காமம் காமம் என்ப காமம்.


1.

‘‘யோ… என் காலு போச்சு…”

என் கதறல் கேட்டு சாந்தி ஓடி வந்தாள். காலை கீழே ஊன்ற முடியாமல் வலியால் தத்தளித்துக் கொண்டிருந்தேன் நான். கணுக்காலில் பலமான வெட்டு விழுந்திருந்தது. என்னை அப்படியே கைத்தாங்கலாகத் தரையில் அமர்த்தி வெட்டுக்காயத்தைப் பார்த்தாள். உள்சதையின் வெண்மையே தெரியுமளவுக்குக் கத்தி வகுந்திருந்தது. வெட்டு விழுந்தவுடன் கையை உதறி எறிந்த வெட்டுக்கத்தியின் கூர்மை முழுக்கப் படர்ந்திருந்த ரத்தம் அதற்குள் தோய்ந்து கருஞ்சிவப்பாகிவிட்டிருந்தது.

எதையோ தேடுவதுபோல் சுற்றும் முற்றும் பார்த்தாள். துண்டிக்கப்பட்ட கத்தாழையின் அடிப்பகுதியிலிருந்து பச்சைநிற திரவம் ஒழுகிக் கொண்டிருந்தது. துண்டித்துக் கிடந்த பாதியிலும் அந்தத் திரவம் வழிந்து காய்ந்திருந்தது. சற்றேறக்குறைய கத்தாழையின் வெண்சதையைப் போலவேதான் இருந்தது கத்தி கிழித்த இடமும். காயத்தின் மீது தன் சேலையைக் கிழித்து ஈரப்படுத்திக் கட்டி விட்டாள்.

கவனப் பிசகால் காலில் விழுந்த வெட்டு. உண்மையில் நான் வெட்டுவதற்குக் குறிவைத்த நடுத்தரமான வாளிப்புடைய கருவேலம் கன்றைப் பார்த்தாள். இரண்டு கைப்பிடியளவு பெருத்த நல்ல கருத்த மரம். சொறசொறப்பான பட்டைகள் இன்னும் வந்திருக்கவில்லை. தோலில் நல்ல மினுமினுப்பு. இளம்பிராயத்தின் தளுக்கு. சின்னஞ்சிறிய கிளைகள் காற்றில் அசைந்துக் கொண்டிருந்தன.

வெட்டுப்பட்டுத் துண்டித்துக் கிடந்த கத்தாழையைக் கையில் எடுத்துப் பார்த்தவள்,

‘‘ஏண்டி, கருவேலம் எது கத்தாழ எதுன்னு கூடவா தெரில?” என்றாள்.

‘‘கருவேலம் மாதிரிதாண்டி இருந்திச்சு…” என்று முனகினேன்.

‘‘இருக்கும்… இருக்கும்… நெனப்பு முச்சூடும் வேற எங்கியாவது இருந்தா… கள்ளிக்கும் கருவக்கட்டைக்கும் எப்படி வித்தியாசம் தெரியும்!” என்றாள்.

‘‘இல்லடி… நான் வெட்டும்போது அந்த எடத்துல கருவேலங்கன்னுதான் இருந்திச்சு. அப்பறம் எப்படி மாறிச்சின்னே தெரில…” என்றேன்.

‘‘ஏய்… எனக்கு நல்லா வாயில வந்துடும்… அப்பறம் கெட்ட வார்த்தைல திட்டிப்புடுவேன்” என்றாள்.

சாந்தியின் கடுகடுப்பான வார்த்தைகளைக் கேட்டதும் நான் வாயை மூடிக் கொண்டேன்.

ஈரத்துணி போட்டு கட்டியும் ரத்தம் நிற்காமல் குதிகால் மூட்டு ஓரமாக வழிந்து ஓடிக்கொண்டிருந்தது. இப்படியே விட்டால் இன்னும் கொஞ்ச நேரத்தில் எப்படியும் நான் மயக்கம் போட்டுவிடுவேன் என்பதுபோல் உடல் தளர்ந்தது.

‘‘யம்மோ…வலி உசுரே போவுது” என்று வலியில் துடித்தேன்.

‘‘நல்லா வலிக்கட்டும்…நீ ரொம்பத்தான் பண்ற” என்றாள்.

