செத்துப்போனவர்

தூங்குகிற மனிதனை ஐஸ் பெட்டிக்குள் ஏன் வைத்தார்கள் என்று பார்க்கிறவர்கள் பதறுகிற அளவுக்கு , எண்ணெய் தேய்த்துக் குளித்த அசதியில் அசந்து தூங்குவது போல் இருந்தார் அவர்.

ஒரே ஒரு வித்தியாசம்தான். தூங்கும்போது அவர் வாயைப் பிளந்து கொண்டு தூங்குவார். . . இப்போது பிளந்த வாயை மூடி வெள்ளைத் துணியால் கட்டியிருந்தார்கள். அப்படியும் இலேசாகப் பிளந்திருந்த உதட்டில் வெற்றிலை மடித்து வைத்திருந்தார்கள்.

கொஞ்சம் உரக்கப் பேசினால் அவரது தூக்கம் எங்கே கலைந்து விடுமோ  என்று சிலர் அஞ்சினார்களோ என்னவோ , ஐஸ் பெட்டிக்குப் பக்கத்தில்  குசுகுசுவென்று சத்தம் காட்டாமல் பேசிக் கொண்டார்கள்.

”நேற்று காலையிலேதானே பார்த்தேன்; பால் வாங்க வந்திருந்தாரே”, என்றும்பேப்பர் கடையிலே விகடன் வாங்கி அங்கேயே நின்னு படிச்சிட்டிருந்தாரேஎன்றும்பலரும் பேசிக் கொண்டிருக்கும்போதே ரோஜா மாலை ஒன்றைத் தூக்கியபடி அந்த பக்கத்து ஆட்டோ ஸ்டேண்ட்காரர்கள் வந்து விட்டார்கள். கும்பலாகப் போய் மாலை போட்டு மரியாதை செலுத்தி விட்டு வந்தார்கள்.

 “தங்கமான மனுஷன் சார்எங்க கிட்ட பேரமே பேச மாட்டாரு ….நீ என்ன பெருசா கொள்ளையடிச்சிட போறஅதிகம் போனா இருபது ரூபா மேல வாங்கிடுவியான்னு கேப்பாரு …..பெரிய ஆஸ்பத்திரிக்காரன்  கிட்ட நான் ஏமாறுறத விடவா உங்கிட்ட ஏமாந்துடப் போறேன்னு சொல்வாருஇத போல மனுஷன்லாம் கெடைக்க மாட்டாங்க சார் ”.

சரி….இப்படிப்பட்ட அந்த மகான் என்னதான் வேல செஞ்சாரு?

அவரு வேலைக்கின்னு போனது கிடையாதுங்க………சதாகாலமும் படிப்பு படிப்பு படிப்பு……படிப்புல அப்படி என்னதான் தேடினாரோ தெரியாது. . . . ……கால நேரம் பாக்காமெ எழுதிகிட்டே கெடப்பாரு மனுஷன்……சில நாள்ள சாயங்காலம் கொஞ்சம் பிராந்தி சாப்பிட்டிட்டு உக்காந்தார்னா…..ராத்திரி முழுக்க எழுதி விடிகாலை அஞ்சுமணிக்குத்தான் தூங்கியிருப்பாரு . . .ஒருநாள் நடுராத்திரியில எழுதிகிட்டு இருந்தவரை அக்கா போய் பார்த்தா குலுங்கி குலுங்கி அழுதுகிட்டிருக்காரு . . .அக்கா போய் கேட்டா எதுவுமே பதில் சொல்லல….மறுநாள் சாப்பிடும்போது அக்கா கேட்டுச்சு . . . அவர் எழுதிகிட்டிருந்த கதாபாத்திரம் திராட்சை தோட்டத்தில் சாகும் காட்சியை நெனச்சி பார்த்தாரம். அவரால தாங்க முடியாம அழுதாராம்…”

ஈமக் கிரியைகளுக்கான ஏற்பாடுகளைத் தலையில் போட்டுக் கொண்டு அலைந்து கொண்டிருந்த அவரது மைத்துனன் தன் அலுவலகத்திலிருந்து வந்திருந்தவர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தான்.

