Wednesday, Sep 30, 2020
Homeசிறப்பிதழ்கள்சிறப்பிதழ் 1ராணி திலக் உடனான நேர்காணல்

ராணி திலக் உடனான நேர்காணல்

ஏதுமற்ற நதியைப் பார்க்க யாரும் இல்லை.  அங்கே சென்று அந்த வெறுமையைப் பார்த்தால்தான் தெரியும், வெறுமை என்பது கலையின் மாபெரும் ஆதாரப்புள்ளி”

 

தொண்ணூறுகளின் தமிழ்க்கவிதையின்  ஒரு ஒளியேறிய பருவத்தில் தனிமையும் ,கனவுத்தன்மையும், இயற்கையின் ஜீவிதமுமான பேரழகின் மொழியாக வெளிப்பட்டவை ராணிதிலக் கவிதைகள்.  வறண்ட வேனல் நிலத்தின் ஜென் என்பது போன்ற  மனத்தருணங்களும் களிப்புகளும் பொதிந்தவை. இன்மையிலிருந்து அதீத இருப்புகளைத் தொடுபவை.   சாதாரணமான  உரைநடைலயமான பாவனையிலேயே அசாதாரணமான  அறிதல்களை, மாயமலர்களை, நமக்குப் பறித்தளிப்பவை.  அவரது  பிரஜைகளான கூழாங்கற்கள், தாமரைகளின் எளிமையும் பிடிபடா  விநோதமும்  அந்த மொழிக்கும் உண்டு.  பௌராணிகங்களும்  ஐரோப்பிய உலக மனமும், பிராந்திய தினசரிக் குறிகளற்ற நிலமுமான ஒருவித பிரபஞ்சமான போதத்தில்  அவை இயங்குகின்றன. அமனிதப் பிரபஞ்சத்தின்  இருப்புகள் எல்லாம் அவர் கவிதைகளில் ஜீவத்துவமும் கண்களும் கொண்டுவிடுகின்றன. விளையாட்டும் ஞானமும் முயங்கிய அவரது கவிதைகளின் பித்தேற்றும் மயக்கநிலைகளை அவரது இந்த உரையாடலிலும் காணமுடிகிறது. 

நாகதிசை ராணிதிலக்கின் முதல் தொகுப்பு, காகத்தின் சொற்கள் முழுமையாக உரைநடைக் கவிதைகளின் தொகுப்பாக வெளியானது. விதி என்பது இலைதான், நான் ஆத்மாநாம் பேசுகிறேன், கரா தே  ஆகியவற்றைத் தொடர்ந்து தற்போது  ப்ளக் ப்ளக்  ப்ளக்  தொகுப்பு வெளியாகியுள்ளது.  ’சப்தரேகை’ என்று கவிதை மீதான கட்டுரைத் தொகுதியும் வந்துள்ளது. உலகக் கவிதைகளில் பரந்துபட்ட வாசிப்பு கொண்டவர். சிறுபத்திரிகை சார்ந்த எழுத்து மனச்சான்றை தீவிரமாக வலியுறுத்துபவர். பாலி என்ற சிறுபத்திரிகை நடத்தியவர். 

 

 •  தொண்ணூறுகளின் பிற்பகுதியில்  எழுதத் தொடங்கியவர் நீங்கள். அந்தக் காலகட்டத்தின் ஒரு மனச்சூழல் குறித்தும்,  உங்கள் வாசிப்பு,  எழுத்துப்பருவமும்,  அதன் தனிச்சுபாவங்கள் உருவான  மூலங்கள் குற்றிதும்  உரையாட முடியுமா? 

ஆரம்பமே நன்றாக இருக்கிறது.  90 களின் தொடக்கத்தில், நவீன கவிதையில் கவிஞர்களின் புதிய அலை ஒன்று  எழுந்தது.  கோணங்கியின் வார்த்தையில் சொல்வதானால், Little masters. ஸ்ரீநேசன், சங்கரராம சுப்ரமணியன், லஷ்மிமணிவண்ணன், பாலைநிலவன், கண்டராதித்தன், மாலதி மைத்ரி, குட்டி ரேவதி என்று தொடரும் பட்டியல் நீளமானது. இவர்களுடன் நான் எழுதத்தொடங்கியது, மனதிற்கு ஆரோக்யமாக இருக்கிறது.  அந்தக் காலகட்டத்தில் நான் வேலை  இல்லாத, குடும்பப் பொறுப்பு இல்லாத, ஒரு பைத்தியக்காரனைப்போன்று சுற்றித் திரிந்துகொண்டிருந்தேன்.  

ரஷ்ய எழுத்துகளுடன், வாசிப்பில் ழாக் ப்ரெவர், ஓசிப் மெண்டல்ஸ்டாம், அக்மதோவா, மரியா ஸ்வெட்டேவா, ஜோகோ சாபர்டிகோ தமனோ ஆகியோரின் கவிதைகள்  அடிக்கடி வாசிப்பில் இருந்தன. நவீன வடிவத்தையும் பாடுபொருளையும் போதித்தன. அன்று அதிகம் மொழிபெயர்ப்பில் வந்தவை ஐரோப்பிய கவிதைகளும் மலையாளக் கவிதைகளும் தான்.  மலையாளக் கவிதைகளின் வாசனையைவிட,   ஐரோப்பிய மனத்தின் வாசனை என் வாசனையாக இருந்தது. அதன் மனம் என் மனத்தோடு ஒத்துப்போனது.  கவிதையின் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கச் செய்பவை ஐரோப்பியக் கவிதைகள். பிரம்மராஜன் தொகுத்த “உலகக் கவிதை“ ஒரு கவிதைக்கான பைபிள் எனச் சொல்வேன்.  

என் குரு எழுத்தாளர் சா.தேவதாஸ் அவர்களுடன் சமணக் குகைகள், ஸ்ரீநேசன்,  கோணங்கியுடனான ஆந்திர (ஏழு சுற்றுக்கோட்டை), குகைப் பயணங்கள், குலசேகரன், ஜீ.முருகன், வள்ளிமலை சமணக்குகையில் குமார் அம்பாயிரத்தின் டிஜிருடு இசை. பஞ்சபாண்டவர் சமணக்குகையில், போர்ஹெ குறித்து நண்பர்களுடனான சந்திப்பு, அருமா மலையில் இரவு கவிதை குறித்த உரையாடல் இவையெல்லாம் என்னை வேறாக வடிவமைத்தன. பித்தேறிய, கட்டுக்கடங்காத, இயற்கைமீது வசீகரம் கொண்ட மனோநிலைதான் அப்பொழுது இருந்தது.

குடும்பம் ஒரு வீடாக இருக்கிறது.  அதில் தனித்தனி அறையாக நாங்கள் இருந்தோம்.  உறவு மீதான பெரிய நம்பிக்கையின்மை அல்லது குழப்பமான நம்பிக்கை, குடும்பத்தினரின் பாசத்தைப் புரிந்துகொள்ள இயலாத சூழல், குடும்பப்பொறுப்பை சரிவர மேற்கொள்ளாமை, வேலைக்குப்போக விரும்பாத மனம் இவை எல்லாம் என்னை இயற்கையுடனும் மொழியுடனும் கற்பனையுடனும் வாழ வைத்தன.  இங்கிருந்துதான் என் எழுத்துப்பருவம் தொடங்கியது.

கணநேரம் கிடைக்கும் அழகியல், சின்னஞ்சிறு அதிர்வுகள், கோபங்கள், கனவுகள், குற்றங்கள் ஆகியவை எழுத்தாக என்வழியாகப் பிறந்தன.

