[இங்கிருந்து உண்மைக்கு அங்கிருந்து இன்மைக்கு: ஜீவன் பென்னி எழுதி, மணல்வீடு பதிப்பக வெளியீடாக வந்த ‘அளவில் மிகச்சிறியவை அக்கறுப்பு மீன்கள்’ எனும் கவிதைப் பிரதி குறித்துச் சில எதிர்வினைகள்]
எங்கள் அடுக்ககக் குடியிருப்பில் ஒரு பையன் இருக்கிறான். என் மகனின் விளையாட்டுத் தோழன். அவன் பெயர் ஜீவன். அவனை நான் ‘ஜீவன் பென்னி’ என்றே எப்போதும் குறிப்பிடுவேன். அப்படி நான் குறிப்பிடும் ஒவ்வொரு முறையும் என் மகன் என்னை அந்தப் பெயரை ‘ஜீவன் ஜிபி’ எனத் திருத்துவான். இதுவரை நான் திருந்தவில்லை. ஆனால் ஜீவன் பென்னி எனும் பெயர் என் சிந்தையில் ஏன் குடி புகுந்தது என யோசித்த போது தான் எனக்கு விளங்கியது. அந்தப் பெயர் நான் திரும்பத் திரும்பக் கேள்விப்படும் பெயர். அதுவும் எனக்குப் பிடித்தமான கவிதையுலகில். 2010களின் இறுதிகளில் இருந்து, தமிழ் சிறு பத்திரிகைகளின் கவிதைப் பக்கங்களில் நான் தொடர்ந்து எதிர்கொண்ட பெயர் ‘ஜீவன் பென்னி’. அவ்வப்போது சில கவிதைகளை வாசித்தும் இருக்கிறேன். ஆனால் அவர் கவிதைகளைத் தொடர் வாசிப்பிற்கு உட்படுத்தியதில்லை. நான் வாசித்திருந்த வரை, இருத்தலியலின் தத்துவ விசாரங்கள் விரவிய, சில சமயம் எனைக் கவர்ந்த, கவிதைகள் அவை என்பதான ஒரு மதிப்பீடு என்னில் உருவாகித் தங்கியிருந்தது.
சுமார் ஒரு வாரம் முன்பு கனலி ஆசிரியர் விக்னேஷ் எனைத் தொடர்பு கொண்டு எதிர்வரும் கனலி இதழில் ‘சமகால தமிழ் கவிஞர்கள் வரிசையில்’ ஜீவன் பென்னி குறித்த மதிப்பீடுகள் இடம்பெறும் என்றும் அதற்கு என்னால் அவரின் ஏதேனும் ஒரு கவிதைத் தொகுப்பு குறித்து மதிப்புரை வழங்க முடியுமா என்றும் கோரினார். அட நம்ம ஜீவன் தானே செய்கிறேன் எனச் சொன்னபோது எனக்குச் சட்டென்று உரைத்த ஒரு விஷயம் – மணல்வீடு ஹரி ‘ஜீவனின்’ ஒரு கவிதைத் தொகுப்பினை எனக்குச் சில வருடங்கள் முன்பு மற்ற வெளியீடுகளுடன் அனுப்பியிருந்தார் என்பது. உடனே என் வீட்டு நூலகத்தில் அதைத் தேடினேன் – கிடைக்கவில்லை. இதை விக்னேஷிடம் சொன்னதும் அவர் எனக்கு அந்தத் தொகுப்பினை அனுப்பி வைத்தார்.
1.
