ஆட்ரி லார்ட் கவிதைகள்

     – 1 –

பெண் ஆற்றல் 

பெண் ஆற்றல்  இருக்கிறது
கறுப்பினத்தின் ஆற்றல் இருக்கிறது
மானுடத்தின் ஆற்றல் இருக்கிறது
எப்பொழுதும் உணர்கிறேன்
என் இதயம் துடிக்கிறது
என் கண்கள் திறக்கும்பொழுது
என் கரங்கள் நகரும்பொழுது
என் வாய் பேசும்பொழுது
நான் இருப்பதை உணர்கிறேன்
நீங்கள்  ?

        – 2 –

பிரூவெட் ( பாலே நடனம் ! ) 

நான் உன் கரங்களைப் பார்த்தேன்
அவை கற்களைத் தைத்த ஊசிகள்
முனை மழுங்கி இருப்பதைப் போல
என் உதடுகளின் மீது
உணர்ச்சியற்று இருந்தது
எங்கிருந்து வருகிறாய் நீ
நீ சொன்னாய்
உன் கரங்கள்
என் உதடுகளை வாசித்துக் கொண்டிருந்தது
எங்கிருந்து வருகிறாய் நீ
நீ சொன்னாய்
சில சாலைகள் வழியாக  நிச்சயமற்ற இரவில்
உன் கால்கள் வீட்டினை ஆய்வு செய்ய
எங்கிருந்து வருகிறாய் நீ
நீ சொன்னாய்
உன் கரங்கள்
என் உதடுகளின் மீது
மழையை உறுதி செய்யும்
இடியாக இருந்தது .
எங்கே எல்லா காதலர்களும் ஊமைகளாக இருக்கிறார்களோ அந்த நிலத்தில்
உன் கரங்கள் என் வாசல் மீது 
மழையைத் தொடர்ந்து வரும்
வானவில்லைப் போலிருந்தது 
ஏன் நீ அழுதுகொண்டிருக்கிறாய்
நான்தான் வீட்டிற்கு வந்துவிட்டேன் .


                – 3 –

இயக்கத்தின் பாடல்
( உள்ளத் தூண்டலின் பாடல் )

உன் கழுத்தின் பின்னால் இருக்கும்  இறுக்கமான சுருள் முடி என்னை விட்டு விலகிப் போவதை நான் அறிந்துகொண்டேன் 
கோபம் அல்லது தோல்விக்கு அப்பால்
உன் முகம் பள்ளி முடியும் மாலையில்
காலை வேளையின் விருப்பம் முதிர்ந்து ஏக்கத்தை வெளிப்படுத்துகிறது
நாம் எப்பொழுதும் பிரியாவிடை பெற்றுக் கொண்டிருந்தோம் 
நம் குருதியில் நமது எலும்புகளில் காப்பி அருந்தியபடி
எதிரெதிர் திசையில் இயங்கும் மின்தூக்கியில் விரைந்து ஏறும் முன்பாக
பிரியாவிடை பெறாமலே
என்னை ஒரு பாலமாகவோ அல்லது கூரையாகவோ உன் நினைவில் கொள்ளாதே
புனைவுகள் புராணங்களின் தயாரிப்பாளன்
அல்லது நான் ஒரு பொறி என்று
அந்த உலகத்தின் கதவுகள்
எங்கு கறுப்பு மற்றும் வெள்ளை இனத்து எழுத்தர்கள்
அழகின் விளிம்பில் தொங்கிக்கொண்டு ஐந்து மணி மின்தூக்கிகளில்
ஒருவர் மீது ஒருவர் பட்டுவிடக் கூடாது என்று தங்கள் தோள்பட்டைகளை
அவசரமாக இழுத்துக் கொள்கிறார்கள்
மேலும் இப்பொழுது
அவர்களுக்காகப் பேச யாரோ ஒருவர் இருக்கிறார்
என்னிடமிருந்து விலகி நாளையை நோக்கி நகரும்பொழுது
காலை வேளை வணக்கம் மற்றும் முதிர்ந்த
உனது பிரியாவிடைகள் மின்னலின் வாக்குறுதிகள் ஆகிறது
கடைசி தேவ தூதர்களின் கரங்களில்
வேண்டாத மற்றும் எச்சரிக்கையாகக் காலம் நமக்கு எதிராகக் கடந்து போகிறது
நாம் பயணங்களால் வெகுமதி பெற்றோம்
ஒருவரை விட்டு ஒருவர் விலகி
நமது விருப்பங்களின் உள்நோக்கி
காலை வேளையில் தனிமையில்
எங்கே மன்னிப்பும் பொறுமையும் ஒன்றுடன் ஒன்று கலக்கிறதோ
அங்கே முடிவெடுக்கும் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது
உன் நினைவில் கொள்ளாதே
என்னை ஒரு பேரழிவு
அல்லது இரகசியங்களின் காப்பாளன் என்று
நான் ஆடு மாடுகள் போல ஓடும் வண்டிகளில்
ஒரு சக பயணியாக இருந்து 
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
நாம் நமக்காக மட்டும் நம் நேரத்தை வீணடிக்க முடியாது
என்று சொல்லியபடி
நீ என் படுக்கையிலிருந்து மெதுவாக நகர்ந்து போவதை.