வார்த்தையால் கடிந்து கொண்டாலும் நான் வலியால் துடிப்பதை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. என்னை முறைத்து ஒரு பார்வை பார்த்தாள். எதையோ வாய்க்குள் சொல்லிக்கொண்டாள். ‘பார்த்து செய்யக்கூடாதா?’ என்று என்னைக் கடிந்து கொள்கிறாள் என்று புரிந்தது. எழுந்து எங்கோ ஓடியவள் கையில் ஒரு கைப்பிடியளவு வெட்டுக்காயப்பூண்டுச் செடியோடு திரும்பினாள். அதன் இலைகளைப் பறித்து தன் கைகளில் வைத்து கசக்கி ஈரத்துணியை நீக்கி காயத்தில் வைத்து மீண்டும் துணியால் கட்டிவிட்டாள். அந்தச் செடியின் அழுத்தமும் அதன் சாறும் காயத்தில் இறங்கி வலி மெல்ல குறையத் தொடங்கியது. கரைந்து கொண்டிருக்கும் அந்த வலியை நான் ருசிக்கத் தொடங்கினேன்.

‘‘நல்லவேள வெட்டு எலும்புல படல”என்றாள்.

அவள் முகம் கவலைத் தோய்ந்திருந்தது. வலி ருசியாக மாறத்தொடங்கியதும், கணுக்கால் சதையில் கோடு கோடாய் ஓடி கிளைத்திருந்த காய்ந்த ரத்தத்தை விரலால் சுரண்டி நாக்கில் வைத்து சுவைத்துக் கொண்டிருந்தேன் நான். தொடையைப் போல் வழுவழுப்பாக இல்லாமல் முட்டிக்கு கீழுள்ள கால்பகுதி மெல்லிய கருமுடிகள் படர்ந்து வித்தியாசமாக இருந்தது. உறைந்த ரத்தத் துணுக்குகளை அந்த முடிகள் பிடித்துக் கட்டிப்போட்டுக் கொண்டன. முடியிலிருந்து விலக்கும்போது உச்சி வரை ஒரு வாயூறும் வலியை உணர்ந்தேன். காய்ந்த ரத்தத்தைச் சுரண்டி சுவைப்பதைக் கண்ட சாந்தி ‘அட… கருமமே’ என்பதுபோல் என்னைப் பார்த்தாள்.

‘‘எட்டி… நீயென்ன காட்டேரியாடி…” என்றாள்.

உடம்பை ஒரு முறுக்கு முறுக்கி முறுவலித்துக் காட்டினேன் நான். மெல்லிய கோபத்தோடு என் வாயிலிருந்த விரலைத் தட்டிவிட்டாள். ‘பைத்தியம்’ என்று திட்டிவிட்டுப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள். அவள் கண்கள் என்னைப் பரிதாபமாகவும் அச்சமாகவும் பார்த்தன.

காயத்திலிருந்து ரத்தம் வழிவது முற்றிலும் நின்று போயிருந்தது. வெட்டு விழுந்திருந்த பிளவில் சதைகள் நெருங்கி வரும் குறுகுறுப்பை நான் உணர்ந்தேன். மிச்சமீதி உறைந்த ரத்தத் திட்டுக்களைச் சுரண்டி வாயில் வைத்தேன். என் கண்கள் கிறங்கத் தொடங்கின.

‘‘ஒனக்கு மண்டக் கொழம்பிப் போச்சின்னு நெனைக்கேன்…” என்றாள்.

‘‘இதுஅவனோட ரத்தம்டி…” என்றேன்.

அப்போது என் கண்கள் ஒளிர்ந்தன. என் முகம் அடைந்த பரவசத்தைச் சட்டென ரசிக்கத் தொடங்கினாள் சாந்தி.

‘‘அப்படி என்னடி செஞ்சான். இப்பிடி மசங்கிப்போயிக் கெடக்கற?” என்றாள்.

சம்மணம் போட்டு எனக்கு முன் உட்கார்ந்து கொண்டாள். அவளுக்கு ஆர்வம் தொற்றிக்கொண்டது. அவன் பேச்சு வந்தவுடன் எனக்கிருந்த கொஞ்சம் வலியும் மாயமாய் மறைந்து போனது.

நான் ஒரேயொரு சம்பவத்தைத்தான் சொன்னேன். அதற்கே வாயை ‘ஆ’ எனப் பிளந்து உட்கார்ந்துவிட்டாள். நான் சொன்ன கதையின் கவிச்சையை அவளால் தாங்க முடியவில்லை.

[ads_hr hr_style=”hr-fade”]

2.

தே கருவேலங்காட்டில்தான் நான் காலால் போட்ட கட்டுகளை அவன் கையால் அவிழ்த்தான். ஆயிரம் நாட்களின் காதல் அவ்வளவு மூர்க்கமானதாக இருந்தது! ஊர் எல்லை குளத்து படித்துறையிலும், கரிசல் காட்டு ஒத்தையடிப் பாதைகளிலும், கோடைநாள் கூத்துகளிலும், காலையிலும் இரவிலும், வெயிலிலும் மழையிலும் நானும் அவனும் ஒருவரிடம் ஒருவர் பேசாமல், ஒரு தூதுக்குக் கூட வழியில்லாமல், பார்த்துப் பார்த்து ஏக்கம் பிடித்து வளர்த்த காமத்தை அந்த மூங்கில் காட்டில்தான் திறந்து பார்த்தோம். அதுவொரு காட்டுப்பூவைப்போல் மலர்ந்திருந்தது.

