அக முகங்கள்

அன்று கல்லூரி வேலை நாளாகயிருந்தது. அதனால் ரயில்வே ஸ்டேஷனுக்குப் போவதற்காய் தேவகி டீச்சர் விடுப்பு எடுத்திருந்தாள். அலாரமெல்லாம் வைக்காமல் தானாகவே காலையில் தூங்கி எழுந்து, குளித்து, பாதி நரைத்த தலைமுடியை காய வைத்து, கிளம்பி வாடகைக் கார் வருவதற்காக காத்திருந்தாள். பதினொன்றே முக்கால் மணிக்குத்தான் மங்களாபுரம் மெயில் வரும். கடிகாரத்தின் முள் முன்னே போக மறுக்கிறது. சமீபத்தில் வெளியான அறிவியல் களஞ்சியத்தின் முதல் அத்தியாயத்தைப் பிரித்து வைத்து அதில் கண் ஓட்டினாள். அவ்வப்போது கடிகாரத்தைப் பார்த்தாள். நேரம் சட்டென துள்ளி ஓட வேண்டுமென்று நினைக்கும்போது அது மெதுவாகவே நகர்கிறது. அடிக்கடி நேரம் பார்ப்பதால் கடிகாரத்தின் முட்கள் இன்னுமின்னும் மெல்ல ஊர்ந்தபடியே இருக்கிறன. பார்க்காமல் இருக்கும் நேரத்தில்தான் முட்கள் பறக்கத் தொடங்குகின்றன.

கடைசியாக மாதவனின் டாக்ஸி வீட்டு வாசலில் வந்து நின்றது. அன்றைக்கு டாக்ஸி வேண்டுமென்று முன்பே சொல்லியிருந்தாள்.

“டீச்சர் மணி பத்தரையாயிடிச்சு”

மாதவன் ஒரு தடித்த பீடியைப் புகைத்தபடி பேசினான். அவன் புகைக்கும் பீடியிலிருந்து ஒரு பிரத்யேகமான நெடி வந்தது. சங்கு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது அவனுடைய அறையில் இப்படியான நெடி எப்போதும் உறைந்திருந்ததை தேவகியால் இப்போதும் உணரமுடிந்தது.

“மாதவா, நீ என்ன பீடிடா புடிக்கறே?”

மாதவனின் முகத்தில் ஒரு புன்முறுவல் படர்ந்தது. பிறகு குரல் தாழ்த்தி டீச்சரின் காதில் சொன்னான்.

“இதுக்குள்ள மருந்திருக்கு டீச்சர்”

“என்ன மருந்து மாதவா?”

“வெளிய சொல்லக்கூடாது, போலீஸ் புடிச்சுக்குவாங்க…அதுக்குள்ள கஞ்சா இருக்கு டீச்சர்”

“எனக்கது ஏற்கனவே தெரியும் மாதவா”

“டீச்சர் எனக்கு கஞ்சா அடிக்க கத்துக் கொடுத்தது யாருன்னு உங்களுக்குத் தெரியுமா?”

“சங்குதானே?”

“அவரேதான்”

மாதவனுக்கு சங்குவின் அப்பாவாக மதிக்கத்தக்க வயது. சங்கு சொல்லிக்கொடுத்தானாம் இவனுக்கு. ஆனால் அதில் பெரிதாய் ஒன்றும் தேவகி ஆச்சரியப்படவில்லை. மாதவனுக்கு மட்டுமல்ல, பலருக்கும் அவன் சொல்லிக்கொடுத்திருக்கலாம், யாருக்குத் தெரியும்.

“மங்களாபுரம் மெயில்லதானே வராரு?”

டாக்ஸி எடுப்பதற்கு முன்பாக மாதவன் சந்தேகத்துடன் கேட்டான்.

“அப்படித்தான் அவன் எழுதியிருந்தான்”

“வர்றது நிச்சயம்தானே?”

மாதவன் மீண்டும் கேட்டான். கடந்தமுறை சங்கு வந்த கதையை மாதவன் மறந்திருக்க வாய்ப்பில்லை. தேவகியும்தான். “நான் நாளைக்கு மங்களாபுரம் மெயிலில் ஊருக்கு வந்துவிடுவேன்” என்று மெட்ராஸிலிருந்து ஒரு தந்தி வந்திருந்தது. அன்றும் இதேபோல தேவகி கல்லூரியிலிருந்து விடுப்பெடுத்து ரயில் நிலையத்திற்குப் போனாள். வண்டி வந்து ஸ்டேஷனில் நின்று ஆட்களெல்லாம் இறங்கி, வண்டியின் அதிர்வு அடங்கியபோதும் சங்கு வரவில்லை.

“சாயங்கால சூப்பர் ஃபாஸ்டில் பாக்கலாம்” மாதவன் சொன்னான். மறுபடியும் மாலையில் ரயில் நிலையத்திற்கு வந்தபோது நல்ல மழை. ஊதல் காற்று வேறு அடித்துக் கொண்டிருந்தது. புடவையை இழுத்துப் போர்த்திக்கொண்டு காத்திருப்போர் அறையில் தேவகி டீச்சர் நின்றிருந்தாள். இரவு பதினொன்றரை சூப்பர் ஃபாஸ்ட் வண்டியும் வந்து தடதடத்து தன் இல்லாமையை சொல்லிவிட்டுப் போனது. சங்கு அதிலும் வரவில்லை. அதே மாதிரி இரண்டு நாட்கள் எல்லா வண்டிகளுக்கும் காத்திருந்தாள் தேவகி. சங்கு வரவில்லை. மூன்றாம் நாள் ரயில் நிலையத்திற்குப் போகவில்லை. எத்தனை நாட்கள் கல்லூரிக்கு விடுப்பு கொடுக்க முடியும்? ஆனால் அன்று மாலை கல்லூரியிலிருந்து வரும்போது சங்கு மிருதுவான பிளானல் துணியில் தைத்த சட்டை அணிந்து சிகரெட்டும் புகைத்துக்கொண்டு மழையை வேடிக்கை பார்த்தபடி வாசலில் உட்கார்ந்திருந்தான்.

