தஞ்சாவூர் பைத்யம்


காலைப்பனி விழும் மூன்றரை மணி விடியல் வேளையில் , என் சைக்கிளை எடுத்துக்கொண்டு புறப்பட்ட போது அம்மா கடிந்து கொள்வது பின்னால் கேட்டது. கார்த்தாலயே ஆரமிச்சுட்டான்! பைத்யம் விடுதா? சுதேசமித்ரன் வாங்க. இத்தனை காலையிலேயே போகணுமா என்ன? பைத்யம்! பைத்யம்!

சில வாரங்களில் இரவே புறப்பட்டு தஞ்சாவூர் ஜங்ஷன் போய்விடுவேன். காலை நாலுமணி போட் மெயிலில் வரும் சுதேசமித்ரன் வாரபதிப்பு இதழை வாங்கி அங்கேயே தெரு ஓரத்து மெர்க்குரி விளக்கினடியில் இருந்து தி.ஜானகிராமன் எழுதும் “மோகமுள்” தொடரை அந்த வாரத்து பகுதியைத் தொடரும் என்ற வரி வரை படித்துவிட்டுத்தான் புறப்படுவேன் நான்.

பல நாட்கள் தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷன் பெருமூச்சு விடுவதாக அவதானித்திருக்கிறேன். அந்த சிமண்டு தளத்தில் காலைவேளையில் – சுதேசமித்திரன் ஏஜெண்ட் பரசுராமய்யர், ஹிண்டு ஏஜெண்ட், கல்கி ஜயராமன், விகடன் சுப்ரமணியன் எல்லாரும் அந்தக் காலைக்குளிரில் பத்திரிகைக் கட்டுகளை ரெயில் வண்டியிலிருந்து இறக்கி, பையன்கள் மூலமாக, உள்ளே வரும் நாகப்பட்டினம், மன்னார்குடி, பட்டுக்கோட்டை லயன்களுக்கு பஸ்ஸில் பத்திரிகைக் கட்டுகளை வீசி எறிந்து அனுப்பும் லாவகமே லாவகம்!

1955-வாக்கில் தஞ்சாவூர் மணக்கும்! இப்போதுள்ளது போல் அல்ல, விடியற்காலை என்பது மூன்று மணி. ஆனந்தாலாட்ஜ் ஹோட்டலில் பூஜை 4 மணிக்கு. சாம்பிராணியும், ஊதுவர்த்தியும் மணக்கும் பூஜையும், முந்திரிபருப்பு தாளித்து மிதக்கும் அபாரமான சாம்பாரும், தனித்தனியாக மிளகாய்ப் பொடியும், எண்ணையும், இட்டிலியும், ரவாதோசையும் பெரிய அண்டாவில் மணக்கும் கொத்ஸும். ஆஹா! எத்தனை ருசி! எத்தனை மணம்! ஐயர் குளித்து முழுகி, குறைந்தது ஐம்பது சுவாமி படங்கள் தொங்கும் பூஜை அறையில் உள்ளே இரும்புப் பெட்டி எதிரே, கல்லாவில் சில்லறை காலை நாலு மணிக்கே மணக்க மணக்க மேஜையில் சிதறும். நீளமான இருபுறம் வாசனாதி உருண்டைகள் வரிசையாய் மிதந்து மணக்கும். ஆனந்தா லாட்ஜின் இருபுறம் வாசனாதி திரவியசாலை கடைகள், பூக்கடைகள், மாலைகள் கட்டுகிறவர்களின் மணம். கதம்பம் தயாராகும் ஆச்சர்யம்! நூறு வகை பூக்களும் மூலிகைகளும் வைத்து, வேறு எங்கும் மணக்காத தஞ்சாவூர் கதம்பம் ஆச்சர்யமாய் சுகந்தம் வீசும். சிறிய பெரிய வெற்றிலை சீவல் கடைகள். பன்னீர் புகையிலையும், நெய்யில் வறுத்த ஸ்பெஷல் சீவலும் தஞ்சாவூர் வண்ணாத்தி புருஷன் கடை கவுளி வெற்றிலையும் மணத்துக்குச் சொல்லவா வேண்டும்?

