மைக்கல் ஒண்டாச்சி

“There is a story, always ahead of you. Barely existing. Only gradually do you attach yourself to it and feed it. You discover the carapace that will contain and test your character. You will find in this way the path of your life.”

― Michael Ondaatje, The Cat’s Table

மைக்கல் ஒண்டாச்சி இலங்கையில் பிறந்தவர். அவரது தந்தைவழி வேர் தமிழ் அடையாளத்தைக் கொண்டது. மைக்கல் ஒண்டாச்சியின் சுயசரிதைச் சாயல் கொண்ட நூலான Running in the Familyஐ வாசிப்பவர்கள் அவரது தந்தை வழி தமிழ் அடையாளங்களை எளிதாகக் கண்டுகொள்ளமுடியும். மைக்கலின் பெற்றோர்கள் விவாகரத்துப் பெற்றபோது, மைக்கல் பதினொரு வயதில் இங்கிலாந்திற்குச் சென்றவர். இலங்கையிலிருந்து இங்கிலாந்துக்குப் போகும்  அந்தக் கப்பல் பயண அனுபவத்தை, பின்னர் ஒருவகையான மர்மப் பயணமாக cat’s tableஇல் மைக்கல்  புனைவாக்கியிருப்பார்.

இங்கிலாந்திலிருந்து கனடாவிற்கு அவரது சகோதரருடன்  தனது இருபதுகளில் புலம்பெயர்ந்த மைக்கேல் ஒண்டாச்சி, அன்றிலிருந்து இன்றுவரை கனடாவில் வசித்து வருகின்றார். பல்கலைக் கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது ஒரு பேராசிரியரின் உற்சாகத்தாலேயே எழுத்தின் பக்கம் கவரப்பட்டிருக்கின்றார்.  தனது படைப்புக்களும் தனிப்பட்ட  ஆர்ப்பாட்டமில்லாத வாழ்வும் என்றிருந்த மைக்கலுக்கு அவர் எழுதிய நாவலான English patient பெரும் கவனத்தைக் கொடுக்கின்றது. மான் புக்கர் பரிசு உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்ற இந்நாவல் அதன்பிறகு திரைபபமாக்கப்பட்டு பத்துக்கும் மேற்பட்ட ஆஸ்கார் விருதுகளைப் பெற, மைக்கேல் ஒரு உலகப்புகழ்பெற்ற எழுத்தாளராகிவிடுகின்றார். இந்தப் பரவலான கவனம் குறித்தும் அதிகம் கூச்சப்படுகின்றவராகவே மைக்கல் இருக்கின்றார்.

அவரின் English Patient உலகப்போரின் பின்னணியில் எழுதப்பட்டதென்றால், Anil’s Ghost இலங்கையைப் பின்னணியாக வைத்து எழுதப்பட்டிருக்கின்றது. ‘அனிலின் பேய்’  இலங்கையிலிருந்து வெளிநாட்டுக்குப் போயிருந்த அனிலின் கதையைச் சொல்கின்றது. படிப்பின் பின் இலங்கை திரும்பிவருகின்ற அனில் புராதன வரலாற்று அகழ்வாராய்ச்சியில் ஈடுபடுகின்றார். அந்தசமயம் சமகாலத்தில் கொன்று புதைக்கப்பட்ட ஒரு எலுப்புக்கூட்டை அகழ்வின் இடையே கண்டுகொள்கின்றார். அதற்கு  ‘கடலோடி’ என்று ஒரு பெயரை வைத்து அந்த மனிதர் யாராக இருக்கும் என்று தேடிப்போவதாக இந்த நாவல் விரியும். இந்த  பயணத்தில் இலங்கையில் சமகால அரசியல் பேசப்படுகின்றது. அனிலோடு கூடவே பயணிக்கும் அவரின் நண்பர் இந்த எலும்புக்கூட்டின் மர்மத்தின் உண்மையைக் கண்டுபிடிக்கும் நிமித்தம் கொல்லப்படுகின்றார் என  இந்த நாவல் நீளும்.

Anil’s Ghost, English Patient, In the Skin of a Lion  போன்ற மைக்கல் ஒண்டாச்சியின் கவனம் பெற்ற நாவல்களைத் தவிர்த்து அவரின் பிற நாவல்களில் சிலவற்றை இங்கே  சற்று விரிவாகப் பார்ப்போம்.

Divisadero

வாழ்க்கை எவ்வளவு அழகானதாக இருக்கின்றதோ அதேயளவுக்கு அபத்தமாக அமைந்துவிடும் ஆபத்துமிருக்கிறது. ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்று சங்க இலக்கியம் கூறியது. நமது தனிப்பட்ட தேர்வுகளே நமது வாழ்வைத் தீர்மானிக்கின்றன என்று சார்த்தரும் நிறைய எழுதினார். எமக்கான பொழுதுகளை எமது தேர்வுகள்தான் தீர்மானிக்கின்றன என்ற புரிதல் இருந்தாலும் நம்மால் வாழ்வின் அபத்தங்களை எளிதாய்த் தாண்டிப்போய்விட முடிகின்றதா என்ன? எனவேதான் தொடர்ந்தும் மனித மனங்களின் சிக்கலான புதிர் நிறைந்த ஆட்டங்களை நாம் சுவாரசியமாகப் பார்த்தபடியும் விவாதித்தபடியும் இருக்கின்றோம். வாழ்க்கையெனும் சதுரங்க ஆட்டத்தில் நகர்த்தப்படும் சில பாத்திரங்களின் அசைவுகளை மைக்கல் ஒண்டாச்சியின் Divisadero நம்முன் விரித்து வைக்கின்றது. ஆட்டமொன்று நடக்கும்போது வெளியிலிருக்கும் நமக்கு இந்த நகர்வு சரியாயிருக்கிறது/தவறாயிருக்கிறது என்று தெரிந்தாலும் நம்மால் குறுக்கிட முடிவதில்லை போல, மைக்கல் ஒண்டாச்சியின் பாத்திரங்களும் அதன் போக்கில் நகரும்போது உறைந்த நிலையிலிருந்து நாம் ஆட்டத்தின் அனைத்து நகர்வுகளையும் அவதானித்தபடி நமக்குள்ளே ஒரு ஆட்டத்தை தொடங்கிவிடவும் முயற்சிக்கின்றோம்.

