Homeபெட்டகம்மூளையில் பாய்ந்த புல்லட் -மொழிபெயர்ப்பு சிறுகதை

மூளையில் பாய்ந்த புல்லட் -மொழிபெயர்ப்பு சிறுகதை

மூலம்: டோபியாஸ் உல்ஃப்

தமிழில் : ஜி.குப்புசாமி


வரிசை முடிவற்றதாக இருந்தது. வங்கி மூடப்படுவதற்கு சற்று முன்னர் வரையிலும் ஆந்தெர்ஸால் வந்து சேர முடிந்திருக்கவில்லை. இப்போது அவனுக்கு முன்னாலிருந்த இரண்டு பெண்களின் உரத்த, மடத்தனமான உரையாடலால் கொலை வெறிக்கு அவன் தள்ளப்பட்டிருந்தான். எப்படியிருப்பினும் எப்போதும் உன்னதமான மனநிலைகளில் உழல்பவனல்ல அவன். ஆந்தெர்ஸ் ஒரு புத்தகத் திறனாய்வாளன். அவன் விமர்சிக்கும் ஏறக்குறைய எல்லாவற்றையும் சலிப்பேயில்லாமல் நளினமான கொடூரத்துடன் புறந்தள்ளுவதில் பெயர் பெற்றிருப்பவன்.

 

வேலிக்கயிற்றைச் சுற்றிக்கொண்டு வரிசை இரண்டாக மடிய, டெல்லர்களில் ஒருத்தி தனது கவுண்ட்டரின் சன்னலில் ‘பொஸிஷன் க்ளோஸ்டு’ பலகையை மாட்டிவிட்டு வங்கியின் பின்புறத்துக்குச் சென்று அங்கே காகிதங்களை அடுக்கிக் கொண்டிருந்தவனோடு மேஜையில் சாய்ந்தபடி சம்பாஷிக்கத் தொடங்கினாள். ஆந்தெர்ஸூக்கு முன்னாலிருந்த பெண்கள் தம் உரையாடலை நிறுத்திவிட்டு அந்த டெல்லர் பெண்ணை வெறுப்புடன் பார்த்தனர். “ ஓ.. ரொம்ப அழகுதான்” என்றாள் அவர்களில் ஒருத்தி. ஆந்தெர்ஸ் பக்கம் திரும்பி, அவனது ஓப்புதல் கிடைத்துவிடுமென்ற நம்பிக்கையோடு, “ நம்மைப்போன்ற வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ஆதரவு அளிப்பதற்காக அவர்கள் காட்டும் மனிதாபிமானமிக்க சேவைகளில் இதுவும் ஒன்று” என்று சேர்த்துக்கொண்டார்.

 

அந்த டெல்லரின் மீது ஆந்தெர்ஸூக்கு வெறுப்பு கணிசமாக ஊதிப் பெருத்திருந்தாலும் அதனை அவனுக்கு முன்னாலிருந்த அந்த அகம்பாவ அழு மூஞ்சியின் மீது உடனடியாகத் திருப்பினான். “ இந்த அநியாயம் உண்மையில் சோகம்தான். உங்கள் காலைத் தப்பாகத் துண்டிக்காதவரை,  உங்கள் பூர்வீக கிராமத்தின் மீது குண்டு வீசாதவரை, அவர்கள் கவுண்ட்டரை மூடிக்கொண்டுதான் இருக்கட்டுமே” என்றான்.

 

அவள் பிடிவாதமாக, “சோகம் என்று நான் சொல்லவில்லை. இது உங்கள் வாடிக்கையாளர்களை மிக மோசமாக நடத்துகிற விதம் என்றுதான் சொல்கிறேன்” என்றாள்.

 

“மன்னிக்கவே முடியாது” என்றான் ஆந்தெர்ஸ். “ ஆண்டவன் குறித்து வைத்துக்கொள்வான்”.

