ரன்னர்

நடைபாலத்தின் அருகே மேயும் வாத்துகளுக்கு ஒரு சிறுமி ரொட்டித் துண்டுகளை வீசுவதைப் பார்த்தவாறே பாதையின் வளைவில் மெதுவாகத் திரும்பினார் அந்த ரன்னர். மரக் கூட்டங்களின் இடையே நெளிந்து சென்ற அப்பாதை, தோராயமாகக் குளக்கரையை ஒட்டிச் சென்றது. தனது சீரான மூச்சை அவர் கவனித்துக் கொண்டிருந்தார். இளைஞரான அவரால் வேகமாக ஓட முடியும் என்றாலும் அந்த நாளின் முயற்சிகள் வியர்வையில் வெளியேறுவதையும் மங்கும் வெளிச்சத்தில் எளிமையாகப் பயிற்சி எடுக்கும் உணர்வு சீரழிவதையும் அவர் விரும்பவில்லை.

போக்குவரத்து குறைந்திருந்தது. தனது தந்தையிடமிருந்து அந்தச் சிறுமி ரொட்டித் துண்டுகளைப் பெற்று ஐந்து என்று சமிக்ஞை காட்டுவது போல கைகளை விரித்தபடி கைப்பிடிக் கம்பியின் மீது தூக்கி எறிந்தாள். அந்த சிறுபாலத்தின் மீது ஓட்டப் பயிற்சியாளர் ஆசுவாசப்படுத்திக் கொண்டார். பிரதான சாலைக்கு இட்டுச் சென்ற பாதையில் முப்பது கெஜ தூரத்தில் இரு பெண்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர். ஒரு புறா புற்களின் மீது வேகமாகத் தத்தி வந்து அவரது பாதைக்குள் வந்தது. சூரியனோ பூங்காவிற்கு அப்பாலிருந்த மரங்களினிடையே இருந்தது.

சாலையிலிருந்து வந்த அந்தக் கார் சரிந்த புல்வெளியில் குதித்த போது குளத்தின் மேற்குப் புறப் பாதையின் கால் பங்கு தூரத்தில் அவர் இருந்தார். ஒரு தென்றல் கிளம்பிய போது ரன்னர் இரு கைகளையும் தூக்கி சட்டைக்குள் காற்றை நுழையச் செய்தார். காருக்குள்ளிருந்து ஒரு மனிதர் வேகமாக வெளியே வந்தார். இருக்கையில் அமர்ந்திருந்த வயதான தம்பதியை ரன்னர் கடந்து சென்றார். அவர்கள் செய்தித்தாள்களை மடித்துவிட்டுக் கிளம்பத் தயாராகிக்கொண்டிருந்தனர். குளத்தின் கரையோரத்தில் ஊதாப்பூச்செடி மலரத் துவங்கியிருந்தது.  அவரால் முடியும் வரை மேலும் நான்கு சுற்றுகள் சுற்ற வேண்டும் என நினைத்தார். ஆனால் அவரது தோளுக்கு வலது புறம் உள்ள ஓடுபாதையில் சில குழப்பங்கள் நிகழ்ந்தன. அவர் ஓடியவாறே திரும்பிப் பார்க்கையில், வயதான அந்த தம்பதி இருக்கையிலிருந்து எழுவதையும் புல்வெளியில் நின்ற கார் காணாமல் போனதையும் போர்வை ஒன்றின் மீது நின்ற ஒரு பெண் காரைப் பார்த்தவாறு கைகளை உயர்த்தியபடி முகம் அதிர்ந்து நிற்பதையும் கண்டார். அவர் முன்பக்கமாகத் திரும்பி, மாலையில் பூங்கா மூடப்படும் என்று எழுதப்பட்டிருந்த பலகையைக் கடந்து வேகமாக ஓடினார்.  கதவுகள் இல்லை எனினும், மக்களை வெளியேற்றுவதற்கு சிறந்த வழி எதுவும் இல்லாவிட்டாலும் கூட, அந்தப் பூங்கா மூடப்படும் நேரம் என்பது எல்லோரது மனங்களிலும் பதிந்திருந்தது.