“என்னாங்க டீச்சர், தனியா சிரிச்சுகிட்டிருக்கீங்க?”

“இல்ல மாதவா, போன தடவை சங்கு வந்ததை நெனச்சுப் பாத்தேன்”

“இந்த முறையும் அவரு நம்மள ஏமாத்திடுவாரா?”

“தெரியல, என்னவொரு நிம்மதின்னா இப்ப மழையில்ல, அதனால கொஞ்ச நேரம் சேந்து காத்திருக்கலாம்”

பளிச்சென்று விடிந்த நாள் அன்று. தெளிந்த வானம் நன்றாக வெளிச்சமேற்றிருந்தது. பூக்களை நித்திரையிலிருந்து உணர்த்த மட்டுமே வீசும் காற்று எப்போதும் ரம்மியமானது. அன்றும் அப்படித்தான்.

“டீச்சர், உங்ககிட்ட ஒண்ணு கேக்கணும் கேக்கணும்ணு தோணிகிட்டே இருக்கு”

“என்ன மாதவா?”

“நீங்க ஒண்ணும் நெனச்சுக்கமாட்டீங்கல்ல…”

“நீ எங்கிட்ட எதை வேணும்னாலும் கேக்கலாம்”

டீச்சர் தோளிலிருந்து நழுவி விழும் வெள்ளை வாயில் புடவையின் தலைப்பை சரி செய்தபடி சொன்னாள். மாதவன் வின்ட் ஸ்கிரீனில் வெளியே பார்த்துக்கொண்டே ஒரு நொடி மௌனம் காத்தான். அவன் என்ன கேட்கப் போகிறான் என்று ஆச்சரியத்துடன் கேள்விக்குறியானாள் தேவகி டீச்சர்.

“உங்க வீட்டில வேலை செஞ்சுகிட்டிருந்த அந்த வேலைக்கார பொண்ணு…”

“ ஒ…சாருவா?’’

“ஆமா, அவ இப்ப எங்க இருக்கா?”

டீச்சரின் கண்களில் இதுவரை துள்ளிக் கொண்டிருந்த சிரிப்பு சட்டென மறைந்துபோனது. அவளுடைய முகம் இளம் வாழையிலையின் நிறம் போல வெளிறியது.

“அவ அவங்க வீட்டுக்கே போயிட்டா மாதவா”

“ஏன் டீச்சர் அவ இப்ப போனா? என்ன காரணம்? ஊருல இருக்கறவங்க என்னென்னவோ பேசிக்கறாங்க.”

டீச்சர் சங்கடத்துடன் தலையை குனிந்துகொண்டார். சாரு அவள் மனதில் தவிர்க்க முடியாத ஒரு அற்புதமான பெண்ணாய் நிலைத்திருந்தவள். பன்னிரெண்டு வயதிலிருந்து தேவகி டீச்சருடனே வந்து தங்கிவிட்டாள். ஒரு வேலைக்கார பெண் என்று அவள் நினைக்கவேயில்லை. தன் வயிற்றில் பிறந்த மகளைப் போலவே சாரு அங்கு நடத்தப்பட்டாள். சொந்த மகளைப் போல…

“ஊரில இருக்கறவங்க சொல்றது நிஜம்தான் மாதவா”

மாதவன் அதிர்ந்து போனான். டீச்சர் இப்படி பளீரென வெட்டிப் பிளந்தது போல பேசுவாரென்று அவன் நினைக்கவேயில்லை.

“யாரை நீங்க சந்தேகப்படறீங்க டீச்சர்?”

“எவ்ளவோ கேட்டு பாத்திட்டேன், பாவம் அந்த பொண்ணு, சொல்ல மாட்டேங்கறா”

டீச்சர் பெருமூச்சு விட்டார். அவருடைய உற்சாகமும் துள்ளலும் தணிந்து குளிர்ந்தது. மனதின் வலி வெளித்தெரிய அமைதியானாள். பார்வை மட்டுமே வெளியில் மரங்களையும் ஆள்களையும் வாகனங்களையும் கடந்து போனது.

“இந்த நேரத்தில சங்கு இங்க இல்லாதது புண்ணியமாப் போச்சு”

மாதவன் தனக்குள் சொல்வது போல சொல்லிக் கொண்டான்.

“சங்கு அப்படி செய்வான்னு நீ நெனக்கிறியா மாதவா?”

“இல்ல டீச்சர், இல்லவேயில்ல, ஆனால் ஊரிலிருப்பவர்களின் வாய்க்கு பூட்டு போட நம்மால முடியுமா?

டாக்ஸி ரயில்வே ஸ்டேஷனுக்குள் நுழைந்திருந்தது.

“நான் கொஞ்சம் டீ குடிச்சிட்டு வரேன், உங்களுக்கு வேணுமா டீச்சர்?”