ராணி திலக் – நூல்கள்

 

 • தொண்ணூறுகளில் இறுதியில்  புறவெளிகள் , சமூகம், தினசரி போன்றவை கவிதையில் பரவலடைந்த காலத்தில், உங்கள் தொகுப்பில் முற்றிலும் வேறுபட்ட ஒரு மனம் இருந்தது. பௌராணிகமும் செவ்வியல்தன்மையுமான மொழியும், வினோதமும் கனவுத்தன்மைகளுமாக  நாகதிசை  தொகுப்பு இருந்தது.  ’நாகதிசை’யின்  பிரத்தியேக மனநிலைகள் குறித்து சொலுங்கள்?

விருப்பமற்ற வேலை, குடும்பப்பொறுப்பு  சகிப்புத்தன்மை ஆகியவை மன அழுத்தத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தின.  பகல்கனவுகள், இரவுக் கனவுகளும் படுபயங்கரமாக இருந்தன.  சா.தேவதாஸ்  அவர்கள் வில்லியம் பரோஸின்  My Educaton: A Book of Dreams தந்தார். தட்டுத்தடுமாறி படித்தேன்.  புதிய டைரி ஒன்று தந்தார். கனவுகளை, கற்பனைகளை, மன விரிசல்களை எழுதச் சொன்னார்.  எழுதினேன்.  அதன் பெரும்பாலான கவிதைகள் “காகத்தின் சொற்கள்” தொகுதியில் உள்ளன.

பெரும் துயரங்களிலிருந்து காப்பாற்றிக்கொள்ள கற்பனையும் அழகியலும் தத்துவமும் முக்கியமாக மொழியும் தேவை என்று உணர்ந்தேன்.  அவ்வகையான எழுத்து அப்போது இல்லை.  இயல்பாகவே அந்த வடிவமும் மொழியும் எனக்குள் இருந்ததால்,  அது எளிதாக வந்தது. அத்தகைய கவிதைகளை நவீன விருட்சத்தில் அழகியசிங்கர் வெளியிட்டார். எங்களுடைய  சந்திப்பில்,  இப்படியான கவிதைகளை வாசிக்கும்போது, அவர் முகத்தில் சந்தோஷம் படர்வதைப் பலமுறை பார்த்திருக்கிறேன்.  அவர் தந்த ஊக்கம்தான் என்னைத் தொடர்ந்து எழுத வைத்தது. 

நாகதிசையின் மனம் என்பது, ஒரு சித்திரக்காரனின், கதைச்சொல்லியின் முகமாக இருப்பதைக் காணலாம்.  அன்றாட மொழி கசப்பூட்டக்கூடியதாக இருந்தது.  அதற்கான மாற்றாகக் கொஞ்சம் செவ்வியல்மொழியை (மூதாதைசொல்),  இறுக்கமான வடிவத்தை எடுத்துக்கொண்டு  எழுதும்போது ஸ்ரீநேசன் செழுமைப்படுத்தினார்.  அவருடைய கவிதைகளை நான் செழுமைப்படுத்தவே செய்தேன்.  

 

 • உங்கள் உரையாடல்களில்  ஸ்ரீநேசன்  எப்போதும்  இருக்கிறார். உங்களுக்கும் அவருக்கும் பொதுவான ஒரு மனப்பரப்பு இயங்குகிறதா?

இருவரின் மன அலை ஒன்றாக இப்போதும் இருக்கிறது.  என்னிடம் ஒரு  கதவு அடைந்த வீடு இருக்கிறது.  தொடக்க காலத்தில், அதைத் திறந்து காட்டக்கூடிய சாவி அவரிடம் இருந்தது.  தயவு தாட்சணியம் அற்ற விமர்சகர் அவர்.  இந்த வார்த்தை ஏன் வருகிறது?  இந்த வரி ஏன் தேவை? என்று நுணுக்கமாக விவாதிக்கக்கூடியவர். இருவருக்குமான உரையாடலில் பெரிதும் கவிதை குறித்தும், கவிஞர்கள் குறித்தும் இருந்தது.  முக்கியமாக அவர் ஓசிப் மெண்டல்ஸ்டாம் பக்கம் இருக்கிறார் என்றால், நான் டாமஸ் ட்ரான்ஸ்ட்ரோமர் பக்கம் செல்வேன்.  அவருடைய ஏரி எனக்குப் பலவற்றைக் கற்றுக்கொடுத்திருக்கிறது.   எங்களுக்குள் வறண்ட பாலி  ஓடிக்கொண்டிருக்கும்.  

பௌர்ணமி நாளில் உதயேந்திரம் ஏரியில், நீரில் தனியாக மூழ்கிக்கிடந்த சிவலிங்கத்திற்கு நீராபிஷேகம் செய்தோம். அப்போது இரவு ஒரு மணி.  எங்களுக்கு வெளியே பௌர்ணமியின் நிறை வெளிச்சமும், உள்ளே கடும்போதையும் இருந்தது. பல வருடங்களுக்குப் பிறகு பாலாற்றில் வெள்ளம் வந்தது.  அதை வரவேற்க வேலூரில், சாமியார் ஒருவர் புஷ்பத்துடன் தன் பரிவாரங்களுடன் காத்திருந்தார்.  அந்த வெள்ளம் வாணியம்பாடியைக் கடந்து செல்ல இருந்த நேரத்தில், கொஞ்சம் மது வாங்கி வந்தோம்.  பாலத்தின் கீழ் வெள்ளம் கடந்துபோனது.  கொஞ்சம் எங்களுக்குப் படையல் வைத்துவிட்டு, முழுவதுமாக அதற்கு ஊற்றினோம். இன்னும் வேகமாக அது பாய்ந்துகொண்டிருந்தது.  எங்களின் தள்ளாட்டத்தை அதனிடம் பார்த்தோம். இதுதான் ஸ்ரீநேசன், நான். அவரின் வியாகுலத்தைக் குறித்த கவிதைதான், “புராதன இதயம்”. அதில் அவரின் அன்பை வெளிப்படுத்தியிருப்பேன்.

அவருடைய கவிதைகள் குற்றவுணர்ச்சியின்பால் உருவாகுபவை.  அதில் தத்துவமும் இயற்கையும் உண்டு என்றால்,  அதிலிருந்து கிளைத்து எழும் கனவுகளும் கற்பனைகளும் என்னிடத்தில் இருக்கின்றன. இரண்டு பேருக்கும் பொதுவான அம்சம் மற்றவர் கவிதைகளைக் கொண்டாடுவது.  எங்களைத் திண்டாட வைக்கிற கவிதைகளை யாராவது எழுதிவிட்டால், அதை வாசித்துக் கொண்டாடுவதுடன், அந்தக் கவிஞருக்கு நாங்கள் பொறாமைக்காரர்களாகிவிடுவோம். சமீபகாலமாகப் பெருந்தேவியும் ஷங்கர் ராம சுப்பிரமணியனும் பொறாமை உண்டாக்குபவர்களாக இருக்கிறார்கள். 

ஒரு கவிதையில், ஒரு கவிஞனிடத்தில் நம்பகத்தன்மையை அதிகம் எதிர்பார்ப்பவர் அவர்.  நானும் எதிர்பார்க்கக்கூடியவன்.   இந்த நம்பகத்தன்மைதான் கவிதையைத் திரும்ப திரும்ப வாசிக்க வைக்கிறது.

 

 • உங்கள் கவிதைகளில் வறண்ட வேனல் நிலவெளிகளில் இருந்து அதீத ரூபங்கள் எழுகின்றன. ”வறண்ட நிலத்தில் வாழும் வறண்ட மனிதனின் வறண்ட மனநிலை”  பற்றி சொல்கிறீர்கள். உங்கள் ’பாலி’  நிலம் பற்றி  பேச முடியுமா?

