அடையாளம்


விருப்ப ஓய்வு பெற்றபோது முப்பத்தைந்து வருட வங்கிப் பணியை நிறைவு செய்திருந்தேன். எத்தனை சம்பவங்கள், எத்தனை விதமான வாடிக்கையாளர்கள், எத்தனை விதமான உரசல்கள். எத்தனையெத்தனை அனுகூலங்கள், எத்தனையெத்தனை இழப்புகள். எத்தனையெத்தனை அவமானங்கள்…

பழைய பத்துரூபாய் நோட்டைப் பார்த்திருக்கிறீர்களா, அறுபதுகளிலோ, எழுபதுகளிலோ புழக்கத்திலிருந்திருக்கலாம்.  நான் வேலைக்குச் சேர்ந்தபோது நடைமுறையில் இருந்த  நூறு ரூபாய் நோட்டின் பரிமாணங்களும், கிட்டத்தட்ட அதே  நிறமும் கொண்டிருக்கும்.  வேலையில் சேர்ந்த முதல் மாதத்தில், ஒரு ரூபாய் இரண்டு ரூபாய்த் தாள்கள்கூட நெளியும் பாம்புகள்போல என் பார்வைக்குப் பட்ட சமயத்தில், இப்போது போல சரளமாகக் குளிர்சாதன வசதியில்லாத காலகட்டத்தில், அக்னிநட்சத்திரப் பருவத்தில், மாவட்டத் தலைநகர்க் கிளையில், கடுமையான கூட்ட நேரத்தில், பழைய பத்து ரூபாயைக் கொடுத்து மாற்று நோட்டு வாங்க வந்தவரிடம் நூறு ரூபாயைக் கொடுத்து அனுப்பிவிட்டேன் என்பது சாயங்காலம் தலைமைக் காசாளரிடம் கணக்கை ஒப்படைக்க வேண்டிவந்தபோது உறைத்தது. தொண்ணூறு ரூபாய் கைப்பிடித்தம். என் அப்போதைய  சம்பளமே முன்னூற்றிச் சொச்சம்  ரூபாய்தான்.

விஷயம் என்னவென்றால், நோட்டை மாற்றிப்போன அந்த நபரின் முகம் அன்றைக்கு சுத்தமாக  மறந்துபோய்,  அடுத்த சம்பள தினத்தில் மின்னல்போல ஞாபகம் வந்தது – இன்றுவரை நினைவிருக்கிறது. பற்பல வருடங்கள் கழித்து, அதேபோன்ற வெயில் காலக் கூட்ட நேரத்தில் வியர்வைக் கசகசப்பில் ‘பாஸ்ட்டர்ட்’ என்று கத்தி, பதிலுக்கு அதைவிடக் கேவலமான தமிழ்வசவை என்னிடமிருந்து பெற்று, அடுத்த வாரத்தில் கூட்டமில்லாததொரு  வேளையில் கவுண்டருக்குள் கைவிட்டு என் கையைப் பற்றிக் கண் கலங்க மன்னிப்புக்கேட்டு, என்னையும் கலங்கச் செய்த ஆங்கிலோ இந்தியரான ஆலனில் தொடங்கி ஓராயிரம் பத்திகள் எழுதுமளவு முகங்களும் நிகழ்வுகளும் நினைவில் பதிந்திருக்கின்றன. உட்கார்ந்து எழுதப் பொறுமை இல்லை . படிப்பதற்கும் எத்தனை பேர் ஆர்வமாய் இருப்பார்கள்!

தவிர, அந்த நாட்களில் நான் வரித்திருந்த அடையாளம் பற்றி எனக்கே சற்றுத் தெளிவில்லாமல் இருந்திருக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் வங்கியைப் பற்றி அவதூறாகப் பேசினால், என்னையே திட்டுகிற மாதிரி எடுத்துக்கொண்டு ஆவேசப்படுவேன். ஓய்வெடுக்கும் விருப்பத்தை வங்கிக்குத் தெரிவித்துவிடுவது என்ற முடிவை நோக்கி நகரும்போதுதான் தெரிந்தது, நான் வங்கி அல்ல என்று. நான் நானுமே அல்ல என்பதை அறியவைக்கிற புத்தகங்கள் ஏகப்பட்டது முன்னரே படித்திருந்தேன் என்றாலும், அவற்றையெல்லாம் அனுபவமாக உணர்வதற்கு என்னிடம் நுகர்முனைகள் இல்லாமல் இருந்திருக்கவேண்டும். புத்தகங்கள் வழியாய்க் கிட்டிய எத்தனையோ தகவல்கள் போல அதையும் மனத்தில் வாங்கிப் போட்டு வைத்திருந்தேனோ என்னவோ.

சாவகாசமாகப் பேசிக்கொண்டிருந்தபோது, பணித்தலச் சம்பவங்கள் சிலவற்றை மூத்த எழுத்தாளர் ஒருவரிடம் விவரித்தேன். நான் புனைகதைகள் எழுத ஆரம்பித்திருந்த காலகட்டம். அவர் இயல்பாகக் கேட்டார்:

 “இதையெல்லாம் வச்சு நீங்க ஒரு நாவல் எழுதலாமே!”

 “அது கஷ்டம் சார். சீக்கிரமே பழசாயிரும். இருபதாம் நூற்றாண்டு ஆரம்பத்திலெ இருந்த பாங்க்கிங் சிஸ்டமா இன்னைக்கி இருக்கு?”

 “இல்லேன்னா சொல்றீங்க!”

என்று ஆச்சரியமாய்க் கேட்டார். நான் தொடர்ந்தேன்:

 “பண்டமாற்று முறையிலேர்ந்து கரன்ஸி முறைக்கு மார்றதுக்குத்தான் அதிக நாள் பிடிச்சிருக்கும் சார். இப்போப் பாருங்க, கையிலே ஒரேயொரு கரன்ஸி நோட்டு கூட இல்லாமெ, நீங்க உலகம் முழுக்கச் சுத்தி வந்துறலாம். பாக்கெட்ல ஒரு ப்ளாஸ்ட்டிக் அட்டை இருந்தாப் போதும்…” என்று சிரித்தேன். அவரும் சிரித்துவைத்தார். இந்த நாட்களில் அட்டைகூட வேண்டிய தில்லை, மொபைல் ஃபோன் இருந்தாலே போதும். ஆனால், முன்னாடி ஆச்சரியப்பட்டது இப்போது வேறுவிதமாகப் புரிகிறது. ஆமாம், செயல்பாட்டு முறைகளில்தான் ஏகப்பட்ட மாற்றம் வந்திருக்கிறதே தவிர, வங்கி என்னும் கோட்பாடு மாறிவிட்டதா என்ன! அமரராகிவிட்டவரின் முகம் நினைவு வருகிறது, வெட்கத்தைக் கிளர்த்தி விடுகிறது. இப்படித்தான், வெட்கமோ அவமானமோ இல்லாமல் பழைய நாள் ஒன்றை நினைவுகூரவே முடியாமல் போய்விடுகிறது..


தை விடுங்கள். எத்தனையோ ஆயிரம் வாடிக்கையாளர்களை எதிர்கொண்டிருக்கிறேன். உறுமீன்கள்போல என் மனத்தில் ஆழமாகப் பதிந்திருப்பவர்கள் சிலபேர் தான். அவர்களில் முதன்மையானவர் திரு. ஆதி வராஹன். பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆராய்ச்சிநிலையத்தில் உயர்நிலை அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். பெரும்பாலும் இரண்டாவது வாரத்தில், அதுவும் அலுவல் முடியப் போகிற நேரத்தில் தான் வருவார். வந்தனம் சொல்கிற மாதிரித் தலையாட்டிவிட்டு,  கடைசி ஆளாக என்னிடம் வருவதற்காகப் பொறுமையாய்க் காத்திருப்பார். வந்த வேலை முடிந்த பிறகு,

 “வாங்களேன், ஒரு சிகரெட் பிடிப்பம்” என்று வாஞ்சையுடன் கூப்பிடுவார். சிலசமயம் அரைமணி நேரம்வரைகூடப் பேசிக்கொண்டிருப்போம். நான் கதைகள் எழுதுகிறேன் என்பதில் அவருக்கு இனம்புரியாத பெருமிதம். என்ன, பாவி மனிதர், தன் பணிக்காலத்தில் நேரிட்ட பல சம்பவங்களை விரிவாக விவரித்துவிட்டு, “இதையெல்லாம் எளுதி வச்சிராதீங்க க்ருஷ்ணன். வேறெ ஏதாவது எளுதும்போது உதவியாயிருக்கலாம்ன்னுதான் இவ்வளவு விரிவாச் சொல்றன். இதெல்லாம் ஒரு மாதிரி ரகசியம். நேர்ப்பேச்சிலெ பேசிக்கிறலாம். பதிவு பண்ணி டாக்குமெண்ட் ஆக்கிறக் கூடாது…” என்பார்.

