அஸ்தினாபுரத்து தடுக்கை -அண்டனூர் சுரா


துச்சலை இப்படித்தான். அவள் கேள்வி கேட்பதற்கென்றே பிறந்தவள். அவளுக்கு வந்திருந்த அதே சந்தேகக் கேள்விதான், அன்றைக்குப் பீமனுக்கும் வந்திருந்தது. சித்தப்பா மக்கள், பெரியப்பா மக்கள் ஒத்த காந்தத் துருவங்களாக ஒருவரையொருவர் விலக்கி நின்றாலும், இருவருக்குள்ளும் எழுந்திருந்த சந்தேகம் ஒன்றாகவே இருந்தது. துச்சலை வாய்த்துடுக்கானவள். தேளின் கொடுக்கைப்போல வாய்க்குள் எப்பொழுதும் கேள்விகள் துருத்திக்கொண்டிருக்கும். ஒரு செல்லத்திற்கே குடுமி எப்படியெல்லாமோ ஆடும். இவள் நூறு செல்லத்தவள். போதாக்குறைக்குத் தாய், தந்தை செல்லம் வேறு. சொல்லவா வேண்டும்?

அஸ்தினாபுரம் அரண்மனை முற்றத்தில் தொங்கிக்கிடந்த ஊஞ்சலில் சாவகாசமாக உட்கார்ந்துகொண்டு, இரு கைகளையும் சங்கிலித் தொடர்களுக்கிடையில் பின்னிக்கிடந்த முல்லைக் கொடியைப் பிடித்துக்கொண்டு, கால்களை நேராக நீட்டி வழியில் போகிறவர்கள், வருகிறவர்களை அழைத்து கேள்வி கேட்கிறவள். அவளது கேள்விக்குப் பதில் சொல்வதற்கென்றே அரண்மனையில் கொஞ்சப் பேரை வேலைக்குப் பணித்திருந்தான் துரியோதனன். கேள்வி, கேள்வி மேல் கேள்வி கேட்கிறவளல்ல துச்சலை. கேள்விக்குள் கேள்வியென நுழைகிறவள். கோபமாகக் கேட்கும் கேள்விகள், அவளையும் அறியாமல், ஒருமையில் வந்துவிடுவதுண்டு. அன்றைய தினம், கேள்வியை அவள் வழிப்போக்கர்களிடமோ, அரண்மனைவாசிகளிடமோ கேட்டுவிடவில்லை. அண்ணன்களின் வருகைக்காக எந்நேரமானாலும் பரவாயில்லையெனக் காத்திருந்தாள்.

கிஜா புயல் அஸ்தினாபுரத்தை மட்டுமல்ல, அரண்மனையையே களைத்து ஆடியிருந்தது. என் அண்ணன்கள் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த நேரம் பார்த்தா, இப்புயல் கண், மண் தெரியாமல் தன் கோரத் தாண்டவத்தைக் காட்ட வேண்டும், என அரண்மனைவாசிகளிடம் சொல்லிக்கொண்டிருந்தவள், அவளுக்குள் எழுந்த சந்தேகத்தை அவள், அவளைச் சுற்றி நின்றவர்களிடம் கேட்டுவைக்கவில்லை.

கிஜா புயல் தாண்டவம் நடந்தேறி ஒரு வாரம் கடந்தநிலையில், மக்களுக்குத் தடுக்கை கொடுக்க கந்தல் துணி, பிய்ந்த சட்டைகள், புழுத்துப்போன அரிசி, செப்புக்காசு, மெழுகுவர்த்தி, போர்வையென ஏற்றிச் சென்று, நூறு பேரும் வட்டம் கட்டி, தள்ளுமுள்ளுக்கிடையில், கொடுக்க முயன்று கொடுக்க முடியாமல் கண்கள் சிவந்து, இமைகள் வெந்து, களைத்து, வெறுத்து அரண்மனைக்குத் திரும்பிய உடன்பிறப்புகளைக் கைநீட்டி நிறுத்தினாள் துச்சலை. அவர்கள் பெருமூச்சு வெடிக்க தங்கையை ஏறிட்டுப் பார்த்தார்கள். “அண்ணா, தடுக்கைப் பொருட்களை எல்லோருக்கும் கொடுத்து விட்டீர்கள் தானே?” என ஆவல் பொங்கக் கேட்டாள்.