“வேண்டாம் மாதவா, நீ போயிட்டு வா. நான் இங்க இருக்கேன்”

மாதவன் இரண்டு கைகளாலும் வேட்டியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு பக்கத்திலிருந்த டீக்கடைக்குள்ளே போனான். இரண்டு காதிலும் பீடித் துண்டுகள். கஞ்சா நிறைத்த பீடி. அதை இப்படி வெளியே தெரியும்படி வைத்து உபயோகிக்கலாமா?

டீச்சர் பிளாட்ஃபார்ம் டிக்கெட் வாங்கிக் கொண்டு உள்ளே போனாள்.

“வாங்க டீச்சர், புது டைட்டில்ஸ் எல்லாம் வந்திருக்கு”

Art Courtesy : Yamini

பிளாட் ஃபார்மின் உள்ளேயிருக்கும் புத்தகக்கடைக்குள் போய் கோபி எடுத்து தந்த புத்தகங்களைப் பார்த்தாள். வய்லெட் லெட்யூக், நபக்கோவ், டெஸ்மண்ட் மோரிஸ்…. கோபி விஷயம் தெரிந்தவன். வேறெந்த ரயில் நிலையத்திலும் கிடைக்காத புத்தகங்கள் அவனிடம் இருக்கும்.

“இது ’லா பேட்டர்டு’ புத்தகத்தை எழுதியவர் எழுதியது,  ஒருவேளை நீங்க படிச்சிருக்கலாம்.”

வயலெட் லெட்யூக்கின் புத்தகத்தை எடுத்துக் கொடுத்தான் கோபி.

“அது லெஸ்பியன் கதைதானே கோபி?”

டீச்சர் கண்ணாடிக்குள்ளாக சிரித்தாள்.

“இந்த பெண்களுக்கு இதையெல்லாம் எழுத எப்படி தைரியம் வருது  டீச்சர்?”

கோபியின் கூட்டாளியும்  சங்குவின் கூட்டாளியுமான கஃபூர் ஆச்சரியமாய்க் கேட்டு மீண்டும் தொடர்ந்தான்.

“சங்கு இன்னக்கி வரான்ல்ல டீச்சர்?”

“ம்…மங்களாபுரம் மெயில்ல”

“எனக்கும் எழுதியிருந்தான்.”

கஃபூர் தன் பாக்கெட்டிலிருந்து கடிதத்தையெடுத்துக் காண்பித்தான்.

காத்திருப்போர் அறையில் போய் உட்கார்ந்து லெட்யூக்கின் புத்தகத்தில் கண் ஓட்டினாள். அதற்குள் தொலைவிலிருந்து ரயில் சத்தம் கேட்டது. ரயில் எப்போதும் நம்மை அதன் தூரத்தைப் பற்றி யோசிக்க வைக்கும். நகரங்களுக்கிடையிலான தூரம்… கண்டங்களுக்கிடையே பரந்து விரிந்திருக்கும் தூரம்… கோளங்களுக்கிடையேயுள்ள தூரம்….

“அம்மா..”

தோளில் கை வந்து விழுந்த பிறகுதான் தேவகி அவனைப் பார்த்தாள். அவளுடைய பதட்டம் கொஞ்சம் தணிந்தது. காதுகளிலிருந்து ரயிலின் சத்தம் மெல்ல தேய்ந்துப்போனது. எப்போதும் பெல்பாட்டம் பேண்ட் அணிந்து, பதிக் டிசைன் செய்த சட்டை போட்டு, கிருதா வளர்த்த சங்கு எங்கே காணாமலானான்.  வெள்ளை வேட்டியும் சட்டையும்… அடர்ந்த மீசையுமாக… இளம் சிவப்பு நிறம் படர்ந்த சாந்தமான கண்கள்… எங்கேயிருந்து வந்தது இந்த பக்குவம்? மகனை கண் நிறைய பார்த்த அம்மா நிறைந்து ததும்பினாள். நான் பார்க்கக் காத்திருந்த சங்கு இவன்தான்.. இவன்தான்…

“அம்மாவை வணங்குகிறேன்…”

“எதுக்கு மோனே?”

“நீங்க இப்ப பிரின்ஸிபால் ஆயிட்டிங்களே! அதனாலதாம்மா, உங்க லெட்டர் பொறப்படறதுக்கு முந்தின நாள்தான் கெடச்சது.”

“அம்மாக்கு பி.ஹெச்.டி இல்ல, அப்படியும் கெடச்சிடுச்சு மோனே,உன்னோட பாக்யமாகூட இருக்கலாம்.”

சங்குவின் கையைப் பிடித்தபடி தேவகி வெளியே வந்தாள். அவனோடு நடக்கும்போது தான் நடந்து நடந்து சிறியதாகிப் போனதாய் அவளுக்கு இப்போதெல்லாம் தோன்றுகிறது. என்னவொரு உயரம்! அவனுடைய அப்பா கூட அவ்வளவு உயரமில்லை. அவளும் அப்படியில்லை. பிறகெப்படி இப்படி வளர்ந்தான்!

”அப்போ சொன்ன வண்டியிலேயே வந்திட்டீங்க இல்ல?”

மாதவன் கார் கதவைத் திறந்தபடி கேட்டான். டீச்சர் முதலில் உள்ளே ஏறினாள். சங்கு பின்னால் ஏறும்போது மெல்லிய குரலில் ஒரு கள்ளச்சிரிப்புடன் சங்குவின் காதில் மாதவன் கேட்டான்.

