Monday, May 17, 2021
Homeபடைப்புகள்தொடர்கள்பேதமுற்ற போதினிலே -10

பேதமுற்ற போதினிலே -10

பிடித்தல், பீடித்தல்

அடிப்படையில் நான் ஒரு கவிஞன் என்றாலும் முகநூல் ஊடகம் என்னை ஒரு பத்தியாளனாகவும் அடையாளம் காட்ட உதவியிருக்கிறது. வழவழா கொழகொழாவென்று எழுதுவது எனக்கு பிடிக்காததும் பத்தியெழுத்தை நான் தேர்வுசெய்ததற்கு ஒரு காரணம். சொல்லவேண்டிய விஷயத்தை கச்சிதமாக சுருக்கமாகச் சொல்லவேண்டும். சொல்லப்பட்டபின் அதை திரும்ப வரிவரியாக விளக்கவேண்டிய அவசியமில்லை. அது வாசகர் பொறுப்பு. கூறியது கூறல் அலுப்பூட்டுவது. இரண்டாவது சொல்வதில் புதிதாக ஏதாவது இருந்தால்தான் எழுதவே தோன்றுமென்பதால், நீளமாய் எழுதிச்செல்வது எனக்கு ஆகாத ஒன்று. நிற்க.

சமீபத்தில் Game of throne எட்டு சீசன்களையும் பார்த்துமுடித்தேன். ஸ்டார்க் வம்சாவழியின் கடைசி வாரிசான பிரான் முதல் அத்தியாயத்திலேயே கால் முடமாகிப் போகிறான். மூன்று கண்களையுடைய காகம் அடிக்கடி கனவில் வருகிறது. அதைப் பின்தொடர்ந்து தனது மூதாதையைக் கண்டடைகிறான். முக்கண் காகமாக மாறுகிறான். இந்த முக்கண் காகத்திடம் உள்ள விசேசம் என்னவென்றால் பிறரது உடலுக்குள் புகுந்துகொண்டு செயலாற்றுவது, கடந்தகால நிகழ்ச்சிகளை, தற்காலத்தில் வெவ்வேறு இடங்களில் நடப்பவற்றை அறிவது ஆகியவை. எனவே இவர் ஒரு பிக்பாஸ். இவர் கண்களிலிருந்து யாரும் தப்பமுடியாது. கிட்டத்தட்ட ஞானத் தந்தை போல. 

சுஜாதாவின் சில கதைகளில் சிறுவயதிலேயே அவர் கொன்றுபோடும் அறிவுஜீவிகளை உலவவிட்டிருப்பார். எந்தத் துறை சார்ந்த விஷயமாக இருந்தாலும் அவர்களிடம் பதில் இருக்கும். சுஜாதாவே சகட்டுமேனிக்கு வாசித்துத் தள்ளியவர்தான். எனவே தனது உச்சமாக இப்படியான பாத்திரங்களை அவர் கற்பனை செய்திருக்கலாம். நான் வாசித்தவரை சுஜாதா கதைகளில் ஆகச்சிறந்த மனிதர்களாக இப்படியானவர்களை மட்டுமே அவர் காட்டியுள்ளார். இவை எல்லாமே வெறும் தகவல்கள். இன்று கணினிகள் இப்படியான மனிதர்கள் எவரையும்விட பலமடங்கு திறனுள்ளவை. இது அறிவுஜீவி என்பவர் யார் என்ற கேள்வியை எழுப்புகிறது. அறிவுஜீவி என்பவர் யாரெனில் தனது அறிவாற்றல் மூலம் சமூகம் குறித்த சுய பிரதிபலிப்பை வெளியிடுபவர், விமர்சனரீதியிலான சிந்தனை, வாசிப்பு, ஆய்வு, எழுத்து ஆகியவற்றில் ஈடுபடுத்திக் கொள்ளும் ஒருவர் என்று அகராதி சொல்கிறது. சுந்தர ராமசாமியின் ஒரு கதையில் எந்த கணக்கைக் கொடுத்தாலும் நொடியில் கூட்டி பெருக்கிச் சொல்லும் கணக்குபிள்ளை ஒருவர் இருப்பார். முதலாளி கால்குலேட்டர் வாங்கியதும் அவருக்கு மவுசு குறைந்துவிடும். பின்னர் அவர் நிகழ்ச்சிகளை ஞாபகத்தில் வைத்து முதலாளிக்கு நினைவூட்டி காரியதரிசியாக மாறிவிடுவார். 

