குமாரி அடெலா ஸ்ட்ரேஞ்ச்ஒர்த் பலசரக்கு கடைக்கு போவதற்காக, பிரதான சாலைக்கு ஒயிலாக நடந்து வந்தாள். நேற்று இரவு பெய்த பலத்த மழைக்குப் பிறகு, ஸ்ட்ரேஞ்ச்ஒர்த்தின் சிறிய நகரம் பளிச்சென்று அலம்பி விடப்பட்டது போல துலங்கியது. சூரியன் பிரகாசித்துக் கொண்டிருக்க, காற்று புத்தம் புதியதாகவும் மாசற்றும் இருந்தது. ஸ்ட்ரேஞ்ச்ஒர்த் ஆழமாக மூச்சை இழுத்தவாறே, வாசம் மிகுந்த கோடை நாளை விடச் சிறந்தது உலகில் வேறெதுவும் இல்லை என நினைத்துக் கொண்டாள்.
ஸ்ட்ரேஞ்ச்ஒர்த்திற்கு அந்த நகரில் இருந்த ஒவ்வொருவரையும் தெரிந்திருந்தது. எப்போதாவது நகரத்தை கடக்க நேரிடுகையில், அவளது ரோஜா தோட்டத்தை கண்டு மகிழ வரும் சுற்றுலாப் பயணிகளிடம், தன்னுடைய நீண்ட வாழ்நாளில் ஒரு நாள் கூட அந்த நகரத்தை விட்டு நீங்கியது இல்லை என்று ஸ்ட்ரேஞ்ச்ஒர்த் மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகச் சொல்லிக் கொள்வாள். தனக்கு எழுபத்தியோரு வயதாகிறது என்கிற தகவலையும் அவர்களிடம் பகிர்ந்து கொள்வாள். அவள் அப்படி கூறும் போது, அவளுடைய உதட்டுக்கருகே மிகச்சிறிய அழகான குழி ஒன்று தோன்றி மறையும். சில சமயம், அவள் அந்நகரமே தனக்கு சொந்தமானது என்றும் எண்ணிக்கொள்வதுண்டு. தன் நீல நிற கண்களை ஆச்சரியத்துடன் விரித்தவாறு, “என்னுடைய தாத்தா தான் இந்த ப்ளஸன்ட் தெருவின் முதல் வீட்டைக் கட்டியவர்” என்று கூறுவாள். ” இதோ, இங்கே இருக்கிறதே, இந்த வீடுதான். கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கும் மேலாக என் குடும்பத்தினர் இதே வீட்டில்தான் வசித்து வருகின்றனர். என பாட்டிதான் இந்த ரோஜா தோட்டத்தை உருவாக்கினார். என் அம்மாவைப் போலவே, நானும் இவற்றை பாதுகாத்து வருகிறேன். என் சிறு நகரம் என் கண் முன்னால் வளர்ந்ததைக் கண்டிருக்கிறேன். திருவாளர் லூயிஸ் பலசரக்குக் கடையை திறந்தது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ஆற்றில் வெள்ளம் வந்தபோது, அதில் தாழ்வான பகுதிகளில் இருந்த குடிசைகள் அடித்துச் சென்றதெல்லாம் எனக்கு நன்றாகவே நினைவிருக்கிறது.சில இளைஞர்கள், பூங்காவை, இப்போது புது போஸ்ட் ஆபீஸ் இருக்குமிடத்திற்கு எதிராக மாற்ற எடுத்த முயற்சிகளும் அதை அடுத்து நிகழ்ந்த அமளிகளும் கூட எனக்கு நினைவிருக்கிறது. அவர்கள் ஈத்தன் ஆலனின் சிலையை நிறுவ விரும்பினார்கள். என் தாத்தாவின் சிலையை அல்லவா நிறுவியிருக்க வேண்டும்? என்னுடைய தாத்தா மட்டும் இல்லாதிருந்தால், இன்று இந்த நகரமே இருந்திருக்காது” என்று சற்றே எரிச்சல் கலந்த காட்டமான குரலில் கூறுவாள்.
சுற்றுலா பயணிகள் மிகவும் விரும்பி கேட்ட போதிலும், ஸ்ட்ரேஞ்ச்ஒர்த் ரோஜா மலர்களை ஒருபோதும் பகிர்ந்து கொள்ள விரும்பியதில்லை. ரோஜா மலர்கள் ப்ளஸன்ட் தெருவுக்கு மட்டுமே சொந்தமானவை என அவள் நினைத்தாள். மேலும், சுற்றுலா பயணிகள் அவள் இதுவரை பயணித்திராத ஊர்களுக்கும், முன்பின் தெரியாத பாதைகளின் வழியாகவும் ரோஜா மலர்களை எடுத்துச் செல்ல முடியும் என்கிற எண்ணமே அவளை மிகுந்த பதற்றத்துக்குள்ளாக்கியது. சர்ச்சில் புதுப் பாதிரியார் வந்ததையடுத்து, பெண்கள் பூக்களை சேகரித்துக் கொண்டிருக்கையில், ஒரு பெரிய கூடை நிறைய கிளாடியோஸ் மலர்களையே அனுப்பினாள். பறித்த ரோஜா மலர்கள் அனைத்தையும் தன் தாத்தா கட்டிய வீட்டினுள்ளேயே குடுவைளிலும் ஜாடிகளிலும் அலங்கரித்து வைத்து விட்டாள்.
அந்த கோடைக்கால காலையில், நகரின் பிரதான வீதி வழியாக நடந்து வந்து கொண்டிருந்த ஸ்ட்ரேஞ்ச்ஒர்த்துக்கு எதிரில் தென்படுகிற எவருக்கேனும் காலை வணக்கம் கூறவோ அல்லது அவரது உடல்நிலை குறித்தும் விசாரிக்க வேண்டியோ, நிமிடத்துக்கு ஒருமுறை நிற்க வேண்டியிருந்தது. பலசரக்கு கடைக்குள் நுழைந்தவுடன், குறைந்தபடது ஆறு பேராவது தாங்கள் செய்துகொண்டிருந்த வேலையை நிறுத்தி விட்டோ அல்லது நின்ற இடத்திலிருந்து நகர்ந்து கைகளை ஆட்டியோ ஸ்ட்ரேஞ்ச்ஒர்த்துக்கு காலை வணக்கம் தெரிவித்தனர்..
முகமன்களை ஏற்றுக்கொண்டபின், ” உங்களுக்கும் காலை வணக்கங்கள உரித்தாகட்டும் மிஸ்டர் லூயிஸ் ” என்று ஸ்ட்ரேஞ்ச்ஒர்த் கூறினாள். லூயிஸ் குடும்பத்தினரும், ஏறத்தாழ ஸ்ட்ரேஞ்ச்ஒர்த் குடும்பத்தினரைப் போலவே அந்த நகரில் பல வருடங்களாகவே வசித்து வந்தனர்; எனினும் இளைய லூயிஸ் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு பலசரக்குக் கடையில் வேலைக்கு சேர்ந்த நாளிலிருந்து இன்றுவரை டாமி என்று அழைப்பதை நிறுத்திவிட்டு மிஸ்டர் லூயிஸ் என்றே அழைக்கலானாள். அவரும் அவளை ஆடி என்று அழைப்பதை விடுத்து மிஸ் ஸ்ட்ரேஞ்ச்ஒர்த் என்றே அழைத்தார். அவர்கள் பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள் :ஒன்றாக சுற்றுப்பயணங்கள் சென்றவர்கள்; பள்ளியில் நடக்கும் நடனங்களும் கூடைப்பந்தாட்ட போட்டிகளுக்கும் ஒன்றாக சென்றவர்கள். இப்போது மிஸ்டர் லூயிஸ் கல்லாவில் அமர்ந்திருக்கிறார். செல்வி ஸ்ட்ரேஞ்ச்ஒர்த் பிளஸன்ட் தெருவில் உள்ள ஸ்ட்ரேஞ்ச்ஒர்த் மாளிகையில் தனியாக வசிக்கிறார்.
