ஹென்றி லாஸன் கவிதைகள்

எழுதப்படாத புத்தகங்கள்

எவ்வளவு உச்சம் தொட்டு வாழ்ந்தாலும்
முடிவிலென்னவோ அதே கதைதான்
நம்முடைய ஆகச்சிறந்த புத்தகத்தை
எழுதாமலேயே சாகப்போகிறோம்
நம் வாழ்வின் மிகச்சிறந்த செயலை
செய்துமுடிக்காமலேயே மடியப்போகிறோம்
எழுதப்படாத புத்தகங்கள்
வரையப்படாத ஓவியங்கள்
இந்த வானுக்குக் கீழே எத்தனை எத்தனை…
பதிப்பிக்கப்படாத
நம் ஆகச்சிறந்த சிந்தனைகளோடு
நாமும் ஒருநாள்
இவ்வுலகை விட்டு நீங்கப்போகிறோம்.


என் மரணத்துக்கு முந்தைய தினம்

என்னைப் போல் பிரச்சனைகளுக்குரியவனுக்கு
செய்து முடிக்கவேண்டிய காரியம் ஏராளம் உண்டு.
படுக்கையில் கிடந்தபடி எல்லாவற்றையும்
ஒரு புத்தகத்தின் மூலையில் கிறுக்கிவைக்கிறேன்
எப்போதும் எல்லாவற்றையும்
இப்படிதான் கிறுக்கிவைக்கிறேன்
என் மரணத்துக்கு முந்தைய தினம்
என் கடைசி வரிகளையும்
இப்படிதான் கிறுக்கிக்கொண்டிருப்பேன்.

ஒழுங்கமைவில்லாத எத்தனையோ நிகழ்வுகள்
என் வாழ்வில் வருவதும் போவதுமாய்.
அதில் குடியும் காதலும் போக்கிவிட்டன
என் பெரும்பான்மைப்பொழுதுகளை
நற்செயல்கள் பல ஆற்றவேண்டிக் காத்திருக்க..
என் மரணத்தின் முந்தைய தினம்
வரவிருக்கும் மரணத்தையெண்ணி
வருந்திக்கிடக்கப் போகிறேன்

என்னைத் தூக்கிவிடு அன்பே..
நான் மிகவும் களைத்திருக்கிறேன்
கொஞ்சம் மதுவை ஊற்று
கோடு விழுந்த என் கன்னத்தோடு
சிறுபொழுது உன் கன்னத்தை இழை..
உன்னை நான் காதலிக்கும் காரணத்தை
உன்னிடம் சொல்ல விரும்புகிறேன்..
ஏனெனில்..
என் மரணத்தின் முந்தைய தினம்
சொற்ப நேரமே என் வசமிருக்கும்.


உன்னிலும் பெருமை வாய்ந்தவன்

உன் பாரம்பரியமே உசத்தியென்றும்
உன் பிறப்பே உயர்பிறப்பென்றும்
ஒரு சொல் அல்லது சைகை எதன் மூலமேனும்
உறுதிப்படுத்த முனைவாயாயின்…
அதிர்ஷ்டம் அல்லது சாதுர்யம் காரணமாய்
அடைந்துவிட்ட ஒன்றைப்பற்றி
அளவிலாப் பெருமை பீற்றுவாயாயின்…
உன்னோடு நான் ஒத்தூத மாட்டேன்
ஏனெனில் உன்னிலும் நான் பெருமைவாய்ந்தவன்.

உன் தொழிலொன்றே உலகில்
கண்ணியமிக்கதெனக் கருதுவாயாயின்
எனக்கிணையாய் நடப்பதும்
உன் பெருங்கருணையெனக் கொள்வாயாயின்
பகட்டுடையணிந்த உன் கண்களை
என் பழங்கந்தலாடை உறுத்துமாயின்
உனக்கொன்று சொல்லவேண்டும்,
நானே உன்னிலும் பெருமைவாய்ந்தவன்.

உடனொரு உயர்வர்க்கக் கூட்டாளியோடு
தெருவில் நீ நடக்கையில்
அவனுக்கென்னை அறிமுகப்படுத்துமளவு
அத்தனை மதிப்பில்லாதவன் என்றெண்ணி
எதிர்வரும் என்னைத் தவிர்ப்பாயாயின்
இனி எந்நாளும் என் முகத்தில் விழிக்காதிருந்துவிடு
ஏனெனில்
நானே உன்னிலும் பெருமைமிக்கவன்

என் மூதாதையர் குறித்து
நான் எதுவும் அறிந்திராதபோது…
உன்னுடைய குலம் குற்றமற்றதெனவும்
உன்னுடைய கடந்த காலம் கறையற்றதெனவும்
உறுதிபட நீ கருதுவாயாயின்..
என்னோடு கலந்து அதில் மாசுண்டாக்கிட முனையவேண்டாம்..
உன் பெயரை நீ காப்பாற்றிக்கொள்
ஒத்த சிறகுடைப் பறவைகளே ஒருமித்துப் பறக்கும்.
நான் உன்னிலும் பெருமிதமிக்கப் பறவை.