“மருந்து ஏதாவது கொண்டு வந்திருக்கியா சங்கு? இந்த மாதவனை மறந்திடப்போறே”

“கஞ்சாவை நிறுத்திட்டேன் மாதவா”

“அப்பறம் இப்ப என்னா?”

“கஞ்சாவை விட நல்ல பொருள்.”

டீச்சர் சங்குவின் கையை இறுகப் பிடித்தாள். மயக்க மருந்துகளின் கிறக்கத்தில் ஆழ்ந்திருப்பவனை மீட்டெடுப்பது போல… காப்பாற்றுவது போல அந்த பிடி இறுகியிருந்தது.

“அப்ப சாயந்தரம் பாக்கலாமா?”

கோபியும் கஃபூரும் காரின் பக்கத்தில் வந்து நின்றார்கள். கார் மெல்ல ஊர்ந்து கிளம்பியது.

  • “நீ அம்மாக்கு என்ன கொண்டுவந்திருக்கடா மோனே?”

சங்கு குளித்து சாப்பிட்டு ஒரு சிகரெட்டைப் பிடித்தபடி அவனுடைய கட்டிலில் படுத்திருந்தபோது தேவகி கேட்டாள்.

இருபது வருடம் படுத்திருந்த கட்டில். எத்தனை முறை இந்தக் கட்டிலில் படுத்தபடி நான் சுயமைதுனம் செய்திருக்கிறேன்.. சங்கு நினைத்துப் பார்த்தான்.

“அம்மாக்கு ஒண்ணு வாங்கிட்டு வந்திருக்கேன்”

”என்னடா அது?”

“உங்களால யூகிக்கவே முடியாதும்மா.”

”புத்தகம் இல்லாம நீ வேற என்ன கொண்டு வந்திருப்பே?, அப்பறம் நானும் இன்னக்கி கோபியோட ஸ்டாலிலிருந்து ஒரு புத்தகம் வாங்கினேன் பாரு.”

“ஆன்டி நாவல். அம்மா இப்ப இதெல்லாம் படிக்கறீங்க இல்ல?”

சங்கு புத்தகத்தைத்  தள்ளிவைத்துவிட்டு எதையோ எடுத்துக் காண்பித்தபடி சொன்னான்.

“இதத்தான் நான் அம்மாக்காக கொண்டு வந்திருக்கேன்.”

பெட்டியிலிருந்து பாலித்தீன் பேப்பரில் சுற்றிய ஒரு பிடி பாங் எடுத்து வெளியே வைத்தான்.

“என்ன மோனே இது?”

“பாங்.”

“இதையா நீ எனக்கு கொண்டுவந்தே?” தேவகி டீச்சரின் முகம் வாடி சுருண்டது.

“நான் காஞ்சா அடிக்கறதையும் குடிக்கறதையும் நிறுத்திட்டேம்மா. இப்ப இது மட்டுந்தான்.”

“கஞ்சாவும் குடியும் நிறுத்திட்டு என்ன புண்ணியம், அதவிட மோசமில்லயா  இது?”

“பாங் என்னை மோட்சத்துக்கு கொண்டுபோய் சேர்க்கும்ன்னு நான் சொல்லலம்மா”

சங்கு அம்மாவின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டான்.

”ஆனால் பழைய முரட்டு குணத்திலிருந்து அது என்னைக் காப்பாற்றியிருக்கிறது. இப்ப என் வாழ்க்கைக்கு ஒரு பிடிப்பும் ஒழுங்குமிருக்கிறது. சரியான நேரத்துக்கு ஆபீஸுக்குப் போறேன். நல்லா வேலை செய்யறேன். சாயந்தரம் நேரா வீட்டுக்கு வரேன். ஒரு டம்ளர் பாங் குடிப்பேன். அப்பறம் சாப்பாடு செய்யறவரைக்கும் படிப்பேன். சாப்பாட்டுக்குப் பிறகு ரெண்டு மணி நேரம் டேப் ரிக்கார்டரில் பாட்டு கேப்பேன். காலைல உற்சாகமா எழுந்திருக்கிறேன். சுருக்கமா சொன்னா பாங் என்னை நிதானமாக்குதும்மா. நான் சின்ன வயசிலயிருந்தே எப்படி பதட்டமாயிருப்பேன்னு உங்களுக்குத்தான் தெரியுமே? நெனவு தெரிஞ்ச நாளிலயிருந்தே எனக்குள்ளிருக்கும் நிலை கொள்ளாமையை, அலைவுறுதலை…படபடப்பை… இதிலிருந்தெல்லாம் பாங் என்னைக் காப்பாற்றியிருக்கிறது. நான் இப்ப சந்தோஷமாயிருக்கேம்மா”

“எனக்கும் இத கேக்க சந்தோஷம் சங்கு, ஆனா மோனே…”

“அம்மா, நீங்க பயப்படாதீங்க. பாங் பல வருஷமா பயன்படுத்தினா சூப்பர் ஈகோ இல்லாமல் போயிடும்ன்னு நான் சமீபமா படிச்சேன். லௌகீக வாழ்க்கையிலிருந்து தப்பித்துவிடலாம். சமூகத்திலிருந்து தனியாயிடலாம். ஐ டோண்ட் மைண்டிட்… இதில்லாம வேற எந்த தப்பையும் பாங் செய்யாதும்மா.”

