Homeசிறார் இலக்கியம்கதைகள்பூமிக்கு வந்த புதுமகன் – அறிவியல் தொடர் கதை – 2

பூமிக்கு வந்த புதுமகன் – அறிவியல் தொடர் கதை – 2

தாத்தா சொன்னவற்றையெல்லாம் கேட்டதும் எப்படியாவது தாத்தாவுடன் சென்று பூமியைப் பார்க்க வேண்டுமென்று ராகுல் முடிவு செய்துகொண்டான்.

ஆனால் எப்படி செல்வது?

முதலில் தாத்தாவின் காத்திருப்போர் பட்டியலை அவரிடம் இருந்து வாங்கிப் பார்த்தான். அதில் இந்த நொடியில் இருந்து 17 மில்லியன் நொடிகள் என்று காட்டியது. 

சரி சரி. அதிக காலம் எல்லாம் இல்லை. எப்படியாவது ஒரு திட்டம் தீட்டி தாத்தாவுடன் போகவேண்டும். 

தாத்தா, அம்மாவும் அப்பாவும் எங்கே? 

தெரியவில்லையே!

உனக்கு செல்லுமிடக் கண்காணிப்பு செய்தி (tracking message) கிடைக்கவில்லையா?

இல்லை தாத்தா. எங்காவது வேறு கிரகத்துக்கு போவதாக சொல்லியிருந்தார்களா?

புதிதாக  உருவாக்கப்பட்ட “[email protected]#7”க்கு செல்வதற்கு அவர்கள் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்தார்கள். ஒருவேளை அங்கு சென்று இருக்கலாம். அங்கு செல்லுமிடக் கண்காணிப்பு செய்தி வசதி இல்லாமல் இருக்கலாம். எனக்கு எதுவும் விவரம் தெரியவில்லை. அந்த “[email protected]#7” கிரகத்தில் என்னவெல்லாம் புதியதாய் இருக்கிறதென்று உங்களுக்கு தெரியுமா தாத்தா?

[email protected]#6”இன் அடுத்த பதிப்பான கிரகம்தான் அது, அங்கு போகவேண்டுமென்றால் “[email protected]#7”இன் சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் நிபந்தனைகள் ஆகியவற்றை அங்கு செல்வதற்கான முன்பதிவின்போதே உட்புகுத்தி அங்கு சென்று இருப்பதற்கான பயிற்சிகளை “[email protected]#6”லேயே ஆரம்பித்து விடுவார்கள் என்று சொன்னார்கள். உங்க  அப்பாவும் அம்மாவும் அந்த பயிற்சிக்கு 2மில்லியன் நொடிகள் சென்றது உனக்கு நினைவில்லையா?

ஆமாம் தாத்தா. எனக்கு ஞாபகம் வந்துவிட்டது. இதோ இங்கே பாருங்கள் என் மெமரி டேட்டாவை. அவர்கள் அந்த ப்ராக்டிஸ்க்கு சென்றபோது என் இம்யூன் சிஸ்டமில் ஏதோ சின்ன பிரச்சனை ஏற்பட்டு என் இடது பக்க நுரையீரலில்  சளி அதிகமாக இருந்தபோது நீங்கள் தானே எனக்கு மெடிக்கல் கேர் செய்தீர்கள். அதற்கான  ரூட் காஸ் (Root cause) வேண்டும் என நமக்கு லீகல் நோட்டீஸ் தந்தார்கள் அல்லவா?

ஆமாம். 

அப்போது தான். 

சரி, அம்மாவும் அப்பாவும் வரும்போது வரட்டும். நான் உங்களுடன் வருவதற்கு ஒரு வழி சொல்லுங்கள் தாத்தா..

எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடு. யோசித்து சொல்கிறேன். 

சரி. தாத்தா. நான் அப்பறம் வரேன்.  என்று சொல்லிவிட்டு வந்தவன் , பூமிக்கு செல்வது எப்படி என சில திட்டங்களை மனதுக்குள் உருவாக்க தயாரானான். 