அன்றும் இதேபோல் அந்தி சாயும்பொழுதுதான். பனையிலிருந்து தலைகீழாகப் பாம்பு இறங்குவதைப்போல் இரவு வானிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தது. தாம்பு அறுந்து கொண்டு தொலைந்த எங்கள் மாடு ஒன்றைத் தேடிக்கொண்டு இந்தக் காட்டில் நின்றிருந்தேன் நான். எங்கள் வீட்டில் அனைவரும் ஆளுக்கொரு திசையாய்த் தேடிக்கொண்டிருந்தோம்.

மேய்ச்சல் காட்டிலிருந்து வீடு திரும்பும் போதெல்லாம் இந்த வேலங்காட்டில்தான் அந்த மாடு அடிக்கடி நுழைந்து கொள்ளும். ஏதோவொரு மாயச்செடியை இந்தக் காட்டில் அது கண்டுபிடித்து வைத்திருக்கும் போல. பலநாள் நான் அதை இங்கிருந்துதான் பிடித்துக்கொண்டு போவேன். அந்த ஞாபகத்தில் அன்று இங்கு தேடிக்கொண்டு வந்திருந்தேன்.

அந்தக் காட்டின் முகப்பில் நின்றிருந்த பனைகளில் மட்டைகள் சத்தம் போட்டுக்கொண்டிருந்தன. வரிசையாக ஐந்தாறு பனைகள். கரை மாதிரி ஒரு நீண்ட மேடு. காட்டின் எல்லையைக் காட்ட ஊரார் போட்ட தடுப்புக் கரையோ! அப்படியும் இருக்கலாம். எனக்கென்ன தெரியும்? நான் சின்னஞ்சிறிய பெண். எனக்கு நாலு இலைகள் விட்டு ஒருசில ஆண்டுகள்தான் ஆகின்றன.

கரையின் இறக்கத்தில் நின்றிருந்த அந்தப் பனைகளைக் கண்டதும், இந்த மேட்டில் இப்போது அவன் எதிரே நடந்து வந்தால் எப்படியிருக்கும் என்று என் மனசுக்கு தோன்றியது. அதுவொரு கள்ளக் கணக்கு. அதன் சூத்திரத்தைப் படிக்கத் தெரிந்தவனாக இருந்தால் இந்நேரம் அவன் மூக்கில் வேர்த்திருக்கும். இங்கே எங்காவது புதரில் முயலின் புழுக்கைகளை நொறுக்கி வாசம் பிடித்துக் கொண்டிருப்பான். நான் மாடு தேடுவதை விடுத்து சகுனம் பார்க்கக் காதுகளைக் கூர்மையாக்கினேன்.

அங்கு நின்றிருந்த அத்தனை பனைகளிலும் கண்களை ஓடவிட்டேன். மூன்று பெண் பனைகள். இரண்டு ஆண் பனைகள். ஒரு வடலிப் பனை. மொத்தம் ஆறு. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என்று வரிசையாய் பனைகளின் உச்சியைப் பார்த்து எண்ணிக்கொண்டே போனேன். அந்த மூன்றாவது பனையும் ஐந்தாவது பனையும் மற்றதை விட கருப்பாக இருப்பதுபோல் பட்டது. மட்டைகளைத் துழாவி பார்த்தேன். கருமையான குருத்துகள் இரண்டு மரத்திலும் தொங்கிக் கொண்டிருந்தன. அந்த இரண்டு பனைகளிலும் குறி வைத்தேன். ஆம். அதில் அடிக்கும் சகுனம்தான் பொருத்தமாக இருக்கும். அதுதான் பலிக்கும். ஆமாம், ஆண் பனையிலேயே சகுனம் கேள் என்று எனக்கு எதுவோ கட்டளைப் போட்டதுபோல் அந்த மரங்களைக் கூர்ந்தேன்.

இரண்டு பனைகளில் ஒன்றை ஓர் ஓணான் கட்டியணைத்துக் கொண்டிருந்தது. பனையைத் தழுவும் ஓணான் நல்ல சகுனமாக இருக்குமா? அது பொருந்தாது, அது எப்படி சகுனமாகும்? நான் பல்லி ஏதாவது ஒட்டியிருக்கிறதா என்று அடிமுதல் நுனிவரை கணுவுக்குக் கணு அளந்து பார்த்தேன். ம்கூம். ஒன்றுமில்லை. மேலே மட்டைகளில் காக்கா ஏதாவது அமர்ந்திருக்கிறதா என்று பார்த்தேன். காக்கா நல்ல சகுனமில்லையே. அது வேண்டாம்.

