சீன, ஜப்பானிய கலையோடு பரிச்சயமுள்ளவர்களுக்கு ஹான்ஷான் எனும் பெயரும் அவருடைய சித்திரமும் முன்னரே பழக்கப்பட்டிருக்கும். அந்தச் சித்திரங்களின் வழியே பார்த்தோமானால், உரக்கச் சிரித்தபடியே கானகத்தின் வழியே பயணிக்கும் விசித்திரமான இரு குள்ள மனிதர்களாக ஹான்ஷானும் அவருடைய நண்பர் ஷிடேவும் புனையப்பட்டிருப்பர். இவர்கள் இருவரின் கவிதைகளையும் தொகுத்த லூசியூயின் தன்னை தாங் பேரரசில் உயர்பதவி வகித்த அதிகாரியாக அத்தொகுப்பில் அறிவித்துக்கொள்கிறார். ஹான்ஷானையும் ஷிடேவையும் அவர் சந்தித்ததையும், அவர்களின் கவிதைகளை அவர் கண்டெடுத்ததையும் குறித்துத் தாம் தொகுத்த அக்கவிதைகளின் முன்னுரையில் லூசியூயின் எழுதியிருந்தார். ஆனால் சீன வழக்கத்திற்கு மாறாக அம்முன்னுரை எழுதப்பட்டத் தேதி குறிப்படப்படவில்லை. மேலும் லூசியூயின் சீன அரசாங்கத்தில் பணியாற்றியதற்கான எவ்வித சாட்சியமும் சீன வரலாற்றில் இல்லை. மேலும் அம்முன்னுரையில் குறிப்பிட்டிருந்தவைக்கும், ஹான்ஷான் குறித்துக் கிடைக்கப்பட்ட மற்ற தகவல்களுக்கும் இடையே கால வேறுபாடுகள் இருந்ததால், லூசியூயினின் முன்னுரையை இலக்கியப் புனைவாகவே மொழிபெயர்ப்பாளர் கருத வேண்டியுள்ளது. எனவே ஹான்ஷான் குறித்தும் அவருடைய வாழ்க்கை குறித்தும் அவருடைய கவிதைகள் வாயிலாக மட்டுமே நம்மால் அறிந்துகொள்ள முடியும், அதுவே சாலச் சிறந்ததாகவும் இருக்கமுடியும்.
ஹான்ஷானின் கவிதைகள் குறித்துப் பார்த்தோமானால், பல்வேறு வகையான கருப்பொருட்களையும் அவை தொட்டுச் செல்கின்றன. வாழ்வின் திணறல் குறித்த வழக்கமான புலம்பல்களாய் சில உள்ளன, மற்றவை வறுமையைப் பழிப்பதாகவும், பேராசையையும் செருக்கையும் பகடி செய்வதாகவும் உள்ளன. சீன அதிகார வர்க்கத்தின் கீழ் ஊழியம் செய்வோர் தம் வாழ்வில் சந்திக்கும் இன்னல்கள் குறித்தும், புத்தமதகுருமார்களை விமர்சித்தும், தாவோவிய ரசவாதிகளைப் பரிகசித்தும், அமரத்துவ வாழ்வை நாடும் பக்தர்களை நகையாடியும் பல்வித கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன. முடிவாக, ஹான்ஷான் பனிமலைக்கு வந்து சேர்ந்ததையும், அங்கு வாழ்ந்ததையும் குறித்த இயற்கைசார்ந்த ஒப்பிடவியலா விவரணைகளுடன் கூடிய கவிதைகளையும் எழுதியுள்ளார். இயற்கை குறித்த இவருடைய தெளிந்த, துல்லியமான சித்தரிப்புகளே ஞானத்தேடலுக்கும் அடைதலுக்குமான உருவகங்களாகவும் உள்ளன என்பதாலேயே சீனாவிலும் ஜப்பானிலும் பெரும்புகழை ஹான்ஷானின் கவிதைகள் பெற்றுள்ளன.
