வீரயுக நாயகன் வேள்பாரி – வாசிப்பு அனுபவம்

பாரியைப் பற்றி உங்களுக்குத் தெரிந்ததைக் கூறுங்கள் என்று யாரேனும் உங்களைக் கேட்டால் உங்களது பதில் என்னவாக இருக்கும்? முல்லைக்குத் தேர் தந்த வள்ளல் என்பதாகத் தானே? கடந்த வாரம் வரை என்னை யாரேனும் இக்கேள்வியைக் கேட்டிருந்தால் எனது பதிலும் இதுவாகத்தான் இருந்திருக்கும். அத்தோடு முல்லைக்குத் தேர் கொடுத்ததை ஏனோ ஒரு பெரிய வள்ளல் தன்மையாக ஏற்றுக் கொள்ள இயலாத நிலையில் தான் இத்தனை நாளும் இருந்தேன். ஆம். வேறொரு காரியத்திற்கு பயன்பட வேண்டிய ஒரு தேரினை – அதுவும் சாதாரண ஒரு கொம்பே போதும் என்பதான ஒரு செயலுக்கு இத்தனை பெரிய தேரினை கொடுத்தவன் ஒரு மூடனாகத் தானே இருக்க வேண்டுமென்ற எண்ணம் தான் எனக்குள் ஆரம்பம் முதல். ஆனால் இப்பொழுது – இந்த நூலினை வாசிக்க ஆரம்பித்த மறு நொடி முதல் இந்த எண்ணம் தூள் தூளாய் உடைந்து ஒரு சிறு எறும்பின் முன் பெருத்து நிற்கும் பெரும் பனையாய் பாரியின் பிம்பம் அசைக்க முடியாததொரு பேராற்றலாய் உள்ளிறங்கி நிற்கிறது. பாருங்களேன்… சொல்வதற்காய் என்னுள்ளிருந்து வெளிவரும் உதாரணம் கூட பனையென்று தான் வருகிறது. ஆம். அதுதானே பாரியின் சின்னம்.

ஒருவனைப் பற்றி மற்றவர்கள் அளவுக்கதிகமாய் புகழ்கிறார்கள் என்றாலே அங்கு ஏதோ தவறு இருக்கிறது என்று தானே அர்த்தம் என்ற எண்ணத்தில் தான் கபிலர் பாரியைக் காண பறம்பு நோக்கி வருகிறார். இன்னும் சொல்லப் போனால் பாணர்கள் புகழ்வது போல பறம்பின் தலைவன் பாரி ஒன்றும் அத்தனை சிறப்பானவனாக இருக்க இயலாது அதுவும் தேரினை முல்லைக்கு கொடுத்தது என்ற செயலினைக் கொண்டு ஒருவனை எப்படி வள்ளல் என்று ஏற்க இயலும் என்றறிய தான் கபிலர் பறம்பினை நோக்கி விரைகிறார். ஆனால் அதே கபிலர் பறம்பினை விட்டு நீங்க மனம் வராதவராய் பாரியின் உற்ற நண்பராய் மாறியது காலத்தின் மிக அழகான முரண்.

முதல் அத்தியாயத்தில் கபிலர் குறித்த அறிமுகத்திலேயே நூலாசிரியர் நம்மை நாவலுக்குள் லாவகமாய் இழுத்து விடுகிறார். “இவர் யார்? மன்னரின் சுற்றத்தாரா?” என்று தேரோட்டி மற்றொரு பணியாளிடம் கேட்கையில் “இல்லை.. இவரின் அடிமை நான்” என்று மன்னர் என்னிடம் கூறினார் என்ற வார்த்தைப் பிரயோகங்களிலேயே அவர் யாராய் இருக்குமென்று நம்மையும் யோசிக்க வைத்து விடுகிறார்.  கபிலர் பற்றிய கூற்று ஒன்றினில், “பேரறிவின் இறுமாப்பு கண்ணொளியில் மின்னியது” என்கிறார் நூலாசிரியர். அந்த வரியை முதலில் வாசிக்கையில் நமக்கு ஒன்றும் வித்தியாசமாய் தோன்றவில்லை. ஆனால், அடுத்தடுத்து நாவலின் அத்தனை அத்தியாயங்களிலும் மலை மக்கள் அறிந்ததில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட தான் அறிந்திருக்கவில்லை என்று அவர் உணரும் தருணங்களிலெல்லாம் அவ்வார்த்தைகளின் வீரியம் நமக்கு புரிகிறது.

