“அமெரிக்காவைப் போல் திரு கார் பலமுறை கண்டுபிடிக்கப்பட்டவர். அதனால்தான் கிராம்வெல்லின் சரிதைக்கு ‘காட்’ஸ் இங்கிலீஷ்மேன்’ என்று பெயரிட்ட கிறிஸ்டோபர் ஹில்லையொட்டி, இந்தப் புத்தகத்தை ‘தி லாஸ்ட் இங்கிலீஷ்மேன்,’ என்று அழைத்திருக்கிறேன்- ஏனென்றால், பழகத் தெரியாத, காத்திரமான, ஆழ்ந்த கண்ணியமும் (கண்ணியம் என்ற சொல்லை எத்தனை முறை இதில் எதிர்கொள்கிறோம்!), உக்கிரமான தீவிரத்தன்மையும் கொண்ட இந்த மனிதர் பிரிந்து நின்று சிரிக்கத் துணிந்தவர், எனினும் அவரது நண்பர்களில் ஒருவர், “யோசிக்காமல் ஒரு விஷயம்கூட சொல்லாதவர்,” என்று அவரை நினைவுகூர்ந்தார். “
– பைரன் ரோஜர்ஸ் எழுதிய, ‘தி லாஸ்ட் இங்கிலீஷ்மேன்: தி லைப் ஆப் ஜே. எல். கார்,’ என்ற புத்தகத்திலிருந்து.
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற சரிதையாளர் மைக்கேல் ஹோல்ராய்ட் (Michael Holroyd) (அவரது மிகச் சிறந்த லிட்டன் ஸ்ட்ரேச்சி சரிதையை நிச்சயம் நீங்கள் வாசித்திருப்பீர்கள்தானே?), ஒரு நாவலின் விற்கப்படாத பிரதியுடன், உபரியாய்ப் பெறப்பட்ட கெட்டரிங்க் கசாப்புக் கடையின் மிகச் சிறந்த ஸ்டேக்குக்கான ஒரு பவுண்ட் மதிப்புள்ள டோக்கனிலும் ஜார்ஜ் எல்லர்பெக் என்பவர் எழுதியதாகச் சொல்லப்படும் வினோத கடிதத்திலும் இதைத் துவங்கலாம். கடிதத்துடன் காணப்படும் இணைப்புகள், அதன் ஆசிரியர் மர்மமான தொனியில் வெளிப்படுத்தினார், எல்லர்பெக் இலக்கிய விருதுக்கு உரியவை, அவை மூன்றாம் முறையாய் இவ்வாண்டு மைக்கேல் ஹோல்ராய்டுக்கு வழங்கப்படுகின்றன, என்று. கடிதம் சிரிக்க வைப்பது, தனித்தன்மை கொண்ட, ஒப்பீட்டளவில் அறியப்படாத நாவல் ஒன்று குறித்து நியூ யார்க் ரெவ்யூ ஆப் புக்ஸ் நூலறிமுகத்தில், அந்த நாவல் பற்றி நாம் இக்கட்டுரையில் பின்னர் சிறிது பேசலாம், மைக்கேல் ஹோல்ராய்ட் இந்தக் கடிதத்திலிருந்து சற்று விரிவாகவே மேற்கோள் காட்டுகிறார். இந்தக் கட்டுரையின் உணர்வை மிகப் பொருத்தமாகவே சித்தரிப்பதால் நான் அதை உங்கள் வாசிப்பின்பம் கருதி முழுதாகவே எடுத்தளிக்கிறேன்:
“இந்தப் பரிசு சீரற்ற இடைவெளிகளில் வழங்கப்படுவது, இது மூன்றாம் முறையாக மட்டுமே உங்களை வந்தடைகிறது. இதன் பின்னணி, திரு. கார், அவர் எழுதிப் பிழைப்பவர், எனது வாடிக்கையாளர்களில் ஒருவர், எனக்குக் கொடுக்க வேண்டிய பணத்தில் ஒரு பகுதியை விற்கப்படாத புத்தகங்களாய் தருவது வழக்கம் என்பதே, இந்தப் புத்தகங்கள், ரிமைண்டர்கள் என்று அழைக்கப்படுவதாய் அறிகிறேன். வழக்கமாய் அளிக்கப்படும் சித்திர நாள்காட்டிகளுக்குப் பதில் நான் இவற்றை என் உயர்தர வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறேன். திரு எல்லர்பெக், பாட்டாளிகளுக்கான கல்விசார் குழுமமொன்றில் இயங்குபவர் (WEA), இலக்கியம் குறித்து விலகல் உணர்வு இல்லாதவர், இந்தப் பிரதிகளில் ஒன்றை இலக்கிய உலகின் வேறொரு பிரஜைக்கு பரிசாக அளித்து ஊக்குவிக்கலாம், அப்பரிசை எல்லர்பெக் பரிசு என அழைக்கலாம், என்று சில ஆண்டுகளுக்கு முன் பரிந்துரைத்தார். திரு கார் தன் புத்தகங்களை எங்களுக்கு அளித்து கணக்கு தீர்த்துக் கொண்ட மாதத்துக்குப் பின் நாங்கள் வாசிப்பதில் எது மிகச் சிறந்த வகையில் கெட்டெரிங்குக்கு வெளியே உள்ள உலகைக் காட்சிப்படுத்துவதாகவும் மனதில் நிற்பதாகவும் இருக்கிறதோ, அதை எழுதியவரையே தேர்வு செய்கிறோம். சில சமயம் அது முழு புத்தகமாக இருக்கலாம், சில சமயம் ஒரு சில வரிகளாக இருக்கலாம். உங்கள் விஷயத்தில், அது வெகு சில வரிகளே. கறிகளை வெளியே சுற்ற திரு டிம்ப்சன் சேமித்து வைத்திருந்த ஏதோ ஒரு செய்தித்தாளில் அந்த வரிகளைப் பார்த்தேன். ஒரு வண்டி நிறைய ஈரம் தோய்ந்த புத்தகங்களுடன் நீங்கள் போராடிக் கொண்டிருப்பதையும் அதிருப்தியுற்ற வாடிக்கையாளர் ஒருவர் உங்களுக்குத் திருப்பித் தர முயன்ற புத்தகம் ஒன்றில் சாதுரியமாக நீங்கள் அவரறியாமல் கையொப்பம் இடுவதையும் அது விவரித்தது. ஒரு வியாபாரியாக எனக்கும் இது போல் நடந்திருக்கிறது, உங்கள் துணிச்சலையும் திறமையையும் என்னால் மெச்ச முடிகிறது. இரு காரணங்களுக்காகப் புத்தகத்தின் மேலட்டையை அப்புறப்படுத்தியிருக்கிறேன். இவற்றை நான் வெட்டிய கறியுடன் வைத்திருப்பதால் சிறிது கறை படிந்திருக்கின்றது, மேலும், மேல் அட்டையில்லாத புத்தகங்களை விலைக்கு விற்க முடியாது என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.”
