எங்கட


   ஓம் தோழர். என் நெருங்கிய நண்பன் சொன்னதால் அவரைச் சந்திக்க சென்றிருந்தேன். அங்கு சென்ற போது தான் அவர் பதினைந்து வருடங்களுக்கு முன்னரே எங்கள் குடும்பத்திற்கு அறிமுகமானவரென்பது தெரிந்தது. அதன்பின் அவரிடமிருந்து விலகிவர முடியவில்லை. அரைகுறை மனதோடு அவரது கதையினைக் கேட்பதுபோல பாவனை செய்துகொண்டிருந்தேன். எனது நினைவெல்லாம் விடுமுறைக் காலம் முடிய இன்னும் நான்கு நாள்கள் தான் இருக்கிறது என்பதாகவே இருந்தது.

அவர் அறிமுகமாகிய அந்தக் காலத்தில், நான் உடுப்பிட்டியில் இருக்கும் பிரபல கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். வீட்டில் இருந்து கல்லூரிக்கு நடந்து செல்வதுதான் வழமையானது. சில தினங்களுக்கு ஒருமுறை, அம்மா ஒருரூபாய் காசு தருவார். வீடு திரும்பும்போது பீடாகடையில், அல்லது குருட்டு நல்லையாவின் பெட்டிக்கடையில் இனிப்பு முட்டாசி வாங்குவேன். சிலநேரம் கல்பனிஸ். ஒருரூபாய்க்கு மூன்று கல்பனிஸ் கிடைக்கும். அவர் கல்லூரி முடிந்து திரும்பும் வழியில், சந்தைக்கு அருகில் பலூன் விற்றுக்கொண்டிருப்பார். அக்காலங்களில் நான் தனியாகச்சென்று பலூன் வேண்டியதாக நினைவேதுமில்லை.

என்னையொத்த சிலர் தங்கள் பெற்றோர்களுடன் அவரிடம் பலூன் வேண்டுவதை ஏக்கத்தோடு பார்த்திருக்கிறேன். நான் அவரை நெருங்கிச் சென்றதேயில்லை. சைக்கிளில் வைத்திருந்த பையும், அவரது தோற்றமும் பயமூட்டியிருந்தன. ஏமாற்றிப்பிள்ளை பிடிப்பவர்கள் ரோடுகளில் திரிவதாக அம்மா வெருட்டியிருந்தார்.

நான் அவரிடமிருந்து விலகிவந்துவிட வழி தேடிக்கொண்டிருந்தேன். அவரோ, நான் அவர் சொல்வதைக் கேட்கிறேனோ, இல்லையோ என்ற கவலையேது மில்லாமல் கதையினை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார்.

அது ஒரு செழிப்பான காலம் தம்பி. “உடுப்பிட்டிச் சந்தையடியில் பலூன் விற்றிருக்கிறேன். என்ர சொந்த இடம் பலாலி. அங்கையிருந்து இடம் பெயர்ந்து வந்து நவிண்டிலில் இருந்தனான். பாழ்பட்டுப்போவார் வந்தாங்கள். அதோடு எல்லாம் தலைகீழாக மாறியது. ஆமி வர நீங்கள் ஓடியிருப்பியள். இப்ப லீவில் வந்து நிற்கிறீங்கள். என்னைப் பார்க்க கோபம் வரும்தான் தம்பி. விடும், மனசறிஞ்சு நான் அநியாயம் செய்யவில்லை. “இருந்தால் செட்டி எழும்பினால் சேவகன்” என்ற கதைதான் என்ரபாடு.”