பறம்பினுள் நுழைய முற்படுகையில் கபிலர் சந்திக்கும் முதல் மனிதன் நீலன். நீலன் – அப்பப்பா…. எப்பேர்ப்பட்ட வீரன். நீலனை நினைவில் கொள்ளுங்கள். ஏனெனில் நாவலின் தொடக்கம் எப்படி நீலனோ அதேபோல் இந்நாவலின் முடிவும் நீலனைக் கருவாய் கொண்டதே. நீலன் படிப்பறிவு அற்றவன் தான். ஆனால் அவன் தொடுக்கும் வினாக்களிலும், கூறும் சொற்களிலும் கபிலரின் பேரறிவின் இறுமாப்பு இருந்த இடம் தெரியாமல் ஓடுகிறது. அதோடு பாரியின் வீரத்தின் மீதும் ஆட்சியின் மீதும் சந்தேகப்பட்டு வந்த கபிலர் நீண்ட பொழுதுக்கு முன்பே பாரியின் பாதுகாப்புக்குள் தாம் வந்துவிட்டதை தாமதமாகத் தான் உணருகிறார்.

ஒரு சிறிய இடைக்குறிப்பு: நூலினை வாசிக்க ஆரம்பிக்கும் முன்னே இரு குவளைகளில் குடிநீர், தேவையான நொறுக்கு தீனிகளையோ, முடிந்தால் இரண்டு வேளைக்கான உணவினையோ உடன் எடுத்து வைத்துக் கொண்டு வேள்பாரியைக் கையில் தொடுங்கள். ஏனெனில் நூலினை கையில் எடுத்த அடுத்த கணம் முதல் நீங்கள் உங்களின் சுய நினைவினை இழந்து விடுவீர்கள். உண்பதற்கும், உறங்குவதற்கும் கூட உங்களால் எழ முடியுமா என்பது ஐயமே.

நீலன் கபிலருக்குக் கூறும் முருகன் – வள்ளியின் காதல் கதை நம்மை வேறோர் உலகத்துக்கு அழைத்துச் செல்கிறது. காதல் என்பதெல்லாம் ஏதோ பொதுவெளியில் கூற தகுதியற்ற அநாகரிக வார்த்தைகள் போல் சித்தரிக்கப்பட்டிருக்கும் இக்காலத்தில் இவர்களின் காதலும், பறம்பில் வாழும் ஒவ்வொரு மனிதரின் அக வாழ்வும், அதிலும் குறிப்பாய் பாரியின் மகளான அங்கவையின் காதல் குறித்தான விவரிப்புகளும் தமிழர்களின் மரபு சார்ந்த காதல் குறித்தான புரிதலிலிருந்து நாம் இன்றைக்கு எவ்வளவு தூரம் விலகி வந்துள்ளோம் என்பதையே உணர்த்துகின்றன.

இன்னும் நான் பாரியை கபிலர் சந்தித்ததுப் பற்றி கூறவேயில்லை தானே. வேண்டாம். நான் கூறப் போவதில்லை. நாவலைப் படிக்கையில் உங்களுக்கே அவ்விடம் என்னைப் போன்றே நிச்சயம் மெய்சிலிர்க்கும். ஆதலால் உங்களின் வாசிப்பிற்கே அதனை விட்டு விடுகிறேன்.

நூலாசிரியரின் வார்த்தைகளிலேயே சொல்வதானால், கபிலர் மீது பாரி கொண்ட நட்பானது, “மனதின் ஓரத்தில் இருக்கும் அழுக்கு கூட நம்மை வெட்கித் தலைகுனியச் செய்யும் பேரன்பு இது.”