 ” காலமுச்சூடும் எங்கக்காதான் டீச்சர் வேலை செஞ்சு காப்பாத்திச்சு அவரை. …..ஆனா எங்கக்காக்கு அவர ரொம்பப் பிடிக்கும்….அவரோட சமையல்னா அது உசிர விட்டுடும்அவ்வளோ நல்லா சமைப்பாரு….அக்காவுக்கு பெருமாள் மேல பக்தி அதிகம்……ஆனா அவரு கடவுளாவது மசிராவதுன்னு உதாசீனமா பேசுவாருஆனாலும் அக்காவுக்கு அவர் மேல கோவமே வராதுங்க ….  அக்கா ரிடயர்மெண்டு வாங்கினப்பறம்கூட அதோட பென்ஷன்லதான் அவரும் வாழ்ந்தாரு…” அவரது மைத்துனன் தன் அலுவலக நண்பர்களிடம் தன் மாமனின் மகாத்மியத்தை உரக்கச் சொல்லிக் கொண்டிருந்தான்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த மைத்துனனின் அலுவலக நண்பர்களில் ஒருவர் சொன்னார்.“ எழுத்தாளரா……அதான் மொகத்தில களை தெரியுது.” இதைச் சொன்ன அசடு யாரென்று ஒரு சிலர் திரும்பிப் பார்த்தார்கள்.

ஒரு எழுத்தாளன் செத்துப் போவது என்பது அவ்வளவு ஒன்றும் பெரிய விஷயமாக அங்கே யாருக்கும் தெரியவில்லை….. பொறுப்பு இல்லாமல் பொண்டாட்டி சம்பாத்தியத்தில் 81 வயது வரை ஒரு மனிதன் வாழ்ந்து இருக்கிறான் என்றால் அவன் என்னத்த எழுதி  என்ன பிரயோஜனம்? கால் காசு சம்பாதிக்க முடியாதவன்லாம் பூமிக்கு பாரம்அவ்வளோதான் சொல்ல முடியும். எழுதறதையாவது எதையாவது சுவாரஸ்யமா எழுதித் தொலைச்சாரா? இல்லையே….இல்லாத ஊர் வம்பையெல்லாம் தன்னோட கதைல கொண்டு வந்து கொட்டிக்குவாரு. இப்படித்தான் ஒரு தடவை . . . .  ” கல்பனாவின் கனவுன்ற ஒரு நாவல் எழுதி வெளியிட்டாரு. எமெர்ஜென்சிய எக்குத் தப்பா திட்டி எழுதிட்டு உள்ளே தூக்கி வெச்சிப்புட்டாங்க……சரி எல்லாரும் செய்யிற மாதிரி ஒரு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து விட்டு வெளியே வருவாரா என்றால் அதுவும் இல்லை….” கிரிமினல்களே மன்னிப்புக் கேட்காத நாட்டில் ஒரு சத்தியத்தை எழுதியதற்காக நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் ? “, என்று மறுத்து விட்டார்.

அவரது பேரப்பிள்ளைகள் அவரை மதித்ததில்லை….50 பைசா சம்பாதிக்காத ஒரு கிழவனை மதிக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இல்லை. சரி அதுதான் போகட்டும்அவர் ஒரு மகா கலைஞன் என்று சிறுபத்திரிக்கை உலகிலாவது ஒரு பேச்சு அடிபடுவது உண்டா என்றால் அதுவும் கிடையாது….அவரை திட்டமிட்டு இருட்டடிப்பு செய்கிறார்கள் என்று புலம்புவதற்குக் கூட அவருக்கென்று சீடர்கள் யாரையும் அவர் வைத்துக் கொள்ளவில்லை….தனக்காக சீடர்களைக் கட்டுவதில் அவர் சமர்த்தர் இல்லை.

அது சரி, விருதுகள் ஏதாவது வாங்கியிருக்காறா ? ” விருதா ? …”  ஹஹஹஹா என்று அவர் உரக்கச் சிரிக்கும் சத்தம் நாலு வீடு தாண்டியும் கேட்கும். . விருதுக்கு நம்ம புஸ்தகத்தை நம்பளே அனுப்பறத போல மானங்கெட்ட பொழப்பு கெடையாதுன்னு  சொல்லுவார் . ஒரு எழுத்தாளனை அவன் ஒரு சிறந்த எழுத்தாளன்னு கண்டு பிடிக்க ஒரு இலக்கிய அமைப்புக்கு திராணி இல்லைனா அது வெட்கக் கேடு . . . சாதி சண்டைல பத்து பேரைச் சாகடிச்சுட்டு, ஊரான் சொத்தையெல்லாம் மிரட்டி எழுதி வாங்கும் அமைச்சர் கையால அரசாங்க விருது வாங்கற அளவுக்கு எழுத்தாளனுக்கு சொரணை கெட்டுப் போச்சா என்ன ? விருது கொடுக்கிற யோக்யதை இவங்களுக்கு எல்லாம் எங்கேயிருந்து வருது ? ”