அந்தநேரம் எத்தனை பாடுகள். எத்தனை அலைச்சல்கள். இருந்தாலும் வாழ்க்கை அந்தமாதிரிதான் இருந்தது. இப்ப காசு பணம் பிளங்குகிறதுதான். அதைவைத்து என்னதான் பன்னுவது. எண்டாலும், சும்மா சொல்லக்கூடாது இப்பவும் என்னை பலூன் வியாபாரியார் என்றுதான் கதைப்பார்கள். கூப்பிடுவார்கள் அந்தக்கணம்எதோ கொஞ்சம் சந்தோசமாகத்தான் இருக்கும். இருந்துமென்ன எனக்கு முன்னால் நல்லமாதிரி கதைத்துவிட்டு அங்காலைபோய்க் கண்டபடி கதைப்பார்கள். உதெல்லாம் தெரியும் தம்பி இருந்தாலும் காசு வருது. பசி,பட்டினி வறுமையெண்டில்லாமல் நாலைஞ்சு சீவனுகளை காப்பாற்றிக் கொண்டு இருக்கிறன். அது போதும்.

முந்தி ரோடுரோடாக அலைந்து வியாபாரம் செய்தேன். அந்தநேரம் களைத்து ஒருவாய் தண்ணி கேட்டாலும் எங்கட சனம் மேலும் கீழும் பார்த்துத்தான் தருவார்கள். எதோ கள்ளனைப் பார்ப்பதுபோலப் பார்ப்பார்கள். வெறுவாய்க்கு சொல்லக் கூடாது. தண்ணி கேட்ட வீட்டில் சோறு தந்த சனமும் இருக்குதுகள்தான். அவைக்கு என்ன கைம்மாறு செய்வது. என்னிடமிருப்பது பலூன் மட்டும்தான். அதைக் கொடுத்தாலும் வேண்டமாட்டினம். அதுக்கும் காசு தாருவார்கள். அப்படியானவை இருக்கிற இடங்களுக்கு நெடுக்கப் போறதில்லை. போனால் சாப்பாட்டுக்கு வாறது என்றும் நினைத்துவிடக் கூடும். சில நாள் கழிச்சுப்போனால் “என்ன கனகாலமாய் காணயில்லை என்று கேட்பினம் அதில கிடைக்கிற சந்தோசம் வேற எதில கிடைக்கும்.

என் தரவளியெல்லாம் உத்தியோகம் தோட்டம் துரவு என்று வசதியாக இருக்க, நான் இப்படி ஐந்துக்கும் பத்துக்கும் அலைகிற பிழைப்பு என நெடுக நினைக்கிறதுதான். இப்பவும்தான் என்ன பெருசா மாறிப்போச்சு. சுகதுக்கம் சுழல் சக்கரம் என்றது போல, அதே அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடுற இழவுதான்.

உடலாலும் மொழியாலும் பேசிக்கொண்டிருந்தவரை கூர்ந்து அவதானித்தேன். முகச்சாயலில் மாற்றமில்லை. முன்பைப்போல நிமிர்ந்த தோற்றம். தலை நரைத்திருக்கிறது. நெடுநெடுவென கருத்த தேகம். ஒட்டிய வயிறு. இறுகிய தசைகள். சிலருக்கு வலிஞ்ச உடம்பு என்பார் அம்மா. அவர்கள் இப்படித்தான் இருப்பார்களென நினைத்துக் கொண்டேன். பழுப்பு நிற சேட்டும், பூவாளி சாரமும் கட்டியிருந்தார். கையில் இறுக்கமில்லாமல் தள தளவென கிடக்கும் வெள்ளிநிற மணிக்கூட்டைக் காணவில்லை. மற்றபடி பழைய அதே ஆளாகத்தான் இருந்தார். அதே சிரிப்பு.

கல்லூரி முடிந்து வரும்போது ஒருதடவை, அப்பாவிடம் பலூன் வேண்டித்தரச் சொல்லிக் கேட்டேன். எப்பவாவது கல்லூரி முடிந்து அழைத்துச் செல்லவென வரும் அப்பா, அந்த சமயத்தில் எது கேட்டாலும் வாங்கித்தர மறுப்பதில்லை. முதல் தடவையாக அவருக்கு அருகில் செல்கிறேன். பயத்தில் அப்பாவின் பின்னால் ஒளிந்துகொண்டேன். அன்றும் இதே சிரிப்புடன் தான் என் கையை பிடித்து பலூனைக் கொடுத்தார். அப்போது அவரது கண்களும் சிரிப்பதுபோலவே இருந்தது.