கொற்றவைக் கூத்தின் ஒவ்வொரு நாளும் மூவேந்தர்களாலும் அழிந்த ஒவ்வொரு குலமும் தங்களின் வரலாற்றை கண்களில் தீப்பொறி பறக்க கூறுவதும், பாடுவதும் நம் நாடி நரம்புகளையெல்லாம் ஏதோ செய்கிறது. அந்த அத்தியாயங்கள் வாசிக்கையில் நீங்கள் நிச்சயம் ஒன்று அழுவீர்கள் அல்லது உங்கள் உடம்பிலுள்ள ஒவ்வொரு மயிர்க்கால்களும் சிலிர்த்து உடல் சில்லிட்டுப் போவதை உணர்வீர்கள். ஒருவேளை கபிலரைப் போன்றே நீங்களும் மூர்ச்சையாகி மயங்கி விழவும் வாய்ப்புண்டு. உண்மையில் நூலாசிரியர் திரு. சு. வெங்கடேசனின் எழுத்தாற்றலை இவ்விடத்தில் மெச்சியே ஆக வேண்டும். ஓர் இனத்தின் அழிவையும், அவர்தம் துயரையும் வார்த்தைகளில் வடித்தல் அத்தனை எளிதல்லவே.

பாண்டிய பேரரசன் குலசேகரப் பாண்டியனின் மகன் இளவரசன் பொதிய வெற்பனின் திருமணப் பரிசாக அளிக்க பாண்டியனின் ஆளுகைக்கு உட்பட்ட வெங்கல் நாட்டு சிற்றரசன் மையூர் கிழார் தன் மகன் இளமருதன் மூலமாய் கொடுத்தனுப்பும் இரண்டு சிறிய தேவாங்குகள் தான் ஒரு மிகப்பெரிய போருக்கு காரணம் என்பதை சத்தியம் செய்தாலும் நம்ப மாட்டீர்கள். ஆனால், உண்மை அதுதான். அப்படி என்ன சிறப்பு இந்த தேவாங்குகளிடம்? இயற்கை, மனிதன் அறிந்து கொள்ளாத அதிசயங்களை அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் சரி தன்னுள்ளே கடலளவு கொட்டி வைத்துள்ளது. அதை அறிந்து கொள்ள நமது சிற்றறிவு போதாது. அது போன்றதொரு கண்டுபிடிப்பினைத் தான் அவர்கள் தேவாங்கிடம் காண்கின்றனர். இதனை பின்னர் பறம்பின் தலைவன் பாரி அறிகையில் இதுதான் எங்களுக்கு முன்னரே தெரியுமே இதிலென்ன அதிசயம் என்று உரைக்கையில் இயற்கையின் பால் அவர்களுக்கிருக்கும் அளவுகடந்த ஞானத்தை அறிந்து கபிலரோடு சேர்த்து நாமும் வியப்பதைத் தவிர்த்து வேறென்ன செய்ய இயலும்?

வான் மண்டலத்தின் அமைப்பைப் பார்த்து கோள்களின் நிலை சொல்லும் திசைவேழர் போன்ற பல கற்றறிந்த மகான்கள் இம்மண்ணில் வாழ்ந்துள்ளதை எண்ணுகையில் பெருமையாக இருக்கிறது. ஆனால் அதேபொழுது, மன்னர்கள் தங்களின் சுயவிருப்பத்திற்காய் அவர்களை எப்படியெல்லாம் பகடைக்காயாய் பயன்படுத்தியுள்ளனர் என்பதை அறிகையில் மன்னர்கள் மீதினில் வெறுப்பே மிஞ்சுகிறது.

