யூர் வனமும் எண்களும்

பூமி தோன்றியபோதே எண்களின் அவசியமும் தோன்றிவிட்டது. மனிதர்கள் எண்களைக் கண்டுபிடிப்பதற்கு முன்பு அவைகள் என்னவென்றே தெரிவதற்கு முன்பு காடுகளிலும் பள்ள மேடுகளிலும் கடல்களிலும் உருண்டும் தலைகீழாகவும் ஒன்றோடு ஒன்று பின்னியும் நீந்தியும்  பல்வேறு இடங்களில் எண்கள் கிடந்திருக்கின்றன. 

நான் அவைகளை இப்போது எண்ணிப் பார்க்கிறேன். இந்த மனிதர்கள் எண்களைச் சந்தித்திருக்கக் கூடாது. எண்களற்ற வாழ்வை வாழ்ந்திருக்க வேண்டும். ஆனால் மனிதர்கள் அதை விரும்பாததினால் எண்களை அவர்களுக்கு ஏற்றாற் போல் அதன் பண்புகள் இதுதான் என்று தங்களுக்காக உருவாக்கியிருக்கிறார்கள். இந்த எண்களும் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் தங்களை அதிகப்படுத்தியும் குறைத்தும் மனிதர்களைச் சமநிலை கொள்ள விடாமல் கிறங்கடிக்க கூடியதாகவும்  வளர்ந்திருக்கின்றன.

சில வருடங்களுக்கு முன் அறிஞர் டேன் அவர்களைச் சந்தித்தேன். நானும் அவரும் அந்த நட்சத்திர விடுதியில் தங்க நேர்ந்தது. நிறையப் பேசிக்கொண்டோம். அப்போது எங்களது பேச்சு வனங்களைப் பற்றியும் எண்களைப் பற்றியுமாக மாறி மாறி சென்று வந்தது. அதில் அவர் சில விஷயங்களைப் பகிர்ந்தார். அவைகள் காடுகளையும் எண்களையும் இணைக்கக் கூடியதாக இருந்தது. அவர் அவைகளை எனக்கு விளக்க எடுத்துக்கொண்ட காடு யூர் .அது மங்கேல் நாட்டை சார்ந்த வனம். அந்த காட்டில் நிறைய எண்கள் வானத்திலிருந்து பூமி உருவாகும் போதே விழுந்து குவிந்திருக்கிறது. அக்காட்டு மக்கள் அவைகளை என்னவென்றே தெரியாதபடி  கடந்திருக்கிறார்கள். அவர்கள் எண்களை எப்படிப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அவைகள் எப்படிப் பயன்படத்தொடங்கின என டேனும் நானும் பேசிக்கொள்கிற இரவாக அது அமைந்தது.

மிதமான குளிர்தான் அந்த அறையில் பரவுகிறது என்பதை டேன் உணர்ந்ததும், தனது கனத்த கோட்டை அருகிலிருந்த டேபிளின் மேல் ஒரு செல்லப் பிராணியை வைப்பது போல மெல்ல வைத்தார். பிறகு கொதி மணலில் ஊர்கிற நாகத்தைப் போல மெல்ல முன்னோக்கி அவரது தலையை மட்டும் கொண்டு வந்து அவருக்கான ஒயின் கோப்பையை எடுத்தபடியே தொடர்ந்தார். 