துரியோதனனை அவள் வழி மறித்துக்கேட்டாலும், அவளுக்கான பதில் துச்சாதனனிடமிருந்து வந்தது, “இல்லை தங்காய்”

“எத்தனை பேருக்கு உங்களால் தடுக்கை கொடுக்க முடிந்தது?”

“எப்படியெல்லாமோ முயன்று பார்த்தோம் தங்காய், ஒருவருக்கேனும் எங்களால் தடுக்கைப் பொருட்களைக் கொடுக்க முடியவில்லை. அரசர், அமைச்சர் என்று பாராது மக்கள் எங்களை விரட்டியடிக்கிறார்கள்”

அண்ணன்களின் பதில் அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது. அவளுடைய முகம் பறித்த நான்காம் நாள் செம்பருத்தி இதழ்களைப்போலச் சோர்ந்தது. “என்ன தங்காய், ஏன் இந்த முகமாற்றம்?”

“கர்ணன் இருக்கிறார் இல்லையா?”

“ஆமாம், அங்க நாட்டு மன்னன்”

“அவர் தேர்த்தேராக ஏற்றிச்சென்ற அவ்வளவு நிவாரணப் பொருட்களையும் சடுதிக்குள் கொடுத்து விட்டாராமே, எப்படியாம்?”

அவள் இதைக் குதலை மொழியில் கேட்டிருந்தாலும், அக்கேள்வியால் துரியோதனன் ஒரு கணம் ஆடித்தான் போனான். அவன் ஆடும் நிழலைப் பார்த்து அவனது பரிவாரங்கள் ஆடின. அரண்மனையின் பாதார விந்தங்கள் ஆட்டம் கண்டன.

பீமன், தன் சகாக்களிடம் கேட்டது இதே கேள்வியைத்தான். அவன் கேட்டிருந்த கேள்வி தாய் குந்திதேவிக்கும் கேட்டிருந்தது. மண்ணையும், பெண்ணையும் பகடையால் தோற்ற மகன்களின் நிர்க்கதியை நினைத்து, உள்ளுக்குள் அழுகிக்கொண்டிருந்தாள் குந்திதேவி. காணி நிலமற்று வனாந்திரம் புகுந்து, கிளைக்குக் கிளை தாவும் மந்தியைப் போல ஒவ்வொரு வனமாக ஏதலி வாழ்க்கை வாழ்கையில் இந்நேரம் பார்த்தா கிஜா புயல் சண்டமாருதம் புரிய வேண்டும்? அது தானாக வந்ததோ துரியோதனன் அனுப்பி வந்ததோ, மரங்கள் வேர் பிடுங்கி வானம் கீழாகவும், பூமி மேலாகவும் கிடக்க, வெயிலுக்கு ஒதுங்கக் கிளை, மழைக்கு ஒடுங்கப் புதர்கள் இல்லாமல், வாழ்க்கை வாழையாக சிதைந்து கிடைக்கையில், இந்நேரம் பார்த்து பீமன் கேட்கும் கேள்வியைப் பாரும். அவனை நினைத்து மனதிற்குள் நொதித்துக்கொண்டாள் தாய். கேள்வி கேட்கும் நேரம்தான் அவளை எரிச்சலூட்டியதே தவிர, கேட்டக் கேள்விக்குள் கர்ணன் இருந்ததால் அக்கேள்வி அவளுக்குப் பிடிக்கவே செய்தது. எதையும் முரட்டுத் தனமாக மட்டுமே செய்ய முடிந்த ஒருவனால், இப்படியான அறிவார்ந்த கேள்வியைக் கேட்க முடியுமா, பீமனை நினைத்து மனம் பூரித்தாலும் மனதிற்குள் உருண்டது என்னவோ கர்ணன்தான்.