மலைகள்.  வறண்ட ஆறு. வறண்ட பூமி.  இதன் அட்டையாக ஒட்டிக்கொண்டு வாழும் வறண்ட மனிதர்கள்.  பாலாற்றின்மேல் எப்போதும் நீர் ஓடுவதில்லை.  ஆனால் அதனுள் எப்போதைக்குமான ஈரம் இருக்கும்.  எப்பொழுதும் தனக்குள் தண்ணீர் பெற்றிருப்பவர்கள் இந்த பாலி மனிதர்கள்.  மலையின், ஆற்றின் மகத்துவம் என்பது வறண்ட, எளிய வாழ்வுதான்.  எப்போதும் வெள்ளம் பாயும்  ஆறு  ரசிப்பிற்குரியது, பயன்பாட்டிற்குரியது. அங்கே குளிப்பவர்களையும் மலம் கழுவுபவர்களையும் எளிதாகவே பார்க்கலாம்.  ஆனால் ஏதுமற்ற நதியைப் பார்க்க யாரும் இல்லை.  அங்கே சென்று பார்த்தால், வெறுமையைப் பார்த்தால்தான் தெரியும், வெறுமை என்பது மாபெரும் கலையின் ஆதாரப்புள்ளி.   வறண்ட பாலாற்றின் கரையில் அமர்ந்துபாருங்கள்.  அது  உங்களுக்கு வறண்ட காற்றின் வழியாக ஏதாவது சொல்லும்.  எனக்குச் சொல்லி இருக்கிறது.

 

 • கனவுத் தன்மையும் மாயயதார்த்தப் புனைவுகளுமான மொழிபுகளில் உங்கள் பல கவிதைகள் வருகின்றன. அவற்றுக்கான உந்துதல்கள், மனநிலைகள் பற்றிச் சொல்லுங்கள்? 

முன் சொன்னதுபோலவே,  உலகக் கவிதைகள் வாசிப்பு பெரிதும் தாக்கத்தை உருவாக்கின.  தமிழ் நவீன கவிதையின் போக்கை  மடைமாற்றியவர் பிரம்மராஜன்.  மீட்சி இதழும்,  உலகக் கவிதைத் தொகுதியும், ஐரோப்பிய கவிஞர்களின் தொகுதியும்தான்  நவீன இலக்கியத்தில் பெரிதும் மாற்றம் செய்தவை.  லத்தீன் அமெரிக்கக் கதைகளை வாசிக்கும்போது அவை என் ஊரைப் பற்றி, என் மனிதர்களைப் பற்றியதாக இருந்தன.  ஐரோப்பிய கவிஞர்களின் மனத்துடன் என் பெரும்பாலான மனம் ஒத்துப்போனது. சபார்டிகோ ஜோகோ தமனோ,  ப்ரெக்ட், ஒசிப் மெண்டல்ஷ்டாம், ப்ரெவர் கவிதைகள்,  போர்ஹெ, கால்வினோ  கதைகள் புதிய வெளிச்சத்தைத்  தந்தன.   முக்கியமாக ஐரோப்பிய  கவிதைகள் மனிதர்களின் மனநிலையைத்தாண்டி, புறத்தின்மீது, கனவின்மீது,  கற்பனையின்மீது  கவனத்தைச்  செலுத்த  உதவியது.   அங்கிருந்துதான் என் எழுத்து தொடங்கியது.

நானும் என் சக கவிகளும் எழுத வந்த காலத்தில் எங்களுக்கான நவீன கவிதை பாடங்கள் ஸ்வரம், மீட்சி, ழ இதழ்களில் மட்டுமே அமைந்திருந்தன.  மிளகுக் கொடிகள். குஞ்ஞண்ணி கவிதைகள், மூன்றாம் உலகத்தின் குரல், தலைப்புச் செய்திகள், அறைக்குள் வந்த ஆப்ரிக்க வானம், அன்னா அக்மதோவா கவிதைகள், பெர்டோல்ட் ப்ரெக்ட் கவிதைகள், ஓசிப் மெண்டல்ஷ்டாம் கவிதைகள், ழாக் ப்ரெவர் கவிதைகள் என்று பல மொழிபெயர்ப்புக் கவிதைத்தொகுதிகள்  எங்களை அதிகம் வடிவமைத்தன.  அதனால்தான்,  ஷங்கர் ராம சுப்ரமணியன் ப்ரெவரின் ஓ பார்பராவை நினைவுகூர்கிறார்.  குட்டி ரேவதி அன்னா அக்மதோவாவை நினைவுகூர்கிறார். பெருந்தேவி, குளோரியா ப்யூட்டர்ஸை நினைவுபடுத்துகிறார். சமீபத்தில் எஸ்.ராமகிருஷ்ணனின், “கவிதையின் கையசைப்பு” நூலில்  வரும் எஸ்.ராவின் கட்டுரைகள் கவிஞரைப் புரிந்துகொள்ள செய்தன. அதில் வரும் சமயவேல் மொழியாக்கம் செய்த கவிதைகள், கவிதை குறித்த புதிய திறப்புகளைத் தோன்ற செய்தன. ஒரு புதிய மடைமாற்றத்தைத் தமிழ் நவீன கவிதை அடையக்கூடும்.

மொழிபெயர்ப்புக் கவிதைகள் தமிழ் மனம் என்ற கிணற்றிலிருந்து, தனி மனிதத்துவம் நோக்கிச் செல்ல வைத்தது.  நாங்கள் எங்களை வலுப்படுத்திக்கொள்ள,  எங்களை நாங்கள் புரிந்துகொள்ள, எழுத உத்வேகம் தந்தவையாக அமைந்தவை இவை. ஒரு கவிஞன் என்ன எழுதவேண்டும், எப்படி எழுதவேண்டும்?  என்பதை ஐரோப்பிய கவிதைகள் சொல்லித் தருகின்றன.  சொல்லித் தருவதில் தவறில்லைதானே?

 

 • மொழிபெயர்ப்புக் கவிதைகள் போல தமிழ்ச்சூழலில்  நீங்கள் கொண்ட அணுக்கங்கள்,  உந்துதல்கள் ?

இல்லை என்று சொல்வதிற்கில்லை.  பிரமிள், நகுலன், ஆத்மாநாம், பிரம்மராஜன் கவிதைகள்  தரும் தாக்கங்கள் ஒரு கவிஞனை முழுமையடையச் செய்பவை.  நகுலனை ஆழமாக வாசிக்கும்போது வாழ்வின் அர்த்தம் புரிபடும். கவிதையின் மெய்ம்மையை பிரமிள் மொழியால் அடைந்துவிடுபவராக இருக்கிறார்.  ஆத்மாநாம் அகம், புறம் என்கிற சமூகம், தனிமனித மனம் என்கிற இரண்டு இதயங்களைப் பெற்று சுவாசித்தபடி இருக்கிறார்.  பிரம்மராஜனை வாசிக்கும்போது அவருடைய அனுபவங்கள் பிரமிப்பை உருவாக்குபவை.  அவர் வடிவத்திலும் சொல்லலிலும் நாம் சிக்கிக்கொண்டாலும், அவருடைய பல்குரல்தன்மை தமிழில் யாரிடம் இருக்கிறது?. கவிதைகளின் வழி அதிகம் பேசுபவர். என்னுடைய புனைவு அம்சம் பிரம்மராஜனிடம் தொடங்குகிறது என்றால், என்  தனிமை நகுலனிடம் இருந்து தொடங்குகிறது.  