நான் உனக்குச் சொல்லப் போகிறவை யூர் வனத்தில் மனிதர்கள் வாழ்ந்த காலம் அப்போது ஒரு மதிய வேளையில் அப்பகுதி சிறுவன் ஒருவன் அவ்வழியில் போகும் போது விழுந்ததிலிருந்து நகரவே செய்யாத பூஜ்ஜியத்தில் கால் தட்டி விழுகிறான். பூஜ்ஜியம் அப்போதெல்லாம் எளிதே  தூக்கக் கூடியதாக இருந்திருக்கிறது. இப்போது இருக்கிற பூஜ்ஜியத்தை விட எடை குறைவென்று சொல்லிவிட முடியாது. ஆனால், இப்போதும் மனிதர்கள் பூஜ்ஜியங்களைத் தூக்க முன்வருவதில்லை. அன்று அந்த சிறுவன் பூஜ்ஜியத்தை அசைத்துத் தூக்கினான். அத்தனை எடையில்லாத முழுக்கப் பூசிய பூஜ்ஜியத்தைச் சுற்றிச் சுற்றி பார்த்து அதன் மேல் பகுதியை   அங்கிருந்த பாறையொன்றின் மேல் கொத்தி பூஜ்ஜியத்தைத் துளையாக்குகிறான். அது அவனுக்கு எப்படித் தோன்றியதென்று தெரியவில்லை. பிறகு அப்பகுதியில் ஓடிக்கொண்டிருந்த சிறு அருவி தண்ணீரை பூஜ்ஜியத்தில் நிரப்பி தனது தோள்களில் தொங்கவிட்டான். 

“பாருங்கள் பயனற்றதாக நாம் இப்போதெல்லாம் தூக்கவே சிரமம் பார்க்கிற பூஜ்ஜியம்தான் அப்போதைய முதன் நீர் சேமிப்பு பொருளாக இருந்திருக்கிறது.” இதை எனக்கு டேன் சொன்னபோது  நிறையத் தடுமாறினேன். 

 “டேன் இது உண்மைதானா என்ன மாதிரியான மூளை பாருங்களேன் அந்த சிறுவனுக்கு”.

டேன் பலமாகச் சிரித்தார்.

“நீங்கள் நினைப்பது சரிதான். அது போலவே அக்காட்டு மக்கள் பூஜ்ஜியங்களை தொடர்ந்து நீர் சேமிப்பிற்காக‌ப் பயன்படுத்தினார்கள். நீங்கள் கொஞ்சம்  யோசியுங்களேன். மக்கள் எல்லோரும் காடு மேடுகளில் அலைந்து பாறைகளுக்கும் பூஜ்ஜியங்களுக்கும் இடைப்பட்ட மெல்லிய வித்தியாசம் கண்டுபிடித்து ,அவைகளைத் தூக்கி அலைகிற காட்சி எத்தகைய அற்புதமானதாக இருக்கும்.”

டேன் அவ்வாறு சொன்ன போதே  பூஜ்ஜியங்களோடு திரிகிற உடையணியாத மனிதர்கள் சிலர் நினைவுக்கு வந்தார்கள். அந்தக் காட்சியை தொடர்ந்து நினைத்துப் பார்க்க விரும்பினேன். அது எனக்கு பிடித்திருந்திருந்தது. பூஜ்ஜியத்திற்காக சண்டையிட்டுத் தங்கள் கோபத்தை காட்டிக்கொள்கிற  தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கிற மாந்தர்களாக அவர்களை எண்ணிப் பார்த்தேன். 

டேன் தொடர்ந்தார்.

 “அதுமட்டுமல்ல அப்போதைக்கு  யூர் காட்டின் எந்த மரங்களையும் அவர்கள் வெட்டுவதில்லை. ஏனெனில், அவர்களிடம் கருவிகள் இல்லை என்பதும் மரப் பொருட்களின் தேவையில்லாதவர்களாகவும் அறியாதவர்களாகவும் வாழ்ந்திருக்கிறார்கள். அப்போது ஆங்காங்கு முறிந்து விழுகிற மரக்கிளைகளோடும்  ஆறுகளில் மிதக்கிற மரக்கட்டைகளோடு நீரோட்டத்தில் மிதந்து வருகிற எண்களை அவர்கள் மரக்கட்டைகளாகவே எண்ணி கவனிக்காமலே சென்றிருக்கிறார்கள்” என வேகவேகமாக டேன் சொல்லி என்னைப் பார்த்து கண் சிமிட்டினார்.

