என்னுடைய நாடக செயல்பாடுகள்-வெளி ரங்கராஜன்


என்னுடைய நாடக செயல்பாடுகளைப் பற்றி பேசுவதற்கு முன்னால் என்னுடைய இந்த ஈடுபாடுகளுக்கு

ஆதாரமான ஆரம்பகால அழகியல் மதிப்பீடுகள் பற்றி சில விஷயங்கள் சொல்லவேண்டும்.படிக்கும்-

போதிருந்தே எனக்கு கவிதைமேல் பெரிய ஈடுபாடு உருவானது.நான் எட்டாவது படிக்கும்போதே ஹிந்தியில்

B.A க்கு இணையான விஷாரத்தை முடித்துவிட்டேன்.அது எனக்கு இளம்வயதிலேயே கபீர்தாஸ்,சூர்தாஸ்,

சுமித்ராநந்தன் பந்த்,மஹாதேவி வர்மா,தினகர் போன்ற ஹிந்தியின் முக்கிய கவிஞர்களின் கவிதை-

யுலகை அறிமுகம் செய்தது.அந்த வயதில் அது எனக்கு romantisisation குறித்த பெரிய கற்பனைகளை

உருவாக்கியது.மேலும் நான் படிக்கும்போது ஸ்ரீரங்கம் கோவிலிலிருந்து காலையில் ஒலிக்கும் திருப்பாவை பாடல்களை கேட்டபடி இருப்பேன்.அப்பாடல்களின் உணர்வும்,ஓசையும்,சொல்லாடல்களும் என்னுடையromantisisation mindset க்கு மிகவும் உவப்பானதாக இருந்தன.தமிழின் சங்கப் பாடல்கள் மற்றும் பக்திப்பாடல்களின் ஓசைநயம் குறித்தபெரிய ஈடுபாட்டை அவை உருவாக்கின.கல்லூரிநாட்களில் நான்

மிகவும் இடதுசாரி ஈடுபாடுகள் கொண்டவனாக இருந்தேன்.மார்க்ஸிம்கார்க்கி,காண்டேகர்,சரத்சந்திரர் ஆகியோரது படைப்புகளால் பெரிதும் கவரப்பட்டேன்.அந்த மனநிலையில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது ஆங்கிலப் பேராசிரியர் ஆல்பர்ட்டின் அறிமுகம்தான்.உலக இலக்கியப் பின்புலத்தில்

ஆல்பர்ட் முன்னிறுத்திய ஒருவித கறார்தன்மை கொண்ட அறிவுவாதம் உவப்பானதாகவும்,அதே சமயம்

என்னுடைய ரொமாண்டிசிஸ நிலைப்பாடுகளுக்கு அதிர்வு கொடுப்பதாகவும் இருந்தது.பாலியல்

இறுக்கம் போன்ற பலவிதமான மனத்தடைகள் மீது அவருடைய தாக்குதல் இருந்தது.மெல்லமெல்ல திரைகள் விலக ஆரம்பித்து வாழ்வியல் மீறல்களைக் கொண்டாடும் ஒரு மனநிலை உருவானது.அந்தக் கணத்தில் நம்மைச்சுற்றி ஒரு மிகப்பெரிய சுதந்திரம் இருப்பது புலப்பட்டது.நுண் அசைவுகள் குறித்த

பார்வை பற்றி இலக்கியம் மூலமும்,சினிமா மூலமும் அவர் முன்னெடுத்த புரிதல்தான் அவ்வழியில்

பயணப்பட எனக்கு உத்வேகமாக இருந்தது.