அந்த இரண்டு ஆண் பனைகளில் ஒன்று தன் காய்ந்த குருத்து ஒன்றை இச்சமயம் உதிர்த்தால் நல்ல சகுனமாக இருக்கும் என்று நானே ஒரு முடிவுக்கு வந்தேன். அப்படி ஒன்றும் விழவில்லை. கொஞ்ச தூரத்தில் ஓர் ஏகாந்தமான குரல். ‘கூ…கூ…கூ…’ என்று. அந்தக் குரல் நல்ல சகுனமாக இருக்கும் என்று நானே சொல்லிக்கொண்டேன். குயில் யாரையோ அழைக்கத்தான் கூவுகிறது என்பாள் பாட்டி. அவள் கதையில் குயில்கள் யாரையோ அழைத்தபடியே இருக்கும். இளம் வயதிலேயே அவளைப் பிரிந்த தாத்தாவாக இருக்கும். நான் குயிலின் சத்தத்தை சகுனம் என்று நம்பினேன். குரல் வந்த திசை எனக்குப் பிடித்த திசை.

மேற்கில்தான் நான் பிறந்தேன். என் அம்மாவுக்கு வலியெடுத்தபோது அவள் மேலக்காட்டில்தான் புல்லறுத்துக் கொண்டிருந்தாள். காட்டில்தான் என்னை ஈன்றாள். நான் அவள் கையில் கொடுக்கப்பட்டபோது சூரியன் நன்கு சிவந்து மேற்கில் இறங்கிக் கொண்டிருந்தது. மேற்கே திரும்பி உட்கார்ந்து கொண்டுதான் எனக்கு தன் முதல் சொட்டுப் பாலை வாயில் பிதுக்கிவிட்டாள் அம்மா. முதல் சொட்டுப் பாலை நாக்கில் ஏந்திய நான் அந்தச் சிவந்த கதிரவனையும் சேர்த்துச் சுவைத்தேன்.

மேற்கேயிருந்து மழை வந்த நாளொன்றில்தான் நான் வயதுக்கு வந்தேன். என் முதல் ருது ரத்தம் மேற்கில்தான் வழிந்து ஓடியது. வீட்டில் மேற்கில்தான் தலை வைத்துப் படுக்கிறேன். என் ருது துணிகளை மேற்குப் பக்க எரவானத்தில்தான் செருகி வைக்கிறேன். மேற்குத் திசை எனக்கானது. இயற்கை எனக்கு அந்தத் திசையைப் பரிசாகக் கொடுத்திருக்கிறது. மேற்கிலிருந்து ஒருநாளும் கெட்ட செய்தியே வந்ததில்லை. நான் பிறந்தேன், நான் வயசுக்கு வந்தேன் என்பதுபோல் வந்தவை எல்லாமே நல்ல செய்திகள்.

குயில் கூவிய மேற்கில் மூங்கில் நெடுநெடுவென்று வளர்ந்திருந்தது. மாடு அதற்குள் போய் நின்று கொண்டிருக்குமோ! அங்கிருக்கும் நிழலோட்டத்தில் அது படுத்திருக்குமோ! ஒருவேளை அவனும் அங்கிருக்கக் கூடுமோ! நான் சகுனத்தை முழுமையாக நம்பிவிட்டேன். என் மனம் ‘மூங்கில் தோப்பில் புகுந்துவிடு’ என்றது.

அந்தியின் மஞ்சள் வெளிச்சம் தோப்பில் இறங்கியிருந்தது. மூங்கில் இலைகளுக்கு நடுவே நுழைந்து தரையிறங்கியிருந்த வெளிச்சத்தைப் பார்த்தேன். மஞ்சள் கிழங்கு நிறத்தில் இலைகளும், மஞ்சள் கரைசல் நிறத்தில் வெளிச்சமும் சிதறியிருந்தன. சகுனம் வா என்று உள்ளே அழைத்தது. என் கால்கள் அனிச்சையாக உள்ளே நடந்தன. தோப்பில் நான்கு போத்துகள். ஒவ்வொரு போத்திலும் இருபதுக்கும் மேற்பட்ட வாரைகள். ஒவ்வொன்றும் வானை முட்டிக்கொண்டு நின்றிருந்தன. மெல்லிய கிளைகள் வளைந்து படர்ந்திருந்தன.