அவனுக்கு முதலில் இப்படி தோன்றியது:

காலில் இருக்கும் சிப்பை கழட்டி விடலாமா?

வேண்டாம் . பூமிக்கு செல்லும் விண்கலத்தை அடைவதற்கு அது வேண்டும் அல்லவா?

ட்ராக்கிங் சிஸ்டத்தை செயலிழக்க வைத்தால் என்ன?

அதைக் கட்டுப்படுத்துவது நம் கையில் இல்லையே. அது மிகவும் ரகசியம் வாய்ந்த விஷயம் ஆயிற்றே. அதுவும் போக அந்த தொழில்நுட்பத்தை எல்லாம் கற்கும் லைசன்ஸ் இன்னும் நமக்கு வரவில்லையே.

வேறு ஒருவருக்கு பதிலாக நான் சென்றால் எப்படி இருக்கும்?

நல்ல யோசனைதான். ஆனால் கண்டுபிடித்துவிட்டால் என்ன செய்வது?

வேறு எப்படி?

எப்படி?…

ஆஹா. அருமையான யோசனை . அப்படியே செய்யலாம். 


திட்டம் 1: தன் வயதை அதிகரித்து அந்த கிரகத்தின் சட்டங்களின் படி பயணம் செய்வது.  

அம்மா .. எல்லாம் சரியா இருக்கா? 

என்ற குரல் கேட்ட திசையில் திரும்பினாள் வர்ணிகா.

இதுவரை நான் உங்களை இங்கு பார்த்தே இல்லையே . அதுவும் கூட எல்லா செக்யூரிட்டிகளையும் தாண்டி உங்களால் எப்படி இங்கு வர முடியும்?

உங்கள் ஐடியைக் காண்பியுங்கள் என்றாவாறே அருகில் வந்தவள், அப்படியே அதிர்ச்சியில் உறைந்தாள்.

ஓ.. இது எப்படி? ராகுல் ….

என்ன இது? ஏன் இப்படி செய்தாய்?

கூல்.. கூல். அம்மா. கூச்சல் போடாதிங்க. 

ஆனா… எப்படி இவ்வாறு ஆனது? ராகுல்ராம், திவாகர் அங்கிள். எல்லாரும் இங்க கொஞ்சம் அசெம்பிள் ஆகுங்க ப்ளீஸ்.

அனைவரும் ராகுல் என்ன சொல்லப்போகிறான் என்று அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். 

தாத்தா, நீங்க பூமியைப் பத்தி சொன்னதில் இருந்து உங்க கூடவே வரணும்ங்கற ஆசை எனக்கு அதிகமாகிவிட்டது. வயதை குறைத்து காண்பிக்கும் மருந்துகள் போலவே வயதாவதற்கும் கூட மருந்துகள் இருக்கின்றன. ஆனால் என்ன அதற்கு இன்னும் அங்கீகாரம் கிடைக்க வில்லை.. “23%390*” இல் இருக்கும் எனது நண்பன் ஒருவன் அந்த மருந்து ஆராய்ச்சிக் குழுவில் இருக்கிறான். அவனிடம் தொடர்பு கொண்டு அந்த மருந்தின் ஃபார்முலாவை பயன்படுத்தி நானே  தயாரித்த மருந்தை எடுத்துக் கொண்டேன். அதனால் தான் இந்த உருவம் எனக்கு கிடைத்துள்ளது. 

பாருங்கள். நீங்களே  ஒத்துக் கொண்டுவிட்டீர்கள். 

எதேச்சையாக அவனுக்கு பின்பக்க மாக வந்த திவாகரன் தாத்தா அவனுக்கு வந்த நோட்டிஃபிகேஷன்களின்  எண்ணிக்கையைப் பார்த்து அதிர்ந்து போனார் .  

மருந்து ஃபார்முலாவை அவனுக்கு அளித்த அவனது நண்பனின் குழுவில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோட்டிஃபிகேஷன்கள் வந்து குவிந்திருந்தன. 

