நூறு சுவர்கள் ஆயிரம் ஓவியங்கள் – 7


7.கலவியின் செம்பாகம் புலவி.

 தம்பதிகளின் உடன்படிக்கை உலகப் போர்களுக்கு இடையே நிகழும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை விட சிடுக்குகள் கொண்டவை. ஆண் பெண் இருவரது இடமும் வெவ்வேறு, என்று தொடர்ந்து சமூகத்தின் எடை நசுக்கித் தெரிவித்துக் கொண்டிருப்பதும், அவ்வாறான வலியுறுத்தலின் பேரில் ஆணுக்கும் பெண்ணுக்குமான வேறுபாடுகள் மெல்ல உளப்பதிவு கொண்டதும் ஒரு புறம். இயல்பாகவே உயிரியல் வேறுபாட்டிலிருந்து உருவாகும் இரு உயிரினங்கள் ஆண் பெண் சமம் என்பதை அப்படியே பொருள் கொண்டு கொஞ்ச காலம் போரிட்டு வீணாகிறது.

பெண்ணடிமைத்தனம் என்பது நிச்சயம் தன் கோட்டின் வரையறைகளைக் கறாராக மதிப்பிட தெரியாததாலும் அத்தகைய வரையறை உணர்வுகளின் அடிப்படையில் அணுகி கட்டில் வைக்க இயலாததாலும் நிகழ்கின்ற ஒரு நோய்மை. அதற்கு பெண்களைப் போலவே ஆண்களும் பலியாகின்றனர், என்பது சமூகவியல் உண்மை. பெண்ணடிமைத்தனம் ஒரு எறியப்பட்ட பூமராங்க், அது ஆணைப் புறமண்டையில் எந்த நேரமும் திரும்பி வந்து அடிக்கும்.

காமம் என்பது தீக்கொழுந்து. அதைக் கையாள்வதற்கு எந்த ஒரு வெளிப்படையான அமைப்பும் இல்லை. இந்த நூற்றாண்டில் அதன் சிக்கல்கள் இன்னும் பல படிகள் செறிவானதாகின்றன. ஒருபுறம் அழுந்த அழுந்த அடக்கி வைக்கும் ஆச்சாரங்கள், அவை காதலைப் புனிதம் என்று கட்டமைத்து வியாபாரம் செய்கின்றன.

மற்றொரு புறம் கட்டின்றி வெள்ளமென பெருகிக் கிடக்கும் போர்னோகிராபி. அதன் வியாபாரம் எத்தனை உயிர்களைப் பலிவாங்கி வருகிறது. பொதுவாக எடுத்துக் கொண்டால் இந்தியப் பெண்கள் ஆச்சார அடக்குமுறையாலும் இந்திய ஆண்கள் போர்னோவாலும் மனபிறழ்வு அடைவது சகஜமாகிறது. விலக்குகளும் உண்டு. இரண்டையும் தன் கற்பனை வீச்சாலும் கட்டுணர்வாலும் மீறி வந்து சரியான மென்காமத்தை வந்தடைய வேண்டி இருக்கிறது. அதற்குள் இன்னும் பல கீறல்களும் குருதிச் சிந்தல்களும் மெத்தையை வர்ணக்களங்கப் படுத்திவிடுகின்றன.

இவற்றை எல்லாம் மீறி தொடரும் இருமன புரிதல் புயலின் முன் நிற்கும் மலர்களைப் போன்றவை. புனிதமானவை அல்ல. மகத்தானவை. காதல் புலவிக்குத் தரும் முக்கியத்துவத்தையும் அதில் விளையும் இருட்கதிர்கள் குத்திக் காயம் செய்யும் மனங்களையும் பற்றிய படங்கள் விரவிக் கிடக்கின்றன, அவற்றைப் பேசலாம்.

