நீல நிலவு


சில வேளைகளில் கடந்த காலத்தின் குறிப்பிட்ட சில நிகழ்வுகளை நினைத்துப் பார்த்து அவை எவ்விதம் தொடங்கின என்று குழப்பமடைந்து விடுவேன்.

மேகங்களேதுமில்லாமல் பளிச்சிட்ட வானத்துடன் மிளிர்ந்த அழகிய நாள் அது, டோக்கியோ மாநகரத்தின் புறநகரில் ஃப்யூஜி மலைத் தொடர் தெளிவாகத் தெரியும்படி அமைந்துள்ள ஏழடுக்கு மாடிக் கட்டிடம். குளிர்சாதனக் கருவி அறையைப் பதமான குளிரில் ஆழ்த்தியிருந்தது. இருப்பினும், வெண்ணிற அங்கியும் கால்சராயும் அணிந்து மருத்துவப் பரிசோதனைக்காகக் காத்திருப்பவர்கள் தங்களுக்கு அதைவிடவும் செய்வதற்கு மேன்மையான காரியங்கள் இருப்பது போலக் காட்டிக் கொண்டார்கள்.

வாசிப்பறையில் அமர்ந்து தட்டச்சு செய்வதிலேயே நாளின் பெரும்பாலான நேரத்தைப் போக்கும் என்னைப் போன்றவளுக்கு, வருடாந்திர மருத்துவப் பரிசோதனை என்பது ஆரோக்கியம் சார்ந்ததை விட வாழ்வின் திரையில் சற்று மாறுபட்ட காட்சி போல இருக்கிறது என்றே நினைத்துக் கொண்டேன். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக என் வலது காது கேட்கும் திறனை இழந்து விட்டது, அதுபோக கடந்த பத்து ஆண்டுகளாகவே ரத்தத்தில் வெள்ளணுக்களின் எண்ணிக்கை சராசரியை விடச் சற்றுக் குறைவாக உள்ளது.

“பெரிய அளவில் அணுக்களின் எண்ணிக்கை மாறுபட்டிருந்தால் மட்டுமே மேலும் பரிசோதனை செய்வோம், கவலைப்பட வேண்டாம்.”

இப்படித்தான் வழக்கமாகச் சொல்வார்கள். ஐம்பதின் மத்திம வயதுகளில் இருக்கும் பெண்மணிக்கு இப்படியான சிறு தொந்தரவுகள்  இருப்பதெல்லாம் சாதாரண விஷயம் என்றே எனக்குத் தோன்றியது; எந்த  உடற்கேடுமில்லாதிருக்கும் நிலைதான் கொஞ்சம் தர்மசங்கடமானதாக இருக்கக் கூடும்.

அனைவருக்கும் பரிசோதனைகளை முடித்தவுடன் மருத்துவருடன் பேசுவதற்காக ஒவ்வொருவருவராக அழைத்துக் கொண்டிருந்தார்கள். “எப்படி இருக்கிறாய்? ஏறக்குறையக் கடந்த முறை போலவே.. நல்லது, இப்படியே உடலை நன்கு பராமரித்துக் கொள், அடுத்த வருடம் பார்க்கலாம். இன்னும் கொஞ்சம் கூட உடற்பயிற்சிகள் செய்ய முயற்சிக்கலாம்”, என்னும் வழக்கமாக உரையாடல் இருக்கப் போகிறது. அப்படித்தான் இருக்கும் என்று நானும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.. ஆனால், மருத்துவர் மிருதுவான குரலில், “உங்களுடைய கணையத்தில் ஒரு கட்டி இருக்கிறது, நீங்கள் உடனடியாக அடுத்த கட்டப் பரிசோதனைக்குச் செல்ல வேண்டும்” என்று கூறிய போது, ஒரு வினாடி அவர் சொல்வதைப் புரிந்து கொள்ளச் சிரமமாக இருந்தது.

அன்று மதியம் பல்கலைக் கழக மருத்துவமனைக்குச் செல்ல வருகை முன்பதிவு செய்த பின் மனக்கலக்கத்துடன் தேதியையும், நேரத்தையும் குறித்து வைத்தேன். வாழ்க்கையை மாற்றக் கூடிய நிகழ்வின் துவக்கமாக அது இருக்கக்கூடுமென நான் நினைத்தே பார்க்கவில்லை. இப்படியொன்று இருந்த மாதிரியே இல்லை, அதற்கான அறிகுறியே இல்லை. எனக்கு நன்றாகப் பசியெடுத்துக் கொண்டுதான் இருந்தது. வலியேதுமில்லை. நல்ல பொலிவுடன்தான் இருந்தேன். ஆனால் உயிரைப் பறிக்கும் கொடிய கட்டிகளெல்லாம் பெரும்பாலும் சங்கேதமேதுமின்றித்தான் இருக்கின்றன. எனது கணையம்.. என் உடலின் ஒரு பாகம், என்னால் பார்க்கவோ, தொட்டுணரவோ சாத்தியமில்லாத ஒன்று. என்னுடைய மிக நெருக்கமான ஒன்றாக இருந்த போதும், இப்போது மிகவும் அந்நியப்பட்டது போலத் தோன்றியது.