தன்னை வளர்ப்பதே தாம்பத்தியத்தின் தானம் என நம்பும் ஒருவனுக்குக் கூட நாய் வளர்க்கும் ஆசை வருவது இயல்பு. அந்த உயிரின் உன்னதம் அத்தகையது. ஆனால் நான் மீன்கள் வளர்க்கத் தொடங்கிய கதை தற்செயலானது – தற்செயல் என்பது ஒரு இருத்தலியல் பண்பு. அதன் அதிசயங்கள் எல்லாம் நிகழும் போதே பாதி விளங்கிவிடும். இந்தப் பெருந்தொற்றுக் கொள்ளை நோயின் காலம் தொடங்குவதற்கு இரு மாதங்கள் முன்பு தான் என் மகனின் பிறந்த நாள் வந்தது. அதற்கு, என் மனைவியின் தோழி, பரிசு தர விரும்பி சொன்ன பட்டியலில் இருந்த எல்லாமே உயிருள்ளவையாகவே இருந்தன – குட்டி பப்பி, ஹேம்ஸ்டர், சாக்லேட் மோலி. இதில் சாக்லேட் மோலி ஒரு ஒரு சிறிய கருப்பு மீன் என்பதும் – அதை ஜோடியாக ஒரு தொட்டியில் நீந்தும் வண்ணம் பரிசளிப்பார்கள் என்பதும் தெரிந்ததும் அதையே ஏற்றுக் கொள்ளப் பணிந்தோம். அந்த சாக்லேட் மோலி எனும் அளவில் மிகச் சிறிய அந்தக் கருப்பு மீன்கள் எங்கள் இல்லத்தின் அங்கத்தினர்கள் ஆயின. ‘அளவில் மிகச்சிறியவை அக்கறுப்பு மீன்கள்’ என்ற ஜீவன் பென்னியின் கவிதைத் தொகுப்பின் தலைப்பைக் கண்டதுமே என் மனம் ஒரு அக்வெரிய மீன் போலத் துள்ளியது. தொட்டி மீன்கள் இருந்தியலியத்தின் குறீயிடுகள் என்றே நான் நம்புகிறேன்.
இந்தக் கவிதைத் தொகுப்பினுள் நுழைவதற்கான மனநிலையினை இத்தொகுப்பின் ஏதாவது ஒரு கவிதை தருமா என புத்தகத்தைப் புரட்டியபோது, கண்ணில்பட்ட இந்தக் கவிதை, சட்டென்று எனைத் தன் வசம் இழுத்துக் கொண்டது.
//
ஒன்றன் பின் ஒன்றாக விழும் பழுப்புயிலைகள்
ஓருறவை யின்னும் ஞாபகப்படுத்துகின்றன.
உப்பின் கடைசிச் சொல்லில் கொஞ்சம் கரிப்பிருந்தது.
நீளமான யிப்பாதையில் அன்பு எப்போதும் தூங்கிக்கொண்டிருக்கிறது.
ஒருகல் உதிர்ந்த மலையின்னும் அழகானதாகயிருக்கிறது
கண்களில் கேட்டுகொண்டிருந்த இசை
சில முத்தங்களை ஞாபகப்படுத்துகின்றன,
நிலவைப் பிரித்துக்கொண்டிருந்த கைகளுக்குள்
ஒளிந்து கொண்டிருந்த அவை
ஒவ்வொன்றாய் உதிரத்தொடங்கியிருந்த வெளியில்,
சில கோடுகள் பூக்களாகவும் வானவில்லாகவும்
சற்று சரிந்த மனிதனாகவும் உருமாறிக்கொண்டிருந்தன
ஒரு திரையில் நீளும் ஒரு இரவினூடாக.
(திரு. பாலுமகேந்திரா அவர்களுக்கு)
//
பாலுமகேந்திரா ஒரு காலத்தில் எனக்குப் பிடித்த தமிழ் திரையுலகப் படைப்பாளுமை என்பதாலோ என்னவோ இந்தக் கவிதை என்னை வெகுவாக ஈர்த்துவிட்டது.
2.
I. ஒவ்வொரு முறையும் நிரம்புவதற்காகவே மிகக்காலியாகயிருக்கிறது வாழ்வு, II. பிரிவின் தீர்ந்திடாத சொற்கள் மற்றும் III. மிகக்கடைசியான மிருதுவான கதைகள் என மூன்று பகுதிகளாக இத்தொகுதி நமக்கு வாசிக்கக் கிடைக்கிறது.