அதிர்ஷ்டத்தைப் பார்த்து நகைக்கும் நட்பை,
அன்பின் பெருமையை வெற்றிகொள்ளும் நட்பை,
பொன்னும் பொருளும் பொத்திவைக்க முடியாது
அடுத்தவருக்கெப்போதும் ஆதரவுக்கரம் நீட்டுவாயாயின்..
அனைவருக்கும் அன்பை சமமாய் அளிப்பாயாயின்..
உன் உண்மைத்தன்மை உணர்கிறேன்.
என் பெருமிதச்சுவர் உடைந்து நொறுங்குகிறது..
இப்போது சொல்கிறேன்..
உன்னளவு நான் பெருமைவாய்ந்தவனில்லை.


நண்பன் எதைச் செய்தாலும்…

நண்பன் எதைச் செய்தாலும்
அதில் தவறேதும் இருக்காதென்பதை
பணியிடங்களிலும் பணிக்கு வெளியிலும்
பழகிக் கற்றுக்கொண்டோம்.
நல்ல பொழுதுகளிலும் மோசமான பொழுதுகளிலும்
கற்றுணர்ந்துகொண்டோம்.
துறைமுகப்பகுதியிலும் கழிமுகப்பகுதியிலும் கூட
அதை நன்கறிந்துகொண்டோம்.

மரியாதையில் அவன் மன்னன்.
மன்னனைப் போலவே புயலிலும் வெயிலிலும்
தன் வாழ்வை உன்னோடு பகிர்ந்துகொள்வான்
நண்பன் எதைச் செய்தாலும்
அதில் தவறேதும் இருக்காதென,
பாடங்கற்றுக்கொண்டதை,
பாடலொன்றில் பொருத்திக்கொண்டோம்.

அவனின் இறப்பிலும், இல்லாமையிலும்,
அவதூறு பேசுவோர் அநேகர்.
நெஞ்சில் அவன் நினைவை
நேர்மையாய் சுமந்திருக்கும் நாங்கள்
ஓங்கியறைந்து அவர் தாடை பெயர்க்க
ஒருபோதும் தயங்கிடமாட்டோம்
ஏனெனில்…
நண்பன் எதைச் செய்தாலும்
அதில் தவறேதும் இருக்காது.


மூலம் : ஹென்றி லாஸன்

தமிழில்: கீதா மதிவாணன்

ஆசிரியர் குறிப்பு:

ஹென்றி லாஸன்:

ஹென்றி லாஸன் (1887 – 1922) ஆஸ்திரேலியாவின் ஆரம்பகால இலக்கிய வரலாற்றில் பெரிதும் குறிப்பிடத்தக்கவர். அவரது படைப்புகள் காலத்தின் ஆவணங்களாக இன்றளவும் போற்றப்படுகின்றன. தன் ஒன்பது வயதில் செவித்திறனை இழந்த அவர் தான் கண்டஅறிந்துணர்ந்தஅனுபவித்த நிகழ்வுகளைக் கவிதைகளாகவும் சிறுகதைகளாகவும் படைத்தார். பூர்வகுடிகளுக்குரிய மண்ணில் தங்கள் கால்களை அழுந்தி ஊன்ற விழைந்த தருவாயில் ஆரம்பகால ஐரோப்பியக் குடியேறிகளுக்குண்டான வாழ்க்கைச் சிக்கல்களை மையக்கருவாய் வைத்துப் புனையப்பட்டவை அப்படைப்புகள். சொந்த வாழ்க்கையில் பெரும் சரிவுகளை சந்தித்து கடனாளியாகவும்குடிகாரனாகவும்சிறைக்கைதியாகவும் மாறிப்போன ஹென்றி லாஸனின் வாழ்க்கை மிகவும் பரிதாபத்துக்குரியது.

1922 செப்டம்பர் மாதம் 2ஆம் நாள்தனது 55ஆவது வயதில் மூளையில் இரத்தக்கசிவு காரணமாகஹென்றி லாஸன் உயிர் துறந்தார். ஹென்றி லாஸனின் உடல் அரசுமரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. அதுவரை ஆளுநர்களுக்கும்தலைமை நீதிபதிகளுக்கும் மட்டுமே கிடைத்துவந்த அரசுமுறை இறுதி மரியாதையை பெற்றஅரசு சாராத முதல் மனிதர் இவரேஅவருடைய இறுதிச் சடங்கில் அன்றைய பிரதமர் திரு. பில்லி ஹக்ஸும்நியூ செளத் வேல்ஸ் மாநில முதல்வர் திரு. ஜேக் லாங்கும் கலந்துகொண்டனர்.

