Homeநூல்கள் அறிவோம்தீக்கொன்றை மலரும் பருவம்

தீக்கொன்றை மலரும் பருவம்

அபுபக்கர் ஆடம் இப்ராஹிம்: அபுபக்கர் நைஜீரிய எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர். சிறுகதைகளும் சில நாவல்களும் எழுதிய அபுபக்கரின் சிறந்த படைப்பாக இந்தப் புத்தகம் விளங்குகிறது.

லதா அருணாச்சலம்: ஆங்கில முதுகலை பட்டம் பெற்ற லதா அருணாச்சலம், நைஜீரியாவின் லாகோஸ் நகரில் பதினான்கு வருடங்களுக்கு மேல் வாழ்ந்தவர். இந்தப் புத்தகம் இவருடைய முதல் மொழி பெயர்ப்பு.

நைஜுரியாவின் சிறிய நகர் பகுதியில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த ஹஜியா பிந்த்தாவுக்கு பதினாறு அல்லது பதினேழு வயதிருக்கக்கூடும் அப்போது. அவள் பள்ளி செல்வதில் அப்பாவுக்கு விருப்பமில்லை. ஒருநாள் வெளியே தோழிகளுடன் விளையாடி விட்டு ஓடி வருகையில் அவள் மார்பு சிறிது குலுங்கியதால் அவளுக்கு திருமண வயதாகி விட்டது என்று முகம் தெரியாத ஒருவனுக்கு அவளை திருமணம் செய்து வைக்கிறார்கள். இயந்திரமாய் குழந்தைகள் பெற்ற ஹஜியா முதியோர் பள்ளியில் இரண்டு குழந்தைகள் பெற்ற பிறகு சேர்ந்து இருபது வருடங்கள் ஆசிரியையாக பணியாற்றி, கணவனையும், மூத்த மகனையும் இழந்து பின் தன் தங்கை மகளுடனும்,பேத்தியுடனும் இரண்டாவது மகன் இருக்கும் ஊரில் தனியாக வீட்டில் தங்கி இருப்பவர். இப்போது அவருக்கு வயது ஐம்பத்தைந்து. ரெஸாவின் தாய் இரண்டு வயதில் அவனை விட்டு சென்ற பின் மாற்றாந்தாய் இருவரது புறக்கணிப்பால் தனிமையில் கழித்து இருபத்தைந்து வயதில் கெட்ட பழக்கங்களுடன் தாதா போல் மாறி விட்டான். ரெஸா ஒருநாள், ஹஜியாவின் வீடு புகுந்து கொள்ளை அடித்துச் சென்ற போது அவனுக்கு அவரைப் பார்க்கையில் அம்மாவின் சாயலும் அவருக்கு இறந்து போன மூத்த மகன் சாயலும் தெரிகிறது. ஆனால் அவர்களிடையே வளரப்போகும் உறவு இருவரது வாழ்க்கையையும் மாற்றப்போகிறது.

ஹஜியாவுக்கு எப்போதெல்லாம் துர்சம்பவம் நடக்கப் போகிறதோ அப்போதெல்லாம் கரப்பான் பூச்சியின் வாடை அடிக்கிறது. இடுப்பில் சீருடை இறுக்கி இருந்தால் ஆண்களைத் தூண்டும் என்பது போன்ற வரிகள் நைஜீரிய பெண்களின் நிலைமையை சொல்லும். மத மோதல், சந்தர்ப்பவாத அரசியல் செய்தி போல் வந்து போகிறது. ஒடுக்கப்பட்ட காமம் செடிகளின் நடுவே பதுங்கிய சர்ப்பம் போல. மொழி பெயர்ப்பாளருக்கு உண்மையில் நன்றி சொல்ல வேண்டும். மூல ஆசிரியர் எதையுமே விளக்காமல் சம்பவமாக சொல்லிக் கொண்டு போவதை கலைக்காமல், தானும் பொழிப்புரை எழுதாமல் அப்படியே தந்ததற்காக அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.

நன்றி:- சரவணன் மாணிக்கவாசகம்


நூல்: தீக்கொன்றை மலரும் பருவம் (மொழிபெயர்ப்பு நாவல்)

எழுத்தாளர்: அபுபக்கர் ஆடம் இப்ராஹிம்

தமிழில்: லதா அருணாச்சலம்

பதிப்பகம்: எழுத்து பிரசுரம்.

விலை: 499 ரூ

பகிர்:
முந்தைய பதிவு
அடுத்த பதிவு
No comments

leave a comment