அந்தக் கார் பழையதாகவும் நசுங்கியும் வலது பின்புறத்தில் துருப்பிடிக்காத தாமிர வர்ணமடிக்கப்பட்டிருந்த அது, ஓட்டப்படும் போது உதறல் ஒன்று வெடித்துச் சிதறி புகைபோக்கிக் குழாயில் வெளியேறுவதை அவர் கேட்டார்.

அவர் தெற்கு எல்லையைக் கடந்த போது, அங்கு சைக்கிளில் சென்ற இரு சிறுவர்களின் முகத்தில் அங்கே நடந்தது பற்றி ஏதாவது குறிப்பு தென்படுகிறதா என்பதைப் போல நோக்கினார். இருவரும் ஆளுக்கொரு பக்கமாக அவரை வேகமாகக் கடந்துசெல்கையில் ஒருவன் அணிந்திருந்த காதொலிக் கருவியிலிருந்து இசை கசிந்து பரவியது. நடைபாலத்தின் முடிவில் அந்தச் சிறுமியும் அவள் தந்தையும் நிற்பதைப் பார்த்தார். ஒளிக் கீற்று ஒன்று நீரைக் கடந்து சென்றது. சரிவில் நின்ற அந்தப் பெண் இப்போது பூங்காவில் குனிந்தவாறே இருப்பதையும் மூன்று அல்லது நான்கு பேர் அத்திசையில் பார்த்துக் கொண்டிருப்பதையும் மற்றவர்கள் நாய்களுடன் நடந்து கொண்டிருப்பதையும் அவர் பார்த்தார். வடக்குச் சாலையில் கார்கள் பாய்ந்தோடிக் கடப்பதை அவர் கண்டார்.

குட்டையாகவும் பருத்தும் இருந்த அந்தப் பெண் போர்வையில் சிக்கிக் கொண்டிருந்தாள். சிலர் தன்னை நோக்கி நகர்ந்து வருவதை, அவர்கள் அவள் ஏதோ துயரத்தில் இருப்பதைப் புரிந்துகொண்டார்கள் என்பதை அறியாமல், அவர்கள் பக்கம் திரும்பி அழைக்கத் துவங்கினாள். இப்போது தரைவிரிப்பைச் சுற்றி அவர்கள் நின்றிருக்க அவர்களது முகபாவத்தை ரன்னர் அமைதியாகக் கவனித்துக் கொண்டிருந்தார். அவளது குரல் கரடுமுரடாகவும் தடித்தும் மூச்சுத் திணறலுடன் திக்குமுக்காடியபடி உடைந்த மொழியிலும் இருந்தது. அவள் என்ன சொன்னாள் என்பதை அவரால் சொல்ல முடியவில்லை.

சற்றே உயரத்துவங்கிய இடத்தில் பாதையானது மென்மையாகவும் ஈரப்பதத்துடனும் இருந்தது. சரிவை நோக்கிப் பார்த்துக்கொண்டிருந்த தந்தையின் முன்னே உள்ளங்கை மேல் நோக்கியபடி நீட்டிய அச்சிறுமி ரொட்டித் துண்டுகளைப் பொறுக்கி எடுத்துக்கொண்டு கைப்பிடியை நோக்கி நடந்தாள். ஆயத்தமாவதின் காரணமாக அவள் முகம் இறுகியது. ரன்னர் பாலத்தை நெருங்கினார். தரைவிரிப்பைச் சுற்றியிருந்த ஆண்களில் ஒருவர் பாதையில் இறங்கி, தெருவிற்கு இட்டுச் செல்லும் படிகளை நோக்கி மெதுவாக ஓடத் துவங்கினார். பாக்கெட்டில் இருப்பது பறந்து செல்லாதவாறு காக்கும் விதமாக அதைப் பற்றிக்கொண்டு சென்றார்.  ரொட்டித் துண்டுகளை வீசுவதை அவள் தந்தை பார்க்கவேண்டும் என்று அச்சிறுமி விரும்பினாள்.