எனக்கந்த காட்சி பிரம்மிப்பாக இருந்தது மற்றும் டேன் இத்தனை ஆவேசத்தோடும்  ஆர்வத்தோடும் எந்த விஷயங்களைப் பகிர்ந்தும் நான் பொதுவாகப் பார்த்ததில்லை .அதில் இப்படி எண்கள் பூமி முழுக்க நிரம்பியிருந்தது என்பதை நம்பாமலும் இருக்க முடியவில்லை‌. 

 “மிஸ்டர் டேன். உண்மையிலேயே நீங்கள் இதை நம்புகிறீர்களா? உங்களுக்கு இதெல்லாம் எப்படித் தெரியும்?”.

டேன் சிறிது நேரம் எதுவும் பேசவில்லை. அவரது  அமைதி எனக்கு இன்னும் ஆர்வமூட்டியது. என்னை எதிர்த்து எண்களை எப்படிக் காப்பாற்றப் போகிறார் என்பதை நீண்ட பெருமூச்சாக வெளியிட்டு அவரை அசைத்தேன். அவர் தனது ஒயின் கிளாஸை ஒரே இழுவாக இழுத்து கவிழ்த்தி வைத்தார். என்ன என்பது மாதிரி பார்த்த என்னை அவர் நமட்டு சிரிப்போடு கேட்டார்.

“இது என்னவென்று தெரிகிறதா?”

நான் கவிழ்த்தப்பட்ட கைப்பிடியற்ற வளைவினுள் கீழ் சுருங்கிய அந்தக் கண்ணாடி தம்ளரைப் பார்த்துப் புரியவில்லை என்றேன்.

 “இதான் எண்களற்ற பொருட்களின் இன்றைய நிலை. நீ நினைப்பது மாதிரி ,நான் கூறுவது கட்டுக் கதையல்ல. அதெல்லாம் உண்மை. அப்போதெல்லாம்  எண்கள் நம்மோடு உலாவின. இப்போதுதான் நாம் எண்களோடு உலாவுகிறோம் புரிகிறதா? ”

எனக்குப் பேச்சு வரவில்லை சிறிது நேரத்திலே எழுந்து அறைக்குச் சென்றுவிட்டேன். அதுவொரு கிறிஸ்துமஸ் மாதம்.  எதிரிலிருந்த ஜன்னல் கண்ணாடி வழியே மரத்தில் எரியும் வெளிச்சங்கள் என்னைத் தொந்தரவு படுத்தின. நான் புரண்டு படுத்தேன். டேன் சொல்வது மாதிரி எண்கள் நம்மோடு அதன் பண்புகளைத் தெரிவுபடுத்தாமல் உலாவினால்  உண்மையிலேயே நன்றாய்தான் இருக்கும் எனத் தோன்றியது. ஆனால் அதற்கு எண்களை, எண்கள் என்று அறியாதிருக்க வேண்டும். அவைகளின் தற்போதைய பண்புகளை மறக்க வேண்டும். எந்தவொரு விஷயமுமே அறியாத வரைதான் சுவாரஸ்யமானதாக இருந்திருக்கிறது. இந்த உலகத்திற்கும்  இங்கு நடக்கிற விஷயங்களுக்கும் எப்போதும் சம்பந்தமற்றதாகவே நம்பத் தொடங்குவதில்தான் வாழ்வு நகரத் தொடங்குகிறது.  அப்படி நகர்த்த நாம் முதலில் நம்மை ஏமாற்ற வேண்டும்.