காலை நேர இருள் பிரியுமுன் ஆனந்தா லாட்ஜ் ஹோட்டல் பின் கட்டில் அருவி போல தண்ணீர் கொட்டும். ஏராளமான மனிதர்கள் எந்த செலவும் செய்யாமல் பைப்புகளின் இரையும் தண்ணீரில் தலை கொடுத்து சொகுசாய் குளித்து லிக்னோலியா சோப்பு போட்டு குழைத்து மணக்க குளிப்பது ஆச்சர்யம்! ஹோட்டலா அது தர்மசாலை மடமா?

சோப்புகளுக்குக் கூட அன்று அத்தனை வாசம்! வீடு இல்லாதவர்களா இங்கே குளித்தார்கள் இல்லையே! அது ஒரு சுகமான சம்பிரதாயம். மூன்று மணி ரயிலுக்கும் நாலுமணி போட்மெயிலுக்கும் வருகிற ஜனம் நேராக ஆனந்தா லாட்ஜின் மணம் பிடிக்கத்தான் வருவார்கள். ஹோட்டலின் உள்ளேயே ஒரு வினாயகர் ஏகப்பட்ட மாலைகளுடன் பூஜை மணக்க விமர்சை பூண்டிருப்பார். ஹோட்டலா அது? கோவில்! இருபுறமும் வரிசை வரிசையாக ஜனம் உட்கார்ந்து அபூர்வமான ரவாதோசையும், இட்லியும், பூரி மசாலுமாக சாப்பிடும் ஜனங்களைச் சாப்பாட்டு ராமர்கள் என்று சொல்லலாம்தான். ஆனால் அந்த மணமும் ருசியும் இன்று எத்தனை பேருக்கு முதலில் புரியும். அது வியாபாரம் அல்ல ஒரு முழு வாழ்வின் மலர்ச்சி!

ஆனந்தா லாட்ஜ் ஐயர் அப்போ ஜெயித்துக் கொண்டே இருந்த காலம், மணந்து மலர் வீசிய தஞ்சையின் சுகந்தம். ஆன்மீகமாய் மக்களை வளர்த்த காலம்! நானும் அப்போதெல்லாம் இச்சுவைகளில் தோய்ந்த நேரம். பெரிய பட்சிகளின் கூச்சல்! நாலுமணி போட் மெயிலில் வந்த ஜனங்களில் பலர் மாட்டுவண்டி ஏறிப் பாய்ந்து கடகடத்து செல்லும் சிமெண்ட் ரோட்டில் பைதா உருளும் ஓசைகள் இடையே நான் மட்டும் வெளியே ரயில்வே ஸ்டேசன் வெளியில் சிமண்டுத் தளத்தில் உட்கார்ந்து சுதேசமித்ரன் ஐயரிடம் அவசரம் அவசரமாய் வாங்கிய வாரஇதழ் பிரித்து “மோகமுள்” தொடரை பதைபதைப்புடன் படிக்கிறேன். நேரம் போவது தெரியாமல் படித்துக் கொண்டே இருக்கிறேன். விடிகிறது. என்ன எழுத்து! ஆஹா! தஞ்சாவூர் மணக்கிறது. அந்த நாவலிலும் எப்பேர்ப்பட்ட கதாபாத்திரங்கள். அடடா! என்ன குணச்சித்திர வார்ப்பும் தத்துவ நிறைவும் ஆன்மீகமாய் வரலாறாய் தஞ்சை ஐதிஹ்யமாய் சடங்காய் சம்பிரதாயமாய் கிராம்யமாய் எப்படி வேண்டுமானாலும் மோகமுள்ளை ரசித்து பிரித்துப் பார்த்து சந்தோஷிக்க முடியுமே! தேர்ந்து கடைந்தெடுத்த சிலைகள் போன்ற பாத்திரங்கள் இன்று வரை அதன் புதுமை மணம் மாறவேயில்லை! தமிழ் நாவல் இலக்கியத்தின் சாசனச் சின்னமாக செதுக்கப்பட்டு விட்ட கலைப் பொருள்களின் இன்பம் எனக்கு நாற்பது வருடங்களுக்கு முன்பே அதன் வழியாத இலக்கிய இன்பசுகம் புரிந்துவிட்டது. ஓயாது அந்த இலக்கியச் சுனையில் மூழ்கியும் தஞ்சை மணம் எனக்கு கற்றுத் தந்தது.