இன்றளவும்  “ழ” கவிஞர்கள் பக்கபலமாக இருக்கிறார்கள்.  அவர்களை எண்பதுகளில் தோன்றிய  ”நவீன தலைமுறை கவிஞர்கள்”  என்பேன்.  மூத்த சிறுதெய்வங்கள்.  என் கவிதைகளை மறைமுகமாகச் செப்பனிட்டவர்கள் என்று மலைச்சாமி, சமயவேல், பாதசாரி, ஷா-அ, காளி-தாஸ், ஆ.இளம்பரிதி ஆகியோரைச்  சொல்லலாம்.  இவர்களைத்தாண்டி எனக்கென்று சிறிய மாஸ்டர் இருக்கிறார். அவர் சத்யன். “கைப்பிரதியில் சில திருத்தங்கள்” தொகுப்பை வாசியுங்கள்.  இன்று எழுதக்கூடிய யாருக்கும் அவர் சவாலாகவே இருப்பார்.  இன்றைய நவீன கவிதையின் பாடுபொருளுக்கான அனைத்து அம்சங்களையும் அவர் அன்றே எழுதி இருப்பதாகத் தோன்றுகிறது. இன்று எழுதக் கூடிய உரைநடைத் தன்மையை அன்றே சத்யனும் பாதசாரியும் எழுதிவிட்டார்கள். இன்றும் அவ்வப்போது சத்யன் கவிதைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். நிறைய சொல்லித் தருகிறார்.

 

 • சொற்களை உடைத்துப் பிரயோகம் செய்வதன் வழி, ( உ-ம் காஅகம், ஓ ரிரு கிளி கள், தண் ணீர்) ஒரு வினோத மொழிச்சித்திரம் தரும் தன்மை உங்கள் முதல் தொகுப்பிலிருந்து தற்போது வரை தொடர்ந்து வருகிறது. அந்த அம்சத்திற்கான  மனநிலை என்ன? 

மரபிலிருந்தே உந்துதல் பெற்றேன்.  செவ்விலக்கியத்தைப் படித்தவன் என்பதால் அதன் மொழியும் வடிவமும் எனக்குள் உறைந்திருந்தது. சொற்களைத் தனித்தனி எழுத்தாகப் பிரிக்கும்போது. அதனுள் ஒளிந்திருக்கும் மர்மம் பிடிபடுகிறது.  மந்திர உச்சாடனம்போல் இருக்கிறது.  த்யானத்தில் ஒலிக்கும்  ஓசையாக இருக்கிறது.  சொற்களைப் பிரிப்பதன்மூலம்,  அர்த்தம் இரண்டாகக் கிளைவிடுகிறது.  வாசிப்பின் சாத்தியத்தை உருவாக்குகிறது.  

வலுக்கட்டாயமாக சொற்களைப் பிரிப்பதில்லை.  எழுதும்போது தானாகவே பிரிந்துகொள்கிறது.  ஒருசொல்லில் இருக்கும் எழுத்துகள் ஏன் தானாகப் பிரிந்துகொள்கின்றன என்ற மர்மம் மகிழ்ச்சியே தருகிறது. தண்ணீர் என்ற பொதுச் சொல்லைவிட, கவிதையில் தண் – ணீர் என்று  பிரியும்போது ஆத்மார்த்தமாக இருக்கிறது.

எழுதும்போது எதேச்சையாகச் சொல் தனக்குள் பிரிந்து வாழ்வாகத் தோன்றுகிறது.  ஒவ்வொரு எழுத்தும் ஒரு மனிதன் மாதிரி. அதற்கென ஒரு மனம் இருக்கிறது. இதைவிடப் பெரிய மர்மம் என்னவென்றால், எப்படி ஒரு சொல் தன்னைக் கவிதையில் பிரித்துக்கொள்ள இப்போதும் அனுமதிக்கிறது என்பதுதான்.

 

 • உரைநடை சார்ந்த ஒரு லயத்தை, உள்ளொழுங்கை உங்கள் மொழி பேணுவதாகத் தெரிகிறது.  உரைநடை  வடிவில் ஒரு முழு தொகுப்பாக காகத்தின் சொற்கள் எழுதினீர்கள்?  இன்றைய கவிதை மனநிலைக்கு  உரைநடை இயல்பு எதற்காக அவசியப்படுகிறது?

மனோநிலைதான் காரணம்.  நாகதிசை தொகுதிக்குப்பிறகு சிலகாலம் மௌனமாகவே இருந்தேன். பழைய வடிவத்திலிருந்து, சொல்லலில் இருந்து விடுபட ஒரு வடிவம் தேவையாகிறது. தமனோவின், கவிதை -2 என்ற கவிதை எனக்கு உரைநடைக்கவிதை மீதான உந்துததலைத் தந்தது. செவ்வியல் தன்மையிலிருந்தும் இறுக்கத்திலும் இருந்து விடுபட்டுவிட்டேன்.  உங்களால்   உரைநடையில்  மட்டுமே    தெள்ளத்தெளிவாகச் சொல்லமுடியும். அங்கே தான் கவிதையின் நம்பகத்தன்மை வெளிப்படும்.  90களில் சில கவிஞர்களின் கவிதைகள்  உவமையுடனும் உருவகத்துடன் எழுதப்பட்டிருந்தன. அவர்களின் அனுபவத்திற்குச் சிறிதும் ஒத்து வராத படிமங்களும் உருவகங்களும் உவமைகளும் கவித்துவ அனுபவத்தைக் கொலைசெய்துவிட்டன.  

இன்றைய கவிதைகள்  பெரும்பான்மையும் உருவக, உவமையை விட்டுவிட்டன.  தெள்ளத்தெளிவாக உரைநடையில் எழுதப்படுகின்றன.  எது கவிதையாக இருக்கிறது? எது கவிதையாக இல்லை? என்பதை அடையாளம் காண முடிகிறது. விவாதிக்க முடிகிறது. காகத்தின் சொற்கள், நாகதிசையைவிட அதிகம் நினைவுகூரப்படுகிற தொகுப்பாக இருக்கிறது.  வடிவம் அதற்குக் காரணமாக இருக்கலாம்.  தெளிவாக எடுத்துரைப்பதற்கு உரைநடை  அவசியமாகிறது.  அதுவே பலவீனமாகவும் சிலவேளை இருக்கிறது.

 

 • ஒருவித ஜென் போன்ற மனத்தருணங்களும் களிப்புகளுமாகப் பல கவிதைகள் உள்ளன . அமனித இயற்கைக் கூறுகளுடன் உரையாடலும் தீவிரமும்கொள்ளும் அக்கவிதைகள்  குறித்துச் சொல்ல முடியுமா?

 

தேவதச்சன் கவிதைகளை வாசிக்கும்போது, அவருடன் ஜென் கவிதைகள் குறித்து உரையாடினேன். கூடவே ஜென் கதைகளுடன், ஜென் கவிதைகள் வாசித்தேன். ஜென் கவிதைகளைவிட, ஜென் கோன்கள் (koan) புதிராகவும் வியப்பாகவும் இருந்தன. இயற்கையைக் கொண்டாடுபவன், தனிமையை விரும்புபவன் என்றபட்சத்தில், ஜென் கவிதையின் சூட்சுமங்கள் சில என் கவிதைகளில் இயல்பாகவே  அமைந்துவிட்டன.  ஒன்றை வெறுமனே பார்த்துக்கொண்டிருப்பதின் மூலமாக, இன்னொன்றின் அசைவைப் பெற இயலும்.  வேலூரில் இருக்கும் மலையைப் பார்க்கும்போது, அமர்ந்தபடி இந்த ஆற்றையும் நகரத்தையும் பார்த்துக்கொண்டிருக்கும் ஜென் குருவாகவே மலை  தோன்றும்.  என் சிறுவயதில் எனக்குத் தோன்றிய கேள்விகள் இன்றும் நினைவில் இருக்கிறது:  “ பெரிதாக இருக்கும் இந்த மலை ஏன் தனித்து இருக்கிறது, திரும்பத் திரும்ப பார்க்கவைக்கிறது?” 

