நேத்ரா

 

வித்யா சுருக்கை இழுத்துப்பார்த்தாள். இறுகுகிறது. ம்ம்ம்…சரி.. அடுத்த அறையிலிருந்து  நாற்காலியை எடுத்து வந்தாள். ஏறி  நிலைதடுமாறாது நின்றாள். காற்றாடியில் நுனியைக் கட்டி சுருக்கை விரித்து தலையை உள்ளே நுழைத்து முடிச்சை நெருக்கினாள். சரியாக பின் கழுத்துக்கு வந்து ஜடையை அழுத்துகிறது. கொஞ்சமாக விரித்து ஜடையை உருவி வெளியே தொங்கவிட்டாள். அது தலையிலிருந்து தரையை நோக்கித் தொங்கியது. மேலிருந்து தலையைத் தொடும் ஒரு பின்னல். தலையிலிருந்து கீழ் நோக்கி ஒரு பின்னல். ஒற்றைக் காலை தொங்கவிட்டு அப்படியே பின்பக்கமாய் ஒரு உதை. நாற்காலி விழ, மொத்த உடல் எடையும் சுருக்கை இழுக்க, அது சுருங்கி கழுத்தை நெறிக்க ,சுவாசத் தடையாகி நுரையீரல் தவிக்க, கழுத்து இறுகி நரம்புகள் புடைத்து, நாக்கு வெளியே தள்ள, எல்லாவற்றுக்குமான ”வெடுக் வெடுக்’ இரண்டொரு துள்ளல். அவ்வளவுதான்.

***

                         ஆவ்வ்வ்வ்ய்ய்யோ….. இதென்ன இப்படியொரு வலி? தலையைப் பிளக்கிற வலி! எல்லாம் இருட்டாக இருக்கிறது. ஐயோ! அவன் என் தலையைத் தடவிக் கொடுத்த போதே துள்ளிக் குதித்து ஓடியிருக்க வேண்டும். கையை காலை உடலை அசைக்கவே முடியவில்லை. எங்கே இருக்கிறேன். எதுவும் தெரியவில்லை. இருட்டில் இருக்கிறேன். கண்களை… இல்லை..இல்லை… கண்ணை மூடினாலும் இருட்டு. திறந்து வைத்தாலும் இருட்டு.

*** 

  வித்யாவுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது. வாங்கியே விட்டாள் விவாகரத்து நோட்டீஸை. அதை வைராக்கியமாய் இருந்து வாங்கி விட்டாளே தவிர வித்யாவுக்குத் தனிமையை ரசிக்கத்தெரியவில்லை அல்லது முடியவில்லை. சுதந்திரத்தை அனுபவிக்கத்தெரியவில்லை அல்லது முடியவில்லை. சுதந்திரம் இல்லாத போது ‘எனக்கு மட்டும் கொஞ்சம் மூச்சு விட முடிந்தால் எப்படி இருக்கும்?’ என்று ஏங்கிய மனது, இப்போது… ‘என்னை மட்டும் யாராவாது கட்டியாண்டால் எப்படி ஒண்டிக் கொள்வேன் தெரியுமா?’ என்று பச்சாதாபம் கொள்கிறது. அவளை யாருமே புரிந்து கொள்ளவில்லை. அல்லது அவளால் யாரையுமே புரிந்து கொள்ள முடியவில்லை. அவள்தான் என்ன செய்வாள். கட்டிக் கொண்டவன் கொடுமைக்காரனெல்லாம் இல்லை. அவனைப் போல் ஒரு  கண்ணியமானவனைப் பார்க்க முடியாது. இவளுக்குத்தான் பிரச்சினை. உள்ளுக்குள்ளிருந்து யாரோ அவளை இயக்குகிறார்கள். அப்போதெல்லாம்  அவளால் அவளாகவே இருக்க முடிவதில்லை. ஒரு நேரம் கனல்களிம்பு வழியும் தீக்குன்றாய் இருக்கிறாள். ஒரு நேரம் பனிக்காடாக தணுத்துக் கிடக்கிறாள்.