நினைவுக்கு வந்ததும் அவரது கண்களைப் பார்த்தேன். வெட்டப்பட்ட நுங்கினைப் போலவொரு பளபளப்பு. மனிதரது கண்கள் ஒருபோதும் மாறுவதில்லைப்போலும் என எண்ணிக்கொண்டேன். ஏதோ சொல்லிக் கொண்டிருந்தவர் நிறுத்தி “நீர் எப்ப வெளியாலை போனது ?” என்று கேட்டார். இருபது வருசம் வரும் என்றேன் என்னைமீறி. யார் கேட்டாலும் இப்போதெல்லாம் இருபது வருசம் என்று சொல்லியே பழகிவிட்டது. அப்படித்தான் இருக்கும் என எனக்குள் சொல்லிக்கொண்டேன். பின் மெதுவாக அவரிடம் தேத்தண்ணிக்கடை பிரம்பனை யார் சுட்டது என்று கேட்டேன்.

பிரம்பன் என்னுடன் படித்தவன். கல்லூரிக்கு வரும் வழியிலேயே படிப்பு வரவில்லை என்று தந்தையாரின் தேநீர்க்கடையில் வேலை செய்கிறேனென்று நின்றுவிட்டவன். ஆசிரியர்கள் வைத்திருக்கும் பிரம்புகளை எப்படியாவது எடுத்து முறித்து எறிந்துவிடுவதால் அவனுக்கு பிரம்பன் என்று பட்டப்பெயர் சூட்டியிருந்தோம். ஒருமுறை அவனது கடைக்கு தேநீர் குடிக்கவென எங்கள் தமிழ் வாத்தியார் போயிருக்கிறார். அவரைப் பார்த்துவிட்டு, பிரம்பன் சீனிப்போத்தலில் இருந்த எறும்பைப்பார்த்து, “டேய் சீனிவாசா கடியாதையடா” என்று சொல்லியிருக்கிறான். வாத்தியாருக்கு பெயர் சீனிவாசன். வாத்தியார் அவனது காதை பிடித்து இழுத்துவிட்டு, எங்கள் வகுப்பில் வந்து “அவன் ஒரு கிறுக்கன்தான். எண்டாலும் நல்ல மூளைசாலி” என்று சொல்லி சிரித்தார்.

பிரம்பன் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டதை, பரிஸில் இலவசமாக விநியோகம் செய்யப்படும் ஈழமுரசு பத்திரிக்கையில் வாசித்து அறிந்திருந்தேன். அந்த செய்தியில் தமிழீழப்படத்தை பெரிதாக போட்டு அதற்குள் நிழற்படமும் பொறிக்கப்பட்டிருந்தது. அது காணாமல் போன பிரம்பனின் தமையனது படமாகயிருந்தது. கறுப்பு வெள்ளைப் புகைப்படமாக இருந்தமையால் யாராலும் கண்டுபிடித்துவிட முடியாது என்று அவர்கள் கருதியிருக்க வேண்டும்.