என் கால்கள் மெல்ல அடியெடுத்து வைத்தன. மேற்கு பக்கமிருந்த ஒரு போத்தின் பின்னாலிருந்து என் மாட்டின் வால் வெளிப்பட்டது. பிறகு அதன் இரண்டு கொம்புகள் தெரிந்தன. நான் ஓடிச்சென்று மாட்டின் முன்னால் நின்றேன். அவன் அங்கு ஒரு கனவைப்போல் உட்கார்ந்திருந்தான். நான் என் மாட்டைத் தேடுவதைத் தெரிந்துகொண்டு அதைத் தேடிக் கண்டுபிடித்து வைத்துக்கொண்டு எனக்காக உட்கார்ந்திருந்தான். என் இதயத் துடிப்பு உடல் தாண்டி வெளியே கேட்பதை நான் மறைக்க முயன்றேன்.

அதோ அந்த மூங்கில் புதருக்குள்தான் இந்த நிலத்தின் அதிசுவையான ஈச்சங்கிழங்கைத் தோண்டி எடுத்து வந்து எனக்குக் கொடுத்தான். அந்தச் சுவை என் நாக்கில் ஒட்டி தொண்டைக் குழிக்குள் இறங்கியபோது நாங்கள் புதருக்குள் குழிபறித்தோம். அவனுடைய கன்னங்கரேலென்ற பரந்த முதுகில், அதில் ஊறிய வேர்வையில் என் கன்னத்தை வைத்துப் படுத்துக் கிடந்த அந்தச் சிறிய பொழுதை பிறகு நான் அடிக்கடி நுகர்ந்தேன்.

[ads_hr hr_style=”hr-fade”]

3.

‘‘டி கள்ளி… என்னெல்லாம் செஞ்சிருக்க… எனக்கெப்படி தெரியாமப் போச்சி!?” என்றாள் சாந்தி.

அவளால் நான் சொன்னதை நம்ப முடியவில்லை. தோழிக்குத் தெரியாமல் காதல், கூடல்… இதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. இவையனைத்தும் நீ கற்பனை செய்து சொல்லும் கதைகள் என்றாள். என் கை விரல்களைப் பிணைத்து தாவாயில் வைத்துக்கொண்டு உடலை ஊஞ்சலைப் போல் ஆட்டிக்கொண்டே அவளைக் கேலியான பார்வையால் பரிகாசம் செய்வதுபோல் பார்த்தேன். அவளுக்குக் கோபம் வந்துவிட்டது.

‘‘அடி…புளுகுணி. எங்கிட்ட வேஷம் போடாத. உண்மையச் சொல்லு” என்றாள்.

‘‘ஏய்… நெசமாத்தான் சொல்றேன்…நம்புடி!” என்று அவள் தொடையைக் கிள்ளினேன்.

‘ஸ்…ஆ…’என்று வலியால் துடித்தாள்.

‘‘ஒனக்கு நெஞ்சழுத்தம் ஜாஸ்தி…நீ செஞ்சாலும் செஞ்சிருப்ப…” என்றாள்.

தொடர்ந்து நான் சொன்ன கவிச்சைக் கதைகளுக்கு அவளால் காது கொடுக்க முடியவில்லை. ‘சாமி ஆளவிடடி’ என்று கெஞ்சினாள்.

கழுத்து முட்டும் தண்ணீரில் நிற்பதுபோல் மேற்கில் சூரியன் மறைந்து கொண்டிருந்தது. நான் வெட்டிப் போட்ட விறகுகளையும் அவளே கட்டினாள். விறகுகள் குறைந்து கட்டு கனமற்று இருந்தது. அவளுக்கு கனத்த கட்டு. எனக்கு முதலில் தூக்கி வைத்துவிட்டு, அவளது கனத்த கட்டுக்கு நடுவே தலையை முண்டு கொடுத்து ஒரு முட்டு முட்டினாள். அவ்வளவுதான். கட்டு தலையில் ஜம்மென்று உட்கார்ந்து கொண்டது. வீட்டுக்கு வரும் வழியில், எதிரெதிரே இரண்டு ஆலமரங்கள் நிற்கும் குளத்தைப் பார்த்தேன். குளம் முழுக்க அல்லி இலைகள். மலரும் நிலையில் ஆயிரம் மொக்குகள். கள்ளத்தனமாக நான் சிரித்துக்கொண்டேன். சாந்தி என் புட்டத்தில் ஒரு தட்டு தட்டினாள்.

விறகுக் கட்டை வீட்டுக்கு முன் இறக்கிப் போடும்போது வெட்டுப்பட்ட இடத்தில் சுரீரென்று ஒரு வலி. இவ்வளவு நேரம் எங்கு ஒளிந்திருந்ததோ அந்த வலி. வீட்டைப் பார்த்தவுடன் கண் விழித்துக்கொண்டது. வலிக்குக் கூட காட்டில் எப்படி வலிக்க வேண்டும், வீட்டில் எப்படி வலிக்க வேண்டும் என்று தெரிந்திருக்கிறது! என்னைக் காட்டிக் கொடுக்கப் பார்க்கிறது! ஆனால், காயத்தை யாரிடமும் நான் காட்டவில்லை. அதை ஒரு புது மச்சத்தை மறைப்பதைப்போல் ஒளித்துக்கொண்டேன்.