“ஆனாலும் மோனே…”

“மனதுக்கு நிம்மதிய தர்ற வேற எதையாவது நான் கண்டடையும்போது இத விட்டுடுவேன். அதுவரை மட்டுமே…”

சங்கு சட்டையை அவிழ்த்து, வேட்டியை மடித்துக் கட்டினான். அம்மாவுக்குப் பக்கத்தில் முட்டி போட்டு உட்கார்ந்து அவன் பாங் அரைக்கத் தொடங்கினான். தேவகி டீச்சர் அதையே பார்த்துக் கொண்டிருந்தாள். அரைத்தெடுத்த பாங்கினை ஒரு துணியில் வைத்து டம்ளரில் வடித்தெடுத்தான். பாலும் சக்கரையும் மிளகுத்தூளும் கலந்து கலக்கினான். நுரைத்தெழும் பானத்தை இரண்டு டம்ளர்களுக்கு மாற்றினான்.

“மோனே!”

“கொஞ்சம் ருசி பாரும்மா போதும். நான் பாங் குடிச்சிட்டு, அம்மா குடிக்காமலிருந்தா நம்ம பந்தம் பூர்ணமாகாதும்மா. அவன் டம்ளரை அம்மாவின் கையில் நிர்பந்தமாக பிடிக்க வைத்தான். அவனுடைய கண்களில் அம்மாவுடனான பிரியம் நிறைந்து ததும்பியது.

”சியர்ஸ்”

சங்கு டம்ளரை உயர்த்திப்பிடித்து ஒரே மூச்சில் முழுவதையும் குடித்தான். அம்மா முதலில் கொஞ்சம் உறிஞ்சினாள். சக்கரையும் பாலும் மிளகுத் தூளும்… என்னவொரு அருமையான ருசி… அவள் மீண்டும் ஒரு வாய் குடித்தாள். பிறகு மெல்ல முழுமையாய்க் குடித்து டம்ளரைக் கீழே வைத்தாள். என் எல்லாமுமான மகன்… என் தங்க மகன்… அவன் குடிப்பது இது… அப்ப நான் ஏன் அதைக் குடிக்க இவ்வளவு யோசிக்க வேண்டும்?

“அம்மா இந்த சேரில் உக்காருங்க”

அவள் அனுசரித்தாள். சங்கு அந்த சேரின் கைப்பிடி மேல் உட்கார்ந்து அம்மாவின் கழுத்தின்மேல் கையைப் போட்டபடி நெருங்கி உட்கார்ந்தான்.

“சொல்லு மோனே, உன் நகரத்தைப்பற்றி, உன் நாட்களைப் பற்றி சொல் அம்மா கேக்கறேன்.”

“பார்லிமெண்டின் முன்னால் தினந்தோறும் ஆர்ப்பாட்டங்கள், பரபபரப்பான  யுனிவெர்சிட்டி கேம்பஸ், போதை அடிமைகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே வருதும்மா…”

“இதுக்கெல்லாம் நீ எதுவும் செய்யமுடியாதா?”

“இல்ல…”

“பதிலில்லாத ஏதாவது கேள்விகளுண்டா மோனே?”

“மனிதம்…”

அம்மா மெதுவாக முறுவலித்தாள். அவளுக்கு நாக்கு வறளத் தொடங்கியது. பாங் வேலை செய்ய ஆரம்பித்தது.

”அம்மா சொல்ற தீர்வு என்னம்மா இதுக்கு?”

“நீங்கள் இளைஞர்கள் சேர்ந்து ஒரு குழுவாய் திடமாக ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும்”

“என்ன செய்யணும்னு நீங்களே சொல்லுங்க”

“ஒரு புதிய சொசைட்டி பில்டப் செய்யணும். ஒரு புது நேஷன்…”

“இந்தியாவில் அதற்கு புத்திசம் போல ஒரு மதத்தால் மட்டுமே முடியும். அசோக சக்ரவர்த்தியை யுத்தத்திலிருந்து பின் வாங்க வைத்த புத்திசத்தாலேயே கரப்ஷனிலிருந்தும் ப்ளாக் மெயிலிலிருந்தும் நம்மை காப்பாற்ற முடியுமாவென்று தெரியவில்லை. பொறுத்துப் பாக்கணும்மா”

“புத்திசம் இல்ல சங்கு நான் சொல்லும் தீர்வு..”

“பின்ன என்னம்மா?”

சிகரெட்டின் புகையை ஊதி பறக்க விட்டபடி அவன் அம்மாவின் முகத்தை உற்று நோக்கினான்.

“யு மேக் ரெவ்லூஷன், ஒரு ஆயுதப் புரட்சி…”

அம்மாவின் பார்வை சூன்யத்துக்குள் நிலைத்து, நிகழ்காலத்திற்குள்ளிருந்து தப்பித்து எங்கோ பயணித்தது, வழமைகளை ஒழித்தழித்து புதிய  உலகத்திற்கு பாங்கின் சிறகுகள் வழி பறக்கத் தொடங்கினாள்…அம்மாவின் கண்கள் மூடிக்கொண்டன.

  • “சாரு…சாரு… எங்க இருக்கே நீ….?”

சங்கு வாசல் படப்பைத்தாண்டி உள்ளே போனான். சாருவின் அம்மா பதறி எழுந்தாள். அவள் கட்டியிருந்த வேட்டித் தலைப்பினால் வாசலில் போட்டிருந்த பெஞ்சைத் துடைத்தாள்.