அவள் தன் கன்னங்களை உறிஞ்சி உள்ளிழுத்துக்கொண்டு எதுவும் பேசாமல் அவனைத் தாண்டி பார்வையை வெறித்தாள். அவளுடைய சிநேகிதியான மற்றொரு பெண்ணும் அதே திக்கில் பார்வையைத் திருப்புவதை ஆந்தெர்ஸ் கவனித்தான். அவனுக்குப் பின்னால் ஏதோ நிகழத் தொடங்கியிருக்கிறது. டெல்லர்கள் தமது இயக்கங்களை நிறுத்தினர். வாடிக்கையாளர்கள் மெதுவாகத் திரும்பிப் பார்க்க, வங்கியில் நிசப்தம் கவிழ்ந்தது. வாசற்கதவுக்குப் பக்கத்தில் கருப்பு நிறப் பனிச்சறுக்கு முகமூடியும் பிஸினஸ் சூட்களும் அணிந்திருந்த இரண்டு பேர் நின்றிருந்தனர்.  ஒருவன் வாயிற்காவலனின் கழுத்தில் ஒரு கைத் துப்பாக்கியை அழுத்திப் பதிந்திருந்தான். காவலாளியின் கண்கள் மூடியிருந்தன. உதடுகள் மட்டும் துடித்துகொண்டிருந்தன. மற்றவன் கையில் செதுக்கப்பட்ட வேட்டைத் துப்பாக்கி  இருந்தது.

 

“வாயை மூடிக்கொண்டிருக்க வேண்டும்! “. யாருமே பேசாவிட்டாலும் கைத்துப்பாகியுடன் இருந்தவன் கத்தினான். “டெல்லர்களில் யாராவது அலாரம் அடித்தால் நீங்கள் எல்லாரும் செத்த மாமிசமாகி விடுவீர்கள். புரிந்ததா?”.

 

டெல்லர்கள் தலையாட்டினர்.

“ஷ், என்ன துணிச்சல்!” என்றான் ஆந்தெர்ஸ்.” செத்த மாமிசம்! என்னவொரு பிரயோகம்!” அவன் முன்னாலிருந்த பெண்ணிடம் திரும்பினான். “ இது அபாரமான ஸ்கிரிப்ட்டாக இருக்கிறது, இல்லையா?  பயங்கர வகுப்பினர் எழுதும் இறுக்கமான வெட்கமும் அச்சமுற்ற கவிதை”.

 

அவள் அவனை மூழ்கும் விழிகளோடு பார்த்தாள்..

வேட்டைத் துப்பாக்கி வைத்திருந்தவன் காவலனை அழுத்தி மண்டியிட வைத்தான். துப்பாக்கியை அவன் சகாவிடம் கொடுத்துவிட்டு, காவலனின் மணிக்கட்டைப்பற்றி  கையை முறுக்கி முதுகுக்குக் கொண்டுவந்து மற்றொரு கையையும் சேர்த்து ஒன்றாகக் கட்டினான்.  முதுகில் எட்டி ஓர் உதை விட்டு அவனைத் தரையில் கவிழ்த்தான். துப்பாக்கியைத் திரும்ப வாங்கிக்கொண்டு கவுண்ட்டரின் முடிவிலிருந்த பாதுகாப்பு வாயிலைத் தாண்டி உள்ளே சென்றான். குள்ளமாகவும் பருமனாகவும் இருந்த அவன் ஒரு விநோதமான மந்தகதியில் ஏறக்குறைய ஆர்வமற்ற சோம்பலோடு நடந்தான். “ அவனை  உள்ளே தள்ளு “  என்றான் அவனுடைய சகா.  வேட்டைத் துப்பாக்கி வைத்திருந்தவன் டெல்லர்கள் வரிசைக்குச் சென்று ஒவ்வொருவரிடமும் ஒரு பெரிய பையைக் கொடுத்தான்.  காலியான  இடத்துக்கு வந்ததும் கைத் துப்பாக்கி வைத்திருந்தவனை நிமிர்ந்து பார்க்க, அவன் “ இந்த  இடம் யாருடையது?” என்றான்.