அடையாளங்களைக் கொஞ்சம் புரட்டிப்போட்டு அந்தக் கதைகளைத் தொகுத்தால் ஒரு நாவல் எழுதலாம். அவர் காலமானதற்குப் பிறகும்கூட எனக்குத்தான் துணிச்சல் வரமாட்டேனென்கிறது.

எதற்குச் சொல்கிறேன், போனவாரம் இலங்கையில் சில தேவாலயங்களிலும் நட்சத்திர விடுதிகளிலும் குண்டு வெடிப்பு நடந்து நூற்றுக்கணக்கானவர்கள் இறந்தார்கள் அல்லவா, அவர்களில் பலபேர் துப்பாக்கியைக்கூட நேரில் பார்த்திராதவர்களாய் இருந்திருப்பார்கள், பாவம். ஆனால், ஆயுதங்கள், அவற்றுக்கான உலோக மற்றும் ரசாயனச் சேர்மானங்கள், ஆயுதங்களை மேம்படுத்துவதற்கான உத்திகள், ஆயுதம் மற்றும் போர்த்தொழில்நுட்பங்களை முன்னிட்டு பன்னாட்டுப் பயணங்கள் என்று பணிக்காலம் முழுவதும் புழங்கிய ஆதி சார், மதியப் பொழுதில் குட்டித்தூக்கம் போடப் போனவர், அலுங்காத முகத்துடன் நிரந்தரமாய்த் தூங்கியே போனார் என்பது எவ்வளவு பெரிய முரண் நகை! – என்று தோன்றியது. யாருக்குத் தெரியும், அன்று தூங்கியெழுந்து வங்கிக்கு வரும் திட்டம்கூட அவருக்கு இருந்திருக்கலாம்…

குண்டுவெடிப்புச் செய்தியைப் பார்த்ததிலிருந்து,  ஆதி சார் ஞாபகமாகவே இருக்கிறது…

 மனதில் இனம்புரியாத நடுக்கமும் இருந்துகொண்டே இருக்கிறது. தேவனின் சந்நிதியில் அல்லவா அது நடந்திருக்கிறது. அடைக்கலம் வேண்டிப்போன இடத்தில் முதுகில் கத்திக்குத்து வாங்கி இறந்த மாதிரியல்லவா இருக்கிறது.  உலகத்தில் எந்த இடம் தான் பாதுகாப்பானது? ஆண்டவனின் முன்னிலைகூடப் பாதுகாப்பில்லாத இடமாகி விட்டதே. இப்படியெல்லாம் உளைச்சல் கொள்வதற்கும் நான் எழுத்தாளன் என்பதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை . ஒருவேளை,  எழுதவே வந்திருக்காவிட்டாலும் இந்தப் பதற்றம் எனக்குள் நிலவியிருக்கும் என்றுதான் படுகிறது. மேற்படிப் படுகொலைகளைத் திட்டமிட்டவர்கள் தவிர பிற மனிதர்கள் அத்தனை பேருக்குமே அது அதிர்ச்சியாய்த்தான் இருந்திருக்க வேண்டும்.


  ன்றொருநாள் ஆதி சார் வந்தபோது எங்களுக்குள் ஒரு உரையாடல் நிகழ்ந்தது… பக்கத்துக் கவுண்ட்டர்க்காரரான தாமஸ் செல்வகுமார் விடுப்பில் போயிருந்தார். வழக்கமாக மாடியில் பணிபுரியும் விஜயலட்சுமி மேடம் அவர் இடத்தில் அமர்ந்து, தன் இயல்பான நிதானத்துடன் ரூபாய்த்தாள் ஒவ்வொன்றையும் கசக்கியும் பிதுக்கியும் பரிசோதித்துக்கொண்டிருந்தார்.  என்னிடம் காசோலை கொடுத்துப் பணம் வாங்கிக் கொண்ட பின், கண்ணால் பக்கவாட்டில் சுட்டியபடி,  பாவனையாகத் தன் முகத்தில்  கொடுவாள் மீசை  வரைந்து காட்டி, சைகையால் எங்கே என்று கேட்டார் ஆதி சார்.

’சொல்கிறேன்’ என்னும் விதமாகத் தலையசைத்துக் காட்டினேன். உண்மையில், தாமஸ் சம்பந்தமாக எவ்வளவோ விஷயங்கள் எனக்குள் அலைமோதின. அவ்வளவையும் அவரிடம் சொல்லலாமா, வேண்டாமா என்று முடிவெடுக்க முடியாமல் திணறினேன்.

தாமஸுடைய பெற்றோரின் காலத்தில் மதம் மாறியிருந்தார்கள். ஆனால், தமது மதாபிமானம் பற்பல தலைமுறைகளைத் தாண்டி, கிட்டத்தட்ட கிறிஸ்துவின் காலத்திலிருந்தே தொடர்ந்து வருகிற மாதிரி நடந்துகொள்வார் தாமஸ், அல்லது நமக்கு அப்படித் தெரியும்.

எனக்கு சுயஜாதி அபிமானம் அறவே கிடையாது; நான் பக்தி செலுத்துவது உருவமோ, பெயரோ, ஏன், அடையாளமேகூட அற்ற பெருநிலையின் மீது.  தாமஸுக்கு இது நன்றாகவே தெரியும். அதனால்தானோ என்னவோ, எங்கள் நட்புக்குள் கடவுள் ஒரு பேசு பொருளாகவே இருந்ததில்லை.

ஒரேயொரு தடவை, எனக்கு ஒரு ஈமெய்ல் அனுப்பினார் – பரலோக சாம்ராஜ்யம் சமீபித்துவிட்டதாகவும், கர்த்தரே நமது ஒரே மீட்பர் என்றும், அவர் என்னை அற்புதங்களைக் காணப்பண்ணுவார் என்றும் தெரிவித்தது அந்தக் கடிதம். நான் அவருக்கு  பதில் அனுப்பினேன் – ’என் பிரியத்துக்குரிய தாமஸ், வேறு யாருக்கோ அனுப்ப வேண்டிய மெய்லை, கவனக்குறைவால் எனக்கு அனுப்பிவிட்டீர்கள் போல; உரியவருக்கு அது கிடைக்காது போனால், வீண் பதற்றம் உருவாகிவிட வாய்ப்புண்டு என்பதாலேயே இந்த பதிலை அனுப்புகிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தேன்.

தாமஸ் புத்திசாலி. அதன்பிறகு என்னிடம் இந்த மாதிரி சங்கதிகளை கவனமாய்த் தவிர்த்துவிடுவார். நானுமே என் சக ஊழியர்களிடமோ, குடும்பத்திலோ இதைப் பற்றித் தெரிவித்ததில்லை. சுற்றியிருக்கும் அத்தனைபேரும் விவேகிகள் என்பதற்கான சான்று ஏதும் இருக்கிறதா என்ன?

ஆனால், இன்று ஆதி சாரிடம் ஒரு விஷயத்தைச் சொல்லியே ஆகவேண்டும் என்று பட்டது. வாடிக்கையாளர் நேரத்தை முடித்து வெளியில் வந்து தேநீரும் சிகரெட் புகையும் இதமாக உள்ளே இறங்கியபிறகு, சொன்னேன்:

தாமஸுக்கு இரண்டு குழந்தைகள்; ஒரு பெண், ஒரு ஆண்.  மூத்தவளுக்கு ஏதோ நோய்த்தொற்று ஏற்பட்டபோது, பெற்றவர்கள் இருவருமே, மருத்துவமனைக்கு இட்டுச் செல்வதில்லை என்று தீர்மானமாய் இருந்தார்கள். மறுநாள் காலை கண்கள் இரண்டும் வெகுவாகச் சிவந்தும், இமைகள் புடைத்தும் பக்கத்துக் கவுண்ட்டரில் அவர் வந்து அமர்ந்தபோது, காசுக் கணக்கில் கூடக்குறைய ஆகிவிடக் கூடாதே என்ற கரிசனத்தால், வழக்கத்தைவிட இரண்டு மடங்கு அதிக வேகத்தில் வேலை பார்த்தேன்.

