Monday, Aug 8, 2022
Homeபடைப்புகள்கட்டுரைகள்வரைபடங்கள் உணர்த்தும் சுற்றுச்சூழல் உண்மைகள்

வரைபடங்கள் உணர்த்தும் சுற்றுச்சூழல் உண்மைகள்

மிழகம் கடந்த முப்பது ஆண்டுகளில் தொழில்துறையில் பலவிதமான முன்னேற்றங்களைக் கண்டிருக்கிறது. இந்த வளர்ச்சியின் விலையாக சுற்றுச்சூழலில் ஏற்பட்ட தாக்கங்கள் மக்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதித்துவருகின்றன. சில வரைபடங்களைக் கொண்டு அதை இங்கு விளக்குகிறேன்.

இந்தக் கட்டுரைக்குள் செல்வதற்குமுன் என்னைப் பற்றி சில வரிகள். நான் உலக வளங்கள் நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராகப் பணிபுரிந்துவருகிறேன். அரசின் முடிவுகளையும் திட்டங்களையும் தகுந்த ஆதாரங்களுடன் வகுக்க உதவுவது எனது பணி. இவ்வாறு நான் ஈடுபடும் ஆராய்ச்சி மற்றும் திட்ட உதவிகள் மக்களின் நலனை முன்னிறுத்தி சுற்றுச்சூழலையும் காத்து, பொருளாதார முன்னேற்றததையும் பாதிக்காதவாறு நம்மை நாம் வழிநடத்திச் செல்வதற்கு உதவும் என்று நம்புகிறேன். குறிப்பாக நான் இடம்சார்ந்த தரவுகளை அதிகம் ஆராய்ச்சி செய்கிறேன். பல்வேறு செயற்கைக்கோள் புகைப்படங்கள், வரைபடங்கள், கணக்கெடுப்புகள், கள ஆய்வுகளைப் பயன்படுத்தி இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றில் சிலவற்றைக் காண்போம்.


1

தமிழகத்தின் வளர்ச்சிக்காகக் கொண்டுவரப்பட்ட திட்டங்களில் ஒன்று காட்டுப்பள்ளி துறைமுகத் திட்டம். இந்தத் துறைமுகம் கட்டப்படுவதனால் கடல்முகத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சில இடங்களில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது; சில இடங்களில் மண்குவிந்து கடற்கரை விரிந்துகொண்டிருக்கிறது. இதனை மேலே உள்ள வரைப்படத்தில் நீங்கள் காணலாம். 1990 முதல் 2018 வரையிலான ஆண்டுகளில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் இந்த வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளது. சிவப்பு கோடினால் முந்தைய கடற்கரை காட்டப்பட்டுள்ளது; அதன் பின்னணியில் அதே கடற்கரையின் தற்போதைய நிலை காட்டப்பட்டுள்ளது. சில இடங்களில் 300 மீட்டர் அளவுக்கு அரிப்பு ஏற்பட்டுள்ளது.


2

இவ்வாறு நடைபெறும் மிகப்பெரிய கட்டிடப் பணிகளுக்கு மணல் நமது ஆற்றுப்படுகையில் இருந்து அள்ளப்படுகிறது. இடப்புறத்தில் உள்ள செயற்கைக்கோள் புகைப்படத்தில் கொள்ளிடம் ஆறு காட்டப்பட்டுள்ளது. மணல் அள்ளுவதற்காக ஆற்றுப்படுகையில் நகர வீதிகளில் போல் தற்காலிக சாலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. வலது புறத்தில் உள்ள இரண்டு புகைப்படங்களில் எதோ வரிசையாக எறும்புகள் செல்கின்றன என்று எண்ணிவிட வேண்டாம். அவை, மணல் அள்ள காத்துக் கொண்டிருக்கும் லாரிகள். பல கிலோ மீட்டர்களுக்கு இந்த வரிசையில் லாரிகள் நின்று கொண்டிருக்கின்றன!


3

இந்த மணல் பெரும் கட்டுமானத்திற்கு மட்டுமல்லாமல் வீடுகள் கட்டவும் பயன்படுத்தப்படுகிறது. நமது கட்டுமான முறைகளில் முன்னேற்றம் இல்லாமல் இருப்பதாலும் நமது நகர வளர்ச்சித் திட்டங்கள் செம்மையாக இல்லாத காரணத்தாலும் நமது கான்கிரீட் நகரங்கள் வேகமாக வெப்பம் அடந்து வருகின்றன. இந்த வரைபடம் செயற்கைக்கோள் புகைப்படங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது. அதில் இரவு நேர மேல்பரப்பு வெப்ப அளவு காட்டப்பட்டுள்ளது. இவற்றில் நமது நகரங்கள் வெப்பத்தீவுகளாக மாறுவதை நீங்கள் காணலாம்.


