ஜீவன் பென்னி கவிதைகள்.

கடைசிப் பெட்டியின் வாசலில் உலகைச் சாய்த்து வைத்திருப்பவன்.

வ்வொரு இடப்பெயர்தலிலும் அதற்கு முன்பான வாழ்வை

அங்கேயே விட்டு விட்டு வருகின்றவன்,

எல்லோராலும் தான் நேசிக்கப்படுவதன் காரணங்களில்

சிறிய ஒன்றையே எப்போதும் தேடிக்கொண்டிருக்கிறான்.!

 

1.

ஒரு குற்றத்தின் முன்பாக வெகுநேரம் அமர்ந்திருப்பவன்

தன் கைகளின் மென்மை குறித்து

எப்போதும் அக்கறை கொண்டிருக்கிறான்.

தான் விட்டு வந்த ஒரு கொடூரமான செயலின் மீதியை,

ஒரு நிலத்திற்கும்

ஒரு பாறைக்கும் இடையில்

ஒளித்துவைக்கிறான்.

அது வளர்ந்து வரும் போது

தன் மனதின் மென்மையை

அவன் பார்க்க நேர்கிறது.

அது ஒரு ஆயுதத்தினால் துண்டாக்கப்பட்ட உறுப்பைப்

போல துடித்துக்கொண்டிருக்கிறது.

தன் கைகளின் மென்மை குறித்து

அந்நொடியிலிருந்து தான் அவன் அச்சப்படத் துவங்குகிறான்.

2.

ஒரு இரவைத் தலைகீழாகப் பார்க்கத்தெரிந்தவன்,

பழைய போர்கருxவிகளை அடுக்கிக்கொண்டிருக்கிறான்.

பழைய உடல்களிலிருந்து தோட்டாக்களைப் பிரித்துக் கொண்டிருக்கிறான்.

பழைய மனிதர்களின் கடைசிக் குறிப்புகளைச் சேகரித்துக் கொண்டிருக்கிறான்.

மரணத்தை யாருமற்ற சாலையைப் போல் எளிதாகக் கடந்து சென்று,

அதன் அர்த்தத்தை

எல்லோர் முன்பாகவும் சொல்லிக்கொண்டிருக்கிறான்.

ஒரு பகலை இருளென நினைத்துத் தன் சன்னல்களை

இறுக மூடிக்கொள்ளுமவன்.

இந்த வாழ்வின் தலைகீழென்பதை,

ஒளியற்ற ஒன்றின் குறுக்கீட்டு வடிவமெனவே

யோசித்துக் கொண்டிருக்கிறான்.

அல்லது

ஒரு நட்சத்திரம் காலுக்கருகில் மினுங்கிக்கொண்டிருப்பதை

பார்க்கவே முடியாமல் போவதுமென்கிறான்.

2.1

பிரார்த்தனைகளைத் தலைகீழாகப் படிக்கத்தெரிந்தவன்,

அன்பிலிருந்து வாதைகளைத் தனியாகப் பிரித்துக் கொடுக்கிறான்.

மன்னிப்புகளின் அருகிலிருப்பவர்களை நெருக்கமாகப் பார்த்து அனுப்புகிறான்.

இரங்கலின் முடிச்சை அவிழ்த்து விட்டு ஒரு உடலுக்கருகில்

உட்கார்ந்து கொள்கிறான்.

சமயத்தில் எடை அதிகரித்த மூட்டையை இறக்கி,

அதன் மீதேறி நின்று உலகை நோக்கிப் பாய்கிறான்.

நீதியின் சிறந்த அறிவுரைகளைக் கொழுத்துவது போலவே

சிரித்தபடியே பீடியொன்றைப் பற்றவைக்கிறான்.

2.2

பெரும் வாழ்வைத் தலைகீழாக வாழத்தெரிந்தவன்.

தன் கண்களை யாருக்காகவோ தானமென எழுதிவைத்திருக்கிறான்.

ஒரு சாலையில் நடக்கும் விபத்தில் சரிந்த உடலொன்றைத்

தன் மடியில் கிடத்தி யாரிடமோ இரக்கம் கொள்ள வேண்டுகிறான்.

ஒவ்வொரு இரவு உணவிற்கு முன்பாகவும் தன் பறவைகளுக்குத்

தானியங்களைக் கொட்டுகிறான்.

குழந்தைகளைப் புதைப்பவனைத் தேடிப் போய் அவனது இதயத்தை

கைகளிலேந்தி முகர்ந்து பார்க்கிறான்.

