பற்றி எரியும் கேள்வி: காலநிலை மாற்றத்தின் இலக்கியம் எங்கே?

காலநிலை மாற்றத்தின் விளைவுகளைத் தற்போது மொழியிலும், அதிகரிக்கும் வெப்பத்திலிருந்தும் உணரமுடிகிறது. கனடாவின் வடக்கு ஆர்க்டிக்கில் அமைந்துள்ள பாங்க்ஸ் தீவில் சுற்றுச்சூழல் மாற்றங்கள் வெகு வேகமாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றன; தங்களைச் சுற்றிக் காண்பவற்றை விவரிக்க இனுவியாலூயிட்டில் வசிப்பவர்களிடம் சொற்கள் இல்லை. சம அழுத்தக் கோடுகளின் (isobar) காரணமாகப் புது வகையான மீன், பறவை, பூச்சி இனங்கள் பாங்க்ஸ் தீவின் வடக்கு நோக்கி இடம்பெயர்ந்திருக்கின்றன. இலையுதிர்காலத்தில் இங்கு முதல்முறையாக இடிமின்னல் பதிவாகியிருக்கிறது. நிலஉறைபனி (permafrost) என்ற சொல் பொருளிழந்து, நிலத்தில் நிரந்தரமாக உறைந்திருந்த பனி உருக தொடங்கிவிட்டது. பாங்க்ஸ் தீவின் முக்கியக் குடியிருப்பான சாக் துறைமுகத்தின் கட்டிடங்கள் கீழிறங்கி அமிழத்துவங்க, சாலைகள் பாதி உருகிய பனியால் நனைந்து சேறாகின்றன.

இனுவியாலுய்ட் மக்களின் கலாச்சாரம், இந்த அதிவிரைவான மாறுதலுக்குத் தயாராக இருக்கவில்லை. பழைய காரணப் பெயர்கள் (உள்நாட்டு ஏரியின் பெயர்) இப்போது உள்ளவற்றிற்குப் பொருத்தமாயில்லை. புதிய இயற்கை நிகழ்வை (மின்னல் இல்லாத பழைய வானத்தில், இப்போது தோன்றும் மின்னல்வெட்டுச் சுடர்) விவரிக்க சொற்கள் இல்லை.

பாங்க்ஸ் தீவின் சூழலைத் தொடர்ச்சியாகக் கவனத்தில் எடுத்துக் கொண்டால், காலநிலை மாறுதலுக்கும், அந்தக் கருத்தை வெளிப்படுத்தும் மொழிக்குமான தொடர்பு குறித்து பெரிய கேள்வி எழுகிறது. காலநிலை மாற்றம் குறித்த புனைவிலக்கியம் எங்கிருக்கிறது? அரசின் தலைமை அரசியல் ஆலோசகரான சர் டேவிட் கிங், “உலகம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான சிக்கல்” என்று விவரித்தமைக்கு, படைப்பாக்க எதிர்வினை எங்கிருக்கிறது?

அரை நூற்றாண்டுக்கு முன், உலகம் அழிந்துவிடுமோ என்ற அச்சுறுத்தலை ஏற்படுத்திய, அணு ஆயுதத்துக்கு எதிர்வினையாக இயற்றப்பட்ட அபரிமிதமான இலக்கியத்தோடு இதை ஒப்பிட்டால் காலநிலை மாற்றத்துக்கு எதிராக எழுதப்பட்ட புனைவிலக்கிய படைப்புகளின் போதாமை, வெளிப்படையாகத் தெரிகிறது.

அதிகாரபூர்வ அமெரிக்க, பிரிட்டிஷ் நூற்பட்டியலில், அணு ஆயுத இலக்கியத்தில் மட்டும், 3000-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. இவற்றுள் இயான் மெக்வனின் நாம் இறந்து விடுவோமா?, ஜேஜி பாலர்(டு)-இன் டெர்மினல் பீச், மார்டின் அமிஸ் எழுதிய ஐன்ஸ்டீன் மான்ஸ்டர்ஸ், ரேமண்ட் பிர்க் எழுதிய காற்று வீசும்போது ஆகியவற்றோடு எட்வர்ட் அபே, ரே பிராட்பரி, அப்டன் சின்கிளேர் மற்றும் நெவில் ஷுட் ஆகியோர் எழுதியவையும் அடங்கும். இந்த இலக்கியம் அணு ஆயுத அரசியல் குறித்தான விவாதத்துக்கு விளக்கவுரை கொடுத்ததோடு, அதற்கான ஒரு வடிவத்தையும் கொடுக்க உதவியது.