இரு. இரு. எந்த செய்திக்கும் இப்போது பதில் அனுப்ப வேண்டாம். என்றவரை ஏன் அப்படி சொல்கிறார் என்று ஆச்சரியத்துடன் பார்த்தான். 

 

திட்டம் 1 ஐ தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி:


 

திட்டம் 2: யாருக்கும் தெரியாமல்  ட்ராக்கிங் செய்ய முடியாத விண்கலத்தின் மூலம் தாத்தாவுடன்  பூமியை வந்தடைவது.

வழக்கமான பாடவகுப்பு முடிந்தவுடன் தன்னுடைய வயதுக்கு ஏற்ற பாடத்திட்டத்தின் சுருக்கத்தின் நகலை எடுத்து ஒருமுறை பார்த்தான் ராகுல். 

விண்கல தயாரிப்பு வழிமுறைகள் பற்றிய பாடத்திட்டத்துக்கு செல்ல அவன்  இன்னும் பல்வேறு கட்டங்களைத் தாண்டியாக வேண்டும். 

அதற்கு இன்னும் அதிக நேரம் வேண்டுமே. என்ன செய்யலாம்? 

எத்திக்கல் ஹேக்கிங் பாடத்திட்டத்தின் அடிப்படை பயிற்சியில் அவன் ஏற்கனவே தேர்ச்சி பெற்று இருந்தான். நாம் ஏன் அந்த பாடத்திட்டத்தை ஹேக் செய்யக்கூடாது என அவன் மூளை யோசித்த அடுத்த வினாடியே அவன் சுதாரித்துக் கொண்டான். 

அடடா. ஹேக்கிங் பற்றி யோசித்தாலே நாம் ட்ராக் செய்யப்படுவோம்  (கண்காணிக்கப்படுவோம்) அல்லவா?

உடனடியாக செயல்பட்டான். 

மூளைச் செயல்பாடுகளை கண்காணிக்கும் சிப்பைக் கண்டுபிடித்து அதனை சிறுநீரகத்துடன் இணைத்தான். சிறுநீரகத்தின் செயல்பாடுகள் பற்றிய சிப்பில் இருந்து தகவல்கள் பெரும்பாலும் கண்காணிக்கப்படுவதில்லை. 

இவன் சிறுவன் என்பதாலும் சிறுநீரகச் செயல்பாடுகளில் ஏதும் மாற்றம் இருக்காது என்பதால் அந்த கண்காணிப்பு வகைப்பாட்டுக்குள் அவன் இன்னும் வரவில்லை.

திட்டம் 2 ஐ தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி:


திட்டம் 3: வேறு ஒரு வருக்குப் பதிலாக விண்கலத்தில் பயணிப்பது.  

ஹலோ  ராகுல்:

உங்கள் காத்திருப்பு பட்டியல் “0998” என்றது ஒரு அழகான ரோபோ. 

அது விண்கலத்தில் பயணிப்பவர்களுக்கான  முன்பதிவு அலுவலகம். பூமி உள்ளிட்ட மற்ற கிரகங்களுக்கு அலுவல் நிமித்தமாக, ஆராய்ச்சிப்பணிகளுக்காக, ஆராய்ச்சிக்கு உட்படுவதற்காக, மற்ற கட்டமைப்பு மேம்படுத்தல் பணிகள் என பல்வேறுபட்ட நபர்கள் ஒன்று கூடும் அந்த அலுவலகம் எப்போது பரபரப்பாக இயங்கி கொண்டு இருக்கும். 

சரி. காத்திருக்கும் நேரத்தில் எதாவது ஒரு பாடப்பகுதியைப் பயிற்சி செய்யலாம் என யோசித்து அந்த சூழ்நிலைக்கு ஏற்றபடி முன்பதிவு அலுவலகத்தின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் என்ற பாடத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தான். 