ஆந்தெர்ஸ் அந்த டெல்லரைக் கவனித்தான். அவள் கையைத் தொண்டையின் மேல் வைத்துக்கொண்டு நண்பனைத் திரும்பிப் பார்த்தாள்.அவன் தலையசைத்தான். “ என்னுடையது” என்றான்.

”அப்படியானால் உன் அழுக்கு பிருஷ்டத்தை அசைத்துக்கொண்டு இங்கு வந்து இந்தப் பையை நிரப்பு.”

”அப்படிப் போடு” என்றான் ஆந்தெர்ஸ் முன்னாலிருந்த பெண்ணிடம். “நீதி வென்றுவிட்டது.”

“ஹேய்! அறிவுக்கொழுந்து!  உன்னை நான் பேசச் சொன்னேனா.?”என்று ஆந்தெர்ஸைப் பார்த்துக் கத்தினான் அந்தத் திருடன்.

“இல்லை” என்றான் ஆந்தெர்ஸ்.

“அப்படியானால் உன் உளறலை நிறுத்து.”

“கேட்டாயா?” என்றான் ஆந்தெர்ஸ். “ ‘அறிவுக்கொழுந்து.’ ’தி கில்லர்ஸ்’லிருந்து அப்படியே எடுக்கப்பட்ட வசனம்.”

“தயவுசெய்து அமைதியாக இருங்கள்” என்றாள் அவள்.

“ஹேய். நீ செவிடனா? அல்லது வேறெதாவதா ?” கைத்துப்பாக்கி வைத்திருந்தவன் ஆந்தெர்ஸிடம் வந்தான். அவன் வயிற்றில் அந்த ஆயுதத்தை அழுத்தினான். “நான் விளையாட வந்திருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கிறாயா?”

 

“இல்லை” என்றான் ஆந்தெர்ஸ். துப்பாக்கியின் குழல் விரைத்த விரல் போல வயிற்றில் கிச்சு கிச்சு மூட்ட,  அவனுக்கு சிரிப்பைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொள்ள வேண்டியிருந்தது. சிரிப்பை அடக்குவதற்கான உபாயமாக முகமூடித் துவாரங்களின் வழியாகத் தெரிந்த அம்மனிதனின் கண்களை உற்றுப் பார்க்கத் தொடங்கினான். சிவப்புக் கோடுகள் நெளியும் வெளிர்நீல விழிகள்.  அவனுடைய இடது கண்ணிமை துடித்துக் கொண்டே இருந்தது.  அவனிடமிருந்து வெளிப்பட்ட மூச்சுக்காற்றில்  கலந்திருந்த அம்மோனியா நெடி ஆந்தெர்ஸைக் கூர்மையாகத் தாக்கி, தற்போதைய சிக்கல்கள் எல்லாவற்றையும் விட அதிகமாக அவனை ஸ்தம்பிக்க வைத்தது. அவன் சுவாசக் காற்றின் வாடையில் அவன் தாங்க முடியாமல் தள்ளாட, அந்த மனிதன் மீண்டும் துப்பாக்கியால் வயிற்றில் குத்தினான்.

 

“என்னை உனக்கு அவ்வளவு பிடித்திருக்கிறதா அறிவுக் கொழுந்துப் பயலே” என்றான்.” என் குறியை நக்க ஆசையாய் இருக்கிறதா?”

 

“இல்லை” என்றான் ஆந்தெர்ஸ்.

“அப்படியானால் என்னை உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பதை நிறுத்து.”

ஆந்தெர்ஸ் குனிந்து அம்மனிதனின் பளபளப்பான  விங்-டிப் ஷுக்களின் மேல் பார்வையை நிலைகுத்தினான்.

“அங்கே அடியில் அல்ல, ,மேலே” ஆந்தர்ஸின் முகவாயில் துப்பாக்கியை அழுத்தி, உட்கூரையைப் பார்க்கும்படி மேலே தூக்கினான்.

