இராவணத் தீவு – பயணத் தொடர் 4


லைக்கோவில் நோக்கி

( மாத்தளை அலுவிகாரை)

 

” உனக்கென விடுக்கும் சமிக்ஞைகளைத் தொடர்ந்து கொண்டே இரு ”

– ரூமி

விடுதலைக்கும் , அமைதிக்குமான சமிக்ஞை எதுவாக இருக்கக்கூடும். விடுதலை உணர்வென்பது எடையற்ற பறக்கும் தன்மையானதாக நிச்சயம் இருக்க வேண்டும். அப்படி எடையற்றதாக்க எதையெல்லாம் வாழ்வில் எடுத்துவைக்கப்போகிறீர்கள் என்பதில் இருக்கிறது சுவாரஸ்யம். ஏனெனில் வாழ்விலிருந்து ஒன்றை அவ்வளவு இலகுவில் இறக்கிவைக்க முடியாது என்று நினைக்கின்றேன். ஒரு விடுதலையுணர்விற்காகவும் , அமைதிக்காகவும், சில கேளிக்கைகளுக்காகவும் வாழ்வில் நீண்டதூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. உண்மையில் பயணங்கள்கூட அதற்கானவை தான்.

இலங்கையில் சில பௌத்த மடாலயங்கள் நிச்சயம் உங்களுக்கு ஒரு அமைதியான மனநிலையை ஏற்படுத்துவதாக இருக்கக்கூடும். அதை நான் நம்புகின்றேன். மாத்தளை அலுவிகாரைக்கு முதன் முதல் கடந்த வருடம்தான் சென்றிருந்தேன். அலுவிகாரை பயணத்திற்கான சில காரணங்கள் என்னிடம் இருந்தன. கண்டியை ஆண்ட கடைசி மன்னன் பற்றி விசித்திரமான பல தகவல்கள் இலங்கையில் உண்டு. பின்னர் மரணத்திற்குப் பின்னரான ஒரு வாழ்வு பற்றிய சில ஓவியங்கள் இந்த விகாரையில் இருப்பதாகச் சொல்கிறார்கள். வாய்வழிக்கதைகளாக இவைபற்றி எங்களுக்குச் சொல்லப்பட்டதுண்டு. இவ்வாறான காரணங்களுக்காகத்தான் அலுவிகாரை நோக்கி நாங்கள் சென்றுகொண்டிருந்தோம். அந்தக்கதைகள் பற்றிச் சொல்வதற்கு முன்னர் சில விசயங்களைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். முக்கியமாக அந்த நாள் பற்றியும் அந்த மலைப்பிரதேசம் பற்றியும் சொல்லியாக வேண்டும்.

கார்காலத்தில் மழை ஓய்ந்த நாளொன்றில் , பாறைகளை ஊடுருவிப் பட்டுத்தெறிக்கும் மிருதுவான வெயிலில் குகைக்கோவில்களைக் காணச்செல்வது, ஒரு அடர் மழைநாளில் கைகளின் இடுக்கில் ஒரு கதகதப்பான தேநீர் கோப்பையைத் தாங்கிக்கொள்வதுபோல அத்தனை சுவையானது. புத்தன் கோவில்களுக்கென்று ஒரு குகையமைதி எங்கிருந்து வருகின்றது என்று புரிவதேயில்லை. இலங்கை முழுவதும் புத்தமடாலயங்கள் தான் ஆனால் அதில் கட்டிடக்கலைக்கும் ஓவியங்களுக்கும் தனித்துவமான பாரம்பரிய புத்த கோவில்கள் குறிப்பிட்ட சிலவே இருக்கின்றன.  அதில் முக்கியமானது மாத்தளை அலுவிகாரை. மலையடிவாரத்தின் உச்சியில் அமைந்துள்ள அலுவிகாரை இயற்கையின் அழகு சேர்ந்த வசீகரமுடையது.