பூச்சந்தைக்கு அம்பாரம் அம்பாரமாக போகும் செவ்வந்திப்பூ. பூமூட்டைகள் வெள்ளை, இருவாட்சி, தஞ்சாவூர் ஜாதிப்பூ, முல்லையரும்பு – மலைப்பழங்கள், பூவன், ரஸ்தாளி மணங்கள் எல்லாம் என்னைச் சூழ்ந்து அந்தக் காலை நேரம் திணறடித்தன. கசங்கிய ஜரிகைப் புடவைகளும் கலங்கிய சடவு நீங்காது ரயிலிலிருந்து இறங்கும் ப்ராமண ஸ்திரிகளும், மன்னார்குடி போகும் கார்கோகியாஸ் பஸ்! அதற்காக ஓடி ஜரிகைத் துப்பட்டாவும், ஜரிகை அங்கவஸ்திரமும் மணக்கிற ஜவ்வாது புனுகு மணம் பரப்பும் மைனர் இளைஞர்கள் முன்னும் பின்னுமாக கார்கள் எல்லாம் கடந்து போனாலும் தெருஓரம் நான் உட்கார்ந்து மோகமுள்ளில் ஆழ்ந்து ரசித்துப் படித்துக்கொண்டிருப்பேன். எத்தனை நிறைவான ஆனந்தம் அது! அதற்குள் முடிந்து விட்டதே என்று தொடரும் வார்த்தைக்குப் பின்னால் இன்றும் இருப்பது போல் தேடுவேன். மறுபடியும் ஒருமுறை முதலிலிருந்து படிக்கவும் ஆரம்பிப்பேன்.

யாரோ என் தோளைத் தொடுகிறார்கள். தட்டி உலுக்குகிறார்கள். “ப்ரகாஷ்! ப்ரகாஷ்! இஞ்ச பாருங்க!” என்ற குரல் வேறு. திரும்பிப் பார்க்கிறேன்! அசந்தே போகிறேன். என் அருகே நிற்பது அதே மோகமுள் எழுதும் ஜானகிராமன் சார்தான்! ஆச்சர்யம் தாங்காமல் வாங்க சார், வாங்க! என்று பதஷ்ட்டத்துடன் எழுகிறேன். ரயிலில் வந்த களைப்புடன் என்னைப் பார்க்கிறார் தி.ஜானகிராமன். “வீட்ல போயி படிச்சுக்கக் கூடாதோ? இஞ்சயே படிக்கணுமாக்கும்?” என்றார் தி.ஜானகிராமன். “அதுவரைக்கும் பொறுக்க முடியாது சார்! அபாரமா இருக்கு. அற்புதமா எழுதறீங்க! தமிழ் இலக்கியம் உள்ள வரைக்கும் மோகமுள்ள மிஞ்சமுடியாது யாராலியும்!” என்றேன் நான்.

“அட, அப்படி ஒண்ணுமில்லே! உங்களை எல்லாம் இப்டி கெடுத்திருக்கேன். அப்பா நல்லா இருக்காரா? நீங்க சௌக்யந்தானே?” என்றார். “மோகமுள் பெரிய சக்ஸஸ் ஆகும் சார். பல பேரை மண்ணைக் கவ்வ அடிக்கிற எழுத்து! அபாரம் போங்களேன்!” என்றேன் பரவசத்துடன். “அதெல்லாம் ஒண்ணுமில்லை. ஏதோ எனக்கு எட்டினது! அதுசரி வாங்க ஆனந்தா லாட்ஜூக்கு போய் ஒரு ரெண்டு இட்லிம், காபியும் சாப்பிடலாம். ராத்திரி மெட்றாஸ்ல சாப்பிடலை, பசியா வேற இருக்கு” என்றார் தி.ஜானகிராமன்.