மைக்கல் ஒண்டாச்சியின் அநேக நாவல்களில் மிகப்பெரும் தனிமையும், மர்மத்தின் சுழல்களும் எப்போதும் சுற்றிச் சுழன்று கொண்டிருப்பதுபோல இந்நாவலிலும் அவற்றுக்கான இடங்கள் இருக்கின்றன. வட கலிபோர்னியா நகருக்கு ஒதுக்குப்புறமாய் தோட்டக்காணிகளும், நிறையக் குதிரைகளும் இருக்கும் கிராமப்புறமே நாவலின் முற்பகுதியில் பின்னணியாகின்றன. ஆன் (Anne), ஆனின் தந்தையார், கிளேயர் (Claire) மற்றும் கூப் (Coop) ஆகிய நான்குபேரைச் சுற்றியே கதை ஆரம்பத்தில் சுழல்கின்றது.

இந்த நாவலின் பல பாத்திரங்கள் -சாதாரண வாசிப்பில் எதிர்ப்பார்க்கின்ற – முழுதான வடிவத்தைத் தந்து முடிவான முடிவுகள் என்று எதையும் தருவதில்லை. வாழ்கை என்பது எப்போதும் ஓடிகொண்டிருக்கும் நதிதான். ஏதோ ஒரு கணத்தில் கால் நனைக்கும் நம்மால் கடந்தகாலத்தையோ எதிர்காலத்தையோ, ஏன் நிகழ்காலத்தைக் கூட முழுதாகத் தெரிந்துகொள்ள முடியாது எனபதே யதார்த்தமானது. எனவே ஒவ்வோரு பாத்திரங்களும் ஏதோ ஓரிடத்தில் நாவலிருந்து நழுவிப்போய்விடுகின்றார்கள். நாவல் முடியும்வரை எப்போதாவது ஓரிடத்தில் திரும்பிவந்து தமது கதையை நிறைவுசெய்வார்கள் என்று நினைத்து வாசித்துமுடிக்கும்போது அவர்கள் மீண்டும் திரும்பியே வருவதில்லையென்கின்றபோது, அட இன்னும் அந்தப் பாத்திரத்தை ஆழமாய் வாசித்திருக்கலாமோ என்று எண்ண முடியாமல் இருக்க முடிவதில்லை. மேலும் நிகழ்காலத்தில் எம் முன்னே விழுந்து கிடக்கும் கடந்தகாலத்தின் சிறகுகள் ஒவ்வொன்றும் நமக்கான கடந்தகாலத்தை நினைவுபடுத்தும் என்கின்றபோதும், அந்தச் சிறகுகளைக்கொண்டு முழுப்பறவையும் அது பறந்துகொண்டிருந்த வெளியையும் முழுமையாக நினைவுபடுத்தலென்பது அவ்வளவு சாத்தியமானதில்லை. அவ்வாறான ஒரு நினைப்புடனேயே இந்நாவல் முழுதும் பாத்திரங்கள் படைக்கப்பட்டிருக்கின்றதோ என்றுதான் யோசிக்கத்தோன்றுகின்றது.

இந்நாவலில் ஆன், கிளார, கூப் ஒரளவு முக்கிய பாத்திரங்களே தவிர அவர்கள்தான் முக்கிய பாத்திரங்கள் என்றில்லை. மையங்களற்ற பாத்திரங்களைக்கொண்டு மையங்களற்ற வகையில்தான் ஒண்டாச்சி தனது போக்கில் இந்நாவலை எழுதிக்கொண்டே போகின்றார். மூன்றாம் பகுதி முழுதும் ஒவ்வொரு சிறுகதைகளாக தலையங்கமிட்டே எழுதப்பட்டிருக்கும். திடீர் திடீரென்று ஒவ்வொரு பாத்திரங்களும் தமது நிலையில் நின்று கதையைச் சொல்லத் தொடங்கும்போது, விளங்கிக்கொள்வதற்கான வாசிப்புக்கான நேரம் நிறையக் கோரப்படுகின்றது. முதலாம் பகுதியில் மகள்களின் பாத்திரங்கள் (ஆன் மற்றும் கிளேயர்) பேச, தந்தை அதிகளவில் மெளனமாகிவிடுகின்றார்.

அதேபோல இரண்டாம் பகுதியில் மெளனமாக்கப்பட்ட தந்தைகளின் பிரதிநிதியாக நின்று தந்தையாகிய (லூசியன்) அதிகம் பேசத்தொடங்குகின்றார். எல்லாப் பாத்திரங்களும் தமக்கான தனிமையையும் இரகசியங்களையும் கொண்டிருப்பதால், அவற்றை வாசகர் தமக்கு விரும்பிய பாத்திரங்களாக நிரப்பிக்கொள்ளும் வெளியும் வாசகருக்கு இந்நாவலில் வழங்கப்படுகின்றது. உதாரணமாக பதினைந்து வயதில் ஓடிப்போகின்ற ஆன், 34 வயதில் ஒரு எழுத்தாளாராக நாவலில் மீண்டும் அறிமுகப்படுத்தப்படுகின்றார். அந்த இடைப்பட்ட காலம் பற்றிய வெளியை வாசகர் தனக்கு உரியதாக வாசித்துக்கொள்ளும் ஒரு சூழலைப்போல நிறைய இடங்கள் நாவலுக்குள் இருக்கின்றன.