 

1.Eternal Sunshine of the Spotless Mind (2004)

திரைப்படங்களைப் போலவே வாசனை கிளர்த்தும் நினைவுகளின் மங்கல் தன்மையை ஒத்திருப்பவைக்  காதல் நினைவுகள். காதல் நினைவுகள் மெல்ல மெல்ல யதார்த்தத்தின் அடுக்குகளுக்கு அடியில் சென்ற பிறகு அது நிச்சயம் அங்கிருக்காவிடிலும் ஏதோ ஒரு வாசனையை நினைவூட்டியபடியே அலைவுறும். இன்புற்றிருக்கையில் காதலின் வாசனை துன்பியலின் மீது நேசம் கொண்டு தீப்பற்றும், துன்புற்றிருக்கையில் அது இன்பத்தை எண்ணி ஏங்கும். Joel Barrish (Jim Carrey) தனது நினைவுகளை நரம்பியல் தொழில்நுட்ப முறையில் அழித்துவிட்ட இரண்டாண்டு துனைவியைப் Clementine Kruczynski (Kate Winslet) பார்த்தபடி நிற்கிறான்.

லாகுனா என்ற ஒரு நிறுவனம் அந்த சேவையைச் செய்கிறது. அது தனது வாடிக்கையாளர்களை ரகசியமாகச் சந்தித்து அவர்கள் அழிக்க விரும்பும் ஒரு குறிப்பிட்ட நபரது நினைவுகளை மட்டும் தெரிவு செய்கிறது. இன்றைய சமூக ஊடகங்களில் உள்ள ப்ளாக் பட்டனைப் போல. இப்படி ஒரு எதிர்ப்பினைத் தன் காதலின் மீது அவள் எறிந்து விட்டதைப் பொறுக்க முடியாமல் தானும் அவள் நினைவினை அழிக்கத் தயாராகிறான் ஜோயல். லாகுனா என்றால் இடைவெளி என்று பொருள்.

அவன் நினைவழிப்புக்குத் தயாராக இருக்கையில் வல்லுனர்களால் முழுவதுமாக அவளது நினைவைத் தேடி அழிக்க முடியவில்லை. மூளையின் பல நுண்ணிய சல்கைகளில் அவளைப் பொதிந்து வைத்திருக்கிறான், அல்லது அவளது நினைவுகளை அழிக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வேறொரு மறைக்கப்பட்ட உணர்வுகளின் வழியே அவள் பேருருக் கொள்கிறாள்.

மர்மக் கதைகளில் கதைசொல்லி பல விசயங்களை மறைத்து வைத்து மெல்ல மெல்ல வெளிக்காட்டுவது போல் அல்லாமல், இயல்பாகவே மறக்கப்பட்டிருக்கும் உணர்ச்சிகளில் இருந்து தன் காதல் பீறிட்டெழுவதை ஒவ்வொன்றாக காட்டுகிறார், இதில் இருந்து ஒரு புத்தம் புதிய கதை சொல்கை உருவாகி எழுந்திருக்கிறது.

இன்செப்சன் போன்ற பிரபலமான படங்களின் கனவு காட்சிகள் இங்கிருந்து கருபெற்றிருக்கக் கூடும், எனும் அளவிற்கு இதில் ஒரு முன்னிற்றல் தெரிகிறது. கனவுகளுக்கே உரித்தான நம்பகத்தன்மை கனவுகாண்பவர்களை வேறொரு உலகில் முற்றிலுமாக பங்கேற்க வைக்கிறது. அவர்கள் தொடுகள், நுகர்ச்சி, கண்ணீர் இவற்றிலிருந்து ஆழிகள் எழுந்தும் ஓயவும் முடியும். அது இந்த திரைப்படத்தில் அற்புதமாக வெளிப்பட்டிருக்கிறது.

அஷ்டகோணல் முகத்துடன் நம்மைச் சிரிக்க வைக்கும் ஜிம் கேரி இந்த ஒரு படத்தின் மூலமாகவே திரைப்பட ஆர்வலர்கள் மத்தியில் வெகுகாலம் பேசப்படுவார். சிடுசிடுப்பான அழகியல் கேட் வின்ஸ்லெட்டிற்கே உரித்தானது என்பதன் முத்திரை இதில் இருக்கிறது.

