பேதமுற்ற போதினிலே -1

கவிதையை வாசிக்கத் தொடங்கும் ஒருவர் அதனை தன்னளவில் முழுமையான ஒன்றாக முதலில் உணரவேண்டும். வைரம் எவ்வாறு பட்டை தீட்டப்பட்டு பல பரிமாணங்களில் ஜொலிக்கிறதோ, ஒரு கடுகு தன்னளவில் முழுமையான ஒன்றாக எப்படி இருக்கிறதோ, ஒரு கூட்டுப்புழுப் போல எப்படி முந்திரி இருக்கிறதோ, ஓர் இலை எப்படி பெருமரம் போன்ற உருவை தன்னுள் கொண்டிருக்கிறதோ அப்படி ஒரு தன்மை கொண்டிருப்பது கவிதை. பெரும்பாலும் கவிஞர்களின் ‘தான்’ என்னும் வெளிப்பாடு கவிதை முடியுமிடத்தில் பார்க்கலாம். குழந்தை ஒரு வட்டம் போடச்சொன்னால், ஒரு புள்ளியில் தொடங்கி சுழற்றி முடிக்குமிடத்தில் திணறி இடைவெளியோ, சமனின்றியோ செய்துவிடுமோ அதைப்போல இருப்பதைக் காணலாம். எல்லாமே முழுமையை நோக்கிய பிரயத்தனங்களே அல்லது முழுமைக்கான பிரயத்தனமாக இருக்கவேண்டும் என்றும் சொல்லலாம். ஒவ்வொரு வரியும் பிரிக்கமுடியாத உட்கூறாக இருக்கவேண்டும். அவசியமில்லாத ஒன்று எப்படி ஒரு முட்டைக்குள் இருப்பதில்லையோ அதுபோல, தேவையற்ற சொல் இல்லாமல் இருக்க வேண்டும்.

ஒரு சில மாதங்களுக்கு முன்னால் எழுதிய ஒரு கவிதையை கவிஞர் கைலாஷ் சிவனிடம் காட்டினேன். வாசித்துவிட்டு அவர் இது ஏற்கெனவே எழுதப்பட்டது என்றார். கவிதை ஒற்றைச் சொல்லிலோ, சொல்லிலாத ஒரு உணர்விலிருந்தோ உருக்கொள்கிறது. அதை உண்மையாய் வார்த்தைகளில் பிரதிபலிப்பதே ஒரு கவிஞர் செய்யக்கூடுவது. ஆனால் ஒரு மொழியில் இயங்கும் ஒருவர், தனக்கு முன்னோடிகளை அறிந்திருக்க வேண்டியது அவசியமாகிறது. அப்போதுதான் புதிதாய் எழுதுபவர் தனது பங்களிப்பாக எதுவும் செய்யமுடியும். இல்லாவிடில் ஒரு தேக்கநிலை உருவாகிவிடும். முன்னோடிகளை வாசித்திருக்கும் ஒருவரிடமிருந்துதான் நகர்தல் சாத்தியமாகிறது. ‘போலச் செய்தல்’ தவிர்க்கப்படுகிறது. மேலும், ஏற்கெனவே சொல்லப்பட்டதைச் சொல்வது ஒன்றும் தவறில்லை. உண்மையான வார்த்தைகள் அவற்றில் ஒளியைப் பாய்ச்சிவிடும்.

ஒரு சொல்லை தொடர்ந்து உபயோகித்து வரும்போது அது தன் வீர்யத்தை இழக்கிறது. பரீட்சார்த்த முறையில் வேறு அர்த்தங்களுக்கு பந்தாடப்படுகிறது. காலவோட்டத்தில் எதிர்மறையான அர்த்தங்களைக்கூட சூடிக்கொள்கின்றன. அர்த்தத்திலிருந்து, அனுபவத்திலிருந்து, உணர்வு நிலையிலிருந்து அல்லது ஒற்றைச் சொல்லிலிருந்து தொடங்கும் கவிஞன் அதைக் கடத்துவதற்கு மொழியைச் சலிக்கிறான். சமூகத்தால் பந்தாடப்படாத, களங்கப்படுத்த முடியாத அதியுன்னதமான சொற்களே அவன் இலக்கு. அதனால்தான் இத்தனை தடுமாற்றம். சொல் என்பதே சற்றேறக் குறைய அர்த்தம் தொனிப்பதுதான். கச்சிதமான எல்லையிட முடியாதது. சொல்லே மிகைதான். ஆனால் சொற்களின் மூலம்தான் சொல்ல முடிகிறது என்பது ஒரு துயரம். சொற்கள் இல்லாமல் கவிதானுபவம் நிற்கிறது. கவிஞனின் போராட்டமளவுக்கே வாசகரும் அரணை உடைத்து வரவேண்டியிருக்கிறது.

ஒருமுறை கல்யாண்ஜி சொன்னார். அக நெருக்கடியாய் உணரும்போதே தன்னால் கவிதைகள் எழுதமுடிவதாகவும், பிற சமயங்களில் கவிதை செய்தல் கடினமாக இருப்பதாய் உணர்வதாகவும் கூறினார். புதிதாய் கவிதையெழுத முயலும் ஒருவர் என்ன செய்யவேண்டும் என்ற கேள்விக்கு கவிஞர் விக்ரமாதித்யன் ‘முதல்ல வேலைய விடு’ என்று சொன்னதை சரியான அர்த்தத்தில் புரிந்துகொள்ள வேண்டும். எல்லாம் சரியாக இருக்கும்போது கவிதைக்கு என்ன வேலை? கவிஞன் கொந்தளிக்கும் மனதோடு திரிகிறான். கவிஞன் தனக்கான அதியுன்னதச் சொற்களைக் கண்டடைய முடியாதபோது மொழியை ஏமாற்றுகிறான். ஒருவகையில் வாசகரையும். சொற்கள் வழியே நடந்துகாட்டி அதன் அடியில் கிடக்கும், அவன் சுட்ட நினைக்கும் அர்த்தத்தை உணர்த்துகிறான். அகத்துடன் போராடுபவர்களுக்குத்தான் இது பொருந்தும். மொழியில் பொம்மை செய்து விளையாடுபவர்களுக்கு கடலைப் பற்றித் தெரிய அவசியமில்லை.

தன்னை அறிதலில் தற்பெருமையும் அடங்கும். இந்த உலகத்திலேயே என்னைப் போன்றதொரு படைப்பு இல்லை என்று உணர்கையில் உண்டாகும் கிளர்ச்சியும், தன்னை உள்ளபடி, தனது ஆகச்சிறந்த வெளிப்பாட்டை நிகழ்த்திக் காட்டவும் கலைஞர்கள் முயற்சிக்கிறார்கள். வெளிப்படுத்தும் இச்சையே முதலாக உள்ளது. உலகம் தனக்கான பிசகாத வழியில் செல்லும்போது தனியே நின்று கூவிக் கொண்டிருக்கிறான் கலைஞன். உயிர்த்து வளர்ந்து பூவாய் மலர்ந்து விகசிக்கும் ஒரு பூச்செடி சொல்வதென்ன? பூ என்பது செடியில்லை. செடியின் வெளிப்பாடு. பூக்களை எடுத்துக் கொள்ளத்தான் செடிகள் சொல்கின்றன. அதனால்தான் காம்புகள் பூக்களை எளிதில் பறிக்கும்வண்ணம் இலகுவாக உள்ளன. ஒரு வேகமான காற்றுக்கும் உதிரும்படிக்கு. ஆயிரம் பூக்கள் மலரட்டும்.


தொடரும்

-பாலா கருப்பசாமி

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.