ஆனால் இந்த அணு ஆயத இலக்கியத் தீவிரம் போன்று, காலநிலை மாறுபாட்டுக்கெதிரான புனைவிலக்கியத் தீவிரம் எதுவுமே இல்லை. பாலர்டு “கண்ணுக்குப் புலனாகாத இலக்கியம்” என்று சொன்னதைப் போன்று, காலநிலை மாறுபாட்டுக்கான தகவல்கள், கம்பெனி அறிக்கைகளிலும், சிறப்புக் குறிப்பேடுகள் தொழில்துறை சார்ந்த கையேடுகள், சந்தை ஆய்வு அறிக்கைகள் மற்றும் அலுவலக உள்சுற்று குறிப்பாணைகள் ஆகியவற்றிலும் புதைந்து கிடக்கின்றன. அவை தகவல்களைச் சேமித்து வைக்கும் ஆவணங்களாகவும் ஒலிப்பதிவுகளாகவும் உள்ளன. இதழியல், உரையாடல் ஆகியவற்றிலும் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால் ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர்த்து, இன்னமும் இவை புனைவு, கலை இலக்கியத்தில் இடம்பெறவில்லை. பேரழிவுக்கு மனிதகுலத்தை இட்டுச் செல்லும், இந்தச் சமகால மிகப்பெரிய கவலைக்குரிய விஷயத்துக்கு, புனைவிலக்கிய நாவல்கள், நாடகங்கள், பாடல்கள் இசை நாடகங்கள், கவிதைகள் எங்கே உள்ளன?

காலநிலை மாற்றத்துக்கான காரணங்கள் மற்றும் அவற்றின் விளைவுகள் ஆகியவற்றை விவாதிக்கவும், உணரவும் மற்றவர்களுடன் பகிரவும், கற்பனையுடன் கூடிய இசைப் பாடல்கள், நாடகங்கள் அவசரமாகத் தேவைப்படுகின்றன. அடி வயிற்றில் பயம் வந்தாலொழிய, தனி மனிதர்கள் அவர்களுடைய நுகர்வு பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ளவோ, அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி, காலநிலை கொள்கையைத் தமக்கு ஆதரவாக மாற்றும் செயல்பாட்டை நிறுத்தவோ மாட்டார்கள் என்று பில் மெக்கிப்பென் இயற்கையின் முடிவு என்ற தம் புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.

அவர்களுக்கு இந்த அடிவயிற்றுக் கலக்கத்தை உண்டு பண்ணுவதில் புனைவு கலை இலக்கியத்துக்கு மிக முக்கிய பங்கிருக்கிறது. ஏனென்றால் கற்பனையின் உதவியினால், இதுவரை நிகழாத சம்பவங்களை அடிப்படையாக வைத்து, மாற்று வாழ்வையும் எதிர்காலத்தையும், புதிய நிலப்பரப்பில் உண்மையாக நாம் வாழ்வது போலவே, நம்மை உணர வைக்கும் சிறப்புத் திறமை அதற்கு உண்டு. அதனுடைய தனித்தன்மையால், இன்று நாம் செய்யும் செயலையும், எதிர்காலத்தில் அதற்கான விளைவையும் நம்மால் இணைத்துப் பார்க்க முடியும்.

பிரச்சினை என்னவென்றால், காலநிலை மாற்றத்தின் விளைவுகள் இதுவரை பேரழிவை ஏற்படுத்தவில்லை. விரைவாகவும், ஆற்றல் மிக்கதாகவும் வருவதாக, விவிலியம் விவரிக்கும் ஊழி முடிவு புனைவிலக்கிய கற்பனைக்கு, அதிக வாய்ப்புகளை அளிக்கிறது. விவிலியத்தின் கடைசிப் புத்தகமான ‘திருவெளிப்பாடு’வில் துவங்கி சந்தத்துடன் கூடிய அதன் துதிபாடல்கள், மந்திர உச்சாடனங்கள் பூமியின் இறுதி முடிவு ஏற்பட்டு, மனித குலம் அழிவதைச் முன்கூட்டியே சொல்லும் மந்திர அடுக்குத் தொடர் எனப் பரந்து விரிந்துள்ள ‘ஊழிமுடிவு இலக்கிய வகை’ (Apocalyptic literature) இதை உறுதிசெய்கிறது.