கிழக்கு மலைக்குப் போய்விட விரும்புகிறேன் –
இந்தப் பயணத்திற்காக எத்தனை வருடங்கள் திட்டமிட்டிருந்தேன்?
கொடிகளைப் பற்றியேறி நேற்று மலையின் மேலே வந்தேன்,
ஆனால் காற்றும் மூடுபனியும் என்னைப் பாதிவழியிலேயே தடுத்து நிறுத்திவிட்டன.
பாதை குறுகலாக இருந்தது, என் ஆடைகள் சிக்கிக்கொண்டன,
பாசி மிகவும் மிருதுவாக இருந்ததால் என் பாதங்களை நகர்த்தவே முடியவில்லை,
எனவே இந்தச் சிவப்பு இலவங்கமரத்தின் கீழேயே நின்றுவிட்டேன்.
மேகத்தின் மீது தலைவைத்து உறங்கலாம் என எண்ணுகிறேன்.
குளிர்மலை மீது நிர்வாணப் பூச்சியொன்று வாழ்கிறது;
அதன் உடல் வெண்ணிறமாயும், தலை கருநிறமாயும் உள்ளது.
அதன் கரங்களில் இரு புத்தகங்களை சுமந்து செல்கிறது,
ஒன்று “வழி”, மற்றொன்று “ஆற்றல்”*.
அதன் இல்லத்தில் கெண்டியோ அடுப்போ இல்லை,
பயணத்தின் போது அது ஆடைகளைச் சுமந்து செல்வதில்லை,
ஆனால், அர்த்தமற்ற ஆசைகளெனும் திருடர்களை வெட்டியெறியவென,
அது எப்போதும் தன்னுடன் மெய்யறிவின் வாள்தனை சுமந்து செல்கிறது.
[தாவோயிச தத்துவவியலாளர் லாவோ ட்சு எழுதிய ’தாவோ தி சிங்’ அல்லது ‘வழியும் அதன் ஆற்றலும் குறித்த செவ்வியல்’ எனும் நூல் இங்கு குறிப்பிடப்படுகிறது. ஹான்ஷானின் காலத்தில் இக்கவிதையில் குறிப்பிட்டுள்ளபடி அந்நூல் இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது]
குளிர்மலைக்குச் செல்லும் வழியை மக்கள் கேட்கின்றனர்.
குளிர்மலைக்கா? அங்கு செல்ல எந்தச் சாலையும் இல்லை.
கோடைக்காலத்திலும் கூட அங்கு உறைபனி உருகிவழியாது;
சூரியன் பிரகாசிக்கும்போதும், மூடுபனி கண்களை மறைத்து நிற்கும்.
என்னைப் பின்தொடர்வதன் மூலம் அங்கு சென்று சேர்ந்துவிடலாம் என எங்கனம் நீ நம்பலாம்?
உன் மனதும் என் மனதும் ஒன்றல்லவே.
என்னுடையதைப் போன்றே உன் மனதும் இருக்குமானால்,
மலையின் மையப்பகுதிக்கே நீ சென்று சேர்ந்து விடுவாய்!
மலையுச்சியளவு இறுமாப்பு கொண்ட மனமும்,
தன்னொழுக்கம் சார்ந்த முனைப்பும் (”பிறர்முன் நான் மண்டியிடுவதா?”),
கொண்டிருந்தார் அவர்,
மும்மதங்களின்* அனைத்துப் புத்தகங்களையும் கற்றிருந்த விற்பன்னரான அவர்,
வேதங்கள் குறித்து உரையாற்றப்போவதாக அறிவித்தார்.
புனிதச் சட்டங்களையும் கட்டளைகளையும் மீறிச் செயல்பட்ட
அவரின் மனதில் நாணத்தின் சுவடே இல்லை.
“எனது உபதேசங்கள் மிக மேம்பட்ட புரிதல்களைக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கானது.