பாலத்திற்கு அப்பால் பத்து தப்படிகள் தாண்டி ஒரு பெண் அவரை நோக்கி வருவதை ரன்னர் பார்த்தார். ஒரு சுற்றுலாப்பயணி நம்பிக்கையுடன் வழி கேட்க விரும்புவது போல அவள் தன் தலையைத் திருப்பினாள். அவர் நின்றும் நிற்காமலும் சற்றே திரும்பி அவள் முகத்தைப் பார்த்தபடி பின்னோக்கி மெல்லக் குதித்தோடிச் சென்றார்.

“என்ன நடந்தது என்பதைப் பார்த்தீர்களா?” என்று அவள் இனிமையாகக் கேட்டாள்.

“இல்லை. காரை மட்டும் தான். அதுவும் இரண்டு விநாடிகள்.”

“நான் அந்த ஆளைப் பார்த்தேன்.”

“என்ன நடந்தது?”

“அடுத்த தெருவில் வசிக்கும் என் நண்பனுடன் நான் புறப்பட்டுக் கொண்டிருந்தேன். அப்போது தடைக் கற்களைத் தாண்டி வரும் காரின் சப்தத்தைத் கேட்டோம். ஏறக்குறைய புல்வெளி மீது மோதியது. அந்த தந்தை காரிலிருந்து வெளியே வந்து அந்தச் சிறுவனைத் தூக்கினார். எதிர்வினையாற்ற யாருக்கும் நேரமில்லை. அவர்கள் காரில் ஏறியதும் அது போய்விட்டது. நான் “ஈவ்லின்” என்று மட்டுமே சொன்னேன். அவள் நேராக தொலைபேசியை நோக்கிச் சென்றாள்.”

அவர் ஓடிக் கொண்டிருந்த இடத்தை நோக்கி நெருங்கிவந்த அவள், நடுத்தர வயதுடைய வெகுளியான புன்னகைகொண்ட பெண்மணி.

“உங்களை லிப்டில் பார்த்ததாக ஞாபகம்” என்றாள் அவள்.

“அவர் அவனது தந்தை என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?”

“இது எல்லாம் நம்மைச் சுற்றி நடப்பவைதான், இல்லையா? அவர்கள் பந்தத்திற்குத் தயாராகும் முன்பே குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள். அவர்கள் எப்படியான உறவுக்குள் செல்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை. அது பிரச்சினைக்கு மேல் பிரச்சினை. பிறகு அவர்கள் பிரிந்துவிடுகிறார்கள் அல்லது அந்த தந்தை போலீசில் சிக்குகிறார். எப்போது பார்த்தாலும் இதுதான் இல்லையா? அவருக்கு வேலையில்லை, போதைப் பொருள் உபயோகிக்கிறார். அவர் தனது குழந்தைக்கு மேலதிக உரிமை உடையவர் என்று முடிவெடுக்கிறார். பாதுகாக்கும் பொறுப்பைப் பங்கிட விரும்புகிறார். அந்த எண்ணத்தைச் சில நாட்களுக்கு அடைகாக்கிறார். பிறகு அவர் வருகிறார், விவாதிக்கிறார்கள். பிறகு அவர் அடித்து நொறுக்குகிறார்.  தாய் நீதிமன்ற ஆணையைப் பெறுகிறார். பிறகு குழந்தையிடமிருந்து அவர் விலகியிருக்க வேண்டும்.”

தரைவிரிப்பில் நின்றபடி அசையும் அந்தப் பெண் இருந்த சரிவை அவர்கள் நோக்கினர். மற்றொரு பெண் அவளுடைய சில பொருட்களையும், ஸ்வெட்டர், பெரிய துணிப்பை ஆகியவற்றைக் கையில் வைத்துக்கொண்டாள். பாதையின் அருகிலிருந்த கடற்பறவையை நோக்கி ஒரு நாய் குதிக்க, அவை பறந்து மீண்டும் அருகே அமர்ந்தன.

“அவள் எவ்வளவு குண்டாக இருக்கிறாள் என்று பாருங்கள். இது போல நாம் நிறையப் பார்க்கிறோம். இளம் பெண்கள். அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. அப்படி இருக்க வேண்டும் என்பதே அவர்கள் நிலை. அந்த கட்டிடத்தில் எவ்வளவு நாட்கள் இருந்தீர்கள்?”