 

வங்கியின் அந்தப் பகுதியின் மீது ஆந்தெர்ஸ் இதுவரை கவனம் செலுத்தியதில்லை. அந்தக் கட்டிடம் பளிங்குத்தரையும் தங்கமூலாம் பூசிய கவுண்டர்களும் தூண்களும் சுருள்சுருளான கம்பி வேலைப்பாடுகள் கொண்ட டெல்லர் கூண்டுகளுமாக இருந்த ஒரு பகட்டான பழைய கட்டிடம்.

குவிமாடக் கூரையில் அலங்கார ஓவியங்களாக  வரையப்பட்டிருந்த சதைப்பற்றுள்ள, டோகோ அங்கியணிந்த அழுக்கான தொன்மக் கதையுருவங்களை ஆந்தெர்ஸ் பட்டும்படாமல் பார்த்து, அதன்பின் கவனிக்காமல் போயிருக்கிறான்.  இப்போது அந்த ஓவியனின் வேலையை ஊன்றிக் கவனிப்பதை விட வேறு வழி இருக்கவில்லை. அவன் ஞாபகத்தில் இருந்ததை விட அது மோசமாக, எல்லாமே மிகையான முக்கியத்துவத்தோடு இருந்தது. அந்த ஓவியனுக்கென்று சில வித்தைகள் தெரிந்திருந்தன. அவற்றைத் திரும்ப திரும்ப பயன்படுத்திருந்தான். மேகங்களுக்கிடையில் குறிப்பட்டதொரு ரோஸ் நிற வெட்கச் சிவப்பு, கியூபிட்கள், ஃபான்களின் முகத்தில் காணப்படும் பின்னோக்கிய திருட்டுப் பார்வைகள். உட்கூரையில் பல்வேறு நிகழ்வுகள் நெருக்கமாக வரையப்பட்டிருந்தன. ஆனால் ஆந்தெர்ஸின் கண்களைக் கவர்ந்தது, ஸீயஸ்ஸும் யூரோபாவும் காளையும் பசுவுமாக சித்திரிக்கப்பட்டிருந்துதான். வைக்கோற்போருக்குப் பின்னாலிருந்து காளை, பசுவைக் காதல் கனியப் பார்த்துக் கொண்டிருந்தது. பசுவைக் கவர்ச்சியாக காட்டுவதற்கு அந்த ஓவியன் அதன் இடுப்பை கருத்தேற்றமாக விஸ்தாரமாக்கி, நீண்டு சரிந்த கண்ணிமைகளின் வழியே அந்தக் காளையை தாபத்தோடு வரவேற்கும் பார்வையைக் கொண்டுவந்திருந்தான். காளையிடம் அசட்டுச் சிரிப்பு காணப்பட்டது. அதன் புருவங்கள் வில்லாக வளைந்திருந்தன. அதன் வாயிலிருந்து குமிழ் ஒன்று வெளிவந்து கொண்டிருந்தால் அது “ஹப்பா, ஹப்பா” என்றிருக்கும்.

 

“வேடிக்கையாக என்ன இருக்கிறது அறிவுக்கொழுந்தே?”

“ஒன்றுமில்லை”

 

“நான் தமாஷ் செய்வதாக நினைக்கிறாயா? நான் ஏதோ ஒரு கோமாளி என்று நினைக்கிறாயா?”

 

“இல்லை”

 

“ஒரு முறை என் சூத்தை ஓக்கிறாயா? காலியாகிவிடுவாய். கப்பீ..ஸி?”

 

ஆந்தெர்ஸ் வெடித்துச் சிரித்தான். இருகைகளாலும் வாயைப் பொத்திக் கொண்டு  “ஐ ஆம்  ஸாரி, ஐ ஆம் ஸாரி” என்றான். பின் அவனால் அடக்க முடியாமல் எக்களித்து விரல்களுக்கிடையே கசிந்தது. “கப்பீஸி! ஓ கடவுளே, கப்பீஸி !” அந்த முகமூடி மனிதன் துப்பாக்கியை உயர்த்தி ஆந்தெர்ஸின் தலையின் நடுவில் வைத்துச் சுட்டான்.