நம்மிடம் இருக்கும் அனைத்துக் கேள்விகளுக்கும் வாழ்க்கையில் தெளிவான பதில்கள் இருப்பதில்லை போன்று இந்நாவலிலும் பல இடங்களில் எழும் கேள்விகளுக்கு எந்தத் தெளிவான முடிவுகளும் கிடைப்பதில்லை. நாம் சிலவேளைகளில் நமக்கான வாழ்க்கையைத்தான் திருப்பவும் வாசிக்கின்றோமா என்ற மனக்கிளர்ச்சியும் அலுப்பும் ஒரே நேரத்தில் வந்துபோவதை இந்நாவலை வாசிக்கும்போது தவிர்க்கவும் முடிவதில்லை.

Running in the Family

மொழியை, கலாசாரத்தை, குடும்பங்களை காலங்காலமாய் மக்கள் தொலைத்தபடி அலைந்துகொண்டிருக்கின்றார்கள். போர்/பொருளாதார வசதிகள் எனப் பல காரணங்களிலிருப்பினும், உலகமயமாதலின் துரிதகதியால் இவ்வாறு இழந்துகொண்டிருப்பது வெகு சாதாரண நிகழ்வாய் இன்றைப்பொழுதுகளில் நடந்தேறிக்கொண்டிருக்கின்றது. எனினும் தமது கலாசார/குடும்ப வேர்களைத்தேடி -கடந்துபோன காலத்தின் தடங்களைக் கண்டுபிடிக்கும் ஆர்வத்துடன்- சிலர் பூமிப்பந்தின் மூலைகளெங்கும் அலைந்துகொண்டிருக்கின்றார்கள். அவ்வாறு தனது தொலைந்துவிட்ட/திசைக்கொன்றாய் சிதறிவிட்ட குடும்பத்தின் வேர்களைத் தேடி மைக்கல் ஒண்டாச்சி, இலங்கையிற்குப் போவதை சற்றுப் புனைவுகலந்த சுயசரிதைத் தன்மையில் Running in the Familyயில் எழுதியிருக்கின்றார்.

நிகழ்காலமும், கடந்தகாலமும் ஓர் ஒழுங்கில்லாது குலைக்கப்பட்டு அடுக்கபபட்டு, கவிதைகள், எவர் சொல்கின்றார்கள் என்ற அடையாளமின்றிய உரையாடல்கள் எனப்பல்வேறு எழுத்துமுறைகளினால் கதை சொல்லப்பட்டுப் போகின்றது. குடியைத் தவிர வாழ்க்கையில் வேறு எதுவுமில்லையோ என எண்ணுமளவிற்கு ஒண்டாச்சி குடும்பத்தினர் நிறையக் குடிப்பவர்களாக இருக்கின்றார்கள். அவரவர்க்கான குடும்பம், பிள்ளைகளென இருந்தாலும், திருமணத்துக்கு அப்பாலான பல்வேறுவிதமான உறவுகள் குறுக்கும் நெடுக்குமாய் முகிழ்ந்தும்/குலைந்தபடியும் இருக்கின்றன. இவற்றை எல்லாம் சாதாரணமானது என்று ஏற்றுக்கொண்டபடி குழந்தைகளும் வளர்ந்துகொண்டிருக்கின்றார்கள். நன்றாக்க் குடித்து அடிக்கடி கற்பனையே செய்துபார்க்கமுடியாத கலகங்கள் செய்யும் மைக்கல் ஒண்டாச்சியின் தகப்பன் (மெர்வின் ஒண்டாச்சி) தன்னைத் தமிழரெனவே அடையாளப்படுத்த விரும்புகின்றார். பறங்கிய இனத்தவர்கர்களாக  இருப்பினும், இந்துமதப்படித்தான் மைக்கல் ஒண்டாச்சியின் பெற்றோரினது திருமணம் நடைபெறுகின்றது.

மெர்வின் ஒண்டாச்சியின் கலகங்கள் கொழும்பிலிருந்து கண்டிக்குப் புகையிரதத்தில் பயணிப்பவர்களிடையே பிரசித்தமானது. கொழும்பில் இராணுவத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த அவர் ஒருமுறை, ரெயின் புறப்பட்ட ஒரு மணித்திய்யாலத்தில் சாரதியைத்(?) துப்பாக்கிகாட்டி மிரட்டி, தனக்குத் தனியப்பயணிக்க அலுப்பாயிருக்கிறது கொழும்பிலிருந்து தனது நண்பனை அழைத்துவாருங்கள் எனக்கூறுகின்றார். நண்பர் வரும்வரை இரண்டு மணித்தியாலங்கள் ரெயின் காத்துக்கொண்டிருக்கின்றது. இன்னும்,வேகமெடுத்து ஓடிக்கொண்டிருக்கும் ரெயிலிலிருந்து சேற்று வயற்காணிகளுக்குள் குதிப்பது, கடுகண்ணாவை குகையிருட்டுக்குள் ஆடையைக் கழற்றி நிர்வாணமாய் நின்று ரெயிலை மேலே செல்லவிடாது தடுப்பதென…, குடியோடும்/குடியின்றியும் செய்யும் மெர்வினது அட்டகாசங்கள் மிக நீண்டவை. ஒருமுறை, அவரைக் கேகாலையிலிருந்து மதியுவுணக்க்கு மீன் வாங்கிவருகவென வீட்டிலிருந்து அனுப்ப, மனுசன் இரண்டு நாட்களின்பின், இலங்கையின் இன்னொரு முனையான திருகோணமலையிலிருந்து ஒரு தந்தி அடிக்கின்றார். ‘மீன்கள் கிடைத்துவிட்டன விரைவில் அவற்றோடு திரும்புகிறேன்…’ இப்படி பயங்கர சுவாரசியமான மனிதராய் மெர்வின் ஒண்டாச்சி இருக்கின்றார். ஒரு கட்டத்திற்குப்பிறகு இவரது கலகங்களால் இவர் இலங்கைப் புகையிரதங்களில் பயணம் செய்யவே கூடாதெனற தடையே இவருக்கு எதிராக வருகின்றது.