பல பரிசோதனைகளை மேற்கொண்ட பின், மருத்துவ மனையில் அதன் முடிவுகளைப் பரிசீலனை செய்த மருத்துவர், “இது வீரியம் மிக்க கட்டியாக இருக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆகையால் மேலும் சில பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும். அதற்காக மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டும். உங்களால் எப்போது வர முடியும்?” எனக் கேட்டார். ஏன் இந்த மருத்துவர்கள் அனைவரும் மென்மையான, அன்பான தொனியில் பேச வேண்டும்? எனக்குச் சிரிக்க வேண்டுமென்ற சிறு உந்துதல் ஏற்பட்டது. ஆனால் சிரிக்கவில்லை.

இப்படியாக, அடுத்த வாரம், மேலதிகப் பரிசோதனைகளுக்காக நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். மயக்க மருந்துகள், நரம்பில் துளையிட்டு அதன் வழியாக மருந்து செலுத்துதல், எக்ஸ்ரே,. பெக்கரல்-, ஃபுக்கிஷிமா அணு ஆயுத உலை உருகிய போது அதன் அளவையை அறிந்து கொள்ள அப்போது கற்றுக் கொண்ட வார்த்தை இது. என் உடலில் இப்போது எத்தனை பெக்கரல் கதிரிகள் ஊடுருவிக் கொண்டிருக்கின்றன? மங்கலாக வியந்து கொண்டிருந்தேன் என நினைக்கிறேன். படுக்கையில் படுத்தபடி பரிசோதனை முடிவுகளுக்காகக் காத்திருந்தேன். அந்தக் கட்டி தொண்ணூறு சதவீதம் வீரியம் மிக்க உயிருக்கு ஆபத்தான கட்டியாக இருக்கக் கூடுமென்று மிக வாஞ்சையான குரலில் மருத்துவர் கூறினார். தினமும் இது போன்ற செய்திகளை அநேகம் பேருக்குச் சொல்ல வேண்டியிருப்பது அவர்களுக்கு எவ்வளவு பெரிய மன அழுத்தம்?

இது மோசமான கட்டியாக இருக்கும் பட்சத்தில் பிழைப்பதற்கான சாத்தியங்கள் எந்த அளவு உள்ளது?

ஐந்து வருடங்கள் வாழக்கூடிய வாய்ப்பு பத்து சதவீதம் உள்ளது.

“அடுத்த வாரம் பணி நிமித்தமாக நான் ரஷ்யா செல்ல வேண்டும்., போவது சரியா?”

“போகலாம், ஆனால் திரும்பி வந்ததும் உடனே மருத்துவமனைக்கு வர வேண்டும்.அறுவை சிகிச்சை  ஒன்று செய்ய வேண்டியிருக்கும்.”

“நான் ஏதாவது முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்ய வேண்டுமா? எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாதென? எதுவெல்லாம் சாப்பிடவோ, அருந்தவோ கூடாது என்பது போல்?”

“இல்லை. அப்படி ஒன்றுமில்லை, எப்போதும் போலவே இயல்பாக இருங்கள்.”

எப்போதும் போல் இயல்பாக! அதுவும் பத்து சதவீத சிந்தனையுடன்.. இந்தக் கட்டி தீங்கற்றதாக இருக்கக் கூடிய சாத்தியமும், அது, கேடு விளைவிக்கக் கூடியதாக இருந்து பத்து சதவீதம் உயிர் வாழக் கூடிய சாத்தியமும் ஒன்றேதான். பத்து! குழப்பங்களேதுமற்ற தெளிவான எண். இப்போது ரஷ்யாவில் குளிர் காலம். வெம்மை தரும் தொப்பியை எடுத்துச் செல்ல வேண்டும்.