பிரம்பனின் தமையன் பல்கலைக்கழக அனுமதிக்கான பரிட்சை எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருந்த நாளொன்றில் துணைக்குழுவினரால் அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். இந்திய இராணுவத்தினரின் மேற்பார்வையில் துணைக்குழுவினர் கட்டப்பஞ்சாயத்து செய்துகொண்டிருந்த காலம் அது. பகுதி நேரமாக இரும்புப்பட்டறை ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்த அவரை தங்கள் முகாமில் ஒட்டுவேலை இருப்பதாக கூறி அழைத்துச்சென்றனர். மாலைவரை மகன் வீடுதிரும்பாத நிலையில், பிரம்பனின் தாய் துணைக்குழுவினரின் முகாமிற்கு சென்று கேட்டிருக்கிறார். அதற்கு அவர்கள், வேலை முடியவில்லை மறுநாள் வருவார் என்று கூறினார்களாம். அடுத்தநாள் அதிகாலை நான்கு மணியளவில் பிரம்பனின் தமையன் வீடு வந்திருக்கிறார். வந்தவர், அம்மா இனி இங்கே இருந்தால் என்னைக் கொன்று போடுவார்கள் என்று சொல்லி அழுதிருக்கிறார்.

மகன் அழுவதைப் பார்த்த தாய் தானும் சேர்ந்து அழுதிருக்கிறார். அப்போதுதான் முகாமில் தான் செய்தவேலையைப் பற்றி சொல்லியிருக்கிறார். அங்கிருந்து தப்பியோடி வந்துவிட்டதையும் கூறியிருக்கிறார். தந்தையார் நிலைமையின் விபரீதத்தை உணர்ந்துகொண்டார். அவனது கல்லூரி அதிபரையும், முத்துமாரிஅம்மன் கோயில் குருக்களையும் அழைத்துக் கொண்டு உடுப்பிட்டி இராணுவமுகாம் பொறுப்பாளர் கேணல் சர்மாவிடம் முறையிட்டனர். அவர்கள் இருவரும் அந்தப்பகுதியின் பிரஜைகள் குழு உறுப்பினர்கள். இந்திய இராணுவனத்தினரால் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளை முறையீடு செய்யவென அரசசார்பற்ற நிறுவனங்கள் இணைந்து “பிரஜைகள் குழு” என்ற அமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது.

கேணல் சர்மாவிடம் முறையீடு செய்த மூன்றாம் நாள், இந்திய இராணுவத்தினர் பிரம்பன் வீட்டுக்கு வந்து சோதனை செய்தனர். விசாணைக்காக என்று பிரம்பனின் தமையனை அழைத்துச் சென்றார்கள். பின்னர் அவர் வீடு திரும்பவே இல்லை.

இந்திய இராணுவம் இலங்கையை விட்டு வெளியேறிய பின், துணைக் குழுவினர் முகாமாக பாவித்த வீட்டின் உரிமையாளர், வீட்டில் திருத்த வேலைகளைச் செய்தபோது மலசலகூட குழியிலிருந்து நான்கு மண்டையோடுகளையும் சில எலும்புகளையும் மீட்டனர். அவற்றில் மூன்று பெண்களின் எலும்புக்கூடுகள். அவை இரும்புக்கூண்டு ஒன்றுக்குள் இருந்தன. மூன்று பெண்களும் எதிரெதிராக இந்திய முத்திரையில் காணப்படும் சிங்கங்களின் வடிவத்தில் நிர்வாணமாக நிற்கவைத்து, கை கால்களை அசைக்க முடியாதவாறு நெருக்கமாக இரும்புக்கூண்டுக்குள் உயிருடன் அடைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று தடயவியல் குறிப்புகள் தெரிவித்ததாக பத்திரிக்கைச் செய்திகளில் வந்திருந்தது.

தனது தாயார், இந்திய இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்ட தமையன் வீடு திரும்பி வரும்வரை சோறு சாப்பிடுவதில்லை என நேர்த்தி வைத்திருப்பதாகவும், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அதிகாலை தோய்ந்து ஈர ஆடையுடன் சந்நிதி முருகன் கோவிலுக்கு நடந்து சென்று வேண்டுதல் செய்வதாகவும் அடிக்கடி கூறுவான் பிரம்பன். அப்போதெல்லாம், உறங்க இயலாமல் அலையும் காட்டுமிருகம்போல் தோற்றமளிப்பான். தாயின் துயரத்தை தாங்கமுடியாத வெதும்பலில்தான் அவன் வீட்டுக்கு வெளியில் குழப்படிகள் செய்திருக்க வேண்டும். என் நினைவுகளில் குறுக்காக விழுந்துகிடக்கும் அவனை சுட்டது யார் என்றுதான் கேட்டேன்.