                         – 4 –

பாதிக்கப்பட்ட குழந்தைகள் !  

(பிர்மிங்ஹாமில் அலபாமா என்ற இடத்தில் உள்ள பேப்டிஸ்ட் தேவாலயம் ஒன்றில் 1963 ம் வருடம் செப்டம்பர் மாதம் 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடந்த  ஒரு இனவெறி குண்டு எறிதலில்  கொல்லப்பட்ட ஆடி மே காலின்ஸ்,8, மற்றும் சிந்தியா வெஸ்லி,10,   ஆகிய இரண்டு குழந்தைகள் நினைவாக எழுதப்பட்ட சோகம் ததும்பும் கவிதை.)
யார் தன்னுடைய கழிவால் பாதிக்கப்படுகிறானோ 
அவன் நிரந்தரமாகச் சிக்குண்டு விட்டான்
மழை கசிந்தோடுகிறது பூமியில்
மழை நீரைப் பிடிப்பில் வைத்திருக்க வேர்கள் இல்லாமல்
மற்றும் எந்தக்  குழந்தைகள் வாழ்வு துவங்கும்
முன்பாகவே கொல்லப்பட்டனரோ
யார் தன் விளைச்சலைச் சூரியனுக்கு அர்ப்பணிக்கிறானோ
அவனின் நிலம் மழை இல்லாமல் வறண்டுவிட்டது
விம்மி விம்மி கண்ணீர் சிந்தி அழுகிறான் இழந்த மழை நீரை நினைத்துக்
காத்திருக்கிறான் இன்னொரு மழைக்காக
ஆனால் யார் தோண்டி எடுப்பது இந்தப் பெண் குழந்தைகளை
யார்தான் நேசிப்பது இந்தப் பெண்களாக வளர்ந்திருக்கக் கூடிய குழந்தைகளை
யார் வாசிப்பது அவர்களுக்குள் எழுதப்பட்ட தொன்மக் கதைகளை
யார் அவர்களை நேசிக்கிறோமோ
நாம் அவர்களை நினைவில் வைத்திருக்கிறோம்
அந்தக் குழந்தைகளின் சிரிப்பை
ஆனால் யாருடைய வெறுப்பு அவர்களது பொக்கிஷங்களைச் சூறையாடுகிறதோ
அவன் அழ  வேண்டும் இரவு நேரங்களில் அவர்களின் கல்லறைகளின் மீது.
ஒரு வருடம் ஓடிவிட்டது. மழை மீளவும் பொழிகிறது
எப்படியாகிலும் பல பெண்கள் வெளிச்சத்திற்கு வருவார்கள்
ஒரு நாள் ஒருவன் உறங்க தாகித்திருப்பான்
தெற்கின் ஒரு இரவில் எங்கே அமைதி இல்லையோ
தேடிக்கொண்டிருப்பான் அவன் அமைதியை
மேலும் வருவான் விம்மி விம்மி கண்ணீர் உகுக்கப்
புழுதிக்கு அளிக்கப்பட்ட இந்தக் குழந்தைகளை நினைத்து.