மாஸ்கோ சென்றடைந்ததும் தான் சிறிய குறிப்பேடை எடுத்து வர மறந்து விட்டேன் என்று நினைவு வந்தது. எப்போது வெளிநாடு செல்வதென்றாலும் புத்தகக் கடைக்குச் சென்று ஒரு சிறிய கையேடு வாங்கிக் கொள்வேன். ஒவ்வொரு சிறிய விவரங்களையும் அதில் குறித்துக் கொள்வேன்; என்னுடைய விமானப் பயணச் சீட்டின் எண், தினப்படி செய்யும் செலவுகள், நிரல்கள், நான் சந்திக்கும் மனிதர்கள், உண்ணும் உணவு, ஏதோ ஒரு தினத்தின் வானத்தின் வண்ணம்.. இப்படியாக விவரங்கள் இருக்கும். ஒரு வாரம் நீளும் பயணமென்றால், ஐம்பது பக்கக் குறிப்பேட்டின் முகப்பிலிருந்து இறுதி வரை நான் நிறைத்து வைத்திருப்பேன். ஆனால் வீட்டில் இருக்கும் போதோ, நாட்குறிப்பை உபயோகிக்கும் வழக்கமே இல்லை.

விமான நிலையத்தில் வாங்கலாமா என்ற யோசனையுடன் தயங்கி நின்றேன். ஆனால் உடனே அந்த எண்ணம் மனதிலிருந்து எட்டிப் பார்த்தது. இதற்கெல்லாம் ஏன் கவலைப் பட வேண்டும்? இப்படி எல்லாவற்றையும் பதிவு செய்வதால் என்ன பயன்? பயணம் முடிந்து நாடு திரும்பியதும் அந்தக் குறிப்பேட்டை விரித்துப் பார்ப்பதும் கூட அரிது. அந்த நினைவுகள் அனைத்தும், அதன் ஒவ்வொரு வரிகளும் ஒரு டஜனுக்கும் அதிகமான புத்தகங்களில் நிரம்பி வழியும். அதனால் வாங்கும் எண்ணத்தைக் கைவிட்டவாறு ஜப்பான் மையத்திலிருந்து என்னை அழைத்துப் போக வந்திருக்கும் நபரை நோக்கிக் கையசைத்தேன்.

“இந்த வருடத்தின் முதல் பனிப் பொழிவு இது. நகருக்குள் செல்ல இன்னும் சற்று நேரம் பிடிக்கலாம்.”

“அப்படியா? ஜப்பானில் இப்போது உதிர் பருவம். ஆனால், இன்னும் கூட வெக்கையாக உள்ளது.” காரில் பேசிக் கொண்டிருந்தோம். எனக்குப் பதற்றமாக இருந்தது. கொஞ்சம் நடுக்கமாகவும் இருந்தது. அது அந்தப் பத்து சதவீதத்தினாலா அல்லது முதல்முறையாக நான் பயணம் வந்திருக்கும் அந்நகரைப் பூசியிருக்கும் அடர்இருளைப் பார்த்தா எனத் தெரியவில்லை.

மனித இனம் இயற்கையாகவே மறக்கும் திறனுடையதுதான். ம்ம்… அப்படிப் பொதுமைப் படுத்தக் கூடாது. நான் இயல்பிலேயே மறதிக் குணமுடையவள். மாஸ்கோ சர்வதேசப் புத்தகச் சந்தையில்.. என்னுடைய காணொலியைக் காட்சிப் படுத்தினேன். உண்மையிலேயே அது மகிழ்வான அனுபவமாக இருந்தது. ஹைக்கூ எழுதும் ரஷ்யர்களிடம் கலந்துரையாடல் நிகழ்த்தினேன். அதுவும் மனதுக்குப் பிடித்த நல்ல நிகழ்வாக அமைந்தது. நம்பினால் நம்புங்கள், பீட்டர்ஸ்பர்க் நகரில் “லுட்மில்லா பெட்ருஷேவ்ஸ்க்யா” பாடுவதைக் கச்சேரியில் கேட்டதும் எதிர்பாராத வாய்ப்பாக அமைந்தது: மாஸ்கோவிலிருந்து செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்குப் புகை வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த போது எங்கள் குழுவில் ஒருவரான பேராசிரியர் மிட்ஷுயோஷி நுமானொ, பிரபலப் பாடகி பெட்ருவ்ஷேவ்ஸ்க்யாவுக்குப் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தார். அவள், தான் அடுத்த நாள் தான் பாடப் போகும் கச்சேரிக்குப் பேராசியரை அழைக்க, அவரும் தன்னுடன் ஒரு விருந்தினரையும் அழைத்து வரலாமா எனக் கேட்ட போது, தாராளமாகக் கூட்டிக் கொண்டு வரலாம் என்று சொல்லி விட்டாள். அப்படியாக, ஒரு புகழ்பெற்ற எழுத்தாளரின் ஒற்றை வார்த்தையின் காரணமாக நான் அங்கே பார்வையாளர்கள் மத்தியில் அமர்ந்திருந்தேன். அது மனம் மிகக் களிப்படைந்தது.. அதன் பின் ஒரு புத்தகக் கூடத்துடன் இணைந்திருக்கும்   உணவகத்தில் அமர்ந்து ரஷ்ய எழுத்தாளர்கள் எழுதியிருந்த சில ஹைக்கூ கவிதைகளைக் கேட்டுக் கொண்டிருந்தேன். என்னுடைய சில கவிதைகளையும் முன் வைத்தேன். மிக மிக மகிழ்ச்சியான தருணமாக அது அமைந்தது.உண்மையாகாவே…