டேன் மாதிரி, அவர் கூறுகிற கட்டுக்கதைகள் மாதிரி, அதிலிருந்து பிறக்கிற சுவாரஸ்யங்கள்  அழகாகிறது அல்லவா? அதற்காகவே நம்பவேண்டும். இந்த எண்களின் பண்புகள் உலகை எத்தகைய நிலைக்குத் தள்ளியிருக்கிறது மனிதர்கள் தேவைக்காக எண்களுக்கு மதிப்பைக் கொடுத்தார்கள் முதலில் அவைகள் அவர்களின் கட்டுப்பாட்டிலிருந்தது இப்போது எண்களின் கட்டுப்பாட்டில் மனிதர்கள் இருக்கிறார்கள். எண்களின் தேவையில்லாது போயிருந்தால் பலிகளின் எண்ணிக்கையின் மூலம் வெற்றியைத் தீர்மானிக்கிற மனமும் ஆயுதங்களும் பிறந்திருக்காதல்லவா‌. அன்றிரவு அப்படியே எண்களின் மூலத்திலே கலந்து உறங்கிப்போனேன். அந்த இரவின், கனவில் எனது வயது மூத்த காதலி வந்தாள் நீண்ட நாட்களுக்குப் பிறகு எண்களின் கசப்போடு நான் உறங்குகிற நாளில் அவள் வந்ததை அத்தனை எளிதாக எடுக்க முடியவில்லை. நாங்கள் இணைவதற்குத் தடையாய் இருந்த வயதும் அந்த முட்டாள்தனமான பிறரின் அறிவுரைகளும் ஞாபகம் வந்தன. என்னைச் சரியாக உறங்கவிடவில்லை. வயதென்ற விஷயம் எண்களால் தீர்மானிக்கப்பட்டது. அதன் மதிப்பே அறியாது போயிருந்தால் நன்றாய் இருக்கும் என்றெல்லாம் அரைகுறை உறக்கத்திலே எண்ணிக்கொண்டிருந்தேன்.


றுநாள் வெகு காலையிலே எழுந்துவிட்டேன்.  அருகில் டேன் படுத்திருந்தார்  .அவர் எப்போது  அறைக்கு வந்தாரென்று தெரியவில்லை. அவர் படுத்திருப்பது எண் இரண்டு போல இருந்தது. அவர் தன்னை ஒரு எண்ணாக வளைத்து உறங்கிக்கொண்டிருப்பது காலையிலே அவரது கதைகளை மீண்டும் நினைவுபடுத்தத் தொடங்கின. அதுமட்டுமின்றி இரவெல்லாம் நான் உறங்காததும் என்னைப் பலமாகத் தாக்கியது. இதுபோல நிறைய முறை டேன்னிடம் விவாதித்து இருக்கிறேன். அவரின் கருத்துகளுக்கும் சிந்தனைகளையும் எப்போதும் முழுமையாகப்  புறக்கணிக்கக் கூடியவனாக அவரிடம் என்னைக் காட்டியதில்லை .ஆனால் இந்த எண்ணில் வரலாறுகள் எனக்குக் கற்பனைக் கதையாக மட்டுமே தெரிவதில் அத்தனை விருப்பமில்லை. அவருக்கு இந்த விஷயங்கள் உண்மையெனில் எப்படித் தெரியுமென்று அறிவதில் எனக்கு ஆர்வம் அதிகரித்தபடி இருந்தது. அந்த காலையிலே என்னைக் கட்டுப்படுத்த முடியாமல் கத்தினேன். 

 “மிஸ்டர் டேன்! இப்படி எண் இரண்டு மாதிரி உறங்குவதால் நான் அமைதியடைவேன் என  எண்ணுகிறீர்களா.? உங்களின் இந்த இரண்டு வடிவ உறக்கம் என்னைத் தொந்தரவு செய்கிறது.”

அவர் கண்களைத் திறக்காமலே  சொன்னார்.

“உன்னைத் தொந்தரவு செய்வது நானோ எனது உறக்க வடிவமோ அல்ல. எண்கள்தான்!. வேண்டுமென்றால் அந்த போர்வையை என்மேல் போர்த்தி என் வடிவத்தை மறைத்து விடு .இதன் மூலம் நீ வடிவங்களையோ நிகழ்வுகளையோ மறைக்கலாம். ஆனால் எண்களை மறக்க முடியாது.”

அவர் அப்படிச் சொன்னதும் எனக்கும் இருப்பு கொள்ளவில்லை .எதிர் டேபிளில் இருந்த மீதி ஒயினைக் காலையிலே வெறும் வயிற்றில் சாய்த்தேன். சிகரெட் பிடிக்கலாமென தோன்றியது. அங்கிருந்த  சிகரெட் மற்றும் லைட்டரோடு குளியலறைக்குள் நுழைந்தேன். 

