நகுலனின் முழுமையடைந்த தன்னலம்

”வாழ்க்கை பற்றிய ஆய்வறிவின் விளைவு, யதார்த்தம் பற்றிய அந்த படைப்பளியினுடைய கலாபூர்வமான பிடிப்பேயாகும்”

 • கான்ஸ்டாண்டின் ஃபெடின்

நகுலனின் கவிதைகளை வாசிக்கும்போது திரட்சியாகத் தோன்றும் எண்ணமும் இதுதான்.

நகுலனின் கவிதைகளை, எட்டு பகிதிகளாகப் பிரித்துக் கொள்ளலாம்.

 1. எழுத்து காலக் கவிதைகள்
 2. இரு நீண்ட கவிதைகள்
 3. மூன்று கவிதைகள்
 4. ஐந்து கவிதைகள்
 5. கோட் ஸ்டாண்ட் கவிதைகள்
 6. சுருதி கவிதைகள்
 7. இறுதி பத்தாண்டு கவிதைகள்
 8. மஞ்சள் நிறப் பூனைக்குட்டி
 • எழுத்துக் காலக் கவிதைகள்

வெறுமையான பாதுகாப்புணர்வைத் தவிர ஒரு மனிதனுக்கு அவன் உணரக்கூடிய வகையில், அடியாழங்களில் எதுவுமே இல்லாத சூன்ய நிலையே அவனுக்கான நம்பிக்கையாக இருந்துவிடுகிறது. இது ஒரு வகையில் படைப்பாளியின் மனநிலையாக இருக்கலாம் என்பதைவிட, படைப்பாளி என்பவன் தன்னை திணித்துக் கொள்ளும் ஒரு பொந்தாக நாம் கற்பனை செய்து கொள்ளலாம். பொந்தின் இரு முனை சாத்தியம் என்பது ஒரு பக்கம் இயல்பு வாழ்வு எனும் இயற்பியலும் மறுபக்கம், சூன்யமான பொந்திருட்டும் அவனுக்கான சுய தரிசனமாக மாறிப்போன அதீதமும் அவனைத்தவிர யாரும் அடைந்துவிட முடியாத ஆழ்ந்த உள்ளடக்கமானது எப்போதும் அதன் தீவிரத்தைப் புரிந்து கொள்ள முடியாத தடுமாற்றத்தை அல்லது நமக்கு தோதான வகையில் அதை மாற்றிக் கொள்ளும் எளிய வழி முறைகளையையே பின்பற்ற வைப்பதை விட்டு யாரும் விலகிவிட முடியாத ஒரு பொந்துதான் எல்லோருக்குமானது.

அது

காதலுக்குப் பின்

தொழிலின் இறுதியில்

உலகைவிட்டுப் பிரிகையில்

சாவுக்கு அப்பால்

முதலுக்கும் முடிவுக்கும்

முன்னும் பின்னும்

முழுவதுமாகப்

பின்னிப் பிணைந்து

நில்லாமல் நிற்பது

இல்லாமல் இருப்பது

தெரியாமல் தெரிவது

சொல்லாமல் சொல்லிக் கொள்வது

எல்லோரும் நினைப்பது

யாவரையும் கடந்தது

புலனுக்குப் புரியாதது

பொருளுக்குச் சிக்காதது

என்றுமே கேள்வியாக

எஞ்சி நிற்பது

அது அதுவே.

ஜீவராசிகள் என்றுமே காலத்துக்கானவை. மனிதனும் அதிலிருந்து தப்ப முடியாது. நகுலனின் எழுத்து காலகட்ட கவிதைகள் யாவும் “எஞ்சி நிற்கும் அது அதுவே” என்பதைத் தேடியே நிற்கின்றன. இது அந்த இரண்டாம் உலகப்போரும் அதைத் தொடர்ந்து மனிதன் தனது சுயத்தைத் தேடும் இத்தகைய சிதைவுக்குத் திரும்பும் செயலும் இயல்பான காற்றைப்போல பொருந்திக் கொண்டது, தமிழ் இலக்கியத்தில் மிகச் சிலரே. அதில் நகுலன் மிக முக்கியமானவராக இருக்கிறார். சி. மணி இதை வேறு தளத்திற்கு கொண்டு சென்றார். அந்த வித்தியாசமே நகுலனின் உள்ளினைந்த சாத்தியம்.