பஞ்சவர்களில் பீமனைத் தவிர மற்றவர்கள் பதில் சொல்லுமிடத்தில் இருந்தார்கள். பதில் சொல்லி அவர்கள் களைத்தும் போயிருந்தார்கள். பாவம் சகாதேவன், அவன் விளக்கிய விளக்கலில் கண்களின் ஈரப்பதம் வற்றி, நா துவண்டு உதடுகள் வெடித்திருந்தன. அர்ச்சுனன் சாரங்கம் உதைத்த சரமழையில், சொற்களைப் பிரயோகித்தான். அவன் களைப்புறும் நேரம் பார்த்து, உள் நுழைந்தான் தர்மன். சொல்லறிந்து சொல் எறிகிறவன் அவன். அவனாலும் கூட பீமனின் சந்தேகத்தைத் தணிக்க முடியவில்லை. வேறு வழியில்லாமல் நுழைந்த நகுலன், கடிதொச்சி எறிந்தான். எத்தனை சுற்று விளக்கம், எத்தனை கட்டு உதாரணம், களைத்து மட்டுமல்ல, அலுத்தும் போனார்கள். “உங்களுக்கெல்லாம், வாய் வலிக்கிறதா இல்லையா?”சகாதேவன் கோபத்தில் தெறித்தான். அவ்வளவேதான், நால்வரும் வாயடைத்து வேர்ப் பிடுங்கிக் கிடந்த மரத்தடி தண்டில் உட்கார்ந்தார்கள்.

பீமன் அப்பொழுதேனும் விடுவானா, என்றால் இல்லை. அவள் மெல்ல தாயின் பக்கமாகத் திரும்பி, தாயிடம் குலாவி “அம்மா, நீயாவது சொல்லேன், அந்த கர்ணனால் அது எப்படியம்மா முடிந்தது…?” குந்திதேவி தலையில் கிடந்த தலைப்புச் சேலையை முன்,பின் எடுத்து விட்டுக் கொண்டு பீமனைத் திரும்பிப் பார்த்தாள். “ அவன் நரதுங்கனடா?”

“அப்படியென்றால்?”

“ கொடுத்துச் சிவந்தவன் “

“ இருக்கட்டுமேயம்மா, எப்படி சடுதிக்குள் அவ்வளவு நிவாரணத்தையும் கொடுக்க முடிந்தது? உன்னால் முடியுமா, இதோ நம் விரோதி பங்காளிகள் தடுக்கை பொருட்களைக் கொடுக்க வண்டி கட்டிச் சென்றார்கள். அவர்களால் அஸ்தினாபுரம் தெருவிற்குள் நுழைய முடியவில்லையே. எத்தனை எதிர்ப்புகள், கலவரங்கள், கல் வீச்சு, வசைப்பாடல்கள். அவர்களால் பொருட்களை இறக்கி வைக்க மட்டுமே முடிந்திருக்கிறது. இத்தனைக்கும் அவர்களிடமிருந்தது இருநூறு கைகள், அதைக் கொண்டு அவர்களால் நூறு பேருக்குக் கூட தடுக்கை நீட்ட முடியவில்லை. இத்தனைக்கும் அவர்கள் கொண்டுச் சென்றவை கிழிந்த கந்தல்துணி , அரிசி, பருப்பு, எண்ணெயும், மெழுகுத்திரி,.. ஆனால் கர்ணன் என்ன அப்படியா, அவன் கொண்டு சென்றது வெறும் அரிசியும், பருப்பும், தினை மட்டுமா…?”

“ வேறு?” மகனின் வியப்பிற்குள் வியப்புக்குறியென நுழைந்தாள்.