          – 5 –

படைக்கருவிகளுடன் சகோதரிகள் !  

எங்கள் படுக்கையின் விளிம்பில் ஒரு பரந்த கட்டம் இருந்தது
அங்கே பதினைந்து வயதான உன் மகள்  தூக்கில் தொங்கினாள்
குடல் இறக்கம் கண்டிருந்தது போலீஸ் சக்கரங்களின் மீது
ஒரு தந்திச் செய்தி அந்த மரத்தோடு ஆணி அடித்து வைக்கப்பட்டிருந்தது
ஒரு மேற்கத்திய வரைபடத்திற்குப் பக்கத்தில்
அந்த உடலை அடக்கம் செய்ய
என்னால் இயலவில்லை உன்னோடு வர
உங்கள் இரவு அட்டைகளை மறு உருவாக்கம் செய்யவும்
ட்ரான்ஸ்வால் கடுங்குளிருக்கு எதிராக    இன்னொரு நத்தையின் ஓட்டை இரயில் நிலையத்திற்கு எதிராக இருந்த ஓர் சுவற்றில் நடுவதற்கு என்னால் முடியவில்லை
அல்லது எடுத்துச் செல்லவில்லை உங்களது ஆத்மாக்களை ஆற்றிலிருந்து
ஓர் சுரைகுடுவையிலிட்டு என் தலைமீது சுமந்து
அதனால் நான் வாங்கினேன் ஒரு பயணச்சீட்டை டர்பனுக்கு
என் அமெரிக்கன் விரைவு வண்டியில்
ஒரு புதிய பருவத்தின் முதல் ஒளியில்.
நாம் இருவரும் ஒன்றாகப் படுத்து இருக்கிறோம்
நான் இப்பொழுது சுத்தம் செய்துகொண்டிருக்கிறேன் கார்காலத்தின் உதிர்ந்த இலைகளை
எனது தோட்டத்தில்
மாட்டின் கீரை மிகுதியாக வளர்ந்து ராக்கெட்டைப் போல விதைகள்
துருத்திக்கொண்டு வளர்ந்திருக்கிறது
நான் இன்றைய செய்திகளை வாசிக்கிறேன்.
நியூயார்க் பத்திரிகை இறுதியாக உங்கள் நாட்டைப்பற்றிக் குறிப்பிட்டு எழுதி உள்ளது 
ஒரு அரைப்பக்கக் கதை
போரில் கொல்லப்பட்ட முதல் வெள்ளை தென் ஆப்பிரிக்கரைப்பற்றி
கறுப்பின குழந்தைகள் செபோகங்கில் கொல்லப்பட்டதைப்பற்றி அல்ல.
ஆறு வயது குழந்தைகள் சிறைப்படுத்தப்பட்டது பற்றி மாகாணத்திற்கு எதிராகப் போராடியதைப்பற்றி அல்ல 
தாபா சிபோக என்ற ஒன்றாம் வகுப்பு பயிலும் மாணவன் தனது இரத்தத்தில் 
அவனது பாட்டியின் பார்லர் தளத்தில் மிதந்தது பற்றி அல்ல
ஜாய்ஸ் ஒன்பது வயதுப் பெண் அவனை நோக்கி ஊர்ந்து போக முயன்றதைப் பற்றி அல்ல. 
அவள் தொப்புள் வழியாக மலம் வெளியேறியதைப் பற்றியும் அல்ல. 