 

 • ‘தனிமை’  ஒரு முக்கிய போதமாக உங்கள் கவிதைகளில் இருக்கிறதே.  கவிதையில் வரும் மனிதன் மட்டுமல்ல,  அமனித வஸ்துகளும் தீவிர தனிமையில் உள்ளன.  உங்கள் கவிதையில் செயல்படும் தனிமை மனநிலை பற்றிச் சொல்லுங்கள்.

முன் சொன்னதுபோலவே, நான் சிறுவயதிலேயே என்னைத் தனிமைபடுத்திக்கொண்டேன்.  சிறுவயதில் எனக்குப் பனையோலைப் பெட்டியில் தரப்பட்ட பொம்மைகள், மரத்தாலான கிலுகிலுப்பை யாவும் தனித்தனியாக இருப்பதாகத் தோன்றியது.  அவற்றின் தனிமை, எனக்குள்ளும் பரவத்தொடங்கியது.  நகுலனின் கோட்-ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், நாற்காலிகள் எல்லாம் தனியாக இருந்து எதையாவது சொல்கின்றன. அவற்றின் கதைகள் என் கதைகளாக மாறிய தருணம் அது.  நீங்கள்,  ஒரு நாற்காலியுடன் தனியாக இருந்து பாருங்கள்.  உங்களை அறியாமல் நீங்கள் அதனிடம் பேசத் தொடங்கிவிடுவீர்கள். டாமஸ் ட்ரான்ஸ்ரோமர் கவிதையில் ஒலிக்கும் சுத்தியலின் ஒலிதான், தனிமையின் தீவிர சப்தம்.

 

 • கடந்த பதின்மங்களில் கவிதை நிறைய கதைமாந்தர்கள் கொண்டதாக மாறியுள்ளது. உங்கள் உலகத்தில் மனித மற்றமைகள்  குறைவாகவே இருக்கிறார்கள். மனித மனித ஊடாட்டங்கள், யதார்த்த உலகம் என்பது மெல்லிதாக உள்ளது. இதை எப்படிப் பார்க்கிறார்கள்….

சாதகமாகவே பார்க்கிறேன்.  மனிதர்களைவிட. அவர்களால் கைவிடப்பட்ட வஸ்துகள் மேல்  அளப்பரிய உறவு  இருந்தது.  அதை யார்தான் எழுதுவது? ரியுனொசுகே அகுதாகவாவின் “டோக்கியோ” வழியாகக் கல்குதிரையில், கணேஷ்ராம்  மனிதமற்றமைகள்தாம் நாம் என்பதைக் கண்டடையச் செய்தார். மற்றமை என்பது நம்முடைய  நிழல்,  சாயை.  

 

 •  தாமரை, கிளிகள், எறும்பு, நதிகள், மலைகள், கூழாங்கற்கள், இலைகள். இவை உங்கள் உலகத்தின் பிரத்யேகப் பிரஜ்ஜைகளகவே இருக்கின்றன. உங்கள் நிலத்தில் தீவிர இருப்புகளாக அவை கொள்ளும் அதீதங்கள் குறித்து பகிர்ந்துகொள்ள முடியுமா?  ( உ-ம் சுடுகாட்டுக்குக் கொண்டு செல்லப்படும் தாத்தாவின் பிரேதத்தின் மேலே கிளிகள் பறந்து செல்கின்றன)

இவற்றின் வழியாக என்னை அடையாளம் காண்பதும், பிளவுபடுவதுமான மனோநிலைதான் அதன் அதீதம். அவை ஒரு ஜடப் பொருளாக இல்லாமல், அவை உயிர்த்தன்மையுடன்  இருப்பதை உணர்ந்தேன்.   சிறிய வயதில் என் தாத்தாவின் வீட்டின் எதிரில் பெரிய ஆலமரம் இருந்தது.  அவற்றில் எவை இலைகள்? எவை கிளிகள்? என்று எண்ணும்போது கணக்குத் தவறிவிடும்.  இலைகள் கிளிகளாகவும். கிளிகள் இலைகளாகவும் மாறக்கூடிய மாயம் அங்கே, என் சிறுவயதில்  நிகழ்ந்தது.  வயோதிகத்தால் அந்த மரம் பட்டுப்போனது.  தாத்தா இறக்கிறார்.  சற்றும் எதிர்பாராத வகையில், அவருடைய சவத்தின்மேல் கிளிகள் பறக்கத்தொடங்கின. அவை எங்கே இருந்தன? எப்படி வந்தன? ஏன் வந்தன? என்ற பல கேள்விகளைக் கடந்து,  கிளிகள் அவரிடம் என்ன பேசின? என்பதுதான் புதிராக இருக்கிறது, இப்போதும்.

தாமரைகள் அதிகம் காணக்கிடைத்தது காவிரி நிலத்தில்தான்.  அல்லிகளும் தாமரைகளும் பூத்த தடாகங்களை, நீர்நிலைகளை, ஆற்றுப் படுகைகளைக் காணமுடிந்தது இப்போதுதான்.  என் நிலத்தைவிட்டுப் பிரிந்துவந்தபின், எழுதிய கவிதைகள் பலவற்றிலும் தாமரை ஒரு மனமாகப் பரவி  இருக்கிறது.  விதி ஒரு இலையாகத் தோன்றிய தருணம் அது.  பெரும் மலைகளும்,  வற்றிய ஆறுகளும் பரந்திருந்த என் கவிதைகளில், தஞ்சை நிலத்திற்கு வந்தபின், தாமரைகளும் ஆறுகளும் நிரம்பத் தொடங்கின.   தண்ணீருடன் ஒட்ட இயலாத இலை,  தாமரை மலர்கள்,  இந்த நிலத்தோடு ஒட்ட இயலாத என்னை நினைவூட்டின.  அவையாக நான் இருந்தேன்.  தனியாகத் தாமரை இருந்தாலும், அதன் வெள்ளையும் செம்மையும் மணமும் கொள்ளை அழகு.  அதனதால்தான்  நான் தனியன்,   மணம் வீசுபவன்.  

 

 • இருப்பு – இன்மைக்கிடையிலான மயக்கநிலைகளும் உங்கள் உலகில் ஒரு முக்கிய அம்சமாக உள்ளது. வெறுமை வெளிகளை, இன்மையின் இருப்பைத்  தீவிரமாகப் பார்க்கும் ஒரு  போதம் . அது குறித்து..

அது வெயில்காலம்.  மின்சாரம் இல்லாத நேரத்தில் ஒரே புழுக்கம்.  கையில் பனை விசிறி இருந்தது.  வீட்டில் ஓரே புழுக்கம்.  ஒருவர் மாறி  ஒருவராக வீசிக்கொண்டோம்.  புழுக்கமும் சிறிது காற்றுமாக உறங்கிவிட்டேன்.  கனவில், எங்கள் நகரத்தின்மேல் ஒரே ஒரு விசிறி தானாக வீசிக்கொண்டிருந்தது.  இந்த கனவும் மயக்கமும்தான் கவிதையாக வந்தது.  அதைத்தான் எழுதினேன்.  இருப்பு எப்போதும் இன்மையை நினைவுபடு்த்துவதில்லை.  மாறாக,   இன்மைதான்  இருப்பை ஞாபகம் செய்கிறது.  

இப்போது கும்பகோணத்தில் இருக்கிறேன். மஹாமகப்படிக்கட்டுகள் ஒவ்வொரு முறையும் வேறுவேறு சித்திரமாக மாறிவிடும். தினமும் ஏதாவது ஒரு கோவிலுக்குப் போவேன். கிளிகள் நிறைந்த விதானத்து சிற்பங்களில் இருந்து ஒரு கிளி பறக்கும்.  இது சாரங்கபாணி கோவிலில் அநேக தடவை நிகழ்ந்தது.  ஒரு போத நிலையில் கிளி கல்லாகவும், கல் கிளியாகவும் மாறும் வித்தையைப் பார்த்திருக்கிறேன். போதத்திற்கும் அபோதத்திற்குமான விளையாட்டாகவே அவற்றை எதிர்கொள்கிறேன். நான் வெறும் சாட்சி மட்டுமே.

