Homeசிறார் இலக்கியம்கதைகள்பூமிக்கு வந்த புதுமகன் – அறிவியல் தொடர் கதை – 1

பூமிக்கு வந்த புதுமகன் – அறிவியல் தொடர் கதை – 1

அன்புக் குழந்தைகளே!  இது ஒரு அறிவியல் மிகு புனைவு கதையாகும். இதில் இடம்பெறும் சம்பவங்கள், உரையாடல்கள் மற்றும் கதாபாத்திரங்கள் யாவும் கற்பனை என்று கூறுவதை விட இவற்றில் சில பிற்காலத்தில் உண்மையாக நடக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 

    திவாகரன் தாத்தாவுக்கு முன்பு இருந்த மெய் நிகர் சுவரில் (Virtual display) ஒரு உரைச்செய்தி (Text Message) டிடிங் என்ற சப்தத்துடன் வந்து விழுந்தது. 

அதில்

“09474 [email protected] (87733290 jj-8398739 ;asiopweik a98u73a0……………” என எழுதப்பட்டு இருந்தது.

திவாகரன் அடச்சே! என்றவாறு மொழிபெயர்ப்பை இயக்கினார். “பூமிக்கு நீங்கள் செல்வதற்கான உங்களது கோரிக்கை  விண்ணப்பம் (விண்ணப்ப எண் 00098833122309Xi0e) காத்திருப்பு பட்டியலுக்குள் சேர்க்கப்பட்டுவிட்டது. காத்திருப்பு பட்டியலிலிருந்து உங்கள் விண்ணப்பம் உறுதி செய்யும் நிலைக்குச் செல்ல நீங்கள் 18மில்லியன் மணிநேரங்கள் காத்திருக்க வேண்டும். நன்றி”. என எழுதப்பட்டிருந்தது. 

நான் பூமிக்கு போகப்போறேனே… பூமிக்கு போகப்போறேனே… என்று பாடிக்கொண்டே துள்ளிக் குதித்தார்.

அங்கு வந்த அவரது பேரன் ”ஸ்கஏல்பெஉஇ க்ஜ்ச்க்ஃப்9” என்றான்.

மொழிபெயர்ப்பில் அது “தாத்தா மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றீர்கள் போன்று தெரிகிறது” என இருந்தது. 

“க்ஜ்ஷ்டஹுஎ ப்9இஎர்0082”

“உங்கள் மகிழ்ச்சிக்குக் காரணம் என்ன”  

அவர் பேரனிடம் “நான் பூமிக்குச் செல்லப்போகிறேன்” அதாவது “பொஇஒட்9எ308 நக்ச்ஜ்ட்கௌ” என்றார்.

இந்த உரையாடலை இப்போதைக்குச் சற்று நிறுத்தி வைத்துவிட்டு, இந்த கதை நடக்கும் சூழலைக் கொஞ்சம் கவனிக்கலாமா? 

“நக்ச்ஜ்ட்கௌ………” என சங்கேதக் குறியீடுகளால் குறிக்கப்பட்டுள்ள இந்த மொழிதான் அவர்கள் வசிக்கும் கிரகத்தின் அதிகாரப்பூர்வ மொழி ஆகும். பூமியிலிருந்து வந்தவர்களுக்கு மொழிபெயர்ப்பு வசதி உண்டு. அங்கேயே பிறந்தவர்களுக்கு அம்மொழியைக் கற்றுக்கொள்ளக் கருவிலிருக்கும்போதே மென்பொருள் உட்பொதித்து வைக்கப்பட்டு விடும்.

அங்கு பிறக்கும் குழந்தைகளைக் கவனமாகப் பராமரித்துக் கொள்ள பூமியிலிருந்து அவர்களின் மூதாதையர்கள் வரவழைக்கப்படுவார்கள். சிலர் பேரன் பேத்திகள் பிறப்பதற்கு முன்பாகவே இங்கு வந்து குடியேறுவதும் உண்டு. 