இத்தகைய மனநிலையுடன் நான் சென்னை வந்தபோது இங்குள்ள நவீன இலக்கியம்,நாடகம் மற்றும்

சினிமா ஆர்வலர்களுடன் ஆழ்ந்த தொடர்புகள் ஏற்பட்டன.70களுக்குப் பிந்தைய அந்த காலகட்டம்

என்பது அரசியல்,இலக்கியம்,நாடகம்,சினிமா எல்லாவற்றிலும் தீவிர நிலைப்பாடுகளுக்கும்,புதிய

வடிவங்களுக்குமான காலகட்டமாக இருந்தது.1975ன் அவசரநிலை சூழல் இந்த நெருக்கடிகளை இன்னும் தீவிரப்படுத்தியது.இந்த காலகட்டத்தில் எழுச்சிபெற்ற நிறுவன எதிர்ப்பு மனநிலை புதிய நாடக வடிவங்களுக்கும் திரைப்பட இயக்கங்களுக்கும் உந்துதலாக அமைந்தது.வீதிநாடக இயக்கம் அந்த சூழலில் உருக்கொண்டு அரசியல்,இலக்கியம்,கலை ஆகியவற்றில் தீவிர நிலைப்பாடுகள் கொண்டவர்-

களால் முன்னெடுக்கப்பட்ட நிலையில் நானும் அந்த செயல்பாட்டில் பங்கேற்றேன்.சினிமாவில்

சத்யஜித்ரே,மிருணாள்சென்,ரித்விக் கடக் ஆகியோரது படைப்புகள் அழகியலும்,நிறுவன எதிர்ப்பும்

கலந்த மனநிலையை முன்னெடுத்து சென்றன.இந்த சூழலிலேயே பாதல்சர்க்காரின் பத்து நாள் நாடகப்

பயிற்சிப் பட்டறை சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டு மூன்றாம் அரங்க நாடக செயப்பாடுகளுக்கான

ஒரு அடித்தளம் உருவாக்கப்பட்டது.

 

பாதல் சர்க்கார் பொருள்களை விலக்கி நாடகத்துக்கு மனித உடலை முதன்மைப்படுத்தினார்.உங்களுக்-

கான நாடகத்தை நீங்கள்தான் உருவாக்கவேண்டும் என்பதை வலியுறுத்தினார்.இந்த சந்தர்ப்பத்தில்தான்

தமிழ்ச்சூழலில் ந.முத்துசாமி,பேராசிரியர் ராமானுஜம் போன்றவர்கள் நவீன நாடக உருவாக்கம் குறித்த

புதிய பார்வைகளையும்,அணுகுமுறைகளையும் அறிமுகப்படுத்துகிறார்கள்.முத்துசாமி தன்னுடைய புதிய நாடகத்துக்காக புதிய நடிகனைத் தயார்செய்யும் முயற்சியில் நடிகனின் வளமை குறித்த பயிற்சிகளில்

ஈடுபடுகிறார்.ராமானுஜம் நாடகப் பிரதி என்பதுநாடகத்தின் ஒரு பகுதிதான்.நடிகனின் உடலும்,மனமும் இணைந்த லயத்தில்தான் புதிய நாடகம் உருவாகும் என்பதை வலியுறுத்துகிறார்.இந்த தாக்கங்களின்

பின்புலத்திலேயே வெளி நாடக இதழ் 1990ல் என்னால் ஆரம்பிக்கப்பட்டது.

1977ல் காந்திகிராமத்தில் பேராசிரியர் ராமானுஜம் மற்றும் பன்சி கெளல் நடத்திய நாடகப் பயிற்சிப்

பட்டறை மற்றும் பாதல் சர்க்கார் சென்னையில் நடத்திய 10 நாள் நாடகப் பயிற்சியில் பங்கேற்ற  படைப்-

பாளிகளும் நாடக ஆர்வலர்களும் தமிழ்நாடு முழுவதும் நாடகத்தில் புதிய வெளிப்பாட்டு முறைகளுக்கான