அந்த புல்லட் ஆந்தெர்ஸின் கபால எலும்பைத் துளைத்து,  மூளைக்குள் உழுதுகொண்டு சென்று அவன் வலது காதின் பின்னால் துளைத்து வெளியே தெறித்து விழுந்தது. எலும்புச்சில்லுகள் பெருமூளைக்குள்ளும், பின்னால் அடிநரம்பு முடிச்சிலும், அடியில் தலாமஸ்ஸிலும் சிதறின. ஆனால் இவையனைத்தும் நிகழ்வதற்குமுன், பெருமூளையில் அந்த புல்லட் பிரவேசித்த அக்கணத்தில் சங்கிலித் தொடராக அயனி கடத்தல்களும் நரம்பு மண்டல செய்திப் பரிமாற்றங்களும் திடுமெனத் தொடங்கின. அவற்றின் பிரத்தியேகமான உற்பத்தி ஸ்தானத்தின் நிமித்தமாக இவை ஒரு பிரத்தியேகமான பாங்கினில் தடம் அமைத்துக் கொண்டு, நாற்பது வருடங்களுக்கு முன் ஒரு  கோடைக்கால மதியத்தில் நிகழ்ந்து பின் இப்போது வரை மறந்து போயிருந்த ஒரு விஷயத்துக்கு யதேச்சையாக உயிரூட்டின. மண்டை ஓட்டைத் தாக்கிய பின் அந்த புல்லட் விநாடிக்கு தொள்ளாயிரம் அடி வேகத்தில் பாய்ந்தாலும், அந்தத் தடத்தை சுற்றி மூளையின் நரம்பு செல்களில் மின்னலடித்துச் சென்ற செய்தி பரிவர்த்தனைகளின் வேகத்தோடு ஒப்பிடுகையில் அது ஓர் அவலமான மந்தகதி வேகம்தான். புல்லட் மூளையை அடைந்ததும், அதாவது மூளை நேரத்தின் இடையீட்டின் கீழ் அந்த புல்லட் வந்ததும், ‘அவன் கண் முன்னால் சென்ற’ (இத்தகைய சொற்றொடரை அவன் அருவருந்திருப்பான்). அந்தக் காட்சியை கூர்ந்து அவதானிக்க நிறைய அவகாசம் கிடைத்தது.

ஆந்தெர்ஸூக்கு ஞாபக்த்தில் வந்தது என்னவென்பதைப் பார்க்கும்போது அவனுக்கு ஞாபகத்தில் வராதது என்னவென்பதைக் குறிப்படுவது தகும். அவனுடைய முதல் காதலி ஷெர்ரி ஞாபத்தில் வரவில்லை. அவள் அவனுடைய குறியை ‘மிஸ்டர் மூஞ்சூறு’ என்று வாஞ்சையுடன் விளிப்பாள். “வோ.. ஓ, மிஸ்டர் மூஞ்சூறு விளையாட விரும்புகிறார் போலிருக்கிறதே” என்றும் “மிஸ்டர் மூஞ்சூறுவை இப்போது நாம் ஒளித்து வைக்கலாம்” என்றும் அடங்காத வேட்கையோடு கூச்சமற்ற காமத்தில் அவனை எரிச்சலடைய வைத்ததற்கு முன் அவளை உன்மத்தத்தோடு காதலிக்க வைத்தது எது என்பதுகூட அவன் ஞாபகத்தில் வரவில்லை. பழக்கமாகிவிட்ட அவளது நடவடிக்கைகளால் ஆந்தெர்ஸை சலிப்பூட்டி களைத்துப்போக வைப்பதற்கு முன் அவனும் கூட நேசித்து வந்த அவன் மனைவியோ அல்லது இப்போது ஒரு சிடுமூஞ்சி பேராசிரியையாக டார்ட்மெளத்தில் இருக்கும் அவனுடைய வளர்ப்பு மிருகமான கரடியிடம் அதன் குறும்புத்தனங்களைக் கண்டித்துப் பேசுவதும், அது தனது விழிகளை மாற்றிக்கொள்ளாவிட்டால் அவள் நிஜமாகவே அதற்கு தரப்போகும் கொடுமையான தண்டனைகளைப் பற்றி பிரசங்கம் செய்வதும் அவன் ஞாபகத்தில் வரவில்லை. அவன் இளமையில்  தன்னைத்தானே சிலிர்க்க வைத்துக் கொள்வதற்காக செய்துகொண்ட  நூற்றுக்கணக்கான கவிதைகளின் ஒரு வரி கூட –’ Silent upon a peak in Darien’ அல்லது ‘ My God I had this day’ அல்லது ‘All my pretty ones? Did you say all? O hell kite All?! – இந்தக் கவிதைகளில் ஒன்று கூட அவன் ஞாபகத்தில் வரவில்லை. மரணப்படுக்கையில் இருந்த ஆந்தெர்ஸின் அம்மா, அவன் அப்பாவைப் பற்றிக் கூறிய வார்த்தைகள் “ அவர் தூங்கிக் கொண்டிருக்கும் போதே அவரை நான் குத்திக் கொன்றிருக்க வேண்டும்” –அவன் ஞாபத்தில் வரவில்லை.