முதலில் கண்டியில் மாத்தளை நகரைப்பற்றி தெரிகிறபோது அந்த மலைதேசத்தின் வனப்பில் இயற்கையான பாறைகளைக் கொண்டு கட்டியமைக்கப்பட்ட அலுவிகாரைப்பற்றி புரிந்துகொள்வீர்கள். மாத்தளை எங்கு திரும்பினாலும் மலைகள், தென்னை, இறப்பர், மிளகு , ஆறுகள் என இந்தியாவின் கேரளாவைப் போன்றவொரு இடம். கண்டி நகரிலிருந்து அலுவிகாரை முப்பது கிலோமீட்டர் தூரம் இருக்கும்.  அலுவிகாரை மூன்றாம் நூற்றாண்டு அளவு பழமையானது.  மலையடிவாரத்திலிருந்து அதன் உச்சி வரை மடாலயங்கள், தாகபைகள், வழிபாட்டிடங்கள், குகைகள் எனப் பரவி இருந்தது.  இங்கு பௌத்தர்களிடையே விசேடமான சில நம்பிக்கைகள் இருந்தன. அதில் பிரதானமாக அரசமர வழிபாடு இருக்கிறது. மலையின் உச்சியில் உள்ள விகாரையில் இருந்த அரசமரத்திற்கு சிறிய குடத்தில் நீர் எடுத்துக்கொண்டு மேல்நோக்கிச் செல்வதைக் கீழிருந்து பார்க்கும்போது  கரும் பாறைகளுக்கு இடையில் வெள்ளைநிற உடையில் சிறு பூக்களின் கொடி காற்றில் அசைவதைப்போல இருந்தது. இந்த சிங்கள பௌத்தர்களின் அமைதியான பிரார்த்தனையைப் போல ஏன் இந்த நாட்டில் ஒரு வெண்மையான சமாதானப்பூக்கள் பூக்கவே இல்லை என்றிருந்தது.

இயற்கையான ஒரு மலையுச்சியில் சேர்ந்திருந்த கருமையான பாறைகளை குடைந்து இங்குள்ள குகைகளும் , விகாரைகளும் செய்யப்பட்டுள்ளன. ஒரு சமதரையில் ஒரேயிடத்தில் இல்லாமல் மலையின், கரும்பாறைகளின் உச்சிவரை நீண்டு செல்வதுதான் அலுவிகாரையின் சிறப்பாகப் பார்க்கிறேன். கீழே இருக்கிற வெண்ணிற தாகபையை வணங்கிவிட்டு , மேலே அந்த மலைக்கு ஏறத்தொடங்கும்போது இரண்டாவதாக இருக்கிறது சில குகைக்கோவில்கள். அமைதியும் வளாகத்தில் உள்ள பவளமல்லிகையின் மணமும், கரும்பாறையில் ஊதுவத்தி விளக்கீடு செய்ய முக்கோண வடிவில் ஏற்படுத்திவைத்த வேலைப்பாடுகள் தனித்த அழகுடையதாக இருந்தது. இங்குள்ள குகைச்சுவரில்தான் நாங்கள் தேடிவந்த ஓவியங்கள் இருந்தது. இந்த மலையில் ஒதுக்குப்புறமாக இந்த குகைக்கோவிலை சில முக்கியமான வேலைகளுக்காகத்தான் அமைத்திருந்தார்கள்.

கௌதம புத்தர் தான் வாழ்கிற காலத்தில் ஞானநிலையடைந்தபின் பல போதனைகளைச் செய்து வந்தார். உங்களுக்குக்கூட தெரிந்ததே. ஆனால் அவை செவிவழியாக மட்டுமே பரப்பப்பட்டும் பாதுகாக்கப்பட்டும் வந்தது. புத்தர் இறந்து மூன்று மாதங்களின் பின் அவை எழுத்து வடிவில் எழுதப்பட்டுப் பாதுகாக்கப்படுவதன் முக்கியத்துவம் உணரப்பட்டது. அவரின் சீடர்கள் அதைச் சூத்திர பிடகய , வினய பிடகய , அபிதர்ம பிடகய என்று மூன்றாகப் பிரித்து எழுத்தில் எழுதி வைத்தார்கள். கலிங்கத்தில் அசோகனின் ஆட்சியில் பௌத்தமதம் சார்ந்த நெருங்கிய தொடர்பு இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் இருந்தது.

இலங்கையை ஆண்ட தேவநம்பியதீஸ மன்னனின் ஆட்சியில் அசோகனின் ஆதரவில் இந்த குகையில் வைத்துத்தான் மகாவிகாரை வம்சத்தைச் சேர்ந்த பிக்குகளால் திரிபிடக நூல்கள் எழுதப்பட்டன. அதை இங்குள்ள குகையில் அரசனின் பாதுகாப்புடன் அந்த பிக்குகள் எழுதினார்கள். இதை எழுதிய காலத்தில் பலதரப்பட்ட அரசியல் நெருக்கடி, பஞ்சம், வறுமை, உயிராபத்து எனப் பல இருந்தது. இப்படிப்பட்ட இடம்தான் அலு விகாரை. இங்குள்ள இந்த குகையில் நீண்ட புத்தரின் சயன நிலை சிலையொன்று இருக்கிறது. அமைதியான முகபாவனையுடன் அது இருக்கிறது. அதைத்தாண்டி புத்தரின் சிஷ்யர்களின் சிலைகள், ஓவியங்கள் என்பன உண்டு. குகை முழுவதும் ஓவியம்தான். தாமரை அலங்காரமும், ஒருவித மஞ்சள் நிறமும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டிருந்தது.