எனக்குச் சமமாக நான் கருதக்கூடிய மதக்குருமார்கள் மிகச்சிலரே இங்குள்ளனர்!” என்றார்,
முட்டாள்கள் தம் புகழ்ச்சியால் அவரை நனைக்கின்றனர்,
அறிஞர்களோ கைதட்டி மகிழ்கின்றனர்.
என்னவொரு மோசடி! காற்றில் மணக்கிறதா இந்த அருவ மலர்!
பிறப்பிலிருந்தும் இறப்பிலிருந்தும் எப்படி இவரால் தப்பிக்க இயலும்?
எதையும் அறிந்துகொள்ளாமல், அசைவில்லாது அமர்ந்திருந்து,
மனதின் தீங்கான எண்ணங்களை அமைதிப்படுத்துவதே சிறந்ததாகும்.
[*புத்தம், தாவோயிசம், கன்பூசியம்]
தெளிந்த நீர் பளிங்கைப் போல மின்னுகிறது,
அதன் அடியாழம்வரை எளிதாகக் காண முடிகிறது.
அனைத்துச் சிந்தனைகளிலிருந்தும் என் மனம் விடுபட்டு நிற்கிறது,
எண்ணற்றுக் கிடக்கும் ராஜ்ஜியங்களில் எதுவும் அதை அசைக்க முடியாது.
எதனாலும் வலிந்து அதைத் தூண்ட முடியாது என்பதால்,
என்றென்றைக்குமாய் மாற்றமேயின்றி என் மனம் நீடித்து நிலைக்கும்.
இவ்வழியிலேயே நீங்களும் அறிந்துகொள்ள கற்பீர்களேயானால்,
உள் புறமென ஏதுமில்லை என்பதைத் தெரிந்துகொள்வீர்கள்!*
[*இருமை என்பதில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.]
எனது வீட்டில் ஒரு குகை உள்ளது,*
அந்தக் குகைக்குள் ஒன்றுமேயில்லை –
பரிசுத்தமான, உன்னதமான வெறுமையுடன் அது உள்ளது,
சூரியைனைப்போல ஒளிவெள்ளத்தில் அது பிரகாசிக்கிறது.
இந்த முதிய உடலுக்கு கீரையுணவே போதுமானது,
இந்த அருவத்தை மறைக்க கந்தலான மேற்சட்டையொன்று போதும்.
ஆயிரம் புனிதத்துறவிகள் என் முன்னே தோன்றட்டுமே –
தெய்வீக சத்தியத்தின் புத்தர் என்னிடமுள்ளார்.
[*மனமெனும் குகை.]
உங்களின் நாட்களனைத்தும் மதிமயக்கங்களோடு கழிகின்றன,
பாய்ந்தோடும் வருடங்களோ ஒருநொடி கூட நிற்பதில்லை.
புற்தரையின் கீழே நீங்கள் புதைக்கப்படும்போது,
அங்கு ஒளிரும் நிலவுதான் எத்தனை இருண்மையாய் இருக்கக்கூடும்!
எலும்புகளும் தசையும் அழுகிச் சிதறியபிறகு,
ஆன்மா தேய்ந்து மறையத் துவங்கும்,*
இரும்பை மெல்லும் தாடைகள் கொண்டோரேயாயினும்,
அச்சமயம் தாவோயிய வேதங்களை எங்கனம் ஓதுவீர்கள்?
[சீன நம்பிக்கையின்படி, உடலோடு சேர்ந்து ஆன்மாவும் உடனடியாக மரணிப்பதில்லை, மெதுவாகத்தான் அது தேய்ந்து மறைந்துபோகும்.]
மலைமுகடின் முன்னே இன்று அமர்ந்தேன்,
பனிப்படலம் விலகும் வரை நீண்ட நேரம் அமர்ந்திருந்தேன்.