இந்த மனோநிலையின் பின் விளைவுகளே, நகுலனின் பிற்பாடு நிகழ்ந்த அனைத்து படைப்பு செயல்களிலும் லயிப்பு நிலைக்கு அப்பால் அவரைக் கொண்டு சென்று அதன் தன்மையாக அவரை பதிலீடு செய்கின்றது. எல்லா படைப்பாளியும் எல்லைக்கு உட்படாத பிரக்ஞையிலேதான் தனது வாழ் களம் அமைந்திருக்கிறதாக நம்புகிறான். ஆனால் அது ஒரு பாவனையே. ஒருவன் படைப்பாளியாகும்போதே அவன் அந்த எல்லையை பிரக்ஞையின் பூரண வடிவமாக கருதிக் கொள்கிறான். அத்தகைய பூரணத்துவம் என்பதை அந்த விழிப்புணர்வின் எல்லையில் தான் இல்லை என்பதை மீட்டெடுக்கும் மற்றொரு மையமே அது.

 1. இரு நீண்ட கவிதைகள்

மழை: மரம்: காற்று கவிதையில்

எப்போது நான் அவைகளைப் பார்க்க விரும்புகிறேனோ

அப்போது இந்தச் செய்தி என்னைச் சாகடிக்கும்.

எனவே, எனக்கு ரஷை, நான் நினைக்கிறேன்

எனது இயல்பான நிலைக்கேற்ப

ஜன்னலின் கண்ணாடிச் சாளரத்தில்

என் கண்களால் பார்க்கப் பார்ப்பது

எங்கே மற்ற ஜீவன்கள்

தங்கள் கண்களை வைக்கின்றனவோ

அங்கே கதிரவனின் ஒளிக்குக் கூசாமல்.

இரு நீண்ட கவிதைகளின் சாராம்சம் இதுவே. நகுலன், தன்னை பறவையே தன்னைப் பார்கிறதுபோல, ஒரு மனிதனே தன்னை வெளியிலிருந்து பார்ப்பதைப் போல, ஒரு பிரக்ஞையே அந்த பிரக்ஞையை தரிசிக்கும் ஒரு அதிநிலையைக் காண்கிறார். ஆனால் அந்த நிலை தன்னைக் கொன்றுவிடும் என்ற அறிவு, அறியப்படுவதிலிருந்து வேறானது. கிட்டத்தட்ட முழு முற்றான எளிமையாக்கலாகும். எழுத்து கால கவிதைகளிலிருந்து நகுலன், புற காரணிகளின் மாயையிலிருந்து விடுபட்டு மாயையிலிருக்கும் புறக் காரணிகளை அடையாளம் காண்கிறார். இத்தகைய உள்பார்வையே தனது உந்தித் தள்ளும் அறிவார்வம் முழுவதையும் இத்தகைய தரிசனத்தை நோக்கி திருப்பினார் என்பதைக் காட்டுகிறது.

 1. மூன்று கவிதைகள்

நகுலனே சொல்வதைப்போல வெறும் கெட்டிக்காரத் தன்மையால் ஒரு வகையான புரியாத்தன்மையை சிருஷ்டிப்பது என்பதை படைப்பில் ஒரு போலியாகவே இருக்கிறது. ஆனால் படைப்பின் உச்சகட்டம் என்பது ஒரு அபூர்வ எளிமையே என்கிறார்.

மூன்று கவிதையில் இராவண சோகம் என்ற நெடுங்கவிதையில் தன்னுடைய பார்வையில் ஒரு ராவண காதையைப் படைக்கும் நகுலன், அதற்கு அடுத்ததாக வரும் கவிதையை வெறும் நன்கு வரிகளில் முடிக்கிறார்.

நான்

எனக்கு

யாருமில்லை

நான்

கூட . . .

இதை ஒரு வரண்ட நிலை என்பதை விட, ஒரு நெருக்கடியிலிருந்து வெளியேறுதல், தன்னிலிருந்து ஒரு விளிம்பு நிலைக்கு சட்டென மனம் சென்றுவிட்ட ஒரு அவசம்தான் இது.நிஜ வாழ்க்கையும் பிரச்சனைகளும் தனக்கே உரியதாக ஆகிவிட்டாலும் மன உள்ளமைப்பில் மாறாத ஒரு தரிசன வட்டத்தை அவனுக்கு வழக்கியபடியேதான் இந்த பிரபஞ்சம் இருக்கிறது.