பேராசிரியர் ஜோசப்ஸ் அவரது வகுப்பில் ஸ்பார்டன்கள் எவ்வாறு எதீனியின் கைதிகள் ஈஸ்கிளஸ்ஸை மனப்பாடமாக ஓப்பிக்க முடிந்தால் அவர்களைச் சுரங்கச் சிறைகளிலிருந்து விடுதலை செய்தனர் என்பதையும், பிறகு அவரே அதே இடத்தில் நின்று ஈஸ்கிளஸ்ஸை கிரேக்கதில் ஓப்பித்ததையும் அவன் ஞாபகப்படுத்திக் கொள்ளவில்லை. அந்த ஒலிக்குறிப்புகளில் அவன் கண்கள் எப்படி எரிந்தனவென்பது அவன் ஞாபகத்தில் வரவில்லை. அவர்கள் பட்டப்படிப்பை முடித்து வெளியேறிய கொஞ்ச நாட்களிலேயே கல்லூரித் தோழன் ஒருவனின் பெயரை ஒரு நாவலின் அட்டையில் பார்த்தபோது ஏற்பட்ட வியப்பும், அந்தப் புத்தகத்தை வாசித்து முடித்ததும் அவன்மீது ஏற்பட்ட மரியாதையும் அவன் ஞாபகத்தில் வரவில்லை. மரியாதை கொடுப்பதனால் உண்டாகும் சந்தோஷம் அவன் ஞாபகத்தில் வரவில்லை.

 

அவனுடைய மகள் பிறந்து சில நாட்கள் கழித்து அவன் வீட்டுக்கு எதிர்க் கட்டத்திலிருந்து ஒரு பெண் குதித்து தற்கொலை செய்துகொண்டதை அவன் நேரடியாகப் பார்த்தது அவன் ஞாபகத்தில் வரவில்லை. “கடவுளே, கருணை காட்டு !” என்று அவன் கத்தியது ஞாபகத்தில் வரவில்லை.  அவன் அப்பாவின் காரை வேண்டுமென்றே ஒரு மரத்தில் இடித்ததும், போர் எதிர்ப்பு ஊர்வலம் ஒன்றில் கலந்து கொண்டபோது மூன்று போலீஸ்காரர்கள் விலா எலும்புகளில் எட்டி உதைத்ததும், சிரித்துக்கொண்டே அவன் விழித்தெழுந்ததும் அவன் ஞாபகத்தில் வரவில்லை. அவன் மேஜையின் குவியலாகக் கிடக்கும் புத்தகங்களை அவன் எப்போதிலிருந்து சலிப்போடும் எரிச்சலோடும் பார்க்கத் தொடங்கினான் என்பதும், அவற்றை எழுதிய ஆசிரியர்கள் மீது அவன் கோபம் கொள்ளத் தொடங்கினான் என்பதும் அவன் ஞாபகத்தில் வரவில்லை. வேறு ஏதோ ஒன்றை அவனுக்கு எல்லாமும் ஞாபகப்படுத்தத் தொடங்கியபோது அவன் ஞாபத்தில் எதுவும் வரவில்லை.