எல்லர்பெக் பரிசு வென்றவர் பிற்காலத்தில், தன்னை அப்பரிசுக்கு நியமனம் செய்த, தன் பங்குக்கு தனக்கும் புக்கர் பரிசு நியமனம் பெற்ற அந்த எழுத்தாளரை, படாடோபமான களிப்புக் கூடுகையொன்றில் சந்தித்து எல்லர்பெக் பரிசு புக்கர் பரிசைக் காட்டிலும் அபூர்வமான கௌரவம் என்று அவரிடம் ஒப்புக் கொள்ளும் வாய்ப்பு பெறுவார். அவர்கள் மீண்டும் சந்தித்துக் கொள்ள மாட்டார்கள் என்றாலும், “ஹார்போல் அண்ட் பாக்ஸ்ஹெர்ரோ, ஜெனரல் பப்ளிஷர்ஸ்’ (Harpole and Foxborough, General Publishers) என்ற காரின் கடைசி நாவலில், திருமதி ஃபஸாகெர்லி என்ற பாத்திரம், குளிர் காலத்தில் தன் புத்தகங்களுக்குத் தடவிக் கொடுக்கும் பழக்கம் கொண்ட புத்தக வியாபாரி, இது போன்ற கவனிப்புக்கு உகந்த புத்தகங்களில் மிகச் சிறந்த புத்தகம், “திரு ஹோல்ராய்டின் அருமையான, கனமான சரிதைகளில் ஒன்றாக,” இருக்கும் என்று பரிந்துரைக்கும்போது ஒரு மின்னற்பொழுது இவ்விருவரின் பாதையும் சந்தித்துக் கொள்ளும்.
என்னைப் போல் நீங்களும் வறண்ட நகைச்சுவை தாசன் என்றால், நிச்சயம் புன்னகைத்திருப்பீர்கள், குறிப்பாக, “உங்கள் விஷயத்தில், அது வெகு சில வரிகளே,” என்ற சொற்களைச் சுவைத்து. இங்கு கார் என்று சொல்லப்படுபவர் ஜே. எல். கார், ‘எ மன்த் இன் த கன்ட்ரி,’ (A Month in the Country) என்ற மைனர் மாஸ்டர்பீஸ் ஒன்றை எழுதியவர், அது 1982 ஆம் ஆண்டு கார்டியன் பரிசு வென்றும், எதிர்கால பேராளுமைகளான கென்னத் பிரனாஹ் மற்றும் காலின் ஃபெர்த் போன்றவர்கள் நடிப்பில் திரை வடிவம் பெற்றும், புக்கர் பரிசின் குறும்பட்டியலில் இடம் பெற்றும், நம் தமிழக இலக்கிய வாசகர்கள் மட்டுமல்ல, உலக இலக்கிய ரசிகர்கள் பலருக்கும் அறியப்படாதவர். எல்லர்பெக் என்ற பெயரில் எழுத்தாளர் யாரும் கிடையாது, கசாப்பு கடைக்காரரும் புனைவே என்பதைச் சொல்ல வேண்டியதில்லை- ‘அ மன்த் இன் த கன்ட்ரி’ நாவலில் எல்லர்பெக் குடும்பத்தினர் வருவது உண்மைதான், பக்தி நிறைந்த எல்லர்பெக்குகள் பற்றி கார் பின்னொரு நாளில் தன் நண்பருக்கு, “கார்கள் நாங்கள்தான் எல்லர்பெக்குகள்,” என்று எழுதுவார். கடிதத்துடன் இணைக்கப்பட்ட விற்பனையாகாத பிரதி, ‘த ஹார்போல் ரிப்போர்ட்,’ (The Harpole Report) என்ற அவரது மூன்றாம் நாவல், காரின் நகைச்சுவை மாஸ்டர்பீஸ், அதன் பதிப்பு வரலாறும்கூட அதனளவில் புன்னகைக்கச் செய்வது. கார் தன் நாவலின் பதிப்புரிமையை செக்கர் அண்ட் வார்பர்க் நிறுவனத்துக்கு 1972ஆம் ஆண்டு அளித்தமைக்கு பிரதிபலனாய் அவர்கள் அதன் விற்பனையாகாத பிரதிகளை (924 புத்தகங்கள்) தலா 8 பென்ஸ் விலைக்கு உடனுக்குடன் காருக்கே விற்றதும் அவர் அவற்றை நேராகத் தன் தோட்டக் கிடங்குக்குக் கொண்டு சென்று சேமித்து வைத்தார் (அந்த தோட்டக் கிடங்கும் கீர்த்தி பெற்ற ஒன்று- சிலைகள், தடுப்புக்கம்பிகள் உட்பட கண்டா முண்டா சாமான்கள் குவிந்து கிடந்த அது, ஆண்டுக்கு ஒரு முறை பொது மக்கள் பார்வையிடத் திறக்கப்பட்டது, மாபெரும் அரண்மனைகளை அலங்கரித்த அரச குடும்ப தோட்டங்களுடன் சேர்த்து இதுவும் ‘ஐரோப்பாவின் மாபெரும் தோட்டங்கள்’ தொகையில் சேர்த்துக் கொள்ளப்பட்டது). ஆட்டம் இத்தோடு முடியவில்லை. பிராங்க் மியூர் (அவரது கம்பீர ‘த ஆக்ஸ்போர்ட் புக் ஆப் ஹியூமரஸ் ப்ரோஸ்’ உங்களுக்கு நினைவிருக்கும், அதன் உபதலைப்பு இங்கிலீஷ் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்துவது- “ஜோக்குகளுக்கு மட்டும் சிரிப்பவர்களிடம் எச்சரிக்கையாய் இருங்கள்”), பிபிசியின் புகழ்பெற்ற நிகழ்ச்சியான டெசர்ட் ஐலண்ட் டிஸ்க்ஸ்சில் ‘ஹார்போல் ரிப்போர்ட்’டைத் தேர்ந்தெடுத்தார் (இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு சிறப்பு பங்கேற்பாளர், ‘இறக்கி விடப்பட்டவர்’ (castaway) என்று அழைக்கப்படுவார், பாலைவனத் தீவில் இறக்கி விடப்படுவதானால் எந்த எட்டு ஒலிப்பதிவுகள், ஒரு புத்தகம் மற்றும் ஒரு சொகுசுப் பொருளைத் தேர்ந்தெடுப்பார் என்ற கேள்வி அவரிடம் கேட்கப்படும்) ஒரே நாளில் காரின் இலக்கிய நல்லூழ் தலைகீழானது, தோட்டத்திலிருந்த அந்த விற்கப்படாத பிரதிகளை அவர் அதன் முழு விலைக்கே விற்றார். பின்னொரு நாளில் அதற்கு பின்னட்டை வாசகம் எழுதும்போது, ஹார்போல் ரிப்போர்ட் “பள்ளி நடத்துவது பற்றி நான் வாசித்த புத்தகங்களில் மிகவும் நகைச்சுவையான, உண்மையான சித்திரம் அளிப்பது,” என்று உச்சி முகந்து மகிழ்வார் பிராங்க்.
