தலையங்கம்: இன்னும் பிறக்காத தலைமுறைக்காக…

கனலி கலை இலக்கியச் சூழலியல் இணையதளம்

சூழலியல் காலநிலைச் சிறப்பிதழ் – பிப்ரவரி 2021

இன்னும் பிறக்காத தலைமுறைக்காக…

1

ன்றைக்கு மனிதகுலம் அதன் வரலாற்றில் மிக நெருக்கடியான ஒரு கட்டத்தில் நிற்கிறது. புவியில் அனைத்து உயிர்களின் பாதுகாக்கப்பட்ட உயிர்வாழ்க்கையை உறுதிசெய்யும் சமரசமற்ற முடிவைக் காலம் தாழ்த்தாமல் எடுக்கவேண்டிய அதிமுக்கியமான கணத்தையும் மனிதகுலம் கடந்துகொண்டிருக்கிறது.

மனிதச் செயல்பாடுகளால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றம் என்னும் நிகழ்வு உலகின் ஏறக்குறைய அனைத்து நிகழ்வுகளின் மையமாக, அவற்றின் போக்கைத் தீர்மானிக்கும் முதன்மைச் சக்தியாக உருப்பெற்றிருக்கிறது. அரசியல், பொருளாதாரம் தொடங்கி கலை, இலக்கியம் வரை அதன் தாக்கம் அனைத்திலும் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டது.

அறிவியல்பூர்வமாக நிறுவப்பட்டுவிட்ட ஓர் உண்மை என்ற நிலையை இந்தப் பிரச்சினை எப்போதோ எட்டியிருந்தாலும், சுயநலமிக்க குறிப்பிட்ட சிலரைத் தவிர, உலகம் முழுவதும் மிகப் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக மாறியது சமீபத்திய ஆண்டுகளில்தான்.

ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தின் அங்கமான காலநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசுக் குழு (IPCC) 1990ஆம் ஆண்டு முதல் காலநிலை மதிப்பீட்டு அறிக்கைகளை வெளியிட்டுவருகிறது. அறிவியல் புலத்தில் இவை தொடர்ந்து தாக்கம் ஏற்படுத்திவந்தாலும், 2018 ஆண்டு இந்தக் குழு வெளியிட்ட “புவி வெப்பமாதல் 1.5 டிகிரி செல்சியஸ் சிறப்பு அறிக்கை” தான் அண்மைக் காலத்தில் இப்பிரச்சினை குறித்த உலகின் ஒட்டுமொத்த கவனத்தை தீவிரப்படுத்தியது.

இதையொட்டிய ஆண்டுகளில், இப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை வலியுறுத்தி, உலக நாடுகளின் தலைவர்களை, அரசியல்வாதிகளை நிர்பந்தித்து உலகெங்கிலும் போராட்டங்கள் எழுந்தன. குறிப்பாகப் பதின்பருவத்தினரும், இளைஞர்களும், தங்கள் எதிர்காலத்துக்காக முன்னெடுத்த காலநிலைப் போராட்டங்கள் இப்பிரச்சினையின் சொல்லாடலை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தின.

இந்த வேளையில்தான் சூழலியல் தகர்வு, சுற்றுச்சூழல் சீரழிவு ஆகியவற்றின் நேரடி விளைவுகளுள் ஒன்றான கொரொனா பெருந்தொற்றுப் பரவலை உலகம் கண்டது. காலநிலை மாற்றத்தின் தீவிர விளைவுகளுக்கு இந்தக் கொரோனா ஒரு முன்னோட்டம்தான் என்று இந்தப் பெருந்தொற்று அடையாளப்படுத்தப்பட்டது.  இது மனிதர்கள் எத்தனை பலவீனமானவர்கள் என்பதையும் இயற்கையின் எஜமானர்கள் நாம் இல்லை என்பதையும் மீண்டும் ஒருமுறை அழுத்தமாக உறைக்க வைத்திருக்கிறது.

2

அறிஞர் நோம் சோம்ஸ்கி, காலநிலை மாற்றம் குறித்த இன்றைய ஊடகங்களின் அணுகுமுறை குறித்து 2019-இல் அளித்த நேர்காணல் ஒன்றில் இப்படிச் சொல்கிறார்:

“முழுமையான பேரழிவை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம் என்பதை அறிவிக்கும் விதமான தலைப்புச் செய்திகளை ஒவ்வொரு செய்தித்தாளும் அன்றாடம் வெளியிட வேண்டும். இன்னும் இரண்டு தலைமுறைகளில், ஒருங்கிணைந்த மனித சமுதாயம் நீடித்திருக்கப் போவதில்லை. இது மக்களின் அறிவில் ஆழமாகப் பதிவுசெய்யப்பட வேண்டும். ஒட்டுமொத்த மனிதகுல வரலாற்றில் இதுபோன்று முன்பு நிகழ்ந்ததில்லை. ஒருங்கிணைந்த மனித சமுதாயம் மேலும் இரண்டு தலைமுறைகளுக்குத் தாக்குப்பிடிக்குமா என்பது தற்போதைய தலைமுறை எடுக்கும் முடிவில்தான் இருக்கிறது. அந்த முடிவு விரைந்து எடுக்கப்பட வேண்டும்; காலம் குறைவாகவே இருக்கிறது.”