 

 • இன்று எல்லோர் கவிதைகளிலுமே புனைவம்சம் தவிர்க்கமுடியாதபடி ஒரு முக்கிய இயல்பாக உள்ளது. உங்கள் முதல் தொகுப்பிலிருந்தே புனைவார்த்தமான பலவிதமான வடிவங்கள்  தொடர்ந்து வருகின்றன. புனைவுடன் கவிதை நெருங்கிச் செல்வதற்கான காரணங்கள்  என்ன?

புனைவம்சம் என்பது கவித்துவ உணர்வை வெளிப்படுத்தக்கூடிய ஒன்றுமட்டுமே.  அச்சூழலை வெளிப்படுத்த ஏதுவாக புனைவு அமைந்துவிடுகிறது.  விவரணை எளிதாக இருப்பதற்காகவும் புனைவம்சம் காரணமாக இருக்கலாம், கவிதையில். புனைவம்சம் எளிதான ஒன்று. ஆனால் அது கவிதையின் தன்மைக்கு எவ்வளவு ஒத்துப்போகிறது என்பதுதான் சவாலானது.

கடந்த காலத்தில் ஒரு தனியார் பள்ளியில் பணியாற்றிக்கொண்டு இருந்தேன். வரவேற்பறையில் இருக்கும் மீன்தொட்டியில் உலவிக்கொண்டிருக்கும் எல்லா மீன்களும் நானாகவே உணர்ந்த கணம் அது.  எல்லா தளத்திலும், எல்லா அறைகளிலும் மூச்சுமுட்ட போதித்துக்கொண்டிருக்கும் எனக்கும், நீர்க்குமிழிகளை விடும் அந்த மீன்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை. நான் இக்கட்டடத்தில் வாழ்ந்தாகவேண்டும்.  அவை தொட்டியில் நீந்தித்தான் வாழவேண்டும். சூரியனின் கதிர்கள் சிறிதாக அத்தொட்டிக்குப் பாய்வதுபோல், எனக்கு எதும் நிகழவில்லை.  மன நெருக்கடி காலத்தில் புனைவு எனக்கு ஆசுவாசம் அளித்தது. கவிஞர் ஆனந்தின் நான் முதல் அம்பு, என்னுடைய கவிதையான, எனக்குப் பசிக்கிறது வழியாக, எனக்கான கனியைப் பறித்துத் தந்தது.  இந்த விடுதலையைப் புனைவு தருகிறது.

இதே தன்மையை என் விஷச்செடிகள் கவிதையிலும் பார்க்கலாம்.  மன உளைச்சல் கொண்டு ஆற்றில் இறங்கி, அதன் ஓடும் ஓசையைக்கேட்டு. கரையேறிய பின், கரையோரச் செடிகளின் விஷம் முறிந்திருக்கும், அவனைப் போலவே.  புனைவு அம்சம் ஒரு தீர்க்கதரிசியாக, நோய்முறிப்பான்களாக மாறி இருக்கின்றன.  அடுத்தகட்டமாக புனைவின் வழி, மாபெரும் சிலைகளை உடைக்கவே விரும்புகிறேன். 

 

 • கவிதை சார்ந்த மரபுக் கூறுகள், ( உருவகம், படிமம் ) ஏதுமின்றியே ஒரு புதிய ஒழுங்கு, அறிதல், கனவுத்தன்மை என்பதன் வழியாகவே கவித்துவ அனுபவத்தை நிகழ்த்தும் தன்மை உங்கள் மொழிபுமுறையில் உள்ளது. கவிதையில் மொழி குறித்த உங்கள் அணுகுமுறைகள் என்ன?

தொடக்க காலத்தில் செவ்வியலும் இறுக்கமும் இருந்தது.  பிறகு உரைநடை மொழிக்கு மாறினேன். பிறகு செவ்வியல்.  இப்போது முழுவதுமாக  எளிய மொழிக்கு மாறிவிட்டேன்.  அதாவது நம்பகத்தன்மைக்கு மாறிவிட்டேன்.  ஒரு காலத்தில் மரத்தை விருட்சம், தரு என்று எழுதியிருப்பேன்.  பொதுவில்  கொய்யாமரத்தைப் பார்க்கும்போது, கொய்யாமரம் என்ற சொல்தான் மனதிற்குத் தோன்றும்.  அங்கிருந்துதான் நான் என் எழுத்தை மாற்றிக்கொண்டேன். 

என்னைப் பொறுத்தவரை மொழி என்பது நம் உணர்வை வெளிப்படுத்தக்கூடிய கருவி. நம் அனுபவத்தின் நம்பகத்தன்மையை வெளிப்படுத்தக்கூடிய மொழி போதுமானது. 

நான் கண்டடைகிற, பார்க்கிற அனுபவம் அன்றாட மொழியில் இருக்கிறது. என் சிந்தனையும் அன்றாட மொழியில்தான் இருக்கிறது. இப்போது செவ்வியலில் இருந்து அன்றாடத்திற்கு மாறிவிட்டேன்.  அதாவது அடர்ந்த காட்டிலிருந்து, எளிய ஒற்றையடிப் பாதைக்கு வந்துவிட்டேன்.   இனி எந்தப் பயமும் இல்லை, போய்ச்சேர்வதற்கு.

 

 • உங்கள் கரா தே தொகுப்பு உள்ளிட்ட சமீபத்திய கவிதைகளில் ஒரு விளையாட்டும் களிப்புமான மகிழ்ச்சியான மனநிலைகளைக் கூடுதலாகப் பார்க்க முடிகிறதே.

ஒரு கவிஞன் மகிழ்ச்சியாக இருப்பது அரிதான ஒன்று.  துயரத்தின் கணங்களை விட மகிழ்ச்சிக்கான கணங்கள் மிக ஆபத்தானவை என்றும் தெரிந்தும், கொஞ்சம் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன்.  கரா-தே தொகுதிக்குமுன் எழுதுதவற்கான மனத்தடை உருவான நேரம்.  குதிரைகள் அதிகம் சுற்றிக்கொண்ட காலம்.  என் தெருவில் மூன்று குதிரைகள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து மேய்ந்துகொண்டிருந்தன.  படிக்கட்டில் அமர்ந்திருந்தேன்.  “இந்தக் குதிரைகள் என்னைப் பார்க்கும்பட்சத்தில். நான் எழுதத் தொடங்குவேன்” என்று சொல்லிக்கொண்டேன்.  எதிர்பார்க்காத வகையில், குதிரைகள் மூன்றும் என்னைப் பார்த்தபடி, தெருவில் வளைந்து, வேறு தெருவிற்குச் சென்று விட்டன.  அந்தக் குட்டிக் குதிரையின் கண்கள், ஆசீர்வாதத்தின் கண்கள்போல் இருந்தன.

அடுத்த ஜென்மத்தில் சிறிய மலராகப் பிறக்கவேண்டுமானால் சிறிய குற்றங்களை மகிழ்ச்சியுடன் செய்வேன் என்று ஜென்ம விமோசனம் கவிதையில் எழுதி இருப்பேன். ஒரு மழைத்துளிக்கு ஒரு பெயரை நாம் இட்டு அழைக்கும் கொண்டாட்டமாக என் கவிதைகள் இந்தத் தொகுப்பில்  மாறிவிட்டன.  

 

 • உங்கள் கவிதைகள் பொது சமூக அரசியல் வெளியிலிருந்து விலகலும் தனிமையும் கொள்ளும் சுபாவத்தைப் பேணியவை. சமீபத்திய தொகுப்புகளில் அலுவலகம், அதிகார அமைப்புகள், பெருநிறுவனங்கள், நகரமயமாதல்  போன்ற புதிய பொருளாதார-சமூக வெளிகள் நோக்கிய விமர்சனமும் எள்ளலும் தொனிக்கும் மெல்லிய சித்திரங்கள் வருகின்றனவே. இது பற்றி….