கார் வாசகர்களுக்கு அவரது நாவல்களின் களம் பெருமளவு யதார்த்தத்தில் நிலை கொண்டது என்பதும் அவை பல வகைகளில் புனைவாக்கப்பட்ட சுயசரிதை என்பதும் மிகப் பெரிய ஆச்சரியமாக இருக்கலாம். இந்த தற்சரிதை அனுபவங்களில் இவ்வளவு விஷயங்களை ‘நம்ப முடியாதது,’ என்றும் ‘அதிகற்பனை’ என்றும் வாசகர்கள் வியக்குமளவிற்கு அசாத்திய நகைச்சுவைத் தன்மை கொண்டதாய் மாற்றினார் என்றால் அதற்கு நாம் அவரது நகைச்சுவையுணர்வு மிக்க மேதைமையைத்தான் மெச்ச வேண்டும். உண்மையில் கெட்டரிங் நகரில் ஹைஃபீல்ட்ஸ் என்ற பெயரில் ஒரு தொடக்கப்பள்ளி இருக்கவே செய்தது, 1951 ஆம் ஆண்டு அதன் முதல் தலைமையாசிரியர் நியமிக்கப்பட்டார். அவரது பெயர் ஜே.எல்.கார். அங்கு வருவதற்கு முன் அவர் அமெரிக்காவில் சவுத் டகோட்டாவில் உள்ள ஒரு பள்ளி உட்பட (அந்தப் பள்ளி அனுபவங்களை அவர் ‘தி பேட்டில் ஆஃப் பொல்லாக்’ஸ் கிராஸ்ஸிங்’ என்ற நாவலுக்கான தீவனமாகப் பயன்படுத்திக் கொண்டார்), பல பள்ளிகளிலும் ராயல் ஏர் ஃபோர்ஸ் அதிகாரியாக இரண்டாம் உலகப் போரில் சியர்ரா லியோனிலும் (இந்த அனுபவங்கள் ‘எ சீசன் இன் சென்ஜி’ (A Season in Senji) நாவலுக்கு உதவின) பணியாற்றியபின் எஸ்ஸக்ஸ் விவசாயி ஒருவரின் மகளான சாலியை தன் மனைவியாக்கிக் கொண்டிருந்தார்.
அடிப்படையில் ஹார்போல் ரிப்போர்ட் அன்றாட பள்ளி நிகழ்வுக் குறிப்புகளின் ஆவணமாய் எழுதப்பட்டிருக்கிறது -செயிண்ட் நிக்கலாஸ் சி ஈ (அஸ்ஸிஸ்டட்) பள்ளியின் (அதாவது சர்ச் ஆஃப் இங்கிலாந்தின் நிதியுதவியுடன் நடத்தப்பட்ட ஒரு பள்ளி) தற்காலிக தலைமையாசிரியர் ஜார்ஜ் ஹார்போலின் குறிப்பேடு. இதில் பதிவு செய்யப்பட்டிருக்கும் நிகழ்வுகள் குறித்து கருத்தளிக்கும் வகையில் அதற்குத் துணையாக தினசரிக் குறிப்புகளும் கடிதங்களும் இணைக்கப்பட்டிருக்கின்றன. அளிக்கப்பட்ட வடிவில் அமைந்த தினக்குறிப்பில், என்றோ முடிந்து போன காலகட்டத்தில் இயற்றப்பட்டு அதன் எச்சமாக தற்போது நீடிக்கும் சட்டத்தின் விதிமுறையின் படி (பரிந்துரை அல்ல) இந்த பள்ளி நாளேட்டில் ஒவ்வொரு பள்ளி நாள் நிகழ்வின் முக்கிய அம்சங்கள் துல்லியமாகப் பதிவு செய்யப்பட வேண்டும். விக்டோரியா காலகட்டங்களில் விகரும் ஸ்கொயரும் (தோராயமாக, பாதிரியாரும், பண்ணையாரும்) இதைப் பரிசோதிப்பார்கள், காரின் காலத்தில் அரசு அதிகாரிகள் இதைச் செய்தார்கள். கார் போன்ற நேர்மையான கல்வியாளர்கள் இது போல் செய்த பதிவுகள் கல்வி மற்றும் சமூக வரலாற்றின் செறிவான காப்பகங்களாய் விளங்குகின்றன. 1952 மார்ச் 3 அன்று கார் இப்படிப்பட்ட ஒரு குறிப்புப் புத்தகத்தைத் துவங்கி அடுத்த பதினைந்து ஆண்டுகளுக்குத் தொடர்ந்து அதில் குறிப்புகள் பதிவு செய்து வந்தார். கடைசியாக 1967 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் தேதி, அதில் ஒற்றைச் சொல் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது- “ராஜினாமா.” இந்தக் குறிப்புகள் நாவலில் பயன்படுத்தப்பட்டபோது அவை நகைச்சுவை மிக்க பொக்கிஷக் குவியலாக மாறின: தன் மாணவர்களிடம் அவர்களது பெயர்களையும் முகவரிகளையும் எழுதி ஒரு பாட்டிலில் போட்டு மூடி ஆற்றில் வீசச் சொல்லும் தலைமையாசிரியர் கார் (எல்லா ஆறுகளும் ஏதோ ஒரு இடத்துக்குச் செல்கின்றன என்பதை உணர்த்த விரும்பியதால், அது போக இதில் நவிலத்தக்க