அப்ப எந்த கோட்டைய பிடிக்கறதுக்காக இவர் சதா சர்வகாலமும் எழுத்தும் கையுமாக இருந்தார்?

அவர் அடிக்கடி சொல்லுவார்:

தெருவுல அலையிறானே பைத்தியக்காரன் . . .  கண்ட குப்பைய எடுத்து ரத்தினக் குவியலா நெனச்சுமூட்டை கட்டிக்கிட்டு அலைகிறானே….அவன்கிட்ட போய் கேளுங்கையா ஏண்டா இப்படி செய்றேன்னு….அதே போல்தான் நானும்……என்ன அவன் குப்பைய பொறுக்கறான்…….நான் வார்த்தைய பொறுக்கறேன்.”

முதல்நாள் இரவு 8 மணிக்கு இறந்து போனவரின் உடம்பு தாங்காது என்பதால் இன்று இரண்டு மூணு மணிக்கெல்லாம் இறுதி ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்து விட்டார்கள். பாடை கட்டுபவர்கள் வந்து விட்டார்கள். ஈமக்கிரியைகளைச் செய்ய பண்டாரமும் சங்கும் கையுமாக வந்து சேர்ந்தாச்சு. எழுத்தாளரின் மகன் மீசை எடுத்து ஈரத்துணியோடு வந்து நின்றாயிற்று. மைத்துனர் முன்னின்று எல்லா சடங்குகளும் சரியாக நடைபெறுகிறதா என்று மேற்பார்வை பார்த்தபடி நிலை கொள்ளாமல் உள்ளேயும் வெளியேயும் அலைந்து கொண்டிருந்தார்.

வாசலில் மரப் பெஞ்சைப் போட்டு விட்டார்கள். அவரைச் சுற்றி அமர்ந்திருந்த பெண்களெல்லாம் புலம்ப உடம்பை தூக்க முடியாமல் தூக்கி வந்து கிடத்தியாயிற்று. அவரது மனைவி தலை நிறைய பூவும் பொட்டுமாய் வந்து உட்கார்ந்தார்கள்.

அவருக்கு குடம் குடமாய் நீர் ஊற்றி சுத்தம் செய்தாகிவிட்டது..பண்டாரம் நல்ல கணீர் குரலில் பாடத் தொடங்கி விட்டான். நாமத்தை நன்றாகக் குழைத்து அவர் நெற்றியில் சாத்தினான். நாமம் அவரது நெற்றியில் பளீரெனத் துலங்கியது

தூரத்தில் மரநிழலில் நின்று கொண்டிருந்த பரம வாசகர் ஒருவர் முகத்தைத் திருப்பிக் கொண்டார். “என்னங்க இது? இந்த அநியாயத்தைக் கேட்க ஆளில்லையா?….தன்னோட கதை முழுக்க கடவுள் இல்லைனும்மதங்களும் கோயிலும் மக்கள ஏமாத்துதுன்னும் சலியாது எழுதி வந்த எழுத்தாளன் செத்துப் போனா நாமம் போட்டுடுவீங்களாயா ? ” சவப்பெட்டிஎன்ற தனது சிறுகதை ஒன்றில் செத்த பிறகு ஒரு மனிதனுக்கு நேரும் அவமானங்களை நெஞ்சிலே ஆணி இறங்குற மாதிரி எழுதி இருந்த புரட்சிகர எழுத்தாளனுக்கு செத்த பிறகு ஏன்யா நாமம் போடுறீங்கன்னு கேக்க இங்க ஒரு வாசகன் கூடவா  இல்லாம போயிட்டான் ?” 