மூன்று வாரங்களே ஆன பெயரிடப்படாத சிசு தொலைந்து போனது  எரிந்த தெம்பிசாவின் படுக்கையின் அடியில் என்பது பற்றியும் அல்ல .
என் கை கீழே வருகிறது சாமந்திப்பூ  மீது படரும்  ஒரு பழுப்பு நிறத்தைப்போல்
விரக்தி மிகுதியால் பொறுப்பற்று
நாங்கள் இரண்டு கறுப்பின பெண்கள் எங்களது தீ ஜுவாலை போன்ற சுடர்  தொடும்.
மேலும் நாங்கள் கைவிட்டோம்  எங்கள் இனத்து இறந்தவர்களை எங்கள் பின்னால்
நான் உனக்கு ஒரு ரோஜாவை அளித்தேன் ஆற்றுப்படுத்தலின் இறுதிச் சடங்காக
இது ஒரு வசந்த காலம்நீ முனுமுனுக்கிறாய்.
நான் விற்றுவிட்டேன் எனது பயணச்சீட்டினை துப்பாக்கிகளுக்காகவும் சல்பாவுக்காகவும்
நான் நாளை வீடு திரும்புகிறேன்
மேலும் எங்கெங்கு உன்னைத் தொட்டாலும்
நான் குளிர்ச்சியை உணர்ந்தேன் எனது விரல்களிலிருந்து
சுவைக்கிறேன் ரௌத்திரத்தை
ஒரு பெண்ணின் உதட்டிலிருக்கும் உப்பைப்போல
யார் அடிக்கடி கொலை செய்துவிட்டு மறந்துவிடுகிறாளோ.
மேலும் அந்த ஒவ்வொரு கொலையையும் சுமந்து திரிகிறாளோ தன் கண்களில்  
உன் உதடுகள் ஒரு பிளவுபட்ட ஆர்சிட்களைப் போல உள்ளது
ஒரு நாள் நீ வருவாய் எனது நாட்டிற்கு
மேலும் நாம் அருகருகில் இருந்து போராடுவோம்
மமன்தாதிசி விலகிச்செல்கிறாள்
அவளது மருமகள்கள் சாயமிட்டுக் கொண்டிருக்கும்
துணியிலிருந்து
அவளது குழந்தை அவளது முலைகளிலிருந்து பாலை உறிஞ்சி குடித்துக்கொண்டிருக்கிறது
அரைத்தூக்கத்தில் இருக்கும் அக்குழந்தையை அவளது சகோதரியிடம்
அவள் கொடுக்கிறாள்.
அவள் உடையணிகிறாள்.
மீண்டும் போர் செய்ய
ஆண்கள் அவளைப் பின்பற்றி வருவார்கள் என்று
தெரிந்துகொண்டிருக்கிறாள்.
கடுஞ் சிக்கலான மசெருவின் வைகறை மெல்லொளியில்
விரைவான சோகம் மிகுந்த முக்கியமான
அடுத்த நாள் போருக்குத் திட்டங்களை வகுக்கிறாள்
சிலநேரங்களில் டர்பனைப் பற்றிய கனவுகளைக் காண்கிறாள்
காட்சிகளை ஆழமான கோணலான பாடல்களைக் கடற்கரை கூழாங்கற்களின்
பின்னால் இயங்கும் கடலை எல்லாம் .