ஒற்றை நூலிழைப் போல, தெளிந்த நீரோடை சில்லென ஓடியது;
ஆயிரமாயிரம் கெஜமளவு நீண்ட பசும் மலைகள் தம் தலைகளை உயர்த்திப்பார்க்கும்;
வெண்முகில்கள் – காலைநேர ஒளி அசைவில்லாது கிடக்கும்;
நிலவின் உதயம் – இரவின் விளக்கு மோனோக்கி நகரும்;
தூசு, கறைகளில் இருந்து இவ்வுடல் விடுபட்டுள்ளது,
எந்தக் கவலையால் என் மனதை தொந்திரவு செய்ய இயலும்?
இந்த வனத்தை விடவும் வயது முதிர்ந்த மரம் இது;
இதன் ஆயுட்காலம் கணக்கீடுகளை விஞ்சி நிற்கும்.
மலையின் உயரங்களையும், பள்ளத்தாக்குகளையும் இம்மரத்தின் வேர்கள் கண்டறிந்துள்ளன,
காற்றிலும் உறைபனியிலும் நிகழும் மாற்றங்களை இதன் இலைகள் அறிந்துள்ளன.
அதன் வெளிப்புறத் தோற்றத்தைக் கண்டு நகைக்கும் இவ்வுலகம்,
நுண்மையான அதன் உட்பகுதியை அறிந்ததேயில்லை.
சதையும் தோலும் உரித்தெறியப்பட்டப் பிறகு,
உண்மையின் மையப்பகுதி* மட்டுமே மீந்திருக்கக்கூடும்.
[*ஜென் துறவி மாட்சு என்ன ஞானத்தைக் கண்டடைந்தார் என மற்றொரு துறவி வினவினார், அதற்கு மாட்சு,
“சதையையும் தோலையும் உரித்தெறிந்தபின்,
என்னிடமிருப்பது ஒற்றை உண்மை மட்டுமே.” என்றார்.
(மாட்சு யூலூ, சூசியா யூலூவில் குறிப்பிடப்பட்டுள்ளது) ]
96.
எனக்கு உடல் உள்ளதா இல்லையா?
நானென்பது நானேதானா அல்லது இல்லையா?
ஆண்டுகள் பல கழிய, இக்கேள்விகள் குறித்து ஆழ்ந்து சிந்தித்தபடியே,
இங்கே பாறைமேல் சாய்ந்து அமர்ந்துள்ளேன்.
என் பாதங்களின் இடையே பசும்புற்கள் வளரும்வரை,
செம்புழுதி என் தலைமீது படியும்வரை,
நான் இறந்துவிட்டதாக எண்ணி இம்மக்கள்
வைனும் பழங்களும் காணிக்கைகளாகக் கொண்டுவந்து
என் பிணத்தின் அருகே வைக்கும்வரை.
– ஹான்ஷான்
தமிழில்: சசிகலா பாபு
உயிர்மை வாயிலாக ”ஓ.ஹென்றியின் இறுதி இலை”, காலச்சுவடு வாயிலாக “மறையத் தொடங்கும் உடல் கிண்ணம்” ஆகிய கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். “கல்குதிரை”, “காலச்சுவடு” ஆகிய இதழ்களில் இவரது மொழிபெயர்ப்புகள் வெளியாகியுள்ளன.
”பெர்சியாவின் மூன்று இளவரசர்கள் – ரோகிணி சவுத்ரி”,
“வார்த்தைகளில் ஒரு வாழ்க்கை – இஸ்மத் சுக்தாய்”,
“பாஜக எப்படி வெல்கிறது – பிரசாந்த் ஜா”,
“சூன்யப் புள்ளியில் பெண் – நவல் எல் சாதவி”,
“குளிர்மலை – ஹான் ஷான்”
ஆகிய இவரது மொழிபெயர்ப்பு நூல்கள் எதிர் வெளியீடு வாயிலாக வெளியாகியுள்ளன.