கண்கள் விரிந்து ஆவலாய் அவனை உங்களுக்கு தெரியுமா என்று கேட்டார். தலையை அசைத்தேன். பின் மெதுவாக என் நண்பன்தான் என்றேன். அது அவருக்கு கேட்டிருக்குமோ தெரியாது. ஆனால் அவர் சொல்லத் தொடங்கினார்.

அண்டைக்கு இயக்கம், சந்தியில் நின்ற ஆமிக்கு கிளிப் அடிச்சுப்போட்டு சந்தைக்கு பக்கத்தில் நின்ற என் சைக்கிளைத்தான் எடுத்துக்கொண்டு ஓடினார்கள். ஓடிய அதே வழியில் மதவடிக்கு அருகில் காம்புக்கு வந்த சாப்பாட்டுப் பார்சல்களை பறித்துக் கொட்டிவிட்டு என் சைக்கிளையும் அதில் போட்டுவிட்டு போய்விட்டார்கள். சைக்கிளில் இருந்த பைக்குள் பலூன். நேரே என்னிடம் வந்தார்கள். கைது செய்தார்கள். “காம்ப் கொமாண்டர் முனசிங்க பண்டார” கொஞ்சம் நல்லவன். அவனுக்கு விஷயம் விளங்கியிடுத்து மூன்றாம் நாள் என்னை விட்டுட்டாங்கள். மறுநாள் வியாபாரத்துக்கு வரும்போது தான் சொன்னார்கள், தேத்தண்ணிக்கடைப் பொடியனை சுட்டுவிட்டார்கள் என்று. கிளிப் அடிச்ச கோபத்தில் கடையிலிருந்த அவனை இழுத்து சுட்டார்களாம். மூன்று வெடி மூளை சிதறிச் சாவு.

அதிலிருந்து எனக்கும் பிரசனைகள்தான். இரண்டு தரப்பும் சந்தேகத்தோடு பார்க்கத் தொடங்கினார்கள். வியாபாரத்துக்கு வராவிட்டால் ஆமி தேடிவருவான். வியாபாரத்துக்கு போனால் இயக்கம் தேடிவரும். ஒரு பக்கம் பசி, வறுமை என்ன செய்வது தொடர்ந்து வியாபாரம் செய்தேன். மண்டையுள்ளது வரைதானே சளி.

சந்தியில் காவலுக்கு நின்ற ஆமியை, பள்ளிக்கூடத்தில் படிக்கிற பிள்ளையொருத்தி விரும்பி இருக்கிறாள். கூடப்படிக்கிற பிள்ளையளுக்கு தெரிந்திருக்கிறது. சந்தைக்குள் வைத்துதான் அவர்கள் சந்தித்து கதைத்திருக்கிறார்கள். சந்தைக்கு வந்தது சந்திக்கும் வந்திடும் தானே. அந்த நாள்களில்தான் வதனா அந்த இடத்துக்கு வந்தாள். அவள் முதலே ஆமியோடு இருந்தவள். அவளை தெரிந்த ஆமி ஒருத்தன் “உடுப்பிட்டிக்கம்ப்”க்கு மாறி வந்திருக்கிறான். பிறகு வதனா மாயாவாகி, மாயா வவ்வாளாகியது. இது அங்கு எல்லோருக்கும் தெரியும். உடையார்வளவுப் பொடியளும் கலைச்சுக்கொண்டு திரிஞ்சவங்கள். அவர்களில் ஒருவன் வதனாவை விசாரித்து என்னிடம் வந்தான். கையைக் காட்டிவிட்டேன். வதனாவை சுட இயக்கம் தேடித் திரிந்தவர்கள்தான். அவள் சுழிச்சுப்போடுவாள்.