உணவு இடைவேளையில், தாமஸ் என்னிடம் தகவல் தெரிவித்தார். இரவு முழுவதும் உறங்காமல், மகளின் படுக்கையருகில் முழந்தாளிட்டுப் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தாராம். இவரைவிடவும் பக்திவயப்பட்டவரான இவர் மனைவி, தற்போதும் பிரார்த்தித்துக்கொண்டிருப்பார் என்றும் சொன்னார்.

இப்படியே சுமார் ஒருவாரம் போனது – குழந்தை இறந்துவிட்டாள். துக்கம் கேட்கப்போனபோது, தாமஸின் குடும்பத்தில் கலக்கத்தின் அறிகுறியே இல்லாதிருந்தது எனக்குள் பெரும் பீதியைக் கிளப்பியது. ‘கொடுத்தவரே எடுத்துக்கொண்டார்’ என்கிற மாதிரி எனக்கு சமாதானம் சொன்னார் தாமஸ்.

இறந்தவள் சும்மா போகவில்லை – தன் தம்பிக்கும் கிருமிகளை வழங்கிவிட்டுப் போயிருந்தாள். ஆமாம், அது வெறும் நோய்த் தொற்று அல்ல; தொற்று நோய். இரண்டு வாரங்களில் அடுத்தவனும் படுத்த படுக்கையானபோது  சுற்றமும் நட்பும் வெகுவாகப் பதறிப்போனது. பெற்றவர்களை முற்றுகையிட்டு, இந்தக் குழந்தையை அவர்களிடமிருந்து பறித்து, மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். நல்லவேளை, வெகுவாக முற்றிவிடவில்லை  என்பதால், டாக்டர்கள் உயிரை மீட்டுக் கொடுத்துவிட்டார்கள். இந்தத் தவறை இழைக்க நேர்ந்ததற்காக, தாமும் மனைவியும் ஒரு வாரம் சிறப்புப் பிரார்த்தனை செய்ததாக தாமஸ் என்னிடம் சொன்னார்; நான் இன்னமும் கலங்கிப் போனேன்…

ஆதி சார் ஏதாவது சொல்வார் என்று அவர் முகத்தையே பார்த்தேன். அவர் நிதானமாகச் சொன்னார்:

 “க்ருஷ்ணன், நீங்க இன்னும் கேஷ் முடிக்கல்லேல்ல?”

 “ஆமா சார்.”

என்றவாறே, மணிக்கட்டைத் திருப்பிப் பார்த்தேன்.  “அட, நேரமாகிவிட்டது. தலைமைக் காசாளர் இதற்குள்ளேயே உள்ளூரத் திட்ட ஆரம்பித்திருப்பார்.”

 “நீங்க முடிச்சுட்டு வாங்க. நான் வெய்ட் பண்றேன். கொஞ்ச நேரம் பேசிக்கிட்டுருந்துட்டு, நானே உங்களை ஸ்டேஷன்லெ ட்ராப் பண்ணிர்றேன்.”

அபரிமிதமான கூட்டத்துடன் வரும் நகர்ப்பேருந்தில் தொற்றிக்கொண்டு ரயில் நிலையம் போகவேண்டாம் என்பது மிகப் பெரிய ஆசுவாசமாக இருந்தது எனக்கு. தமது உயர்ரக காரை  ஆதி சார் ஓட்டும்போது வெண்ணெயில் வழுக்கிக்கொண்டு போவது போல சுகமாக இருக்கும்…

 காசையும் கணக்கையும் ஒப்படைத்துவிட்டு, வாடிக்கையாளர் கூடத்தில் எனக்காகக் காத்திருந்த ஆதி சாரை நெருங்கும்போது அந்தக் கேள்வி எனக்குள் எழுந்தது:

அதெப்படி, அன்பையும் விவேகத்தையும் போதிக்கும் மதம், அடுத்தவரின் நோயையும் மரணத்தையும் பற்றி இப்படியொரு உதாசீனத்தை வழங்கும்?


 “ ல்ல கேள்விதான்.”

என்று உதட்டிடுக்கில் ஆமோதித்தவாறே, என்னுடைய சிகரெட்டையும் தம்முடையதையும்  பற்றவைத்தார் ஆதி சார். முதல் கொத்துப் புகையை வெளியேற்றியவாறு சொன்னார்:

 “எங்க குடும்பம் எத்தனை தலைமுறைக்கு மின்னாடி தமிழ்நாட்டுக்கு இடம் பெயர்ந்ததுன்னு சொல்லியிருக்கேன்ல்ல?”

 “ம்.”

 “அப்பறம் ஏன் என் பசங்களுக்கு ஸ்தாணுநாதன், த்ரிவிக்ரமன், சுகதகுமாரி ன்னு பேர் வச்சேன்? “

எனக்குத் திகைப்பாய் இருந்தது. புரிந்த மாதிரியும் புரியாத மாதிரியும் இருந்தது. ஒருவேளை என் கேள்வியை அவர் சரியாய் வாங்கிக்கொள்ளவில்லையோ என்று குழப்பமாய் இருந்தது. இன்னொரு முறையும் சவுக்கை வீசினார் ஆதி சார்.

 “போகட்டும், சுய ஜாதி அபிமானம் இல்லேன்னு சொல்லிப்பீங்களே, ’அது எனக்கும் உரியதுதான்; நான்தான் என் பங்கை எடுத்துக்கலையாக்கும்’ ங்குற பெருமிதம் தானே அப்பிடிச் சொல்ல வைச்சிது? மறுதரப்போட பார்வையிலே, ’வெளிப்படையாச் சொல்ல முடியாத கோழைத்தனம்’னு இதைப் பார்க்க முடியுமால்லியா? வீரியத்துலேதான் ஏத்த இறக்கம் இருக்குமே தவிர, இந்த மாதிரி பேதங்களுக்கு முழுக்கத் தப்பிச்ச மனுஷ மனம் இருக்கும்ன்னு நான் நம்பலே க்ருஷ்ணன்.”

பலவீனமாகத் தலையாட்டினேன். இன்னும் பலவீனமான குரலில், அவரை நோக்கி  எனக்குள் உயர்ந்த கேள்வியைக் கேட்டேன்.

 “இருந்தாலும், மரணபயம் எல்லா உயிர்களுக்கும் பொதுவானதுதானே சார்? “ அவர், வழக்கம்போலவே உணர்ச்சியற்ற முகத்துடன்,

 “அட நீங்க வேறெ. தன்னுடைய மரணத்தையே ஆசையாய் எடுத்து மடியிலெ போட்டுக்கிட்ட ஆட்களையெல்லாம் பாத்துருக்கேன், தெரியுமா? “

என்று சொல்லிக்கொண்டே அடுத்த சிகரெட்டைப் பற்ற வைத்தார். வழக்கத்துக்கு விரோதமாக அவருடைய கைகள் நடுங்குவதைப் பார்த்தேன். அவருடைய இயல்புக்குப் பொருந்தாத வகையில், வேகமாகக் கேட்டார்:

 “இன்னொரு டீ குடிப்பமா? “

முதல் மிடறை அருந்திய மாத்திரத்தில் மடமடவெனப் பேச ஆரம்பித்தார் – அவருடைய குரலிலுமே மெல்லிய நடுக்கம் இருந்த மாதிரிப்பட்டது.  உண்மையில், என்னிடம் முழுக்கச் சொல்லி முடித்துவிட்டு, கார் நிறுத்துமிடம்வரை மௌனமாக நடந்து போகும்போதும் காரோட்டும்போதும்கூட, அவரிடம்  எந்நேரமும்  இருக்கும் நாசூக்கும் நளினமும் உணரக் கிடைக்கவில்லை; இல்லை, அது என் பிரமையோ…


 “க்ருஷ்ணன், போன தலைமுறை நெனைச்சாவது பாத்திருக்குமா – டீங்கிற அற்புதமான பானத்தோட மணம் குணம் நிறம் எதுவுமே இல்லாத சாய வெந்நீரை ஜனங்கள் கூட்டம்கூட்டமாக் குடிப்பாங்கன்னு? காலங்காலமா எத்தனையோ விஷயங்கள் மாறிக்கிட்டு வர்றப்ப, யுத்த தந்திரங்கள் மட்டும் மாறாம இருக்குமா என்ன?”