                பாரியின் ஒவ்வொரு அசைவினையும் ஒரு நூறு கவிதைகளாய் வார்க்கலாம். உண்மையில் பாரி ஒரு மன்னனல்ல. வேளிர் குல மக்களின் தலைவன். ஆனால், மன்னர்க்கெல்லாம் மாமன்னனாக உயர்ந்து நிற்கிறான். கபிலருக்கு பறம்புக்கு வருவதற்கு முன் தோன்றிய சந்தேகத்தை பாரியிடம் பின்னர் ஓரிடத்தில் கேட்கவும் செய்கிறார். “பாரி, இந்த பாணர்கள் பாடுவது போல, உண்மையிலேயே நீ கொழுகொம்பின்றி தவழ்ந்த முல்லைக்கு உனது தேரினைத் தந்தாயா?” என்று. இதற்கு பாரி கூறும் பதில்…. அது வெறும் பதில் மாத்திரமல்ல. அதில்தான் பாரியின் மணவாழ்வின் தொடக்கமும், அவனோடு அவன் மனைவியின் உயர்ந்த குணமும் பளிச்சிடுகிறது. ஆயினும் அதை பாரி ஏதும் பெரும் தாராளமாய் உணரவில்லை. மலைமக்களுக்கு வெகு இயல்பாய் தோன்றும் ஒரு செயல் நமக்குத்தான் பூதாகரமாய் முன்நிற்கிறது.

நாவலின் இரண்டாம் தொகுதி முழுக்க மூவேந்தர்களுக்கும், பாரிக்கும் இடையேயான போர் பற்றியது. போரினை தவிர்க்க பாரியும், பறம்பின் குடிகளும் எவ்வளவோ முயன்றும் மூவேந்தர்களின் மண், பொன்னாசையால் போரினை தவிர்க்க இயலாச் சூழல்.

கடல் அலைபோல் திரண்டு நிற்கும் சேர, சோழ, பாண்டியர்களின் கூட்டுப்படை ஒருபுறம். தோல்களின் திணவையும், நம்பிக்கையையுமே ஆயுதமாய் கொண்டு நிற்கும் பாரியின் பறம்பு மக்கள் ஒருபுறம். போரில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதை நாம் அறிந்து கொள்ள துடிக்கும் ஒவ்வொரு கணத்தையும் நூலாசிரியர் தமதாக்கிக் கொண்டுள்ளார்.

ஜெ. திவாகர்

மூவேந்தர் படையின் தலைமைத் தளபதி கருங்கைவாணன் வகுக்கும் ஒவ்வொரு போர் உத்தியையும், பறம்பின் தேக்கன், வாரிக்கையன், முடியன் ஆகியோர் முறியடிக்கும் விதம் செம மாஸ். திரையரங்கில் படம் பார்க்கையில் நம்மைக் கவரும் சில காட்சிகளுக்கு இருக்கை நுனியில் அமர்ந்து படம் பார்ப்போம் பாருங்கள். அதுபோல இரண்டாம் தொகுதி முழுவதும் இருக்கை நுனி பார்வையாளன் போல் தான் நம்மை உணர வேண்டியுள்ளது. கதையில் அத்தனை வேகம், அப்படியொரு விறுவிறுப்பு. உணவிற்காய் ஒரு சிறு விலங்கினைத் துரத்தும் பெரு மிருகத்தின் ஓட்டத்திற்கும், உயிரைக் காத்துக் கொள்ள ஓடும் அச்சிறு விலங்கின் ஓட்டத்திற்கும் வித்தியாசம் உண்டல்லவா? அது போன்றதுதான் மூவேந்தர் படைக்கும் பறம்பின் மக்களுக்கும் இடையிலான போர்.

இறுதியில் மூவேந்தர் படையும் புறமுதுகிட்டு ஓடும் காட்சி இன்னும் கண்முன் நிற்கிறது. அத்தோடு போர் என்பது ஏதோ இரு அரசர்களுக்கு இடைப்பட்ட வெற்றி தோல்வி விளையாட்டல்ல. அது எத்தனை ஆயிரம் மக்களின் உதிரம் குடிக்கும் கொலைவெறி என்பதை பொற்சுவையின் வாயிலாய் நூலாசிரியர் விளக்கியுள்ள விதம் அருமை.