வேர்களைத் தேடி இருபத்தைந்து வருடங்களுக்குப்பின் இலங்கை செல்லும் மைக்கல் ஒண்டாச்சியின் இந்த நூலில் ஒண்டாச்சியின் தகப்பனாரும், அவரது அம்மம்மாவுமே அதிகம் பேசப்படுகின்றார்கள். மைக்கல் ஒண்டாச்சியின் அம்மம்மா, இளம் வயதிலேயே கணவனை இழந்தவர். அதன்பின் பல ஆண்களோடு உறவுகள் வைத்திருந்தவர். அவ்வாறான உறவுகளுக்கும்/இரகசியச் சந்திப்புக்களுக்கும் இவர்களின் வீடுகளைச் சூழவிருக்கும் கறுவாத்தோட்டங்களே உதவி புரிகின்றது (மைக்கல் ஒண்டாச்சியின் cinnaman peeler என்ற கவிதைகூட அதை ‘நாசூக்காய்ப்’ பேசுகின்றது). அம்மம்மா அவ்வளவாய் பேரப்பிள்ளைகளோடு ஒட்டாதவர்; இறுதிவரை தனது சொந்தக்காலில் நின்றவர். அவரது -நுவரெலியா வெள்ளத்தில் மூழ்கிப்போகும்- மரணம் கூட நெகிழ்வுதரக்கூடியது.

இப்புதினத்தில் ஜேவிபியின் எழுபதாம் ஆண்டு கிளர்ச்சி பற்றிய குறிப்புகள் வருகின்றது. மிக இளம்வயதில் கொல்லப்பட்ட ஆயிரமாயிரம் இளைஞர்கள் மதிப்புடன் நினைவுக்கூரப்படுகின்றார். சிலோன் பல்கலைக்கழகம் முற்றுகையிடப்பட்டு அங்கே தஞ்சம் புகுந்திருந்த கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான இளைஞர்கள் சுவர்களில் தாங்கள் சாவதற்கு முன் எழுதிய இறுதி வார்த்தைகளும் புரட்சி பற்றிய நம்பிக்கைகளும் சிகிரியா ஓவியங்கள் போல பாதுகாப்பட்டிருக்கவேண்டுமென ஒண்டாச்சி குறிப்பிடுகின்றார் (அவை அவ்வாறு செய்ய்ப்படவில்லை என்பது வேறுவிடயம்). சேர் ஜோன் கொத்தலாவையோடு காலையுணவு சாப்பிட்டு உரையாடியது, பாப்லோ நெருடா இலங்கையில் இருந்தபோது தங்களது வீட்டில் அவ்வப்போது வந்து விருந்துண்டவை எனப் பல விதமான சம்பவங்கள் சித்தரிக்கப்படுகின்றன. வில்பத்துக்காட்டில் மைக்கல் ஒண்டாச்சி தனது குடும்பத்தோடும் உறவுகளோடும் தங்கி நின்ற சில நாட்களைப்பற்றிய குறிப்புகள் ஒரு அழகான கவிதைக்கு நிகராய் வாசிக்கப்படவேண்டியது.

இச்சுயசரிதை சார்ந்த புனைவை, ஒருவித நகைச்சுவையுடன் அதேவேளை வாழ்வைக் கொண்டாடுகின்ற விதமாகவும் மைக்கல் ஒண்டாச்சி எழுதியிருக்கின்றார். மரணங்களுக்கு கூட அதிகம் ஒண்டாச்சி நேரமெடுத்து கவலைப்பட்டு பக்கங்களை வீணாக்கிவிடவில்லை. எப்போதும் தகப்பன்களிற்கும், மகன்களிற்குமான உறவு சிக்கலானதுதான். ஒரளவு பிள்ளைகள் வளர்ந்தவுடன் பெரும் இடைவெளியை காலம் குறுக்கே வேலியைப்போலப்போட்டுவிட்டுச் சிரிக்கத்தொடங்கிவிடுகின்றது. தமது பிரதிமையை தங்களது மகன்களில் பார்க்கத்தொடங்கி பின்னர் அவர்கள் வளர்கின்றபோது தமக்கான வீழ்ச்சி தமது மகன்களிலிருந்து தொடங்கிவிட்டதென அநேக தகப்பன்மார்கள் நினைப்பது கூட இவ்விரிசலை இன்னும் அதிகரிக்கச்செய்கின்றதெனவும் உளவியல்ரீதியான ஆய்வுகள் கூறிக்கொண்டிருக்கின்றன. எனினும் அவ்வாறான இடைவெளியே ஒவ்வொரு மகனுக்கும் தனது தகப்பனைப்பற்றி அறிந்துகொள்ளும் சுவாரசியத்தைக் கூட்டுகின்றனபோலும்.