நினைவுகள், தகவல்கள் இவற்றின் பெறுமதி என்ன? இவற்றுக்கும் ஞானத்துக்கும் ஏதாவது தொடர்புண்டா? அறிவுஜீவிக்கும் ஞானத்துக்குமான தொடர்பென்ன? அறிந்தவை அனைத்தும் நான் என்பதில் மையமிட்டு, பெருஞ்சுமையாக நம்மீது ஏறிக்கொள்கின்றன. ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் அறிந்ததினின்றும் விடுதலை என்ற புத்தகம் பரவலாக அறியப்பட்ட ஒன்று. விஷய ஞானங்கள் சுமையானவை. மனதை காலியாக வைத்திருப்பது ஆகப்பெரிய சவால். இதன் அர்த்தம் எதையும் கற்றுக்கொள்ளாமல் தவிர்ப்பது அல்ல. இப்படி தவறாக புரிந்துகொண்டு விஷய ஞானத்தைத் தவிர்த்த சிலரை நான் அறிவேன். சொன்னாலும் அவர்கள் புரிந்துகொள்ளும் மனநிலை கொண்டவர்களில்லை. மனம் என்பதே கடந்தகாலம்தான். அதில் தகவல்களும், நினைவுகளும் மட்டுமே உள்ளன. மனம் என்பது நானின் மையம். எனவே இந்தத் தகவல் குப்பைகளை மூளையோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். உணர்வுரீதியான தொடர்பின்றி இருக்கும்போது, நான் என்பதோடு அடையாளப்படுத்திக் கொள்ளாதபோதுதான் இவற்றுக்கு அர்த்தமிருக்கும். அவரே அறிவுஜீவியாகவும் இருப்பார்.

திரைப்படங்களைவிட Game of throne போன்ற மெகா சீரியல்கள் நம்மை தீவிரமாக ஆகர்ஷிக்கின்றன. முன்பு நண்பர் ஒருவர் கூறினார்: ’பெண்களுக்கு டிவி சீரியல்கள் போல, ஆண்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி’. இதையே இணையத் தொடர்கள் என்றும் சொல்லமுடியும். அடுத்து என்ன என்ற பரபரப்பை தக்கவைத்துக் கொண்டிருப்பது பீடிக்கும் விஷயங்களின் தாத்பரியம். தாக்கம் என்பதற்கும் பீடிப்பு என்பதற்கும் வித்தியாசம் உள்ளது. ஓர் இலக்கிய படைப்பு நம்மீது தாக்கத்தை ஏற்படுத்துமேயொழிய பீடிப்பதில்லை. இத்தகைய தொடர்கள் நம்மை பீடிக்கின்றன. முகநூல் பதிவர்கள் பலரும் முகநூலால் பீடிக்கப்பட்டவர்களே. மது, சூது, காமம், சுவை இவையனைத்தும் பீடிக்கும் தன்மை கொண்டவை.

பிடிப்புக்கும் பீடிப்புக்கும் ஓரெழுத்தே வித்தியாசம். பிடிப்பு தொடக்கம். பீடிப்பு அடுத்து வருவது. தசை பிடிப்பு என்று சொல்கிறோம். இங்கே பிடிப்பு என்பது இயல்பான ஓட்டத்தைத் தடுக்கும் ஒருவித இறுக்கம் ஆகிறது. பிடி என்பதற்கு பற்றுதல், கிரகித்தல், உறுதி, மனதிற் பதிகை என்ற அர்த்தங்கள் உண்டு. இத்தோடு படி என்பது ஏறுதற்குரியது என்பதையும் கவனத்தில் கொண்டு இந்த சொற்களுக்கிடையிலான நெருக்கத்தை உள்வாங்கலாம். அதேபோல பீடிப்பு என்பது பீடையுடன் தொடர்புடைய சொல். உருக்கம், துன்புறுதல், பாழாதல் போன்ற அர்த்தங்களை பீடிப்பு கொண்டுள்ளது.

புத்தன் எளிமையாய்ச் சொல்லிவிட்டான். ஆசையே அனைத்து துன்பங்களுக்கும் காரணம். பிடித்தத்தில் தொடங்கி பீடிப்பில் விட்டுவிடுகின்றன. பற்றறுத்தல்தான் எத்தனை கடினமானது.

பகிர்:
முந்தைய பதிவு
அடுத்த பதிவு
No comments

leave a comment