1949 ஆம் ஆண்டு ஹென்றியின் உருவப்படம் ஆஸ்திரேலிய அரசின் அஞ்சல் தலையில் பொறிக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது. 1966 இல் ஆஸ்திரேலியாவில் தசம எண்ணிக்கையிலான பணப்புழக்கம் அறிமுகப்படுத்தப்பட்டபோதுமுதலில் அச்சடிக்கப்பட்ட பத்து டாலர் காகிதப் பணத்தில் அவரது உருவப்படம் பொறிக்கப்பட்டு மேலும் சிறப்பிக்கப்பட்டது. ஹென்றி லாசனின் படைப்புகள் பலவும் பள்ளி மற்றும் கல்லூரிப் பாடத்திட்டங்களில் இடம்பெற்றுள்ளன. சில திரைப்படங்களாகவும் நாடகங்களாகவும் உருவாக்கம் பெற்றுள்ளன.

கீதா மதிவாணன்:
ஆஸ்திரேலியா நாட்டில் சிட்னி நகரத்தில் வசிக்கும் கீதா மதிவாணன்என்றாவது ஒருநாள்” (ஹென்றி லாசன் எழுதிய ஆஸ்திரேலியக் காடுறை கதைகளின் மொழிபெயர்ப்பு) என்ற நூலை வெளியிட்டுள்ளார் கீதமஞ்சரி எனும் வலைத்தளத்தில் படைப்புகளை எழுதி வருகிறார்.

9 COMMENTS

  1. கவிதைகள் நன்று. சிறந்த மொழியாக்கம் உன்னிலும் பெருமை வாய்ந்தவன் கவிதை மிக நன்று. ஒத்த சிறகுடைப் பறவைகளே ஒருமித்துப் பறக்கும் என்ற வரி மிகவும் என்னைக் கவர்ந்தது.

  2. நண்பன் எதை செய்தாலும் கவிதை அருமை ஓரு நிமிடம் என் நண்பனை நினைவுக்கு கொண்டு வந்து நிறுத்தியது

  3. இந்த மொழிபெயர்ப்புக் கவிதைகளும் கனலி என்ற இணைய இலக்கிய இதழின் பரீட்சயமும் எனக்கு நேற்றுத்தான் கிட்டியது. விளையும் பயிரை முளையிலே தெரியும் என்பார்கள். முளையில் தெரிகிறது அதன் வீரியம்!! விதைக்குள் தெரிகிறது ஒரு விருட்சத்தின் அடையாளம்!!

    நீங்கள் யாரோ எவரோ தமிழுக்கு வளம் சேர்க்கும்; புதியதொரு உயரத்தில் தூக்கி நிறுத்தும் தரமான இந்த இதழுக்கு முதல் கண் சிரம் தாழ்த்தி என் மரியாதைகள் உரியதாகட்டும்.🙏

    • கனலி மீதான உங்கள் அன்புக்கும் நம்பிக்கைக்கும் மிக்க நன்றி !

  4. கீதாவின் இந்த மொழிபெயர்ப்புக் கவிதைகள் பற்றி அவசியம் சொல்லியாக வேண்டும்.

    கவிதைத் தெரிவு என்பது ஒன்று. கவிதைகளை அதன் ஆத்மா சிதைவுறாது தமிழுக்குப் பெயர்த்தல் என்பது இன்னொன்று.

    இரண்டிலும் தெரிவது கீதாவின் அறிவும் ஆற்றலுமே! அவரின் தமிழ் ஆழுமை என்பது எளிமையும் எழிலும் வசீகரமும் சார்ந்தது. உண்மையும் எப்போதும் எளிமையாகவே இருக்கும் ஹென்றியின் கவிதைகளைப் போல.

    தமிழும் கவிதையின் பாசாங்கில்லாத உண்மையும் அதனை சுகமான தமிழில் தந்த கீதாவின் திறமையுமாக கவிதைகள் உலக தரத்தை எட்டுகின்றன.

    பாராட்டுக்களை சொல்வதா அல்லது நமக்கு அனுபவித்து உண்டு உயிர்க்க இவைகளைத் தந்ததற்காக நன்றிகளை சொல்வதா என்று தெரியவில்லை.

    மீண்டும் மீண்டும் வாசித்துப் புளகாங்கிதமடைகிறேன்.

    நன்றிகள் பல… பல…👌

    • கவிதைகளை மிகவும் ரசித்திருக்கிறீர்கள் என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி. எல்லாப் பெருமையும் ஹென்றி லாஸனையே சாரும். அற்புதமான அப்படைப்பாளியை தமிழுக்கு அறிமுகப்படுத்துவதன் வாயிலாய் என்னை நானும் அடையாளப்படுத்திக் கொள்கிறேன். வருகைக்கும் உளந்திறந்த பாராட்டுக்கும் மிக்க நன்றி யசோதா.

  5. படைப்பாளியின் விரக்தி இழையோடும் கவிதை வரிகளை பாங்குற மொழி பெயர்த்திட்டமைக்கு வாழ்த்துக்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.