 எனக்குப் பிடிக்காத மதச் சின்னத்தை ஏண்டா என் நெத்தியில போடறீங்கன்னு கேட்க எழுத்தாளர் பாடையிலிருந்து எழுந்து வர மாட்டார் என்ற ஒரே தைரியம்தான் எல்லோருக்கும்.

லட்சிய வெறியோடு அவரது புத்தகத்தை வெளியிட்டு கைக்காசை இழந்த பதிப்பாளரும் அங்கே வந்திருந்தார். மாநிறமாய் டயாபடீசில் அடிபட்டவர்போல இளைத்து பலகீனமாய்க் காணப்பட்டார் அவர். கண்கள் அழுது அழுது சிவந்திருந்தன. தனக்குப் பக்கத்திலிருந்த 30 ஆண்டுகளாக எழுதி வரும் மூத்த துணுக்கு எழுத்தாளர் ஒருவரிடம் மனம் விட்டுப் பேசிக் கொண்டிருந்தார்.

தமிழ் நாட்டோட சல்மான் ருஷ்டீ சார் அவருஅவரோட நாலு புஸ்தகத்தையும் நாந்தான் வெளியிட்டேன்….ஒவ்வொன்னும் 800 பக்கம்….மகா காவியம் சார் ஒவ்வொன்னும்….தமிழனோட மூட நம்பிக்கையையும், மதம்ன்ற பேர்ல இங்க நடக்கிற முட்டாள்தனத்தையும் கிண்டலடிச்சு  சிரிக்கறதுல அவர அடிச்சிக்க முடியாது சார்…..  இதெல்லாம் யாருக்கு சார் தெரியும்?…நான் சொல்றேன் பாருங்க….. எழுத்தாளனோட ஆன்மாவைப் புரிஞ்சிக்காத நாட்டில புல் பூண்டு கூட மொளைக்காது சார்.”

அவர் கொடுத்த சாபத்தில் அங்கே இஷ்டத்துக்கும் பச்சைப் பசேலென வளர்ந்திருந்த புற்களெல்லாம் ஏனோ கருகிப் போனது போலத் தெரிந்தது.


-இந்திரன்

6 COMMENTS

  1. கன கச்சிதமான கதை. இந்திரன் சாரின் இன்னொரு பரிமாணம். இது அபூர்வமாக வெளிப்படும் இனி அடிக்கடி வெளிப்படவேண்டிய அவசிய பரிமாணம். அருமை.

  2. அருமையான கதை! நடப்பின் விமர்சனம்!

  3. செத்துப்போனவர் என்ற சிறுகதை வாசிக்க மிகவும் எளிமையாக இருந்தது. எழுத்தாளருக்கு சாவிற்கு பின் நேரும் சூழ்நிலையை புரிந்து கொள்ள முடிந்தது. அவரின் வீட்டார்கள் எழுத்தாளரின் படைப்புகளை படிக்கதாவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். ஒருவேளை அவரது எழுத்துக்களை படித்தும் அவரை புரிந்து கொண்டவர்களாக இருந்திருந்தால் எழுத்தாளரின் கொள்கைக்கு முரனான சடங்குகளை அவருக்கு செய்யும் அவலம் நேர்ந்திருக்காது. இன்னும் பலரின் மனதில் எழுத்தாளர் என்றாலே பிழைக்கத் தெரியாதவன், தண்டம், ஊர் வம்பை விலைக்கு வாங்குபவன், நடைமுறை தெரியாத ஆள் என்றெல்லாம் நினைக்கும் போக்கும், பல நேரங்களில் இதை அறிவுரையாக சொல்லும் போக்கும் இருக்கத்தான் செய்கிறது என்பதை இக்கதை உணர்த்தியது. அருமையான கதை…

    நன்றி…
    தோழமையுடன்
    மு.தமிழ்ச்செல்வன்

  4. அருமையான , ஆதங்கக் கதை இதில் படைப்பாளி ஐயா இந்திரன் அவர்களின் ஆதங்கத்தைப் பார்க்க முடிந்தது , படைப்பாளி எது சமூகத்திற்குத் தேவை எனப் படைக்கிறானோ அதை அச்சமூகம் நிராகரித்த படியே உள்ளதை எடுத்து வைக்கும் கதை இது .. ஆவலைத் தூண்டி ஆழமானக் கருத்தைச் சொன்னக் கதை ஐயா இந்திரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ..

    கமல்ராஜ் ருவியே

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.