சிறிய தீக்குச்சிகளையே எப்போதும் சேகரித்துக் கொண்டிருக்கு மவன்

ஒரு நாளில் நெருங்கிய உடலொன்று எறிந்திடும் நெருப்பில்

தன்னையும் சேர்த்துப் பெரும் ஆனந்தம் கொள்கிறான்.

2.3

எல்லாவற்றின் தலைகீழ் வடிவங்களையும் புரிந்துகொள்பவன்

தன் வாழ்விலிருந்து வழிந்திடும் கசப்பின் துளிகளை

யாருக்கும் தெரிந்திடாத மன்னிப்புகளில் புதைத்திருக்கிறான்.

அதிலிருந்த மலரின் சுகந்தத்தை பாதைகளில் பரவ விடுகிறான்.

சிறு சிறு வெறுப்புகளின் துளிகளை மிக இயல்பாக

சில புன்னகையில் கடந்து செல்வது போலிருக்கிறதது.

ஒரு குற்றமற்ற மனதையே எப்போதும் பின் தொடர்கிறான்.

ஒரு பூச்சியின் பாதையிலிருக்கும் தடைக்கல்லை அகற்றிவிடுகிறான்.

எப்போதும் போல் கடைசி பெட்டியின் வாசலுக்கருகில்

தன்னுடலைக் கிடத்திக்கொள்கிறான்.

கருணையின் பாடல் எழுப்பிடும் போது

தூக்கத்திலிருந்து மலரொன்றைப் பறித்த படியே

கண் விழிக்கிறான்.

3.

அவன் வாழ்வின் சிறிய மீதிக்கும்,

அதிலிருந்த பேரன்புகளின் வாதைகளுக்கும் இடையில்,

இப்பூமித் தன்னைப் பிளந்து அவனை முழுங்கிக் கொண்டது.

 

இந்த இரவைப் பாடிக்கொண்டிருப்பதென்பது,

அதன் இருளை ஆழமாகப் பார்த்துக் கொண்டிருப்பது தான்.

அந்நிலத்தில் வளர்ந்து வரும் குற்றங்களில் ஒன்றாகத்

தன்னை மாற்றிக்கொள்வதற்கு அவனுக்குத் தெரியும்.

பிறகு

ஒரு பூவென பூப்பதற்கும்,

காய்ந்த இலை போல விழுந்து நகர்வதற்கும்.

 

இந்த வாழ்வைப் பாடிக்கொண்டிருப்பதென்பது,

அதன் சிறிய இடைவெளிகளில் ஒரு சந்தோசத்தை நிரப்புவது.

கண்ணீரின் முன்பாக அமர்ந்திருப்பது.

கருணையின் மூடிய வாசல்களைத் தட்டிக்கொண்டிருப்பது.

ஒரு மண்குவியலின் உள்ளிருந்து ஆயுதத்தை உருவிச் சுழற்றுவது.

எல்லாவற்றையும் விட

திருப்பமொன்றில் தன் பாரங்களைக் கைவிட்டு விட்டுச் செல்வது.

4.

வெறுப்பொன்றின் கடைசி தருணத்தில் அவன் ஒரு

துரோகத்தின் சிரிப்பை மென்மையானதாக்கிக் காண்பிக்கிறான்.

ஒரு பிரிவின் அடையாளங்களைச் சொற்களில் பகிர்ந்து

கொள்ள நேரும் போது மிகச்சரியாகத்

தன்னிலிருந்து அப்பிரியத்தை வெட்டியெடுத்துக் காண்பிக்கிறான்.

கடைசியாக,

மூடிக்கிடக்கும் பாதையின் முன்னால் ஒரு முட்செடியை

வைத்து காலம் முழுவதும் பராமரித்துக் கொண்டிருப்பவனாக

தன்னை மாற்றிக்கொள்கிறான்.

மொழியற்ற வெறுமையை அம்முட்களைக் கொண்டு

கிழித்துக்கொண்டிருப்பவனாகவும்.

5.

~ ஒரு துரோகத்தின் மிகச் சிறந்த வழியில் எங்களைக் கைவிடுங்கள்.

 

~ வயிற்றைக்கிழித்து ஆயுதத்தைத் தேடுபவனை சிரித்துக் கொண்டே நாம் கடக்கிறோம்.