மிஸ்டர் லூயிஸ் பதில் வணக்கம் தெரிவித்தவாறே, மிகுந்த மரியாதையுடன் “இந்த நாள் இனிய நாள் ஆகட்டும் “என்று கூறினர்.
அது ஒரு இனிய நாள் என்பதை அப்போதுதான் உணர்ந்து கொண்டவள் போல, “ஆம். இந்த நாள் உண்மையிலேயே ஒரு இனிய நாள் என்று ஸ்ட்ரேஞ்ச்ஒர்த் லூயிஸுக்கு பதிலளித்தாள். ” எனக்கு சிறிய மெல்லிய இறைச்சித்துண்டங்கள் தேவை. இந்த ஸ்ட்ராபெர்ரி பழங்கள் ஆர்த்தர் ர் பார்க்கரின் தோட்டத்தில் இருந்து வந்திருப்பவையா? இந்த வருஷம் இவை சீக்கிரமாகவே வந்து விட்டன” என்றாள்.
“இன்று காலையில் தான் அவர் இப்பழங்களை கொண்டு வந்தார்” என்று மிஸ்டர் லூயிஸ் பதிலளித்தார்.
“நான் ஒரு பெட்டி பழங்களை வாங்கிக் கொள்கிறேன்” என்றாள்ஸ்ட்ரேஞ்ச்ஒர்த். லூயிஸ் கவலையாக இருப்பது போல் அவளுக்கு தோன்றியது . கணநேர தயக்கத்துக்குப் பிறகு அது ஸ்ட்ராபெர்ரி பழங்களை குறித்த கவலையாக இருக்காது என அவளாகவே முடிவு செய்தாள். அவர் உண்மையிலேயே கலைப் அடைந்தவராக காணப்பட்டார். வழக்கமாக அவர் இன்றைக்காட்டிலும் உற்சாகமாக இருப்பவர் என்று நினைத்ததைச் சொல்ல வாயெ டுத்துவிட்டு, ஒரு கணம் தயங்கி லூயிஸ் என்கிற பலசரக்கு கடை முதலாளியிடம் இத்தகைய தனிப்பட்ட கருத்துக்களை பகிர்ந்து கொள்ளத் தேவையில்லை என முடிவு செய்தாள். பூனை உணவு டப்பா ஒன்றும், தக்காளி ஒன்றும் கூட தேவை என்பதை மட்டும் தெரிவித்தாள்.
மிஸ்டர் லூயிஸ், மௌனமாக, அவள் கேட்ட பொருட்களைமேஜையின் மீது வைத்துவிட்டு காத்திருந்தார். ஸ்ட்ரேஞ்ச்ஒர்த் அவரை குறுகுறுவென பார்த்தவாறு, ” இன்று செவ்வாய்க்கிழமை மிஸ்டர் லூயிஸ்! நீங்கள் எனக்கு நினைவூட்ட மறந்து விட்டீர்கள்” என்றாள்.
“ஓ ! அப்படியா மன்னித்துவிடுங்கள்!”
“நான் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் டீத்தூள் வாங்குவேன் என்பதே மறந்து விட்டீர்களே” என ஸ்ட்ரேஞ்ச்ஒர்த் மென்மையாகக் கூறிக்கொண்டே “கால் பவுன்ட் டீத்தூளும் கொடுத்து விடுங்கள்” என்றாள்.
“அவ்வளவுதானே, செல்வி ஸ்ட்ரேஞ்ச்ஒரத்?”
“ஆம. அவ்வளவுதான். நன்றி மிஸ்டர் லூயி. இந்த நாள் எவ்வளவு இனிமையான நாள்! இல்லையா?”
“ஆம் . அருமையான நாள்!” என்றார் மிஸ்டர் லூயிஸ்ஸ்.
திருமதி ஹார்ப்பருக்கு இடம் அளிக்கும் வகையில் ஸ்ட்ரேஞ்ச்ஒர்த் சற்றே நகர்ந்தாள்.
“காலை வணக்கம், அடெலா” திருமதி ஹார்ப்பர் ஸ்ட்ரேஞ்ச்ஒர்த்தைப் பார்த்து கூறினாள். ” இந்த காலை இனிய காலையாகட்டு மார்த்தா” என ஸ்ட்ரேஞ்ச்ஒர்த் பதிலளித்தாள்.
ஆம். உண்மையிலேயே இனிமையான நாள்”என்றாள் திருமதி ஹார்ப்பர். மிஸ்டர் லூயிஸ் அவளது பார்வையை கவனித்தவாறே தலையசைத்தார்
” ஃப்ராஸ்டிங் செய்ய சர்க்கரை தீர்ந்துவிட்டிருந்தது” திருமதி ஹார்பர் விளக்க முயன்றாள். கையிலிருந்த சிறிய நோட்டுப் புத்தகத்தை திறக்க முற்படுகையில், அவளது கைகள் லேசாக நடுங்கின. ஸ்ட்ரேஞ்ச்ஒர்த் அவளை மௌனமாக பார்த்தவாறே, அவள் தன் மீது போதிய கவனம் செலுத்திக்கொள்வதில்லை என மனதுக்குள் எண்ணினாள்.உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள அவள் ஏதாவது டானிக் அருந்தினால் கூட நல்லது என்று ஸ்ட்ரேஞ்ச்ஓர்த்துக்கு தோன்றியது.
“மார்த்தா, உன்னைப் பார்த்தால் அத்தனை ஆரோக்கியமாக இருப்பது போல தெரியவில்லையே?” என்றாள்.
“நான் நன்றாகத்தான் இருக்கிறேன்” என திருமதி மார்த்தா ரத்தின சுருக்கமாக பதிலளித்தாள். பணத்தை லூயிஸிடம் கொடுத்துவிட்டு, சர்க்கரையை எடுத்துக் கொண்டு ஒரு வார்த்தையும் பேசாமல் கடையை விட்டு வெளியேறினாள். அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்த ஸ்ட்ரேஞ்ச்ஒர்த் லேசாக தலையை ஆட்டிக்கொண்டாள். ” மார்த்தா உண்மையிலேயே நலமாகத்தான் இல்லை”
தன் சிறிய பலசரக்கு பையை எடுத்துக் கொண்டு, கடையை விட்டிறங்கி, தெருவின் பிரகாசத்திற்கு வந்த ஸ்ட்ரேஞ்ச்ஒர்த் கிரேன் குழந்தையை பார்த்து சிரிக்கக் குனிந்தாள். மிக நுண்ணிய பூ வேலைப்பாடு செய்யப்பட்டிருந்த குழந்தையின் தலை தொப்பியையும், ஓரங்களில் லேஸ் வைத்து தைக்கப்பட்டிருந்த குழந்தையின் தள்ளு வண்டியின் மேற்கூரையும் பார்த்தவாறே, எனக்குத்தெரிந்து டான் மற்றும் ஹெலன் கிரேனை போல, பரஸ்பரம் காதல் வயப்பட்ட இளம் பெற்றோர்கள் எவருமில்லை” என வாஞ்சையுடன் எண்ணிக் கொண்டாள்.