ஓவியம் : சுந்தரன்

“இப்ப எங்க? கீழவிடையலுக்கல்லே, தேவங்குடீக்கா?” என்றேன். “மொதல்ல சாப்பிடணும். அப்பறமா மன்னார்குடி! நாளை மறுநாள் மெட்றாசுக்கு திரும்பிப் போயாகணும்.” என்றார் தி.ஜா. அவரையே உற்றுப் பார்த்தபடியே இருவருமாய் ரயில்வே ஜங்சன்விட்டு வெளியே வந்து ஆனந்தா லாட்ஜை நோக்கி நடந்தோம். கையில் ஒரு தோல்பை! பூக்கடையில் தண்ணீர் தெளித்துக் கோலம் போட்டுக் கொண்டிருந்தார்கள். மார்கழிப் பனி பறங்கிப் பூக்களும் செம்மண்கரையிட்ட கூலிப் பெண்களானலும் ரசனை மணக்கும் பழக்கங்களும் வியக்க அடித்தன.

ஆனந்தா லாட்ஜ் கம்பி அழிகளுக்குள்ளே ஆச்சர்யமாய் விரிந்தது. “வாங்கோ… வாங்கோ…” என்றார் ஐயர் கல்லாவில் வெற்றுடம்பும் திருநீற்றுக் கோலமாய். “சௌக்யம்தானே? அம்மா சௌக்யமா” என்றார் தி.ஜானகிராமன். ஏதோ இருந்திண்டிருக்கா என்றார் ஐயர். பக்கத்திலிருந்த இலையில் நெய்ப் பொங்கலும், அவியலும் மினுமினுக்க பாயும் கொத்ஸுமாய் வெண்ணை உருண்டைகளை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தார் ஒருவர். சுத்தமான தஞ்சாவூர் சமையல் மணம். கலப்பற்ற நெய் பக்ஷணம் அலமாரியில கொண்டுவந்து குவித்தார் பஞ்சு ஐயர். ரெண்டு டிகிரிக் காப்பி என்று கூக்குரல் கொடுத்தபடி உள்ளே போனான் ராஜப்பா.

நானும் ஜானகிராமனும் ஹோட்டல் பின்னால் போய் அருவியாய் விழும் மோட்டார் தண்ணீரில் குளித்தோம். பட்டை பட்டையாக விபூதி அணிந்து வினாயகர் முன்னால் தோத்திரம் சொன்னார் ஜானகிராமன். தோள்பையிலிருந்து காஞ்சீ பீடம் குங்கும் பிரசாதம் எடுத்து வைத்து எனக்கும் கொடுத்தார். நல்ல பசி! உள்ளே வந்தோம். டேபிள் எதுவும் காலியில்லை. நீளமான ஹாலில் கடைசி வரை நடந்தோம் இடம் இல்லை. ஐயர் சொன்னார் “இப்படி உக்காருங்கோ! கல்லாவின் பக்கத்தில் கீழே இடது புறம் இருவர் உட்கார இடம் “டேய் பஞ்சாமி! நம்ப சாருக்கு இட்லியும் முளகா பொடியும், எண்ணையும் கொண்டா” என்று கத்தினார்.

ஆஹா! பசுமையான அகலமான வாழை இலை நறுக்கு! எங்கள் முன்னால் விழுந்தது ரெண்டு இட்லி. மல்லிகை வெண்மை, பசுமை இலையில் ஆச்சர்யம்! கறுப்பு சிவப்பான அரைகுறையாய் நுணுங்கிய மிளகாய் பொடி! தனியாக அலுமினிய கிண்ணத்தில் எண்ணை மணக்க வெள்ளை உருண்டை மூன்று! ஆவி பறக்கிறது. சாம்பாரில் ஒரு கை முந்திரிப்பருப்பும் குண்டுமிளகாயும் மொதக்க வெங்காயம் பளபளக்கும் வாசனை சுகம்! பசி இரட்டிப்பாகியது. தி.ஜானகிராமன் ரசித்துச் சாப்பிட்டார். அடடா! இது மாதிரி எஞ்ச கெடைக்கும்? என்ன சுத்தம்! என்ன அழகு! என்றார். என்ன ருசி! பஞ்சான அந்த இட்டிலிகளின் மென்மை இன்று எங்கும் இல்லை.