[ads_hr hr_style=”hr-fade”]

4.

ரவில் நெடுநேரம் நான் உறங்கவில்லை. ருதுநாள் என்பதால் பட்டியில் நார்க்கட்டிலைப் போட்டு தனியே விட்டுவிட்டாள் அம்மா. ஒவ்வொரு மாதமும் இப்படித்தான். அம்மாவுக்கு ருதுநாள் என்றாலும் அவளும் இப்படித்தான் தனித்திருப்பாள். ஆடுகளின் கருப்பும் சேர்ந்து கொண்டதால் பட்டி கன்னங்கரேலென்று இருண்டு போய்க் கிடந்தது.

ஆடுகள் உதிர்க்கும் புழுக்கைகள் உருண்டு என்னிடம் ஓடிவந்தன. கட்டிலில் கிடந்தபடியே அவைகளைக் கைகளால் தேடி எடுத்து முகர்ந்தேன். காட்டுச்செடிகளின் அழுகிய நாற்றம் அதில். இந்த ஆடுகள் காடுகளை உண்டு காட்டின் வாசனையைப் புழுக்கைகளாக உதிர்க்கின்றன போலும்!

அந்தப் புழுக்கைகளை ஒவ்வொன்றாக என் உடம்பில் ஒட்டவைத்துக்கொண்டே சென்றேன். தூக்கம் வரவில்லையே, அதனால் அப்படியொரு விளையாட்டு. நெற்றியில் ஒன்று, இமைகளை மூடி இரண்டிலும் ஒவ்வொன்று, மூக்கின் நுனியில் வைக்க முடியவில்லை, அதற்கும் கீழே மேலுதட்டு மேட்டில் குமிழ்போல் ஒரு குழி இருக்குமே அதில் ஒன்று, உதட்டில் ஒன்று, தாவாயில் ஒன்று, தொண்டைக்குழியில் ஒன்று, நெஞ்சு நடுவே ஒன்று, நெஞ்சுக்குழியில் ஒன்று, தொப்புள் குழியில் ஒன்று, அடிவயிற்றில் ஒன்று… படுத்துக்கொண்டே கைகளுக்கு எட்டும் தூரம் வரைக்கும் ஒவ்வொரு புழுக்கையாக வைத்துக்கொண்டே சென்றேன்.

அப்படிச் செய்தபோது என் உடம்பின் ஒவ்வொரு இணுக்கையும் இந்தக் காட்டின் வாசனையால் நான் நிரப்புவதாக நினைத்தேன். அத்தனையும் ஈரப்புழுக்கைகள். அவற்றை என் உடலில் ஒவ்வொரு இடமாக வைக்கும்போது அதிலிருந்து வெளிப்பட்ட வெப்பமும் குளிர்ச்சியும்-ஆம் இரண்டு தன்மையும்தான்- என்னை ஒரு பரந்த காடுபோல் மாற்றுவதாக நினைத்தேன்.

புழுக்கைகளை என் உடம்பில் ஒட்டி விளையாடியபோது எனக்குத் தாளவொண்ணாத நடுக்கத்தையும் பரவசத்தையும் சில இடங்கள் கொடுத்தன. என் இமைகளுக்கு நடுவே புழுக்கையை வைத்தபோது உள்ளிருக்கும் கருவிழிகள் முட்டி வெளியே வந்து அமர்ந்து கொண்டதைப்போல் இருந்தது. அதேபோல் என் மார்புகளில் வைத்தபோது அங்கே ஏற்கெனவே இரண்டு புழுக்கைகளை நான் வைத்திருந்தேன். ஆக ஒவ்வொரு மார்பிலும் அந்த இரவில் இரண்டு புழுக்கைகள் இருந்தன.

எனக்குச் சிரித்து மாளவில்லை. இதை யாராவது பார்த்தால் என்ன சொல்வார்கள். ஒவ்வொரு முலைக்கும் இரண்டு காம்புகள் கொண்டவளை ஆச்சர்யமாகப் பார்ப்பார்கள். நான் மனிதப் பிறவியல்ல, வேறேதோ கிரகவாசி என்று நினைப்பார்கள். நான் அதை நினைத்து நினைத்துச் சிரித்துக்கொண்டேயிருந்தேன்.