இந்தப் பின்னணியில் தான் ஊடகங்கள் இனிமேலும் தவிர்க்க முடியாத வகையில் சூழலியல்-காலநிலை நிகழ்வுகள் உலகம் முழுக்கத் தீவிரம் பெறத் தொடங்கின. சர்வதேச ஊடகங்கள் காலநிலை மாற்றத்தை, காலநிலை நெருக்கடி என அறிவித்து அதை முதன்மைப் பேசுபொருளாக உரையாடலுக்குள் கொண்டுவரத் தலைப்பட்டன.

2019-2020 காலகட்டத்தில், காலநிலை மாற்றம் குறித்த சர்வதேச ஊடகங்களின் அணுகுமுறை அபரிமிதமாக மேம்பட்டிருக்கிறது; தீவிரமடைந்திருக்கிறது. ஊடகப் பெருநிறுவனங்கள் மிக விரிவான தளத்தில் காலநிலை மாற்றம் சார்ந்த இதழியலை அச்சு, காட்சி, ஒலி, இணையதளம் உள்ளிட்ட பிரிவுகளில் முன்னெடுத்திருக்கின்றன. அதன் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் காலநிலை மாற்றத்துக்கு என்றே முழுமையாக அர்ப்பணிக்கப்பட்ட சிறப்பிதழ்களை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுவருகின்றன. காலநிலை மாற்றம் என்பது நிரூபிக்கப்பட்ட ஓர் அறிவியல் உண்மை என்ற மறுதலிக்க இயலா நிலையில் நின்று அவ்வூடகங்கள் காலநிலைச் செய்திவழங்கலை மேற்கொண்டிருக்கின்றன. காலநிலை மாற்றத்தின் தீவிரத்தை உணர்த்தும், வெளிப்படுத்தும் வகையிலான சொல்லாடலை மறுசீரமைப்பு செய்தது தொடங்கி அதன் சகல பரிமாணங்கள் குறித்த விரிவான விவாதங்களை முன்னெடுத்திருப்பதன் மூலம் இப்பிரச்சினை குறித்த பொதுமக்களின் புரிதலை ஆழப்படுத்தியிருக்கின்றன.

சமீபத்திய ஆண்டுகளில் உலக இலக்கியத்தில் ‘காலநிலை இலக்கியம்’ என்ற வகைமை தீவிரமாக உருவாகத் தொடங்கியுள்ளது. பத்தாண்டுகளுக்கு முன்பு ஒன்று, இரண்டு என இதுசார்ந்து வெளிவந்துகொண்டிருந்த நாவல்கள் உள்ளிட்ட இலக்கியப் படைப்புகள், இன்றைக்கு ஒவ்வொரு மாதமும் இந்த வகைமையில் வெளியாகும் புத்தகங்களின் பட்டியலை வெளியிடும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது.

3

காலநிலை மாற்றத்தின் விளைவுகள் உலகின் மற்ற பகுதிகளில், நம்மில் இருந்து வெகுதொலைவில் நிகழ்ந்துகொண்டிருப்பதான மாயையில் இருந்து நாம் முதலில் வெளிவர வேண்டும். இந்தியாவில், தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்தின் விளைவுகள் மிக வெளிப்படையாகத் தெரியத் தொடங்கிவிட்டன: வெப்ப அலைகள், கணிப்பில் தவறும் புயல்கள் உள்ளிட்ட வானிலை நிகழ்வுகள், அதிதீவிர மழை, பருவமழை அமைப்பு மாறுதல், வேளாண்மையில் வீழ்ச்சி, உணவுப் பாதுகாப்பு, கடல்மட்ட உயர்வு, கடல்நீர் உட்புகுதல், இடப்பெயர்வு போன்றவை மனிதர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் என்றால், புவியில் வாழும் மற்ற உயிரினங்கள் எதிர்கொண்டிருக்கும் நெருக்கடிகள் அதிபயங்கரமானவையாக இருக்கின்றன. தாவரங்கள், விலங்கினங்கள் என ஒட்டுமொத்த உயிர்க்கோளமும் மிகப் பெரிய எண்ணிக்கையில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கின்றன, அற்றுப் போய்க்கொண்டிருக்கின்றன.

இந்தப் பின்னணியில் இத்தகைய நிகழ்வுகள் குறித்த அறிதலைப் பொதுமக்களிடத்தில் ஏற்படுத்தி, புவியின் தற்போதைய நிலை குறித்த புரிதலை அவர்களிடத்தில் நிலைபெறச் செய்யும் முதன்மைப் பொறுப்பு, முன்பு எப்போதையும்விட ஊடகங்களுக்கு இப்போது இருக்கிறது. எனவே, தமிழ் ஊடகங்கள் காலநிலை மாற்றம் சார்ந்த செய்திவழங்கலைத் தங்கள் முதன்மைப் பணியாக மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.