ஒருவேளை நான் எப்போதும் மரணத்தைப் பற்றியே கவலைப் பட்டுக் கொண்டிருந்தேன் போல.. ஒரு புனைவை எழுதும் போது அதைப் பற்றித்தான் சிந்தித்துக் கொண்டிருப்போம் – மரணத்தைப் பற்றியே.அந்த ஒரு விஷயம்தான்.. யாருமே, ஒருவர் கூட நிச்சயம் தவிர்க்க முடியாதது- நீக்கமற ஒவ்வொரு மனிதனுக்கும் தோன்றுவது. கதைகள் எழுதிக் கொண்டிருக்கும் இந்தச் சில காலமாகத்தான் மரணம் என்றால் என்னவென்பதை நான் புரிந்து கொண்டேன். எனக்கு முதலிலேயே தெரிந்திருக்க வேண்டும். ஆனால் அப்படியில்லை. எனது கதைகளில் உலவும் மனிதர்களுடன் வாழத் துவங்கிய பின்னரே அதை அறிந்தேன். என்னைச் சுற்றியுள்ள வாழ்வில் நிகழ்ந்த எவருடைய மரணமும் சொல்லிக் கொடுக்காததை இன்னும் மரணமடையாமல் என்னுடைய புதினங்களில் மட்டுமே வாழும் மாந்தர்களின் மூலம் நான் அறிந்து கொண்டது மிகப் பெரும் ஆச்சர்யம்.

மாஸ்கோவிலும் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கிலும் ஒவ்வொரு நாளும் மொத்தமாக நாற்பத்து மூன்று நிமிடங்கள் நான் மரணத்தைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.பனி படர்ந்த பாதைகளில் நகர்வததற்காகக் காத்திருக்கும் டாக்ஸியினுள் அமர்ந்திருக்கையில் ,மெட்ரோ ரயில் நிலையத்தில்  தரையை நோக்கித் தாழ நகரும் மின் நகர்வுப் படிகளில் நிற்கையில்,கலந்துரையாடலின் இடையே நிலவும் தயக்கமான மௌனத் தருணங்களில், இரவில் நேரம் கழித்துக் கண்ணயர்கையில் உறக்கத்திற்கு முன்பான சில நிமிடங்களில் அந்நினைவு கவிகிறது. பத்து சதவீதத்தை அறிந்து கொள்வதற்கு முன் இருந்ததை விட சில நிமிடங்களே கூடுதலாகச் சிந்திப்பதில் செலவிடுகிறேன். ஆனால் அப்போதெல்லாம் ஏதோ ஒரு இருண்மை படர்ந்து விடுகிறது. மரணத்தை உருவமற்ற அரூபமாகத்தான் நினைக்கிறேன்.

பனி தோய்ந்திருந்த தெருவில் நடந்து புத்தக காஃபி நிலையத்தை அடைந்தேன். ரஷ்யாவின் ஹைக்கூ கவிஞர்களின் வட்டத்தைச் சேர்ந்தவர்களைச் சந்திக்கப் போகிறேன்.

எனக்கு மொழிபெயர்ப்பாளராக இருக்கும் பெண், முன்னதாகவே வந்து வந்து அந்தக் கட்டிடத்தின் மேல் தளத்தில் உள்ள காஃபி நிலையத்தின் மூலையில் அமர்ந்திருந்தார். ஹைக்கூ என்பது “கிகோ”, பருவங்களின் சொற்கள்,.. ஆகாயம், தென்றல், பறவைகள், பூச்சிகள், தாவரங்கள், நிலவு, நட்சத்திரங்கள் ஆகியவற்றைப் பற்றி ஏதாவது சொல்வது.. ரஷ்ய நாட்டவர்கள் ஹைக்கூ இயற்றும் போது எந்த வகையான பருவ நிலைச் சொற்களைப் பயன்படுத்துவார்கள்?