அதுவொரு ஐந்துக்கு ஏழடி அங்குல அறை. போதுமான விசாலம், வெள்ளைநிற தொட்டிலின் மூடியை சாத்தி ,அதன் மேல் அமர்ந்தேன். லைட்டர் எரிய இரண்டு முறைக்கு மேல் அழுத்த வேண்டியிருந்தது. எத்தனை முறை புகை விடுகிறேன் என்று என்னையறியாமலே எண்ணத்தொடங்கினேன்.

நான்கு, ஐந்து, ஆறு என்னையறியாமல் செயல்படுகிற பார்க்கிற விஷயங்கள் எல்லாவற்றிலும் தானாகவே எண்ணிக்கையை நானே பொருத்தினேன். இதற்கு முன்பு எண்களோடு  வாழ்ந்திருந்தாலும் இப்படி எல்லா கனங்களிலும் எண்களை எண்ணியபடியே என்னைச் செயல்படுத்தியதில்லை. இதுவொரு மகா இம்சை உண்மையிலே இந்த வாழ்வு மிகத் தொந்தரவுதான். யூர் காட்டு மக்கள் இந்தத் தொந்தரவில்லாமல் வாழ்ந்திருக்கிறார்கள். 

அவர்கள் நிச்சயம் அதிர்ஷ்டசாலிகள் எண்களைப் பொருட்களாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அவர்களில் யார் பெரியவர் என்கிற பிரச்சனை இருக்கவில்லை. வயது மூத்த காதலியைத் திருமணம் செய்யத் தடையிருந்திருக்காது. நாற்பது கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் வாகனம் ஓட்டினால் அபராதம் கட்டும் தேவையிருந்திருக்காது. இத்தனை வயதிற்குப் பிறகு நீ இருந்து என்ன செய்யப் போகிறாய் என்கிற குரலிருந்திருக்காது  அப்போது எனக்குத் தோன்றியது டேன் சொல்லுகிற கதை உண்மையான சம்பவமாக இருந்திருந்தால் பிறகு ஏன் அது நீடிக்கவில்லை அதற்கு எது தடையாய் இருந்தது.  

சிகரெட்டை அணைத்து வெளியேறினேன். டேன் போர்த்திப் படுத்திருந்தார். அவர் எனக்கு எந்த தொந்தரவையும் திணிக்கக்கூடாது என எடுக்கிற விஷயங்கள் கூட மறைமுக தொந்தரவாகிவிடுகிறது.  

 “டேன்! மன்னிக்கவும்! இந்த காலை நமக்கு இனிமையானதாக அமைய விரும்புகிறேன். நீங்கள்  விரும்பினால் அந்த யூர் வன சம்பவங்களைத் தொடர முடியும் .தொடர்வீர்களா.?”

டேன் எதுவும் பேசவில்லை. நான் அவர் அருகிலே அமைதியாக இருந்தேன். 

 “அதை நீ அறிவதில் எனக்குப் பிரச்சனையில்லை. அதன் பிறகு நீ உன்னை எப்படி வழிநடத்துவாய்  என்பதில் எனக்குக் கவனமிருக்கிறது. அதன் பிறகான உன் மனநிலை சார்ந்த விடயங்களில் எனக்கு அக்கறையிருக்கிறது. ” எனக்கு அவருடைய அந்த தந்திரத்தனமான  அதிகப்பிரசங்கித்தன பேச்சு தேவையற்றதாகத் தோன்றியது.

டேன் இப்போது இந்த போர்வைக்குள் இருக்கிற நீங்கள் எண்ணாகி என்னோடு இருக்கிறீர்கள் . நீங்கள் கூறப்போகிற மூலத்தை முன் கூட்டியே அடைந்துவிட்டேன். அதன் இறுதிக்கும்  இடையிலும் நிற்கிற எனக்கு தற்போதைய உங்களின் எந்த கரிசனமும் தேவையற்றதாகவே தோன்றுகிறது நீங்கள் கூறலாம்.