இந்தக் கடைசி வாசகத்தை ஏன் சொன்னார் என்று புரியவில்லை. ஆனாலும், ஆதி சார் பேசுவதைக் கேட்க எனக்கு மிகவும் பிடிக்கும். எங்கே சுற்றி வளைக்க வேண்டும், எங்கே பட்டுக் கத்தரித்த மாதிரி நகர வேண்டும் என்பதையெல்லாம் அவர் யோசித்துப் பேசுகிற மாதிரி இருக்கும். தேர்ந்த எழுத்தாளன் சொல்லும் கதைகள் மாதிரி. மொழியின் வேகமும், விவரிப்பின் சுகமும் கேட்பவரை – அதுதான், என்னை- சொக்க வைக்கும்.

            …அப்போது ஏதோவொரு ஆப்பிரிக்க நகரத்துக்குப் போயிருந்தார் ஆதி சார். உலக வரைபடத்தில் ஒரு சிறு கொக்கி அளவே இருப்பது என்றாலும், அதீதமான கனிம வளம் கொண்ட நாடு அது.  நகர்ப்புறத்தில் ஐரோப்பியச் சாயலும், கிராமாந்தரங்களில் பூர்வகுடி மரபுகளும் நிலவ, ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு நூற்றாண்டுகளில் பாதம் பதித்திருப்பது. உண்மையில், கிராமப்புறத்தில் வசித்த பூர்வகுடிகளுக்கும், நகரவாசிகளுக்கும் இடையில் நிலவிய வெறுப்புணர்வுமே பல நூற்றாண்டு வரலாறு கொண்டது தான். ஆமாம், ஒரே மதத்தின் இரு பிரிவினருக்கிடையில் குத்துப்பழி வெட்டுப்பழியாக விரோதமும் குரோதமும் நிலவிய நாடு. விதியின் அபூர்வமான விளையாட்டுகளில் ஒன்றாக, ஆட்சியதிகாரம் சிறுபான்மையினர் வசமே காலங்காலமாக இருந்து வந்தது. பெரும்பாலான நகரங்களில் அவர்களே வசித்தனர். விளைவு, தீராத அமைதியின்மை நாடு முழுவதும் பரவியிருந்தது. நாட்டின் நகரங்களில் பரவலாகப் படுகொலைகள் நிகழ்ந்தவண்ணமிருந்தன. நம்மூரில் காவல்துறையின் பிரசன்னம் மாதிரி அங்கே அத்தனை நகரங்களிலும் ராணுவத்தின் நடமாட்டம் மிக அதிகமாம்.

ஆனால், அவ்வளவு  பதற்றம் நிலவும் நாடு என்பது முதல் பார்வைக்குக் கொஞ்சம் கூடத் தெரியாது. தூதரக அதிகாரி ஒருவருடன் காலைச் சிற்றுண்டியோடு  பேசிக்கொண்டிருக்கையில்  சொன்னாராம்:

 ‘இந்த அமைதியின்மையின் பின்புலம், ஆட்சி அதிகாரத்துக்கான போட்டி அல்ல.  உள்நாட்டு நிலவரத்தைக் குழப்பி மீன் பிடிக்க நினைக்கும் வல்லரசுக்கு யார் அதிக நெருக்கமாக இருந்து கனிமவளத்தைச் சுரண்டித் தருவது என்பதையொட்டிய தகராறு மட்டுமே இல்லையே, உலக ஊடகங்கள் தரும் செய்திகள், ஒரே மதத்தின் இரு பிரிவுகளுக் கிடையில் பிரச்சினை என்றல்லவா சொல்கின்றன?

மனிதக் குழுக்களுக்கிடையிலான விரோதங்களில் கடவுள் எங்கே வந்தார்? பார்க்கப்போனால், இந்த மாதிரி உள்நாட்டு யுத்தங்களில், பாவம், அவர்தான் முதல் பலியாவார்…’

அதிகாரி சிரித்தாராம். எதிர்ச்சுவரில் மாட்டியிருந்த நேர்த்தியான புகைப்படத்தில்,  தேசத்தின் மலைத்தொடரில் உள்ள குன்றுகள் நாலைந்து பறவைப்பார்வையில் பிடிபட்டிருந்தன.  பசேலென்று மரகதமாய் ஒளிர்ந்த ஒவ்வொரு குன்றும் ஒவ்வொரு எரிமலை போலப் பட்டதாம் ஆதி சாருக்கு. தூதரக அதிகாரியிடம் சொன்னார். அவர் மீண்டும் சிரித்தபடி தலையசைத்துவிட்டு,

 ‘இல்லையில்லை, ஒவ்வொன்றும் ஒவ்வொரு ராட்சத வெடிகுண்டு. ‘என்றார்.

அங்கே போகக் காரணமான  அலுவல் முடிந்த தினத்தின் சாயங்கால நேரம். ஆதி சார் தங்கியிருந்த விடுதி சிறுபான்மையினர் பெருவாரியாய்  வசிக்கும் பகுதியில் அமைந்திருந்தது. நட்சத்திர வசதிகள் கொண்ட விடுதி.  உணவும் மதுவும் தூதரகச் செலவில் அங்கேயே கிடைக்கும் தான்.  ஆனால், இவருக்கு வெளியே போகலாம் என்று தோன்றியது.

 “ஒவ்வொரு கணமும் வந்துசேர்வதே உங்களை எங்கோ இழுத்துக்கொண்டு போகத்தான்  க்ருஷ்ணன். ஆனால், ஸ்தூலமாக நகர்வதை மட்டுமே உணர்கிற அளவு, சிலவேளைகளில் அதையும்கூட உணராத அளவு, புலன்களின் தளையில் சிக்குண்டிருக்கிறது மனித மனம்…”

புகையை ஆழ்ந்து இழுத்தார். நீண்ட பெருமூச்சாக வெளியேறியது அது. உண்மையில், அவர் சொல்லும் சம்பவத்தைவிட, இந்த மாதிரி வாக்கியங்களில் எனக்கு ஈர்ப்பு அதிகம். கூடுமானவரை அவற்றை, அவருடைய ஆங்கில அமைப்பிலேயே, வீட்டில் வந்து எழுதி வைத்துக்கொள்வேன்…

 ஆயிற்றா, காலாற நடந்துவரக் கிளம்பினார் ஆதி சார். நடக்கும்போது ஏதோவொரு ஹிந்திப்பாட்டின் மெட்டு நினைவு வந்துவிட்டது. தமக்கு மட்டும் கேட்கிற மாதிரி சீட்டியடித்துக்கொண்டே நடந்தார்.

 “அப்படியொரு பொழுது சாமான்யத்தில் கிடைத்துவிடாது க்ருஷ்ணன். உடம்பும் மனமும் சருகாய் மிதக்க, அந்த அந்திப்பொழுதின் மஞ்சள் வெளிச்சமும், இதமான காற்றும் நகரின்மீது ஒருவித மாயக் கம்பளத்தை விரித்திருந்தது. அதன்மீது ஏறி, எங்கும் போகாமலே எங்கெங்கும் போய்விட முடியும் என்று பட்டது எனக்கு…”

அந்த மாலைப்பொழுதின் கிறக்கம் இப்போதும் அவருடைய கண்களில் ஒரு துளி ஒட்டியிருந்தது…

மிகுந்த கலையுணர்வுடன் உருவாக்கப்பட்ட மேஜைகளும் நாற்காலிகளும் கிடந்த மதுக்கூடம் ஒன்று எதிர்ப்பட்டது. சென்று உட்கார்ந்தார் – பரபரப்பான சாலையின் கரையாக அமைந்த நடைபாதையின் பகுதியாகவே தென்பட்ட வெளிவராந்தாவில்.