இருவராக, மூவராகப் பலர் வரவும் கூட்டம் தொடங்கியது. ரஷ்யக் கவிதைகள் ஜப்பானில் சொல்லப் பட்டன. அவ்விதமே ஜப்பான் கவிதைகள் ரஷ்ய மொழியாக்கத்தில் சொல்லப் பட்டன. மேலோட்டமான அர்த்தங்கள் பொருத்தமாகவே எடுத்தாளப்பட்டன. ஆனால் நுணுக்கங்கள் பற்றி உறுதியாகச் சொல்ல முடியவில்லை. சில சொற்களில் மடிந்திருக்கும் நுட்பங்கள் அந்த மொழியைப் பயன்படுத்தும் கலாச்சாரத்துக்கே அணுக்கமானவை. மொழிபெயர்ப்பாளர்கள் கவிதைகளை, ரஷ்ய, ஜப்பான் மொழியாக்கங்களில் மாற்றிச் சொல்வதைக் கவனிக்கையில் அவ்வளவு குறுகிய நேரத்தில் ஒரு மொழியின் நுணுக்கத்தை முற்றிலும் மாறுபட்ட மற்றொரு மொழியுடன் இணைத்துச் சீரமைப்பது பற்றி எனக்குச் சந்தேகம் எழுந்தது. அனைத்து மொழியாக்கங்களுமே முறையற்ற மொழியாக்கம்! அமெரிக்காவைச் சேர்ந்த அறிஞரும் மொழிபெயர்ப்பாளருமான மோட்டோயுகி ஷிபாட்டா இப்படிச் சொல்வதை நான் நம்புகிறேன். இதை அவர் ஒரு நகைச்சுவையாகவே குறிப்பிடுவாரென்ற போதும் அதில் உண்மையும் உள்ளது.

மொழிபெயர்ப்பாளர், ரஷ்ய ஹைக்கூவை ஜப்பானில் மொழியாக்கம் செய்து சொன்னார்.

 “பனித்துகள் பொழிகிறது, இறந்து போன சகோதரனிடமிருந்து மேலங்கியைப் பெற்றுக் கொண்டேன்.”

இந்த ஹைக்கூவை இயற்றிய நபர் என் முன்னேதான் அமர்ந்திருந்தார்.  தனது அறுபது வயதுகளில் இருக்கக் கூடும். அதை நான் ஜப்பான் ஹைக்கூவாக்க முயற்சி செய்தேன்.

“பனித் துகள்கள் – இறந்த சகோதரனின் மேலங்கியைப் பெற்றுக் கொள்கின்றன.”

அதிர்ச்சியடைந்தவராக அவர் என்னையே வெறித்துப் பார்த்தார்.

பல ரஷ்ய ஹைக்கூக்கள் அங்கு வாசிக்கப் பட்டன, நாங்கள் ஒவ்வொருவரும் அதற்கான எங்கள் எதிர்வினையைப் பகிர்ந்து கொண்டோம். வார்த்தைகள்: மிக மென்மையானவை., சின்னஞ் சிறியவை.. மனிதர்கள் மட்டுமா மரணம் பற்றிய சாத்தியத்தை எண்ணி அஞ்சுகிறார்கள்.. வார்த்தைகள், வாழ்க்கை.. அவை இரண்டும் கூட வலுவற்றதும், மிகச் சிறியதாகவும், அர்த்தமில்லாததாகவும் இருக்கின்றன. நான் மிகவும் உணர்ச்சி வசப்படுகிறேன் என எனப் புரிந்து கொண்டேன். துவக்கத்தில் நாம் எல்லாமே ஒரு செல், பாதி பாதி உயிரணுக்களால் ஆன எந்தக் குறிப்பிட்ட குணநலன்களுமில்லாதவர்களாக இருக்கிறோம்; ஏதோ ஒரு புள்ளியில் மனிதர்களாகிறோம்; பின் ஏதுமில்லாத நிலைக்கு மீண்டும் திரும்புகிறோம். இதில் ஆச்சரியப் படவென்று என்ன மீதமிருக்கிறது?

கூட்டம் முடிந்ததும் பனித்துகள் ஹைக்கூ எழுதியவர் எழுந்து வந்து என்  கையை அழுத்தமாகப் பற்றிக் கொண்டு  நீண்ட நேரம்  குலுக்கினார்.

“ஜப்பானியர்களைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. உங்களைச் சந்தித்ததும் முதன் முதலாக ஜப்பான் மக்களைப் பற்றி அறிகிறேன். “

அந்த மனிதர் கூறியதை எனக்கு ஜப்பான் மொழியில் மாற்றிச் சொன்னார் மொழிபெயர்ப்பாளர். மொழியின் நுணுக்கமான சாயல்கள் என் புரிதலுக்கு அப்பாற்பட்டவை.அவர் புன்னகைத்தார். அவரது கண்கள் சாம்பல் வண்ணத்திலிருந்தன.

“உங்கள் சகோதரர் எப்படிப் பட்ட மனிதர்? “ நான் கேட்டேன்

“அவர் மிக நல்ல மனிதர்.“

உறக்கம் வராத இரவுகளில் அந்த மனிதரின் சாம்பல் கண்களை நினைத்துக் கொள்வேன்.