“அய்யோ, அம்மா. என் இரு கண்களால் பார்த்தேன். கோடைகால மேகத்தைப் பார்த்திருப்பாயே. அத்தனை வேகம், தங்கக் குடத்தில் தங்கக் காசுகள், வெள்ளிக்குடத்தில் வைர கற்கள், குடம், குடமாக, ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி, கட்டி, நூறு தேர்கள். மழலை நடை பயில்கையில் காலிலிருந்து எழும் கிண் கிணியைப் போல சப்தம். அந்தோ! அக்காட்சியை நான் எப்படி வர்ணிப்பேன். தாயே, கிஜா புயலின் வேகத்தை உன்னால் வர்ணிக்க இயலுமா, இயலாது தானே, அப்படிதான்! அவனது தடுக்கை உதவிகளை வர்ணிக்க வார்த்தைகள் கிடையாது. அவ்வளவையும் கொண்டுச்சென்று எங்கே நிறுத்தினான், எப்படி இறக்கினான். எத்தனை மக்கள், எத்தகைய இழப்புகள், வீடு இழந்தவர்கள் எத்தனை பேர், உடைமைகளை இழந்தவர்கள் எத்தனை பேர், எப்படிக் கொடுத்தான், யார் யாருக்குக் கொடுத்தான், என்னென்ன கொடுத்தான், ஒன்றும் தெரிந்துகொள்ள முடியவில்லையே. ஆனால் கொடுத்திருக்கிறான், வெள்ளி முளைத்து ஞாயிறு உதிப்பதற்குள்…”

பீமனின் வர்ணனையால் அர்ச்சுனனுக்குத் தலைகால் புரியாமல் கோபம் வந்தது. வந்த கோபத்தில் வில்லை எடுத்தான். அதற்குள் அம்பைச் சொருகி, பீமனின் நாசிக்கு நேராகக் குறி வைத்தபடி சொன்னான், “பீமா, நீ என் அண்ணனென்று பார்க்கிறேன், இல்லை, அந்த கௌரவர்கள் மீது இருக்கிற கோபத்தை உன் மீது காட்டி விடுவேன்”

தர்மன் ஓடி வந்து குறுக்கிட்டான், “ அடேய், அர்ச்சுனா, என்ன வேலை செய்கிறாய்?”

“ பிறகு என்ன அண்ணா, அவனைத்தான் பாரேன். விடிந்ததிலிருந்து கர்ணன், கர்ணனென்று ஆயிரம் முறை உச்சரித்து விட்டான். இவனுக்குக் கர்ணன் மீது அப்படியென்ன ஈரம்? அவனைச் சற்று வாயை மூடச் சொல்லும். இல்லை, என் அம்பால் அவனது வாயைத் தைத்துவிடுவேன்”

அர்ச்சுனன் கொண்ட கோபத்தைப் பார்க்கையில், குந்திதேவி குலை நடுங்கிப் போனாள். இந்நேரத்தில் உள் நுழைந்து பீமனுக்கு ஆதரவாகச் சொல் புனைந்தால் கர்ணன் என் மகனென்று பஞ்சவர்களுக்குத் தெரிந்துவிடுமோ, வாய் வரைக்கும் வந்த வார்த்தையைச் சட்டென விழுங்கி என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்தபடி இருந்தாள்.

“அடேய், அர்ச்சுனா, இங்கே வாரும்” எழுந்த பீமன் அர்ச்சுனன் கையிலிருந்த வில், அம்பை விலக்கி, அவனை இடுப்போடு அணைத்து அவன் உட்கார்ந்திருந்த இடத்தில் அமர வைத்தான். “சரி அர்ச்சுனா, நாம் இன்று ஏதலி அல்ல. அஸ்தானிபுரத்தை ஆளும் மன்னர் என வைத்துக்கொள்ளும். கிஜா புயலால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து, உடை, உடைமைகளை இழந்து, கையேந்தி நிற்கிறார்கள். நீயும் , நானும் உதவிப் பொருட்களைக் கொண்டு செல்கிறோம். நீயே சொல்லும், நம்மால் ஒரே நிமிடத்திற்குள் அத்தனைப் பேருக்கும் தடுக்கை நீட்டி விட முடியுமா…?, அதையும் அவர்களின் தேவையைக் கேட்டறிந்து, அவர்கள் கேட்பதற்கு மேலாக,..எங்கே சொல்லும் பார்க்கலாம்”. அர்ச்சுனனால் பதில் சொல்ல முடிந்திருக்கவில்லை.