“ராஜா பாவா சாஹிப் காலத்திலேயே தஞ்சாவூரில ஹோட்டல் வந்துடுத்து தெரியுமோல்யோ? கேள்விபட்டிருக்கேளா இல்லியா?” என்றார் ஜானகிராமன். இந்தியாவில் ஹோட்டல் நம்மவன்தான் மொதல்ல ஆரமிச்சான். மஹானுபாவன் நல்ல ருசி ஆஹா… தஞ்சாவூர்ல ரொம்பபேரு வீட்ல டிபனே காலையில செய்யிறதே நூறு வருஷமா இல்லியே! மேலவீதியில் மொட்டை ஐயர் கிளப்பு, எல்லையம்மன் கோயில்தெருவில் வெங்கச்சய ஐயர் சரவணபவன், ஐயங்கடையில ஷண்முகானந்தபவன், காவிரிக் கரையில அம்பிஐயர் கடை, புதாற்று மேட்ல சாம்பசிவய்யர், கீழே அலங்கத்துல பாலாசாமி ஐயர் கிளப்பு! அடடா, எல்லாம் இப்பவும் போடுபோடுன்னு போட்டுகிட்டு இருக்கே!” என்றார் ஜானகிராமன்.

செம்மையான நிறத்தில் ரவா தோசைகள், எங்கள் இலையில் விழுந்தது. காப்பி சாப்பிடும் போது அவரை ஐயர் கேட்டார்… “நன்னா இருந்துதோ? ஏதோ செய்யறோம். நல்ல பழைய அரிசி கிடைக்கமாட்டேங்கிறது! ராம்ராம்!” – என்றார் ஐயர். இருவருமாய் வெளியே வந்தோம். திருப்தியான ஏப்பம் இரண்டு பிரிந்தன. வாசனை சீவலும், வெற்றிலையும் போட்டுக்கொண்டோம். மோகமுள் பற்றிய என் கனவுகளை அலப்ப ஆரம்பித்தேன். கியாஸ் பஸ் ரைஸ்ரைஸ் என்ற சப்தத்துடன் கிளம்பிக் கொண்டிருந்தது. ஓயாமல் நான் மோகமுள் பற்றியே பேசிப் புகழ்ந்துகொண்டே இருநதேன். ஜானகிராமன் சிரித்தார். மன்னார்குடி பஸ் ஏறினார். “அநியாயத்துக்கு கெட்டுப் போயிருக்கிறீர்கள். அப்படி ஒன்றும் பிரமாதமான நாவலை நான் எழுதிவிடவில்லை” என்றார் அடக்கத்துடன். கூர்மையான நாசி. எடுப்பான நிறம் சாதாரணமான தோற்றம். ஆனாலும் எனக்கு தெய்வமே என்னிடம் வந்தது போல் பரவசம்!