-ஆட்ரி லார்ட்

தமிழில் : ச.கனியமுது


ஆசிரியர் குறிப்பு:

ஆட்ரி லார்ட்

ஆட்ரி லார்ட் ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண் கவி. அவரைப்பற்றி மைக்கேல் வேர் ( Michael ware ) என்பவர் 2017 ஜனவரி ஒன்றாம் தேதி வெளியிட்ட தனது கட்டுரையில் ஆட்ரி லார்ட் ஒரு பெண்ணியவாதி மற்றும் சிவில் உரிமை ஆர்வலர் என்று  குறிப்பிட்டுள்ளார்.

ஆட்ரி லார்ட் தன்னைப்பற்றி தானே சொல்லும்பொழுதுநான் ஒரு கறுப்பினத்தவள்,  ஓரினச்சேர்க்கை விருப்பமுடையவள், ஒரு தாய் மற்றும் போராளிக் கவி”  என்று பிரகடனம் செய்கிறார் .

இவரைப்பற்றிய இவரது சுய விமர்சனம் இவரது சிக்கலான ஆளுமையை வெளிப்படுத்துவதோடு, இவரது அச்சமற்ற தன்மையையும் வெளிப்படுத்துகிறது.

இவர் குழந்தையாக இருக்கும்பொழுது சரியாகப் பேச முடியாதவராக இருந்தார் . வெகு விரைவில் கவிதையைத் தான் உரையாடுவதற்கான ஒரு மொழியாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்.

தனது  பதினேழாவது வயதில் தனது முதல் கவிதையைப் பத்திரிகை ஒன்றில் வெளியிடுகிறார் . அப்பொழுதிலிருந்து அவரது வளர்ச்சி துவங்குகிறது  அவரது ஆரம்பக் கவிதைகள் நண்பர்களுக்கிடையே நிகழும் காதலை, அன்பைப் பேசுபவையாக இருந்தன.

1960 ல் இவர் சந்தித்த உள்நாட்டு  அமைதியின்மை இவரது கவிதைகளின் பாடு பொருளில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தது. கறுப்பின குழந்தைகள், பெண்கள் ஆகியோருக்கு எதிரான வன்முறைகளைப் பாடுபவையாக அவை மாறின .

இவர் தனது கவிதைகளில் பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையே நிலவ வேண்டிய நல்லுறவைப் பாடுகிறார். இக்கவிதைகள் இவரது சொந்த வாழ்க்கையைப் பாடும் அகவெழுச்சிப் பாடல்கள்.

இவர் தான் எழுதும் கவிதை வரிகளை அதில் இவர் உபயோகிக்கும் சொற்களை மனப்பாடம் செய்து வைத்துக்கொண்டு நேர்காணல் சமயங்களில் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் பொழுது பயன்படுத்தும் யுக்தியைக் கையாண்டார்.

 நிலக்கரி என்ற கவிதையை அவர் இப்படி முடிக்கிறார். அவரது கவிதைகள் உண்மையில் பகலில் ஒளிரும் ஓர் ஆபரணம் தான்.

எப்படி வைரம் வருகிறது

ஒரு முடிச்சின் சுடராக

நான் கருப்பு

ஏனெனில் நான் வருகிறேன் பூமியினுள்ளிருந்து

எடுத்துக் கொள்ளுங்கள் என் வார்த்தை அது

பகலில் ஒளிரும் ஓர் ஆபரணம் .”

ச.கனியமுது:

Previous articleதன் கல்லறையில் புரண்டு படுத்தார்
Next articleபயோ வார்
Avatar
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப் பட்டிணத்தில் பிறந்தவர் கனியமுது. மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி 2014 இல் பணி ஓய்வு பெற்றவர். தமிழக அரசின் பாடநூல் நிறுவனத்திற்கு மூன்றாம் வகுப்பிற்கான ஆங்கிலப் புத்தகத்தை எழுதியவர். முன்பருவ மழலையர் கல்வி குறித்து இரண்டு ஆய்வுக்கட்டுரைகளை DTERT க்கு சமர்ப்பித்துள்ளார். ஆனந்த விகடனில் 1990 களில்  சிறுகதைகள் எழுதி உள்ளார். சிறுவயது முதலே புத்தக வாசிப்பினை பழக்கப்படுத்திக் கொண்டவர் . தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் புலமைப் பெற்றவர். சிறுகதைகள் கவிதைகள் எழுதுவதில் ஆர்வமுடைய இவர் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும்  பல இலக்கியப் படைப்புகளை மொழிபெயர்த்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.