நான் அதிகமாக இறை நம்பிக்கை கொண்டவள் அல்ல. இப்படி இறை நம்பிக்கை இல்லாமலிருப்பதால் இறக்கும் தருவாயில் அதை ஏற்றுக் கொள்வது  கடினம் என்று நினைத்தேன். ஆனால் அந்தப் பத்து சதவீதத்தில் தொங்கிக் கொண்டிருந்ததாலோ என்னவோ, மரணம் பற்றி எனக்குச் சற்றும் அச்சம் ஏற்படவில்லை.

ஒருவரின் மரணத்தை விட, அதன் பின் அவர் வாழ்வின் தடயங்கள் மறைந்து விடுவதுதான் தாள முடியாததாகவும், துயர்மிக்கதாகவும் இருக்கிறது. கண்முன் உயிர்த்திருக்கும் அத்தனை தடயங்களும் மெல்ல மெல்ல மறைந்து விடுதல்… எனக்குச் சொந்தமான மேலங்கியில் இழைந்திருக்கும் தடயங்கள்… எனக்குப் பின் எனது உடன்பிறப்புகளிடம் போய்ச் சேரும் மேலங்கி… அது பழையதாகிக் கந்தலானதும் அதனுடன் தொடர்புள்ள அத்தனை நினைவுகளும் மங்கித் தேய்ந்து இறுதியில் மறைந்து விடும்.. ஒருவேளை, பழைய குடும்பப் புகைப்படங்களில் அல்லது இரண்டாம் விற்பனைப் புத்தகக் கடையின் புத்தக அடுக்குகளில்.. எனது தடயங்கள் கிடைக்கலாம்.. சில கணங்களுக்கேனும்.. அந்தச் சாம்பல் விழிகள் என் மீது நிலைத்த குறுகிய சில கணங்கள் போல. இது போன்றதொரு குறுகிய தருணங்களில் தான் நாம் பிறக்கிறோம். இவற்றிலெல்லாம் ஆச்சரியப்பட ஏதுமில்லை.

ஜப்பானுக்குத் திரும்பி வந்து, அறுவை சிகிச்சை மேற்கொண்டேன். “உன் கணையத்தில் இருந்த கட்டி தீங்கற்றது!“ மருத்துவர் தெரிவித்தார். அதே அன்பான, மென்மையான தொனியில் கூறினார்.

இவ்வாறாக நாட்கள் நகர்ந்தன.. எல்லா மொழிபெயர்ப்பும் முறையற்ற மொழிபெயர்ப்பு. இந்த சொற்றொடரின் தொடர்பாக இரண்டாம் பகுதியும் இருக்க வேண்டும். அனைத்து உரையாடல்களும் தவறான புரிதல்களைக்  கொண்டவை. ஜப்பானுக்கு வெளியே எங்கு சென்றாலும் அல்லது எனது தாய்மொழியாகிய ஜப்பான் மொழி பேசாத வேறிடத்துக்குச் சென்றாலும் இரு மொழிகளுக்கும் நடுவில் எப்போதும் நிலவும் முரண்பாடுகளை நினைத்துப் பார்க்கிறேன். என்னுடைய தாய்மொழியில் பேசும் போது கூட அது பொருந்திப் போகிறது. அனைத்து மொழிகளுமே தவறான புரிதல்தான். அளவீடுகளில்தான் மாற்றம்.

ரஷ்யா செல்வதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, இலையுதிர் காலத்தின் துவக்கத்தில் மோட்டோயுகி ஷிபாடா, அவர் மனைவி மற்றும் சிலருடன் டொரொண்டோ நகருக்கு வெளியே உள்ள ஜப்பானிய இலக்கிய அறிஞர் டெட் கூஸென்க்குச் சொந்தமான பண்ணை வீட்டிற்கு இரவுத் தங்கலுக்காகச் சென்றோம். இரு மாதங்களுக்குப் பின் எனக்குத் தெரிய வரப் போகும் பத்து சதவீதத்தைப் பற்றி அப்போது சிறு அறிகுறி கூட இல்லை.

முழு நிலவின் கீழ் குளிர் காய்வதற்காக நெருப்பு மூட்டி அமர்ந்திருந்தோம். அவ்வப்போது மரத்திலிருந்து தட் என்ற ஓசையுடன் ஆப்பிள்கள் நிலத்தில் விழுந்து கொண்டிருந்தன.