 

4

நகர வளர்ச்சித் திட்டங்கள் தெளிவான விஞ்ஞானபூர்வமான முறையில் இல்லாத காரணத்தால் மக்கள் ஆறுகளின் வெள்ளப்படுவச் சமவெளிகளிலும் வீடுகள் கட்டிவருகின்றனர். 2020இல் சென்னை முடிச்சூர் பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இந்த வரைபடத்தில் காணலாம். இது ரேடார் செயற்கைக்கோள்கள் மூலம் அறியப்பட்டது.


5


அரசாங்கக் கட்டுமானப் பணிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. தமிழகத்தில் பல குளங்களை ஆக்கிரமித்த பெருமை தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்கு உரியது. மேலே உள்ள வரைபடத்தில் மதுரையின் தென் பகுதிகளில் உள்ள இரு குளங்களை வீட்டுவசதி வாரியம் குடியிருப்புப் பகுதிகளாக (சிவப்பில் காட்டப்பட்ட பகுதி) மாற்றியுள்ளதை காணலாம். இவை 1960 முதல் செயல்பட்டுவரும் பல்வேறு செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் உருவாக்கப்பட்டது.


6

இந்தப் பிரச்சினைகள் அரசாங்கத்தின் குறிப்பிட்ட ஒரு துறைக்கு மட்டுமே உரியதல்ல. சென்னை பள்ளிக்கரணை ஏரி, சதுப்புநிலம் மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகள் கண்ட மாற்றத்தினை நீங்கள் இந்த வரைபடத்தில் காணலாம். இடப்பக்கம் 1990இல் இருந்த இடத்தையும் 2018இல் அதே இடத்தையும் இதில் ஒப்பிட்டுள்ளேன். தொடர்வண்டி நிலையம், தொடர்வண்டி பழுதுபார்க்குமிடம், மாநகர குப்பைக் கிடங்கு, தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம், தேசிய காற்று சக்தி நிறுவனம், மற்றும் ஒரு நெடுஞ்சாலையும் இந்தப் பகுதியில் காட்டப்பட்டுள்ளது. மத்திய, மாநில, மாநகர நிர்வாகம் என மேலிருந்து கீழ்வரை அனைத்து தரப்பினருக்கும் இந்த பிழையினில் பங்குள்ளது. மீதமுள்ள நிலத்திலும் கழிவுநீர் செல்கிறது.


7

கழிவுநீர் நமது ஏரிகளில் கலப்பது போன்று விவசாய நிலங்களில் இருந்து மழைக்காலத்தில் ஓடிவரும் நீற்றில் உரங்களும் கலந்து வருகின்றன. இது விவசாயத்தில் அளவிற்கு அதிகமாக உரம் பயன்படுத்துவதால் ஏற்படுகின்றது. இவ்வாறு கழிவுநீர் மற்றும் உரம் கலந்த நீரின் பாதிப்பினை இந்தச் செயற்கைக்கோள் புகைப்படத்தில் காணலாம். மேட்டூர் அணையின் நீர் கர்நாடகத்தில் இருந்து வருகின்றது. அங்கிருந்து வரும் இக்கழிவு நீர் மற்றும் உரம் கலந்த நீரினால் பல சதுர கிலோமீட்டர்களுக்கு பாசி இருப்பதை காணலாம். இந்த பச்சை நிற நீரினை நேரடியாக உட்கொள்ளுவது சுகாதார பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது. இதனைச் சுத்தப்படுத்த ஆகும் செலவுகளும் மறைமுகமாக அதிகரித்துவருகின்றது.


8

தமிழகத்தில் விவசாயத்திற்கான நீர் பயன்பாடும் அதிகரித்து கொண்டே செல்கின்றது. முறையான பயிர்கள் மற்றும் அதன் காலங்கள் தேர்வு செய்யாமல் அதிக நீர் பயன்படுத்தும் பயிர்கள் நடப்படுவதால் பல இடங்களில் நிலத்தடி மற்றும் குளங்களில் உள்ள நீர் குறைந்துள்ளது. இந்த வரைபடத்தில் காஞ்சிபுரம், ஆற்காடு பகுதிகளில் உள்ள குளங்கள் கடந்த 30 ஆண்டு காலத்தில் கண்ட மாற்றங்களை காட்டுகின்றது. சிவப்பு நிறத்தில் இருக்கும் ஏரி, குளங்கள் அனைத்திலும் நீர் இருப்பு குறைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான குளங்கள் நமது தேவைக்காக கட்டப்பட்டவையே இருப்பினும் அந்தத் தேவை அதிகரித்துக் கொண்டே செல்வதால் பாதிப்பு தொடர்கிறது.


9

மின்சார தேவைகளுக்காக நீலகிரி போன்ற மலைப்பகுதிகளில் நாம் உருவாக்கிய நீர்நிலைகள், முறையான தொழில்நுட்பங்கள் இல்லாமல் கட்டப்பட்ட அல்லது விரிவாக்கப்பட்ட சாலைகளால் அங்கு நிலச்சரிவுகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதீத மழை மற்றும் கீழ்ப்பகுதிகளில் உள்ள இந்தக் கட்டுமானங்களால் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி எரி அருகே 2020இல் ஏற்பட்ட நிலச்சரிவுகள் இந்தச் செயற்கைக்கோள் புகைப்படத்தில் காணலாம்.