“இந்தக் குட்டிப் பெண், வளர வளர சொகுசுக்கும் சுகத்துக்கும் பழகிப் போய், அவற்றை மேலும் மேலும் தேடப் போகிறாள்” என்றாள் ஸ்ட்ரேஞ்ச்ஒர்த்.
“ஆம். அவள் அப்படி ஒரு மகாராணியை போல வளரவேண்டும் என்றுதான் நாங்களும் விரும்புகிறோம்” என்று ஹெலன் சிரித்தவாறே பதிலளித்தாள்.
“மகாராணி என்றால் பல கஷ்டங்களையும் எதிர்கொள்ள வேண்டிவரும்” ஸ்ட்ரேஞ்ச்ஒர்த் அசுவாரசியமாக பதிலளித்தாள். “மகாராணிக்கு இப்போது என்ன வயதாகிறது?”என்று கேட்டாள்.
“அடுத்த செவ்வாய்க்கிழமை க்கு ஆறு மாதம் முடிந்து விடும்” ஹெலன் தன் குழந்தையை, ஒரு அதிசயத்தை பார்ப்பது போல பார்த்தவாறே பதிலளித்தாள். “எனக்கு இவளைப்பற்றி கவலையாக இருக்கிறது.
“இவள் இன்னும் வேகமாக வளர்ந்திருக்கவேண்டுமோ, உதாரணமாக, இதற்குள் உட்கார முயற்சி செய்திருக்கவேண்டாமா?”
“தேவையில்லாத வீணான கவலைகள்” ஸ்ட்ரேஞ்ச்ஒர்த் வேடிக்கையாகச் சொன்னாள். “இந்த புது அம்மாக்களால் பெருந்தொல்லைதான் எப்போதும்”
“இவள் வளர்ச்சி கொஞ்சம் மெதுவாகத்தான் இருக்கிறது’ என்றாள் ஹெலன் க்ரேன்.
” முட்டாள்தனம். ஒவ்வொரு குழந்தையும் வித்தியாசமானவை. சில குழந்தைகள் மற்ற குழந்தைகளை காட்டிலும் வேகமாக வளரும்”
என் அம்மாவும் இதையே தான் சொல்கிறாள் என்று சற்று வெட்கத்துடன் சிரித்தாள் ஹெலன் க்ரேன்.
“ஆறு மாதமாகியும் கூட இன்னமும் இவள் நடனமாடப் பழகவில்லை என்று, நீ பாவம் டானை இதற்குள் அவமானப்படுத்தி, கவலைப்பட வைத்திருப்பாய் இல்லையா?”
“நான் இதைப்பற்றியெல்லாம் டானிடம் இதுவரை எதுவும் பேசவில்லை. இவள் எங்களுடைய விலைமதிப்பற்ற ரத்தினம், ஆதலால்தானோ என்னவோ, முழு நேரமும் இவளைப் பற்றியே கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறேன்.”
“சரி, இப்போதே இவளிடம் மன்னிப்பு கேள். நீ ஏன் எப்பொழுதும் குதித்துக் கொண்டே இருக்கிறாய் என ஒரு வேளை அவளும் உன்னை பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்க கூடும்” தனக்குத் தானே சிரித்துக் கொண்டே, தன் வயோதிக தலையை அசைத்தவாறு ஸ்ட்ரேஞ்ச்ஒர்த் தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கினாள். அதற்குள் அவள் சிறுவன் பில் மூர் ஏன் இந்நாட்களில் தன் தந்தையின் பளபளக்கும் புத்தம்புது காரை ஓட்டுவதில்லை என்றும், நூலக மேலாளர் செல்வி ஷாண்ட்லரிடம் வருடாவருடம் நூலகத்லிற்காக ஒதுக்கப்படும் தொகையிலிருந்து நூலகத்திற்கு தேவையான புத்தகங்களை வாங்க வேண்டியது குறித்து பேசவும் தவறவில்லை. செல்வி ஷாண்ட்லர் மறதி நிறைந்தவள் போலவும், வேறு எதைப்பற்றியோ யோசித்துக் கொண்டிருப்பவள் போலவும் காணப்பட்டாள். அவள் தன் தலை முடியை கூட சீர்படுத்திக் கொள்ள மறந்திருப்பதைக் கண்டு ஸ்ட்ரேஞ்ச்ஒர்த் பெருமூச்சு விட்டாள். அவள் இத்தகைய சோம்பேறித்தனத்தை அறவே வெறுத்தாள்.
இந்நாட்களில் பலரும் ஏதேதோ காரணங்களால் அமைதியற்று காணப்படுவதாக ஸ்ட்ரேஞ்ச்ஒர்த் கருதினாள். நேற்றுதான் ஸ்டூவார்ட்ஸின் பதினைந்து வயது மகள் லிண்டா, எவரேனும் கவனிக்க கூடும் என்கிற பிரக்ஞை கூட இன்றி, தன் வீட்டிலிருந்து பள்ளிக்குப் போகிற வழி முழுவதும் அழுது கொண்டே போனாள். நகரத்தார் அவள் அந்த ஹாரிஸ் பையனோடு சண்டையிட்டி ருக்கக்கூடும் என நினைத்தார்கள். ஆனால் இரண்டு பேரும், வழக்கம் போல, பள்ளி முடிந்த பிறகு சோடாக்கடையில் தென்பட்டார்கள். அவர்கள் இறுக்கமாகவும் நம்பிக்கை இழந்தவர்கள் போலவுமே காணப்பட்டார்கள். வீட்டில்தான் எதோ பிரச்சனையாக இருக்கக் கூடும் என்று மக்கள் முடிவு செய்ததோடலாமல், இந்நாட்களில் குழந்தைகளை சரியான முறையில் வளர்ப்பதில் உள்ள சிக்கல்களை குறித்தும் பெருமூச்சு விட்டபடி அலுத்துக் கொண்டார்கள்.