பூமி அல்லது மற்ற கிரகங்களில் வாழ வேண்டும் என்றால் சேவைக்கட்டணங்கள் மற்றும் போக்குவரத்து கட்டணங்கள் செலுத்துவதற்காகப் பிறந்த குழந்தை முதல் அனைவரும் சம்பாதிக்க வேண்டும்.

சம்பாதிப்பது என்பது என்னவென்றால் தங்களது குளியல், சாப்பாடு, காலைக்கடன்கள், உள்ளிட்ட சொந்தப் பயன்பாட்டு நேரம் போக மீதம் இருக்கும் நேரத்தில் அவர்கள் செய்யும் வேலை, கல்விகற்றல், கற்பித்தல், உதவிகள் போன்றவற்றுக்கு ஊதியம் உண்டு. 

அவர்கள் அந்த கிரகத்தில் கழிக்கும் மணிநேரங்களுக்குச் சேவைக்கட்டணம் விதிக்கப்பட்டு இருக்கும். குழந்தைகளுக்கு 5 ஆண்டுகள் வரை குறைந்தபட்ச கட்டணம் மட்டுமே விதிக்கப்பட்டு இருக்கும். 

அங்கு என்னவெல்லாம் இருக்கும்?

போக்குவரத்துக்கென காலில் ஒரு சிப் இருக்கும், எங்கே செல்ல வேண்டும் என நினைக்கிறீர்களோ அங்கு செல்வதற்கு நெருக்கடி இல்லாத பாதைகள் சில உங்களுக்குக் காண்பிக்கப்படும். ‘சிப்’க்கு கட்டளையிட்டுவிட்டு அப்படியே தூங்குவதற்கான மோட் செட் செய்து விட்டால் தூக்கத்துக்குத் தூக்கமும் ஆச்சு, பயணமும் முடிந்து விட்டிருக்கும். 

ஏன் பயணம் செய்ய வேண்டும்? மூளையை புத்துணர்ச்சியூட்ட சில குறிப்பிட்ட இடங்கள் அந்த கிரகத்தில் அமைக்கப்பட்டு இருக்கும். அங்கு சென்று அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளவே பெரும்பாலோனோர் அங்கு பயணம் செய்வார்கள்.

மேலும் சிலர் தங்களது உறுப்புக்களை பயோனிக்ஸ் முறையில் மாற்றிக் கொள்வதற்குப் பயணம் செய்வார்கள். மற்றும் சிலர் ஏதேனும் சில உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு நேரில் சென்று செய்ய வேண்டிய வேலைகளுக்காக மட்டுமே பயணம் செய்வார்கள். 

போக்குவரத்து தவிர உணவு, கேளிக்கை, மருத்துவம், கல்வி, சுற்றுலாத்தலங்கள் போன்றவற்றுக்கு ஆங்காங்கே இணைப்பு மையங்கள் (Hubs) அமைக்கப்பட்டு இருக்கும். 

சரி. மறுபடியும் கதைக்குள்ள போவோம். இனி வரும் உரையாடல்கள் உங்கள் வசதிக்காகத் தமிழில் மட்டுமே இருக்கும். 

 

அப்படியா தாத்தா?. பூமிக்குச் செல்வதற்கான முன்பதிவு எனக்கும் கூட செய்யப்பட்டுள்ளது என அப்பா கூறினாரே. 

பூமி எப்படி இருக்கும் தாத்தா? 

நீங்கள் பூமியில் தான் பிறந்தீர்களா?

அங்கே என்னவெல்லாம் இருக்கும்?

கடல், மலை, காடு எல்லாம் அங்கே இருக்குமா?

அங்கே உணவு எப்படி இருக்கும்?

உங்களைப் போன்றவர்கள் அங்கே இருப்பார்களா? எனக் கேள்விகளை அடுக்கிக் கொண்டே சென்றான்.

தாத்தா சிரித்துக்கொண்டே கூற ஆரம்பித்தார். நான் இப்போது செல்லவிருக்கும் பூமி எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. நான் அங்கு இருந்தபோது அது எப்படி இருந்தது என்று வேண்டுமானால் சொல்ல முடியும். அதெல்லாம் 130 வருஷத்துக் கதை.