 1. ஐந்து கவிதைகள்

குகன், வீடணன் போன்ற இதிகாச கதாபாத்திரங்களில் வாழும் நகுலன் தொகுதியின் முடிவில் வைக்கும் ஒரு கவிதை, பூ, ஒற்றை எழுத்து,

தெரிந்ததுதான்

இப்போது இன்னும்

தெளிவாகவே தெரிகிறது.

காசியபன் சொல்லவில்லையா?

அல்லது சொல்கிறாரா?

”சொல் ஓர் அடையாளம்

அடையாளத்துக்கு

அடிமைப் படாதே

ஏமாந்து போவாய்”

சொல்லுதல் என்பதுகூட

ஓர் ஏமாற்றம் என்பதுதான் போலும்

உதாரணமாக

“கூடவே சுமந்து வரும்

என் கடவுளுக்கு.”

காசியபன் சொல்வது போல்

சொற்கள் நம்மை ஏமாற்றுகின்றனவா?

அல்லது கவிஞன் செற்களைத்

துகிலுரித்துக் கொண்டே இருக்கிறானா?

ஏதோ ஒரு வெறி

எங்கிருந்தோ ஒரு வேகம்;

’’பூ’’ என்று உதறிச் சென்று

நான் என் பயணத்தைத் தொடர்கையில் கூடா

அந்த சாஷாத் சந்தர்ப்பத்தில் கூடப்

பூ என்னைக் கண்டு

சிரிக்கிறது – தோன்றுகிறது

”சாரலின் கடுஞ்சினத்தில்” கூடப்

“பூ மோகம்” உன்னை விடுவதில்லை

அற்தமற்ற பெரு வெளியில்

இதழ் இதழாக

ஒரு பூ விரிவதைக் கண்டு

பூ என்று உதறி எழுந்து

போக விரைந்தவன்

பூ என்று சொல்லி

வாயடைத்து நின்றேன்.

புதுக் கவிதை வரலாற்றில் ஒவ்வொரு கவிஞனும் நெடுங்கவிதைகள் எழுத முயற்சித்துக் கொண்டுதான் இருக்கிறான். நகுலனின் காலத்தில் எலியட்டின் பாழ்நிலம் கவிதை இதுபோன்ற ஒரு உத்வேகத்திற்கு காரணமாக அமைந்தது. எலியட்டின் மாதிரியை சி. மணி முயன்று பார்த்தார். அதுவே தமிழின் ஆகச் சிறந்த நெடுங்கவிதையாக சி.சு.செல்லப்பாவால் எழுத்தில் இந்த அடைமொழியோடு வந்தது. ஆனால் நகுலன் அத்தகைய நேரடி முயற்சியைச் செய்யவில்லை. அவர் அசலான தன்னியல்பான நெடுங்கவிதைகளை எழுதினார். பிரமிளும் அப்படியே. ஒரு சந்தர்ப்பத்தில், சி. மணியிடம் கேட்டபோது, “செல்லப்பா சொல்றாருங்க” என்றார். அது தொக்கிய ஒரு கேள்வியாகவே நின்றுவிட்டது.

ஆனால் நகுலன் கவிதைகள் முற்றிலும் வேறானவை. ஒரு கவிதைக்கான மூல எண்ணத்தை வந்தடைவது என்பது அது தனது சொந்த அகவயமான உணர்ச்சிகளையும் மனோபாவங்களையும் புறவயமாகப் பாவிக்கவும் படைப்பாற்றலில் அதன் அழிக்கமுடியாத இடத்தை அடைவது தன்னியக்கமான, பிரக்ஞையினுள் அதை அறிவுபூர்வமாக புரிந்து கொள்வதிலிருந்து விடுபட்டு, சமகால நிலைமைகளால் மேலும் நுணுக்கமடையும் எல்லையில் திடீரென தன்னை செலுத்திக் கொள்வதென்பதை அடிப்படையாகக் கொண்டவையாக இருக்கின்றன. இது ஒருவகையில் வழக்கமான உத்திகளிலிருந்து தன்னை முற்றிலுமாக உரித்தெடுத்துக் கொண்டிருக்கும் ஒன்று.