துவைத வனத்தில் இதே கேள்விதான். விளக்கத் தெரியாமல் விளக்கி துச்சலை முன் துரியோதனன் மண்டியிட்டிருந்தான். அவன் அஸ்தினாபுரத்தின் மன்னன். கதை கட்டுவதில் பீஷ்மரை மிஞ்சியவன். வாய்ப்பந்தல் அவனுக்குத்தான் பொருந்தும். அவன் தங்கையின் சந்தேகத்தைப் போக்கும் பொருட்டு, எப்படியெல்லாமோ வாய்ப்பந்தல் நட்டான். அவனுடன் அவனது அமைச்சர்கள் கூட சேர்ந்து கொண்டார்கள். சகுனி கூட உள்ளே நுழைந்து பார்த்தான். துர்மதன் விளக்கிப் பார்த்தான். அடுத்தடுத்து அவளது அண்ணன்கள் தொண்ணூற்று ஒன்பது பேரும் வந்தார்கள். துச்சலை மீது பேரன்பு காட்டும் விகர்ணனால் கூட அவளது சந்தேகத்தைத் தணிக்க முடியவில்லை. இத்தனைக்கும் துச்சலை வயதால், பருவத்தால் இளையவள்.

“எப்படியண்ணா முடிந்தது அந்த கர்ணனால் மட்டும்?”. ஒரே கேள்விதான். சற்று முன் கேட்ட அதே கேள்விதான். முதல் முறையாகக் கேட்பதைப் போலத்தான் ஒவ்வொரு முறையும் கேட்டாள்.  கேட்ட கேள்வியைக் கேட்பதே தெரியாமல் ஓராயிரம் முறை கேட்டிருந்தாள். அவள் கேட்ட ஒற்றை  கேள்விக்கு ஒரே பதிலையே அவர்கள் சொல்லிக்கொண்டிருக்கவில்லை. பதிலில் மாயாஜாலம் புனைந்து, ஜீபூம்பா சேர்த்து சொற்களைக் கண்ணிகளாக முடிந்து, அவள் முன் வைத்துப் பார்த்தார்கள். ஏமாற்றமே மிஞ்சியது.

அவள் மீது அவர்களுக்குக் கோபம்தான் வந்தது. அதை வெளிப்படுத்த அவர்களிடம் சுரம் இருந்திருக்கவில்லை. காதடைத்து, கண்ணடைந்து, வாய்ப்பொத்தி வீழ்ந்தவர்கள் மயக்கம் தெளிந்து துச்சலையை அழைத்துக்கொண்டு நேரில் சென்று கர்ணனைச் சந்தித்து, இதைக் கேட்டுவிடலாமென, தேர்ப்பூட்டி அங்க நாட்டை நோக்கி விரைந்தார்கள்.

 

ஸ்தினாபுரம் நாட்டை நோக்கி தேர்களைப் பூட்டினான் அங்கா தேசத்து மன்னன் கர்ணன். அவன் பூட்டிய நூறு தேர்களில் சரிபாதி பொன், முத்து, வைர முடிச்சுகள். தங்க , வெள்ளி குடங்கள். இன்னும் பாதியில் தவசம், பயிறு, கடலை, விதை, முத்து, கொட்டை, நெற்றுகள். அவன் தலையில் சூடிய மகுடத்திலும் கூட நவ தவசங்களை முடிந்திருந்தான்.

