பேதமுற்ற போதினிலே – 5

உணர்தலும் அறிதலும்

Sense & Sensitive இரண்டுக்கும் மூலம் இலத்தீன் மொழியின் sentire (feel) என்ற சொல்லாகும். Sensitive என்ற வார்த்தைக்கு அர்த்தம், புறக்காரணிகளால் எளிதில் பாதிக்கப்படுதல், உணர்திறன், உணர்ச்சிகரமான, கூருணர்வு என கதம்பமான அர்த்தங்களைத் தருகிறது. ஒரு கட்சியின் அடிமட்டத் தொண்டன் உணர்ச்சிகரமானவன். மதம் ஜாதிரீதியான விஷயங்கள் சென்சிடிவானவை. சில ஊர்கள் சென்சிடிவானவை. கவிஞன் சென்சிடிவானவன். அதிக கூருணர்வுள்ள நபர் அதிக உணர்திறன் கொண்டவர். தன்னைச் சுற்றியுள்ளவற்றை பிரக்ஞையுடனோ, இன்றியோ கவனித்து அதனால் ஐம்புலன்களும் பாதிக்கப்படக் கூடியவராக உள்ளவர் இவர். 

புலன் என்ற சொல்லுக்கு sense என்ற வார்த்தை ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுவது முரணானது. Sense என்பதற்கு அகராதிப்படி அறிவுக்குகந்தபடி சிந்திக்கவும், செயல்படவும் உள்ள திறன்; விவேகம் போன்றவற்றைக் குறிக்கிறது. அறிவுத்தளத்தில் பக்குவப்படுத்தப்பட்ட உணர்வே அறிவு; பக்குவப்படுத்தப்படாத அறிவே உணர்வு என்றொரு கருத்து உண்டு. உணர்வுகளை பக்குவப்படுத்தி அறிவாக மாற்ற முடியுமா, அதனால் பலனுண்டா என்பது பெரிய கேள்வி. உதாரணமாக, யதேட்சையாக மேலே வந்தமரும் வண்ணத்துப்பூச்சி; மேகங்களற்ற வானில் பறக்கும் கொக்குக்கூட்டம்; பால்குடிக்கும் கன்றை நக்கிக் கொடுக்கும் பசு, அதன் கண்கள் இவற்றையெல்லாம் பக்குவப்படுத்தி அறிவாக மாற்றமுடியுமா? 

நாம் பொதுவாக அறிதல் நிலையையும் உணர்தல் நிலையையும் குழப்பிக் கொள்கிறோம். ஒரு குழந்தை நெருப்பு சுடும் என்பதை உணர்ந்து பின் அறிவாக மாற்றிக்கொள்கிறது. அறிவாக மாறவேண்டிய லோகாயத வாழ்வுக்கு அவசியமானது என்ற அளவில் உணர்தல்-அறிதலுக்கு மாறவேண்டிய தேவையுள்ளது. ஆனால் சில விஷயங்கள் உணர்தலாக மட்டுமே இருக்கத்தக்கவை. அறிதலாக மாறும்தோறும் அது அதன் அர்த்தத்தை நீக்கி சாயமிழந்து விடுகிறது. உணர்தலுக்கும் அறிதலுக்குமிடையே நுட்பமானதொரு கோடு உள்ளது. சென்சிடிவானவர் உள்ளே வெளியே சென்றுவர அனுமதிக்கப்படுகிறார். அறிதல் தளத்தில் மட்டும் உலவுபவருக்கு உள்ளே அனுமதியில்லை. 

பொதுவாக கோட்பாட்டாளர்கள் தங்களை படைப்பாளர்களுக்கு மேல் உயர்த்திக் காட்டிக்கொள்ள எல்லாவற்றையும் பொருண்மையாக மாற்ற முயல்வதுண்டு. Sense என்பதற்கும் Sensitivity என்பதற்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. உணர்வுப்பூர்வமாய் இருக்க இயலாதவர்கள், ஒப்புக்கொடுக்க இயலாதவர்கள், படைப்பை ‘sensitivity’-யோடு வாசிக்க இயலாதவர்கள், தங்களது மொண்ணைத்தனத்தை மறைத்து ஒரு பருந்துப்பார்வை என்ற பெயரில் மேலோட்டமாக கருத்துக்களை உருவாக்கிக் கொள்வதும், உணர்வுகதியான இடங்களைத் தவிர்த்து அதில் வழியின்றி வெளிப்பட்டிருக்கும் கருத்து நிலைகளை மட்டும் கோர்த்து கோட்பாட்டில் பொருத்திப் பார்ப்பதும் நகைச்சுவையானது.

படைப்பாளிகள் குறிப்பாக கவிஞர்கள் அதிகம் வாசிப்பதில்லை என்றொரு குற்றச்சாட்டு உண்டு. என்னைப் பொறுத்தவரை படித்துத் தீராத மிகப்பெரிய புத்தகம் ‘நான்’ என்பதுதான். படிப்பதனால் யாரும் படைப்பாளி ஆகிவிட முடியாது. மொழி ஞானம், இலக்கணம், கொஞ்சம் மரபிலக்கணம் தெரிந்தால் போதுமானது. ஆனால் அடிப்படையாக sensitivity தேவைப்படுகிறது.

இந்த சென்சிடிவிடி என்பதை ஒரு கோளாறாகவே நிறைய படைப்பாளர்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்கள். ஏதோவொரு விதத்தில் சமூகத்தில் ஒட்டமுடியாத தன்மை அவர்களை தங்களிடம் கோளாறு என்று நம்பச் செய்கிறது. படைப்பின் மூலம் அதை மீறி ஒருவித அங்கீகாரத்தை மீட்டுக் கொள்கிறார்கள்.

பொதுவாழ்வில் இப்படி எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களை சமூகம் மதிப்பதில்லை. ஒருவகையில் பிழைக்கத் தெரியாதவன்; வெள்ளந்தி என்ற கண்ணோட்டத்தில் இது பார்க்கப்படுகிறது. அறிவு எப்போதும் சென்சிடிவிடிக்கு எதிரானதாகவே உள்ளது. அதனால்தான் கடவுள் அந்த ஆப்பிளை உண்ண வேண்டாம் என்றார்.


-பாலா கருப்பசாமி  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.