மேலும் அந்த மகன்களும் தகப்பன்களாகும்போது, தாம் தமது தகப்பன்களுக்குச் செயததையே தமது பிள்ளைகளும் தமக்குச் செய்துவிடுவார்களோ என்ற பதட்டம் பிற்காலத்தில் தந்தைமாரை ஒருவித பாவமன்னிப்புத்தொனியில் அவதானிக்க வைக்கின்றதாய் இருக்கவும் கூடும். அந்தப்பதட்டமே மைக்கல் ஒண்டாச்சியை தனது வேர்களைத் தேடி இலங்கைச் செல்லவும் பதிவு செய்யவும் தூண்டிவிட்டிருக்கவும் கூடும். பேச்சை விட எழுத்தே ஆழம் மிக்கதென ழாக் டெரிதா முன்வைத்தற்கு உதாரணமாய், ஒரு சாதாரண மனிதராய் வாழ்வின் பக்கங்களிலிருந்து நழுவிப்போயிருக்கக்கூடிய மெர்வின், மைக்கல் ஒண்டாச்சியின் மூலம் மீளவும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றார். புதிது புதிதாய் வாசிப்புக்கள் இப்பிரதி மீது நிகழ்த்தப்படுகின்றபோது, மீண்டும் மீண்டும் மெர்வின் நினைவுகூரப்படப்போகின்றார்.

Coming Through Slaughter

அமெரிக்காவில் நியூ ஒர்லியன்ஸ் பகுதியில், சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்த ஒரு ஜாஸ் கலைஞனைப் பின் தொடர்ந்து சென்று பார்க்கும் கதை. ஜாஸில் மிகப்பெரும் ஆளுமையாக வரவேண்டிய ஒரு கலைஞன் (Buddy Bolden) தனது 31 வயதில் மனப்பிறழ்வுக்காகி இருபது வருடங்களுக்கு மேலாய் மனநிலை வைத்தியசாலையில் கழித்து இறந்துபோவதை இப்புதினம் பேசுகின்றது. ஜாஸ் குறித்த ஆரம்பப் புரிதலகளும், நிறையப் பொறுமையும் இல்லாதவிடத்து இந்நூலை வாசித்தல் அவ்வளவு இலகுவில்லை.

நேர்கோட்டுக் கதைசொல்லல் முறையில்லாது, கடிதங்கள், கவிதைகள், உரையாடல்கள், வைத்தியசாலை ஆவணங்கள் போன்ற எல்லாவற்றையும் மாறி மாறிக் கலந்து கதை சொல்லப்படுகின்றது (இதே கதை சொல்லல் முறைதான் பின்னர் Running in the familyயில் சொல்லப்பட்டாலும், இங்கு அது இன்னும் நிறைய வலைப்பின்னலகளாய்/சிக்கலாய் இருக்கின்றது). சில இடங்களில் போல்ல்டனின் மூலமாக, வேறு சில இடங்களில் பிற பாத்திரங்கள் ஊடாக, சிலவேளைகளில் நூலாசிரியரின் பார்வையினூடாக எனக்கதை பலவேறு திசைகளில் நகர்த்தபடுகின்றது.

ஒரு ஜாஸ் கலைஞனாக இருக்கும் போல்டன் அதேவேளை ஒரு சவரத்தொழிலாளியாகவும் இருக்கின்றார். நமது ஊர்களிலுள்ள கொண்டாட்டமான/விவாதங்கள் நடைபெறுகின்ற சலூன்கள் போலவே கறுப்பினத்தவர்களின் சவரக்கடைகளும் இருக்கின்றன. ஜாஸ் கலைஞர்களுக்கும் பாலியல் தொழிலாளர்களுக்குமான உறவுகள் அச்சமூகத்தில் இயல்பாய் ஏற்றுக்கொள்ளப்பட்டவை. அவ்வாறு ஒரு விலைமாதராய் இருந்த நோராவுடன் போல்டன் வாழத்தொடங்குகின்றார். சலூன் கடை, ஜாஸ் இசைத்தலென இருக்கும் போல்டனுக்கு இரு குழந்தைகளும் இருக்கின்றன. அவ்வாறான காலப்பகுதியில், நோராவின் முன்னாள் காதலுலனும், ‘மாமா’ வேலை செய்துகொண்டிருந்த Pickett ஐ -அவருக்கு இன்னும் நோராவுடன் தொடர்பிருகிறது என்றறிந்து- கத்தியால் முகம், மார்பெங்கும் குத்தி காயப்படுத்திவிட்டு, போல்டன் தப்பியோடி இன்னொரு காதலியான ரொபினோடு வாழத் தொடங்குகின்றார். ஆனால் முரண்நகையாக ரொபின் ஏற்கனவே திருமணமானவர். ரொபின் தனது கணவனோடு இருக்கும் வீட்டிலேயே போல்டனும் வாழ்கின்றார்.

தனது கோபங்களையும் காமம் இல்லாத பொழுதுகளையும், ரொபினின் கணவன் வெறியுடன் பியானோ வாசிப்பதன் மூலம் தீர்த்துக்கொள்கின்றார். ஒரு பெண்ணுடன் ஒன்றிற்கு மேற்பட்ட ஆண்கள் தங்கியிருப்பதும், ஒரு பெண்ணிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட ஆண்களுடன் தொடர்பிருப்பதும் அங்கே ‘வித்தியாசமாய்ப்’ பார்க்கப்படுவதில்லை. போல்டனும், ரொபினும் உடலுறவு கொள்ளும்போது அது என்றுமே முழுமையுறாத உறவாய், அவர்களுக்கிடையில் வேடிக்கை பார்க்கும் ஒரு அந்நியனாய் ரொபினின் கணவனின் இசைக்கும் பியனோ இசை ஒவ்வொரு பொழுதும் வந்துவிடுகின்றது. அது எப்படியெனில், The music was his dance in the auditorium of enemies….Bullets of music delivered onto the bed we were on…(p 92). கிட்டத்தட்ட இப்படி இரண்டு வருடங்கள் தலைமறைவு வாழ்கை வாழும் போல்டனை அவரது பொலிஸ் நண்பர் வெப் (Webb) கண்டுபிடித்து மீண்டும் பழைய நகருக்கு கூட்டிவருகின்றார்.