[ads_hr hr_style=”hr-fade”]

 2.Revolutionary Road

உருகித் திளைத்த காதல் எதையோ காலப் போக்கில் இழந்து விடுகிறது. அது மெல்ல மெல்ல வாழ்வின் நிலையாமையை தான் விழைந்த காதலரின் துணையாலும் வென்றுவிட முடியாது, குறைந்தபட்சம் நமது சின்னஞ்சிறு கனவுகளை வெல்வதில் கூட எத்தனை நெருங்கியவரும் பங்கெடுக்க முடியாது என்ற நிதர்சனத்தை புரிந்து கொள்கிறது. அங்கிருந்து செய்வதறியாது தவித்து தனது துணையை தன் இருப்பை வெறுக்கக் கற்றுக் கொள்கிறது. ஒருபுள்ளியில் அவ்வெறுப்பின் இனிப்பில் மூழ்கி அடிமையாகி விடுகிறது.

முதல் காட்சியிலேயே தன் முகத்திற்கு முன் பாராட்டும் எவரும் தன் நாடக நடிப்புத் திறனை உண்மையிலேயே விரும்பவில்லை என்ற சோகம் நிரம்பிக் கிடக்கிறாள் ஏப்ரல். அவளைத் தேற்ற முனைந்து தோற்று மெல்ல மெல்ல கோபத்தில் விரிகிறான் ஃப்ரான்க். அங்கிருந்து படம் முழுக்க பாசாங்குத்தனமான மண வாழ்வின் எபிசோட்கள் வந்தபடியே இருக்கின்றன.

கணவனை வேலையைக் கைவிட்டுவிட்டு பாரிஸுக்குப் போகலாம் என நிர்பந்திக்கிறாள். அங்கு அவன் சும்மா இருக்க முடியும், தான் நிறைய சம்பாதிக்க முடியும் என்ற சிறுபிள்ளைத்தனமான கனவை பெரிய இலட்சிய கொள்கையாக முன்வைக்கிறாள். இரண்டு குழந்தைகள் நடுவே வளர்ந்த குழந்தைகளாக அடம் பிடித்துத் திரிகிறார்கள் இருவரும்.

இருவரையும் இலட்சியத் தம்பதியாக கருதும் அண்டை வீட்டார் தனது மன அழுத்தம் கொண்ட மகனை அழைத்து வந்து ஒரு உணவுச் சந்திப்பை ஏற்பாடு செய்கின்றனர். பைத்தியக்கார விடுதியில் இருந்து வந்திருப்பவன் அவன், ஜான். அவன் மெல்ல ஃப்ரான்க்கின் முகத்தில் இருக்கும் அறிகுறியினைக் கண்டறிந்து வளர்த்தெடுக்கிறான், அவன் ஏப்ரலைச் சுகமாக வைத்திருக்கவில்லை எனச் சுட்டுகிறான். அங்கு இனிய தம்பதியர் என்ற கற்பிதம் உடைந்து தெரிக்கிறது.

முடிந்து செல்கையில் ஏப்ரலிடம் ”உனக்காக வருந்துகிறேன்” என்று குறிப்பிடும் ஜான் தொடர்ந்து ”நீ இப்போது அமர்ந்திருக்கும் தோரணையைப் பார்த்ததும் அவனுக்காகவும் வருந்துகிறேன், நீங்கள் ஒருவருக்கொருவர் பொருத்தமானவர்கள்” என்று சொல்லி விலகுகிறான்.

இதற்குள் என்றோ அவசரத்தில் காதலற்றுப் புணர்ந்த விந்துத் துளியினை ஈர்த்துக் கருவாக்கி வைத்திருக்கிறது இவளது அண்டம். அதன் இருப்பும் வளர்ச்சியும் தரும் இரட்டை மனநிலை நாள்தோறும் ஏப்ரலை கொந்தளிப்பில் ஆழ்த்துகிறது. அவளுக்கு இடமும் அமைதியும் தராமல் தொடர்ந்து தன் தரப்பை முன் வைக்கும் ஃப்ரான்க்கைக் கடுமையாக எதிர்க்கிறாள். அலறுகிறாள். அவனை அங்கிருந்து துரத்துகிறாள்.