***

  ஆவ்வ்வ்வ்ய்ய்யோ…… வலி. வலி.  கண் விழித்துப் பார்த்தால் வெளிச்சம் கூசும் வலி. தலை முழுதும்  முள்ளாய்ப் பிடுங்கும் வலி. காற்றுக்குத் தவிக்கும் மீனின் தலையை கூரான பற்களால் கடித்து இழுக்கும் போது கடைசியாக  மீனுணரும் வலி. யாரோ என் தலையை தடவுகிறார்கள். ஐயோ! இப்படித்தான் அவனும் தடவினான். நான் எங்கே இருக்கிறேன். இதோ அந்த இருட்டு. திரும்பவும் என் கண்ணுக்குள்ளிருந்து இருண்டு வருகிறது. நா…ன்……..எ..ங்…கே.. இ..ருக்……..

 

***

வனிடம் வித்யாவேதான் சொன்னாள். என்னை விட்டு விலகிப்போ. நீ பரிசுத்தன். என்னை ஏதோ சூழ்ந்திருக்கிறது. நீ பார்க்கிற நான் அல்ல நான். நானே புரிந்து கொள்ள முடியாத நானாக இருக்கிறேனே அதுதான் நான். அடுக்ககத்தின் மாடியிலிருந்து கீழே என்னை குதிக்கச் சொன்னது நானல்ல. ஆனால் உனக்குத் தெரியுமா. அவ்வளவு மனவொப்புதலோடு சுவரேறி காற்றுக்குள் நீந்துவதாய் குதித்தது நான்தான். ஆனால் தரையில் இறங்கியது நான் அல்ல. காவல்கார அண்ணா வினோதமாக பார்த்தபோது அவரைப் பார்த்து சினேகமாக சிரித்தது  நான்தான். சிராய்ப்பு கூட படாமல் எழுந்து நடப்பதை பார்த்து அவர் ஆச்சர்யப் பட்டிருக்கலாம். ஆனால் உள்ளே சீழ் வடியும் புண்களில்  நெளிகிற புழுக்களையோ நொடியில் அவை மறைந்து சுகந்தப்பூக்களாய் கிளைத்துக் கிளைத்து மணப்பதையோ அவர் பார்த்திருக்க வாய்ப்பில்லையே?

***

 

வ்வ்வ்வ்ய்ய்யோ……யாரோ  வயிற்றில் ஊசியால் குத்துகிறார்கள். வலியைத் தின்று கொண்டே இருக்க வேண்டுமா நான்? கத்தியால் கீறப்பட்டதை விடவும் குறைச்சலான வலிதான். ஆனால் ஊசி என் உடலைத் துளைக்கிறபோது பழைய வலிகளையும் ஞாபகப்படுத்துகிறதே? பெரிய கத்தியானாலும் சின்ன ஊசியானாலும் அனுபவிக்கிறபோது எல்லாமே பெரிய வலிதான்.அதோ அது திரும்பவும் வருகிறது. அதே இருட்டு. என் கண்ணுக்குள்ளே இருந்து வருகிற அதே இருட்டு…….…….

 

***

வித்யா அந்த அறையின் மூலையில் சுவரைப் பார்த்து அமர்ந்திருந்தாள். இந்த மூலை அவளுக்குப் பிடித்த இடம். இரண்டு சுவர்களும் அவளுமாக மூன்று பேர் சங்கமிக்கிற இடம். வித்யா மனம் விட்டு பேசும்போது பொறுமையாக இரண்டு பேர் அவளது பேச்சை கவனிக்கிற இடம். இன்றைக்கு அம்மா, அப்பாவைத் தவிர மாமாவும் அவர் மகளும் அந்த அறையில் இருந்தார்கள். மாமா மகள் சௌமி தான் அந்த யோசனையைச் சொன்னாள்.

”நீ தனியாவே இரு! நாங்க யாரும் ஒன்னத் தொந்தரவு பண்ணல சரியா?”

வித்யா கொஞ்சமாய் திரும்பி அவளைப் பார்த்தாள். சிரிக்கவில்லை.

”ஆனா ஒங்கூட யாராவது இருக்கணும்”

வித்யா திரும்பவும் சுவர்பக்கமாக திரும்பிக் கொண்டாள்.

“இல்ல..இல்ல… உன் ஃப்ரண்ட்ஸ் யாராவது”

வித்யா வீறிட்டாள்.

”அப்படின்னா அவன் கூடவே இருந்திருப்பேனே?”

”இல்ல… இல்ல… உனக்குப் பிடிச்சாப்போல ஒரு ஆளு. வளவளன்னு பேசாத ஒரு ஆளு..இல்லன்னா ரெண்டு மூணுபேரு”

”என்னம்மா சொல்றே?” மாமா கொஞ்சம் எரிச்சலாகவே  கேட்டார்.