இதன் பிறகு நடக்கும் சில சம்பவங்களின் பின், தனது முப்பத்தொராவது மனப்பிறழ்வுக்குள்ளாகி கிட்டத்தட்ட 20 வருடங்கள் வைத்தியசாலையில் கழித்து போல்டன் இறந்துபோகின்றார் அவரேன் அப்படி மனப்பிறழ்வுக்கானார் என்பதற்கான (குடி/தனிமையொரு காரணமாய் இருக்கலாம் என்றாலும்) தெளிவான காரணமோ, திடீரென்று ஏன் ஜாஸ் இசையில் உச்சங்களைத்தொடும் தூரத்தில் இருக்கும்போது எல்லாவற்றையும் விட்டுவிட்டு நகரைவிட்டு ஓடிப்போய்விடுகின்றார் என்பதற்கான தெளிவான காரணங்களளோ நாவலில் குறிப்பிடப்படவதில்லை. ஆனால் இந்த இருண்மைத்தன்மையே இப்புதினத்திற்கு மேலும் மெருகைக்கொடுக்கின்றது.

இந்நாவல் மிகச்சிக்கலான வாசிப்பை கோருகின்றது. ஒரே அத்தியாயத்தில் பலரின் குரல்கள் தன்னிலையில் நின்று பேசுகின்றபோது யார் பேசுகின்றார்கள் என்ற குழப்பம் வருகின்றது. அத்தோடு சில சம்பவங்களை விபரிக்கத்தொடங்கி அவை அரைகுறையிலேயே நின்றும் விடுகின்றன,. சிலவேளைகளில் சில அத்தியாங்களைத்தாண்டி அந்தச்சம்பவம் வேறொருவரின் குரலினூட நீளத்தொடங்கியும் விடுகின்றது.

எல்லா சம்பவங்களுக்கும்/விபரிப்புகளுக்கும் காரணங்களைத் தேடி முடிவை எதிர்பார்க்கும் ஒரு வாசகரை இந்தப்புதினம் ஏமாற்றத்தையும் அலுப்பையும் ஒருசேரத் தரக்கூடியது..இவற்றிற்கப்பால் மைக்கல் ஒண்டாச்சியின் கவித்துவம் நிரம்பிய எழுத்து சிலாகித்துச் சொல்லப்படவேண்டியதொன்று. 70களின் மத்தியில் எழுதப்பட்ட இப்புதினத்தில் இத்தனை பரிசோதனைகளை ஒண்டாச்சி செய்திருக்கின்றார் என்பது பிரதிமீதான அதிக கவனத்தைக் கோருகின்றது. அதனாற்றான் இதை இன்று வாசிக்கும் ஒருவருக்கும் பல புதிய வாசிப்பின் கதவுகளை திறக்கக்கூடியதாக இருக்கின்றது போலும். போல்டனின் ஜாஸ் இசை முறையாகப் பதிவு செய்யப்படாவிட்டாலும், போல்டன் இன்றும் நியூ ஒர்லியன்ஸ் பகுதியில் ஆரம்பக்கால ஜாஸ் இசையின் ஆளுமைகளில் ஒருவரெனக் கொண்டாடப்பட்டபடியும், Buddy Bolden’s Blues (or Funky Butt) என்ற இசைக்கோர்வை அவரின் பெயரால் நினைவூட்டப்பட்டு இசைக்கப்பட்டபடியும் இருக்கின்றது.

The Cat’s Table

சிறுவர்களாக இருந்த நாம் எந்தக் கணத்தில் பெரியர்வர்களின் உலகினுள் பிரவேசிக்கின்றோம்? உடலில் ஏற்படும் மாற்றங்களைப் போல மனதில் ஏற்படும் மாற்றங்கள் ஸ்தூலமானதுமல்ல. அப்படியெனில் அந்த மாற்றம் பெரியவர்களாக வளர்ந்த நம்மால் நினைவுகொள்ளக்கூடியதாக இருக்கின்றதா? ‘யுத்தகால இரவொன்றின் நெருக்குதல் நமது குழந்தைகளை வளர்ந்தவர்களாக்கி விடுகிறது’ என போர்ச்சூழலில் குழந்தைகளின் நிலையை சிவரமணி பதிவு செய்திருக்கின்றார். மைக்கல் ஒண்டாச்சியின் ‘பூனையின் மேசை’ நாவல் மைக்கல் என்கிற பதினொரு வயதுச் சிறுவன் எப்படி பெரியவர்களின் உலகினுள் நுழைகின்றான் என்பதைப் பல்வேறு சம்பவங்களினூடாக விபரிக்கின்றது. மைக்கல் மட்டுமில்லை, அவன் வயதொத்த கஸிசியல், ரமாடின் போன்றவர்களும் மூன்று வாரங்கள் நீளும் கப்பல் பயணத்தினால் வளர்ந்தவர்களின் உலகிற்குள் விரும்பியோ விரும்பாமலோ அடித்துச் செல்லப்படுகிறார்கள்.