கற்பனைக்கும் இடம் கிடைக்கிறது, இல்லையா?), விளையாட்டு தினத்தன்று கணித ஓட்டப்பந்தய போட்டிகள் (இந்தத் தடகளப் போட்டியின் தடைகள் கணக்குகள், அவை ஓட்டப் பந்தயப் பாதையில் வெவ்வேறு இடங்களில் ஒரு கரும்பலகையில் எழுதப்பட்டு தடகள வீரர்களின் வருகைக்கும் அவர்கள் அளிக்கப் போகும் விடைகளுக்கும் காத்திருந்தன), இருபுறமும் மரங்கள் வேலியிட்ட பாதையில் மாணவர்களை ஹவுஸ்மன் எழுதிய, “லவ்லியஸ்ட் ஆஃப் ட்ரீஸ், தி செர்ரி நவ்,” (A.E.Housman, Loveliest of Trees, the cherry now) என்ற கவிதையின் தாளத்துக்கு ஏற்ப அணிவகுப்பு செய்வது, நாவலில் இந்தச் சம்பவங்கள் அனைத்தும் முற்போக்கு மனப்பான்மை கொண்ட ஆசிரியை, மாற்றத்துக்கு அஞ்சும் கெட்டரிங்கில் வாழ்பவர்கள் பலரின் நிம்மதியைக் குலைக்கும் இளம் காம்பிரிட்ஜ் பட்டதாரி, மிஸ் எம்மா ஃபாக்ஸ்ஹெர்ரோ பாத்திரத்தின் மூலம் சித்தரிக்கப்படுகின்றன.
உள்ள அளவிலேயே அந்த நாட்குறிப்புகளை பிரையன் ராஜர்ஸ் நேசத்துடன் விவரித்த ஜே.எல்.கார் சரிதை, ‘தி லாஸ்ட் இங்கிலீஷ்மேன்’-ல் வாசிப்பது சுகமான அனுபவம்.
23 ஏப்ரல். “புனித ஜார்ஜ் தினம். ஆசிரியர்கள் எண்ணிக்கை மிகச் சிறியதாய் இருப்பதால் தினம் ஒரு பைண்ட்(pint) பால் மிக அதிகம் என்று (473.14 மி.லி) பால்காரரிடம் தினம் மூன்றில் ஒரு பங்கு பைண்ட் கொடுக்க முடியுமா என்று கேட்டேன். “அது முடியாது,” என்றார்கள், “காரணம், மூன்றில் ஒரு பங்கு பைண்ட் என்பது சட்டத்துக்குப் புறம்பானது, அது ஒரு திரவ அளவையாய் அங்கீகரிக்கப்படவில்லை.”
28 ஏப்ரல். “ஸ்டீபன் பீல்டிங் வரவில்லை. அவன் வீட்டுக்குச் சைக்கிளில் போனேன், பள்ளி வருகைப் பரிசீலனை அதிகாரிகள் அத்தனை பேருக்கும் (attendance officers) பரிச்சயப்பட்ட திரு பீல்டிங்கைச் சந்தித்தேன், அளவில் பெரிய, கனத்த மனிதர். அவர் மிகவும் ஒத்துழைக்கும் பாங்கு கொண்டவர் என்பதைக் கண்டேன் (அண்மையில் அவருக்கு நான்கு பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டது ஒரு காரணமாக இருக்கலாம்). அவர் ஸ்டீபனைத் தேடிப் பிடிக்க தன் மூத்த மகனை அனுப்பினார், அவன் திரும்பி வந்தவுடன் நான் அவனைத் தோலுரிக்கலாம் என்று பரிந்துரைத்தார்.”
25 ஜூன். “திருமதி விட்மெர்பூலுக்கு கடிதம் எழுதினேன். “மைக்கேலின் காலணிகள் இன்னும் பின்புறம் தைக்கப்படவில்லை. கிழக்கத்திக்காரன் போல் அவன் கால் தாங்கி தாங்கி பள்ளி வருகிறான்.”
விட்மெர்பூல்கள் நாவலிலும் தோன்றுகிறார்கள், ஆசிரியர்கள், வருகை அதிகாரிகள், மற்றும் விட்மெர்பூல்களுக்கு இடையே நிகழும் உரையாடல்கள் நாவலின் நகைச்சுவை மிகுந்த கட்டங்கள். இதோ ஒரு உதாரணம் – விட்மெர்பூல்களில் இரண்டாம் பெரியவன் வானளாவ நாறுகிறான் என்று தலைமையாசிரியர் ஹார்போலிடம் திருமதி கிரிண்டில் ஜோன்ஸ் குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்:
தன் மகன்கள் பள்ளி வருவதில்லை என்பதைத் தெரிவிக்க வந்த வருகை அதிகாரிகளிடம் தந்தை விட்மெர்பூல் அளித்த பதில் ஆவணத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது:
‘When I got the finnicky bugger’s note I smelt my kids and they definitely were OK and you can tell that bugger we’re not living in a bloody five-star hotel down here on the Sewerage.’