வீட்டை அடைய பாதி தூரம் இருக்கும்போதே, தோட்டத்து ரோஜாக்களின் மணம் ஸ்ட்ரேஞ்ச்ஒர்த்தின் நாசிகளை தீண்ட, அவள் மேலும் வேகமாக நடக்கத் தொடங்கினாள். ரோஜாக்களின் நறுமணம் வீட்டை நினைவுபடுத்தியது. வீடு என்பது பிளஸன்ட் தெருவில் அமைந்திருந்த ஸ்ட்ரேஞ்ச்ஒர்த் மாளிகை. எப்போதும்போல, ஸ்ட்ரேஞ்ச்ஒர்த், வீட்டின் வாயிலில் ஒரு கணம் நின்று ஆழ்ந்த மகிழ்ச்சியுடன் தன் வீட்டை நோக்கினாள். வீட்டுக்குச் செல்லும் குறுகலான வழி நெடுகிலும் வளர்ந்திருந்த சிவப்பு, ரோஜா மற்றும் வெள்ளை நிற ரோஜாச்செடிகளையும், வீட்டின் முகப்பு முன்றில் மீது படர்ந்து வளர்ந்திருக்கும் கொடிகளையும், ஆச்சரியமான வகையில் நேர்த்தியாகக் கட்டப்பட்டிருந்த வீட்டையும், அப்போதுதான் நீரால் கழுவி விடப்பட்டது போன்ற அதன் பளிச்சென்ற தோற்றத்தையும் ரசித்தவாறே நின்றிருந்தாள். ஒவ்வொரு ஜன்னலும் சுத்தமாக ஜொலித்தது. திரைச் சீலைகள் நேராகவும், உறுதியாகவும் தொங்கவிடப்பட்டிருந்தன. வீட்டின் முன்புறம் பதிக்கப்பட்டிருந்த கற்பாதை கூட பெருக்கிவிடப்பட்டு சுத்தமாகக் காட்சி அளித்தது. இந்த வயதிலும் ஸ்ட்ரேஞ்ச்ஒர்த் எப்படி தன் வீட்டை இவ்வளவு நன்றாகவும் சுத்தமாகவும் பராமரிக்கிறாள் என நகரத்தார் சிலாகிப்பது ண்டு. ஒரு சுற்றுலாப் பயணி அந்த வீட்டை அருங்காட்சியகம் என தவறாக புரிந்து கொண்டு, வீட்டின் எல்லா பாகங்களுக்கும் சென்று வந்தான் எனவும் ஒரு கதை கூறப்படுவதுண்டு. ஸ்ட்ரேஞ்ச்ஒர்த் குறித்தும் அவளது மாளிகை மற்றும் ரோஜா தோட்டங்கள் குறித்தும் நகரத்தாருக்கு மிகுந்த பெருமிதம் உண்டு. அவை அனைத்தும் ஒரே காலகட்டத்தில் ஒன்றாக வளர்ந்தவையே.
ஸ்ட்ரேஞ்ச்ஒர்த் வாயிற்படிகளை அடைந்ததும், சாவியால் முன் வாசல் கதவை திறந்துகொண்டு, வாங்கி வந்த பலசரக்கு சாமான்கள் வைக்க, நேராக சமயலறைக்கு சென்றாள். ஒரு கோப்பை தேநீர் குடிக்கலாமா என்று சற்றே மனதுக்குள் விவாதித்த பின்னர், மதிய உணவிற்கான நேரம் ஆகிவிட்டிருந்தபடியாலலும், தேநீர் குடித்தால் இறைச்சித் துண்டுகளை சாப்பிடத் தேவையான பசி இருக்காது என்பதாலும் தேனீர் குடிக்க வேண்டாம் என முடிவு செய்தாள். மாறாக, அவளுடைய பாட்டியும் தாயாரும் கை வேலைப்பாடுகள் செய்து அலங்கரித்த திரைச்சீலை மற்றும் நாற்காலியின் மேல் விரிக்கப்படும், பூக்கள் நிறைந்த, அழுத்தமான பளீரிடும் வண்ணப் பருத்தித் துணியால் அலங்கரிக்கப்பட்ட இருக்கைகள் நிறைந்ந அறைக்குள் சென்று அமர்ந்தாள். அறைக்குள் இருந்த மரச்சாமான்கள் நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டு பளபளத்துக் கொண்டிருந்தன. தரையில் விரிக்கப்பட்டிருந்த வட்டவடிவ கம்பளங்கள் ஸ்ட்ரேஞ்ச்ஒர்த்தின் பாட்டியலும் தாயாராலும் நெய்யப்பட்டவை. ஜன்னலை ஒட்டியிருந்த குட்டையான மேஜையில், ஸ்ட்ரேஞ்ச்ஒர்த் ஒரு கிண்ணத்தில் சிவப்பு ரோஜாக்களை அலங்கரமாக வைத்திருந்ததினால், அறை முழுவதும் ரோஜாப்பூக்களின் நறுமணம் பரவியிருந்தது.
ஸ்ட்ரேஞ்ச்ஒர்த் அறையின் மூலையில் இருந்த குறுகலான சாய்வு மேஜையை தன்னுடைய சாவியால் திறந்தாள். கடிதம் எழுத வேண்டிய தேவை எப்போது ஏற்படும் என்று உறுதியாகத் தெரியாததால், காகிதங்களை அந்த சாய்வு மேஜைக்குள் வைத்து பூட்டி இருந்தாள். ஸ்ட்ரேஞ்ச்ஒர்த் வழக்கமாக உபயோகிக்கும் காகிதங்கள் கனமாகவும் க்ரீம் நிறத்திலும் இருக்கும். அதன் முன்புறம் ஸ்ட்ரேஞ்ச்ஒர்த் மாளிகை என்று பொறிக்கப்பட்டிருக்கும். மற்ற கடிதங்கள் எழுத வேண்டி வரும்போது, நகரின் செய்தித்தாள்கள் விற்கும் கடையிலிருந்து வாங்கப்பட்ட பல்வேறு வண்ண காகிதங்களை உபயோகித்தாள். ரோஜா, பச்சை மற்றும் நீல வண்ணங்களில், ஒழுங்கான வரிசையில் அடுக்கப்பட்ட காகிதங்களை, நகரத்தார் சாமான் பட்டியல் எழுதவும், தனிப்பட்ட தகவல்களை எழுதி வைத்துக் கொள்ளவும் வாங்கினர். நீல நிற காகிதத்தில் எழுதப்பட்ட செய்திக்குறிப்பு கிடைக்கையில் அன்னாருக்கு விரைவில் புது நோட்டு புத்தகம் தேவைப்படும் என்று புரிந்து கொள்வது வழக்கம் . ஆனால் இங்கோ, ஸ்ட்ரேஞ்ச்ஒர்த ஏற்கனவே நீலநிறக் காகிதத்தில் எழுதத் தொடங்கிவிட்டாள். அனைவரும் காகிதத்திற்கு பொருத்தமான நிற உறைகளையே தேர்ந்தெடுத்தனர். சமையல் குறிப்புகளையும் வேறு முக்கிய குறிப்புகளையும் எழுதி வைக்கவும், பிஸ்கட்டுகளை பள்ளிக்கூட சாப்பாட்டு பையில் வைக்கவும், அந்த உறைகளை பயன்படுத்தினர். மிஸ்டர் லூயிஸ், சில சமயம் பைசா வடிவ மிட்டாய்களை வைத்துக்கொள்ள சிறுவர்களுக்கு அந்த உறைகளை கொடுப்பது வழக்கம்.
ஸ்ட்ரேஞ்ச்ஒர்த்தின் சாய்வு மேஜையில் அவருடைய தாத்தாவிற்குச் சொந்தமான சிறகுப்பேனாவும், அவளுடைய தந்தை உபயோகப்படுத்திய தங்கமுலாம் பூசப்பட்ட பேனாவும் இருந்தபோதிலும், அவள் கூர்மையற்ற, முனை மழுங்கிய, அழுத்தமாக எழுதாத பென்சிலையே குறிப்புகளை எழுத எப்போதும் யன்படுத்தினாள். அவளுடைய கையெழுத்து, ஒரு குழந்தையின் கையெழுத்தை போலவே முதிர்ச்சியற்று இருந்தது. கடைத் தெருவிலி ருந்து திரும்பி வருகையில், மனதிற்குள் என்ன எழுதவேண்டும் என்று தீர்மானித்துவிட்டி ருந்தபோதிலும், ஒரு நிமிட யோசனைக்குப் பிறகு, ரோஜா நிற காகிதத்தில் “நீங்கள் எதாவது ஒரு முட்டாள் குழந்தையை பார்த்திருக்கிறீர்களா? சிலர் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளவே கூடாது. சரிதானே?”