அந்த வகையில், காலத்தின் குழந்தையாக, கனலி கலை இலக்கியச் சூழலியல் இணையதளத்தின் இந்தச் சூழலியல்-காலநிலைச் சிறப்பிதழ் வெளியாகிறது.

மேம்பட்ட வாசகர்களைக் கொண்டிருக்கும் ‘கனலி’ போன்ற இலக்கிய இணையதளங்கள் மூலம் இப்படியான ஒரு முயற்சியை முன்னெடுக்கும்போது அது தமிழ் இலக்கிய, அறிவுப் புலத்தில் ஒரு விவாதத்தைத் தொடங்கிவைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இது சார்ந்த உரையாடல் இலக்கிய, அறிவுத் தளத்தில் மேலெழும்போது, அது பொதுத் தளத்திலும் காரியமான விளைவுகளை உண்டாக்கும் என்பது நம்முடைய நம்பிக்கை.

காலநிலை மாற்றத்துக்கு எதிராக மக்கள் ஒன்றே ஒன்றை மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால், அவர்கள் அதுகுறித்துப் பேசுவதைத் தேர்ந்தெடுப்பேன் என்று இளம் காலநிலைச் செயற்பாட்டாளர் கிரெட்டா துன்பர்க் கூறுகிறார்.

ஆம்! நாம் பேசத் தொடங்க வேண்டும், அடுத்த தலைமுறைக்காக… இன்னும் பிறக்காத தலைமுறைக்காக…

சு. அருண் பிரசாத்
சிறப்பிதழ் ஆசிரியர்

Previous articleகாலநிலை மாற்றம்: அடிப்படைக் கேள்விகளும் பதில்களும் (FAQs)
Next articleமுதியவளின் நிர்வாணம்
Subscribe
Notify of
guest
7 Comments
Most Voted
Newest Oldest
Inline Feedbacks
View all comments
Madhusudhan S
Madhusudhan S
2 years ago

அற்புதம்..

வரும் தலைமுறைக்கு உங்கள் ஆதங்கத்தையும் அதே நேரத்தில் எச்சரிக்கையையும் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.

தங்களின் சீரிய முயற்சிக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

மதுசூதன்.

சூ.ம.ஜெயசீலன்
சூ.ம.ஜெயசீலன்
2 years ago

ஆம்! கண்டிப்பாக பேசுவோம்!

Sriram nila
Sriram nila
2 years ago

Best wishes to team kanali

கோகிலா
கோகிலா
2 years ago

வாக்கு வாதமோ,விவாதமோ நாம் பேசுவதை விட அரசியல் வாதிகள், அதிகாரிகள் பேச வேண்டும்.நாம் பேசுவது வீண் விவாதம் ஆகலாம்.சட்டமன்ற/நாடாளுமன்றத்தில் ஐநாவில் விவாதம் மேற்கொண்டால் விரைவில் தீர்வு காண முடியும்..

ஜெயபாலன்
ஜெயபாலன்
2 years ago

சரியான முன்னெடுப்பு…
கனலிக்கு பாராட்டுகள்!

Sriram nila
Sriram nila
2 years ago

நான் இந்த சிறப்பதழில் வாசித்த கட்டுரைகள் அனைத்தும் சிறப்பானவை..கனலி குழுவின் சீரீய முயற்சி பாராட்டுக்குரியது…பழங்குடிகளின் சூழல் குறித்த கருத்துக்களை நேர்காணலில் கொண்டு வந்து இருக்கலாம்..சிறந்த ஆவணமாய்….காலத்தின் கண்ணாடியாய். சிறப்பிதழ் வந்துள்ளது… வாழ்த்துக்கள்.
ஶ்ரீராம்நிலா.

முனைவர் ம.இராமச்சந்திரன்

கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பேச்சுப் பொருளாக இருந்து வருவது காலநிலை மாற்றம். காலநிலை மாற்றத்திற்குக் காரணம் நுகர்வுக்கலாச்சாரம். அரசியலையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்த மூலதனத்தை அதிகரிக்க மற்றும் பாதுகாக்க பெரும் நுகர்வு மக்களிடம் திணிக்கப்பட்டது. நுகர்விற்குத் தேவையான பணத்தை ஈட்ட முறையற்ற உழைப்புமுறை பின்பற்றப்படுகிறது. இதன் விளைவாக உற்பத்தியும் நுகர்வோர் திருப்தியும் இயற்கைக்கு முரணாக இயங்கத் தூண்டியது. இன்று வாழ்வதற்கு ஏற்ற இடமாக சுற்றுச்சூழல் இல்லை.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டுமென்றால் முதலில் மக்களை நுகர்வுக் கலாச்சாரத்தில் இருந்து மன ரீதியாகவும் பண ரீதியாகவும் மாற்ற வேண்டும். நுகர்வை யார் கொண்டு வந்தார்களோ அவர்களின் (அரசியல்
பொருளாதாரம்) உறுதியான முன்னெடுப்பு மட்டுமே பூமியை உயிர்க்கோளமாக வைத்திருக்க உதவும்.

உங்கள் முன்னெடுப்பு பாராட்டத்தக்கது.

-முனைவர் ம இராமச்சந்திரன்