உபரி, உதிரி போன்ற சொற்கள் இவர் கவிதைகளில் / இவர் கவிதைகளால் புதிய அர்த்த பரிமாணமும் பரிணாமமும் பெறுகின்றன. தொகுப்பின் பல கவிதைகளுக்குத் தலைப்பில்லை. இம்மாதிரிக் கவிதைகளின் மர்மம் என்பது அவை எவற்றைப் பற்றிப் பேசப் போகின்றன என்ற முன்னறிவிப்பில்லாமல் நம்மை எவ்விதத்திலும் தயார்ப்படுத்தாமல் ஒரு கடலுக்குள் தள்ளிவிடும் என்பது தான்; இந்தக் கவிதையைப் போல –
//
அளவில் மிகச்சிறியவை அந்நீலக்கடல்
ஒவ்வொரு அலையும் அன்பை கொண்டு வருகின்றது, கொண்டு செல்கின்றது.
மிகுந்த மனக்கசப்புகளுடன் மிதந்து கொண்டிருக்கிறது இறந்த மீன்
நுரைததும்பும் குவளைகளிலிருக்கும் கசப்பும் குளிர்ச்சியும்
கடலாகிவிட்ட பிறகு,
அதனுள் மறைந்து கொண்டிருக்கிறது,
அளவில் மிகச்சிறிய அச்சூரியன்.
எதிர்பார்த்ததை விட யின்னும் சிறப்பானதாகயிருக்கிறதிந்த மரணம்.
போர் தொடங்குகிறது நிரந்தரமாக
முடிகிறது தற்காலிகமாக.
//
மேற்குறிப்பிட்ட இந்தக் கவிதையில் எனைக் கவர்ந்தது இதில் கையாளப்படும் வரம்பு / வீச்சு எல்லைகள் (Range) தான்.
மேலும் இவர் கவிதைகளில் படிமங்கள், குறீயீடுகள், உருவகங்கள், உவமைகள் எல்லாம் மிக இயல்பாகக் கவிதையுடன் இயைந்து / இசைந்து வருகின்றன. எ.கா. – // நீங்கள் தவறவிட்ட பேருந்தில் செல்லும் உங்களது மரணம் //, // இப்போதிருக்கும் கடவுள் / கடவுளாகயிருப்பதற்கு லாயக்கற்றவர் //
வான்கோவின் ஓவிய உலகினை ஒரு கவிதை ஜாடிக்குள் இட்டு நிரப்பப் பார்க்கும் இந்தக் கவிதையின் சர்ரியலிசச் சித்தரிப்புகள் ஒரு வண்ணப் பெருவெடிப்பினை நிகழ்த்தப் பார்க்கின்றன.
//
வெள்ளைப்பூக்கள் உதிர்ந்து பறக்கும் சமவெளி
மழைபெய்து முடிந்த அறையில் வான்கோவின் வாசனை
நேற்றிரவு மீந்த மதுவில் வெள்ளை பூக்கள் பூத்திருந்தன
மிக முன்னதாகவே வந்திருக்கவேண்டிய யிரவை
அவசர அவசரமாகப் பிரித்துக் கொண்டிருக்கும் கைகளில்
மிதந்துகொண்டிருக்கிறது பிங்க் நிற முத்தங்களினிசை
நிலவு முடிய அவ்விரவு அவிழ்ந்து நிறைகையில்
கண்களில் குளிர்ந்து பரவியிருந்தது மெருனிசை
திறக்கும் எல்லாவற்றிலும் படர்ந்திருந்தது,
வெள்ளைப்பூக்கள் உதிர்ந்து பறக்கும் சமவெளி.
வெவ்வேறு சூரியகாந்தி பூக்கள்,
சிறுசிறு வெளிச்சங்களின் மெல்லிசை,
பெருங்கடலொன்றின் தொடரலைகள்,
அடர் காட்டின் மையப்பச்சை,
திரும்ப முயலும் இரட்டைப்பாதைகள்,
யின்னும் சில பனிமுடிய யிரவுகள்.