”நான்கு மாதங்கள்”

“அவர்கள் வந்து சுடத் துவங்கும் நிகழ்வுகளும் நடந்தேறும். எவ்வித மண உறவுமின்றி சேர்ந்து வாழும் கணவர்கள். பெற்றோர்களை உங்களால் பிரிக்க முடியாது என்பதோடு எல்லாமே சரியாகச் செயல்படும் என்றும் எதிர்பார்க்க இயலாது. உங்களிடம் வசதி இருந்தாலும் குழந்தையை வளர்ப்பது கடினம்.”

“ஆனால் உங்களால் உறுதியாகக் கூற முடியாது, இல்லையா?”

“நான் அவர்கள் இருவரையும் பார்த்தேன். குழந்தையையும் பார்த்தேன்.”

“அவள் ஏதாவது சொன்னாளா?”

“அவளுக்கு எந்த வாய்ப்பும் இல்லை. அவன் சிறுவனைப் பறித்துக்கொண்டு காரில் ஏறிச் சென்றான். அவள் அதிர்ச்சியில் உறைந்துவிட்டாள் என நினைக்கிறேன்.”

“காரில் வேறு யாராவது இருந்தார்களா?”

“இல்லை. பையனை காரின் சீட்டில் போட்டதும் அவர்கள் சென்றுவிட்டனர். எல்லாவற்றையும் நான் பார்த்தேன். பாதுகாக்கும் பொறுப்பைப் பங்கிட அவன் விரும்பினாலும் தாய் மறுக்கிறாள்.”

உறுதியாகவும், வெளிச்சத்தில் பதைபதைப்பாகவும் இருந்த அவளை, ஒருமுறை சலவை செய்யும் அறையில் அதே போன்ற திகைப்பூட்டும் பார்வையுடன் துணிகளை மடித்து வைத்த அவளைப் பார்த்த ஞாபகம் ரன்னருக்கு வந்தது.

“சரி, பயங்கரமான அதிர்ச்சி நிலையில் இருக்கும் ஒரு பெண்மணியை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்” என்றார் அவர். “ஆனால் சேர்ந்து வாழும் கணவரை நான் பார்க்கவில்லை. நான் எந்தப் பிரிவையும் பார்க்கவில்லை, எந்த நீதிமன்ற ஆணையையும் பார்க்கவில்லை.”

“உங்களுக்கு என்ன வயது?” என்றாள் அவள்.

“இருபத்து மூன்று”

“அப்படி என்றால் உங்களுக்குத் தெரியாது.”

அவளது கூர்மையான குரலால் அவர் வியப்படைந்தார். தனது நெஞ்சில் வெப்பம் உயர்வதை உணர்ந்தவாறே எவ்வித எண்ணமும் இல்லாமல் ஓடினார். போலீஸின் கார் ஒன்று தடுப்புக் கற்களைத் தாண்டிக் குதித்து வந்தபோது தரைவிரிப்பில் இருந்த எல்லோரும் திரும்பிப் பார்த்தனர். காரிலிருந்து போலீஸ் இறங்கியதும் அந்தப் பெண் ஏறத்தாழ நிலைகுலைந்து போனாள். பழக்கப்பட்ட தோரணையுடன் அவர் அந்தக் கூட்டத்தை நோக்கி நகர்ந்தார். அந்த விரிப்பில் விழுந்து அதிலேயே மூழ்கி மறைந்து போக வேண்டும் என்று அவள் விரும்புவதுபோலக் காணப்பட்டாள். அவளிடமிருந்து ஓவென்ற ஒரு சத்தம் வந்ததும் எல்லோரும் கைகளை விரித்தபடி அவளை நெருங்கிச் சென்றனர்.