“உக்காருங்க, எப்ப மோனே வந்தீங்க?”

“நேத்து, நான் சாருவைப் பாக்கணும்”

சாருவின் அம்மா சுவரில் சாய்ந்து நின்றாள். அவள் ஒன்றும் பேசவில்லை. சங்குவின் முகத்தைப் பார்க்க அவளால் முடியவில்லை.

“ எனக்கெல்லாம் தெரியும்”

“உங்கம்மாவுக்கு தீராத அவமானத்தை வரவச்சிட்டாளே அவ, அந்த மகாபாவி இப்படி செய்வான்னு யாரு நெனச்சாங்க மோனே?”

“அம்மாக்கு என்ன அவமானம்? எல்லாருக்கும் வாழ்க்கையில தப்பு நடக்கும், சாருவை நான் பாக்கணும்…”

“அவளை நீங்க பாக்க வேணாம். அந்த மகாபாவியோட முகத்தை நீங்க பாக்க வேண்டாம்”

உள்ளே, கதவிற்குப்பின்னால் ஒரு வெடித்தழுதலின் துக்கம் கசிந்து வெளியே கேட்டது. சங்கு உள்ளே போனான். சாரு திரும்பி நின்று கொண்டிருந்தாள். அழுகையில் அவளுடைய முதுகு அதிர்ந்தபடியிருந்தது. தரையில் அவளுடைய கால்களில் கண்ணீர்த் துளிகள் சரசரவென உதிர்ந்து உடைந்தன.

“சாரூ…”

“நீங்க இங்கயிருந்து போயிடுங்க, என்னைப் பாக்க வேண்டாம்.”

“சாரூ நான் கேட்டால் நீ என்னிடம் சொல்லுவியா”

அவள் சங்குவின் பக்கமாய் மெல்லத் திரும்பினாள். கர்ப்பத்தின் சோர்வும் அழகுமுள்ள சோர்ந்த கண்கள்…கன்னங்களில் படர்ந்து கிடக்கும் தலைமுடி.

“சொல்லுவியா? அப்படீன்னாதான் கேப்பேன்?”

“ம்..”

அவள் புறங்கையினால் கண்களைத் துடைத்தாள்.

“யாரு…?”

“கோபி”

“புத்தக கடையில கோபியா…?”

அவள் வெடித்தழுதபடி முகத்தை மறைத்துக் கொண்டு அறைக்குள் ஓடினாள்.

  • “அம்மா…”

அம்மாவும் மகனும் சாப்பாட்டு மேசையில் அருகருகே உட்கார்ந்திருந்தார்கள்.

“ம்…”

“அம்மாட்ட முக்கியமான விஷயம் பேசணும்”

“என்னடா மோனே?”

“நான் கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு இருக்கேன்”

அம்மாவின் கண்களில் ஆச்சரியமும் ஆனந்தமும் விளக்கேற்றியது போல சுடர்விட்டு எரிந்து படர்ந்தது.

“ரொம்ப நாளா நீங்க என்னோட கல்யாண விஷயமா பேசறீங்களேம்மா, நான் இப்ப பண்ணிக்கலாம்னு இருக்கேன்.”

சங்கு பேசுவதை அவளால் நம்பவே முடியவில்லை. தனக்கு எப்போதுமே கல்யாணம் வேண்டாம் என்று இருந்தவன், தனியாளாகத்தான் இந்த பூமிக்கு வந்தேன், தனியாளகவேதான் போகவும் போகிறேனென்று எப்போதும் விவாதிப்பவன், அதை மிகத் தீர்மானமாக போனமுறை வந்தபோது சொன்னவன். அதற்குப்பிறகு கல்யாணத்தைப் பற்றி அம்மா அவனிடம் பேசவேயில்லை.

“இந்த முறையே பண்ணிக்கறேம்மா”

“எனக்கு இதைவிட சந்தோஷம் இல்ல மோனே”

தேவகி டீச்சருக்கு சந்தோஷத்தின் உச்சத்தில் பேச்சே வரவில்லை.

“ஆனா…”

“ஒரு ஆனாவும் இல்ல சங்கு, உடனே பண்ணிடலாம், உடனே…”

அம்மாவுக்கு ஆனந்தத்தில் மூச்சுமுட்டியது.

“கல்யாணப்பொண்ண நாந்தான் தேர்ந்தெடுப்பேன்…”

“அதில்லாம எப்படி! அதை எனக்கு சொல்லணுமா சங்கு, நீதான் தீர்மானிக்கணும்”

”எனக்கு பிடித்த பெண்ணை நீங்க மறுக்க மாட்டேன்னு எனக்கு வாக்கு தரணும்மா, சுயூர் அப்பான் மீ அம்மா…”

”தோ, வாக்கு கொடுக்கறேன் போதுமா”

“நான் சாருவைக் கல்யாணம் பண்ணிக்கப் போறேம்மா..”

தேவகி டீச்சர் அதிர்ந்து உறைந்து போனாள். இன்றைக்கு வழக்கத்திற்கும் அதிகமாக பாங் குடித்திருப்பானோ?

“நீ என்னிடம் விளையாடிப் பார்க்கிறாயா சங்கு?”