//
எனினும் சில கவிதைகள் எந்தப் புத்துணர்ச்சியும் தரிசனமும் தன்னெழுச்சியும் இல்லாமல் வெற்று வார்த்தைகளாக நின்று விடுவது துயரம். உ.தா. மழை, மரம், கடல்.
பகிர்தலை வரைதல் தொடர் கவிதையில் வரும் இவ்விரண்டு கவிதைள் காட்டும் வண்ணக் குமிழிகள் தான் ஜீவன் பென்னி பிராண்ட் எனத் தோன்றுகிறது – அளவில் மிகச் சிறிய அற்புதங்கள் இவரின் இவ்வகைக் கவிதைகள்.
//
அதன்
அவ்வளவு தனிமையை
ஒரேயொரு ஓவியமாக்க முடியாதெனினும்,
சிறு குளத்தில்
நீந்தி விளையாடுகின்றன
அளவில் மிகச்சிறிய அவ்வோவிய மீன்கள்,
அதன் நிறங்களின் தனிமைகளை
கரையொதுக்குகின்றன
குளத்தின் தொடரலைகள்
முடிந்திடாத ஒளிக்கற்றைகளென.
//
//
வெய்யிலின்னும் புதிதாகும் நிழலில்
அசைவற்றுத்தூங்கிக் கொண்டிருக்கும் தெருநாயின்
மிகத்தனிமையான ஓவியம்
நம் எல்லா யுத்தங்களையும் புறக்கணிக்கிறது
முன்னும் பின்னுமாக நகர்ந்து
தன்னைத்தானே சரிசெய்து கொள்கிறது
பேரன்பின் நிழல்,
நாயின் சௌகரியத்திற்கேற்ப
அன்பின் துண்டுகளாகின்றன
கடவுளின் இனிப்பு ரொட்டிகள்
//
புத்தனை சரிபாதியாக வெட்டிய மாலைநேர வானவில் என்ற கவிதைத் தொடர், தத்தவத்தை சமகால வரலாற்றுப் பின்னணியில் ஒரு சாமானியனை முன் வைத்து அழகாக விசாரணை செய்கிறது. மிக அருமையான படைப்பூக்கம் மிக்கக் கவிதைகள் இவை.
பழங்குடிகளின் ஆறு பாடல்கள் என்ற கவிதைத் தொடர், புதிதாக எந்த வலியையும் பதிவு செய்யவில்லை எனினும் அந்தப் பாடல்கள் ஒரு கோஷம் போலத் தொடர்ந்து ஒலித்து கொண்டேயிருக்க வேண்டியதன் தேவை இன்னும் இருக்கிறது என்பது தான் கொடுமை.
கடவுள் கேட்டுக்கொண்டிருக்கும் இசை என்ற கவிதைத் தொடரின் ஒவ்வொரு கவிதையும் ஒரு கண்ணீர் பனி குண்டு. மனதை நெகிழ வைக்கும் இக்கவிதைகள் தரும் துக்கம் (melancholy) நம்மை ஒரு சோக காவியம் கண்டது போல உறையச் செய்கிறது.
//
சின்னச்சின்ன மதில்கள் நம்மை முழுவதுமாக பிரித்துக்கொள்கின்றன
ஒவ்வொரு பிரிவிற்குள்ளும் ஒவ்வொரு வாழ்வு
எல்லாவற்றிற்கும் போக நிறைய்ய மீதியாகிவிட்டது உபரிவாழ்வு
எதிலிருந்து வாழத் துவங்குவது
ஒவ்வொருமுறையும் நிரம்புவதற்காகவே மிகக்காலியாகயிருக்கிறது இவ்வுலகம்
//
எனத் துவங்கும் கவிதை, கூடு விட்டு கூடு பாய்தல் (metempsychosis/
3.
துயர் மிகுந்தனிமையின் சொற்கள் என்ற கவிதை காட்டும் அபரிதமான விசாலம் சில்லிட வைக்கிறது.