 1. கோட் ஸ்டாண்ட் கவிதைகள்

கேள்வி பதிலாக, அல்லது வெறும் கேள்விகளாக கவிதைகளை உருவாக்குவதென்பது, இந்த மனோபாவம் அவரது தீவிர தர்க்க தூண்டலின் ஒரு வெளிப்பாடாகவே இருக்கிறது. அசாரதணமான இணை முரண்கள் மோதிக் கொள்ளும் தருணத்தின் குறுக்கே உருவாகும் கண நேர செயலின்மையே உள்ளடக்கமாக முடிவற்ற எல்லைகளாகக் கவிதைகளை மாற்றுகின்றன.

தாடி, என்றொரு கவிதையில்,

தன்னையே

ஒருவன் தாண்டிச் செல்லும்

நிலை எய்துகையில் இடுப்பிற்கு

மேல் தலைக்குக் கீழ் ஒரு தாடி

காற்றில் அசைகிறது உடல் –

விருஷத்தில் இந்தப் பொந்தில்

ஒரு பறவை வந்தமரும்

விந்தை. தாடியில் அவன்

மறைந்துவிடுகிறான்.

கோட் ஸ்டாண்ட் கவிதைகள் நகுலனின் அடுத்த பரிமாணம். இது ஒரு வகையில் பல கவிதைகளை அல்லது அப்படிப்பட்ட அனுபவ வெளிகளை ஒரு கருந்துளைக்குள் சிதறடிக்கப்பட்டதாகத் தோன்றுகிறது இங்கே மையத்திணிவு ஒன்றைத் தவிர, ஏன் தர்க்க ரீதியாகக் கூட ஒரு வடிவ செறிவு அதன் எளிமையான மொழியாக்கத்தால் வெறும் உள்ளீடற்ற சட்டகங்களின் தொகுப்பால் விளைந்த ஒரு நிலையில்லாத மாயத்தோற்றமாக மாற்ற முடிவது மிக வியப்பானதே. இந்த பிரபஞ்சத்தில் யாவும் மெய்யான இருத்தல் என்ற நிலையிலிருந்து இன்மையாகவே இருக்கின்றன. கோடான கோடி ஓளியாண்டுகள் தள்ளி நாம் பார்க்கும் இக்கணம் இல்லாமலிருக்கலாம். ஆனால் காலம் மற்றும் வெளி என்ற நீட்சி அந்த இருத்தலைச் சாத்தியப்படுத்துகிறது. நகுலனும் இந்த நிலையில்தான் தனது கவிதையில் வந்தடைகிறார். ஒவ்வொரு தர்க்கமும் ஒன்றை ம்ற்றொன்று இல்லாமலாக்கி, கடைசியில் அங்கே புதிர் தன்மை வாய்ந்த ஒரு தரிசத்திடம் நம்மை கொண்டு செல்கிறார். ஒரு நிலை மற்றொரு நிலையை பிரதிபலிப்பதும், அத்தகைய சாதரண நிலையிலிருந்து பிரதிபலிப்பு நிலைக்குச் செல்லும் தன்மை, கவிதைகளை தர்க்கத்தின் பெலஹீன தன்மைகளிலிருந்து தப்புவித்து வாசகனுக்கு புதிய திறவுகளைத் தருவதாக மாற்றுகிறது.

கவிதை 76

இப்போதும் ஞாபகத்தில் இருக்கிறது

நவீனன் இருந்தபோது

(இப்பொழுது அவன் இல்லை)

நான் ஒருமுறை அவனிடம்

கேட்டதும் அவன் பதில்

கூறியதும்

“ஒரு எழுத்தாளன் என்ற வகையில்

உன் கோட்பாடு என்ன?”