“தாம்தூம்னு ஆர்ப்பாட்டம் செய்யற அந்த தாயோளியின் குறிப்பு கெடச்ச உடனே என் பசங்கள மோந்து பாத்தேன். எல்லாம் சரியாத்தான் இருக்காங்க. இங்க சாக்கடைல, நாங்க ஒன்னும் மயிராப்போன ஐந்து நட்சத்திர ஓட்டல்ல வாழல்லன்னு அந்த தாயோளியிடம் நீங்க தெரிவிக்கலாம்”
குறிப்பு மேலும் தொடர்கிறது…
“He is also alleged to have said that it was ‘no use Miss “Grinderjone” going on about his children leaving clods under their desks because if she could get from his home to the “the *****y school” without using a helicopter and not muck herself up, then she could have his “*****y” pay packet next time they made him take a job.”
மேலே உள்ள விஷயத்தைப் படித்ததும் வெடித்துச் சிரிக்கவில்லை என்றால் நீங்கள் வேறு புத்தகத்துக்குப் போவது நல்லது, ‘த ஹார்போல் ரிப்போர்ட்’ உங்களுக்கானதல்ல. ஆனால் மேற்சொன்ன நகைச்சுவையில் ஒரு நுட்பம் உண்டு, அதைக் கூர்ந்து வாசிக்கும் வாசகர் உணர்ந்திருப்பார்- வர்க்கப் பிரிவினைகள் இங்கு அடிக்கோடிடப்பட்டிருக்கின்றன, அப்பாவியாய்த் தெரியும் ‘made him,” ‘சமூக நலம்,’ குறித்த பார்வைகளையும் மற்றும் டோரி லிபரல் வேறுபாடுகளையும் அழுத்திச் சொல்கிறது.
இதுவே ஹார்போல் ரிப்போர்ட்டை நகைச்சுவைத் தினக்குறிப்புகளின் கதம்பம் என்பதிலிருந்து உயர்த்தி அதைவிட இன்னும் சுவாரசியமான ஒன்றாக, அக்கால இங்கிலாந்தில் விளங்கிய கலாச்சார, அரசு பணித்துறைச் சம்பிரதாயங்களைக் கைப்பற்றும் சமூக ஆவணமாக்குகிறது. இதை நினைத்துப் பாருங்கள், உபமன்யு சாட்டர்ஜியின் பணித்துறையைப் பகடி செய்யும் கதைகளுக்கு முன், பி ஏ கிருஷ்ணனின் கண்காணிப்புத் துறையின் முந்திரிகளுக்கு முன், ஹார்போல் ரிப்போர்ட் வந்திருக்கிறது- கல்வி அமைப்பில் நிலவக்கூடிய அதிகார இடையூறு பற்றி நீங்கள் வாசிக்கக்கூடிய மிகச் சிறந்த நாவலும் இதுவே.
***
‘மகத்தான இலக்கியத்தில்’ சுவையான வாசிப்புக்கும் நகைச்சுவைக்கும் இடமிருக்க முடியாது என்று நினைக்கும் தீவிர இலக்கியவாதிகளில் ஒருவர் நீங்கள் என்றால், காரின் மாஸ்டர்பீஸான ‘எ மன்த் இன் தி கன்ட்ரி,’ உங்கள் வாசிப்புக்கும் பரிசீலனைக்கும் உகந்தது என்று பரிந்துரைப்பேன். அதன் இலக்கியத் தகுதிகளை வலியுறுத்தும் வகையில் அது கார்டியன் புனைவு பரிசு வென்றது என்பதையும் அது புக்கர் பரிசுக்கு நியமிக்கப்பட்டது என்பதையும் (இது போன்ற அதிர்ஷ்டவச சந்தர்ப்பங்கள் உங்கள் வாசிப்பைத் தீர்மானிக்க உதவும் என்றால்) நான் இந்த நாவலுக்கு ஆதரவாய் குறிப்பிட்டாக வேண்டும். “இந்த நாவலில் வெவ்வேறு விருப்பங்களும் உணர்ச்சிகளும் மாயத்துக்குக் கட்டுப்பட்டது போல் இணங்கி வருகின்றன, கோடையின் வெம்மை நம்மைச் சூழ்வது போல் கடந்த காலத்தின் நிழல்களுக்கும் எதிர்காலத்தின் குறிகளுக்கும் இடையில் நாம் தயங்கி நிற்கிறோம். இது காலத்தால் அழியாத நூல், ஒரு மங்கல பருவத்தை, வேறோர் உலகை, காயங்களை ஆற்றும் இடத்தை, மீளுருவாக்கம் செய்கிறது.” என்று எழுதிய ஹோல்ராய்டைக் காட்டிலும் சிறப்பாக நாவலின் உணர்வு நிலையை விவரிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கில்லை.