மைக்கல் எவரது துணையுமின்றி தனியே இங்கிலாந்திலிருக்கும் தாயை நோக்கி Orsonary எனும் பெயருடைய கப்பலில் பயணிக்கின்றார். மைக்கலுக்கு ‘மைனா’ என்கின்ற செல்லப்பெயரும் உண்டு. அது அவரின் நண்பர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒரு பட்டப் பெயர். மைக்கல் கப்பலில் சந்திக்கும் இன்னொரு நண்பரான கஸிசியஸ், மைக்கல் படித்த சென்.தோமஸ் கல்லூரியில் ஒருவகுப்பு மேலே படித்தவர். மிகுந்த குழப்படிக்காரர்; பாடசாலை நிர்வாகத்தால் அவ்வப்போது கஸிஸியஸ் தண்டிக்கப்படுபவர். அதற்கு நேர்மாறான அமைதியான சுபாவமுடையவர் ரமடீன். ஆனால் ஆஸ்மா நோயால் அவதிப்படுபவர். இம்மூன்று சிறுவர்களும் கப்பலில் நண்பர்களாகின்றார்கள். ஒவ்வொருநாளும் புதிது புதிதாய் இடங்களையோ சம்பவங்களையோ கண்டுபிடிப்பதே சுவாரசியமானதென கப்பலின் திசைகளெங்கும் அலைந்து திரிபவர்கள். கப்பலும் அறுநூறுக்கு மேற்பட்ட பயணிகளைத் தாங்கக் கூடியவளவுக்கு மிகவும் பெரியது.

அநேக இடங்களில் இருப்பதைப் போன்று கப்பலிலும் அந்தஸ்தில் பல்வேறு நிலையில் உள்ளவர்களுக்கென பல்வேறு வகுப்புக்கள் இருக்கின்றன. உயர்தர வகுப்பிலிருக்கும் பகுதியிற்கு பிறர் போகமுடியாது. உணவருந்தும் இடத்திலும் இந்த வகுப்புப் பிரிவினைகள் இருக்கின்றன. (கப்பல்) கப்ரனின் உணவு மேசை அந்தஸ்து கூடியது. அந்த மேசையிலிருந்து வசதியில் குறைந்து குறைந்து போக இறுதியில் வருவது ‘பூனை மேசை’. அங்கேதான் மைக்கல் உணவருந்துவது. அந்தச் சாப்பாடு மேசை அந்தஸ்தில் குறைந்ததென்றாலும் சுவாரசியமான பல்வேறு வகைப்பட்ட மனிதர்கள் சந்திக்கும் ஓரிடமாக இருக்கின்றது.

மைக்கல் எனப்படும் மைனாவும் அவரது நண்பர்களும் அங்கேதான் பியானோ கலைஞரை, புறாக்களை தன் மேலங்கிக்குள் வைத்திருக்கும் பெண்மணியை, மூலிகைத் தாவரங்களை வளர்க்கும் ஆயுள்வேத வைத்தியரை, அவ்வளவு அதிகம் பேசாத தையற்காரரை, பழுதாக்கிப் போகும் கப்பல்களை நுட்பமாக உடைப்பவரை, இங்கிலாந்திற்கு ஆங்கிலம் கற்பிக்கப்போகும் ஆசிரியரை… எனப் பலரை அந்தப் ‘பூனை’ மேசையில் சந்திக்கின்றனர். பியானோக் கலைஞரான மாஸப்பா, இச்சிறுவர்களுக்கு பியானோ கற்றுக் கொடுப்பதோடு, ‘நீங்கள் உங்கள் விழிகளைத் திறந்து வைத்திருந்தால் இந்தக்கப்பல் பயணம் மிகுந்த வீரதீரச் செயலுடையதாக இருக்கும்’ என்கின்றார். பழுதடைந்த கப்பலை உடைப்பவரான நெவில், அந்தக் கப்பலில் பிறர் பார்க்கச் சாத்தியமில்லாத பகுதிகளை எல்லாம் இச்சிறுவர்களுக்கு எப்படிப் பார்ப்பதென வழிகாட்டுகின்றார். மூலிகைகள் வளர்க்கும் டானியல் கப்பலின் இருண்ட தளத்தில் தான் வளர்த்த மூலிகைகளை பத்திரமாக இங்கிலாந்திற்குக் கொண்டு செல்வதை மைனாவிற்குக் காட்டுகின்றார்.

மைக்கல் ஒண்டாச்சியின் நாவல்கள் எப்போதும் மிக மெதுவாகவே தொடங்கும். சில பத்துப் பக்கங்களைத் தாண்டினாலே கதையைத் தொடர்ந்து வாசிக்கச் சுவாரசியம் வரும். ஆனால் ‘கொழும்பில் இருந்து கப்பல் பயணம் தொடங்குகின்றது’ என்று இந் நாவல் ஆரம்பிக்கும்போதே நமக்குத் தெரிந்த சூழலில் கதை நிகழ்கிறது என்பது இன்னும் நெருக்கமாய் உணர வைத்தது. சென்.தோமஸ் கல்லூரி பற்றிய விபரிப்பு, பொரலஸ்கமுகவில் மைக்கல் இருக்கின்ற வீட்டுச் சூழ்நிலை, சமையற்காரருடனும், அங்கே வீட்டுவேலைக்கு இருப்பவருடனும் இருக்கும் நெருக்கம், அவர்கள் மைக்கலுக்குக் காட்டும் புறவாழ்வியல்… என மைக்கல் ஒண்டாச்சி அழகாக விபரித்துச் சொல்கின்றார். மைனா என்கின்ற மைக்கலின் பாத்திரம், பதினொரு வயதில் இலங்கையை விட்டுச் சென்றாலும் தனக்கு இன்றும் எந்த நாட்டோடும் ஒட்டாத ஒரு நாடோடி வாழ்வே எஞ்சியிருக்கின்றது என்று கூறுகின்றது. இது தாம் பிறந்து வளர்ந்த நாட்டை விட்டு புலம்பெயர்ந்த பலரும் தங்களுக்குள் பொருத்திப் பார்க்கக்கூடிய ஒரு முக்கிய செய்தியாகவும் இருக்கின்றது.