அவன் சிரித்துக் கொண்டே

உத்தர வேதத்திலிருந்து இரு

வரிகளைத் தீர்க்கமாக உச்சரித்தான்:”தவம் செய்வார் தம் கருமம் செய்வார்

மற்றல்லார் அவஞ் செய்வார் ஆசையுட்பட்டு”

 1. சுருதி கவிதைகள்

படைப்பாளியின் குலைந்துபோய்விட்ட தன்னிலையை ஒரு எல்லை வரை நம்மால் பின்பற்ற முடியும். அது மனித சிந்திக்கும் திறனின் உள்ளியல்பின் ஒரு பக்கவாட்டு சாத்தியம். நகுலன் தொடர்ந்து எழுதியது எதற்காக என்ற கேள்விக்கான விடையாக இக்கவிதைகள் நிற்கின்றன. தான் என்னவாக ஆகவேண்டும் என்று அவர் கவிதைகள் நினைத்தனவோ, அதுவே இக்கவிதைகள்.

குரூரம்

ஒருவர்

சாவதும்

ஒருவர் இருப்பதும்

வெறும் சாவு

என்பதைவிட

இது

மிகவும் குரூரம்

இதைச் சொன்னதும்

சுசீலாதான்.

தமிழ் இலக்கிய உலகில், குறிப்பாக, புதுக்கவிதையில் தனது இறுதிக் காலங்களில் எழுதிய படைப்புகள் உச்சம்பெறுவது நகுலனிடம் மட்டுமே. அவர் தன்னை புதுப்பித்துக் கொண்டே இருந்தார் என்பதைவிடவும் தான் அடைய வேண்டிய எல்லையை எந்த சந்தர்ப்பத்திலும் மாற்றிக் கொள்ளவில்லை. அல்லது அப்படிப்பட்ட சந்தர்ப்பத்தை தவிர்த்தார் என்றோ, அத்தகைய ஆன்ம உணர்வின் சுயம் செயல்வடிவம் கொண்ட மொழியைக் கற்பித்துக் கொண்டது என்றோ கருதிக் கொள்ளலாம்.

ஒரு படைப்பாளி, தனது மத்திய காலத்தில்தான் உச்சம் பெறுகிறான். அத்தகைய பயிற்சியானது, அதாவது தொடர்ந்த செயல்பாடு என்பது இறுதிக் கட்டத்தில் வீரியம் இழந்துவிடுகிறது. இங்கே ஒரு குறிப்பிட்ட முடிவற்ற தேடு பொருள் என்று எதுவும் சாத்தியமில்லை. இவை அத்தகைய அனுபவ திரட்சி என்று உள் மனம் கண்டு கொள்வதுதான் தன்னுள் தொடர்ந்த மாறுபாடுகளை உண்டாக்கும் நிலையை அவன் அடைகிறான். இது பொதுவாக சாத்தியமில்லை. ஏனென்றால் உள்ளுக்குள் செயல்படும் ’செயல்படும் தன்மையானது’ முடிவில் செயலற்றுப் போகிறது. ஆனால் நகுலன் பரந்த நோக்கம் பெரும் மனோபாவங்களைக் கொண்டிருக்க வேண்டும். அதுவே அவரை தொடர்ந்து அத்தகைய தேடலை அது உடல் சார்ந்து ஏற்படும் ஒரு தினவுபோலல்லாமல், உள்ளம் சார்ந்த எதிர் வினையிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு மனோநிலையின் தேர்வு என்று ஆழ்ந்து யோசிக்கும்போது புரிந்து கொள்ளமுடிகிறது.

 1. கடைசி பத்தாண்டு கவிதைகள்

ஒரு பூ

ரோஜா

என்றுதான்

வைத்துக்கொள்

அதன்

இதழ்கள்மணம்

பச்சையில்

சிவந்த முட்கள்

அதைச் சுற்றி

ஒரு வண்டு

அதன்மீது காணும்

மகரந்தப் பொடி

காலை மலர்ந்து

மால மறையும்

அதன் சாகரம்.