”இல்லப்பா…. ஏதாவது  பிராணிய வளத்தட்டும்பா…  மீனு, பூன, கிளி இல்லன்னா நாய்க்குட்டி அப்படி ஏதாவது”

”கூட ஆள் இருந்த மாதிரியும் இருக்கும். தனியா, சுதந்திரமா இருக்கற மாதிரியும் இருக்கும். முக்கியமா இவளை… அதை ஏன் செஞ்சே… இதை ஏன் ஒடச்சேன்னு கேட்காதுக…. கிண்டலா பாக்கதுக… இல்லியா?”

மாமா தன் மகளை பக்கத்தில் வரச்சொல்லி சைகை காட்டினார். வந்ததும் அவள் முதுகைத் தட்டினார்.

***

 

தேதோ கடைகளுக்குப் போய் ஒன்றும் அமையவில்லை. அமையவில்லை என்றால் வித்யாவுக்குப் பிடிக்கவில்லை. ஆஸ்திரேலியக் கிளி, சாம்பல் முயல், அன்னப்பட்சி போலிருக்கிற வெள்ளை வாத்து, வகைவகையான மீன்கள், ஒன்றையும் பிடிக்கவில்லை. கடைசியில் ஒரு ஜீவ காரூண்ய அமைப்பு ஒன்றின் விளம்பரத்தைப் பார்த்து அங்கே வித்யா மட்டும் போனாள். அவர்கள் நிறைய பிராணிகளைக் காட்டினார்கள். தெரு நாய்க் குட்டிகளும், பூனைகளும்தான் அதிகளவில் இருந்தன.   கருகருவென்று நிறைய ரோமத்தோடு இருந்த அந்தப் பூனையை பார்த்ததும் பிடித்து விட்டது. ஒற்றைக் கண்ணுக்கு  மருந்து வைத்து கட்டியிருந்தார்கள். சுருண்டு படுத்திருந்தது.

”கண்ணுல என்ன காயம்?”

”இல்ல”

”என்ன இல்ல?’

”கண்ணே இல்லங்க.. புடுங்கிட்டாங்க”

”ஸ்ஸ்ஸ்ஸ்”

”ம்… எவனோ இதோட கண்ணத் தோண்டி…”

”ஐயோ!”

”மரத்துல ரத்தம் ஒழுக ஒழுக தொங்க விட்டுருந்தானாம். எங்க சாருதான் மேலே ஏறி  ஆணிய பிடுங்கி எடுத்துட்டு வந்தாரு”

“ஏன் இப்டி செய்றாங்க?”

”மாந்திரீகம் பண்றதுக்கு”

வித்யா அதை எடுத்துக் கொள்வதாகச் சொல்லி தூக்கிக் கொண்டு வந்து விட்டாள்.

***                       

           ஆவ்வ்வ்வ்ம்ம்மிய்யாவ். யாரிவள்? இவ்வளவு ஆதரவாய் தொடுகிறாள்?. எங்கே கொண்டு போகிறாள் என்னை? துள்ளிக் குதித்து விடலாமா? ஆவ்வ்வ்ம்ம்மிய்ய்யாவ்… உடல் முழுவதும் வலிக்கிறதே? இறக்கி விட்டதும் வலியைப் பார்க்காமல் உடலை வளைத்து நெட்டி முறித்தேன். அப்பாடா! மெல்ல ஒரு நடை போய் வந்தேன். அவள் என்னைத் தூக்கி மெத்தையில் படுக்க வைத்தாள். இந்த இடத்தை எனக்கு பிடித்துவிடும் என்று நினைக்கிறேன். எதையோ கொண்டு வருகிறாள். கையில் பீங்கான் தட்டு!. பாலா? இல்லை. இந்த வாசனை… ம்..அதுவேதான்.. மீன் வாசனை!.. அவளை அண்ணாந்து பார்த்து ஆவ்வ்ம்ம்மியாவ் என்றேன்.