1920 ஆம் ஆண்டில் நிகழும் நாவலின் துவக்கத்தில் போர் (முதல் உலகப் போர், பாஷன்டெல்) மற்றும் தன் மனைவியின் கள்ளக்காதல் என்ற இரட்டை கொடுநினைவுகளிலிருந்து மீண்டு கொண்டிருக்கும் டாம் பெர்கென் உள்ளூர் தேவாலயம் ஒன்றிலுள்ள பதின்மூன்றாம் நூற்றாண்டு சுவரோவியத்தைச் சீரமைக்க நார்த் ரைடிங்கில் உள்ள ஆக்ஸ்கட்பி என்ற குக்கிராமத்துக்கு ரயிலில் வந்து சேர்கிறான், எதிர்காலத்தின் சௌந்தர்ய உயரத்திலிருந்து கதை சொல்லப்படுகிறது, பின்னோக்கி காண்பதில் எழும் நாஸ்டால்ஜியா உணர்வுகளின் ஒளிவட்டம் அளிக்கும் கதகதப்பில் திளைக்கும் பெர்கென் இனி எப்போதும் இன்னொரு முறை அடையப்பட முடியாத, அவனது சொற்களில், ‘ஆசீர்வதிக்கப்பட்ட காலத்தை’, திரும்பிப் பார்க்கிறான். நாவலின் துவக்கத்தில், அவன் வந்து சேர்ந்த முதல் நாளிலேயே, ஒருவகை பொதிக்கப்பட்ட நினைவேக்கத்தில், பெர்கென் ஒரு சிறு தூண்வரிசைச் சுவரொன்றைக் கண்ணுறுகிறான், அது அவனுக்குக் கலை வகுப்புகளை நினைவுபடுத்துகிறது, அந்த வகுப்புகள் அவனை கான்ராடுக்கும் (Conrad) ‘இளமையின் இழந்த இடத்திற்கும்’ கொண்டு செல்கின்றன. இழந்த இடம் வாசகன் மனதில் ஏ ஈ ஹவுஸ்மனின் புகழ்பெற்ற ‘இழந்த நிறைவின் இடத்தை,’ ஒரு நிழலாய்த் தோன்றச் செய்கிறது- அதன் ‘களிப்பின் நெடுஞ்சாலைகள்,’ பயணத்தில் கடக்கப்பட்டு விட்டன, அவை “மீண்டும் வரப்போவதில்லை.” பெர்கின் செறிவாக நினைவுகூரும் கோடைக்கால பிக்னிக்கில் “விண்ணும் மண்ணும் ஒன்றாயிருந்தன,’ அங்கு, “தொலைவில் மலைகளுக்குச் செல்லும் சாலை போல் எதிர்காலம் தீர்மானமான நம்பிக்கையுடன் நீள்கிறது,” என்று விவரிக்கப்படுவது, ஹவுஸ்மனின் நினைவுகூரப்பட்ட நீலமலைகளையும் தேவாலய கோபுரங்களையும் நினைவுபடுத்துகிறது. ‘எ மன்த் இன் த கன்ட்ரி’ தனது முடிவுக் குறிப்பிலும் ஹவுஸ்மனை மேற்கோள் காட்டுகிறது, யாரோ ஒருவர் க்ளீ மலைகளுக்கு அப்பாலிருந்து பார்த்துக் கொண்டிருப்பது போல் கற்பனை செய்து, “ஹவுஸ்மன் அந்த இடத்தில் நின்றிருக்கிறார், இழந்த நிறைவின் மண் குறித்து ஏக்கம் கொண்டிருக்கிறார்,” என்பது போல் நினைத்துப் பார்க்கப்படுகிறது.
ஆக்ஸ்கட்பியில் தேவாலய சுவரோவியம் செப்பனிடப்பட வேண்டும், பியர்ஸ் ஹெப்ரான் கல்லறை அடையாளம் காணப்பட வேண்டும் என்ற நிபந்தனைகளின் பேரில் தேவாலயத்துக்கு 1000 பவுண்ட் கொடையளித்து உயில் எழுதிய மிஸ் அடிலெய்ட் ஹெப்ரானின் மூதாதையான பியர்ஸ் ஹெப்ரானின் கல்லறையைக் கண்டுபிடிக்க அமர்த்தப்பட்ட சார்லஸ் மூன் என்பவருடன் பெர்கின் நண்பனாகிறான்; ஒரு வகையில் மூன் பெர்கினின் ‘ரகசிய பகிர்வாளன்’ ஆகிறான், மூன் ‘earth closet’ (மண்-மலக்கழிகலன்) பயன்படுத்துவது குறித்து பேசும்போது ரெவரண்ட் ஏ. ஜி. கீச் “யார், மூன்தானா என் ரகசிய பகிர்வாளன்,” என்று வியக்கும்போது மற்றுமொரு கான்ராடிய சுட்டுதல் பூடகமில்லாமல் நிகழ்கிறது. பின்னர் தான் செப்பனிட்டுக் கொண்டிருக்கும் சுவரோவியம் வரைந்தவருடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் மூன், “நான் ஒரு மாபெரும் கலைஞனுடன் வாழ்ந்திருக்கிறேன். ஆர்ச் வளைவின் மேல் அரை வெளிச்சத்தில் நீண்ட நேரம் நான் உழைத்த கணங்களில் என் ரகசிய பகிர்வாளன் என இருந்தவன்,” என்று சொல்கிறான்.
பெர்கினும் மூனும் மிஸ் ஹெப்ரான் அளித்த பணியை மட்டும் இணைந்து செய்பவர்களில்லை. பதுங்கு குழிப் போரின் கொடூர நினைவுகளும் போஸ்ட் ட்ராமாட்டிக் ஸ்ட்ரெஸ் காரணமாக எழும் அது தொடர்பான கொடுங்கனவுகளும் இருவருக்கும் பொதுவானவை. இது போக இருவருமே போகிற போக்கில் பெர்கின் காதுபட ஒருவர் பாரில் சொல்லிச் சென்ற மூனின் கடந்த காலம் குறித்த ரகசியத்தின் காப்பாளர்களும்கூட (ஆனால் அந்த ரகசியம் பெர்கினுடனும் பகிரப்பட்டிருப்பதை மூன் அறிந்திருக்கவில்லை).
மூன் இப்போதும் ஒரு ராணுவ ஜாக்கெட் அணிகிறான் என்பதும் அவன் ஒரு கூடாரத்தில் வாழ்கிறான் என்பதும் (அங்கு அவன் தூங்குவது ஒரு பதுங்கு குழியில்) சந்தர்ப்ப வசமாய் அமைந்ததல்ல. பெர்கின் திரை விலக்குகிறான், மூன் அகழ்ந்தெடுக்கிறான், இருவரும் ஆழப் புதைந்த உண்மையை மேற்பரப்புக்குக் கொண்டு வருகிறார்கள். கடந்த காலத்தை வெளிப்படச் செய்வது, இது நலம் விளைவிப்பதாய் இருக்கலாம், தம் கடந்த காலத்தின் கொடூரங்களிலிருந்து இவ்விருவரும் விடுபட உதவலாம். ஆனால் இது போல் வெளிப்படுத்துவதோ அதன்பின் குணமடைவதோ எளிதல்ல என்பதைப் போர் அனுபவங்களைப் பேசும்போது பெர்கின் வெளிப்படுத்தும் தயக்கம் உணர்த்துகிறது (பெர்கின் முக நரம்புகள் துடிக்கின்றன, அவன் வாய் திக்குகிறது, தன் வாதை அனுபவங்களைப் பேசுவதில் அவனுக்கு இருக்கும் பிரச்சினையின் சான்றுகள் இவை): “அவனது கேள்விகளைக் கேட்டேன், ஆனால் பதில் சொல்லவில்லை. என்னிடம் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதாலல்ல, பேசுவதில் பயனில்லை என்பதால். காலம் மட்டுமே என்னைச் சுத்திகரிக்கும் என்று சொல்லியிருந்தார்கள், எனக்கும் அதில் நம்பிக்கை இருந்தது.”