செய்திகளை எடுத்துச்சென்றனர்.ஏற்கனவே சென்னையில் கூத்துப்பட்டறை,பரிக்‌ஷா மற்றும் வீதி அமைப்புகளும்,மதுரையில் சுதேசி மற்றும் நிஜநாடக இயக்கமும் பல்வேறு கலை மற்றும் சமூக உணர்வுக் கருத்துக்களை புதிய நாடக மொழியில்வெளிப்படுத்தும் செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தன.அவ்வகையில் கூத்துப்பட்டறை நாடகங்களும்,மு.ராமசாமியின் துர்க்கிர அவலம் நாடகமும்,தேசிய நாடகப் பள்ளியில் பயிற்சிபெற்ற பேராசிரியர் ராஜூவின் நந்தன் கதை ஆகிய நாடகங்-களும் பரவலாக அறியப்பட்டு வரவேற்பை பெற்றன.நவீன நாடகம் என்ற கருத்தாக்கம் வலுவாக தன்னை

நிலைநிறுத்திக் கொண்ட இந்த 1980-90 காலகட்டத்தில்புதிய நாடக உருவாக்கங்களுக்கான பிரதிகளை

உருவாக்கவும்,நாடக நிகழ்வுகள் குறித்த செய்திகளை பரவலாக்கவும்,நாடக கோட்பாடுகளை விவாதிக்கவும்,உலக நாடக இயக்கங்கள் குறித்த அறிமுகம் பெறவும் 1990ல் முழுவதும் நாடகத்துக்கென

வெளி இதழைத் துவக்கினேன்.சிறுபத்திரிகை வடிவமைப்புடன் 7 வருடங்கள் வெளிவந்த 40 இதழ்களில்

புதிதாக எழுதப்பட்ட 38 தமிழ் நாடகங்களும்,24 பிறமொழி நாடகங்களும்,நாடக நிகழ்வுகள் மற்றும்

கோட்பாடுகள் குறித்த விவாதங்களும்,நாடகவியலாளர்களின் பேட்டிகளும் என 2000 பக்கங்கள் கொண்ட

நாடக ஆவணமாக வெளி உருப்பெற்றது.நாடகப் பள்ளி ஆசிரியர்களும்,மாணவர்களும் வெளியில் வந்த

படைப்புகளை பயன்படுத்திக் கொள்ளும் நிலை ஏற்பட்டது.

1997க்குப் பிறகு நான் சென்னையிலிருந்து மாற்றலாகிச் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் வெளி

இதழைத் தொடர்ந்து நடத்த முடியவில்லை.வெளி மாநிலங்களில் வேலை செய்த 4 ஆண்டு காலகட்டத்-

தில் பிறமொழி நாடக செயல்பாடுகளை நேரில் அறியும் வாய்ப்புகள் ஏற்பட்டன.பத்திரிகை செயல்பாடு-

களை முடித்துக்கொண்டு நாடகத்துக்கான களப்பணியில் இறங்குவதே இனி நான் செய்யவேண்டியது

என்ற முடிவுடன் வங்கி வேலையை ராஜிநாமா செய்து எனக்குப் பிடித்த முழுநேர கலாச்சார செயல்பாடு-களுக்காக சென்னை திரும்பினேன்.பல்வேறு நாடக செயல்பாட்டாளர்கள் மற்றும் சிறுகுழுக்களுடன்

விவாதங்களும்,உரையாடல்களும் மேற்கொண்டு என்னுடைய நாடக உருவாக்கங்கள் குறித்த தேர்வுகளை நோக்கி செயல்படத் தொடங்கினேன்.

—–

 

2006லிருந்து தொடங்கி கடந்த 14 வருடங்களில் 10க்கும் மேற்பட்ட நாடகங்களையும்,குறுநாடகங்களையும்

இயக்கியிருக்கிறேன்.இன்றைய பின்நவீன காலகட்டத்தில் காப்பியங்களின் மறுவாசிப்பு என்பதும்,சமகால

நுண்ணுணர்வுக்கான தளங்களை அவைகளில் அடையாளம் காண்பது என்பதும் முக்கியமான பின்நவீன

செயல்பாடுகளாக உள்ளன.இலக்கியத்துக்கும்,நிகழ்கலைகளுக்குமான ஊடாட்டம் குறித்து இன்று அதிக