விவிலியம் சொல்லும் ஊழி முடிவுக்கு மாறாக, காலநிலை மாற்றம் மெதுவாகவும், படிப்படியாகவும் நடப்பதால், மெதுவாக மாறும் காலநிலையை எப்படிக் கருவாக்குவது? எல்லாவற்றையும் எப்படி ஒன்று சேர்த்து, நாடகத்தன்மையுடன் மிகையாக்கி விவரிப்பது என்பன போன்ற சிக்கல்களை, காலநிலை மாற்றம் கற்பனைக்குக் கொடுக்கிறது. காலநிலையின் தொடர்ச்சியான தாக்கம் பேரழிவாக இருக்கலாம்; உயிர்களை மனிதன் தன் இஷ்டத்துக்கு மாற்றக்கூடிய இயற்கைக்கெதிரான உலகத்துக்கு, நம்மை நோக்கித் தள்ளலாம். ஆனால் அது இன்னமும் அறிவியல்பூர்வமாக உறுதிப்படுத்தபடவில்லை. அணு ஆயுதத்தின் விபரீதத்தைச் சுட்டிக்காட்டும், ‘பிரகாசமான கவலையளிக்கிற அணு ஆயுதத்தின் சுடர்விடும் முனை’, ‘பிளாஸ்டிக் உறையின் அடியில் இருக்கும், கொழுத்த சிவப்பு பட்டன்’, ஆயுத வெடிப்பின்போது, உயிர் பிழைக்கத் தஞ்சம்புகும் ‘அடுப்படி மேடையின் கீழ்த்தளம்’ போன்ற முத்திரை குறியீடுகளைப் காலநிலை மாற்றம் இன்னமும் பெறவில்லை.

காலநிலை மாற்றம் குறித்த இலக்கியத்தில், தற்போதைக்குப் பேரழிவு பற்றிய சித்திரத்தைக் காட்டுவதிலிருந்து, வேண்டுமென்றே விலகியிருப்பது நல்லது. ஏனென்றால் இப்போதுள்ள சுற்றுச்சூழல் இயக்கம், பழங்காலத்தில் கெட்ட கனவுகளின் சக்தியைக் காட்டி, சமூக மாற்றத்தைக் கொண்டுவர நினைத்தது. 1970-களிலும், 1980-களின் முற்பகுதியிலும் மக்கள்தொகை பெருக்கம், வளைகுடா நாடுகளில் திடீர் கடல்மட்ட உயர்வு, மெக்ஸிகோ வளைகுடாவிலிருந்து, அட்லாண்டிக் சமுத்திரத்துக்கு வெந்நீரைக் கொண்டுவரும் ‘வளைகுடா நீரோட்டம்’ திடீரென்று நின்றுவிடுதல் போன்ற துன்பங்கள் நிறைந்த, கற்பனைக் கணிப்புகள் செய்யப்பட்டன. அவை எல்லாமே தவறென்று நிரூபிக்கப்பட்டுவிட்டதால் சுற்றுச்சூழல் இயக்கத்தின் நம்பகத்தன்மை மீது விழுந்த அவநம்பிக்கை, மீண்டும் சரி பண்ண முடியாத அளவுக்குப் போய்விட்டது. காலநிலை மாற்றத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள், என்றுமே உண்மையாக நிகழ முடியாத பயங்கரமான சம்பவங்கள் இவையென்று இந்தப் பேரழிவுகளைக் குறித்து மகிழ்ச்சியுடன் விமர்சிக்க வழியேற்பட்டுவிட்டது.