உரையாடலை நிறுத்துவதற்கு இந்தச் சந்தர்ப்பத்தை ரன்னர் பயன்படுத்திக் கொண்டார். அவரது ஓட்டச் சுற்றுக்குத் திரும்பி ஓட்டத்தையும் சுவாசத்தையும் பழையபடி கொண்டுவர முயன்றார். குளத்தின் மறுகரையில் மரங்களுக்கு அப்பால் ஒரு பணிமனை ரயில் கழுதைபோல ஒலி எழுப்பிக்கொண்டு கடந்து சென்றது. தெற்கு எல்லையின் வளைவில் அவர் அமைதியற்றதாக உணர்ந்தார். வெளியேறும் பகுதிக்கு இட்டுச் சென்ற குறுகிய பாதையில் தனது தந்தையை அந்தச் சிறுமி தொடர்ந்து செல்வதை அவர் பார்த்தார். அவருக்கு இடதுபுறம் சற்று தொலைவில் போலீஸின் இரண்டாவது கார் நிற்பதைக் கண்டார். அந்தக் கூட்டம் கலைந்து கொண்டிருந்தது. அந்தப் பாலத்தைக் கடந்து அவர் தான் பேசிக் கொண்டிருந்த அந்தப் பெண்மணியைக் கண்டுபிடிக்க முயன்றார். சிதறிக் கிடந்த ரொட்டித் துண்டுகளை நோக்கி வாத்துகள் தள்ளாடி நீந்திச்சென்றன.

மேலும் இரண்டு சுற்றுகளுக்குப் பின் அவரால் நிறுத்த முடியும்.

ஒருவித லயத்துடன் அவர் வேகமாக ஓடினார். போலீஸின் முதல் கார் அந்தப் பெண்ணை ஏற்றிக் கொண்டு சென்றது. இப்போது அந்தப் பகுதி காலியாகவும் நிழல் படர்ந்தும் காணப்படுவதை அவர் பார்த்தார். அவள் அவரிடம் நன்றாகப் பேசியபோதும் அந்த உரையாடலைச் சட்டென்று நிறுத்தியது தவறு என்பதை உணர்ந்தவாறே அவர் பாதை வளைவில் திரும்பினார். ஒரு போக்குவரத்துத் தடுப்புக் கூம்பு எங்கிருந்தோ வந்து விழுந்தது. பாலத்தை நெருங்கினார் ரன்னர்.

இறுதிச் சுற்றில் சில தப்படிகள் சென்றதும் திசைமாறி சரிவில் இறங்கிச் சென்று மெதுவாக நடக்கத் தொடங்கினார்.  ரன்னருக்குப் பின்புறம் திரும்பி நின்றிருந்த கடைசி சாட்சியிடம் காரின் கதவில் சாய்ந்து நின்றபடி பேசிக் கொண்டிருந்தார் ஒரு போலீஸ்காரர். ஒளி வீசியபடி சில கார்கள் பறந்து சென்றன. ரன்னர் அருகே வந்ததும் போலீஸ்காரர் தனது குறிப்பேட்டிலிருந்து நிமிர்ந்து பார்த்தார்.

“இடையூறுக்கு மன்னிக்கவும் அய்யா. அந்தப் பெண் என்ன கூறினாள் என அறிய விருப்பம். குழந்தையைப் பறித்த அவன் அவளது கணவனா அல்லது அவளுக்குத் தெரிந்தவனா?”

“நீங்கள் என்ன பார்த்தீர்கள்?”

“காரை மட்டும் தான். நிறமற்ற முன்தடுப்பான் கொண்ட நீல நிறக் கார். நான்கு கதவுகள். காரின் எண்ணையோ அல்லது அதன் தயாரிப்பையோ நான் கவனிக்கவில்லை. அந்த ஆளின் கூனல் விழுந்த லேசான நிழலுருவத்தையே கண்டேன்.”

அந்த போலீஸ்காரர் தனது குறிப்பேட்டில் குறித்துக் கொண்டார்.

“அவன் ஒரு புதிய ஆள். அதை மட்டுமே அவளால் கூற முடிந்தது” என்றார் அவர்.

நேரடி சாட்சியாக இருந்த மற்றொருவரும் திரும்பி நிற்க, இப்போது மூவரும் வட்டமாக நின்றுகொண்டு ஒருவரையொருவர் கண்களை நோக்காமல் விருப்பமின்றி வேறெங்கோ பார்த்துக் கொண்டிருந்தனர்.  ஒரு நுட்பமான போட்டிக்குள் நுழைந்ததாக ரன்னர் உணர்ந்தார். பின்னர் யாரிடமும் அல்லாமல் பொதுவாகத் தலையசைத்துவிட்டு தனது ஓடுபாதைக்குத் திரும்பிச் சென்றார். மீண்டும் வேகமாக ஓடத் தொடங்கிய அவர், முழங்கைகள் மோதிக் கொள்ளும் அளவு சூறாவளி போல ஓடினார். கடற்பறவைக் கூட்டம் ஒன்று நீரின் மேல் அசையாமல் இருந்தது.

