காலநிலை இதழியல் அறிக்கை

கனலி கலை இலக்கியச் சூழலியல் இணையதளம்

சூழலியல்-காலநிலைச் சிறப்பிதழ் – பிப்ரவரி 2021

காலநிலை இதழியல் அறிக்கை
(Climate journalism manifesto)

  1. தமிழ் ஊடகங்கள் சூழலியல்–காலநிலை இதழியல் பிரிவை உடனடியாகத் தொடங்குதல்; ஊடக பேதமின்றி, அனைத்து ஊடகங்களும் ஒன்றிணைந்து சூழலியல்-காலநிலை இதழியலை முன்னெடுத்தல்.
  2. தமிழ் அச்சு, காட்சி, ஒலி, மற்றும் இணைய ஊடகங்கள் தினமும் குறிப்பிட்ட நேரம், குறிப்பிட்ட பகுதியைக் கண்டிப்பாக சூழலியல்–காலநிலைச் செய்திவழங்கலுக்கு ஒதுக்குதல்.
  3. இதழியல், அறிவியல், சமூகவியல் பயிலும் மாணவர்களில் ஆர்வமுள்ளவர்களைக் கண்டறிந்து ஊடகங்கள் அவர்களுக்கு சூழலியல்–காலநிலை இதழியல் பயிற்சி அளித்தல்; மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டங்களில் இதற்கென தனிப் பிரிவொன்றைத் தொடங்குதல்.
  4. சங்க காலம் தொட்டு இன்றுவரை தமிழ் மொழியில் பயின்றுவரும் சூழலியல் சார்ந்த சொற்களின் கலைச் சொல் அகராதி ஒன்றைத் தற்காலப் பயன்பாட்டுக்குத் தகுந்தாற்போல் உருவாக்குதல்; தமிழகப் பழங்குடிகள், தமிழகத்தின் பல்வேறு நிலப்பரப்புகளில் வாழும் மக்கள் குழுக்கள் ஆகியோரிடமும் வட்டார வழக்குகளிலும் வழங்கிவரும் சூழலியல் சார்ந்த சொற்களைத் தொகுத்தல். இச்சொற்களைச் சூழலியல்-காலநிலைச் செய்திவழங்கலில் தொடர்ச்சியாகப் பயன்படுத்துவதன் மூலம் வெகுஜனப் பயன்பாட்டில் அவற்றைப் பரவலாக்குதல்.
  5. தமிழகத்தில் உள்ள சூழலியல்-காலநிலை மாற்றம், புவியியல், மானுடவியல், வரலாறு, சமூகவியல், பண்பாடு, வேளாண்மை உள்ளிட்ட துறைகளின் பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், துறைசார் வல்லுநர்கள், முனைவர் பட்ட மாணவர்கள், முதுமுனைவர் பட்ட ஆய்வாளர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்தல். இதன் மூலம் சூழலியல்-காலநிலை மாற்றத்தின் பல்வேறு பரிமாணங்களை, அறிவியல் மொழியில் இருந்து எளிமையான மொழியில் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் சூழலைத் தமிழ் இதழியல் புலத்தில் உருவாக்குதல்.
  6. தமிழகத்தைச் சேர்ந்த வெளிநாடுவாழ் ஆராய்ச்சியாளர்கள், துறைசார் வல்லுநர்கள், பேராசிரியர்கள், முனைவர் பட்ட மாணவர்கள், முதுமுனைவர் பட்ட ஆய்வாளர்கள், சர்வதேச ஊடகங்களில் பணியாற்றும் செய்தியாளர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்தல். இதன் மூலம் சூழலியல்-காலநிலை மாற்றத்தின் சர்வதேசப் போக்குகளைத் தமிழ்ச் சூழலில் உடனடியாக கவனப்படுத்துதல்.
  7. ‘பங்கேற்பு இதழியல்’ – தொழில்முறை செய்தியாளர்கள் அல்லாமல், சூழலியல்-காலநிலை மாற்றம் சார்ந்த பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களை, அவர்களின் சமுதாயங்களைக் கொண்டு அவர்கள் ‘மொழியிலேயே’ இப்பிரச்சினையைப் பதிவு செய்தல்.
  8. பொதுமக்களின் அன்றாட வாழ்வில் நீங்கா இடம்பெற்றுவிட்ட சமூக வலைத்தளங்களைச் சூழலியல்-காலநிலைச் செய்திவழங்கலுக்கு முறையாகப் பயன்படுத்துதல்; இதன் மூலம் இப்பிரச்சினை குறித்த புரிதலைப் பொதுமக்களிடத்தில் ஆழப்படுத்துதல்.
  9. பதிப்பகங்கள் சூழலியல்-காலநிலை மாற்றம் சார்ந்து வெளியிடும் நூல்களின் தரத்தை, எண்ணிக்கையை மேம்படுத்துதல்; தமிழகம் எங்கும் உள்ள இலக்கிய அமைப்புகள் தாங்கள் ஒருங்கிணைக்கும் கூட்டங்களில் சூழலியல்-காலநிலை மாற்றத்தைப் பேசுபொருளாக எடுத்தல்.
  10. இத்துறை சார்ந்து ஆங்கிலத்தில் உள்ள முதன்மை நூல்கள், கண்டிப்பாகத் தமிழில் மொழிபெயர்க்கப்படுதல். அவை பரவலாக வாசிக்கப்பட்டு, சூழலியல்-காலநிலை மாற்றம் சார்ந்த நம் சொல்லாடலை முன்னகர்த்தும்படி செய்தல்.
  11. எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் எழுத்தாளர்கள் சூழலியல்-காலநிலை மாற்றம் சார்ந்த தங்கள் கவனத்தைத் தீவிரப்படுத்துவதன் மூலம், அரசியல் சொல்லாடலுக்குள் இப்பிரச்சினையைக் கொண்டுவர வழிசெய்தல்; அதன் மூலம் தமிழ்ச் சூழலியல் மரபைச் சர்வதேசச் சொல்லாடல்களில் எதிரொலிக்கச் செய்தல்.

சு. அருண் பிரசாத்
சிறப்பிதழ் ஆசிரியர்

 

2 COMMENTS

  1. A good manifesto and need of an hour but why the politicians are left out…I think that they have major responsibility than anyone else in preserving nature by policies, fund allocation to the projects etc

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.