காமதேனு மடியைப் போல தேர். ஒவ்வொரு குலுங்களிலும் கிண், கிணிப்புகள். சுமையால் தேர் அச்சுகள் முறிய, சக்கரங்கள் புழுதிக்குள் புதைய, ஒவ்வொரு திருப்பத்திலும் கீழே இறங்கி தேர்ச்சக்கரத்தை ஒரே ஆளாக மேட்டில் ஏற்றி குதிரைகளின் நாக்கு வெளியே தள்ள, மூச்சிறைக்க குதிரைகளை விரட்டி, தேர்களை அஸ்தினாபுரத்தில் கொண்டு வந்து சேர்த்தான். அவன் நினைத்த எல்லையைத் தொட்டதும், ஒன்று நினைத்தான். எத்தனை மெனக்கெடல், எவ்வளவு வியர்வை, இவ்வளவு பொருட்களையும் உரிய மக்களுக்குப் போய்ச் சேர வேண்டும். கொடுத்தவர்களுக்குத் திரும்பவும் கொடுக்காமல், கொடுக்கும் நபருக்கு அரைகுறையாகக் கொடுக்காமல், கொடுத்த பிறகு போதுமா, எனக் கேட்காமல், எவ்வளவு தேவை எனக் கேட்டுக் கொடுக்க வேண்டும். கேட்டதை விடவும் மிகுதியாகக்  கொடுக்க வேண்டுமென நினைத்தான் கர்ணன். எல்லையைத் தொட்ட பூரிப்பில் வரிசைகட்டி நின்ற தேர்களை ஏறிட்டுப் பார்த்தான். அவன் கண்களுக்கு எட்டிய மட்டும் பொருட்களாக இருந்தன. அவன் பெருமூச்சொறிப்பில், அவனது மார்பில் தழுவிக்கிடந்த ஆபரணங்கள் வியர்வையில் நனைந்து, பதத்துக் குலுங்கின. இரவு மூன்றாம் பிறை துளிர்க்க பூட்டிய தேர், அஸ்தினாபுரத்தை வந்தடைகையில் வெள்ளி முளைத்திருந்தது.

தேர்களை ஓரிடத்தில் வரிசைகட்டி நிறுத்தினான். பொருட்களை இறக்கி, ஒரே இடத்தில் சேர்த்து குன்றுகளாக்கினான். குன்றுகள் ஒன்றுடன் ஒன்று நிரவ, பரவ மலைத்தொடர்களாகின. இவ்வளவையும் தன் கையால் கொத்தாக அள்ளி இக்கணமே, அள்ளி யாருக்கேனும் கொடுக்க வேண்டும் போலிருந்தது. கொடுப்பதற்கு உகந்ததாக விரல்கள் பணிந்து, உள்ளங்கை தசைகள் திரண்டு போயிருந்தன.

கொடுக்கப் பிறந்தவனாக இருந்தான் கர்ணன். இரண்டு கைகளும் கொடுப்பதற்கென்றே படைக்கப்பட்டிருந்தது. கிஜா புயல் சேதாரங்களிலிருந்து மக்களை இன்றைக்குள் மீட்டுவிட நினைத்தான். இது போதுமா, வீடு இழந்த, காடு கழனி இழந்த, வனம் இழந்த, வனாந்திரம் இழந்த, மரம், செடி, கொடிகள் இழந்த, விதை, வித்து, நெற்று இழந்த மக்களுக்கு இந்தத் தடுக்கை பொருட்கள் போதுமா? போதாது என்றவன், அவனது கழுத்தில் தொங்கிக்கிடந்த பலமணி மாலை, தண்டை, பவளவடம், தொடி கங்கணம், வண்ணசரம், முத்துவடம் இவ்வளவையும் தலையோடு அவிழ்த்து குவித்திருந்த குன்றின் மீது வீசினான். அது விழுந்த அதிர்வில் குன்றிட்டிருந்த பொன் பொருட்கள் சரசரவென சரிந்து, குன்று அகல குன்றாகப் பெரு வட்டமெடுத்தது.

அவனது உள்ளங்கைகள் அரித்தன. பொருட்களை அள்ளிக் கொடுப்பதற்கு முன்னெடுக்கும் அரிப்பாக அது இருந்தது. அவனால் ஓரிடத்தில் நிற்க முடியவில்லை. இத்தனைக்கும் இது அவனது நாடல்ல. அருகாமை நாடு. ஆனால் இம்மக்கள், மக்களின் இழப்புகள். அவர்களின் தாகம், பசி, ஏக்கங்கள். இதற்கு ஏது தேசம்…?