”இல்லம்மா, ஐ’ம் ஸீரியஸ்”

அம்மா மௌனமானாள். சங்குவின் கண்களின் தீர்மானமும் அவன் குரலில் தென்பட்ட உறுதியும் கண்டபோது அவன் சுய உணர்வோடுதான் பேசுகிறான் என்பது அவளுக்குப் புரிந்தது. அவள் சாப்பிடாமலேயே மேசையிலிருந்து எழுந்து போனாள். சங்கு அவளை சங்கடப்படுத்திப் பார்க்கிறானோ? சாரு நல்ல பெண்தான், வயதிலும் அழகிலும் சங்குவிற்கு பொருத்தமானவள்தான். ஆனால் இந்த உலகத்தில் வாழ்வது நானும் சங்குவும் மட்டுமே இல்லையே? ஊர் என்ன சொல்லும்? எப்படி எல்லோர் முகத்தையும் நான் நேர் கொள்வேன்? அந்நியனின் கர்ப்பம் ஏற்றிருக்கும் ஒரு பெண்ணை… எப்படி…?

  • “அம்மா நீங்க என்ன சொல்றீங்க?”

மறுநாள் காலை சங்கு கேட்டான். ஒரு லுங்கியை மட்டும் இடுப்பில் கட்டிக்கொண்டு வாயில் டூத் பிரஷூம் வைத்தபடி வாசலில் நடந்து கொண்டிருந்தான்.

“சங்கு நீ சுய புத்தியுடன்தான் பேசுகிறாயா? பாங்,  போதையிலிருந்தும் சம்பிரதாயங்களிலிருந்தும் உன்னை மீட்டெடுக்கும் என்று நீ என்கிட்ட சொன்னியே? அது இப்பவே உனக்கு ஆரம்பிச்சிடிச்சா?”

“அம்மா நான் சுய புத்தியோடதான் பேசறேன். நீங்க என்ன முடிவு பண்ணீங்க?”

அவன் நடையை நிறுத்தி அம்மாவை உற்று நோக்கிக் கேட்டான்.

  • தேவகி டீச்சர் இன்னுமொருநாள் கல்லூரிக்கு விடுப்பு எடுத்து சங்குவையும் சாருவையும் ரயில் ஏற்றிவிட வந்தாள். ரயில் நிலையத்தில் கஃபூரும் சங்குவின் வேறுசில நண்பர்களும் வந்திருந்தார்கள். புத்தகக் கடையில் பேய் அறைந்தது போல சிலையாகியிருந்தான் கோபி.

“அம்மாக்கு தகுந்த மகன், மகனுக்கு தகுந்த அம்மா.” ரயில் நிலைய பிளாட் ஃபார்மில் நிற்பவர்கள் பேசிக் கொண்டார்கள்.

“படிப்பும் அறிவும் உள்ளவங்க, இல்லன்னா கூட பைத்தியம்ன்னு சொல்லலாம்.”

“டேய் அப்படி இல்லடா, இந்தக் காலத்தில படிப்பும் அறிவும் உள்ளவங்களுக்குத்தான் பைத்தியமே”

சங்குவையும் சாருவையும் ஏற்றிக்கொண்டு ரயில் மெல்ல மெல்ல அசைந்து நகர்ந்தது. தேவகி டீச்சர் வெளியே வந்தாள். மாதவன் காரின் கதவைத் திறந்தபடி நின்றிருந்தான். டீச்சர் உள்ளே ஏறி உட்கார்ந்தாள்.

“எங்க போகணும் டீச்சர்? காலேஜூக்கா, வீட்டுக்கா?”

“உனக்கு எங்க தோணுதோ அங்க போ மாதவா”

நிறம் மங்கிப்போகும் உதடுகளிலும் பார்வை குறைந்துவரும் கண்களிலும் ஒரு வித மந்தகாசத்துடன் டீச்சர் கண்மூடி சீட்டில் நன்றாக சாய்ந்து உட்கார்ந்தாள்.


மூலக்கதை  எழுத்தாளர்: எம். முகுந்தன்

தமிழில் : கே.வி ஷைலஜா


எழுத்தாளர்கள் குறிப்பு:

எம்.முகுந்தன். சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர். அவருடைய மிக முக்கியமான நாவல்களில் ஒன்று மய்யழி கரையோரம். நூறு சிறுகதைகளையும் பல நாவல்களையும் இலக்கிய பரப்பிற்கு தந்தவர்
மத்திய அரசின் பணி நிமித்தமாக டெல்லியில் வசித்தவர் ஓய்வுக்கு பிறகு மாஹியில் வசிக்கிறார்.

கே.வி.ஷைலஜா, கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும் தமிழ்ச் சூழலிலேயே வாழ்க்கையை தகவமைத்துக் கொண்டவர். இலக்கிய வாசிப்பு அடுத்த கட்ட நகர்த்தலுக்கு நகர்த்த, மொழிபெயர்ப்புப் படைப்புகளை தரத் தொடங்கினார்.

மலையாளக் கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு எழுதிய சிதம்பர நினைவுகள் மொழிபெயர்க்கவே, பேச மட்டுமே தெரிந்த தாய்மொழியான மலையாளத்தை வாசிக்கவும் கற்றுக்கொண்டார். அதன்பிறகு என்.எஸ்.மாதவன், திரைக்கலைஞர் மம்முட்டி, கெ.ஆர்.மீரா, கல்பட்டா நாராயணன், சிஹாபுதின் பொய்த்தும்கடவு, ஆகியோர படைப்புகளையும் மொழிபெயர்த்திருக்கிறார்.

கலை இலக்கியப் பேரவை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, கனடா தோட்ட விருது பெற்றிருக்கிறார்.