கவனம் உருவாகியுள்ளது.Reinterpretation of classics in Theatre என்பது உலகம் முழுவதும் ஒரு அர்த்தமுள்ள

அரங்க செயல்பாடாக உள்ளது.நம்முடைய சூழலிலும் ராமாயணம்,மகாபாரதம்,சிலப்பதிகாரம்,மணிமே-

கலை ஆகிய காப்பியங்களின் செய்திகள் சமகால உணர்வுடன் நிகழ்கலைகளில் வெளிப்பாடு கொண்டு-

ள்ளன.சுற்றுச்சூழல் சார்ந்த சமூக செயல்பாட்டாளர்கள் பல்வேறு எதிர்ப்புக் குரல்களை வெளிப்படுத்த இந்த வடிவங்களை கையிலெடுக்கும் சூழல் உள்ளது.இன்றைய உலகமயமாக்கல் சூழலில் கலாச்சார வேர்களை

இழந்து தனிமையில் உழலும் தனிமனிதனை சமூகவயப்படுத்தி அவனுடன் அந்தரங்க உரையாடல்களை-யும்,ஸ்பரிசத்தையும் முன்னெடுக்கும் ஒரு அரிய கலைவடிவமாகவே இன்று நாடகம் நம் கண்முன் உள்ளது.இலக்கியத்துக்கும்,நாடகத்துக்குமான ஒரு அர்த்தமுள்ள ஊடாட்டமாகவே நான் நாடகத்தளத்தில்

இந்த உரையாடல்களை முன்னெடுக்க விரும்புகிறேன்.

காப்பியங்களின் மறுவாசிப்பு சார்ந்த சமகாலக் குரல்களை எதிரொலிக்கும் விதமாகவே என்னுடைய அகலிகை,வஞ்ச மகள்,மாதவி,ஊழிக்கூத்து,மாதரி கதை,அன்பின் பெருவெளி ஆண்டாள் ஆகிய நாடக நிகழ்வுகள் வடிவாக்கம் பெற்றன.அகலிகை நாடகத்தில் தேவதைகளாக மனநலம் குன்றியபெண்களை-

யும், தன் அகக்கண்ணால் பார்த்து அகலிகையை உயிர்ப்பிக்கும் ராமராக ஒரு பார்வை குன்றியவரையும் பயன்படுத்தினேன்.கு.ப.ராவின் அந்த அகலிகை ஆண்களின் தவறான கற்பிதங்களால் சிதைவுறும் பெண்இருப்பை புலப்படுத்துகிறாள்.`நான் குற்றவாளியா`என்ற அவளுடைய கேள்வி சமூகத்தின்

மனசாட்சிக்கு விடப்பட்ட கேள்வியாக உள்ளது.அதேபோல் சூர்ப்பனகையின் பார்வையிலிருந்து சொல்லப்படும் கு.அழகிரிசாமியின் `வஞ்ச மகள்`நாடகம் சூர்ப்பனகை தரப்பு நியாயங்களுடன் `உனது

கூற்றுவனை நான் கொணர்வேன் `என்ற அவள் சூளுரையுடன் முடிகிறது.கன்னட நாடகாசிரியர் சிவப்-

பிரகாஷின் மாதவி நாடகத்தில் எதிர்பார்ப்பும்,தனிமையும்,துயரமும் ஒரு உன்மத்த நிலைக்கு தள்ள மாதவி வகையறியாது கலையின் அரவணைப்பை நாடுகிறாள்.`மாதரி கதை`நாடகத்தில் கோவலன் கொலையுண்ட இறுதிநாள் நிகழ்வுகள் அடைக்கலம் தரும் ஆயர்குலப் பெண் மாதரியின் பார்வையிலிருந்து சொல்லப்படுகின்றன.அவளுடைய எல்லா முயற்சிகளும் எதிர்பாராததும் தவிர்க்க இயலாததுமான அநித்தியத்தின் முன் வியர்த்தமாகும் போது அவள் மரணத்தை தேர்ந்தெடுக்கிறாள்.