பட்டியில் பெரும்பகுதியும் கொறாக்கள்தான். பதினெட்டு கொறாக்கள். என்னைப்பார் உன்னைப்பார் என்று நெகுநெகுவென்று வளர்ந்த கொறாக்கள். அவற்றில் பதிமூன்று உருப்படிகள் சினை. அந்த பதிமூன்று கொறாக்களின் வயிற்றையும் நிரப்பியது ஒரேயொரு கிடாதான். நான் அந்தக் கிடாயை இறங்கிச் சென்று தொட்டுப் பார்க்க விரும்பினேன். ‘ச்சீ… என்ன நினைப்பு. அது கூடாது, தப்பு’ என்று கன்னத்தைக் கிள்ளிக் கொண்டேன். ஆனால், ஆசை விடவில்லை. சத்தம் காட்டாமல் கட்டிலை விட்டு இறங்கி அந்தக் கிடா கட்டப்பட்டிருக்கும் இடத்திற்குச் சென்றேன். அந்த இருட்டிலும் அது, புது கொறா ஒன்றை ஆழ்ந்து நுகர்ந்து கொண்டிருந்தது. நான் அதன் புடைத்த வயிற்றைத் தொட்டேன். அது சிலிர்த்தது. தடவிக்கொண்டே போய் அதன் நெற்றியில் கை வைத்தேன். அதன் மூச்சு என் மீது வெப்பமாகப் பரவியது.

ஓடிவந்து கட்டிலில் படுத்துக்கொண்டேன். என் மார்புகள் இயல்பில்லாமல் ஏறி இறங்கின. எனக்கு இரண்டு விசயங்களில் சந்தேகம் வலுத்தது. ‘உள்ளே நிற்பது அவனோ? இல்லை… அந்தக் கிடா நுகர்ந்த கொறா நானோ!’ என்னால் மூச்சை சீராக விட முடியவில்லை.

என்னை இப்படி, ஆட்டுக்கும் மனுசனுக்கும் வித்தியாசம் தெரியாமல் புலம்ப வைத்துவிட்ட அவனை நினைக்கக் கோபமாக வந்தது.

‘‘டேய்… கருப்பா… எங்கடா இருக்க?” என்று சத்தம் வெளியே விழாதபடிக்கு வாய்விட்டு கத்தினேன். அந்தச் சத்தம் ஆடுகளின் காதுகளில் விழுந்திருக்கும் போல. எல்லா ஆடுகளும் என் பக்கம் திரும்பி மூச்சு விட்டன.

[ads_hr hr_style=”hr-fade”]

5.

மிகப்பெரிய புழுதி மண்டலத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட அடிமாடுகளின் பின்னால், ஏதோ புழுதிப் புயலில் சிக்கிக் கொண்டவனைப்போல் அவன் போய்க் கொண்டிருந்தான். அதுவொரு சமவெளிப் பகுதியாக இருந்தது. கண்ணெட்டும் தூரம் வரை அறுவடை முடிந்த புஞ்சை நிலங்கள். விளைச்சலையெல்லாம் சம்சாரிகள் வீட்டுக்குக் கொண்டுபோய்ச் சேர்த்த பிறகு இந்த நிலங்கள் பாலைவனமாகிவிடுகின்றன. மணல் பகுதியும், செம்மண் பகுதியும் மாறி மாறி வந்துகொண்டிருந்தன. மாடுகள் செம்மண் காடுகளில் போய்க்கொண்டிருந்தன. வானம், பூமி எல்லாவற்றையும் மறைத்துக்கொண்டு செம்புழுதி பறக்கிறது. என் உடம்பெல்லாம் புழுதி. எனக்கு மூச்சை அடைத்தது.

‘‘ஐயோ… மூச்சை அடைக்கிறது… ஏய் கருப்பா… மாடுகளை வேற பாதைகளில் ஓட்டிப்போகக்கூடாதா?” என்றேன்.

இப்போது குரல் கொஞ்சம் வெளியே வந்துவிட்டது. என் குரல் கேட்ட ஆடுகள் படபடவென்று எழுந்து ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. எழுந்த வேகத்தில் ஆடுகள் எல்லாம் ஒரே நேரத்தில் மோண்டதால் ஏதோ கூரையைப் பிய்த்துக்கொண்டு மழைக் கொட்டுவதைப்போல் சத்தம் உண்டாகிவிட்டது.