எனவே இப்போது நிலவும் பிரச்சினைக்கான இலக்கியத்தின் எதிர்வினையை, மிகுந்த கவனத்துடன் மதிப்பிட வேண்டும். மேலும் இலக்கியக் கற்பனை அறிவியல்பூர்வமாக இருப்பதுடன், அறிவியலின் சான்றுகளுக்கு ஒத்துப் போவதாகவும் இருக்க வேண்டும். இதற்கு நீண்ட காலம் இருந்து, காலநிலையின் மாறுதல்களையும், அவற்றின் விளைவுகளையும் பதிவு செய்யக் கூடிய தனித்திறன் வாய்ந்த இலக்கிய வடிவம் தேவைப்படும் என்றும், எச்சரிக்கையுடனும் கவனமுடனும் இருந்து மாறுதல்களைத் துல்லியமாகச் சொல்லக்கூடிய இலக்கிய மொழிகள் தேவை என்றும் சிலர் நினைக்கலாம். (இப்போது தோரோ நினைவுக்கு வரக்கூடும். வால்டன் குளம் ஒவ்வோர் ஆண்டும் முதல் தடவையாக எந்த நாளில் பனியாக உறைந்தது என்பதை தோரோ பதிவு செய்திருக்கிறார். கோனிஸ்டன் ஏரிக்கரையில் இருந்த, தம் வீட்டில் இருந்தவாறு ரஸ்கின், காற்றின் மாசு வானின் நீல வண்ணத்தை எப்படிப் பாதிக்கிறது என்பதைக் கண்டறிவதற்காக, மிகவும் கஷ்டப்பட்டுத் தினமும் நீல வண்ணத்தை அளந்து பதிவு செய்து வைத்திருக்கிறார். கில்பர்ட் வைட் வெவ்வேறு மரங்களில் இருந்த ஆந்தைகளின் வெவ்வேறு விதமான அலறலைக் கவனித்து உண்மையைக் கண்டறிந்திருக்கிறார்). மக்கள் பேசும் வட்டார மொழிகளும் இதற்கு உதவக்கூடிய வாய்ப்பிருக்கிறது.

ஜான் லே கேர் அவருடைய கான்ஸ்டண்ட் கார்டனர் என்ற நூலில், நேர்மையற்ற ஊழல் நிறைந்த சர்வதேச மருந்து தொழிற்சாலைகளைப் பற்றிக் கோபமாக எழுதியவர், அதையே காலநிலை மாற்றம் குறித்த அரசியலுக்கெதிராகவும் செய்வாரா?

இது போன்ற ஒரு நிகழ்வை, 19-ஆம் நூற்றாண்டிலும் பார்க்கமுடியும். 1800-ஆம் ஆண்டின் பிற்பகுதியில், விக்டோரியா அரசியின் காலத்தில் வாழ்ந்தவர்கள், பருவகால மாற்றத்தைப் பற்றிய பயத்துடன் வாழ்ந்தனர் 1862-ஆம் ஆண்டில், லார்டு கெல்வின் என்று பெரிதும் அறியப்பட்ட இயற்பியல் அறிஞர் வில்லியம் தாம்ஸன் என்பவர், சூரியன் அதன் எரிசக்தியைப் புதுப்பிக்க முடியாமல், வெப்பம் குறைந்து குளிர்ந்து கொண்டே வருகிறது என்ற கருத்தை வெளியிட்டார். இப்படிச் சூரியன் வெப்பத்தை இழந்து, சூரியக்குடும்பம் குளிர்ந்து, அழிந்துபோவதற்கு ‘வெப்பச் சாவு’ என்று பெயரிட்டார். பூமியும் மெதுவாக ஒளியை இழந்து பனிப்பாறையாக உறைந்துவிடும் என்றும், தாமஸ் ஹக்ஸ்லி சொன்னது போல் உலகம் முழுக்க ஒரே மாதிரியான குளிர்காலம் நிலவும் என்றும் சொன்னார்.

உடனடியாக சூரிய இயற்பியல் அக்காலத்தில் வாழ்ந்தவர்களின் விவாதப் பொருளாயிற்று. பூமி குளிரும் விஷயம், தலைப்புச் செய்தியாகி, விரைவாக அப்போதைய கலை இலக்கியப் படைப்புகளில் இடம்பிடித்தது. சாமுவேல் பட்லர், ஜேம்ஸ் தாம்ஸன், ரிச்சர்டு ஜெப்ரீஸ், வில்லியம் மோரீஸ், ஜி.எப். வாட்ஸ், தாமஸ் ஹக்ஸ்லி, தாமஸ் ஹார்டி ஆகியோரின் படைப்புகளில் இதனைக் காண முடியும்.