தாத்தா உங்கள் வயது என்ன?

“இப்போது முடிந்த மணிநேரத்துடன் எனக்கு 131 வயது. இங்கே வந்த பிறகு தான் மில்லி செகண்ட், நேனோ செகண்ட் போன்றவற்றை கற்றுக் கொண்டேன். முன்பெல்லாம் எனக்கு வினாடிகள் வரை தான் தெரியும். 

நான் அங்கே இருந்த போது பூமியில் இருந்தவர்களில் இங்கே யாரெல்லாம் வந்து குடியேறி இருக்கிறார்கள் அல்லது வேறு கிரகத்தில் வசிக்கிறார்களா என்று தெரியவில்லை. 

“பூமி எப்படி இருக்கும் என்று நீ கேட்டாய் அல்லவா? இங்கு இருப்பது போன்று தான் அங்கும் இருக்கும். ஆனால் மக்கள் அனைவரும் கூட்டம் கூட்டமாகச் சேர்ந்து வசிப்பார்கள். உண்மையான கடல், மலை, ஆறு, காடுகள் போன்றவை அங்கு இருந்தன. இப்போது அவையெல்லாம் இருக்கின்றனவா என்று கூட தெரியவில்லை.” 

“உண்மையான கடல் எப்படி இருக்கும் தாத்தா? அலைகள் வருமா?, திமிங்கிலம் அங்கு இருக்குமா? கப்பல் என்ற ஒன்று இருந்ததாமே? அவற்றை மீண்டும் பார்க்க முடியுமா?”

“இரு. இரு ஒவ்வொன்றாகச் சொல்கிறேன்” என தாத்தா எல்லாவற்றையும் கூறினார். தாத்தா கூறியவற்றைக் கேட்ட பேரனுக்கு பூமியை உடனே பார்க்க வேண்டும் என்ற ஆசை உடனே ஏற்பட்டது.  

“தாத்தா நீங்கள் செல்லும் போது எப்படியாவது என்னையும் அழைத்துக் கொண்டு செல்லுங்கள்” என்று கோரினான். 

“அது முடியாதே.. நான் செல்வதே இன்னமும் முடிவாகவில்லை. காத்திருப்போர் பட்டியலில் தான் நான் இருக்கிறேன். உனக்கான முறை வருவதற்கு இன்னும் வெகு மணிநேரங்கள் ஆகுமே. நம்மால் என்ன செய்ய முடியும்?” 

“இல்லை. நான் கண்டிப்பாக உங்களுடன் வருவேன்”. 

தாத்தாவுடன் சேர்ந்து பூமிக்குச் செல்ல முடிவு செய்த பேரன் பூமிக்குச் செல்வானா? அறிந்து கொள்வதற்குக் காத்திருங்கள் இந்த கதையின் அடுத்த பகுதிக்காக. 


– காயத்ரி சிவக்குமார்

Painting Courtesy :  Andre Kohn

பகிர்:
Latest comments
  • ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறது. சிறாரின் கற்பனைத்திறத்துக்கு சவாலான தொடர். பாராட்டுகள் காயத்ரி.

  • ம்..சிறப்பா இருக்கு.முதல் பகுதியே
    ஆர்வத்தை தூண்டும் விதமாக இருந்ததால் அடுத்த பகுதியை படிப்பதற்காக காத்திருக்கிறேன்.
    சிறார் இலக்கியத்திற்காக நீங்கள் முயலுகின்ற அறிவியல் புனைவு கதைகள் சிறார்களுக்கு அவர்களுடைய கற்பனையை தூண்டுவதற்கு ஏதுவாகவும் அதே சமயம் அவர்களை வாசிப்பு தளத்தை நோக்கி நகர்த்துவதற்கான ஒரு சிறந்த முயற்சி.அதை முன்னெடுத்து செய்யும் அக்கா காயத்திரி சிவகுமார் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியும்…வாழ்த்துகளும்….!

leave a comment