என்று எழுதினாள்.
அவளுக்கு தான் எழுதிய கடிதம் மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. செயல்களை மிகச்சரியாக செய்வது அவளுக்கு பிடித்தமானது.. சில சமயம் ஏதாவது தவறு செய்து விட்டாலோ அல்லது எழுத்துக்கள் காகிதத்தில் சரியான முறையில் இடைவெளி விடப்பட்டு எழுதப்படாவிட்டாலோ, அவள் அக்காகிதங்களைக் கிழித்து, அவற்றை உடனடியாக சமயலறை அடுப்பில் எரித்து விடுவது வழக்கம். காரியங்களை உடனுக்குடன் கச்சிதமாக செய்து முடிக்க அவள் ஒருபோதும் சுணங்கியதேயில்லை.
ஒரு நிமிட யோசனைக்குப் பிறகு அவள் இன்னொரு கடிதம் எழுத முடிவு செய்தாள். எழுதி அனுப்பிய கடிதங்களின் தொடர்ச்சியாக, திருமதி ஹார்ப்பருக்கு கடிதம் எழுத நினைத்தாள். இந்த முறை பச்சை நிற காகிதத்தை தேர்ந்தெடுத்து அதில் விரைவாக கீழ்கண்டவாறு எழுதினாள் “வியாழக்கிழமை பிரிட்ஜ் க்ளப்பை விட்டு நீங்கள் கிளம்பிய உடனே, அவர்கள் எதைப்பற்றி சிரித்தார்கள் என்பதை கண்டுபிடித்து விட்டீர்களா? அல்லது மனைவி தான் உண்மையை கடைசியாக தெரிந்துகொள்பவளா?”
ஸ்டேஞ்ச்ஒர்த் தகவல்களின் நம்பகத்தன்மை குறித்து ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. அவளுடைய கடிதங்களில் சந்தேகத்துக்குரிய மற்றும் விவாதத்திற்கு உட்படுத்த வேண்டிய விஷயங்களே நிறைந்திருந்தன. ஸ்ட்ரேஞ்ச்ஒர்த் தின் கடிதம் கிடைத்திராவிட்டால், தன் பேரன் பலசரக்குக் கடையின் கல்லாவில் இருந்து பணத்தை எடுக்கக்கூடும் என்பதை மிஸ்டர் லூயிஸ் கனவிலும் நினைத்து பார்த்திருக்க மாட்டார். ஸ்ட்ரேஞ்ச்ஒர்த் தின் கடிதம் அவர்களது கண்களை திறந்திறாவிட்டால், நூலக மேலாளர் செல்வி ஷாண்ட்லரோ அல்லது லிண்டாவின் பெற்றோர் ஸ்டூவர்ட்ஸோ, அவர்களை நெருங்கி கொண்டிருக்கும் அபாயத்தை உணராமல், எந்தவிதமான சந்தேகமுமின்றி வழக்கம் போல தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கக்கூடும். லிண்டா ஸ்டூவர்ட்ஸுக்கும் ஹாரிஸுக்கும் இடையிலான உறவு குறித்து அவள் உண்மையிலேயே அதிர்ச்சி அடைந்திருப்பாள் எனினும் உலகில் கயமை கட்டுப்பாடில்லாமல் தலைவிரித்தாடுகையில், தன்னுடைய நகரத்தை எச்சரிக்கைப்படுத்துவதும் காப்பதும் தன் தலையாய கடமை என்று ஸ்ட்ரேஞ்ச்ஒர்த்நினைத்தாள் . எதையுமே தெரிந்து கொள்ளாமலிருப்பதைவிட, மிஸ்டர் ஷெல்லியின் முதல் மனைவி, உண்மையில் என்ன காரணத்தால் இறந்தாளென்று செல்வி ஷாண்ட்லர் தெரிந்து கொள்ளவேண்டியது புத்திசாலித்தனம் என்று நம்பினாள். முழு உலகமும் கொடியவர்களால் நிரம்பி வழிந்த போதிலும், அந்த நகரத்தில் ஸ்ட்ரேஞ்ச்ஒர்த் ஒருத்தி மட்டுமே எஞ்சி இருந்தாள். மேலும், ஸ்ட்ரேஞ்ச்ஒர்த் துக்கு கடிதம் எழுதுவதென்பது பிடித்திருந்தது.
கண நேர யோசனைக்குப் பிறகு, கடிதம் எழுதிய காகிதத்திற்கு பொருத்தமான ரோஜா நிற உறையை தேர்ந்தெடுத்து அதில் டான் கிரேனின் முகவரியை எழுதும்போது, இந்த கடிதத்தை டான் தன் மனைவியிடம் காண்பிப்பானா என்கிற எதிர்பார்ப்பு நிறைந்த குறுகுறுப்பு தோன்றியது. இரண்டாவதாக பச்சை நிற உறையின் மீது திருமதி ஹார்பரின் முகவரியை எழுதினாள். இதற்கு நடுவே அவளுக்கு ஒரு யோசனை தோன்றியது. . அவள் நீல நிற காகிதத்தை தேர்ந்தெடுத்து இவ்வாறு எழுதினாள்- ” மருத்துவர்களைப் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது. அவர்களும் நம்மை போலவே மனிதர்கள் என்பதையும் அவர்களுக்கும் நம்மைப்போலவே பணத்தேவை இருக்கக்கூடும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். எதிர்பாராதவிதமாக கத்தி கை நழுவி விழுந்து விட்டால், டாக்டர் பர்ன்ஸ் தனக்கான கட்டணத்தையும் கூடுதலாக ஒரு தொகையையும் உங்கள் மருமகனிடமிருந்து வசூலித்துக் கொள்வாரா?”
நீல நிற உறையை அவள் அடுத்த மாதம் அறுவை சிகிச்சை செய்துகொள்ள இருக்கும் முதியவர் ஃபாஸ்டருக்கு அனுப்பினாள். பில் மூரின் தந்தையைப் போன்ற, ஒரு சாதாரண ரசாயன பாட ஆசிரியரால் எப்படி புது கன்வெர்ட்டிபிள் வண்டி வாங்க முடிகிறது என்று பள்ளி நிர்வாகக் குழுத் தலைவருக்கு ஒரு கடிதம் எழுதலாமா என நினைத்தாள் ஆனால், திடீரென கடிதம் எழுதிக் களைத்துப் போனது போல உணர்ந்தாள். இன்று எழுதிய மூன்று கடிதங்களுமே ஒரு நாளைக்கு போதுமானவை. நாளைக்கு மேலும் எழுதிக்கொள்ளலாம். தவிர, எல்லாவற்றையும் ஒரே நாளில் எழுதிவிட வேண்டும் என்கிற கட்டாயம் எதுவுமில்லை.