அதில் படிக்க படிக்க அவனுக்கான திட்டம்  அவனுக்கு கிடைத்துவிட்டது. 

அவன் முறை வந்ததும் அவன் அழைக்கப்பட்டான். 

உங்களுக்கு என்ன உதவி வேண்டும்? உங்கள் தாத்தாவின் காத்திருப்பு பட்டியல் குறித்த விவரங்கள் தான் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அது குறித்து உங்களுக்கு மீண்டும் என்ன உதவி தேவை ? என ஒரு கரடு முரடான ரோபோ அவனிடம் கேட்டது.

நான் தற்போது இந்த அலுவலகம் பற்றிய ஆய்வுக்கட்டுரை ஒன்றை என் பாடத்திட்டத்துக்கு ஏற்ப அளிக்க வேண்டும். அது குறித்த விவரங்கள் சேகரிக்கவே இங்கு வந்தேன். 

அனைத்து விவரங்களும் ஏற்கனவே உங்கள் பாடத்திட்ட உதவிச் சேர்க்கைகளில் இருக்கும் அல்லவா? அதை பயன்படுத்துங்கள். 

இல்லை. எனக்கு வேறு சில தகவல்கள் வேண்டும். எதிர்காலத்துக்கு ஏற் ப  இந்த அலுவலகத்தின்  சில மேம்படுத்தல்கள் குறித்த ஆராய்ச்சிகள் செய்ய வேண்டும். அதற்காகத்தான் இங்கு வந்தேன்.

மன்னிக்கவும். இதுகுறித்த தகவல்களை என்னால் அளிக்க முடியாது. நீங்கள் உங்கள் ஆய்வுகுறித்த கோரிக்கைகளை எங்களிடம் அளித்த பிறகு தகவல்கள் அளிக்கலாமா வேண்டாமா என எங்கள் அலுவலக தலைமை அதிகாரி பரிசீலனை செய்த பிறகு தான் உங்களுக்கு  எந்த வித பதிலையும் எங்களால் அளிக்க முடியும். 

இதோ அளிக்கிறேன் என்று  கண்களின் வழியே தனது கோரிக்கை யை அந்த ரோபோவுக்கு அனுப்பினான்.

ரோபோ எதுவும் சொல்லாமல் நொடிப் பொழுதுக்குள் மறைந்தது. 

இது போன்ற சில சிக்கலான முடிவுகளை எடுக்க வேண்டும் என்றால் அலுவலத்தின் அதிபாதுகாப்பு அறைக்குள் செல்ல வேண்டும் என்பது அங்குள்ள விதிமுறையாகும். 

சில வினாடிகள் கழித்து,

ரோபோ ராகுலை போக் செய்த போது,…. ஒரு மேசேஜ் அவனை வந்தடைந்தது.

அதில்….

 

திட்டம் 3ஐ தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி:


திட்டம் 4: தன்னைப் போலவே ஒரு க்ளோனிங் உருவாக்கி  அந்த க்ளோன் பிரதியை இங்கு விட்டு விட்டு அவன் மட்டும் பூமிக்கு செல்வது. 

தாத்தாவிடம் தன் பயணத்திட்டத்தை அனுப்பிவிட்டு பள்ளிக்கு சில காலம்விடுப்பு தேவை  என்ற கோரிக்கையையும் அனுப்பிவிட்டு, க்ளோனிங் லேப்க்கு தன் பயணத்தை ஆரம்பிக்க காலில் உள்ள சிப்பை ஆன் செய்தான், அடுத்த சில நொடிகளில் “தேர்ந்தெடுத்த இடத்தை அடைந்துவிட்டீர்கள்” என்ற செய்தி கிடைத்தது. ஏற்கனவே முன்பதிவு செய்து வைத்திருந்த ஆய்வக யூனிட்டை அடைந்தான். 

அங்கிருந்த ரோபோ அவனது தகவல்களையும் வந்த நோக்கத்தையும் கேட்டறிந்து கொண்டு அவனுக்காக ஒதுக்கப்பட்ட இடத்துக்கு அழைத்து சென்றது. 