எதிர்ச்சாரியில் பிரம்மாண்டமான, சிறு நகரம் போன்ற,  வணிகவளாகம் இருந்தது. கறுப்பு நிறக் கறையான்கள் போலப் போய் வந்துகொண்டிருந்த ஜனங்களை வேடிக்கை பார்த்தபடி, குவளை குவளையாக அருந்திக்கொண்டிருந்தார். மெல்லமெல்ல இருளும் குளிரும் இறங்கி வருகின்றன. ஒரு மிடறுக்கும் இன்னொன்றுக்கும் இடையே ஒரு துளி சாந்தம் சொட்டி அந்த வேளையினுள் ஒருவித அமரத்தன்மையை நிரப்பியது. ’சாயங்கால வெளிச்சம் சகலத்தின் மீதும் ஸ்வர்ணத்தை உருக்கி ஊற்றியிருந்தது’ என்றார் ஆதி சார்.

 “அது ஸ்வர்ணமில்லை, கனலும் தீப்பிழம்பின் நிறம் என்பதை என்னால் அப்போது கொஞ்சம்கூட உணரமுடியாமல் போயிற்றே க்ருஷ்ணன்…” என்று, அரற்றும் குரலில் சொன்னார்.

அந்தத் தருணம் முழுக்க முழுக்கப் புவிவாழ்வுக்கு வெளியில் நிகழ்ந்து கொண்டிருந்தது. சுபிட்சமும் சுமுகமும் ஆசுவாசமும் புவிமீது வந்து இறங்கியாகிவிட்டது – அபூர்வமான பிரியத்தின்பேரில், பூமிப்பரப்பில் ஆகாயம் கொண்டுவந்து  கொட்டிய பொக்கிஷம்  அது. சமாதானத்தின் வேளை.  அவரவர் போக்கில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருப்பவர்கள், கணநேரம் நின்று கவனித்தால் போதும் – அந்த வேளை தரும்  போதையினுள் அமிழ்ந்துதான் ஆகவேண்டும். தப்புவதற்கு வாய்ப்பேயில்லை; மதமாவது மண்ணாங்கட்டியாவது, நிம்மதியைவிடப் பெரிய வரத்தை எந்தக் கடவுளால் கொடுத்து விட முடியும்   என்று ஆதி சாருக்குத் தோன்றியதாம் – உலகத் தரமான உள்ளூர் மதுவகையின் கிறுகிறுப்பு தமக்குள் நிரம்பியிருந்ததால்கூட அப்படித் தோன்றியிருக்கலாம் என்றார்.

 இந்த மயக்கத்தில் தமது கைப்பை மடியைவிட்டு நழுவிக் கீழே விழுந்திருந்ததைக்கூடக் கவனிக்கவில்லையாம். பின்புறமிருந்து இவரைத் தாண்டிச் சென்ற இளைஞன், ஒரு கணம் நின்றான்.  அசாதாரணமான கனம் தெரிந்த முதுகுப்பையை மாட்டியிருந்தவன், சாவதானமாகக் குனிந்து கைப்பையை எடுத்து இவரிடம் நீட்டினான். சீராகக் கத்தரிக்கப்பட்டு, முகம் முழுக்க அடர்ந்திருந்த தேனடைத் தாடி, அவனுடைய புன்சிரிப்பை இன்னும் பிரகாசமானதாய், ஆக்கியது. அவனைப் பார்க்கும் யாருக்குமே சந்தோஷம் தொற்றிவிடும். தேவதூதன் மாதிரி இவருக்குத் தென்பட்டானாம் – பின்னே,  பாஸ்போர்ட், விசா, பண அட்டைகள், மொபைல்ஃபோன், பயணம் முடியும்வரை சில்லறைத் தேவைகளுக்கான அந்த ஊர்க் கரன்ஸி  என்று ஏகப்பட்டவை இருந்த பை அது.

 புன்சிரிப்பு மாத்திரமல்ல, விவரிக்க முடியாத கனிவும் வாஞ்சையும் வசீகரமும் நிரம்பிய  முகம் அது. அடங்கிய குரலில் இவர் தெரிவித்த நன்றியைக் காதில் வாங்காதவன் போல அமரிக்கையாகத் தெருவில் இறங்கி, வணிகவளாகத்தை நோக்கி சாவதானமாக நடந்து போனான்.

ஆனால், இடுப்பை வளைத்துத் தரைநோக்கிக் குனிந்தவன், அத்தனை பொறுமையாகவும், மெதுவாகவும் நிமிர்ந்தது ஏன் என்று இவருக்குள் ஒரு கேள்வி எழுந்ததாம். அவனுடைய உடல்வாகுக்குப் பொருத்தமில்லாத மந்தம் அவனுடைய அசைவுகளில் இருந்ததோ என்றும் தோன்றியதாம். தனது  தொழில்சார்ந்து ஐயங்களை உற்பத்தி செய்யும்  தனது அனிச்சையைத் தானே கடிந்துகொண்டது மனம்.

அப்புறம், சில விநாடிகளிலேயே அது  மறந்துபோனது. காந்தம் போன்ற  முகமும், அது தந்த நிறைவும் கூட   மறந்து போயின. ஆனால், வாழ்நாள் முழுக்கத் தமக்குள் பீடித்திருக்கப்  போகும் முகம் அது  என்று தெரிவதற்கு, மறுநாள் பொழுது விடிய வேண்டியிருந்தது. அதற்குள் என்னவெல்லாம் நடந்துவிட்டது…

 “இன்னமும் நடுராத்திரிலெ அந்த முகம் ஞாபகம் வந்திருது க்ருஷ்ணன்.”

 “அய்யோ, எவ்வளவு பிரியமாச் சிரிச்சான்ங்கிறீங்க? அந்தப் பிரியத்தெ நெனச்சா அவ்வளவு பயம்மா இருக்கும்…”

இன்னும் இரண்டு ரவுண்டுகள்  மது வரவழைத்து அருந்தி முடித்த மாத்திரத்தில், மாபெரும் வெடியோசை எழும்பி நகரை நிரப்பியது. உலக உருண்டையே வெடித்துப் பிளந்து விட்டதோ என்கிற மாதிரி இருந்ததாம். சட்டென்று ஆகாயத்தைத் தீண்டும் வேகத்துடன்  தீச்சுவாலைகளும், அவற்றைத் துல்லியமாகப் பார்க்கவிடாத கரும்புகையும் ஏக காலத்தில் உயர்ந்தன. பொசுங்கும் நாற்றம் மூச்சடைக்க வைத்தது.

வீதியில் மிரண்டோடிய ஜனக்கூட்டத்துடன் தாமும் எழுந்தோடினார் ஆதி சார்.  முறுக்கிய கயிறு அறுந்த மாதிரி போதை சட்டென்று இறங்கிவிட்டது. எந்தத் திக்கில் ஓடுகிறோம் என்ற கவனம் இல்லை; குடித்ததற்கான பணத்தைச் செலுத்த அவகாசமில்லை. அதுபற்றிய குற்றவுணர்ச்சியும் இல்லை. மதுக்கூடச் சிப்பந்திகளும் ஓடியிருப்பார்கள். ஓங்கி உயர்ந்து நின்ற வணிக வளாகம், வெறும் காறைத்துண்டுகளாகச் சரிவதைப் பார்த்தபடியே ஓடினார். இடையில் குறுக்கிட்ட சந்தியில் இடப்புறம்  திரும்பச் சொன்னது உள்ளுணர்வு. காலில் ஏதோ இடறுகிறதே என்று பார்த்தால், முழங்கையிலிருந்து துண்டிக்கப்பட்ட, அழகான கைக்கடிகாரம் அணிந்த, பெண் கரம். ரத்தப் பிசுபிசுப்பு இன்னமும் உலர்ந்திருக்கவில்லை.  வெகுதூரம் பறந்த ஆயாசத்தால் சலனமிழந்த பறவை போலக் கிடந்தது.