இன்று ஆனந்தா லாட்ஜூம் இல்லை. தஞ்சையின் பரிசுத்தமான வாசனைகளை அறிவாரும் இல்லை. ஜானகிராமனும் இல்லை. ஆனந்தா லாட்ஜ் ஐயர் தொழிலில் தோற்றுப்போனார். தர்மிஷ்ட்டர் நல்ல தர்மர். அழிந்தது ஹோட்டல்தானே எனறு இன்னும் எண்ண முடியவில்லை. தஞ்சாவூரின் சுவைகள் தூர்ந்து விட்டனவா? ஆனந்தா லாட்ஜ் மூன்றுமுறை முழுகியது. கடைசியில் எழும்பவேயில்லை. அதைப் போலவே, நாலா புறங்களிலும் சுவை பரப்பிய ஐயர் கடைகள், ஹோட்டல் கிளப்புகள்; இந்த ஐம்பது ஆண்டுகளில் ஒவ்வொன்றாக மூடப்பட்டன! புதிய ஹோட்டல்கள் வந்தாலும் அவை வேறு இவை வேறு. ஜானகிராமன் மோகமுள் நாவலுக்குப்பின் தஞ்சாவூரை வைத்து மலர்மஞ்சம் எழுதினார். உயிர்த்தேன் வரை பதினைந்து நாவல்கள் எழுதினார். அற்புதமான எழுத்து, பொறாமைப் படவைக்கும் அற்புதங்கள். அபூர்வமான தஞ்சாவூர் வாழ்க்கை! என்றாலும் மோகமுள் மோகமுள்தான். இன்று சாத்தியமா? இன்றும் சாத்யம்தான் எனக்கு!!!

வியாபாரம் மலிந்துவிட்டது. பொறாமை பூத்துவிட்டது. தஞ்சாவூர் வாழ்வின் பண்பாடு மறைந்து புதுப்புது வாடைகள் வீசுகின்றன. ஜானகிராமன் போய்ச் சேர்ந்துவிட்டார். அற்புதமான ரசிகராய் வாழ்ந்த அவர் மட்டுமல்ல அவர் வாழ்ந்த வாழ்வின் சாரங்களும் இன்றில்லை. ஆனால் மோகமுள் இருக்கிறது. எத்தனைக் காலம் ஆனாலும் அது அழியாது. தன் பண்பை, தஞ்சாவூரின் விளைச்சலை, சங்கீதத்தின் சாரத்தை மோகத்தின் வேகத்தை அப்படியே தாக்குப் பிடித்து எதிர் வரும் சந்ததிக்கு மாற்றிக் கொண்டே இலக்கிய வாழ்வை நிலைநிறுத்தும். ஆம். ஜானகிராமனின் தஞ்சாவூர் இன்றும் அதில் என்றுமாய் நிலைபேறு பெற்றுவிட்டது.

இன்று நல்ல ருசியான சாப்பாட்டுக்கு சென்னையில் சரவணபவனை நோக்கி காவடி எடுக்கும் பலரைப் பார்க்கப் பரிதாபமாய் இருக்கிறது. அவர்களைக் குற்றம் சொல்லவில்லை. ஆனந்தா லாட்ஜ் செய்ததும், தி.ஜானகிராமன் சாதித்ததும், தஞ்சாவூர் கதம்ப மணம் போல் வெற்றி தொடரவில்லையே என்று தோன்றலாம். இன்று இந்த உயர்ந்த சுவையும், மணமும், பண்பும் வியாபாரமாகிவிட்டது. அன்று இவை வியாபாரம் அல்ல. இலக்கியம், வாழ்வு, ஜீவன் ததும்பும் உயிரின் தேவை. ஜானகிராமன் கடைசி வரை இவைகளை உபாசித்தபடியேதான் போனார்.


-தஞ்சை ப்ரகாஷ்

[mkdf_highlight background_color=”black” color=”yellow”]குறிப்பு[/mkdf_highlight] “தஞ்சை நாடோடிக் கதைகள்” எனும் சிறுகதைத் தொகுப்பில் தஞ்சை ப்ரகாஷ் எழுதிய முன்னுரை இது.  கனலி -யின் ”தி.ஜானகிராமன் நூற்றாண்டுச் சிறப்பிதழு”க்காக தட்டச்சு செய்யப்பட்டு  பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

[mkdf_highlight background_color=”black” color=”yellow”]நன்றி [/mkdf_highlight] : டிஸ்கவரி புக் பேலஸ்

Feature Image Art Courtesy : Kungumam Weekly Magazine


3 COMMENTS

  1. ஐயா நான் அந்த நாவல் படிக்க வாய்ப்பு இல்லை ஆனால் நீங்கள்சொல்வத்தை பார்த்து படிக்க ஆசை தூண்டுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.