`ஊழிக்கூத்து`நாடகத்தில் வேட்கைகளும்,நிர்ப்பந்தங்களும் நிறைந்த பெண்மாதிரியின் ஒரு சமகாலக்

குறியீடாக மணிமேகலையின் சித்திரம் விரிவுகொள்கிறது.`அன்பின் பெருவெளி ஆண்டாள்`நாடகம்

நேசம்,கிளர்ச்சி,உடல்கொண்டாட்டம் என ஒரு பிரத்யேகமான பெண்மொழியுடன் ஒரு வரலாற்று முன்

மாதிரியாக ஒலித்துக்கொண்டிருக்கும் ஆண்டாளின் சித்திரம்.காப்பியப் பின்புலம் கொண்டுள்ள இந்த

நாடகங்களுக்கு செவ்வியலும்,நவீனமும் கொண்ட இசை,நடன அசைவுகளையே பயன்படுத்தினேன்

 

 

வரலாறெங்கும் அவதூறுகள் நிறைந்த பெண்ணின் வாழ்க்கைப் பயணத்தை நினைவுகூறும் அம்பையின்

`ஆற்றைக் கடத்தல்`நாடகத்திலும்,தலைமுறைகளாக நீடிக்கும் தீர்வற்ற வெற்று வாக்குறுதிகளை கவனப்-

படுத்தும் முத்துசாமியின் `காலம் காலமாக`நாடகத்திலும்,கவிதைக்கும் அதிகாரத்துக்குமான போராட்டமாக கவிஞர் பாப்லோ நெருடாவின் கடைசி நாட்களை சொல்லும் `கொடுங்கோலர்கள்` நாடகத்-

திலும் சூழலுக்குரிய நடன அசைவுகளே இடம்பெற்றன.காப்பியங்களின் மெளனப் பகுதிகளும்,எண்ணற்ற

சிறுகதையாடல்களும் விரிந்து பெருகும் சாத்தியங்களையே இந்த அரங்க நிகழ்வுகள் முன்வைத்தன.இன்று பிரத்யேகமான நாடகப் பிரதிகளை மட்டும் சார்ந்திராமல்,கவிதை மற்றும் சிறுகதை வடிவங்களில் வெளிப்படும் நாடகப்பொறிகளை நாடகமாக விரித்துப் பார்க்கும் அரங்க முயற்சிகளும் உண்டு.நிகழ்வெளியின் உயிர்ப்பும்,சக்தியும் தான் நாடகம்.

இந்த சூழலிலேயே நாடக அழகியல் சார்ந்த என்னுடைய கட்டுரைகள் புத்தக வடிவில் வெளிவந்து நாடக

ஆர்வலர்களின் வரவேற்பை பெற்றன.தமிழ் நாடகச் சூழல் ஒரு பார்வை,இடிபாடுகளுக்கிடையில்,நாடகம் நிகழ்வு அழகியல்,ஊழிக்கூத்து,வெளிச்சம் படாத நிகழ்கலைப் படைப்பாளிகள்,இலக்கிய வாசிப்பும் நாடக வாசிப்பும்,உடல்மொழியின் கலை,தற்காலத் தமிழ் நாடகங்கள்,தமிழ் நவீன நாடக நிகழ்வுகள் ஆகியவை நூல்வடிவில் நாடகக் கருத்துக்களை பரவலாக எடுத்துச்செல்ல உதவின.நிகழ்கலைகளை ஆவணப்படுத்தும் முயற்சிகள் தமிழில் மிகவும் குறைவு.இந்நிலையில் இந்த நூல்கள் சார்ந்து நாடகக் கருத்துக்களை நான்

பல்வேறு குழுக்களுடனும்,ஆர்வலர்களுடனும் தொடர்ந்து உரையாடுவதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன.