அவனுக்கு ஞாபகம் வந்தது இதுதான். உஷ்ணம், ஒரு பேஸ்பால் மைதானம், மஞ்சள் புற்கள், பூச்சிகளின் ரீங்காரம், அவன் மரத்தில் சாய்ந்துகொண்டு அண்டைப்புறத்துச் சிறுவர்கள் மாறி மாறித் தேர்ந்தெடுத்து விளையாட ஒன்று கூடியதைக் கவனிக்கிறான். பிஞ்சிலயே பழுத்து அணித்தலைவர்களாகி விட்ட பர்ன்ஸ். டார்ஷ் என்ற குண்டுப் பையன்கள் மேன்டில், மேஸ் ஆகியோரின் மேதமைகளை ஒப்பிட்டு விவாதித்துக் கொண்டிருக்கின்றனர். கோடைக்காலம் முழுதும் இதே விஷயத்தைப் பற்றிதான் அவர்கள் கவலைப்பட்டுக் கொண்டிருந்தனர். அது ஆந்தெர்ஸூக்கு களைப்பூட்டுவதாக, உஷ்ணத்தைப் போல அடக்கி ஒடுக்குவதாக இருக்கிறது.

பிறகு கடைசி இரண்டு பையன்கள், காயல்லும் மிஸிஸிப்பியிலிருந்து வந்திருக்கும் அவன் மைத்துனனும் வந்து சேர்கின்றனர். காயல்லின் மைத்துனனை ஆந்தெர்ஸ் இதற்கு முன் பார்த்ததில்லை, இனி மீண்டும்  பார்க்கப்போவதுமில்லை. எல்லாருடனும் சேர்ந்து அவனும் ‘ஹாய்’ சொல்கிறான். அவர்கள் அணி பிரிந்துக்கொண்டதும் அவனை அப்புறம் கவனிக்கவில்லை. டார்ஷ் அவனிடம் எந்த பொஸிஷனில் ஆட விரும்புவதாகக் கேட்கிறான். “ஷார்ட்ஸ்டாப்” என்கிறான் அச்சிறுவன். “ஷார்ட்ஸிலதான் அவங்க இருக்கான்”

 

ஆந்தெர்ஸ் திரும்பி அவனைப் பார்க்கிறான். காயல்லின் மைத்துனன் இப்போது சொன்னதைத் திரும்பிச் சொல்லச் சொல்கிறான். ஆனால் கேட்பதற்கு அவசியமின்றி அவனுக்கே தெரிந்திருக்கிறது. மற்றவர்கள் அவனை ஒரு கிறுக்கன் என்றும், அந்தச் சின்னப்பையனினின் இலக்கணப் பிழையைக் கிண்டல் செய்கிறான் என்றும் நினைத்திருக்கலாம். ஆனால் அது அல்ல. அல்லவே அல்ல – அந்த கடைசி இரண்டு வார்த்தைகளில், அவற்றின் பரிசுத்தமான எதிர்பாராமையில், அவற்றின் சங்கீதத்தில் ஆந்தெர்ஸ் விநோதமாக கிளர்ச்சியுற்று குதூகலமுறுகிறான். அரைமயக்கத்தில், தனக்குத்தானே அவற்றைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டு ஆட்டத்தில் புகுகிறான்.