 ***

வித்யாவுக்கு அம்மா என்று கேட்டது. ”என்ன சொன்ன?….குட்டி…. என்ன சொன்ன? சொல்லு…குட்டி சொல்லு..” என்றாள். திரும்பவும் அது அம்மா என்றது. இலையில் பொதிந்து அவித்த மீனை விரல்களால் பிட்டு முள் எதுவும் இருக்கிறதா என்று பார்த்து கொஞ்சம் போல பிசைந்த மாதிரி நசுக்கி ஊட்டினாள். அது முகத்தை உதறி, சின்னதாய் தும்மி விட்டுஅவள் கையிலிருந்து கவ்விக்கொண்டு அந்த மூலையில் போய் நின்று கொண்டது. அவளது மூலை. வித்யா புன்னகைத்தபடி தொடர்ந்து போனாள். விழுங்கிவிட்டு அவள் கையிலிருந்த தட்டைப் பார்த்து மறுபடியும் அம்மா என்றது. வித்யா மண்டியிட்டு அமர்ந்தாள். மெல்லக் கொஞ்சியபடியே மீனை உதிர்த்துக் கொடுத்தாள். அது அவள் விரல்களையும் சேர்த்து நக்கியது.அவள் எங்கே போனாலும் பின்னால் வந்தது. ஷாம்பு போட்டு குளிக்க வைத்து வெயில் காய்ந்ததும் பணக்காரத்தோரணை வந்துவிட்டது. அடர்த்தியான ரோமங்களால் செண்டாகத் தெரிந்த அதன் வால் கூடுதல் சினேகத்தை பெறுவதாக இருக்கிறது.

***

  நான்கைந்து மாதங்களாகிவிட்டிருந்தது. இப்போது வீட்டில் வித்யாவையும் சேர்த்து நாலுபேர். மூலையில் அமர்ந்து நேத்ராவுக்கு மீனை உதிர்த்துக் கொடுத்த படியே பேசுவாள். ஒற்றைக் கண்ணோடு தப்பிப் பிழைத்த பூனைக்கு பெயர் நேத்ரா ! மற்ற இருவரும் எப்போதும்போல் மௌனமாயிருக்க நேத்ரா மட்டும் அம்மா..அம்மா என்றபடியிருப்பாள்.

”நீ சும்மா இரு நேத்ரா… அந்த வலி தலைக்குள்ள இருந்து வரும். அப்படியே இருட்டும் வரும். அப்புறம் எனக்கு நான் என்ன செய்யறேன்னு தெரியாது. ஆனா தெரியும். வலி அதிகமாகும் போது கழுத்தை அப்படியே அறுத்துக்கலாமான்னு தோணும். அத்தனை மாத்திரையையும் சேர்த்து முழுங்கிடலாமான்னு தோணும். ஓடிப்போயி ஓடற வண்டி முன்னால நிக்கலாமான்னு தோணும்….”

”அம்மா..”

”நீ சும்மா இருடி…  அந்த வலி உனக்கு வந்தா தெரியும்”

”அம்மா”

வித்யா அந்தப்பீங்கான் தட்டை தரையில் அடித்து உடைத்தாள்.

”சும்மா இருன்னு சொல்றேன்ல டி?” கத்தினாள்.

உடைந்த பீங்கான் துகள்களுக்கிடையே கிடந்த மீன் துண்டை கவ்வப் போனாள் நேத்ரா.

”ஏய் நேத்ரா…..”

பத்ரகாளியாகியிருந்தாள் வித்யா.

”போ… அந்தப் பக்கம்… போன்னா போடீ”

ஒரு நிமிடம் நின்று இவளைப் பார்த்து விட்டு  திரும்பி வந்து மூலையில் போய் படுத்துக் கொண்டாள்.

***

 

வித்யா தனியாக தரையைப் பார்த்து உட்கார்ந்திருந்தாள். என்ன செய்யலாம்? ’என்ன செய்யலாம்? என்ன செய்யலாம்?’மண்டைக்குள்ளிருந்து யாரோ கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். முதலில் உள்ளே இருக்கிற ஆளை வெளியேற்ற வேண்டும். அதற்கு ஒரு சுத்தியல்  வேண்டும். தேடினாள். கல்யாண வீட்டில் சுத்தியல் தேடிக் கொண்டிருக்கிறவளை வித்தியாசமாக பார்க்காமல் என்ன செய்வார்கள்? சமையல்காரனிடம் இந்த அரிவாள் மனை கூட போதும் என்கிறாள். தயங்கியபடியே கொடுத்தவன் இவள் நகர்ந்ததும் அலைபேசியை எடுத்து யாரையோ கூப்பிட்டான். அவர்கள் உள்ளே வரும் போது இரண்டாவது வெட்டு விழுந்து கொண்டிருந்தது. மணப்பெண் அலங்காரத்திலிருந்த சௌமி தலையைக் கொத்திக் கொண்டிருக்கிறவளைப் பார்த்து அலறினாள். மயங்கிச் சரிந்த இரண்டு பேரையும் தாங்கிப் பிடித்து தூக்கினார்கள்.