இலையுதிர்க் காலத்தின் முழு நிலவுக்கென்று ஒரு கிகோ, பருவச் சொல் உள்ளது என்று டெட் டிடம் கூறினேன். “ஜுகொ ய- பதினைந்தாம் இரவு“

மேலே அண்ணாந்து பார்த்துக் கொண்டே டெட் சொன்னார். ’ஆங்கிலத்தில் அதற்கு வேறு பெயர் உள்ளது; “நீல நிலவு.“

“ஒரே மாதத்தில் இரு முழு நிலா தோன்றினால், இரண்டாவது முழுநிலவுக்கு நீல நிலவு என்று பெயர் ‘டெட் விளக்கிச் சொன்னார்.“ அது மிக அரிதான நிகழ்வு. ஜப்பானுக்குத் திரும்பி வந்ததும் அந்த சொல்லைப் பற்றி மேலும் அறிந்து கொண்டேன். நாங்கள் பார்த்த நீல நிலவு ஆகஸ்ட் 2012-ல் தோன்றியது. அடுத்தது ஜூலை 2015-ல் வரும்.

மனிதர்கள் எப்போதும் வானத்தைப் பார்த்தே நகரும் காலங்களைக் கணிக்கிறார்கள். அடுத்த நீல நிலவைப் பார்க்க நான் உயிரோடு இருப்பேனா? மரணம் வெகுதூரம் விலகிச் சென்று விட்டது போலத் தோன்றக் கூடும். ஆனால் உண்மையில் அப்படி இல்லை. இல்லவே இல்லை. இப்போது எனக்குப் புரிகிறது. முன்பு இந்தப் புரிதல் இல்லை.

ஒரு பெரு வெடிப்புக்குப் பிறகு 13.7 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பிரபஞ்சம் தோன்றியதாகச் சொல்லப் படுகிறது. பூமி 4.5 மில்லியன் வருடங்களுக்கு முன்பு உருவானதென்றும் இருநூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் மனிதன் உருவானான் என்றும் சொல்லப் படுகிறது. இதன் துவக்கத்தை  யாரும் நேரில் பார்க்கவில்லை, இதைப் பற்றிய தெளிவான விவரங்களையும் குறிப்பெடுத்து வைக்கவில்லை.  சிறியதிலிருந்து பெரியது வரை உயிர் வாழும் எதைப் பற்றியும் ஆதி விவரங்கள் இல்லை. இந்தப் பிரபஞ்சம், நான், ஆகாயத்தில் சிறகடிக்கும் இந்தப் பறவைகள், மாஸ்கோவிற்குள் சுழன்று வீழும் பனிச் சிதறல்கள்.. இவற்றின் துவக்கத்தை யாருமே பார்த்ததில்லை, அதைக் கணித்துச் சொல்லவும் இயலாது,, இந்த வாழ்வுதான் எத்தனை விலை மதிப்பற்றது, இதை வாழ்வது எவ்வளவு அபாயகரமானது.. எனது ஒரு வார ரஷ்யப் பயணத்தில் எல்லா நேரத்திலும் வானம் மூடிக் கிடந்தது. ஆனால் அதிசயத்தக்க விதமாக, ஒரே ஒரு நாள் தெளிவான, நீல வானத்தில் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரின் செயிண்ட் ஐஸக் தேவாலயத்தின் கோபுரத்தின் மீது சூரிய ஒளி பட்டுப் பிரகாசித்தது. நான் நினைத்துக் கொள்கிறேன், இந்தக் கணத்தில் நான் உயிரோடு இருக்கிறேன். அது போதும், அது ஒன்றுதான் தேவையானது.


ஹிரோமி கவாக்கமி

தமிழில்: -லதா அருணாச்சலம்

 

[tds_info]

ஆசிரியர் குறிப்பு:

ஹிரோமி கவாக்கமி (Hiromi Kawakami – 1958) – ஜப்பானின் புகழ்பெற்ற பெண் எழுத்தாளர்களுள் ஒருவர். வழக்கத்திற்கு சற்றே மாறுபட்ட படைப்புகள் இவருடையது. நாவல், கவிதை, இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் எனப் பல தளங்களில் இயங்குபவர். மனிதர்களின் அகச் சிக்கல்களையும், உணர்வுகளின் தெளிவின்மையையும் அன்றாடம் அவர்கள் எதிர்கொள்ளும் நிகழ்வுகளைக் கொண்டே விவரிக்கிறார்.இவருடைய பல கதைகளில், மாய யதார்த்தம்,மீபுனைவு போன்ற கூறுகள் எழுத்தாளப் பட்டுள்ளன. Lewis Carroll, Banana Yoshimoto இருவரின் படைப்புகளோடு இவரது படைப்புகளை விமர்சகர்கள் ஒப்பு நோக்குகிறார்கள். இவரது பல ஆக்கங்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.