பொதுவாய் ஒரு நூலினை வாசிக்கையில் அதிலுள்ள எனக்கு பிடித்தமான வரிகளை அடிக்கோடிடுவது எனது வழக்கம். அது, நான் இங்கிருந்தே அந்நூலை எழுதிய எழுத்தாளருக்குச் செய்யும் மரியாதையாய் நினைப்பதுண்டு. அதேபோல் தான் வேள்பாரியை வாசிக்கத் தொடங்கையிலும் கையில் பேனாவோடு தான் அமர்ந்தேன். ஆனால், வாசிக்க வாசிக்க கையிலிருந்த பேனா நழுவி விழுந்த இடம் தெரியாமல் காணாமலே போய்விட்டது நூலில் கலந்து கரைந்து போன என் மனம் போன்றே.

நூலிலிருந்து சில மேற்கோள்களை மட்டும் உங்களோடு பகிர்ந்து என் வாசிப்பு அனுபவத்தை முடிப்பது சரியாய் இருக்குமென கருதுகிறேன்.

“இயல்புதான் ஒன்றின் குணத்தைத் தீர்மானிக்கிறது”

“காதல் சம்பந்தப்பட்டவர்களின் சாமர்த்தியத்தால் தான் கைகூடும்”

“தீமையைக் கணப்பொழுதில் நன்மையாக மாற்ற முடிகிற வல்லமை வார்த்தைகளுக்கு உண்டு. வார்த்தை தரும் ஆறுதலை வேறு எதுவும் தருவது இல்லை. மனிதன் முதிரும்போதுதான் மனங்களைக் கையாளக் கற்றுக் கொள்கிறான். மனம் விழுந்த பின்னர் எழவைக்க எவ்வளவோ வழிகள் இருக்கின்றன. ஆனால், வீழ்ந்து கொண்டிருக்கும்போது தடுத்து நிறுத்துவதுதான் மிக முக்கியம். வாழ்வின் சாரமேறிக் கிடக்கும் அனுபவ அறிவால்தான் அதைச் செய்ய முடியும்”

“மண்ணில் கால்பாவாமல் மனிதன் நடப்பது தண்ணீருக்குள்ளும் காதலுக்குள்ளும்தான்”.

இன்னும் எவ்வளவோ கூறலாம் நூலினைப் பற்றி… ஆனால் போதும். உங்களின் வாசிக்க வேண்டுமென்ற ஆர்வத்தை எனது வார்த்தைகளால் மேலும் தாமதப்படுத்த விரும்பவில்லை. இறுதியாய் ஒன்றேயொன்று. நூலினை முற்றாய் வாசித்து முடிக்கும் வரையிலும் இப்பொழுதும் என்னுள் ஓடிக் கொண்டிருக்கும் நினைவு ஒன்றுதான். அது, இந்நூலாசிரியரைச் சந்திக்க வாய்ப்பு கிடைக்குமாயின் அவரின் கரம் பற்றி “ஒரே ஒரு முத்தமிட வேண்டும்”.


ஜெ. திவாகர்


நூல்  : வீரயுக நாயகன் வேள்பாரி

ஆசிரியர் : சு. வெங்கடேசன்

வெளியீடு: விகடன் பிரசுரம்

விலை  : ரூ. 1350 (இரு தொகுதிகளும் சேர்த்து)

3 COMMENTS

  1. அற்புதமான விமர்சனம். விமர்சனமே மீண்டும் மீண்டும் வாசிக்கத் தோன்றுகிறது . கதையின் பெருமை அங்கே புரிகிறது.

  2. மனிதர் வேல் பாரியை படிக்கும் வரை, அகிலனின் ” வேங்கையின் மைந்தன் ” தான் என் மனதை சுற்றி வந்தது.
    வேல. பாரியை படித்த பிறகு, உண்மை ஒன்று, இது வரை கனவில்,

    பறம்பு மலையே சுற்றி வருகிறேன்

    இதை விட வேறு ஒன்றும் சொல்வதற்கு ஒன்றுமில்லை
    அமரியோன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.