அறைக்குப் போய்ச் சேரும்வரை இவருடைய ஓட்டம் அடங்கவில்லை. உள்ளுக்குள் உயர்ந்திருந்த படபடப்பு, கழிவறைக் கோப்பையில் ஓங்கரித்து வாந்தியெடுத்த பிறகும் குறையவில்லை. அபாரமான கிளுகிளுப்புத் தந்த மது முழுவதும், பார்க்கவே சகிக்காத, நாற்றமெடுக்கும் மஞ்சள் திரவமாகக் கோப்பையில் நிரம்பியதைக் கையாலாகாமல் பார்த்தபடி குனிந்து நின்றிருந்தாராம்…

ஓரிரு கணங்கள் தமக்குள் ஆழ்ந்து மௌனமாய் இருந்தவர்,  ஆழ்ந்த பெருமூச்சு ஒன்றை விடுத்துவிட்டு,

 “வாங்க போவம்.”என்று நடந்தார்.

            காரில் ஏறும்வரை, பின்னர் வழக்கத்தைவிட மெதுவாக  அதைச் செலுத்தும்வரை, ரயில் நிலையக் கட்டடம் பார்வைக்குத் தென்படும்வரை, எதுவும் பேசாமல்  வந்தவர், அவசரமான குரலில் சொன்னார்:

 “மறுநாள் நியூஸ்பேப்பர்லே, தலைப்புச்செய்திக்குக் கீழே, சிசிடிவி பதிவை ஃபோட்டோக்களாகப் போட்டிருந்தாங்க க்ருஷ்ணன். அந்த முகத்தை நான் அவ்வளவு கிட்டத்தில் பார்த்துத் தொலைச்சிருக்கக் கூடாது…”

என்னை இறக்கி விட்டுவிட்டு விலகி நகர்ந்த காரை, ஓரிரு கணங்கள் வெறித்துப் பார்த்தபடி நின்றேன். சென்னையின் மிகப் பரபரப்பான சாலைகளில் ஒன்று அது. சாலையைக் கடப்பதற்கே சுரங்கப்பாதையைப் பயன்படுத்துமளவு நெரிசல் கொண்டது. அத்தனை வாகனங்களுக்கும் மத்தியில் ஆதி சாரின் கார் தனியாக ஊர்கிறது என்று தோன்றியது எனக்கு.

அவர் வெளிப்படையாகச் சொல்லவில்லை என்றாலும், இதையும் எழுதக்கூடாது என்ற நிபந்தனை இருக்கிறதுதானே. கடைசிவரை எழுதியிருக்கவும் மாட்டேன், நம்பிக்கை துரோகம் செய்யலாகுமா? ஆனால், இலங்கையில் நடந்ததும், அதைப்பற்றி செய்தி ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் கணந்தோறும் ஏதேதோ தகவல்களும் பின் விளைவுகளும் முன்கதைகளும் வெளியாகியவண்ணம் இருக்கும்போது, ஆதி சாரும் அவர் சொன்ன சம்பவமும் அதிகப்படி சுமையாகக் கனத்தன. சரி, அவர் எந்த அடையாளமுமே குறிப்பிடாமல்தானே இதைச் சொன்னார்; அப்படியே திருப்பிச் சொல்வதில் பாதகமில்லை என்று தோன்றியது…


தற்கப்புறம், ஒரு தடவையோ இரண்டு தடவையோதான் நாங்கள் சந்தித்திருந்தோம். ஒருநாள் காலை, ஆங்கிலத் தினசரியின் நீத்தார் அஞ்சலிப் பகுதியில் ஆதிவராஹன் சாரின் புகைப்படத்தைப் பார்த்து அதிர்ந்தேன்.  அவருடைய சேமிப்பு, ஓய்வூதிய,  வைப்புக் கணக்குகளை முடித்து, தொகையைத் தங்களிடம் ஒப்படைக்குமாறு கோரி, ஸ்தாணுநாதனும் சுகதகுமாரியும் (இளையவன் தகனம் முடிந்த அன்றே ஸ்வீடன் திரும்பிவிட்டானாம்) கிளைக்கு வந்தபோது விசாரித்துத் தெரிந்துகொண்டேன். சார் இறந்த விதம் பற்றியும், அன்று காலையில்கூட என்னைப் பற்றித் தமது மனைவியிடம் குறிப்பிட்டார் என்பது பற்றியும் சொன்னார்கள். என்ன சொன்னார் என்று கேட்க, சுய நாகரிகம் இடந்தரவில்லை.

 ஆனால், அன்று பகல் முழுக்கவும், அடுத்துவந்த ஐந்தாறு நாட்களுக்கும் ஆதி சார்  ஞாபகம் என்னைச் சுற்றிச்சுற்றி வந்தது – காலை நடையில், துரத்தத் துரத்த முகத்தை நச்சரிக்கும் ஈபோல. விதவிதமான உரையாடல்கள் மேலெழும்பியவாறிருந்தன;  இப்போது மாதிரியே…

காவேரிக்கரை ஊருக்கு அடிக்கடி போய்வருவார். ஒரு தடவை போனபோது, நாட்கணக்கில் தங்க வேண்டியதானது. வாரிசுகள் இல்லாத பெரியப்பா ஒருவர் இறந்து போயிருந்தார். இறுதிக் கிரியைகளை இவர்தான் செய்யவேண்டும் என்பது அவருடைய ஆயுட்கால விருப்பம். ஏழ்மையான குடும்பப் பின்னணி கொண்டவராயிற்றா, ஆதி சார் அந்தப் பெரியப்பாவின் தயவில்தான் படித்துப் பட்டம் பெற்றிருந்தார். அவர் இவரைச் செல்லமாக,

 ‘வாடா மோனே, சிவக்காடு! ‘ என்றுதான் கூப்பிடவே செய்வாராம்.

சார் நாத்திக மனோபாவம் கொண்டவர். ஆனால், பெரியப்பாவுக்குக் குல ஆசாரப்படி கிரியைகள் செய்து வழியனுப்பத் தீர்மானித்தார்.

 “ஆமா, க்ருஷ்ணன், வாழ்க்கெ முளுக்க கஷ்டப்பட்டு ஆத்திகரா இருந்த மனுஷனெ, செத்ததுக்கப்பறம் நாத்திகராக்குறது ஞாயமா, சொல்லுங்க?” என்று சிரித்துக்கொண்டே புகையை  உறிஞ்சினார்.

இவருடைய வகுப்புத்தோழர் தான்  புரோகிதராக வந்திருக்கிறார். எரிப்பது முதல், சுபகாரியம் வரை அங்கே இருந்த நாட்களில்  தினசரி சந்தித்திருக்கிறார்கள்.

 “அவனோடெ பேசிக்கிட்டுருக்கும் போது, நானும் பழைய ஆளாயிட்டேன்னு தோணுச்சு க்ருஷ்ணன். காவிரி கரெபொரண்டு ஓடின நாட்களுக்கு மனசு திரும்பிப் போயிரும்.”

புரோகித நண்பரின் தகப்பனாரும், ஆதிசாரின் பெரியப்பாவும் நெருங்கிய நண்பர்கள். இன்னொரு கூட்டாளியும் இருந்தார். உள்ளூரில் மிகப்பெரிய  கல்லூரி நடத்திவந்தார். அந்தக் கல்லூரியில்தான் சார் படித்ததே. பிடிவாதமான நாத்திகர். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அதை வெளிப்படையாய்த் தெரியப்படுத்தவும் செய்வார். ஆனால், கல்லூரியில் தினசரி கடவுள் வாழ்த்தும், உரிய காலங்களில் சரஸ்வதி பூஜை மாதிரியான வைபவங்களும் தவறாமல் நடக்கும்.

வியாபாரத் தலம் என்றால் சில சமரசங்கள் இருக்கத்தானே செய்யும் என்று யாராவது நினைத்தால், அது தவறு. அவருக்கு இருந்த எண்ணற்ற வணிகங்கள் ஈட்டித் தந்த லாபத்தில் பெரும்பங்கு இந்தக் கல்லூரியை நடத்துவதில் செலவாகி வந்தது;  வட்டாரத்திலேயே மிகக் குறைந்த கல்விக் கட்டணமும், வறிய மாணவர்களுக்கு அவர்கள் கனவிலும் நினைத்திராத சலுகைகளும் வழங்கிய நிறுவனம் அது. தவிர, அந்த ’நிஜமான கல்வித்தந்தை’ (ஒவ்வொரு முறையும் ஆதி சார் அப்படித்தான் குறிப்பிடுவார்) நண்பர்களிடம் ஒருதடவை சொன்னாராம்:

 ‘இங்கே நல்ல தரத்துலெ பாடம் சொல்லித்தர ஏற்பாடாயிருக்கு. உரிய விதத்துலே புத்தி வளர்றவன், தானாவே நம்ம வளிக்கி வந்துறப்போறான்! ‘

அப்பேர்ப்பட்ட மனிதர், நெடுஞ்சாலைக் கார்ப் பயணத்தின்போது, தறிகெட்ட வேகத்தில் வந்த அரசுப் பேருந்து மோதியதால், தலத்திலேயே மாண்டு போனார். பின்னிருக்கையில் அமர்ந்து உறங்கிக்கொண்டு வந்தாராம். உறங்கியநிலையிலேயே மீட்டிருக்கிறார்கள்.   அன்று காலைதான் ஓர் ஐரோப்பிய நாட்டிலிருந்து சென்னை திரும்பியிருந்த ஆதி சார், விமான நிலையத்திலிருந்தே  காரில் கிளம்பிப்போனார் – அஞ்சலி செலுத்த.

