Friday, Sep 25, 2020
Homeபடைப்புகள்கட்டுரைகள்தி.ஜானகிராமனை ஏன் என்கௌன்டரில் கொல்லக்கூடாது?

தி.ஜானகிராமனை ஏன் என்கௌன்டரில் கொல்லக்கூடாது?


(தி.ஜா-வின் பகடி)

ந்தத் தலைப்பில், இந்தக் கட்டுரையை எழுதியது ஏதோ பரபரப்புக்காகவும் விளம்பரத்திற்காகவும் இல்லை. கட்டுரையில் பேசப்படும் இரண்டு கதைகளைப் பற்றிப் பேசப்போகிறேன். முதல் கதையை வாசித்தபின் தோன்றிய தலைப்பு இது. அகஸ்மாத்தாக வந்து அமைந்த தலைப்பு இது. அந்தக்கதையை ஹாஸ்யக் கதை என்று பிரசுர விபரத்தில் குறிப்பிட்டிருந்தாலும், இன்று அந்த ஹாஸ்யம்,  பகடி என்றே தோன்றுகிறது. தமிழில் பகடிக் கதைகள் தொகுக்கப்பட்டால், நிச்சயம் தி.ஜாவின்  ஸீடீஎன்/√(5 ஆர் X க)= ரபெ , சங்கீதச்சேவை என்ற இந்த இரண்டு கதைகளும் சேர்க்கப்படலாம்.


முதல் கதையான ஸீடீஎன்…..கதைக்கு வருவோம். பசுஞ்சாணத்திலிருந்து ரயில் பெட்டியையும், இன்ஜினையும்  தயாரிக்கும் சூத்திரத்தைக் கண்டுபிடித்த டாக்டர் கோஸ்வாமி, அதன் மாதிரியைக் காண்பித்து, ஆறு கோடியை அரசிடம் பெறுகிறார்.  அதற்காக உழைக்கத் தொடங்கும்போது, நிர்வாக அதிகாரியின் கையில் பணம் போய்விடுகிறது. அலுவலகம் கட்டுவது,  குமாஸ்தாக்கள் நியமனம்,  அதிகாரிகள் நியமனம், அவர்களுக்கான  குடியிருப்பு கட்டுவது, சாலைகள்  போடுவது, கட்டிடங்கள் கட்டுவது, பள்ளிக்கூடம் கட்டுவது, ஆஸ்பத்திரியும் பொழுதுபோக்கு நிலையங்கள் கட்டுவது எனப்  பணம்  விரயமாகிறது.  தொழிற்சாலையைக் கட்டிக் கால்வாசி எழுவதற்குள் பணம் தீர்ந்துவிடுகிறது. பார்லிமெண்டில் கேள்வி எழுகிறது.  திட்டமே மோசம் என்று விஞ்ஞானி மீதும்,  விஞ்ஞான உணர்வுமீதும் சந்தேகம் கிளம்பிவிடுகிறது.  திட்டம் நிறைவேற,  இன்னும் ஒரு நாலுகோடியை அரசிடம்  எதிர்பார்க்கிறார் விஞ்ஞானி கோஸ்வாமி.  அதில் சுமார் ஒரு லட்சத்திற்குப் பசுமாடுகளை வாங்கி, அதன் சாணத்திலிருந்து ரயிலையும், ரயில் இன்ஜினையும் உருவாக்கி, அதன் லாபத்திலேயே  வீடுகள், விளக்குகள்,  தண்ணீர்  சப்ளை, இயந்திரம்  இவற்றை இயக்க, பசுஞ்சாணத்தின் வாயுவைப் பயன்படுத்தலாம் என்கிறார்  கோஸ்வாமி.  பசுஞ்சாணத்திலிருந்து ரயில் இஞ்சினையும், ரயில் பெட்டிகளையும் உருவாக்குவது பகடி என்றால், அதன் மாதிரியைக் கொண்டு திட்டத்திற்கு நிதி தந்த அந்த அரசை என்னவென்று சொல்வது? அதற்காக நிர்வாக அதிகாரி நியமிப்பது, திட்டத்தை மறந்து செலவழிப்பது என்ற முட்டாள்தனத்தை என்னவென்று சொல்வது? இந்தக் கதையை நீங்கள் வாசிக்கத் தொடங்கும்போது, உங்களை அறியாமல் சிரிக்கத் தொடங்குவீர்கள். அந்தச் சிரிப்பு, கடைசிவரை மறையாமலே இருக்கும்.