முதலில் எனக்கும் அவளில் கோபம்தான். இயக்கத்திடம் அவளைக் காட்டிக்கொடுத்து சுடவேண்டும் என்று நினைத்திருக்கிறன். நல்லகாலம், அந்தநாளில் அவளைக் காட்டிக்கொடுத்து இயக்கம் மண்டையில் போட்டிருந்தால் இண்டைக்கும் நான் நின்மதியாக தூங்கியிருக்கமுடியாது. அவளுக்குமென்ன என் இரண்டாவது பிள்ளையின் வயதுதான் இருந்திருக்கும்.

பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நிறையப் பேர், முகம் தெரியாதவன் எல்லாம் வந்தாங்கள், கேட்டாங்கள், சிலபேர் காசு தந்தார்கள். சனமெல்லாம் என்னையும் இழுத்து கதைக்கத் தொடங்கியது. என்ன செய்வது வறுமை அந்த இடத்தில் என்னை வைத்திருந்தது. சோறில்லாமல் வெறும் தண்ணியை குடித்து எத்தனைநாள் மத்தியானத்தைக் கடத்தி இருப்பேன். எத்தனை இரவை வயிறு குழற கடத்தி இருப்பேன். வீட்டில் நான்கு சீவன்களும் பனம்பழத்தையும் புளியையும் கரைச்சுக் குடித்துட்டு இருப்பார்கள். நான் வரும்போது ஏதாவது கொண்டுவருவேன் என்று எதிர்பார்த்திருப்பார்கள். ஒருநாள் நல்ல சோறு என்றால் ஒரு கிழமை பட்டினிதான். எதைச்செய்தாலும் கடைசி மகளின் பசிக்கண் முன்னால் வந்து நிற்கும்.

கொஞ்சநாளில் நானும் மாறிதான் போனன். நான் என்ன செய்கிறேனென்று எனக்கு கடைசிவரை தெரியவேயில்லை. செய்ய தூண்டியதே எங்கட ஆக்கள்தான். வாறவர்கள் தரும் காசுக்காக முதலில் சாராயம், மிக்சர், சாப்பாடு என்று தொடங்கினேன். பிறகு அவங்களுக்கு தேவையான சாமானுகள் என்று வியாபாரம் செய்தேன். தேவையானவர்கள் கோல் பண்ணி சொல்ல ஒழுங்கு பண்ணி அனுப்பினேன். இப்படியே என்னையறியாமல் நான் முழுமையாக உள்ள போய்விட்டேன். வாய்விட்டுச்சொன்னால் புரோக்கர் வேலைதான்.

ஒருபக்கம் யுத்தக் கொடுமை. சனமெல்லாம் பசி பட்டினி வறுமை. மறுபக்கம் வெளிநாட்டுக் காசு, வெளிநாட்டுக் குடி, வெளிநாட்டு வாழ்க்கை. எனக்கும் பசி வறுமை குடும்பம் வாழ்க்கை. நான் என்ன செய்வது. பசிக்கும் பணத்திமிருக்கும் இடையில் நான். ஒரு பக்கம் பசி ஆறினார்கள். ஒருபக்கம் திமிர் அடக்கிப்போனார்கள். சில பெண்கள் தங்கள் பிள்ளைகளின் பசிக்காக வந்தார்கள் . சிலபேர் தொலைபேசிக்கும் ஆடம்பரத்துக்குமாக வந்தார்கள்.