***

காரிலிருந்து இறங்கிய வித்யாவை கைத்தாங்கலாக பிடித்து கொண்டு வந்த சௌமியின் அப்பா வீட்டு வாசல் வரை வந்தார்.

”அப்ப  மாமா கிளம்பட்டுமாம்மா?”

”சரி மாமா”

”ஏதாவது வேணுமா?”

”இல்ல  நேத்ராவுக்கு பால் வேணும், மீன் வேணும்” என்றவள் நினைவு வந்தவளாக  ”இல்ல இல்ல கீழ் வீட்டு பாப்பா வாங்கி ஃப்ரிட்ஜுல வெச்சிருப்பா”  தலையில் அடித்துக் கொள்வதாக பாவனை செய்தாள்

”ஃப்ரிட்ஜுல இருக்கும் அவிச்சுக் குடுத்தா போதும்”

வித்யா கதவைத் திறந்தவுடன். மீன் வாடையடித்தது. பச்சையாக தின்கிறாளா என்ன?

“நேத்ரா?”

சத்தமேயில்லை.

மாமா  முகத்தை சுளித்தபடி கிளம்பி விட்டார். பெண்ணையும் மாப்பிள்ளையையும் அனுப்பி வைக்க வேண்டும். ஆயிரம் வேலை கிடக்கிறது.

வித்யா மெள்ள நடந்து ஃப்ரிட்ஜுக்குள்ளிருந்து  மீனை எடுத்தாள். கெட்டுப் போக வில்லையே. பிறகு என்ன இப்படி துர்வாடை வீசுகிறது. அய்யோ… நேத்ரா! பதறினாள். அன்றைக்கு பீங்கான் தட்டை தரையில் அடித்து உடைத்து கத்திக் கொண்டிருக்கும் போதுதான் சௌமி கல்யாணத்திற்கு  வற்புறுத்தலாக கிளப்பிக் கொண்டு போனார்கள். கதவை யார் அடைத்துப் பூட்டினார்கள்? நினைவில்லை. நேத்ரா… எங்கே போனாள்?

”நேத்ரா..? குட்டி… எங்கே இருக்க?”

வித்யா மூலையைத்தேடி ஓடினாள்.  உடனே உறைந்து நின்றாள். இங்கிருந்தே பார்த்து அலறினாள். நேத்ரா மூலையில் செத்துக் கிடந்தாள். அவளது உடல் காய்ந்து சுருங்கி இருந்தது. அருகில் போக பயந்து இங்கிருந்தே “நேத்ரா” என்று அலறினாள். நேத்ராவின் செண்டு வால் சுருங்கிக் காய்ந்து சூம்பிக் கிடந்தது. எத்தனை நாளாக இப்படிக் கிடக்கிறாளோ?

நேத்ராவின் உடம்பிலிருந்து உதிர்ந்த புழுக்கள் நெளிவதைப் பார்த்ததும் வித்யாவின் தலைக்குள்ளிருந்து மெல்ல ஒரு வலி வெடித்துக் கிளம்பியது. என்ன செய்யலாம்? என்ன செய்யலாம்? என்ன செய்யலாம்? இந்த தலையை உடம்பிலிருந்து பிரிக்க வேண்டும். அல்லது கழுத்தை நசுக்கி…ஆங்… சுருக்கு. சுருக்கு மாட்டி தொங்கி விடலாம்.