காலம்தான் மருந்து. இரக்கமற்ற இந்த அறிவுரை சுவரோவியத்தில் உள்ள மீட்பர் குறித்து மூன் சொன்னதை நினைவுபடுத்துகிறது: “வெம்மையற்றவர், தீவிரமானவர்… உங்கள் கிறிஸ்த்து. நீதி மட்டும்தான், இரக்கமில்லை.” முதல் உலகப் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தாம் பிடிஎஸ்டியால் துன்பப்படுகிறோம் என்பது தெரியாது, ஒப்பீட்டளவில் அது ஒரு நவீன புரிதல், வியட்நாம் போர்க் காலத்தில்தான் முதன்முதலாக அப்பதம் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அதே சமயம், காலத்தின் சீரழிவை நீக்குவதால் மட்டுமே பெர்கின் சுவரோவியத்தின் பழைய அழகை மீட்கிறான் என்பது ஒரு முரண்நகை. அந்த ஓவியம், பெர்கினால் மாஸ்டர்பீஸ் என்று தீர்மானிக்கப்பட்ட ஒன்று (“ப்ரூஹல் செய்ததை நூறு ஆண்டுகள் முன் செய்தது”), கடைசித் தீர்ப்பின் சித்திரம் (Last Judgement). பெர்கினும் மூனும், தங்கள் போர் அனுபவங்கள் காரணமாய் கிறிஸ்த்து, சபிப்பு, நரகம் ஆகியவற்றில் கவனம் கொள்கிறார்கள், கருணை, சபிக்கப்பட்டவர்களுக்கான இறைஞ்சுதல் ஆகியவற்றைக் குறிக்கும் மேரியின் இருப்பைக் கருத்தில் கொள்ளத் தவறுகிறார்கள். இவர்கள் போக இன்னொரு கவனிக்கத்தக்க உருவமும் ஓவியத்தில் உள்ளது, பிறையணிந்த அந்த உருவம் தலைகீழாய் நரகத்தினுள் விழுந்து கொண்டிருக்கிறது. இது மிஸ் ஹெப்ரானின் மூதாதை, மத்தியகால ராணுவ வீரன், குருசேடுகளின் கொந்தளிப்பில் சிக்கிக் கொண்டவன், இசுலாமிய சமயம் தழுவிய காரணத்தால் மதப் பிரஷ்டம் செய்யப்பட்டு, அடையாளமற்ற சவக்குழியில் புதைக்கப்பட்டிருப்பது பியர்ஸ் ஹெப்ரான் என்கிறான் பெர்கின் (மூனும் பெர்கினும் அவரது சவப்பெட்டியைத் தோண்டி எடுக்கும்போது அதில் ஒரு மணியாரம் வரையப்பட்டிருக்கிறது). மதநீக்கம் செய்யப்பட்டவன் குறித்து மிகுந்த அனுதாபம் தெரிவிக்கிறான் மூன், சவப்பெட்டியில் இருந்த மணியாரம் குறித்து யாரிடமும் சொல்ல வேண்டாமென்று பெர்கினிடம் வாக்கு பெறுகிறான் (சவப்பெட்டியை பொதுப் பார்வைக்கு வைக்கும் முன் அதை அவன் நீக்கி விடுகிறான்), இதன் மூலம் ஹெப்ரான் குடும்பப் பெயர் இன்னும் நீங்காத அவமானம் அடைவது தவிர்க்கப்படுகிறது. மூனின் பெயரை நம்மால் பிறையுடன் இணைத்து வாசிக்க முடியும், மூனும் கூட ஒரு வகையில் பிரஷ்டம் செய்யப்பட்டவன்தான், மான அவமானத்துக்கு அஞ்சிய அக்காலத்தில் பெயர் சொல்ல முடியாத ஒரு மீறலுக்காக அவன் ராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டவன்.
ஆனால் ஓவியம் மெல்ல மெல்ல மீண்டும் உயிர்ப் பெறுகையில், பெர்கினின் உணர்ச்சிகள் இயல்பு நிலைக்கு திரும்பும் சாயல் தெரிகிறது, ரெவரெண்டின் மனைவி ஆலிஸ் கீச்சின் பால் அவனுக்கு உருவாகும் ஈர்ப்பு இதற்கு ஒரு சான்று. கல்லறை அடுக்கு ஒன்றில் அவன் தூங்கி விடும்போது ஆலிஸ்சின் தோற்றமே அவனை எழுப்புகிறது என்பது இங்கு கவனிக்கத்தக்கது. இங்கு புத்துயிர்ப்பு அல்ல, அதன் சாத்தியமே சுட்டப்படுகிறது. அவன் வசிக்கும் இடத்துக்கு இருவரும் போகிறார்கள், இருவரும் தன்னிச்சையாகத் தொட்டுக் கொள்வது வளரும் நெருக்கத்துக்குச் சான்று என்றாலும் அவனே பின்னொரு நாள் வருத்தத்துடன் சொல்வது போல் ஒன்றும் நடப்பதில்லை. “நான் கை தூக்கி அவள் தோளைத் தொட்டிருக்க வேண்டும், அவள் முகத்தைத் திருப்பி முத்தமிட்டிருக்க வேண்டும். அது அப்படிப்பட்ட ஒரு நாள்தான். அவள் என் மீது சாய்ந்தாள், காத்திருந்தாள், ஆனால் நான் ஒன்றும் செய்யவில்லை, ஒன்றும் பேசவில்லை.” இக்கணத்தை நினைத்துப் பார்ப்பதுதான் நாவலின் கடைசி பக்கத்தில் எப்போதும், “இதயத்தில் ஒரு அழைப்பு- ஒரு மதிப்புமிக்க கணம் போய் விட்டது, நாமோ அங்கு இல்லை என்ற அறிதல்,” என்ற புலம்பல் அவனை ஹவுஸ்மனின் நிறைவழிந்த நிலத்துக்குக் கொண்டுசெல்கிறது.