ஓட்டத்தின் முடிவிற்கு வந்தார் ரன்னர். அவர் நின்று இடுப்பிற்குக் கை கொடுத்து குனிந்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு பாதையில் நடக்கத் தொடங்கினார். போலீஸ் கார் சென்ற பின் மூன்று ஜோடி வளைவுகளாகப் புல்வெளியில் சக்கரங்களின் தடம் பதிந்து கிடந்தது. அவர் தெருவிற்குச் சென்று விளக்குகள் எரிந்தபடி வரிசையாக அமைந்திருந்த கடைகளோரம் நடந்தார். அவளது சாட்சியங்கள் எவ்வளவு சிறப்பாகவும் பயனற்றதாக இருந்திருந்தாலும் அவளிடம் அவர் ஒருபோதும் சவால் விட்டிருக்கக் கூடாது. அவள் அவர்கள் இருவரையும் பாதுகாக்க விரும்பினாள். தனது குழந்தையை எடுத்துச்செல்ல வந்த ஒரு தந்தை அல்லது கனவுகளின் வெளியில் எங்கோ பதுங்கியிருந்த யாரோ ஒருவன் என்பதைத் தவிர வேறு எதை நீங்கள் நம்ப முடியும்? இதமான மாலை வேளையில் மக்கள் அமர்ந்திருக்கும் அவர்களது கட்டிடத்தின் வெளிப்புற இருக்கையில் அவர் அவளைத் தேடினார். அவள் அந்நிகழ்வைச் சரியான நேரத்தில் நீட்டிக்க முயன்று எல்லோரும் அதை உணரும்படி செய்தாள். கற்பனையைத் தாண்டிய ஒரு தெளிவற்ற மனிதனின் உருவம் அது என்பதை நம்புவீர்களா? நுழைவாயிலின் வலதுபுறம் இருந்த சிறு மரத்தின் அடியில் அவள் அமர்ந்திருப்பதை அவர் பார்த்தார்.

“அங்கே நான் உங்களைத் தேடினேன்” என்றார் அவர்.

“என்னால் அந்த நிகழ்வை மனதிலிருந்து வெளியேற்ற முடியவில்லை.”

“ஒரு போலீஸ்காரரிடம் நான் பேசினேன்.”

“ஏனெனில் அதைப் பார்ப்பதால் மட்டுமே என்னால் அதை உணர்ந்து கொள்ள முடியவில்லை. அந்த ஆளின் கைப்பிடியில் அந்தக் குழந்தை இருப்பதைப் பார்ப்பதற்கு அது வலிந்து பெறப்பட்டதாக இருந்தது. அது துப்பாக்கியை விட வன்முறையானது என நினைத்தேன். அந்த எளிய பெண் அது நிகழ்வதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் எப்படி எதிர்பார்க்க முடியும்? நான் சோர்வாகவும் விசித்திரமாகவும் உணர்ந்தேன். நீ வருவதை நான் பார்த்ததுடன் யாரிடமாவது நான் பேசவேண்டும் எனக் கூறினேன். நான் புலம்பினேன் என்பதும் எனக்குத் தெரியும்.”

“நீங்கள் முழுமையான கட்டுப்பாட்டில் இருந்தீர்கள்.”

“நான் இங்கே அமர்ந்து கொண்டு அந்த நிகழ்வுபற்றி எந்தவொரு கேள்வியும் இல்லை என நினைத்துக் கொண்டிருந்தேன்.  அந்தக் கார், அந்த ஆள், தாய், குழந்தை. அவைதான் பாகங்கள். ஆனால் அந்தப் பாகங்கள் எவ்வாறு ஒன்றாக இணைகின்றன? ஏனெனில் இப்போது சிந்திப்பதற்கு எனக்குச் சிறிது நேரம் இருக்கிறது. சட்டென்று ஒரு எண்ணம் உதயமானது. அது எவ்வளவு அர்த்தப்பூர்வமானது. இன்றிரவு நான் உறங்குவதற்கு ஆயிரத்தில் ஒரு வாய்ப்புகூட இல்லை. இது மிகவும் மோசமானது, மிகப் பயங்கரமானது.”