 புரோகித நண்பரின் வீட்டுக்குப் போய் அவரோடு சேர்ந்து போவதாகத் திட்டம். படுத்த படுக்கையாய் இருந்த, அதற்கப்புறமும் நாலைந்து வருடம் இழுத்துப் பறித்துக் கொண்டு  கிடந்துவிட்டுப் போய்ச் சேர்ந்த  சாஸ்திரி, இவரிடம் வாஞ்சையாகப் பேசினார்:

 “என்னடா, நாடுநாடாப் போயிண்டிருக்கியாமே? சகடயோகக்காரனா நீ?! ஆம்படையா, கொழந்தைகள்லாம் சௌரியமா இருக்காளா? “

நண்பர் வரும்வரை கிழவருடன் பேசிக்கொண்டிருந்தார்.

  “…ஆனாலும் ஒரு விஷயம் புரியவே மாட்டேங்கறதுடா ஆதி. கலியனெப் பாரு, வாழ் நாள் முழுக்க நாஸ்திகனா இருந்தான். இமைக்கற நேரத்துலே, இன்ன நடக்கறதுன்னு தெரியறத்துக்கு மின்னாடியே போய்ச்சேந்துட்டான். ’வலிக்கறதே’ன்னு நினைக்கக்கூட அவகாசம் இருந்துருக்காது. நாம் பாரு, விவரம் தெரிஞ்ச நாள் லேர்ந்து பூஜையும் புனஸ்காரமுமா இருக்கேன். இந்தோ, கக்கூஸ் போறதுக்குக் கூடப் பொறத்தியார் ஆதரவு வேண்டியிருக்கு. இன்னும் எத்தனைநாள் படப் போறேனோ…. “

மதியவேளை நியமத்தை முடித்துவிட்டு, தோள்துண்டில் கையைத் துடைத்துக்கொண்டே வந்த நண்பர் (அவருடைய பெயரைச் சொல்வதில் எனக்கு ஒரு தயக்கமும் இல்லை – ஆனால், என்னைத் தன் அந்தரங்க நண்பன் என்று அடிக்கடி குறிப்பிடும் ஆதி சார், மறந்துகூட இன்னார் என்று சொல்லவில்லையே.)

 “அதுலெ ஒரு தர்க்கம் இருக்கத்தான் சேயறதுப்பா. நீ பக்திமானா இருந்தது சம்பாத்தியத்துக்கும் சேத்து. ஒன்னைக் காட்டிலும் அவர்தான் அதிக நேரம் ஈச்வர ஸ்மரணையோட இருந்திருப்பர்…! “

ஆதி சார் பேசும்போது பிராமணச் சொற்கள் மலையாளத் தன்மையோடும் சமஸ்கிருத அழுத்தத்தோடும் ஒலிப்பது எனக்கு சுவாரசியமாக இருக்கும்


           னால், மேற்சொன்னவற்றையெல்லாம் விட, அவர் சொன்ன இன்னொரு சம்பவம் தான் இன்றுவரை ஜீரணிக்கமுடியாமல் கனக்கிறது. இந்த நூற்றாண்டை விழித்தெழ முடியாமல் செய்யும் அடுக்குப் போர்வைகள் போல எத்தனை நூற்றாண்டுகள் இதன்மீது படிந்திருக்கின்றன என்று தோன்றி, கொஞ்சநேரம் மூச்சு முட்டியது.  ஆழ்ந்த பெருமூச்சு ஒன்றை விடுத்து சமனப்படுத்திக்கொள்கிறேன்…

ஆதி வராஹன் சாரின் சொந்த ஊர் காவிரிக்கரையில் உள்ள சிறுநகரம். உண்மையில் அது அவருடைய பூர்வீக ஊர் இல்லை. அறிமுகமான காலத்தில், அவருடைய உச்சரிப்பில் இருந்த அழுத்தமான மலையாள வாசனையைக் கண்டு, கேட்டேன்:

 “சாருக்குக் கேரளாவா!”

 “எப்பிடிக் கண்டுபிடிச்சீங்க? பேச்சிலே தெரியுதோ?!…” சிரித்தார்.

”…ஏழெட்டுத் தலைமுறைக்கி மின்னாடி, மாமாங்கம் பாக்க வந்த குடும்பம் திரும்பிப் போகல்லியாம். உள்ளூர் மடத்திலே சமையக்காரராச் சேந்திருக்கார் எங்க எள்ளுத்தாத்தாவோட எள்ளுத்தாத்தா. ஆனா, பாஷையோடெ வாசனை மட்டும் குடும்பத்துக்குள்ளே தங்கீட்டுது. இங்கே தமிழ்நாட்டுலே இருந்தாலும், பொண்ணு குடுக்குறது, எடுக்குறது எல்லாமே கேரளாவுலேர்ந்துதான்! ஆமாம், எங்க வம்சமே, ’நினைவில் காடுள்ள மிருகம்’தான்…..!!”

என்று உரத்துச் சிரித்தார்.

 “அதெப்பிடி சார். திருவிழாப் பாக்க வந்த இடத்துலே நிரந்தரமா செட்டில் ஆனாங்க?”

கொஞ்சநேரம் கண்மூடி இருந்தார். பிறகு, ஆழ்ந்த குரலில் சொன்னார்:

 “அந்த நாள்லெ காவேரிக்கரை பச்சுனு இருந்துருக்கும். அவ்வளவு செழிப்பு.  ஆனா, கேரளாவுலே இல்லாத பசுமையா, செழுமையா? கடன் தொல்லை தாங்கமுடியாமெப் போயிட்டதுங்குறதுதான் நெஜமான காரணம்னு எங்க தாத்தா சொல்லுவார்…”

ஆதி சார் சொன்னதைச் சொல்வதற்கு முன்னால் ஒரு சிறு குறிப்பு தந்துவிடுகிறேன். ஒவ்வொரு முறையும் புரோகித நண்பர் என்று நீளமாகச் சொல்வதற்கு அலுப்பாக இருக்கிறது. இனி வரும் வாக்கியங்களில் ’நண்பர்’ என்று மட்டுமே சொல்லிச் செல்கிறேன்…

பணி ஓய்வு பெறுவதற்கு முந்தைய வருடம், குடும்பத்தோடு பூர்விக ஊருக்குப் போனார் ஆதி சார். இளைய மகன் மட்டும் வரவில்லை – அவன் ஒரு ஸ்வீடிஷ் பெண்ணை மணந்து அங்கேயே குடியுரிமையும் வாங்கிவிட்டவன்.

இங்கே வர்றதுக்கும் வாரக்கணக்குலே தங்குறதுக்கும் அவ்வளவாப் பிரியப்பட மாட்டான். ’நம்மளையெல்லாம் ஏதோ ஆதிவாசிகள் ன்னு நினைக்கிறானோப்பா?!’ ன்னு பெரியவன் சொல்லிச் சிரிப்பான்!

என்று தானும் சிரித்தபடி சொன்னார் ஆதி சார். ஆனாலும், அந்நியனாகிவிட்ட மகனை நினைத்தோ என்னவோ, அவருடைய கண்களில் ஒரு பளபளப்பு இருந்தது அல்லது எனக்கு அப்படித் தெரிந்தது.