Akutagawa Prize, the Tanizaki Prize, the Yomiuri Prize, Izumi Kyoka prize for Literature,Man Asian Literary Prize போன்ற பல உயரிய விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

மொழிபெயர்ப்பாளர்:

லதா அருணாச்சலம்: கவிதை, கட்டுரை , மொழிபெயர்ப்பில் ஈடுபட்டு வரும் லதா அருணாச்சலம், ஆங்கில முதுகலை, மற்றும் ஆசிரியப் பட்டப் படிப்பை முடித்தவர். பதினான்கு ஆண்டுகள் நைஜீரியா நாட்டின் லாகோஸ் நகரில் வாழ்ந்தவர். கடந்த சில வருடங்களாக சென்னையிலும் நைஜீரியாவிலும் மாறி மாறி வாசம் செய்கிறார். பயணங்களில் மிகுந்த ஆர்வம் மிக்கவர். இவரது கவிதைத் தொகுப்பு உடலாடும் நதி, மொழிபெயர்ப்பு நாவல் தீக்கொன்றை மலரும் பருவம் இரண்டும் வெளியாகியுள்ளன. மற்றும் பல சிற்றிதழ்களிலும், இணைய இதழ்களிலும் மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் எழுதி வருகிறார். 2020ம் ஆண்டு தீக்கொன்றை மலரும் பருவம் சிறந்த மொழிபெயர்ப்பு நாவலுக்கான விகடன் விருதை பெற்றது.

[/tds_info]

 

Previous articleஜப்பானிலிருந்து சில கவிதைகள்
Next articleலிஃப்டுக்குள்…
Avatar
கவிதை, கட்டுரை , மொழிபெயர்ப்பில் ஈடுபட்டு வரும் லதா அருணாச்சலம், ஆங்கில முதுகலை, மற்றும் ஆசிரியப் பட்டப் படிப்பை முடித்தவர் .பதினான்கு ஆண்டுகள் நைஜீரியா நாட்டின் லாகோஸ் நகரில் வாழ்ந்தவர் . கடந்த சில வருடங்களாக சென்னையிலும் நைஜீரியாவிலும் மாறி மாறி வாசம் செய்கிறார் .பயணங்களில் மிகுந்த ஆர்வம் மிக்கவர் . இவரது கவிதைத் தொகுப்பு உடலாடும் நதி, மொழிபெயர்ப்பு நாவல் தீக்கொன்றை மலரும் பருவம் இரண்டும் வெளியாகியுள்ளன. மற்றும் பல சிற்றிதழ்களிலும், இணைய இதழ்களிலும் மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் எழுதி வருகிறார் . 2020ம் ஆண்டு தீக்கொன்றை மலரும் பருவம் சிறந்த மொழிபெயர்ப்பு நாவலுக்கான விகடன் விருதை பெற்றது.

6 COMMENTS

    • உயிரோட்டமான மொழி பெயர்ப்பு. நன்றி.

  1. அருமையான சிறுகதை உணர்ந்து எழுப்பப்பட்ட கதை நீலநிலவு மொழி மாற்று சிறப்பு

    • அற்புதமான கதை.சிறப்பான மொழிபெயர்ப்பு.

      மரணம் குறித்த முன்னறிவிப்பை ஒரு படைப்பாளன் எதிர்கொள்கிற போக்கு ஒரு வாசகனுக்குப் பொருந்திப் போகிறது. கதை மருத்துவமனை காத்திருப்பு அறையிலிருந்து துவங்கி தேவாலயத்தின் கோபுரத்தின் மீது படும் சூரிய ஒளியின் மீது முடிகிறது. இக்கணத்தில் உயிரோடு இருத்தல் என்பது எத்துணை நேர்மறையாக வாழ்வை தரிசிக்க உதவுகிறது.
      ஹைக்கூ என்பது பருவங்களின் சொற்கள் ஆஹா நீல நிலவு காலத்தில் நீல நிலவு கதையை அளித்த கனலிக்கும் லதா மேமுக்கும் வாழ்த்துகள்.

  2. லதா மொழியாக்கம் செய்துள்ள ‘நீல நிலவு ‘
    ( லதாவின் Timeline பதிவைத் தொடர்ந்து
    ) சிறுகதையைப் படித்தேன்.
    கதை ,இறப்பை நெருங்குவதாக எதிர்பார்க்க வாய்ப்புள்ள ஒருவரின் மனநிலையை விவரிக்கும் வகையில் சிறப்பாக அமைந்துள்ளது.எழுதியவர் இலக்கியவாதி என்பதால் இலக்கிய மணம் இயல்பாகக் கலந்துள்ளது. மொழியாக்கம் குறித்து இங்கே குறிப்பிட விரும்பவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.