முழுமையாக விடிந்திடாத வைகறையில் ஓர் ஆளரவம் தெரிந்தது. கிழவி என்று சொல்லக்கூடிய அளவிற்கு வயதானவள் இல்லை. கன்னி என்று சொல்லுமளவிற்குக் குமரியும் இல்லை. பழமில்லாத, பிஞ்சுமில்லாத காய் பருவத்தில், அத்தாய் இருந்தாள். பச்சையும், கரள் நிறத்திலுமான ஆடை. கறையற்ற சேலை. சேலையின் தலைப்பால் முழு உடம்பையும் இறுகப் போர்த்திக்கொண்டு, மண்ணுக்கு வலிக்காதபடி நடந்து வந்தாள். முழங்கல் சத்தங்கள், கண்ணீர் வடிப்பு, இடியென பெருமூச்சு. கடலில் மூழ்கியவள் கடனிலும் மூழ்கிய துயர முகம். இன்னும் மலர வேண்டிய மலர் மலர்வதற்குள்ளாக சருகான முகச்சரடு. கொலை பயம், உயிர் பயத்துடன் நடந்து வந்தாள்.

நெருப்பில் நடப்பதைப் போல வேகமில்லாது, தொய்வில்லாது நடந்து வந்தவள், கர்ணன் முன் நிற்கையில் அவளது மூச்சுக்காற்று கர்ணனின் மார்புக்கூட்டைத் தகித்தது. கர்ணன் சற்று நிமிர்ந்து, மெல்லக் குனிந்து அவளைப் பார்த்தான். பொறியிலிருந்து தப்பி வந்த ஒரு பறவையின் பரிதவிப்பு,படபடப்பு அவளிடம்.

“ தாயே”

கர்ணனை அவள் ஏறிட்டுப் பார்க்கவில்லை. எத்தனையோ பேர்களுக்குக் கொடுத்துச் சிவந்த கரம். காலத்தின் விளையாட்டால், கையேந்தி நிற்கிறேன். வாய் சொல்ல வேண்டிய ஒன்றை, அவள் ஏந்திய கைகள் சொல்வதாக இருந்தன. அவளது நீண்ட கை, மேலும் மேலும் நீண்டது.  “ இந்த வாழ்ந்து கெட்டவளுக்கு, ஏதேனும் உதவுங்கள் பிரபுவே…”

கண்ணீரில் நனைந்த குரல், கர்ணனின் வெண்திரையில் தெரிந்தது. முழுமையாக விடியாத அப்பொழுதில் அவளது தேவையை அவனால் கணித்தறிய முடியவில்லை. ஒரு தங்கக் கலசத்தை எடுக்கப் போனான். போதாதென்று கலசமும், பானையும், திவசமும் கொண்ட ஒரு பெரிய முடிச்சை எடுக்கக் கையை  நீட்டினான். அதுவும் போதாதென்று ஒரு தேர் பொருட்களை ஒரே மூட்டையாகக் கட்டி அவள் முன் நீட்டலாமென நினைத்தான்.

“என்ன பிரபுவே, என் இன்னல் என்னவென்று கேளாது, என் பிரச்சனை பாராது, இதைக் கொடுக்குறீரே?”

கர்ணனின் மேனி ஆடியது. கொடுக்க நினைத்த ஒன்றை வாங்கியவளைப் போலக் கேட்கிறாளே, கர்ணனின் நெற்றி சுருங்கி விழிகள் விரிந்தன. அத்தாய் முன் வளைந்து முகத்தை ஏறிட்டுக் கேட்டான், “ சொல்லும் தாயே, உனக்கு ஏற்பட்ட இன்னல்தான் என்ன, உன் வறுமையைச் சொல்லும். அது மலையளவானாலும் அதை  நான் போக்குகிறேன்”

“கர்ணப் பிரபுவே, அவ்வளவையும் நீ ஏற்க வேண்டாம். என் சுமையின் ஒன்றை மட்டும் போக்கும். அது போதும்”

கர்ணன், அத்தாயை நினைத்துப் பூரித்தான். இந்தக் கலியுக காலத்தில் இப்படியும் ஒரு தாயா, “சொல்லும் தாயே, உன் இன்னல் என்ன?”