தான் வேறொருத்தியிடம் உறவு கொண்டதை முன் வைக்கும் போது, “இதென்ன என்னை பொறாமைக்குள்ளாக வேண்டும் என்கிற நினைப்பா?” என்று மேலும் பொங்குகிறாள். அவளுக்குள் தான் வேறொரு நண்பனுடன் உறவு கொண்டதன் கசப்பு பொங்கி இருக்கக் கூடும், நமக்கு முன்பு இவன் முந்திக் கொண்டு உண்மையைச் சொல்கிறானே என்ற தவிப்பு ஊக்கியிருக்கக் கூடும்.

மெல்ல அமைதி கொண்டு தன் கணவனை இன்முகம் காட்டி பணிக்கு அனுப்பி வைத்துவிட்ட பின்பு, சுயமாய் கருவறுப்பில் ஈடுபட்டு இரத்தக் கசிவிற்கு ஆளாகிறாள்.

படத்தின் முக்கிய பகுதிகளைச் சொல்லிவிட்டேன், காரணம் சொல்ல முடியாத ஏதோ ஒன்று உணர்வாக எஞ்சி விடுகிறது.

[ads_hr hr_style=”hr-fade”]

3.Marriage Story. (2019)

புதிதாக கதை சொல்லிலும் சொல்லும் முறையிலும் ஏதுமில்லை. Kramer Vs Kramer இல் நாம் ஏற்கனவே பார்த்ததுதான், என்றபோதும் நடிப்பில் ஆடம் ட்ரைவர் மிக முக்கியமான பரிணாமத்தைக் காண்பித்திருக்கிறார். எப்போதுமே தன் சுயத்தை முன்வைத்து தன் குழந்தைகளை இழந்து தவிப்பது அமெரிக்க வாழ்வின் தவிர்க்க இயலாத அங்கம். சுதந்திர பெண் என்ற கருத்தாக்கமும் குழந்தைகளைப் பராமரிப்பதில் தாய்க்கே முதலிடம் என்ற மரபு வாதமும் ஒன்றாகி புதிய குழப்பங்களை விளைவிக்கின்றன.

நோவா பம்பேக் இந்த கதைத்தளங்களைச் செவ்வனே செய்பவர்தாம். ஒருவர் மற்றொன்றை நிரப்புபவராக இருப்பதே சிறந்த பந்தமாக நீடிக்க முடியும். ஒருவரை ஒருவர் போட்டியாக நினைப்பது பொதுவான மனித எண்ணம்தான் அது மண உறவுகளின் மனங்களில் நீடிக்கும் போது விரிசலின் சாத்தியங்கள் பெருகுகின்றன.

இருவரும் சண்டையிடும் காட்சிகள் படத்தின் முக்கியமான தருணங்கள் என்று மறு யோசனையின்றி சொல்லலாம். அவை நன்றாக எழுதப்பட்டும் நன்கு நடிக்கப்பட்டும் இருந்தன. ஆஸ்கார் விருதுகளில் அணிவகுத்த படங்களில் இதுவும் ஒன்று.

[ads_hr hr_style=”hr-fade”]

4.Blue Valentine (2010)

ஒரு பெண்ணைப் பார்த்ததும் அவளிடம் தன் வாழ்வின் அந்தத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு ஆணுக்குத் தோன்றுகிறது. அவன் அங்கிருந்து தன் மீட்சி கிடைத்து விட்டதாகக் கருதுகிறான். ஒரு பெண் தனக்கான ஆணிடம் சுய கெளரவத்துடன் கூடிய சுதந்திரம் கிட்டும் என்று கனவு காண்கிறாள், தான் வளர்ந்த வீட்டில் இருக்கும் கட்டுப்பாடுகள் அவளது இயல்பைத் தூண்டி அதற்கு எதிராக யோசிக்க வைக்கிறது.