அவள் கடிதம் எழுதிக் கொண்டுதான் இருக்கிறாள் – சிலசமயம் வாரத்தின் எல்லா நாட்களிலும் தினமும் இரண்டு மூன்று – சிலசமயம் மாதத்தில் ஒரு கடிதத்துக்கு மேல் எழுதுவதில்லை – கடந்த ஒரு வருடமாக. தன் பெயரை எழுதி கையெழுத்திடாததால் அவளுக்கு யாரிடமிருந்தும் எந்த பதிலும் வரவில்லை. அவளிடம் ஒரு வேளை கேட்கப்பட்டி ருந்தால், நகரத்தில் பல வருடங்களாக மதிப்புடன் உச்சரிக்கப்படும் அவள் பெயரான அடேலாஸ்ட்ரேஞ்ச்ஒர்த் என்கிற பெயரை இத்தகைய குப்பைகளுடன் ஒருபோதும் இணைத்து விட முடியாது என்று கூறியிருப்பாரள். அவளுடைய நகரம் சுத்தமாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்கப்பட வேண்டும். ஆனால், மக்கள் பேராசை பிடித்தவக்வர்களாகவும், கொடூர குணம் உடையவர்களாகவும், தரம் தாழ்ந்தவர்களாகவுமே இருக்கிறார்கள் என்பதால் அவர்களை கவனமாக கண்காணிக்க வேண்டி இருக்கிறது. இத்தனை பெரிய உலகில்,த் அவள் ஒரேஒருத்தி மட்டுமே எஞ்சி இருக்கிறாள். ஸ்ட்ரேஞ்ச்ஒர்த் பெருமூச்சு விட்டவாறே, சாய்வு மேஜையை பூட்டிவிட்டு, மாலை நடை பயிற்சியின் போது தபால் பெட்டியில் சேர்ப்பதற்காக, கடிதங்களை தன் பெரிய கருப்பு தோல் பையில் வைத்துக் கொண்டாள்
பகல் உணவிற்கு உட்காருமுன் முன் அவள் இறைச்சித் துண்டுகளை நன்றாக வேக வைத்துக் கொண்டாள். தக்காளி துண்டங்களையும் ஒரு கோப்பை சுவையானதேநீரரையும் தயாரித்து வைத்துக்கொண்டாள்.22 பேர் ஒரே நேரத்தில் அமரக்கூடிய பெரிய மேஜையில் அமர்ந்து கொண்டாள். தேவைப்பட்டால் இரண்டாவது மேஜையும் வரவேற்பறையில் போட்டுக்கொள்ள முடியும். உயரமான ஜன்னல்களின் வழியே சாப்பாட்டு அறைக்குள் வந்த வெளிச்சத்தின் கதகதப்பை அனுபவித்தவாறே, வெளிப்புறம் இருந்த ரோஜா தோட்டத்தை பார்த்துக்கொண்டே, புராதன வெள்ளி சாப்பாட்டுக்கு கிண்ணங்களையும் சீனப்பளிங்கு பாத்திரங்களையும் உணவருந்த உபயோகித்ததில் ஸ்ட்ரேஞ்ச்ஒர்த் மிகவும் மகிழ்ச்சியுற்றாள். இதைத் தவிர வேறெதையும் செய்ய அவள் சற்றும் விரும்பியிருக்கமாட்டாள். மக்கள் மரியாதைக்குரிய வகையில் வாழவேண்டும் என்று நினைத்தவாறே அவள் தேனீரை உறிஞ்சினாள். பின்னர் அவளது சாப்பாட்டு தட்டு மற்றும் தேநீர் அருந்திய கோப்பைகள் கழுவி துடைக்கப்பட்டு அலமாரிகளில் வைக்கப்பட்டதும் வெள்ளிப் பாத்திரங்களும் கழுவித் துடைக்கப்பட்டு மஹாகனி மரத்தில் செய்யப்பட்ட அலமாரிக்குள் வைக்கப்பட்டதும் ஸ்ட்ரேஞ்ச்ஒர்த் மாடிப்படிகளில் ஏறி தன் படுக்கை அறையை அடைந்தாள்.
படுக்கையறை, மாளிகையின் முற்பகுதியில், தோட்டத்தை பார்த்தபடி அமைந்திருந்தது. அவருடைய பாட்டியும் அம்மாவும் அதே படுக்கையறையைத்தான் உபயோகித்தார்கள். அவர்களுடைய கிரௌன் டெர்பி அலங்கார கண்ணாடி மேஜையும், விலங்குகளின் மென் முடியாலான தோலாடைகளும் அந்த அறையில்தான் வைக்கப்பட்டிருந்தன. அவர்கள் பயன்படுத்திய கைவிசிறிகளும், வெள்ளிப் பூண் போட்ட சீப்புகளும், ரோஜா பூக்களை அலங்கரிக்க உபயோகித்த அவர்களின் பிரத்தியேக கிண்ணங்களும் கூட அதே அறையில் தான் இருந்தன.ஸ்ட்ரேஞ்ச்ஒர்த் வெள்ளை ரோஜாக்களால் அலங்கரிக்கப்பட்ட கிண்ணம் ஒன்றை தன் படுக்கையை ஒட்டிய சிறிய மேஜையின் மீது வைத்திருந்தாள்.
திரைச்சீலையை மூடிவிட்டு, ரோஜா நிற சாட்டின் துணியாலான போர்வையை கட்டிலிலிருந்து எடுத்தாள். தன் உடுப்பையும் காலணிகளை கழற்றிவிட்டு களைப்புடன் படுத்தாள் . வாயில் மணியோ தொலைபேசி மணியோ ஒலிக்காது என்று அவளுக்குத் தெரியும் .அவளுடைய மதியத் தூக்க நேரத்தில் யாரும் அவளை தைரியமாக தொந்தரவு செய்ய மாட்டார்கள். ரோஜா பூக்களின் அடர்த்தியான நறுமணம் சூழ, அவள் ஆழ்ந்து உறங்கினாள்.
தூங்கி எழுந்தபின் அவள் சிறிது நேரம் தோட்டத்தில் வேலை செய்தாள். பிறகு இரவு உணவு உண்ண வந்தாள். தன் தோட்டத்தில் விளைந்த அஸ்பராகஸ் இலைச்சாற்றை இனிப்பு வெண்ணெயுடன் குடித்தாள். வேகவைக்கப்பட்ட மிருதுவான முட்டை ஒன்றையும் உண்டாள். பின்னிரவுச் செய்திகளை கேட்டவாறே அவள் இரவு உணவை முடித்தாள். பின்னர், தன் சிறிய வானொலிப் பெட்டியில் புராதன இசை நிகழ்ச்சியையும் கேட்டாள். பாத்திரங்கள் துலக்கப்பட்டு, சமையலறை ஒழுங்கு செய்யப்பட்ட பின், அவள் தன் தொப்பியை கழற்றினாள் – ஸ்ட்ரேஞ்ச்ஒர்த்தின் தொப்பிகள் நகரதில் பிரசித்தி பெற்றவை. தன் பாட்டியிடமிருந்தும், தாயாரிடமிருந்தும் அவற்றை அவள் பரம்பரை சொத்தாக பெற்றிருந்தாள் என்று நகர மக்கள் பேசிக்கொண்டார்கள் –
மாளிகையின் முக்கிய வாயிற் கதவை தாழிட்ட பின், அவள் தன் நோட்டுப் புத்தகத்தை கக்கத்தில் இடுக்கிக் கொண்டு, மாலை நடையை முடிக்க புறப்பட்டாள். குளிர்ச்சியான மாலை நேரத்தில் தன் வண்டியைக் கழுவி சுத்தம் செய்து கொண்டிருந்த லிண்டா ஸ்டூவர்ட்டின் தந்தையை நோக்கி தலையசைத்தாள். அவர் ஏதோ கவலையில் ஆழ்ந்திருப்பது போல அவளுக்கு தோன்றியது.