“கர்ணா, கொஞ்சக் காலம் உடல் நலம் குன்றி ஒரு வைத்தியமனையில், தீவிர சிகிச்கை எடுத்துக்கொண்டேன். என் சிகிச்சைக் காலத்தை என் சுற்றார்கள் வெளியில் தெரியாமல் ரகசியம் காத்தார்கள். அங்கு நான் எதையும் தின்றதாகவோ, மென்றதாகவோ எனக்கு நினைவில்லை. ஆனால், நான் தின்றதாக வைத்தியமனை சொல்லும் இடியாப்பத்தின் செலவினத்தை நீர் ஏற்றுக்கொள்ளுங்கள் கர்ண பிரபுவே”

கர்ணன் ஒரு கை நீட்டி, அவளுக்கு வாக்குக் கொடுத்தான், “ இக்கணமே நீ உண்டதாகச் சொல்லும் இடியாப்பத்தின் கடன் சுமையை நான் ஏற்கிறேன் தாயே”

அத்தாய், கர்ணனைக் கையெடுத்துக் கும்பிட்டாள். கையை மடிக்குள் திணித்து மடியிலிருந்த  வைத்தியமனை கேட்டிருக்கும் ஆகாரக் கணக்கை, கர்ணன் முன் நீட்டினாள். அதை வாங்கிப் பார்த்தான் கர்ணன். அவனுக்கே வியப்பாக இருந்தது. யானைப்பசி காயசண்டிகையால் கூட இவ்வளவு தின்றிருக்க முடியாது. அவள் தின்றதாக இருந்த இடியாப்பத்தின் கணக்கு, நீளத்தை விடவும் அகலம் கொண்டதாக இருந்தது. கர்ணன் நிமிர்ந்து அத்தாயைப் பார்த்தான். திரும்பி மலைகளாகக் குவித்து வைத்திருந்த தடுக்கை பொருட்களைப் பார்த்தான். கையில் வைத்திருந்த இடியாப்பக் கணக்கைப் பார்த்தான்.

கிஜா தடுக்கைக் கென்று ஏற்றி வந்த பொருட்கள், மக்களின் கைகளுக்குப் போய்ச் சேர்ந்தாக வேண்டிய பொருட்கள்,…யாவையும் இடியாப்பத்தின் கடனை அடைக்க கொடுக்க இருக்கிறோமே, என நினைக்கையில் அவனது இதயம் பதைத்தது. அதேநேரம், அத்தாயிடம் அத்தனை அவசரத்தில் கொடுத்திருந்த வாக்குறுதி அவன் முன் கைக்கட்டி நின்றது.

“ இந்தத் தேர்களிலுள்ள அவ்வளவு பொருட்களையும் எடுத்துக்கொள்ளும் தாயே” என்ற கர்ணன், அவன் உடுத்தியிருந்த ஆடையை அவிழ்த்து, அதையும் அத்தாயிடம் கொடுத்து “ இதையும் சேர்த்து எடுத்துக்கொள்ளும்”  என்றான்.

 

ர்ணன் சொல்லி, இக்கதையைக் கேட்ட துரியோதனன், “ நீர், இப்புராணப் பூமியின் கொடை வள்ளல்” என்றவாறு அவனைக் கட்டிப்பிடித்தான். அவனது இறுக அணைத்தலில், கர்ணன் முகம் மலர்ந்து போனான்.

அதே கர்ணனிடம் துச்சலை கேட்டாள், “ ஆமாம், நீ பெரிய கொடை வள்ளல்தான், ஆனால் யாருக்கு நீ வள்ளல்?”.

துச்சலை இப்படித்தான். அவள் கேள்வி கேட்பதற்கென்றே பிறந்தவள்.

 

அண்டனூர் சுரா
அலைபேசி – 9585657108

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.