வம்சி புக்ஸ் என்ற பதிப்பகம் தொடங்கி நானூறுக்கும் மேற்பட்ட புத்தகங்களை பதிப்பித்திருக்கிறார். ஐந்து புத்தகங்களுக்கு தமிழக அரசின் சிறந்த பதிப்பாளருக்கான விருதைப் பெற்றிருக்கிறார். இவருடைய சிதம்பர நினைவுகள், தென்னிந்தியச் சிறுகதைகள் தமிழகத்தின் சில கல்லூரிகளில் பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன. இவரது கணவர் எழுத்தாளர் பவா செல்லதுரை .

3 COMMENTS

  1. அக முகங்கள் – தலைப்பு வெகு பொருத்தம். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அகழ்ந்தெடுக்கப்படாது எத்தனை எத்தனை ரகசியங்கள் ஆழப்புதையுண்டு கிடக்கின்றன. திருத்தமான மொழிபெயர்ப்பு. நேர்த்தியான எழுத்துநடை. பாராட்டுகள் ஷைலஜா.

  2. http://kanali.in/aka-mugankal/

    ‘அக முகங்கள்’ என்ற மொழிபெயர்ப்பு கதை மலையாளத்தில் எழுதியவர் எம் முகுந்தன் அவர்கள். தமிழில் அற்புதமான முறையில் மொழியாக்கம் செய்திருப்பவர் கே.வி. சைலஜா அவர்கள். சமீபத்திய கனலி இணைய இதழில் வெளிவந்திருக்கிறது இந்தக் கதை.
    கதையின் ஆரம்பமே அசத்தலாக இருக்கிறது. அப்படியே நம்மை அந்தக் களத்துக்கு இழுத்துக் கொண்டு செல்கிறது . மனதில், அந்த மழைச்சாரலும், குடை பிடித்து நடக்கும் மக்களும், வாசலில் காத்து நிற்கும் அம்பாசிடர் டாக்ஸியும் , (பண்டைக்காலத்தில் நான் கேரளா சென்றிருந்த பொழுது அம்பாசிடர் வண்டி தான் அதிகம் என் கண்களில் படும்:-)) ரயில் நிலையமும், டிரைவரின் பீடி மணமும், தாய்மையின் பண்புகள் நிறைந்த தேவகி அம்மாவின் உருவமும், ரயில் நிலையத்தின் புத்தகக் கடையில் விற்பனைக்கு உள்ள புத்தகங்கள் குறித்த பேச்சுவார்த்தையும்……. இப்படி ஒவ்வொரு நிகழ்ச்சியும் செயலும் நமது மனதில் சித்திரமாக நிலைக்கும் வண்ணம் எழுதியிருக்கும் பாங்கு மனதைக் கொள்ளை கொண்டது.

    கதையின் மையக் கருத்து, வாழ்வில் வஞ்சிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு கதாநாயகன் வாழ்வளிப்பதுதான் ! கதா நாயகன் சங்குவின் குணாதிசயங்களை மிக அழகாக ஒரு தாயின் கண்ணோட்டத்தில் வரைந்திருக்கிறார். அந்தப் பெண்ணை மணம் புரிந்து அவளுக்கு வாழ்வளிப்பதுதான் தன் தாயார் தன்னிடமிருந்த விரும்பிய புரட்சிகரமான செயல் என்று கதாநாயகன் எண்ணி இருப்பான் , என்பது மறைமுகமாக தெளிவு படுத்தப்படுகிறது. ஒரு தாய்க்கும் மகனுக்கும் இடையில் உள்ள பாசம் என்பது ஒரு நட்புறவின் மிகைப்படுத்தலாக இருந்தால் நலம் என்று நமக்கு அறிவுறுத்துகிறார் ஆசிரியர்.

    மொழியாக்கம் என்று பார்க்கும்பொழுது இதன் சிறப்பை எப்படி விளக்குவது என்று புரியாத அளவில் இருக்கிறது. ஒன்றிரண்டு இடங்களில் பேச்சினிடையே சொல்லப்படும் ஒன்றிரண்டு மலையாளச் சொற்களும், அந்தப் பேச்சுவார்த்தையின் ரீதியும் மனதிற்குள் ஒரு அன்னியோன்யத்தை ஏற்படுத்துகிறதேயன்றி, எந்தவிதமான நெருடலையும் காட்சிப் படுத்துவதில்லை. மிகவும் பாராட்டுதற்குரிய ஒரு விஷயம் இது.

    மூலக்கதை ஆன மலையாளப் பதிப்பையும் உடனே படிக்க வேண்டும் என்ற மிகுதியான ஆவலைத் தூண்டுகிறது. இரண்டு புத்தகங்களுமே கிடைக்குமிடம் தெரிந்தால் நலம். மூலக்கதைக்கும் இதே தலைப்பா அல்லது வேறா என்றே அறிந்தால் மகிழ்ச்சியுறுவேன் .

    மனதை மிகவும் கவர்ந்த இந்த மொழிபெயர்ப்பை பதிப்பித்தமைக்கு கனலி இணைய இதழுக்கு மனமார்ந்த நன்றி.

    கி.பாலாஜி
    18.12.2019

  3. இதனுடன் இணைத்துள்ள ஒரு அற்புதமான ஓவியம் மனதைக் கவருகிறது .ரயில் நிலையக் காட்சிகளைப் படம் பிடித்தாற்போல் உள்ளது .ஓவியர் யமுனாவுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.