இரண்டாம் கதையான சங்கீத சேவை.  ஒரு பிரபலமான சங்கீதக்காரரைப் பகடி செய்கிறது, ஒரு எலியின் வழியாக.   ஒரு சங்கீத வித்வான் தன் சிஷ்யப் பிள்ளைகளுக்குச் சங்கீதம் சொல்லித் தருகிறார். அதை அலமாரியிலிருந்து கேட்டபடி, பிஸ்தாப்பருப்பைக் கொண்டு செல்கிறது அந்த எலி. பிறகு சங்கீதம் பற்றி இரண்டு புத்தகங்கள் எழுதுகிறது. பிறகு, ஆபிசில் வேலை செய்தபடியே, சங்கீதம் பற்றிப் பேச, தென்னமெரிக்காவிற்கும் ஆப்ரிக்காவிற்கும் போகிறது.  எலிகளின் தலைமைக் காரியாலயமே இந்த ஏற்பாட்டைச்  செய்கிறது. அமெரிக்கா செல்கிறது  விநாயகதாசன் என்னும் அந்த எலி.  அமெரிக்காவில் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள்  பற்றிய செய்திகளைக் கத்தரித்து வைத்துக்கொள்கிறது, விநாயகதாசன். டாக்டர் பட்டம் வாங்குகிறது.  போனஸ் அயர்சில், சங்கீதத்தைத் தப்பு தப்பாகப் பாடி.  இந்தியத் தூதர் மனைவியால், அசிங்கப்படுகிறது. அதாவது அந்த எலிக்குச் சங்கீத ஞானம் இல்லை என்ற குட்டு வெளிப்படுகிறது.  மீறிப் பாடினால்,  இந்தியத் தூதரகத்திற்கும்,  செய்தித்தாளுக்கும் விநாயகதாசனுக்குச்  சங்கீதம் தெரியாது  என்று  சொல்லிவிடுவதாக எச்சரிக்கை விடுக்கிறது, தூதரக மனைவி எலி.   இந்தியா திரும்பும்வரை,  போனஸ் அயர்சில் பாடப்போவதில்லை என்று உறுதி அளிக்கிறது, விநாயகதாசன்.   இந்தியா திரும்பியதும், சங்கீதப்  பிரசங்கம் செய்கிறது,  இந்தியாவின் மாபெரும் தூதர் என்று விருந்து வைக்கிறார்கள். சங்கீத மகாவர்ணம் என்ற பட்டம் கிடைக்கிறது.  பிறகு, ஆஸ்திரேலிய, நியூசிலாந்துநாடுகளில் இந்திய எலிகளின் நிரந்தரப் பிரதிநிதியாகி, சங்கீதத்தை மறந்து, இன்பமாய் வாழ்கிறது. “நிறுத்தற காலம் வந்துரும் என் சங்கீதத்தைன்னு ஒரு நாள் சொன்னேனே, ஞாபகமிருக்கா?” என்று தன் மனைவியைப் பார்த்து அடிக்கடி சொல்லி மகிழ்ந்து வருகிறது, அந்த விநாயகதாசன் எலி.


இதுவரை தொகுப்பில் வராத ஸீடீஎன் கதையைக் கண்டுபிடித்தவுடன் அதிகம் சந்தோஷப்பட்டவர் கல்யாணராமன்தான்.  “தி.ஜாவின் மேல் ஒரு சிறிய அதிருப்தி சிலருக்கு உண்டு.  தி.ஜா., சமூகப் பிரச்சனைகளை எழுதியவர் இல்லை. அவருக்கு ஹாஸ்யம் வராது. அரசையோ, நிறுவனங்களையோ கேள்விகேட்கும் கதைகளை அவரால் எழுதமுடியாது என்ற குற்றச்சாட்டு உண்டு.  அந்தக் குறையை ஸீடிஎன் போக்கிவிட்டது, ராணிதிலக்” என்றார், கல்யாணராமன். அவருடைய  கதைகள்  வெகுஜன  ஈர்ப்புடன், ஆண் பெண் உறவுகள், பாலியல் மீறல்கள் குறித்தானவை என்ற பொதுவான அபிப்ராயம் இருக்கிறது.  “தஞ்சை விவசாயிக் கூலிகள் சாட்டையடியும் சாணிப்பாலும் தின்றுகொண்டிருந்த காலத்தில், மணிக்கொடி எழுத்தாளர்கள் அதைப்பற்றி எதுவுமே எழுதாமல் மேல்தட்டு வர்க்கத்தையே வியந்து வியந்து எழுதிக்கொண்டிருந்தார்கள்” என்ற விமர்சனம், தி.ஜானகிராமன் மீது உண்டு. அதைப்  பொய்யாக்கும் வகையில் அமைந்த கதைதான், ஸீடீஎன்.  அந்தக் காலகட்டத்து அரசியலையும் அரசையும் விஞ்ஞானத்தையும் விஞ்ஞானியையும் பகடிசெய்ய, தி.ஜாவிற்கு எப்படி துணிச்சல் வந்தது?  தி.ஜா.,வுக்கு மட்டும்  ஏன் இப்படியான, அவருடைய பாணியை மீறிய கதையை எழுத எண்ணம் வந்தது?