 

ஆனால் நாடக நிகழ்வுகளை விட பல்வேறு சிரமங்களுக்கிடையே மேற்கொள்ளப்படும்

ஒத்திகைகளையும்,நிகழ்வு சார்ந்து நடிகர்களுடன் மேற்கொள்ளப்படும் உரையாடல்களையும் நான் அதிகம் நேசிக்கிறேன்.அவையே நடிகர்களுடன் பரஸ்பர அன்பையும்,புரிதலையும் முன்னெடுத்துச் செல்லும் சாதனங்களாக உள்ளன.அதனால் சில நாடக நிகழ்வுகள் எதிர்பார்த்த நாடக விளைவுகளை உருவாக்க முடியாவிட்டாலும் அந்த திளைப்பு அதிக மகிழ்வைத் தருவதாகவும்,அடுத்த நிகழ்வுக்கான எதிர்பார்ப்பை உருவாக்குவதாகவும் உள்ளது.ஒரே நாடகம் வெவ்வேறு சூழலில் வெவ்வேறு நடிகர்களுடன்

அரங்கேற்றப்படும்போது அது வெவ்வேறு வண்ணம் கொள்கிறது.சமூகத்தின் நினைவுகளுக்கு உயிரூட்டி செயலூக்கம் கொள்வதற்கான உந்துதல்களை அரங்கம் கொண்டிருக்கிறது.ஒற்றைக்குரல்களின்

ஆதிக்கங்களும்,அபாயங்களும் பெருகிவரும் இன்றைய சூழலில் பன்மைக்குரல்களும்,சிறுகதையாடல்களும் செயல்படும் களமாக அரங்கம் உள்ளது.இங்குதான் உடல் குறித்த கட்டுமானங்கள் விலக்கப்பட்டு உடலின் அதிகபட்ச சாத்தியங்கள் முன்வைக்கப்பட்டு பால்தன்மையின் இறுக்கங்கள் உடைகின்றன.இன்று தனிமை,மன அழுத்தம்,உறவுகளின் சிதைவு,மரண பயம் ஆகியவற்றால் பீடிக்கப்பட்டுள்ல தனிமனிதன் மனித ஸ்பரிசம் மற்றும் கூட்டுணர்வுக்கான தளங்களை இங்கு அடையாளம் காண இயலும்.இன்று நாடக முயற்சிகளில் பெண்கள் அதிகமாக பங்கேற்கும் நிலை உள்ளது.முக்கியமாக ஒடுக்கப்படும் பெண்குரல்கள் வீறுகொண்டு எழுவதற்கான சாத்தியங்கள் இன்று அரங்கவெளியில் அதிகமாக உருவாகிவருகின்றன.

வெளி ரங்கராஜன்.

 

1 COMMENT

  1. தங்களது இலக்கியம் மற்றும் நவீன நாடகம் சார்ந்த கலைச் செயல்பாடுகளின் வரிசைகளையும், அரங்க வெளியில் உடல் மொழியின் சந்தோசங்களையும் மிக நுட்பமாக பதிவு செய்திருக்கிறீர்கள். தமிழில் நவீன நாடகங்களின் வரலாறுகளையும், அதன் புதிய திறப்புகளையும், சுதந்திரங்களையும், உள்ளடக்கத்தில் அது அடைந்திருக்கும் மாறுபாடுகளின் வீச்சுக்களையும் அறிந்து கொள்வதற்கு இக்கட்டுரை உதவியாகயிருக்கிறது. நவீன நாடக அறிமுகங்கள், புதிய அரங்கக் கோட்பாடுகள், அதன் தத்துவங்கள் மற்றும் தமிழ் சூழலில் இது குறித்து செய்யப்பட்ட பரந்துபட்ட பெரும் முயற்சிகள் ஆகியவற்றை ஆவணமாக மாற்றியிருக்கும் பெரும் பணிகளையே ‘வெளி’ இதழ் நம் காலத்தில் செய்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.