சி. மணி கடைசி காலங்களில் எழுதியக் கவிதைகளை க்ரியா ராமகிருஷ்ணன், “இவற்றை கவிதைகள் என்று எவ்வாறு எடுத்துக் கொள்வது?” என்று ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். மணி என்னிடம் வெடித்துச் சிரித்தார். இருவருமே இல்லை. ஆனால் இந்த நிகழ்வு இருக்கிறது. தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. நமக்கானவையாக, நமக்கு மிக நெருக்கமாகத் தோன்றுபவையே, ஒரு நேரத்தில் கண நேரத்துக்கானது. அதன் ஊசலாட்டம் அதை எதிர் கொள்ளும் நமது அப்போதைய மனோபாவத்தை சார்ந்தே உள் வாங்கப்படுகிறது. ஒரு மனிதனின் அகச்சாரமென்பது மற்றொரு மனிதன் எளிதில் கண்டு கொள்ளப்படும் விதத்தில் இருந்துவிடுவதில்லை. பிரக்ஞையின் தனித்தன்மையில் செயல்படும் தேடல் உணர்வென்பது கணத்துக்குக் கணம் தன்னை இட்டு நிரப்பிக் கொள்கிற ஒரு தன்மையின் அடித்தளமாக உள்ள வியப்பான தூண்டல். இது பெரும்பாலும் நிரம்பிவிடுகிற தன்மையைக் கொண்டிருந்தாலுமே, ஒரு சில ஆளுமைகள் அல்லது மனிதர்கள் அப்பாத்திரத்தில் ஒரு கசிகிற ஓட்டையை உடையவர்களாக இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் நகுலன். எப்போதும் நிரம்பிவிடாத தொடர்ந்த சமநிலையிலேயே பேணப்படும் அத்தகை தன்மையை, நிறைந்து பொங்கும் ஆத்மாக்களால் புரிந்து கொள்ள முடியாதுதான்.

இரண்டு விஷயங்கள் நடக்கின்றன. ஒன்று செயல்திறன் மிக்க வழியில் செயல்படும் மனம். இரண்டு உள் ஒடுங்கிய பித்துநிலை. இதில் முதலாவது அதிமனித அம்சங்கள் உள்ள ஒரு இறுதி நிலை. அல்லது இன்னும் விரல்கள் தொடாத ஆனால் வாசிப்பிலிருக்கும் ஒரு இசைக் கருவியின் தந்திகள். இது கோடான கோடி சாத்தியங்களை உள்ளடக்கியது. இரண்டாவது நிலை என்பது முதல் நிலையின் செயல்படு நிலை. இது வெறும் பார்வைக்கு அர்த்தமற்ற அசைவுகள். ஆனால் அதன் உபவிளைவான இசையில் எழும் கானம் அற்புததிலும் அற்புதம்.

நகுலனின் இறுதி பத்தாண்டு கவிதைகள், சி. மணியுடையதைப் போல கண்டு கொள்ளப்படாமல் போகவில்லை. அந்த விஷயத்தில் நகுலனின் ”நான்” ஒரு முழுமையடைந்த தன்னலம்தான். அவரது தனித்தன்மையானது திடுக்கிடச் செய்யும் பெரிய ஓசைக்குள் நிகழும் கண நேர மெளனம். அத்தகைய மெளனத்திலிருந்து படைப்பு ஒரு அணுவின் காளானாக முகிழ்ந்தபடியே இருக்கிறது.

 1. அந்த மஞ்சள் நிறப் பூனைக்குட்டி

இருத்தலுக்கான வேட்கையில் மறுதலிப்பின் ஒரு பூரண வெளிப்பாடே, இத்தொகுப்பு. இது நகுலனின் அகமியின் படைப்பு வடிவம்.

சில பொறிகள்

என்னுடன் புத்தகங்கள் இருக்கின்றன

அடிக்கடி என்னிடமிருந்து நான் போய் விடுவதுண்டு.

பேயாய் உழலும் என் மனமே

நீ

பேசாமல் இரு

ஏன் இந்தச் சிந்தனைகள்?

நான் சொல்வதைவிட நீயே கண்டு பிடித்துக் கொள்வதுதான்

உனக்கு உபயோகமாக இருக்கும்.

எது நாவல்?

என்னளவில் அது

!

?

.

இதையும் கவனி

;

எழுதிக் கொண்டே போகையில்

ஒரே ரீதியில் எழுதிச் சென்றாலும், சீராகச் சென்றாலும் பல

எழுதப்படாம்லேயும், சில கீழ் அமிழ்ந்து கிடப்பதில்தான் விஷேசம் இருக்கிறது.

அப்படியென்றால்

’அது’ செயல்படுகிறது.