டோபியாஸ் உல்ஃப்

புல்லட் ஏற்கனவே மூளையில் இருக்கிறது; என்றென்றைக்கும் ஓடிக் கொண்டேயிருக்கவோ அல்லது மறித்து நிறுத்தப்படவோ போவதில்லை. இறுதியில் அது தனது வேலையைச் செய்துவிட்டு, கபாலத்தை சிதைத்துத் தள்ளிவிட்டு ஞாபகங்களையும், நம்பிக்கையையும் திறமைகளையும் காதலையும் வால் நட்சத்திரத் தீற்றலாக இழுத்துக்கொண்டு வர்த்தகத்தின் பளிங்கு அறையில் வந்து விழப்போகிறது. அதைத் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால் தற்சமயத்திற்கு ஆந்தெர்ஸூக்கு இன்னுமும் நேரம் கடத்த முடியும்.  புற்களின் மேல் நிழல்களை நீட்டிப்பதற்கும் பறந்து செல்லும் பந்தைப் பார்த்து சங்கிலித்தளையிட்ட நாய் குரைப்பதற்கும் சரியான களத்தில் இருக்கும் சிறுவன் அவனது வியர்வையில் கருத்த கையுறையில் வெடித்துவிடும்  பந்தை வாங்கிக்கொண்டு மென்குரலில் பாடுவதற்கும் நேரம் இருக்கிறது. ‘அவங்க  இருக்கான், அவங்க இருக்கான்’

( BULLET  IN  THE BRAIN by Tobias Wolff. Published in The Newyorker)


டோபியாஸ் உல்ஃப்:

1945  அலபாமாவில் உள்ள பர்மிங்ஹாமில் பிறந்தவர்.அமெரிக்க நவீன எழுத்தாளர்களின் பிதாமகர் என்று குறிப்பிடத்தகுந்தவர்.பெரும்பாலும் சிறுகதைகளையே கடந்த 20 வருடங்களாக எழுதிவந்த இவரது இரு நாவல்கள் சமீபத்தில் வெளிவந்துள்ளன.” எனது பெரும்பான்மையான படைப்புகள் ஏதோ ஒருவிதத்தில் என் சொந்த அனுபவங்களிலிருந்தே எடுக்கப்பட்டவையாக இருக்கின்றன.
ஓட்டலில் வெயிட்டராக, பேருந்து ஊழியனாக, காவல்காரனாக, நான்கு மாதங்கள் பத்திரிக்கை நிருபராக, நான்கு வருடங்கள் ராணுவத்தில் என்று என்னென்னவோ வேலை பார்த்திருக்கிறேன்” என்று குறிப்பிடும் உல்ஃப் வியட்நாம் போரின்போது விருப்பமேயின்றி சிறப்புப் படை அதிகாரியாக பணியாற்றியிருக்கிறார்.அந்த அனுபவங்களைப் பற்றி In Pharaoh’s Army என்ற தலைப்பில் நினைவக்குறிப்புகளாக எழுதியுள்ளார்.
   “ஃபாரோவின் ரதங்கள் விழுங்கப்பட்டன. அவனது குதிரைப்படை வீரர்கள் குழம்பினர். அவரது எல்லா மகத்துவமும் நிலைத்தெரியாது வீழ்ந்தன. அது ஒரு மலக்குழி” என்று வியட்நாம் போர் தினங்களை பதிவு செய்கிறார்.
     ” நவீனச் சிறுகதை  பல்வேறு வேடங்களை பூண்டு, பல்வேறுபட்ட உள்நோக்கங்களைக் கொண்டு வந்து கொணாடிருக்க, இந்த  பலதரப்பட்ட மந்தையின் மேய்ப்பாளராக இருக்கக்கூடிய தகுதி டோபியாஸ் உல்ஃபிற்குத்தான் இருக்கிறது” என்று இவருக்கு 1989 ஆம் வருடத்திய ரியா விருது வழங்கப்பட்டபோது நடுவர்களாக இருந்த ஸாடான்லி லின்பெர்கும் மைக்கேல் கர்டிஸ்ஸூம் குறிப்பிடுகின்றனர்.
      இவருது சிறுகதை தொகுப்புகள்.In the Garden of the North American Martyrs,Back in the World, The Night in Question.
        சிராகூஸ் பல்கலைக்கழத்தில் Writer-residence ஆக பணிபுரியும் டோபியாஸ் உல்ஃப் தன் மனைவியோடும் மூன்று குழந்தைகளோடும் நியுயார்க்கில் வசித்து வருகிறார்.

 

 

பகிர்:
No comments

leave a comment