இலங்கையின் ஓவியங்களைப் பற்றித் தேடுகிறவர்களால் இந்த அலுவிகாரையை  தவிர்க்க முடியாது, குகைக்கு நுழைவதற்கு முன் நுழைவாயிலின் மேலே வரையப்பட்ட  மலர்க்கொடி போன்ற ஒரு மஞ்சள்நிறப் பெண் ஓவியத்தை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இக்குகையின் சுவர்களில்தான் மரணம் பற்றிய சிறுகுறிப்புகள் அடங்கிய ஓவியங்களும் அதன் கீழே அதுபற்றிய விவரங்கள் சிங்கள மொழியில் எழுதப்பட்டிருந்தன.  இந்து சமயத்தில் கருடபுராணம் மரணத்திற்கு அப்பால் ஒரு வாழ்வை விவரிப்பதைப் போன்ற ஓவியங்கள். பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப வழங்கப்படுகிற தண்டனைகளாக அவை இருந்தன. கோவில்களில் பொதுவாக இப்படிப்பட்ட ஓவியங்களைக் காண்பதில்லை. இங்கு அனேகமான மடாலயங்களில் புத்தரின் வாழ்க்கை வரலாறு, அவர் செய்த அற்புதங்களை மட்டுமே ஓவியங்களாக வரைந்தார்கள். இங்கு இப்படிப்பட்ட திகிலூட்டும் ஓவியங்கள் குறிப்பாக இந்த இடத்தில் வரையப்பட்டதற்கு சில முக்கிய காரணிகள் இருக்கின்றன. அதைத் தேடி இன்னும் பயணிக்கவேண்டும் என்று நினைக்கின்றேன். இந்த குகையிலிருந்து மேலே சிறிது தூரம் சென்றால் பாறை இடுக்கில் ஒரு இடத்தில், அப்போது இலங்கை இராச்சியத்தில், குறிப்பாக கண்டி காலத்தில் நடைமுறையில் இருந்த கடுமையான தண்டனைகளை விவரிக்கிற சிலைகள் அமைக்கப்பட்டிருக்கிறது

பௌத்தத்தில் மரணத்திற்கு அப்பால் உள்ள வாழ்வு ஒரு தனிப்பட்ட ஆய்வாக இருக்கும். அதை உங்களின் பக்கம் விட்டுவிடுகிறேன். இந்த விகாரைகள் பற்றிய, ஓவியங்கள் பற்றிய கதையை எனக்கு அம்மம்மா சொல்லியிருந்தார். முழுக்க முழுக்க இந்த பயணம் தேடல் அவரால் நிகழ்ந்தது என்பதையும் சொல்லியாக வேண்டும். இலங்கைக்கு பௌத்த மடாலயங்களுக்கு வருகிற பயணிகளுக்கு சிலதை நான் சொல்லியாக வேண்டும். அதில் முக்கியமானது புத்தரின் உருவங்களை உடலில் டேட்டு இடுவதை, நவநாகரீக உடைகள், எதற்கும் இங்கு அனுமதியில்லை.  புத்தரின் பிரதிமைக்கு முன்னால் படங்கள் கூட எடுக்கவிடமாட்டார்கள்.  இப்படி நிறைய விசயங்கள் இருக்கின்றன.

இப்படி கொஞ்சம் நடப்பதற்கும், ஒரு மலையேற்றம் செய்யவும், ஓவியங்கள், வரலாறு, பௌத்தம் பற்றி அறிய விருப்பமுள்ளவர்கள் நிச்சயம் பார்க்கவேண்டிய இடம் மாத்தளை அலுவிகாரை. மலையின் உச்சிக்கு ஏறுவதை நிராகரித்துவிடாதீர்கள். மலைநாட்டின் அழகு மலையுச்சிகளில் மிகவும் மனதிற்கு நெருக்கமான காட்சிகளைத் தரும். இந்த அலுவிகாரையின் மலையுச்சியில் பச்சை மலைகளுக்கு இடையில் ஒரு பொன்புத்தனின் சிலை தெரியும். இயற்கையான பறவைகள், சூரியன் , மாத்தளை நகரின் எழில் என எல்லாமே ஒரு மறக்கமுடியாத உணர்வை நிச்சயம் தரும்.

தொடரும்..


  • நர்மி

4 COMMENTS

  1. சிறப்பான எழுத்து நடை ! அலுவிகாரைக்கு பயணம் செய்யவேண்டும்.

  2. உங்கள் எழுத்தும் அதை உருவகபடுத்த கொடுக்கப்பட்ட படங்களும் சிறப்பு.

    இந்த ஓவியங்கள் இப்போது எப்படி பாதுகாக்க படுகிறது?

    • ஓவியங்களை அவர்கள் சிறப்பாகவேபாதுக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.