 

~ மனிதனும் சகமனிதனும் இங்கு அடிமையே. ஆயுதம், புதிய கருத்தை எளிதாகத் துவக்கி விடுகிறது.

 

~ நேர்கோட்டில் உங்களது இறப்பைக் காண்பிக்கவே இந்த குறிகள் உங்களை நோக்கியிருக்கின்றன.

 

~ காலத்தில் உங்களை ஞாபகங்களாக்கிடவே பாதங்களுக்குக் கீழே நிலம் திடமாகயிருக்கிறது

 

~ இந்த வலி போதவில்லை, வானம் தெரிந்திடும் குழிகளில் எங்களைப் புதையுங்கள்.

 

~ இந்தத் தாகம் தீரவில்லை, நதிகளின் ஓரங்களில் எங்களைப் புதைத்திடுங்கள்.

 

~ இந்த கருணைகள் மீதமாகியிருக்கின்றன, ஓரங்களில் சன்னல்களுடன் குழிகளை வெட்டுங்கள்.

 

~ ஒவ்வொரு மனிதனையும் முழுவதுமாகக் கிழித்தே அதிகாரம் தன்னை நிரூபிக்க முயல்கிறது.

 

~ இந்த எளிய அன்பின் கதவுகளை மூட விடுங்கள். அது நிச்சயமற்றதாக மாறிக்கொண்டிருக்கிறது.

6.

ஆலயங்களிலிருந்து எவ்வளவு தொலைவிலிருக்கின்றன,

~ இந்த வாழ்க்கைக்கான சிறிய நேசங்கள்.

~ மன்னிப்புகளுக்கான நெடும் வரிசைகள்.

~ பேரழிவைத் தடுத்திட விரும்பும் கைகள்.

 

வாழ்விலிருந்து எவ்வளவு அருகிலிருக்கின்றன,

~ பின் தொடர்ந்திட முடியாத வலிகளின் பாதைகள்.

~ கைவிடப்பட்ட பாரமொன்றின் கடைசி அழுத்தம்.

~ வடிவமற்ற கருணைகள் வளர்ந்திடும் நுனிகள்.

 

யுத்தங்களுக்குப் பிறகான காயங்களிலிருக்கின்றன,

~ சிறிய முகமூடிகளில் ஒளிந்திருக்கும் மனதுகள்.

~ போரின் முடிவிற்கு முன்னதாக எழுந்த பாடல்கள்

~ சுதந்திரத்தின் ஆறிடாத ஆதிகாலத்து வடுக்கள்.

7.

ஒரு எளிய நீதிக்கதையில்

துருத்திக் கொண்டிருந்த இரண்டு நீதிகளை

வெளியே எடுத்துப் பார்த்தான்.

ஒன்று உயிரற்றிருந்தது,

மற்றொன்று அவனுக்கான சிறிய பாதையொன்றின் திசையை

திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தது.

முடிக்கும் போது,

என்றைக்குமே திரும்ப முடிந்திடாத ஒரு பிரியத்தை

அவனது கைகளில் வைத்துச் சென்ற தது.

அதன் சிறிய கணம் அவனை அழுத்தத் துவங்குகிறது.


ஜீவன் பென்னி .

[email protected]

Previous articleதடம்
Next articleவரலட்சுமி நோன்பு
ஜீவன்பென்னி
ஜீவன் பென்னி (1982) இயற்பெயர் – பீ. மதார் மைதீன், தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்தவர். இளங்கலை இயற்பியல் முடித்தவர். பணியின் காரணமாகத் தொடர்ச்சியாக வாழ நேர்ந்த பிற மாநிலங்களின் நகரங்களிலும், கிராமங்களிலும் தெரிந்திடாத மக்களிடையே செய்த பயணங்களும், சூழல்களும், கிடைத்த நட்புகளுமே எல்லாவற்றையும் கவனிக்கவும் நேசிக்கவும் கற்றுக் கொடுத்தது என நம்பிக்கொண்டிருப்பவர். வாழ்வின் ஒவ்வொரு திருப்பத்திலும் உதிர்ந்திடும் மகிழ்ச்சிகளையும், கசப்புகளையும் தீர்ந்திடாத சொற்களாக மாற்றிட முயன்று கொண்டிருப்பவர்.

1 COMMENT

  1. மிக மிகச்சிறந்த ஆழங்களில் துளிர்த்த புல்நுனியில் பூமியைத்தாங்கி நிற்கும் மாயக்கவிதை/ சொற்கள் நடனம் அருமை அருமை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.