10

இதுமட்டுமின்றி மின்சார தேவைகளுக்காக உருவாக்கப்பட்ட நெய்வேலி, தூத்துக்குடி போன்ற மின் நிலையங்களில் இருந்து வெளிவரும் காற்று மாசுகளையும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலமாகக் கண்டறியலாம். பெருநகரங்களில் உள்ள தொழிற்சாலைகளும் வாகனங்களாலும் இந்த மாசு ஏற்படுகிறது. தமிழகத்தில் இவ்வாறு அதிகம் நைட்ரஜன் டை ஆக்சைடு வாயு அதிகம் பாதித்த பகுதிகளை (சிவப்பு நிறத்தில்) இந்த வரைபடத்தில் காணலாம்.


11

அதுபோன்று ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான சிறிய, பெரிய தீ நிகழ்வுகள் தமிழகத்தில் நிகழ்கின்றன. சில இயற்கையானவை. செயற்கையாக மூட்டப்படும் தீயினால் காற்று மாசு நிகழ்கிறது. அவற்றில் ஒன்றினை (கம்பம் அருகே) நாம் இந்தச் செயற்கைக்கோள் புகைப்படத்தில் காணலாம். கீழே பற்றியெரியும் தீயினால் மேலே புகைமூட்டம் சூழ்ந்துள்ளதை நாம் பார்க்கலாம். இது இயற்கையானதா என்று தெளிவாக அறிய கள ஆய்வுகளையும் நிலப்பயன்பாட்டு வரைபடங்களையும் நாம் பயன்படுத்தலாம்.


12

இந்த பகுதிகளில் மட்டும் தான் இவை நிகழ்கிறது என்று நாம் எண்ணிவிடக்கூடாது. இவை தமிழகத்தில் நிகழ்ந்துவரும் சில பிரச்சினைகளுக்கு எடுத்துக்காட்டு மட்டுமே. வளர்ச்சி என்பது மக்களின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியாக இருத்தல் வேண்டும். நிலங்களை மாற்றியமைப்பதும், கண்ணாடி கட்டடங்களும் மட்டுமே வளர்ச்சி அல்ல. இயற்கை வளங்களை அழித்து வளரும் வளர்ச்சி வெகு நாட்களுக்கு நீடிக்காது என்பதை நாம் அறிய வேண்டியுள்ளது. பெரும் திட்டங்கள் அந்தப் பகுதி மக்களின் திட்டங்களாக இல்லாமல், வெகுதொலைவில் சில மேல்தட்டு அதிகாரிகளால் இயற்றப்படுகின்றதே பெரும்பாலான பிரச்சினைகளுக்கு மூலகாரணமாக விளங்குகிறது.இந்த பிரச்சினைகளைத் தீர்க்க நாமெடுக்கும் முடிவுகளுமே சில நேரங்களில் தவறான பாதைக்கு இட்டுச்செல்லும். கொடைக்கானல் பகுதியில், காடுகளை வளர்க்கவும், மக்களின் வருமானம் அதிகரிக்கவும் ஊக்குவிக்கப்பட்ட யூகலிப்டஸ், அக்கேசியா மரங்கள், அந்த மலைப்பகுதியில் இயற்கையான சோலைகாடுகளையும், புல்வெளிகளையும் அழித்துவருகிறது. இந்த வரைபடத்தில் இடப்பக்கம் 1990-களில் இருந்த புல்வெளிகள் 2018ஆம் ஆண்டு (வலப்பக்கம்) அழிந்திருப்பதைக் காண முடிகிறது. இதனால் குறிஞ்சிப்பூ, வரையாடு, காட்டெருமைகள் போன்றவையும் அழிந்துவருகின்றன. இது மட்டுமல்லாது இம்மரங்களினால் அருகில் மலையின் கீழே தேனி, பழனி, திண்டுக்கல் போன்ற பகுதிகளில் நீர்வரத்தும் குறைத்துவிடும். மரக்காடுகள் என்பவை ஒருவகையான நிலப்பிரிவே ஒழிய அவை மட்டுமே இயற்கை நிலங்கள் அல்ல. புல்வெளிகளும், சதுப்பு நிலங்களும், பாலைவனப் பகுதிகளும் இயற்கையே.

இந்த கட்டுரை பிரச்சினைகளின் கலவை மட்டும் என்று நினைத்து நீங்கள் ஒதுக்கிவிடக் கூடாது. நாம் செய்யும் தவறுகளை அறிவதும், புரிவதுமே நமது மக்களின் வளர்ச்சிக்கு முதல் படி. இதனை நாம் அறிந்தால் தான் நாம் அடுத்தகட்ட முடிவுகளை நாம் தகுந்த ஆதாரங்களுடன் எடுக்கமுடியும்!


ராஜ் பகத் பழனிச்சாமி – ட்விட்டரில் பின் தொடர: Raj Bhagat P #Mapper4Life (https://twitter.com/rajbhagatt)

பகிர்:
No comments

leave a comment

error: Content is protected !!