“அவள் அந்த ஆளை அடையாளம் கண்டுகொண்டாள். கண்டிப்பாக அது தந்தைதான். அவள் போலீஸிடம் எல்லாத் தகவலையும் கூறினாள். நீங்கள் அதைச் சரியாகப் புரிந்துகொண்டீர்கள்.”

அவள் அவரைக் கவனமாக நோக்கினாள். அவர் திடீரென தன்னை ஆரஞ்சு வண்ண அரைக்கால் சட்டை மற்றும் கிழிந்த நிறமிழந்த மேல்சட்டை அணிந்த கார்ட்டூன் உருவம் போலவும் அந்தச் சூழலிலிருந்து தனிமைப்பட்டவராகவும் ரகசியமான ஓரிடத்திலிருந்து இவற்றைக் கண்காணிப்பவர் போலவும் உணர்ந்தார். அவள் ஒரு வலிமிகுந்த சிரிப்பை உதிர்த்தாள். அவர் சற்று பின்னகர்ந்து, முன் சாய்ந்து கைகுலுக்குவதற்காகக் கையை நீட்டினார். இப்படித்தான் அவர்கள் இரவு வணக்கம் செலுத்திக் கொண்டனர்.

அவர் அந்த வெண்ணிற வரவேற்பறைக்குச் சென்றார். ஓட்டத்தின் ஒலி அவரிடம் எதிரொலித்தது. அவர் சோர்வினாலும் தாகத்தாலும் நின்று கொண்டிருந்தார். லிப்ட் கீழே வந்ததும் கதவு நகர்ந்து திறந்தது. அந்தக் கட்டிடத்தின் இதயத்துள் அவர் தனியாகப் பயணித்தார்.


ஆசிரியர் குறிப்பு:

டொனல்டு ரிச்சர்டு டிலில்லோ (1936): அமெரிக்க நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், நாடக ஆசிரியர் மற்றும் கட்டுரையாளர் ஆவார். Mao II (1992), Underworld (1998) ஆகிய படைப்புகளுக்காக இரு முறை புக்கர் விருதின் இறுதிப் பட்டியலுக்குத் தேர்வானவர். Mao II நாவலுக்காக 1992ல் ஃபாக்னர் விருதைப் பெற்றார்.  தனது படைப்புகள் அபாயகரமான காலங்களில் வாழ்தல் என்பதை அடிப்படையாகக் கொண்டவை என்கிறார்.  எழுத்தாளர்கள் அமைப்பை எதிர்க்க வேண்டும். அதிகாரத்திற்கு எதிராகவும், பன்னாட்டுக் கம்பெனிகள், அரசுகள், நுகர்வுக் கலாச்சாரத்தின் ஒட்டுமொத்த அமைப்புகள் மற்றும் பலவீனப்படுத்தும் கேளிக்கைகள் ஆகியவற்றை எதிர்க்க வேண்டும். எழுத்தாளர்கள் என்பவர்கள் இயல்பில் தம்மைக் கட்டுப்படுத்த நினைக்கும் எல்லா அதிகாரங்களுக்கும் எதிராக நிற்க வேண்டும் என்று 2005ல் எடுக்கப்பட்ட ஒரு நேர்காணலில் கூறினார்.

The Angel Esmeralda: Nine Stories என்ற தொகுப்பில் உள்ள Runner என்ற சிறுகதையின் தமிழாக்கம்.

 

.ரகுநாதன். திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இலக்கிய ஆர்வலர். இலக்கிய இணைய இதழ்களில் புனைவு/அபுனைவு மொழிபெயர்ப்புகள் மற்றும் கவிதைகள் எழுதிவரும் இவர் அரசுப் பணியாளராக கோவையில் பணியாற்றுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.