 

“நான் அரசியல் கவிஞன் அல்லது ரிவால்வர்” என்ற கவிதையையும், “ஒரு பாம்பே கக்கூஸ்போலவே இருக்கவிரும்புங்கள்” , “தே நீரின் மணம்” என்ற கவிதைகளை மையமிட்டுக் கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அதிகாரத்தைக் கேள்வி கேட்பவர்களே அதிகாரமாக மாறிவிடுவதுதான் இன்றைய அவலம். மென்பொருள் அலுவலகத்தில் கிடைக்கும் தோல்விதான், அதிகாரத்திற்கான பதில்.  அதன் வளர்ச்சியே அதன் வீழ்ச்சி.  இன்னும் வெளிப்படையாக எழுதுவதற்கான தைரியத்தை,  ஆதரவை இச்சமூகம் நமக்கு அளிக்கவில்லை. 

சமீபத்தில் ஓர் அனுபவம் ஏற்பட்டது.  அறையில் யாரும் இல்லை.  என் அலுவலக நாற்காலியில் அமர்ந்தபடி, மங்கலான வெளிச்சம்கொண்ட, அந்த அறையைச் சுற்றிலும் பார்த்துக்கொண்டிருந்தேன்.  திடீரென்று ஒரு நாற்காலி என்னை அவ்வளவு உன்னிப்பாகப் பார்ப்பதாகத் தோன்றியது. நடுங்கிவிட்டேன். வெளியே போய் தேநீர் அருந்திய பிறகே,  அந்தப் பதற்றம் அடங்கியது. 

மோசமான கரைவேட்டிக்காரர்களையும்  மதவாதிகளையும்  கார்ப்ரேட்  சாமியார்களையும் பார்க்கும்போது, என்னை அறியாமல் தேவடியா மகன்கள் என்று திட்டிவிடுகிறேன்.  அது விரைவில் கவிதையில் வருவதற்கு  நீங்கள் ஆசீர்வதிக்கவேண்டும்.

 

 • உங்கள் கவிதையில் செயல்படும் மரபு தொடர்பான நினைவுகள் குறித்து… திருஞானசம்பந்தரின் திருவையாறு, பஞ்சநதீஸ்வரர், “ஆண்டாளும் பெருமாளும் இல்லாத இடத்தில், கிளிகள் ஓயாமல் பேசிக்கொண்டிருக்கும்” ஆடுதுறைப் பெருமாள் கோவில், உள்ளிட்ட கவிதைகளைச் சொல்லலாம்—சமகாலமும் பௌராணிகங்களும் மயங்கும் அபூர்வமான உணர்வுகளை உருவாக்குகிறீர்கள். அது குறித்துச் சொல்லங்கள்.

கடவுளை மனிதர்களிடம்தான் கண்டடைய வேண்டியிருக்கிறது. அன்று ஞாயிறு, கடைவீதியில் தன் தலையில் சும்மாடு வைத்தபடி, வயிற்றைத் தடவியபடி, மதிய வேளையில், கால்நீட்டிப் படுத்திருந்தவன், திருவனந்தபுரம் பத்மநாபசுவாமியாகவே தெரிந்தான்.  பத்மநாபனின் தொப்புளிலிருந்து கிளைத்த தண்டில் தாமரை. ஒரு பசியாக இருப்பதைப் பார்த்தேன். அந்தப் புராணிகம்தான் எதார்த்தத்தில் உயிராக வாழ்வாகத் தோன்றுகிறது. கோயிலில் உள்ள விளக்கு ஏற்றும் கல்பதுமைகளைப் பார்த்துவிட்டு, சட்டென்று நம் எதிரில் விளக்கேற்றும் பெண்களை என்னவென்று பார்ப்பது? இந்த மயக்கம்தான் புராணிகம் தரும் மயக்கம்.  பஞ்ச நதி எனப்படும் திரு – ஐ- ஆறுவின் ஓசையை எப்போதும் கேட்பவராக இருக்கிறார், தியாகைய்யர்.  சாரங்கபாணி கோவில் உள்ள 108 கரணங்களில் ஒன்றையாவது நாம் தினசரி வாழ்க்கையில் செய்துகொண்டிருக்கிறோம்.  புராணிகம் என்பது நம் தொன்மையான மனம் மட்டுமே.

 

 • பிரபஞ்சத்தின் சாரம் ’துக்கம்’தான் என்ற ஒரு மனம், ஒரு காட்சி உங்கள் கவிதையில் இயங்குகிறதா?

இல்லை என்று சொல்வதிற்கில்லை.  துக்கம்தான் இந்தப் பிரபஞ்சத்தைத் திறப்பதற்கான சாவி.  நீங்கள் துக்கமாக இருக்கும்போது, அநேக கைகள் உங்களை அரவணைக்கின்றன. அநேக உடல்கள் உங்களை ஆரத் தழுவுகின்றன.  துக்கம் மட்டுமே இந்தப் பிரபஞ்சத்தின் அன்பை, பரிதவிப்பை வேண்டவைக்கிறது.  நல் அறமும் அங்கிருந்துதான் தோன்றுகிறது.

ராணி திலக் நூலகள்

 

 •  நகுலன், ஆத்மாநாம் கவிதை வரிகளை வெட்டி இணைத்து  ஊடிழைக் கவிதையாக சிலவற்றை செய்திருக்கிறீர்கள்.  அந்தப் பரிசோதனை குறித்தும் சொல்லுங்கள்.

பரிசோதனை அளவில் நகுலனின், “மழை-மரம்-காற்று”வில் கற்றுக்கொண்டேன்.  பின்னாளில் கொலாஜ் எவ்வளவு கலாப்பூர்வமானது என்பதைப் பிரம்மராஜனிடம் கற்றுக்கொண்டேன். ஒன்றோடு ஒன்றை இணைக்கும் ரசவாதத்தில்தான் இன்னொன்று தோன்றும்.  இதை விளையாட்டாகவும் கற்றுக்கொண்டேன். 

டாலிக்குச் சமர்ப்பணம் செய்த மரணம் என்ற கவிதையில், இரண்டு விதமான வாசிப்புகளை(செங்குத்து, படுக்கை) உருவாக்கியிருக்கிறேன். ஒரு குதிரை ஒரு குதிரை ஒரு குதிரை என்ற கவிதையில் ஒன்றன்பின் ஒன்றாக செல்லும் குதிரையின் வரிசையை வடிவமாக எழுதியிருக்கிறேன். சில பரிசோதனைகள் கவிதையை வலுவூட்டுவதாக இருக்கின்றன என்ற பட்சத்தில், அவற்றைப் பின்பற்றுகிறேன்.

 

 • சிற்றிதழ் மனநிலை சார்ந்த அறம், தீவிரத்துவம் என்ற ஒன்றை தொடர்ந்து வலியுறுத்துகிறீர்கள். சிற்றிதழ் மரபுக்கு வெளியிலிருந்து பல்வேறு எழுத்தாளர்கள் இப்போது உருவாகியிருக்கிறார்கள்.  இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

அவர்கள் சிற்றிதழ் விரும்பாத வெகுஜனத்திற்குச் சென்றுவிடுபவர்களாக இருக்கிறார்கள்.  சிற்றிதழ் என்பது தொடர்ச்சியான இயக்கம், மனம். தற்காலிகமாக இதைப் பெற்றவர்களை நான், “பைபாஸ் ரைடர்ஸ்” என்றுதான் அழைப்பேன். கிராமத்தில் பிறந்து, வாழ்ந்து, செத்துப்போகும் ஒரு கிராமத்தானுக்கும், நகரத்திலிருந்து திரும்பி, ஓரிரு வருடம் கிராமத்தில் டென்ட் அடித்துவிட்டு, தன்னைக் கிராமத்தான் என்று சொல்பவனுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது.  சிற்றிதழ் என்பது கிராமத்தான்கள் வாழ்க்கை.  டென்ட் அடிப்பவர்கள் சிற்றிதழ் மரபுக்கு வெளியில் வாழ்பவர்கள் மட்டுமே.