அங்கே அவன்  பார்த்த  இடங்களும் மற்றும் எல்லா ரோபோக்களும் ஒரே மாதிரியாக இருந்தன.  ஆம் க்ளோனிங் லேப் எப்படி இருக்கும்?

எந்த ரோபோவிடம் அவன் பேசினான் என்றே குழம்பிப்போனான். நல்லவேளையாக ரோபோவின் ஐடி அவனிடம் ஸ்டோர் ஆகி இருந்ததால்  பிரச்சனை இல்லை.

அவனிடம் பேசிவிட்டுச் சென்ற ரோபோ திரும்பவும் வந்தது. நீங்கள் உங்கள் ஆய்வைத் தொடங்கலாம். உங்களுக்கு தேவையான தகவல்கள், பொருட்கள் , உதவிகள் எல்லாம் வழங்கப்படும். 

ஆனால் ஒன்று. 

இங்கு நீங்கள் உருவாக்கிய க்ளோனை  உங்களுடன் எடுத்துச் செல்ல முடியாது. அந்த க்ளோன் இந்த ஆய்வகத்தில் தான் இருக்க வேண்டும். இதுதான் விதி. என்றது.

சரி என்றவாறே வேலையைத் தொடங்க ஆயத்தமானான் ராகுல்.

 

திட்டம் 4ஐ தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி:


 

திட்டம் 5: தாத்தாவின் நண்பர் ஒருவரின் உடலைப் பயன்படுத்தி அதன் மூலம் பூமிக்குச் செல்வது. 

எப்போதுமில்லாமல் இன்று ஏனோ தாத்தாவால் போதுமான நேரம் தூங்க முடியவில்லை. புரண்டு கொண்டே இருந்தார். திடீரென தனது பூமிக்கிரக நண்பரின் முகம் அவர் கண்முன் வந்து ப்ளாஷ் அடித்தது. உடனே அவரைத் தொடர்பு கொண்டார் தாத்தா.

மறுமுனையில் இருந்த அவரது நண்பர் அவரிடம் தெரிவித்தது இதுதான்.

அவரது பல்வேறு உடல் உறுப்புக்களும் சரி, பயோனிக்ஸ் (இயந்திர உடல்) பாகங்களும் சரி எல்லாமே கிட்டதட்ட செயலிழக்கும் தருவாயில் உள்ளதாகவும் முழு செயலிழப்பு வெகுவிரைவில் நடந்துவிடும் என்றும் அதன் பிறகு இந்த உடல் முழவதும் செயலற்றதாக ஆகி விடும் என்றார். 

தாத்தா உடனே அவரை சென்று பார்த்துவிட்டு வரலாம் என்று கிளம்பும் போது ,

தாத்தா, எங்க போறிங்க, நானும் வரேன் என்று கூடவே ஒட்டிக்கொண்டான் ராகுல்.

இருவரும் அவரத்து நண்பரின் இடத்தை அடைந்தனர். தாத்தா அவருடன்  பேசிக் கொண்டிருக்கும் போது ராகுல் அவருக்கு அருகில் இருந்த அவரது நிலை குறித்த அறிக்கைகளைப் பார்த்துக் கொண்டிருந்தான். 

ஆ… இது சரியாக வரும்… 

திட்டம் நன்றாக இருக்கிறதே என்று அதைப் பற்றி மேலும் யோசித்தவாறு இருந்தான்.  

ராகுல் கிளம்பலாமா? என்ற தாத்தாவிடம்,

இவருக்கு மெடிக்கல் கேர் செய்ய யாரும் இல்லையா தாத்தா?

இருந்தாங்க. ஆனா இப்போ இவருக்கு எவ்வளவு  நல்ல கேர் குடுத்தாலும்  அது தேவையற்றதாகிவிடும் என்ற நிலை இருப்பதால் யாரும் கொடுக்க வில்லை என்றார்.