 

நகுலனின் இரண்டாக பிளவுபட்ட இந்த நிலையை, அறிவார்ந்த, மனவெழுச்சி கொண்ட, சீலம் சார்ந்த படைப்பாளியின் மறு வடிவமைப்பு என்று இதைச் சொல்லலாம். இங்கே இயற்கை மனிதனிடமிருந்து பின்வாங்குகிறது. மனிதனின் அத்தனை செயல்பாடுகளும் உள்ளார்ந்து இயற்கைக்கு எதிராணதுதான். நவீனன் என்பவன் வரம்பிற்குட்பட்ட செயல்திறனிலிருந்து திசை திருப்பப்பட்டு, அதி நிலையின் சாத்தியப்பாடுகளை நோக்கித் திருப்பப்படுபவனாக இருக்கிறான். இது ஒருவகையில் பிளவு மனநிலையின் செயற்கூறுதான்.

கடைசியாக, அவர் கூறுவதையே, இந்த இயற்கைக்கும் மனிதனுக்குமான இடைக்கால அம்சமாகக் கொள்ளலாம்.

 

அதெல்லாம் அப்படித்தான். நீயும் பல எழுத்தாளர்களைப் போல கனவு நிலையில்தான் இயங்குகிறாய். கனவு பேய்க் கனவாகும். கனவுகள் சிறாமீனின் பிளந்த வாய்களாகும்

 

அடிக்கடி அந்த மஞ்சள் நிறப் பூனையைக் காணாவிட்டால் ஒரு மாதிரி இருக்கிறது.

ஏன்?

தெரியவில்லை. என்னுடன் பூர்ண சுதந்திரத்துடன்  பழகினாலும் என்னிடம் அதற்கு ஆசையோ,அன்போ, மரியாதையோ கிடையாது. தின்ன வேண்டியதைத் தின்ருவிட்டு போய்விடும். சில வேளைகளில் கொடுத்தாலும் நிராகரித்துவிடும். சில வேளைகலில் நான் உள்ள இடத்தில் என் கண் காணப்படுத்துக் கொண்டிருக்கும். என்றாலும் அதன் உருவம் என்னை வசீகரிக்கின்றது.(ஒரு முறை என் எதிர் அறையில் கட்டிலுக்கு அடியில் ஒரு அணிற்பிள்ளையைக் கவ்விக் கொண்டு பதுங்கியிருந்தது. என்னைக் கண்டதும் அந்த அணில் பிள்ளையைக் கவ்விக் கொண்டே ஓடிவிட்டது. இதுவும் ஞாபகம் வருகிறது. பின்னாடி தெரிந்தது. இது என் கண் மறைவில் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது என்பது) என் அதிகாரம் அதனிடம் செல்லாது. இதுபோல் நாம் மனிதர்களிடம் இருக்க முடியுமென்றால்?

ஏன் முடியாது? ஒரு லஷ்ய-அலஷ்ய பாவம். ஒன்றையும் பொருட்படுத்தாது தன்னிடமிருந்தே போய் விடுதல்.

அந்த மஞ்சள் நிறப் பூனை உன்னை விட்டுப் போனாலும் எங்கேயோ ஒரு இடத்தில் இருக்கத்தான் இருக்கிறது. இந்த நிச்சயம் இருந்தால் போதும் ஓம் என்று சொல்லவும் கற்றுக் கொள்ல வேண்டும். (ஆம் என்பதை அந்த நண்பன் ஓம் என்று உச்சரித்ததும் ஞாபகம் வருகிறது.)

இதைச் சொல்லிவிட்டுச் சச்சிதானந்தம் பிள்ளை சென்றுவிட்டார்.

 

அந்த மஞ்சள் நிறப்பூனை வேறு யார்? அந்த கணத்தில் அது தன்னலமான ஒரு நகுலனின் பிரதிதான். அல்லது இந்த இயற்கை, தன்னை செழுமைபடுத்திக் கொள்ளும் ஞானம் அது.

 

(வாசிப்புக்கு காவ்யா வெளியிட்ட நகுலன் கவிதைகள், நகுலன் 100 சிறப்பு வெளியீடும், சுருதி தனித்தொகுப்பும் காவிரியின் அந்த மஞ்சள் நிறப் பூனைக்குட்டி PDF பிரதியும் பயன்பட்டது. காவ்யாவின் வெளியீடு ஒரு தண்டனையாக இருந்தது. நகுலனுக்காக அந்த மஞ்சள் நிறப் பூனையாக அதை ஏற்றுக் கொண்டேன்.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.