பாதை திறந்தார்கள். இன்னும் வசதிகள் கூடியது. எல்லாம் காசு. நானும் வேற என்ன செய்வது. இழுத்து வந்துவிட்ட வழியில் ஓடினேன். இப்ப அங்கேயிருந்து வவுனியாவில் வந்து நிற்கிறேன். இனி இப்படியே எங்கயோ. என் குடும்பமெல்லாம் கண்டியில் இருக்கின்றார்கள். பிள்ளைகள் அங்கயே ஒருபெரிய பள்ளிக்கூடத்தில படிக்கினம். நன்றாக படிப்பார்கள். எப்படியாவது படிப்பித்து விடவேண்டும். நான் இனிவேற ஒன்றும் செய்யமுடியாது நான்தான் நடுவில் நிற்கிறேன். இரும்பு அடிச்ச கையும், சிரங்கு பிடிச்ச கையும் சும்மா இராது. உங்களுக்கு எல்லாத்தையும் விளக்கமாக சொல்லிவிட சங்கடமாக இருக்கிறது என்று முடித்தார். எனக்குள் சிரித்துக்கொண்டேன். பிரான்ஸிலிருந்து வந்த என்னிடமிருந்து அவர் எதுவுமே எதிர்பார்க்கவில்லை. தன்னை ஒரு மனிதனாக, தந்தையாக, நண்பராக மதிக்கும்படியான கோரிக்கைதான் அவரது குரலில் இருந்தது. அவரிடமிருந்து அப்படியே விடைபெற்றேன்.

தோழர், நான் அவரிடம் சென்றதன் காரணம் உங்களுக்கு புரிந்திருக்கும். இது ஒரு வலைப்பின்னல். எங்கோ ஒரு இடத்தில் ஆரம்பித்து எங்கோ ஒரு இடத்தில் முடிவு இருக்கும். ஆச்சரியமான விடயங்கள்தான் . நான் இன்னும் நான்கு நாட்கள் இங்கு இருப்பேன்.

நீங்கள் உதவி செய்யுங்கள். நான் பிரான்ஸ் போனதும் உங்களோடு தொடர்ந்து தொடர்பில் இருப்பேன். எங்கள் ஆக்கள் நிறையப் பேர் இப்போது வந்து போகிறார்கள். நான் அங்கேயிருந்து ஒழுங்குபடுத்தலாம். உங்களுக்கும் நல்ல வருமானம் வரும்.

லீவில் வந்தனான். நான்கு நாள்களில் போய்விடுவேன். இனி எப்படியும் வர ஒருவருடம் ஆகும். அதற்குள் பார்த்திட்டு போவம். எல்லாம் உங்கள் கையில்தான். இப்போது இதை மட்டும் செய்யுங்கள். எனக்கு பலூன் வியாபாரியாகிய அந்த அய்யாவை சிறுவயதிலிருந்தே தெரியும். மிக நல்லவர். மற்றவர்களுக்கு உதவி செய்வதற்கு ஒருபோதும் தயங்காதவர். உங்களை மாதிரித்தான். அவர் என் அப்பாவின் ஒரு காலத்திய நண்பரும் கூட. சிலவேளை அப்பாவும் அவரும் நாளைகூட சந்திக்கலாம். நான் அவரை சந்தித்தது போல். அப்படி சந்தித்துவிட்டால் எல்லாவற்றையும் பேசுவார்கள். நான் அதனால்தான் என்னைப் பற்றி அவரிடம் எதுவுமே சொல்லவில்லை.

வேறொன்றுமில்லை, திருப்பவும் சொல்லுறன். நீங்கள் இப்போது இதை எனக்காக கதைத்து முடித்துத்தாருங்கள். நான் உங்களை கவனிக்கிறன். நான் பிரான்ஸ் போனதும் அங்கிருந்து விடுமுறைக்காக இங்கு வாறவர்களை ஒழுங்கு பண்ணித் தருகிறேன். நானும் சிலநாள்களில் திரும்பிப் போய்விடுவேன். அங்கு இதெல்லாம் சாதாரணம். என்னவொன்று கறுப்புகளும், அடைகளும்தான். இது எங்கடயல்லவா.


  • நெற்கொழு தாசன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.