நான் ஒருமுறை கொடுத்துப் பார்க்கலாமா? என்றான்.

என்ன நீயா?. உனக்கு இன்னும் அதற்கெல்லாம் லைசென்ஸோ அல்லது அக்ஸெஸோ அளிக்கப்படவில்லை. 

உன்னால் முடியாது. வா போகலாம் என்றார். 

இல்லை தாத்தா எனக்கு கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள். என்னால் முடியும் என்று எனக்கு தோன்றுகிறது, நான் இவருக்கு மெடிக்கல் கேர் கொடுத்து பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.

சரி. உன் இஷ்டம். 

ட்ராக்கிங் சிஸ்டத்தை டிஸேபிள் செய்துவிட்டு இங்கேயே இரு. 

நான் உன்னுடைய ட்ராக்கிங் சிஸ்டம் சரியாக வேலை செய்யவில்லை என்று டிக்கெட் புக் செய்கிறேன். என்றார். 

ஏன் அப்படிச் செய்ய வேண்டும் தாத்தா? என்றவனிடம், 

நாங்கள் பூமியில் இருந்து வந்தவர்கள் அல்லவா? எங்களுக்கு எதை -எப்போது – எப்படி செய்ய வேண்டும் என்றெல்லாம் உங்களை விட அதிகம் தெரியும் என்று சிரித்துக் கொண்டே கூறினார். 

தாத்தாவின்  இந்த வார்த்தைகள் பூமிக்குச் செல்ல வேண்டும் என்ற அவனது ஆவலை இன்னும் அதிகமாக்கியது. 

திட்டம் 5 ஐ தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி:


கதை இப்படியே நிற்கட்டும். 

சிறுவர்களுக்கான எழுத்து என்பது கற்பனையை தூண்டும் விதமாக இருக்க வேண்டும். 

கதையைப் படித்தவர்கள்  இங்கே கீழே நான் முன்வைக்கும் சில  திட்டங்களில் எந்த திட்டத்தை அவன் பின்பற்றினால் வெற்றிகரமாக தாத்தாவுடன் பூமியை வந்தடைவான் என்று  ஊகிக்க வேண்டும். 

 

திட்டம் 1: தன் வயதை அதிகரித்து அந்த கிரகத்தின் சட்டங்களின் படி பயணம் செய்வது.  

திட்டம் 2: ட்ராக்கிங் செய்ய முடியாத விண்கலத்தின் மூலம் தாத்தாவுடன்  பூமியை வந்தடைவது

திட்டம் 3: வேறு ஒரு வருக்குப் பதிலாக விண்கலத்தில் பயணிப்பது.  

திட்டம் 4: தன்னைப் போலவே ஒரு க்ளோனிங் உருவாக்கி  அந்த க்ளோன் பிரதியை இங்கு விட்டு விட்டு அவன் மட்டும் பூமிக்கு செல்வது. 

திட்டம் 5: தாத்தாவின் நண்பர் ஒருவரின் உடலைப் பயன்படுத்தி அதன் மூலம் பூமிக்குச் செல்வது. 

இவற்றில் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். 

அதிக அளவு பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன. 

எந்த திட்டம் அதிக வாக்குகள் பெறுகின்றதோ,  அந்த திட்டத்தின்  படி கதை தொடரும். 


-காயத்ரி சிவக்குமார்

பகிர்:
Latest comments
  • மிகவும் அற்புதமான அறிவியல் படைப்பை கதை வடிவில் சிறப்பாக வழங்கிய திருமதி. காயத்ரி சிவகுமார் அம்ைமையார் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். எழுத்தாற்றல் பளிச்சிடும் அவருடைய தொடர்கதை மேன்மேலும் சிறக்க மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள்

  • Interesting science fiction children series. Tamil children will enjoy reading the story. Wishes to Gayathri Sivakumar

    Ko.Ma.Ko.Elango

leave a comment