நகரத்திலிருந்த, பளீரிடும் சிவப்பு நிற செங்கற்கள் பாவிய மற்றும் வெள்ளி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட புது போஸ்ட் ஆபீஸிலிருந்து மட்டுமே அவள் தன் கடிதங்களை அனுப்ப முடிந்தது விசேஷ கவனம் எதுவும் எடுத்துக்கொள்ளாவிட்டாலும், ஸ்ட்ரேஞ்ச்ஒர்த் தன் கடிதங்களை மிகவும் இரகசியமாகவே அனுப்பினாள். அவள் அப்படி கடிதங்களை அனுப்புவதை எவரேனும் பார்ப்பதென்பது அவ்வளவு உசிதமாக இராது. எனவே தான், அவளுடைய ஒயிலான நடையையும், உரசி வழுக்கும் ஆடையையும் எவரும் தவற விட்டுவிட முடியாது என்ற போதிலும், மரங்களும் மனிதர்களின் முகங்களும் மறையத் தொடங்குகிற, இருள் கவிழும் வேளையை, தன் மாலை நடைக்காக தேர்ந்தெடுத்துக்கொண்டாள்.
நகரிலிருந்த மற்ற எல்லா பாதைகளைக்காட்டிலும் மிருதுவானதாக,
போஸ்ட் ஆபீஸ் வளாகத்தை ஒட்டிய பாதையே அமைந்திருந்ததால், அங்கு எந்நேரமும் ஸ்கேட்டிங் செய்யும் சிறுவர்கள் கூட்டமாகக் குழுமியிருப்பார்கள். அவர்களை விட சற்றே மூத்த பையன்கள் சிறு குழுக்களாக சேர்ந்து நிற்கவும் அரட்டை அடித்து சிரிக்கவும் கிளர்ச்சி அடையச் செய்யும் திட்டங்களை வகுக்கவும் தெருமுனையில் இருந்த சோடா கடைக்கு குழுவாக செல்வதிலும் ஆர்வம் கொண்டிருந்தார்கள். குழந்தைகளுக்கு முன்னால் ஸ்ட்ரேஞ்ச்ஒர்த் எந்த பதட்டமும் இன்றி இயல்பாக உணர்ந்தாள். அவர்கள் தேவையில்லாமல் அவளை முறைத்துப் பார்க்கவோ அல்லது கிண்டலாகக் சிரிக்கவோ மாட்டார்கள் என அவள் நம்பினாள். ப்ளஸன்ட் தெருவின் மூத்த வாசியான ஸ்ட்ரேஞ்ச்ஒர்த் தைக் கிண்டல் செய்வதைக் கண்டிக்கத்தக்க செயலாக குழந்தைகளின் பெற்றோர் கருதினர். பெரும்பாலான குழந்தைகள், ஸ்ட்ரேஞ்ச்ஒர்த் அவர்களைக் கடந்து செல்கையில் மரியாதை நிமித்தம் நின்று மௌனம் காத்தார்கள். சில பெரிய குழந்தைகள், பணிவாக அவளிடம் அவளது உடல் நலம் குறித்து விசாரித்து வணக்கம் தெரிவித்தார்கள்.
ஸ்ட்ரேஞ்ச்ஒர்த் அவர்களைப் பார்த்து புன்னகைத்துவிட்டு வேகமாக நடந்தாள். நகரத்தின் அத்தனை குழந்தைகளின் பெயரும் அவளுக்கு வெகு நாட்களாக தெரியும். தபால் பெட்டி போஸ்ட் ஆபீஸின் வாயிற்கதவருகே இருந்தது. போஸ்ட் ஆபீஸ் அடைக்கப்பட்ட பின், விளையாடும் குழந்தைகளைத் தவிர யாரேனும் அங்கு வருவார்களா என எண்ணியவாறே குழந்தைகள், ஸ்ட்ரேஞ்ச்ஒர்த் தபால் பெட்டியை நோக்கிச் செல்வதை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஸ்ட்ரேஞ்ச்ஒர்த் போஸ்ட் ஆபீஸின் வாயிற்கதவருகே நின்றுகொண்டு, தன் கருப்புத் தோல் பையிலிருந்து கடிதங்களை எடுக்கையில் யாருடைய அழூகுரலையோ கேட்டாள். அது லிண்டா ஸ்டூவர்ட்டின் குரல்தான் என்று அவளுக்கு அடுத்த கணமே புரிந்துவிட்டது. பாவம், சிறுமி லிண்டா அழுவதை ஸ்ட்ரேஞ்ச்ஒர்த்கவனமாக கேட்டாள். என்ன இருந்தாலும், இது அவளுடைய நகரம்! இவர்கள் அவளுக்கு சொந்தமானவர்கள் ; இவர்களில் எவரேனும் கஷ்டத்தில் இருந்தால் அவள் அதைக் கண்டிப்பாக தெரிந்து கொண்டாக வேண்டும்.
“உன்னிடம் சொல்ல முடியாது டேவ் ” லிண்டா சொல்லிக் கொண்டிருந்தாள் – ஓ! அவள் அந்த ஹாரிஸ் பையனுடன் தான் பேசிக் கொண்டிருக்கிறாள் போலிருக்கிறது – ஸ்ட்ரேஞ்ச்ஒர்த் மனதுக்குள் நினைத்துக் கொண்டாள். ” என்னால் சொல்லவே முடியாது. அவ்வளவு அசிங்கமானது”
இந்நாட்களில் உன் தந்தை என்னை ஏன் வீட்டுக்கு வர அனுமதிப்பதில்லை ? அப்படி நான் என்னதான் செய்துவிட்டேன்?”
“நான் சொல்லப் போவதில்லை. கண்டிப்பாக சொல்லப்போவதில்லை. இம்மாதிரியான செயலை மிகவும் குறுகிய, அழுக்கு படிந்த மனம் வாய்த்தவர்கள் மட்டுமே செய்ய முடியும்”
“ஆனால் கண்டிப்பாக என்னவோ நடந்திருக்கிறது. நீ அழுது கொண்டே இருக்கிறாய் . உன் தந்தையும் கோபமாக இருக்கிறார். அதைப்பற்றி நான் ஏன் தெரிந்து கொள்ளக்கூடாது? நானும் உன் குடும்பத்தில் ஒருவன் போலத்தானே?”
“இனி அவ்வாறு கிடையாது டேவ். கிடையவே கிடையாது! நீ எங்கள் வீட்டுக்கு அருகே கூட வரக்கூடாது. அப்படித்தான் என் தந்தை சொன்னார். அதை மீறி அப்படி நடந்தால், உன்னை குதிரைச்சாட்டையால் அடிப்பேன் என்றும் சொன்னார். என்னால் இவ்வளவுதான் சொல்ல முடியும். இனி நீ என் வீட்டுக்கு அருகே கூட வரக்கூடாது.”
“ஆனால் நான் ஒன்றுமே செய்யவில்லையே?”
“அதேதான். என் தந்தை சொன்னார்…….”
ஸ்ட்ரேஞ்ச்ஒர்த் பெருமூச்சு விட்டபடியே திரும்பி நடந்தாள். மனிதர்களிடம் அதிகபட்ச வன்மம் நிறைந்திருக்கிறது. இந்த அழகிய, சிறிய நகரத்தில் கூட மனிதர்களின் மனதில் எத்தனை வன்மம் குடி கொண்டுள்ளது!