***

              ஆவ்வ்ய்ய்யோ…….இந்த கீழ் வீட்டுப் பாப்பா ஏன் என்னை இப்படி  படுத்துகிறாள். வித்யா எங்கே போய்த் தொலைந்தாள்? இந்தப் பாப்பா பாலை ஊற்றுகிறேன் என்று முகத்தில் எல்லாம் ஊற்றிவிடுகிறாள். அன்றைக்கு திடீரென்று அத்தனை பேர் வந்தார்கள். திடீரென்றே அத்தனை பேரும் மாயமானார்கள். கதவும் அடைத்திருந்தது. இரண்டு நாள் பசி வேறு. மூலையில் சுருண்டு படுத்திருந்தேன். எவ்வளவு நேரம் தூங்கினேன் என்றே தெரியவில்லை. ஏதோ வாசனை. ஆஹா. எலி!! எவ்வளவு பெரிய எலி ? பாய்ந்து கழுத்தைக் கவ்வி கொன்று விட்டேன். மெல்ல ருசித்துத் தின்னலாம் என்று மூலைக்கு கொண்டு வந்து கடிக்கும் போது, கதவைத் திறந்து இந்த பாப்பா வந்தாள். பயந்து போவாள் என்று  பார்த்தால், ஃப்ரிட்ஜைத் திறந்தாள். அவள் கையில் என்ன? பால் பாக்கெட்! இந்த வாசனை… அட மீனும் இருக்கிறதே!. எலியை அப்புறம் பார்ப்போம். அவளை அண்ணாந்து பார்த்து ”ஆவ்வ்ம்ம்மியாவ்” என்றேன்.  மீனையும் பாலையும் உள்ளே வைத்துவிட்டு என்னைத் தூக்கிக் கொண்டு இங்கே வந்து விட்டாள். இங்கே தினமும் மீனும் பாலும் கிடைக்கிறதுதான். ஆனால் இந்தப் பாப்பா என்னை அமுக்கி நசுக்கி விளையாடுகிறாள். அவ்வப்போது துள்ளிக் குதித்து தப்புகிறேன். வித்யா வரும்வரை பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

***

வித்யா சுருக்கை இழுத்துப்பார்த்தாள். இறுகுகிறது. ம்ம்ம்…சரி.. அடுத்த அறையிலிருந்து  நாற்காலியை எடுத்து வந்தாள். ஏறி  நிலைதடுமாறாது நின்றாள். காற்றாடியில் நுனியைக் கட்டி சுருக்கை விரித்து தலையை உள்ளே நுழைத்து முடிச்சை நெருக்கினாள். சரியாக பின் கழுத்துக்கு வந்து ஜடையை அழுத்துகிறது. கொஞ்சமாக விரித்து ஜடையை உருவி வெளியே தொங்கவிட்டாள். அது தலையிலிருந்து தரையை நோக்கித் தொங்கியது. மேலிருந்து தலையைத் தொடும் ஒரு பின்னல். தலையிலிருந்து கீழ் நோக்கி ஒரு பின்னல்.                         


-ஜான் சுந்தர்

ஓவியம் : இயல்

4 COMMENTS

  1. காலம் எல்லாக் கொடிகளுக்கும் பற்றிப் படர வாய்ப்பளிப்பதில்லை. ஒன்றையொன்று பற்றி வாழ்ந்த இந்த அபலை உயிர்களின் வாழ்க்கையை காலம் நிராகரித்த கதையை மிக திறமையாக செய்துள்ளார்.
    கதையை சொல்லியவிதம் பாராட்டுக்குரியது.
    நன்றி ஜான் சுந்தர் சார் ❤

    கதையின் கருவை அற்புதமான ஓவியமாக வரைந்த இயல் பாராட்டுக்குரியவர் ❤

    இருவருக்கும் அன்பும் நன்றியும் ❤❤❤

  2. வலி… உடலோ மனமோ எங்கிருந்தாலும் வலி வலிதான். வலியின் வாதைகளை அப்படியே எழுத்தால் படம் பிடித்துக் காட்டும் கதை. பாராட்டுகள்.

  3. மன வலியைத் தரக்கூடிய விஷயம் என்று யாரேனும் கருத்துத் தெரிவித்தாலும், அது ஒரு படைப்பு ! அந்தப் படைப்பு என்ற கதையை எந்த மாதிரியான போக்கில் கொண்டு செல்கிறார் என்பதை பார்க்கும் பொழுது கதாசிரியரின் திறமை தெரிகிறது. இருவேறு கட்டங்களை இணைக்கும் விதம் பாராட்டத்தக்கது! நல்ல எழுத்து கதையின் வரிகளைக் காட்சிகளாகக் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது ! நல்ல ஒரு படைப்பு ! மனமார்ந்த வாழ்த்துக்கள் !

  4. அரூபமாய் பல குரல்கள் கதையிலிருந்து எழுகின்றன .எல்லையில்லா கருணையின் கைககள் வித்யாவிற்கு…ஜான் அண்ணாவின் மொழி பிரமாதம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.