 

 • கவிதையியல் சார்ந்த உரையாடல்கள் நமது சூழலில் எப்படி உள்ளன. எழுதத் தொடங்கிய காலத்தில் கவிதை விமர்சனம், கவிதை குறித்த புத்தகங்களுடனான தொடர்புகள் பற்றி சொல்லுங்கள்?  ’சப்தரேகை’ என்ற உங்கள் கவிதை விமர்சன நூல் பற்றியும்.

எழுதத் தொடங்கிய காலத்தில் பல நெருக்கடிகள் இருந்தன.  பலவிதமான சிந்தனைப் பள்ளிகள் இருந்தன.  சுந்தரராமசாமி ஒருபக்கம் இலக்கியச் சிந்தனைப் பள்ளியை நடத்தினார் என்றால், தேவதேவன், குருநித்ய சைதன்ய யதியுடன் ஜெயமோகன் மறுபக்கம் இலக்கியச் சித்தாந்த பள்ளியை நடத்திக்கொண்டு பேசியபடியே இருந்தார். இன்னொரு பக்கம் அ.மார்க்ஸ் புனிதத்தை உடைத்துக்கொண்டிருந்தார். அவர் பள்ளியில் அதிகம் யாரும் சேரவில்லை.  மற்றொருபக்கம், தமிழவனுடன் நாகார்ஜுனனும் எஸ்.சண்முகமும், ஜமாலனும் பிரதிக்கோட்பாடு பள்ளியை நடத்திக்கொண்டிருந்தனர்.  அக்குவேறாக ஆணிவேராக எல்லாவற்றையும் கழட்டினார்கள். பெண்ணியம், தலித்தியம் ஆகியவற்றின்  குரல்களும் ஒலித்தன. 

இந்தச் சப்தங்களில்  கொஞ்சம் பயந்துவிட்டேன்.இவற்றை எல்லாம் தூர இருந்து வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்தேன்.  இவை எல்லாவற்றையும் விட்டுவிட்டுக் குடிப்பது, ஊர் சுற்றுவது, மூத்தவர்களின் (ழ, கவனம், மீட்சி சிற்றிதழ்) கவிதைகளை வாசிப்பது என இருந்தேன்.  இந்த இடத்தில் பிரம்மராஜன் மௌனமாக இருந்தபடி உலகக் கவிதைகளை மொழிபெயர்த்துக் கொண்டிருந்தார். அக்கவிதைகளுடன்  உரையாடுவது என்கிற உத்வேகத்திற்கு வந்துவிட்டேன்.  தற்போது சமயவேல்,  அன்னா ஸ்வேர், குளோரா ப்யூட்டர்ஸ்,  தடம்  இதழ்க் கவிதைகள் வழியாகப் பேசிக்கொண்டிருக்கிறார், கேட்டுக் கொண்டிருக்கிறேன்.  

சப்தரேகையில் அதிகம் கவிதைத் தொகுதிகளின் பாடுபொருளை, வடிவத்தை, கதைச்சொல்லலைப் பேசியிருப்பேன்.  உண்மையில், கவிதை என்பது வாசித்து உணர்வது.   அதன் சுவையை, வலியை, வாழ்வை விமர்சனத்தில் கொண்டு வரமுடியாது. நீங்கள் நெருங்க நெருங்க விலகிச் செல்லும் ஒரு மாயத்தன்மை கவிதைக்கு உண்டு.  எனவே,   பிடித்த ஒரு கவிதைத்தொகுதியைப் பற்றி எழுதுவதைவிட, அவ்வப்போது  வாசிப்பது  ஆத்மார்த்தமாக  இருக்கிறது.

 

 • இன்றைய சமகால கவிதை, எழுத்துச்சூழல் குறித்த உங்கள் மதிப்பீடுகள்?

நிறைய பேர் எழுத வந்திருப்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்று.  90 களில் எழுதவந்த லிட்டில் மாஸ்டர்களாக இப்போது இவர்கள் இல்லை. ரிங் மாஸ்டர்களாக இருக்கிறார்கள். பேஸ்புக், ட்விட்டர், ப்ளாக் என்ற நிறைய ரிங்குகள் அவர்களிடம் இருக்கின்றன.  மிக லாவகமாகவும் வசீகரமாகவும் சுற்றுகிறார்கள்.  அவர்களின் ரிங்குகளை ஆதரிக்க, மூத்த கவிஞர்களும் விளம்பரதாரர்களாக மாறிவிட்டார்கள்.  அவர்களுக்கு இப்போது கீரிடம் தேவைப்படுகிறது.  அதை இந்த ரிங் மாஸ்டர்கள்தான் சூட்டுவார்கள்போல.  மூத்த சன்னிதானம். இளைய சன்னிதானத்திற்கு, “பாப் கவிஞன்” என்று முடிசூட்டுகிறது. அதையும் இளைய சன்னிதானம்,  நெளிந்தபடி வாங்கிக் கொண்டு சிரிக்கிறது. 

தனக்கான எந்தவிதத் தேடலும், உள்ளீடும் இல்லாமல்,  நான்கைந்து பத்திரிகைகளை வாசித்துவிட்டு எழுதுபவர்கள்தான் இவர்கள்.   கவிஞர்கள் கார்ப்பரேட்டுகளாக மாறும் காலம் இது.   உடனடியாக எழுதுவது, உடனடியாக வெளியீட்டுவிழா  நடத்துவது. அதலபாதாளம் அவர்களின் காலடியில் அவர்களாகவே தோண்டிக்கொள்கிறார்கள்.  விருதுகள்   அவர்களின்  தோல்விக்கான பட்டயமாக.  சாட்சியமாக  மாறிவிட்டிருக்கின்றன.அதிகாரத்தின் நாற்காலிகளை உடைத்தெறிந்து கொண்டிருக்கும் பலபேர், அதிகாரத்தின் நாற்காலியாகவே மாறிவிட்டார்கள்.  அவர்கள் இருக்கையும் முதுகும் பூதாகரமாகிக் கொண்டே  வருகிறது. 

இவற்றை எல்லாம் கடந்து பெரு.விஷ்ணுகுமார், ச.துரை, றாம் சந்தோஷ், வி.என்.சூர்யா  வரவேண்டும் என்று  நினைக்கிறேன். புகழ், பரிந்துரை, பாராட்டுகள், விருதுகள், பங்கேற்புகள், சிந்தனைப் பள்ளிகள் என்ற வலைகளில் அவர்கள் சிக்காமல் இருக்க வேண்டும். முதல் தொகுப்பு வழியாக முதல் அடி எடுத்து வைத்திருக்கிறார்கள். அடுத்த அடியில்தான் அவர்கள் யார் என்று தெரியவரும்.  நடையும் எளிதாகத் தென்படக்கூடும்.

இன்றைய நிலையில். வெகுஜனக் கலாச்சரத்தின் பிடியிலிருந்து, ஒரு படைப்பாளி வெளியேறி, கிராமத்திற்குச் செல்லவேண்டி இருக்கிறது.  அந்தக் கிராமம் என்பது அவனுக்குள்ளாக வாழ்வது, எழுதுவது மட்டுமே. 


நேர்கண்டவர் : பிரவீண் பஃறுளி

நன்றி : பேபல் இதழ்.

பகிர்:
No comments

leave a comment