டேன் எழுந்தார். குலைந்து கிடந்த தனது படுக்கையை இன்னும் சீர்குலைத்தபடி என் அருகே வந்தார்.

“உனக்கு ஓரினச்சேர்க்கையில் விருப்பமுண்டா ?”

நான் அவரை விரோதமும் விநோதமும் கலந்து பார்த்தேன். 

 “டேன் என்னாகிற்று? மன்னிக்கவும். எனக்கு அதில் விருப்பமில்லை.”

 “எனக்கும் கூடத்தான். ஆனால் முதலில் தோன்றிய பூமியில்தான் ஓரினச்சேர்க்கை தோன்றியது தெரியுமா?”

நான் அவரை ஆழமாகக் கவனிக்கத் தொடங்கினேன்.

 “ஆமாம். இந்த பூமி இரண்டு முறை படைக்கப்பட்டது. அதை நீ அறிந்திருப்பாய் என நம்புகிறேன். முதலில் பூமி உருவான போது நிறையச் சீர்குலைவுகள் இருந்தது. அருவிகள் பறந்தபடியும் மலைகள் அந்தரத்திலும் பலமரங்களின் வேர்கள் வானம் பார்த்தும் கிளைகள் புதையுண்டுதுமாகத் தோன்றின. ஆல்பர்டோனாச்சி ஓவியங்களின் குறுக்குவெட்டு மாதிரியான எண்ணங்களின் தோன்றலிலிருந்தன. அவைகள் எவ்விதத்திலும் தவறுதலாக முதலில் புரியவில்லை. ஏனெனில், அப்படியான பொருத்தமற்ற  வானமும் கடலும் மலைகளும் சரியாக அடுக்கப்படாத புது வீட்டை‌ப் போல் இருந்தது. அப்போதைக்குத் திணைகளின் வடிவமும் குணாதிசயமும் நடைமுறைக்கு வருவதற்காகவே சில காலம் பூமி  இயங்க வேண்டி இருந்தது. அப்போது பொழிந்தவைதான் எண்கள்.”

எனக்கு ஆர்வம் மேலோங்கியது. டேன் சொல்வது போலவே இங்கு எல்லாவற்றுமே நடைமுறைக்கு வர சில அவகாசம்  தேவையானதாகப் படுகிறது. அதில் பூமிகூட மாறுபட்டதல்ல என்று தோன்றியது. நமது எல்லா விதமான செயல்களும் ஒருமுறை பரிந்துரைக்கப்படுகிறது. அதற்கெனவே சிலகாலம் அதே குணாதிசயங்களோடு நடந்துதான் ஆகவேண்டும். அப்போதைய முதல் பூமியைப்போல.

டேன் தொடர்ந்தார்.

  “அப்போதைக்கு எண்களின் பண்புகள் மறைபட்டுக் கிடந்தாலும் அவைகளுக்கு  உணர்வுகள் இருந்தன. அவைகளால் நகரமுடியாத போதும், அவைகளை யாராவது அருகருகே வைப்பதன் மூலம் அவை, தங்கள் தேகங்களை உரசி உறவாடத் தொடங்கின. யூர் காட்டில் சேர்த்து வைக்கப்பட்ட இரு பூஜ்ஜியங்கள் ஒன்றோடு ஒன்றாக இணைந்து எட்டாக மாறத்தொடங்கின.இதனால் இயல்பிலேயே பொழிந்த எட்டுக்கும் புணர்வில் இணைந்த எட்டுக்குமான சச்சரவுகளையும் மக்கள் அதிகம் எதிர்கொண்டனர். அவர்களுக்குள்ளே அடித்துக்கொண்டும்  கலவரங்களை அடிக்கடி கையாண்டனர் இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால் எண்கள் பொருட்களாக வாழ்ந்த சொற்ப நாட்களிலும் கூட மக்கள் எண்களுக்காக தங்களைக் காயப்படுத்திக் கொண்டனர்.”