தனது பிள்ளை வேறொருவனுடையது என்பது தெரிந்தும் டீனைத் தன் கணவனாக ஏற்றுக் கொள்கிறாள். அவனுக்கும் அந்த உண்மை தெரிந்தே இருவரும் மண வாழ்வின் இணைகிறார்கள். ஆனால் எங்கோ விழிபுரியாத இடத்தில் இருந்து கொண்டு அந்த முள் இருவர் மனதிலும் உறுத்துகிறது.

அன்பைக் கேட்டு வாங்கும் கீழ்மை தனக்கு ஏற்பட்டுவிட்டதே என்று கசிந்துருகி மதுவருந்தி இன்னும் கீழ்மையில் வீழ வேண்டி இருக்கிறது. அவன் தன் பழக்கத்தை நிறுத்தப் போவதில்லை, தானும் அவனை நிர்பந்திக்கத் தேவையில்லை என்று மண வாழ்வில் இருக்கும் கதவுகளையும் சிறைக்கம்பிகளாகப் பார்க்கிறாள்.

இறுதியில் இருவரும் எதிரெதிர் பாதையில் நடக்கும் போது குழந்தை அவனைப் பின் தொடர்ந்து ஓடி வரும் காட்சி கண்ணீரை வரவழைப்பது. ஒவ்வொரு முறையும் காமத்தினாலும் மதுவினாலும் தங்களது பிழைகளை அகற்றிவிடலாம் என்று நினைத்தால் அது இன்னும் பூதாகரமான சந்தர்ப்பங்களையும் வெறுக்கும் தருணங்களையுமே வழங்கும் நச்சு சுழற்சியாகி விடுகிறது.

[ads_hr hr_style=”hr-fade”]

5.A Seperation (2010)

சட்டங்கள் மனித உணர்வுகளுக்கு இடமளிக்கும் வகையில் ஏற்படுத்தப் படுபவை அல்ல. அவை இரும்புக் கம்பிகள், அவற்றினை அத்தனை எளிதில் வளைத்து புகுந்து வெளியேறுவது சாதாரணர்களுக்கு சாத்தியமற்றது. இஸ்லாமிய சட்டமும் அத்தகையதே. அது இன்றைய ஈரானில் தேசிய சட்டமாக இருக்கிறது. பிற சட்ட முறைமைகளைப் போலவே அவற்றிற்கு இடையில் சிக்கித் தவிக்கும் பலர் உண்டு.

மகளின் நல்வாழ்விற்காக வெளிநாட்டிற்குச் செல்ல வேண்டும் என்பதால், தன் கணவனின் தந்தையை விட்டுச் செல்ல விரும்புகிறாள் சிமின். “அவருக்கு நீங்கள் இருப்பதைக் கூட உணர முடியாது” என்று மேலோட்டமாக அவள் சொல்வதற்கு, “என்னால் அவர் இருப்பதை உணர முடியுமே” என்று பதிலளிக்கிறான் நதெர்.

எந்த நிலையிலும் மனதிற்குத் தோன்றிய உண்மையின் பால் நிலைத்து நிற்கும் அறவுணர்வு கொண்டவன் என்பதால் சில தவறுகளை அல்லது பிறழ்வுகளைக் கூட அவனால் ஏற்றுக் கொள்ள முடிந்ததில்லை. தந்தையைப் பார்த்துக் கொள்ள அமைத்த வேலைக்காரி மிகுந்த இறைபயம் கொண்டவளாக இருக்கிறாள். அவள் வயதானவரின் துணியை மாற்றுவது பாவமாகுமா இல்லையா என்று தனக்குத் தெரிந்தவரிடம் கேட்டுக் கொள்கிறாள்.

அவள் இங்கு குற்றேவல் செய்வது அவளது கணவனுக்குத் தெரியாதது. இப்படியான போது அவளை வேலை நீக்கம் செய்வதில் ஒரு கறார்தன்மையைக் கணவன் கடைப்பிடிக்கத் துவங்க அங்கிருந்து பல விசித்திரமான உண்மைகள் வெளிப்படுகின்றன.

யதார்த்தத்தின் எளிமையிலும் அறவுணர்வு குறித்த கேள்விகளிலும் படம் மிளிர்கிறது.


  • கமலக்கண்ணன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.