முதல் கதையான ஸீடீஎன்னில் அரசு,  விஞ்ஞானி என்று இருவரையும் ஒரு சேர பகடி செய்கிறார், தி.ஜா. இந்தக் கதை 1965 இல் வருகிறது.  அன்றுதான்  இந்தியாவில் பசுமைப் புரட்சி (1964-66)  அரிசியில்  உருவாகத் தொடங்குகிறது.  உருவாக்கியபடி இருந்தவர், எம்.எஸ். சுவாமிநாதன்.  அன்றைய ஆட்சி,  காங்கிரஸ்  ஆட்சி.  உண்மையில் இந்தக் கதை யாரைப் பகடி செய்கிறது? காலவரிசைப்படிப் பார்த்தால் அவர்களைக் குறிப்பதுபோல் இருக்கிறது.  காலவரிசை இல்லாமல் பார்த்தால்,  தி.ஜா யாரைப் பகடி செய்கிறார் என்ற புதிரும் எழுகிறது.    முட்டாள்தனமான திட்டம் போடும்  விஞ்ஞானிகளையும், அவர்களின் முட்டாள்தனத்தை ஆதரிக்கும் அரசு நிறுவனத்தையும் சதாகாலமும் பகடி செய்கிறதா, இந்தக் கதை? அந்த முட்டாள்தனத்தைப்  பகடியாக்கி  எழுதும் சர்வ சுதந்திரம் இந்தியாவில் இப்போது நமக்கு இருக்கிறதா, என்ன?

இரண்டாவது கதையில் வரும் சங்கீத எலி,  எந்த  சங்கீதக்காரர் எனத் தெரியவில்லை.  தஞ்சாவூர் எலி என்கிறார்.  தஞ்சையின் எந்த சங்கீதக்காரரைக் குறிக்கிறது என்றும்  கண்டுபிடிக்க  முடியவில்லை.  ஆனால் எனக்கென்னவோ  இந்தக் கதையை வாசிக்கும்போதெல்லாம், சங்கீத எலி  நினைவுக்கு வருவதில்லை. சாஹித்ய எலிகளின்  ஞாபகம்தான்  வருகிறது.   இந்தக் கதையை வாசிக்கும்போது,  எலிக்குப் பதிலாகச் சில பிரபல தமிழ் எழுத்தாளர்கள் நினைவில் வந்தார்கள்.  பிஸ்தா பருப்புக்காக அவர்கள் ஓடும் வேகம் அவலமாக  இருந்தது.  அவர்களை  நினைத்தபடி வாசிக்கும்போது,  என்னை அறியாமல் சிரிப்பு வந்துவிட்டது.  சாஹித்யம் என்னவென்று தெரியாமல், சாஹித்யம் எழுதி,  சம்பிரதாய பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்று, அகில உலக நாடுகளுக்குச் சென்று உரையாடித் திரும்பி, சாஹித்ய அமைப்புகளில் தலைவர்களாகவும்  செயலாளராகவும் செயலாற்றும் உலகளாவிய சாஹித்ய எலிகள் சில பேர்கள் உடனே ஞாபகத்திற்கு வருகிறார்கள்.  இதில் தமிழ் எலிகளும் அடக்கம்.  அகில உலக எலிகளின் கிரீச்..கிரீச்.. சப்தங்கள்,  பிரபஞ்சம் முழுவதும் கர்ண கொடூரமாக ஒலிப்பதை நம்மால் எப்போதும் தடுக்க முடியாது என்பதே நிதர்சனம்.  பிரபலமாக்கிக்கொண்ட சில தமிழ்  எழுத்தாளர்களின் முகங்களை, தி.ஜாவின் சங்கீத எலியின் முகத்தோடு பொருத்திப் பார்க்கும்போது, மிதமிஞ்சிய சிரிப்பு வெடித்துவிட்டது. தி.ஜாவிற்கு அநேக வந்தனங்கள்.


இன்றைய காலத்தில், ஆட்சிக்கும், ஆட்சியின் கொள்கைக்கும் எதிராகப் போராடிய  நரேந்திர தபோல்கர்,  எம்.எல்.கல்புர்கி, கோவிந்த் பன்சாரே,  கௌரி லங்கேஷ்  ஆகியோர் மீது Ballistic signature குண்டுகள் பாய்ந்து அவர்களைப் படுகொலை செய்துவிட்டன.   நல்லவேளை இப்போது தி.ஜா., உயிருடன் இல்லை.   இப்போது அவர்  உயிருடன் இருந்து. அரசுக்கும் கொள்கைக்கும் எதிராக  ஸீடீஎன்  மாதிரியான   ஒரு கதையை எழுதி இருந்தால், அவருக்கு எதிராகப் பல குரல்கள்  எழுந்திருக்கலாம். அவை: “தி.ஜானகிராமனை ஏன் என்கௌன்டரில் கொல்லக்கூடாது?”


– ராணிதிலக்

 

ந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்ட சிறுகதைகளை வாசிக்க இணைப்புச் சுட்டி:

சங்கீத சேவை ஸீடீஎன்/√(5 ஆர் X க)= ரபெ

பகிர்:
No comments

leave a comment