இந்நாவலுக்குள் திகிலூட்டும் பல விடயங்கள் நிகழ்ந்தாலும் இஃதொரு துப்பறியும் நாவலல்ல. சிறுவர்கள், எப்படி அவர்கள் அறிந்தோ அறியாமலோ பெரியவர்களின் உலகினுள் நுழைகின்றார்கள் என்பதே முக்கிய அம்சமாக இருக்கின்றது. சிலவேளைகளில் இந்தத் விடயங்கள் சிறுவர்கள் பார்வையில் இருந்து சொல்லப்படுவதால் ‘திகிலூட்டும்’ விடயங்களைத் தெரிகின்றதோ தெரியவில்லை. இதேவிடயம் வளர்ந்த ஒருவரின் பார்வையில் சொல்லப்பட்டால் அது வேறு மாதிரியாக கூட இருந்திருக்கலாம். சிலர் பெரியவர்களாக வளரும்போது அந்த மாற்றம் இயல்பாக நடக்கின்றது. சிலருக்கு அப்படி நிகழ்வதில்லை, அவர்கள் பலவற்றை விலையாகக் கொடுத்துத்தான் வளர்ந்தவர்களாகி விடவேண்டியிருக்கின்றது.

மைக்கல் ஒண்டாச்சி தனது அநேக நாவல்கள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பல்வேறு நாடுகளுக்கு நிலவியல் இடப்பெயர்ச்சி செய்வதைப் பற்றி ஓரிடத்தில் குறிப்பிட்டிருக்கின்றார். The English Patient இத்தாலியிலிருந்து  ஆபிரிக்காப் பாலைவனத்திற்கும், Divesardo அமெரிக்காவிலிருந்து சட்டென்று பிரான்சிற்கும் இடம் பெயர்ந்து விடுகின்றன. The Cat’s table இல் அவ்வாறான துல்லியமான இடப்பெயர்ச்சி சடுதியாக நிகழவில்லையெனினும், இலங்கையின் இருந்து புறப்படும் கப்பலில் நடக்கும் நிகழ்ச்சிகளிலிருந்து சுயெஸ் கால்வாயைக் கடந்தவுடன் சட்டென்று வளர்ந்தவர்களின் உலகிற்கு, இலண்டனுக்குச் சென்றுவிடுகின்றது. பின்னர் சிறிது காலம் கனடாவின் வன்கூவருக்கும் சென்றுவிடுகின்றது.

இங்கு நிலப்பெயர்வை விட, ஒரு மனிதரின் வாழ்க்கைக் காலப் பெயர்வு சடுதியாக ஏற்படுகின்றது எனக் குறித்தலே சாலப் பொருத்தமாகும்.. Anil’s Ghost பிறகு சுவாரசியமாக வாசித்த மைக்கல் ஒண்டாச்சியின் நாவல் The Cat’s Table என்பதையும் கூறியாக வேண்டும். இக்கதையைப் போன்றே மைக்கலும் தன் பதினொராவது வயதில்தான் இலங்கையில் இருந்து இங்கிலாந்திற்குச் சென்றிருக்கின்றார் என்பது, மைக்கல் ஒண்டாச்சி தன் வாழ்வில் நடந்த கப்பல் கதையைத்தான் கூறுகின்றாரோ என்கின்ற மயக்கத்தை வாசிக்கும் நமக்குத் தரக்கூடும். புனைவொன்றில் நிஜங்களும் கற்பனைகளும் கலந்திருப்பது இயல்பானதே. உண்மைகளைப் பொய்கள் போலவும், நிகழாததை நிகழ்ந்துபோல நம்பும்படியாக எழுதும்போது நாவல் சுவாரசியமாகிவிடுகின்றது. அந்த வித்தை அறிந்த படைப்பாளி மைக்கல் ஒண்டாச்சி என்பது அவரைத் தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு நன்கு தெரியும்.

மைக்கல் ஒண்டாச்சி, சூனாமி அழிவின் பின் இலங்கைக்குப் போகின்றார். அங்கே ஒரு ஊரின் பெயர் தனது குடும்பப் பெயரைப் போல இருப்பதைக் காண்கின்றார் அங்கிருக்கும் ஊரவர்கள் கோயில்களுக்கு வேண்டிய புனிதப்பொருட்களைச் செய்துகொடுக்கின்றவர்களாக இருப்பதைப் பார்க்கின்றார். தனது பறங்கிய குடும்பப்பெயரிற்கு அண்மையாக இருக்கும் ஊர், இதென்பதால் ஒண்டாச்சி என்பதற்குப் பதிலாக அதையே தன் குடும்பப் பெயராக மாற்றலாம் என ஓரிடத்தில் நகைச்சுவையாகச் சொல்கின்றார். அவர் சொன்ன அந்த ஊர் இலங்கையின் மட்டக்களப்பிலுள்ள ஒந்தாச்சிமடமாகும்.


இளங்கோ

யாழ்ப்பாணம் அம்பனையில் பிறந்தவர். ஈழத்திலிருந்து போரின் நிமித்தம் தன் பதினாறாவது வயதில் கனடாவுக்குப் புலம்பெயர்ந்து தற்போது ரொறொண்டோவில் வசித்து வருகிறார். கவிதைகள், சிறுகதைகள் தவிர, ‘டிசே தமிழன்’ என்னும் புனைபெயரில் கட்டுரைகளும், விமர்சனங்களும், பத்திகளும் எழுதி வருகிறார்.

இதுவரை வெளிவந்துள்ள தொகுப்புகள்:

1. நாடற்றவனின் குறிப்புகள் (கவிதைகள்)
2. சாம்பல் வானத்தில் மறையும் வைரவர் (சிறுகதைகள்)
3. பேயாய் உழலும் சிறுமனமே (கட்டுரைகள்)
4. மெக்ஸிக்கோ (நாவல்)
5. உதிரும் நினைவின் வர்ணங்கள் (திரைப்படக் கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.