ஊருக்குப் போன அன்று சாயங்காலம் நண்பரைப் பார்க்கப் போனார். பழைய ஞாபகங்களோடு ஊரைப் பொருத்திக்கொள்வது மிகவும் சிரமமாய் இருந்ததாம்., அன்றிருந்த அதே புழுதியுடன் இருந்தாலும், என்னென்னவோ மாற்றங்கள் வந்துவிட்டன என்றும் தோன்றியதாம். அவற்றைச் சட்டை செய்வதில்லை என்று  பிடிவாதமாக இருக்க முயல்கிறது  ஊர் என்றும் தோன்றியது…

நடுக்கூடத்தில், குடுமியும் வேஷ்டியும் தரித்த இரண்டு சின்னஞ்சிறுவர்கள் அமர்ந்து ஐப்பியெல் கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருந்தனர். நண்பரின் பேரன்கள் வயதிருக்கும். அவர் தரையில் அர்த்தபத்மாசனமிட்டு அமர்ந்து, கையிலிருந்த ஸ்மார்ட் ஃபோனைத் துழாவிக்கொண்டிருந்தார். வராந்தாவில் நிழலாடுவதைப் பார்த்து நிமிர்ந்தவர்,

 “யாரு?”

என்றார். வெளிச்சத்துக்குள் இவர் வந்ததும்,

 “அடேடே. ஆதீ!  என்னடா இது, சொல்லாமெக் கொள்ளாமே? பாகீ, இஞ்ச பாரு, யாரு வந்துருக்கான்னு…!”

என்றார். இதற்கிடையில், அவருடைய குரல் கேட்டு, பையன்கள் இருவரும் திரும்பிப் பார்த்தனர். உடனே மறுபடியும் திரும்பி, கிரிக்கெட்டில் அமிழ்ந்தனர். பக்கவாட்டில், இருட்டும் சுட்ட அப்பளம் லேசாகக் கரிந்த மணமும் மண்டியிருந்த சமையலறைக்குள்ளிருந்து நண்பரின் மனைவி வெளியே வந்தார் – முன்னரே மூடியிருந்த மடிசார்ப் புடவைத் தலைப்பை இன்னமும் இழுத்து மூடியபடி.

 “வாங்கோ. எவ்ளோ நாளாச்சு? கொழந்தேள் மாமி எல்லாரும் விச்சாருக்காளா?”

திருநெல்வேலியில் பிறந்து வளர்ந்தவள் அந்த அம்மாள். இவர் தலையாட்டினார். இதற்குள் நண்பருக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. கருவியில்லாமலே கேட்கும் அளவு உரத்துப் பேசினார்.

 “நானும் எத்தனையோ தேசம் போயிருக்கேன் க்ருஷ்ணன். மொபைல் ஃபோனை இவ்வளவு மோசமாகப் பயன்படுத்தும் இன்னொரு நாட்டைப் பார்த்ததேயில்லை. நாராச சங்கீதமோ, பலத்த உரையாடலோ காதில் விழாமல் இங்கே ஒரு பயணம் நீங்கள் மேற்கொள்ளவே முடியாது!” என்று ஏனோ ஆங்கிலத்தில் சொன்னார் ஆதி சார்.

 நண்பர் பேசி முடிக்கும் சமயத்தில், இரண்டாம் முறையாக சமையல்கட்டிலிருந்து வெளியே வந்தார் அந்த அம்மாள். கையில் பாக்கு மட்டைத் தட்டில் பலகாரங்களும், மறு கையில் காஃபித் தம்ளரும் இருந்தன. முன்பெல்லாம் எவர்சில்வர் தட்டில்தானே கொடுப்பார்கள் என்று மின்னல்போல ஓடிய யோசனையை அறுக்கிற மாதிரி, பாகீரதியின் வால் போல ஒரு சிறுமி ஒட்டிக்கொண்டு வந்தாள். பத்துவயது இருக்கலாம். மலர்ந்த அழகான கண்களால் கையில் இருந்த தண்ணீர்த் தம்ளரை உன்னிப்பாகப் பார்த்தபடி வந்தாள். முதல் பார்வைக்கே அந்த முகத்தின் சௌந்தரியம் ஆதி சாரை வெகுவாகக் கவர்ந்து விட்டதாம். அதைவிட, வயதுக்குப் பொருத்தமில்லாமல், அவள் அணிந்திருந்த ஏழுகல் தோடு. வைரமாய் இருக்கலாம் – அப்படி மின்னியது.

அந்த அம்மாள் தன் கையிலிருப்பவற்றைத் தரையில் வைப்பதற்குக் காத்திருந்து விட்டு, தம்ளரை வைத்தது குழந்தை. பிறகு, நண்பரின் அருகில் சென்று குடுமி போக மிச்சமிருந்த மொட்டைத்தலையைப் பிரியமாகத் தடவியது. குடுமியைத் தட்டி விளையாடியது. குழந்தையைத் தன்னோடு வாரி இறுக்கிக்கொண்டார் நண்பர்.  ஓரிரு கணங்கள் இருந்துவிட்டு, தன்னை விடுவித்துக்கொண்டு சமையலறைக்குள் குதித்தோடியது.

உள்ளூர்ப் பாடசாலையில் பாடம் சொல்லித்தருகிறார் என்பதால், நண்பரின் வீட்டில் சிறுவர்களைப் பார்ப்பது அதிசயமில்லை. ஆனால், பெண் வாரிசுகளே பிறக்காத வம்சம் – அங்கே ஒரு சிறுமியைப் பார்த்தது இவருக்குப் பெரிய ஆச்சரியமாய் இருந்ததாம்.  ரொம்ப நேரம் அடக்கிக்கொள்ள முடியவில்லை. நண்பரிடம் கேட்டுவிட வேண்டியதுதான்; இல்லாவிட்டால் உரையாடலில் கவனம் தோயாது என்று தோன்றியது. கேட்ட பின்புதான், இனிமேல் நண்பருடன் சகஜமாக உரையாடவே முடியாது என்பது தெரிய வந்தது. அவர் இயல்பாகச் சொன்னார்:

 “என் பேரன் காஞ்சிபுரத்திலே அத்யயனம் செய்கிறானில்லையா, அவனோட பார்யாள்தான் இவ… “

 ‘காதுகள் சரியாய்த்தான் கேட்கிறதா என்று ஒரு கணம் சந்தேகம் வந்துவிட்டது ‘ என்றார் ஆதி சார்.

 “ஆமாடா. என்ன அப்பிடி முழிக்கறே. போன மாசம்தான் பாணிக்கிரஹணம் பண்ணி அழைச்சினு வந்தோம். அக்கம் பக்கத்திலேயே யாருக்கும் தெரியாது. ஊர் உலகத்தோடெ நிலைமை அப்பிடித்தானே இருக்கு. அவனவன் ஸ்வதர்மத்தை நிம்மதியாய் அனுஷ்டிக்க முடியறதா. பால்ய விவாஹம்னு பத்துப்பேர் பொறப்புட்டு வந்துருவானே… குடும்பத்தோடெ உள்ளெபோய் யார் களி திங்கறது?!  நீ எனக்கு ஆப்தனாச்சேன்னு ஒங்கிட்டே சொன்னேன்.”

அதன் பிறகும் ஆதி சார் ஒரு கால்மணிநேரம் அங்கே இருந்தாராம். ஆனால், இன்னது பேசினோம் என்பதே மனதில் பதியவில்லை என்றார்.

இந்தச் சம்பவத்தைச் சொல்லும்போது அவருடைய முகத்தில் இருந்த பாவத்தை என்னெவென்று புரிந்துகொள்வது என்று இன்றுவரை புரியவில்லை எனக்கு. அவ்வளவு இருட்டு அவர் முகத்தில் படிந்து நான் பார்த்ததில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம்.

ஆனால், நான் பார்த்தறியாத ஒரு குழந்தையின் முகம் நான் பார்க்க நேரும் பெண் குழந்தைகள் அத்தனைபேர் முகத்திலும் இன்றுவரை பதிந்து பதிந்து விலகிக் கொண்டுதான் இருக்கிறது. அந்தப் பையன்களோடு உட்கார்ந்து ஐப்பியெல் பார்க்காமல், அவள் மட்டும் ஏன் அடுக்களையில் இருந்தாள் என்ற கேள்வியும்தான்.


  • யுவன் சந்திரசேகர்   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.