வீட்டுக்குள் யாரோ எழுந்து உட்காரும் அரவம் கேட்கிறது. கதவு லேசாகத் திறக்கப்படுகிறது. காலடிகள் மெதுவாக ஆட்டுக் கொட்டகைக்கு வருகின்றன. படுப்பதற்கு முன் படலை இறுக்க சாத்தி உள் பக்கம் கயிறு மாட்டியிருந்தேன். படலில் கை படும் சத்தம் கேட்கிறது. ஆடுகள் வெளியே உருவம் நிழலாடுவதைக் கண்டு அஞ்சுகின்றன. ஒன்றோடொன்று ஒண்டி நிற்கின்றன. சத்தம் காட்டாமல் உடலை சமன்படுத்துகிறேன். உடம்பில் ஒட்ட வைத்திருந்த ஆட்டுப் புழுக்கைகள் நழுவி விழுந்து விடாதவாறு ஒரு படித்துறைக் கல்லைப்போல் உறுதியாகக் கிடந்தேன். கூரை விளிம்புக்கும் படல் விளிம்புக்கும் இடையே கை விடும் அளவுக்கு இடமிருந்தது. அந்த வெற்றிடம் வழியே நான் கவனிக்கப்பட்டேன். என்னால் அதை உணர முடிந்தது. என்னிடமிருந்து சீரான குறட்டை வருவதுபோல் செய்தேன். படலைப் பிடித்துக்கொண்டிருந்த கைகள் மெல்ல விலகுகின்றன. யாராக இருக்கும்? அம்மாவா? பாட்டியா? வாசனை ஏதாவது வருகிறதா என்று ஆழ்ந்து நுகர்ந்தேன். அம்மாவாக இருந்தால் மஞ்சள் வாசமும், பாட்டியாக இருந்தால் புகையிலை வாசமும் வரும்.

ஆனால், ஒரு வாசமும் வரவில்லை.

அப்பாவாக இருக்குமோ? நான் வாய்விட்டு கத்தி விட்டேனோ? ‘டேய் கருப்பா’ என்ற என் குரல் அவர் காதில் விழுந்திருக்குமோ? மனசு பரபரவென்று யோசனை செய்யத் தொடங்கியது. சந்தேகம் கேள்விகளாக வந்து குவிந்துகொண்டே இருந்தது.

வெளியே தெரியும் அரவமற்ற உருவம் கண்டு ஆடுகள் லேசாய் குரல் கொடுத்தன. அவைகளால் அச்சத்தைப் பொறுக்க முடியவில்லை. புதிய புழுக்கைகள் உதிர்கின்ற ஓசை தெளிவாய்க் கேட்கிறது. ஆடுகளின் சூடான மூத்திர வாடை என்னை நிறைக்கிறது. நான் பேய் உறக்கம் போடுவதுபோல் நடித்தேன்.

கொட்டகையை விடுத்து கால்கள் வாசற்படலை நோக்கி மெல்ல நடக்கும் சத்தம் கேட்கிறது. நான் மெதுவாக எக்கிப் பார்க்கிறேன். தெற்கு மூலையில் நிற்கும் பூவரசு மரத்தின் பரந்த நிழல் கொட்டி தெருவாசல் கருமையேறி கிடக்கிறது. வாசற்படலைத் திறந்து வெளியே போன உருவம் பீடியை பற்ற வைத்தபோதுதான் என்னால் நிம்மதியான மூச்சை விடமுடிந்தது. அது அப்பாவேதான். அவர் குடிக்கும் பீடியின் வாசனைதான் அது.

சற்று நேரம் நின்று தெருவெங்கும் பீடி வாசனையைப் பரப்பியவர் அப்படியே தெற்கே குளத்தங்கரைக்குப் போகும் சாலையில் நடக்கத் தொடங்கினார். ஒவ்வொன்றாக ஊர்க்கோழிகள் கூவத் தொடங்கின.

இனிமேல்தான் காட்டுமுல்லை நல்ல வாசனையைக் கொடுக்கும் என்று நான் எனக்குள் சொல்லிக்கொண்டேன்.


  • மௌனன் யாத்ரிகா

2 COMMENTS

  1. ஏசி ரூம் காதலை மட்டுமே அறிந்த என்னைப்போன்ற ஃபிரிட்ஜில் வைத்த ஆப்பிள்களுக்கு உண்மையான காதலின் இன்னொரு பக்கத்தை ரத்தமும் வலியுமாக அறிமுகம் செய்து வைக்கிறது இந்த கதை ….கதை இல்லை …அந்த கருவேல மரமும் கத்தாழையும் வெட்டுக்காயத்தில் தெரியுமம் வெண்மையும்…காடும் ஆடும் பீடி வாசமும் உயிரோடு இருக்கிறது …!

    எந்த போலித்தனங்களும் இல்லாத இந்த நடையும் மொழியும் கதையைப்போலவே பேரழகு !

    ஒரு நல்ல படைப்பை
    வாழ்த்துவதில் பெருமை கொள்கிறேன் ! நன்றி !

  2. நல்ல முயற்சி.. தொடரட்டும் சிறுகதைப்படைப்பும் வேட்டுவ வாடையும்.. வாழ்த்துகள் மௌனன்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.