 “அப்படியென்றால் எண்களின் மதிப்பு தெரியப்படாத போதும், அவைகளுக்காக மக்கள் அடித்துக்கொண்டனர் அப்படியா?”

”ஆமாம்!  எண்கள் எப்போதுமே மக்களுக்குப் பிரச்சனைதான். பாலின வகைப்பாடு இல்லாத அந்த காலத்தில் எண்கள் அன்றைக்குப் புணர்தலின் வளைவில் தங்களை வளைத்து உறைந்து நின்றதில் இயல்பிலேயே தோன்றிய எண்களை நிறைய இம்சையித்தன. என்னிடம் கேட்டால் எண்கள்தான் உலகின் முதல் ஓரின சேர்க்கையாளர்கள் என்பேன்.”

டேனின் அந்த உரை எனக்கு போதும்‌ என்பது போல இருந்தது.ஆனாலும் அவருக்கு அது திருப்தியளிக்கவில்லை. அதனாலே மேலும் தொடர்ந்தார். 

“உனக்கு  கட்டுக்கதைகளைச் சொல்லவில்லை. நீ காலமென்பது எண்களாலே வரையறுக்கப்படுகிறது என்பதை நம்புகிறாயா?”

 “ஆமாம்”

 “அப்படியென்றால்‌ இதையும் நீ நம்பிதான் ஆகவேண்டும். முந்தைய பூமி எண்களின் பண்புகள் அறியாது அழிந்தது தற்போதைய பூமி பண்புகள் அறிந்ததாலே அழிகிறது.”

அவர் சொல்வது உண்மைதான். எனக்கு அவர் பேசப் பேச எண்களின் மீதான வியப்பு பெருகினாலும் ,அது எனக்குப் பதட்டத்தைக் கொடுப்பதாகவே உணர்ந்தேன்.பிறகு  நாங்கள் அங்கிருந்து புறப்பட்டோம். 

எங்களிடம் எப்போதுமே அழியாத உரையாடலாக அது அமைந்தது. டேன் உண்மையிலே  வியப்பான மனிதர்தான். அவர் அன்று அணிந்திருந்த கருப்பு நிற கோட்டும் மெல்லிய பட்டையுள்ள அந்த மூக்குக் கண்ணாடிக்குள் இருக்கிறதா இல்லையா என நான் சந்தேகித்த அவரது கண்களையும் எண்களின் வியப்பு வரும்போதெல்லாம் எண்ணிப்பார்ப்பேன்.

அன்று நாங்கள் கிளம்பும் போது  “உனக்கு இன்னும் நம்பிக்கை இல்லை என்றால், ஒருநாள் எனது  வீட்டுக்கு வா. பீகார் வனப்பகுதியில் எண் ஐந்து போலவே எடுக்கப்பட்ட எதனால் ஆனது என அறியாத ஒரு பொருள் கிடைத்தது யாருக்கும் தெரியாமல் வைத்திருக்கிறேன்: என்றார்.

நான் அதைப் பார்க்கப் பலமுறை முயன்றும் முடியாமல் போனது சமயங்களில் எண்ணிக்கொள்வேன்.

அவர் சொன்னது போலவே எனது மனநிலை மோசமடையக் கூடிய நாள், அதைப் பார்க்கிற நாளாகக் கூட இருக்கலாம். ஆனால் இப்போது டேன் இல்லை. அவர் இறந்து காலமாகி விட்டது.  அதனாலே அந்த ரகசியம் மறைந்த மாதிரி ஆகிவிட்டது. எண்களோடு என்னை வாழப் பழக்கிக்கொள்ள முயல்வதுண்டு. அப்படியான நேரங்களில் என்னைத் தொடர்பு கொள்கிற எல்லாவற்றிலும் எண்களால் மட்டுமே பேசக்கூடியவனாக மட்டுமே திகழ்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.