிவிலக்காக விளங்கிய பாதுகாவலர் துப்பாக்கியை கையில்கூட ஏந்தியிராத ஒரு தாவர உணவாளர் என்பது அவ்வளவு வெளிப்படையாகப் புலப்படாது. ஐரோப்பியர்கள் அல்லது பாட்டாளி வர்க்கத்தைச் சேர்ந்த ஹிந்துக்கள் மற்றும் கிருத்துவர்கள் அல்லது உயர்குடியைச் சேர்ந்த ராஜபுத்திரர்கள் மற்றும் இஸ்லாமியர்கள், இவர்களே நம் இயற்கை வரலாற்றின் மிக உன்னிப்பான மாணவர்கள். பின்தைய-அறிவொளியியக்க அறிவியல் தருக்கத்தைப் பின்பற்றுவதாலும், காட்டினத்தை எதிர்கொண்ட அனுபவத்தாலும்தான் இயற்கையையும் அதன் உயிரினங்களையும் குறித்த தீவிர ஆராய்ச்சிக்கு ஐரோப்பியர்கள் ஊக்குவிக்கப்பட்டார்கள்; அன்றாட வேலைகளில் விலங்குகள் தாவரங்களுடன் ஈடுபட வேண்டிய வாழ்க்கைத்தொழில் மரபின் கட்டாயத்தால்தான் உழைக்கும் வர்க்கத்தினர் இயற்கையியலாளர்கள் ஆனார்கள்; தாக்கூர்களும் நவாப்களும் தங்கள் மேற்குடி வம்சாவளியின் சவால்களால்தான் வேட்டுவத்திலிருந்து வளங்காத்தலிற்கு மாறினார்கள்; எனினும் அவர்கள் எல்லாரைக் காட்டிலும் திறமையான இயற்கையியலாளராக ஆவதற்கான வாய்ப்பு ஒரு ரசம்-குடிக்கும், துப்பாக்கி-வெறுக்கும் தமிழ் பிராமணருக்கே வாய்த்தது.

(தொடரும்)


Nature’s Spokesman: M. Krishnan and Indian Wildlife என்ற குருஷ்ணனின் கட்டுரைத் தொகுப்பிற்கு ராமச்சந்திர குஹா எழுதிய முன்னுரையிலிருந்து.

தமிழில் நம்பி கிருஷ்ணன் – எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்; பாண்டியாட்டம் நூலின் ஆசிரியர்.

மூலநூல்கள் / மேலும் படிக்க:

  • M, Nature’s Spokesman, Penguin, 2007

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.