அவள் தபால் பெட்டிக்குள் கடிதங்களை நுழைத்தாள். இரண்டு கடிதங்கள் உள்ளே விழுந்தன. மூன்றாவது நுணியில் சிக்கிக்கொண்டு வெளியே தரையில் ஸ்ட்ரேஞ்ச்ஒர்த் தின் காலடியிலேயே விழுந்தது உள்ளூர நிறைந்து வழியும் இந்த இழித்தனத்தை ஒழிக்க உதவுகிற வகையில் ஹாரிஸ் பையனின் தந்தைக்குக்கு ஒரு கடிதம் எழுதினால் என்ன என்று யோசித்துக் கொண்டிருந்தில், கடிதம் தன் காலடியில் விழுந்த தைக் கூட அவன் கவனிக்கவில்லை. சோர்வடைந்து, தன் அழகான மாளிகையின் படுக்கையில் படுக்க விரும்பி வீடு திரும்பினாள். கீழே விழுந்த கடிதத்தை பற்றி சொல்ல வந்த ஹரிஸ் பையன் அழைத்ததைக் கூட அவள் காது கொடுத்து கேட்கவில்லை.
கீழே விழுந்த கடிதத்தை கையில் வைத்துக் கொண்டு, அவள் போவதை பார்தறே, “ஸ்ட்ரேஞ்ச்ஒர்த் ரே மூதாட்டி செவிடாகி கொண்டு வருகிறாள் என்றான் ஹாரிஸ் பையன்.
“யாருக்கு கவலை? யார் இனி கவலைப்பட போகிறார்கள்?” என்றால் லிண்டா.
“டான் க்ரேனுக்கு எழுதப்பட்டிருக்கிறது இந்த கடிதம்” என்று ஹாரிஸ் சொன்னான். டான் க்ரேனுக்கு எழுதப்பட்டிருந்த இந்தக் கடிதத்தை ஸ்ட்ரேஞ்ச்ஒர்த் கீழே தவற விட்டு விட்டாள். அவர் வீட்டு வழியாக தானே நாம் போக வேண்டும் ? போகிற வழியில் இதைக் கொடுத்து விடலாம் என்று ஹாரிஸ் சிரித்தபடியே கூறினான். ஒருவேளை இந்த உறைக்குள் ஏதேனும் காசோலையை வைத்திருக்கிறாளோ என்னவோ? நாளைக்கு கிடைக்கவேண்டிய கடிதம் இன்றிரவே கிடைத்ததற்காக டான் மகிழ்ச்சி அடையக் கூடும்”
என்றான்.
“மூதாட்டி ஸ்ட்ரேஞ்ச்ஒர்த் எவருக்கேனும் அவ்வளவு சுலபமாய் காசோலையை கொடுத்து விடுவாளா என்ன? என்றாள் லிண்டா. “போஸ்ட் ஆபீஸிலேயே இந்த கடிதத்தை தூக்கி எறிந்துவிடு. ஏன் தேவையில்லாமல் உதவி செய்ய வேண்டும்?” என லிண்டா கோபத்துடன் கூறினாள். ” இங்கி ருப்பவர் எவருக்கும் நம்மைப் பற்றி கவலை இல்லை . நாம் மட்டும் ஏன் அவர்களைப் பற்றி கவலைப்பட வேண்டும்? என்றாள்.
“எதற்கும் நான் இந்தக் கடிதத்தை எடுத்துக் கொள்கிறேன்’ என்றான் ஹாரிஸ். ” ஒருவேளை இந்த கடிதம் அவர்களுக்கான நற்செய்தியைத் தாங்கியதாக இருக்கக்கூடும். அவர்களுக்கும் ஏதேனும் நற்செய்தி தேவைப்படலாம். நம்மைப்போலவே”
அவர்கள், கைகளை கோர்த்தபடியே, வருத்தத்துடன் இருண்ட சாலையில் நடக்கத் தொடங்கினார்கள். ஹாரிஸ் பையனின் ரோஜா நிற கடித உறையை கையில் பிடித்தி ருந்தான்.
ஸ்ட்ரேஞ்ச்ஒர்த் மறுநாள் காலை மிகுந்த மகிழ்ச்சியுடன் கண்விழித்தாள். ஒரு நிமிடம் ஏன் இத்தனை மகிழ்ச்சி என்று யோசித்தவள், பின் திடீரென இன்று காலை மூன்று நபர்கள் அவளுடைய கடிதத்தை பிரித்து வைப்பார்கள் என்று நினைத்தாள். முதலில் குரூரமாக தோன்றினாலும், பேய் குணத்தை அவ்வளவு எளிதாக அழித்து விட முடியாது. மேலும் சுத்தமான இதயமே எப்போதும் பல்வேறு சோதனைகளுக்கு ஆளாகிறது. அவள் தன் வயதான மிருதுவான முகத்தை கழுவியப் பின், எழுபத்தியோரு வயதிலும் உறுதியாக இருந்த பற்களை சுத்தம் செய்து கொண்டாள். மிகுந்த கவனத்துடன் உடையையும் காலணியை அணிந்து கொண்டாள். காலை உணவாகக் கொஞ்சம் வாஃபில் சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று நினைத்தபடியே படி இறங்கி வருகையில், வரவேற்பறையின் தரையில் ஒரு கடிதத்தை பார்த்தாள். அவள் அதை எடுக்க குனிந்தாள் ஒரு ரசீது, காலை செய்தித்தாள் மற்றும் பச்சை நிற உரையில் பரிச்சயமான ஒரு கடிதம். பென்சிலால் முகவரி எழுதப்பட்ட பச்சை நிற உரையை கண்டு ஸ்ட்ரேஞ்ச்ஒர்த் ஒரு நிமிடம் உறைந்து போய் நின்றாள். என்னுடைய கடிதங்களில் ஒன்று போல தெரிகிறது. என்னுடைய கடிதம் ஏதேனும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதா? அப்படி இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் அதை எங்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று ஒருவருக்கும் தெரிந்திருக்காது. எனில், இந்த கடிதம் எப்படி இங்கு வந்தது?
ஸ்ட்ரேஞ்ச்ஒர்த் ப்ளஸன்ட் தெரு வாசி. எனவே, அவளது கைகள் அக்கடிதத்தைத் திறந்து அதன் உள்ளே இருந்த காகிதத்தை பிரிக்கையில் நடுங்க வில்லை. காகிதத்தில் எழுதி இருந்த, உலகிலேயே மிகக் கொடூரமான செய்தியைப் படிக்கையில் அவள் மௌனமாக அழுதாள்.
” வெளியே வந்து உன் ரோஜாக்கள் இருந்த இடத்தை பார்”
சுவாரசியமான கதை. ஸ்ட்ரேஞ்ச் ஒர்த் அம்மாள் அருமையான கதாபாத்திரம். an exact opposite character of 36, Chowringhee Lane’s Mrs.Stoneham.
அனுராதா கிருஷ்ணசாமியின் சரளமான மொழிபெயர்ப்பு குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியது. ஒரு நல்ல் மொழிபெயர்ப்பில் மொழிபெயர்ப்பாளர் காணாமல் போகிறார். அனுராதாவைக் காணோம்!