நீண்ட காலம் தொடர்ச்சியாக மிக மெதுவாக வளர்ச்சியடைந்த மனிதகுலம், முற்றிலுமாக அழிந்துபோவதைத் தம்மால் பொறுக்க முடியாமலிருக்கிறது என்று சார்லஸ் டார்வின் தம் சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். 1862-ஆம் ஆண்டு நவம்பர் 19-ஆம் தேதியில் ஜான் ரஸ்கின், “நான் சூரியக் கடவுளான அப்போலோவை நம்ப விரும்புகிறேன் – ஆனால் சூரியன் ஒளியிழந்து, துருப்பிடித்துப் போவதை நம்ப முடியவில்லை அல்லவா?” என்று தம் நண்பருக்குக் கவலையுடன் கடிதம் எழுதினார். எச்.ஜி.வெல்ஸ், உலகப் போர்கள் என்ற நூலில் செவ்வாய்க் கிரகவாசிகள் சூரியன் குளிர்வதால், அதை நோக்கித் தம் போர்ப் படைகளை அனுப்புகிறார்கள் என்று எழுதியுள்ளார். அக்காலத்தில் வெளிவந்த கலை இலக்கியப் புனைவுகளும், கவிதைகளும் ஆண்டின் இறுதியில் செத்துப் போகும் சூரியன் தினந்தினம் மறையும்போது, ஏற்படும் சூரியனின் சாவு என இக்கருத்தைப் பற்றிப் பெரிதும் பேசின. பழைய புராணக் கதைகள் குறிப்பாக இளம் ஹீரோ இறக்கும் நார்ஸ் புராண கதை புதுப்பிக்கப்பட்டு, சூரியனைச் சாகடிக்கப் பயன்படுத்தப்பட்டது.

அக்காலத்துக்கும், இக்காலத்துக்கும் வேறுபாடு இருக்கிறது. மனிதனால் சரி செய்ய முடியாத, பிரபஞ்சத்தின் செயலற்ற நிலை விக்டோரியா காலத்தவர்களைப் பயமுறுத்தியது. ஆனால் இப்போதோ, மனிதனின் செயலுக்கான இயற்கையின் எதிர்வினை, நம்மைப் பயமுறுத்துகிறது. அவர்கள் வெப்பச்சாவு குறித்துக் கவலைப்பட்டார்கள். எதிர்காலத்தில் குளிர்ந்த பூமியில் உயிர் வாழ்வது பற்றிய மனக்காட்சிகள், ஏராளமான இலக்கியப் படைப்புகளுக்கு வித்திட்டன. அவை அறிவியலைக் கொஞ்சம் விவாதிக்கவும், நாடகத் தன்மையுடன் கொஞ்சம் மிகையாக்கவும் செய்தன. கில்லியர் பியர் தம் கட்டுரையில், “கற்பனை உயிரோவியங்களும், அறிவியல் ஆய்வும் ஒன்றையொன்று பிரிக்க முடியாதவாறு, கூட்டு ஒத்துழைப்புடன் செயல்படக்கூடியவை, இந்த ஒத்துழைப்புதான் நம் காலத்தில் இல்லை” என்று எழுதியுள்ளார்.

ஆனால் இப்போது மாற்றத்துக்கான அறிகுறிகள் இருப்பதோடு அதற்கான முன்னெடுப்புகளும், ஆயத்தமாயிருக்கின்றன டேவிட் பக்லாந்து என்பவரின் தொலைநோக்குத் திட்டமான “கேப் ஃபேர்வெல் திட்டம்” அந்தோணி கார்ம்லே, ஐயான் மெக்வன், ரசேல் வைட்ரீட் உள்ளிட்ட கலைஞர்களை, ஆர்க்டிக் பிரதேசத்துக்குப் பயணப்பட வைத்திருக்கின்றது பொதுமக்களையும், பள்ளி மாணவர்களையும் காலநிலை மாற்றம் குறித்த விவாதங்களில், பங்கெடுக்க வைப்பதும், பூமியின் இந்த முக்கியமான பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்து விளக்குவதும் இதன் முக்கிய நோக்கம்.