***
1994 ஆம் ஆண்டு இந்த அசாதாரண நாவலை எழுதிய ஜே.எல்.கார் மறைவையொட்டி, சிலர் பெருங்கவிஞர்களின் சிறுநூல்கள் (tomelets) பதிப்பித்தவர் மறைந்தார் என்று வருத்தம் தெரிவித்தனர். அப்புத்தகங்கள் தர்க்கப்பூர்வமான முடிவின் விளைவு. வாசர்களால் தொடர்ந்து பதினாறு பக்கங்களுக்கு மேல் கவிதை வாசிக்க முடியாது என்று நம்பிய கார், முதல் புத்தகத்தை 1964ஆம் ஆண்டு கவிஞர் ஜான் க்ளேர் நூற்றாண்டில் பதிப்பித்தார். கிளேரின் எள்ளு எள்ளு எள்ளுப் பேரனே காரின் பால்காரன் என்பதும் குறிப்பிடத்தக்கது. வேறு சிலர் கவுன்சில் உடைத்து எறிந்த சாளர அடிக்கட்டைகளையும் சாலையோரக் கற்களையும் கொண்டு ரிஃபார்மேஷன் காலத்தில் சிதிலமடைந்த கற்சிற்பங்களைச் செப்பனிட்ட கல்கொத்தனாரின் மறைவுக்கு வருந்தினர். ஒரு சிலர் ஐம்பத்து ஏழு வயதில் தனது இறுதிச் சதம் அடித்த மத்திய வயது கிரிக்கெட் வீரருக்கு வருந்தினர். மறக்க முடியாத குதிரை ஹொரஸ்சை, 1980, “கூர்மையான நுண்ணுணர்வு கொண்ட குதிரை, எப்போதும் டிரெண்ட் பிரிட்ஜ் பெவிலியனை விட்டு கடைசி நபராய் வெளியேறும் நாட்ஸ் கிரிக்கெட்டர், நிரந்தர நாட் அவுட்டர், ஃபிரெட் மோர்லியைக் கண்டதும், சத்தமில்லாமல் வீசுகள உருளியை நோக்கி வந்து நிற்கும்.” என்று விவரித்த அவரது ‘அசாதாரண கிரிக்கெட்டர்களின் அகராதியை’ நினைவு கூர்ந்து வருந்தினர் சிலர். இன்னும் சிலர் அவரது வரைபடங்கள், அதிலும் குறிப்பாக, அவர் அதில் சேர்த்த சுவையான நுண்குறிப்புகளை நினைத்து வருந்தினர்- வெஸ்ட்மோர்லாண்டின் வரைபடத்தை அவர் ஆப்பிள்பீயின் திருமதி பெல்லுக்கு அர்ப்பணித்திருந்தார்: “1814 ஆம் ஆண்டு அவர் வெஸ்ட்மோர்லாண்ட் சீருடைப் படையைச் சார்ந்த தன் மகன் ஜானைக் கோச்சு வண்டியில் போர்ட்ஸ்மவுத் அழைத்துச் சென்றபோது கப்பற்படை துறைமுகம் விட்டுக் கிளம்பி விட்டது என்று அறிந்தார். அலைகள் அடங்கிய கடலில் ஐல் ஆப் வைட் அருகே கப்பல்கள் நிதானித்து நிற்கின்றன, என்பதைக் கேள்விப்பட்டதும் தன் மகனை ஒரு சிறு படகில் கொண்டு சென்று சேர்த்தாள். திரும்புவதற்குள் காற்று அதிகரித்ததால் அவளால் திரும்ப இயலவில்லை. எனவே, உண்மை வெஸ்ட்மோர்லாண்ட் உணர்வினளாய் அவளும் தன் மகனுடன் போர் சென்றாள்”.
ஆனால் நான், காரை முதலிலேயே படித்திருந்தால், நினைவில் தாங்கிய நகைச்சுவை மிக்க நாவல்கள் பலவும் பிறவற்றைப் போலல்லாத முற்றிலும் மாறுபட்ட மாஸ்டர்பீஸ் நாவல் ஒன்றையும் எழுதிய நாவலாசிரியரின் மறைவுக்கு வருந்தியிருப்பேன். மண், காலம், நுண்ணுணர்வு இம்மூன்றும் பூரண வகையில் ஒன்று கூடி இதை மறக்க முடியாத நாவலாக்குகின்றன. அண்மையில் இந்தியா போனபோது பயணத்தில் ‘ஹார்போல் ரிப்போர்ட்’ படித்தேன், பாஸ்டன் திரும்புகையில் ‘ஹவ் ஸ்டீப்பில் சின்டர்பி வாண்டரர்ஸ் வன் தி எஃப்ஏ கப்’ (How Steeple Sinderby Wanderers Won the FA Cup, இங்கு இந்த நாவல் பேசப்படவில்லை, ஆனால் நினைவில் கொள்ளுங்கள், லகானுக்கும் வெண்ணிலா கபடிக் குழுவுக்கும் முன் வந்து விட்டது ஸ்டீப்பில் சின்டர்பி வாண்டரர்ஸ் நாவல்). இரு பயணங்களிலும் என்னையும் மீறி உரக்கச் சிரித்தேன். இவை மகத்தான இலக்கியமா என்பது தெரியாது, ஆனால் இலக்கியம் இது போல் எழுதப்பட்டால் அது இன்னும் பல வாசகர்களைச் சென்றடையும் என்பதில் சந்தேகமில்லை.
——————————-
நம்பி கிருஷ்ணன் / January 2021
மூலநூல்கள் / மேலும் படிக்க:
Carr, J.L, The Harpole Report, Penguin, 1984
Carr, J.L, A Month in the Country, NYRB, 2000
Carr, J.L, How Steeple Sinderby Wanderers Won the FA Cup, Penguin, 1984
Rogers, Byron, The Last Englishman, Aurum Press, 2013