ஆர்.எஸ்.ஏ எனும் அமைப்பு, சூழலியலாளர், அறிவியல் அறிஞர், எழுத்தாளர் மற்றும் சிந்தனையாளர் என அனைவரையும் ஒருங்கிணைத்துச் சூழலியலில் சமகாலக் கலையின் பங்கு மற்றும் பொறுப்பு ஆகியவற்றை ஆராய்வதற்காக, ‘கலையும் சூழலியலும்’ என்ற பிரமாதமான ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. ஓபன் டெமாக்ரஸி (Open Democracy) இணையதளம் காலநிலை மாற்றம் குறித்த விவாதத்துக்கு, ‘காலநிலை மாறுபாடும், கலை இலக்கியமும்’ எனும் தலைப்பில் கலந்தாய்வு ஒன்றை ஒருங்கிணைத்தது.

ஓபன் டெமாக்ரஸி வலைத்தளம், காலநிலை மாறுபாடு குறித்த விவாதத்தை நடத்தியது. கிரந்தாவின் (Granta) அண்மை இதழ், தட்பவெப்பநிலை குறித்து சிறப்புப் பகுதி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் உலகளாவிய எழுத்தாளர்கள், தாங்கள் உணர்ந்த காலநிலை மாற்றம் குறித்து எழுதியிருந்தார்கள். பதினைந்து நாட்களுக்குமுன், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில், ஐயான் மெக்கெவன், பிலிப் புல்மேன், கேரில் சர்ச்சில், கிரெட்டல் எர்லிச் உள்ளிட்ட முப்பது கலைஞர்களும், முப்பது அறிவியல் அறிஞர்களும் பங்குகொண்டனர். காலநிலை மாற்றத்தை எதிர்த்து, கலை இலக்கியமும், அறிவியலும் எப்படி இணைந்து போராடலாம் என்பது குறித்து இவர்கள் விவாதித்தனர்.

ஆக பண்பாட்டின் (கலை, இலக்கியம்) காலநிலையும் மாறத் தொடங்கியுள்ளது. ஒருவேளை காலநிலை மாற்றம், கலை இலக்கியப் காலநிலையைத் தாண்டிச் சென்றுவிடக்கூடும். ஏனெனில் புவிவெப்பமாதலின் விளைவுகள், நீண்ட காலம் மெதுவாகவோ, படிப்படியாகவோ இல்லாமல் திடீரென்று ஏற்பட்டு சீக்கிரமே வெளியில் தெரியத் தொடங்கலாம். எடுத்துக்காட்டாகச் சமீபத்தில், சீனாவின் மூத்த சூழலியலாளர் சீனாவின் வறண்ட வடக்கும், ஈரமான தெற்கும் 15 ஆண்டுகளுக்குள் எதிர்மாறாகத் திரும்பிவிடும் என்று கணித்தார். கத்ரீனா புயலின் தீவிரத்துக்குக் கூட காலநிலை மாற்றம் காரணமாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது; ஆனால் நிரூபிக்கப்படவில்லை. 2003-ஆம் ஆண்டில் ஐரோப்பாவில் வீசிய கொலைகார அனல் காற்றால் ஏற்பட்ட ஆபத்தை இரட்டிப்பாக்கியதற்கு, மனிதனின் ஆதிக்கமிக்க செயல்களே காரணம் என்று காட்டப்பட்டுள்ளது. உண்மையில் வருங்காலத்தில் எழுத்தாளர்கள் காலநிலை மாற்றத்தைத் தங்கள் எழுத்தில் பேசுபொருளாக எடுக்காமலிருப்பது மிகவும் சிரமமே!


ராபர்ட் மெக்ஃபார்லேன் – The Old Ways, Landmarks, The Lost Words, Underland நூல்களின் ஆசிரியர்.

படைப்பிலக்கியம் காலநிலை மாற்றம் பற்றிப் பேச வேண்டிய தேவையை வலியுறுத்தி எழுதப்பட்ட முதல் கட்டுரைகளில் ஒன்றான இது, 24 செப்டெம்பர் 2005 அன்று The Guardian நாளிதழில் வெளியானது.

தமிழில்: ஞா. கலையரசி 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.