உயிரற்றத்தனிமை என்ற கவிதையில் தென்படும் காட்சிகளின் குரூரம் எந்த உணர்சிவசப்படுதலும் இல்லாமல், இயல்பாகிவிட்ட ஒரு துயர் வாழ்வினைச் சொல்கின்றது.
//
ஆசிர்வாதங்களால் நிரம்பியிருக்கின்ற இம்மாநகர சுரங்கப்பாதையில்
ஒரு ஞாபகத்தின் பிரார்த்தனை கையேந்துகிறது
//
எனத் தொடங்கும் கவிதை, இருட்டு என்பதை ஒரு படிமமாகவும் குறியீடாகவும் கொண்டு ஒரு சொனாட்டா (Sonata form) சிம்ஃபொனி (Symphony) இசையை போல ஒலிக்கிறது.
//
எப்பொழுதும் போல் வளைந்து செல்லும் இப்பாதையில்
முதல் முறையாகப் பறந்து வரும் தட்டாம்பூச்சி
தன் மிகச்சிறிய இதயத்தை
பாதைக்கேற்றவாறு தானே திருப்பிக்கொள்கிறது.
//
என்ற கவிதை ஒரு ஹைக்கூ (haiku) தருணத்தை முன்வைக்கிறது.
ஜீவனின் கவிதைகளில் நமைக் கவரும் மற்றுமொரு விஷயம், எளிய மனிதர்கள் மீதான கரிசனம் ஒரு தரிசனமாக உருமாறும் வித்தை.
//
நாற்கர சாலையிலிருந்து வாடிக்கையாளர்களுக்கென
உணவு விடுதி நோக்கி கைகளையசைத்தே
பெரும் பகலை இரவு நோக்கி நகர்த்திக்கொண்டிருக்கும்
சீருடையணிந்த பணியாளன்
//
எனத் தொடங்கும் கவிதை அத்தகையதொரு அனுபவத்தைத் தருகிறது.
//
ஒரு நாளையே விற்றுத்திரும்பும் பஞ்சுமிட்டாய்காரன்
அதன் அந்தியை
நகரின் சாலைமுழுவதும் பாடலாக்கி
வீடு திரும்புகிறான்
//
எனத் தொடங்கும் கவிதையும் அதே அனுபவத்தைத் தரும் ஒரு பாடல் (song) போன்ற கவிதை.
வளரும் பொம்மைகள் என்ற தலைப்பின் கீழுள்ள இரு கவிதைகளும் வியத்தகு பிரதிகள். சிதைவுகளின் உலகினை அதன் அழகியல் மாறாமல் முன்வைக்கும் கவிதைகள் அவை.
மீதங்களினாலான உதிரிகளின் வாழ்வு, இன்றைய வெய்யிலில் மெதுவாக உலர்ந்திடும் மாநகரம் ஆகிய கவிதைகள் எல்லாம் சிறுகதையின் நுட்பமும், சூட்சுமமும் , ஆழமும், விஸ்தீரணமும் கொண்டு மிளிர்கின்றன.
//
ஒரு இடைவெளியில் நிறைய்ய காலிசெய்வதற்கென யிருந்த பேரன்புகளை
துண்டுநோட்டீஸென வருவோர் போவோரிடமெல்லாம் விநியோகித்துக்கொண்டிருக்கிறது நகரம்
//
-
இது தான் ஜீவனின் கவிதைகளின் ஜீவன்.
மாநகர வாழ்விலிருந்து விழுந்திடும் ஓர் இலை என்ற கவிதைத் தொடர், ஏதோ ஒரு Neo-noir வகைப் படம் பார்ப்பது போலவே இருக்கிறது.
4.
தொட்டியில் இருக்கும் சின்ன மீன்களைப் போன்றே இத்தொகுப்பின் கவிதைகளும் ஒரு உலகினையோ, ஒரு வாழ்வினையோ, ஒரு அனுபவத்தையோ, ஒரு காட்சியையோ அளவில் சிறிய ஒவ்வொரு கவிதையிலும் தத்துவ தரிசனமாகப் பிரதியெடுக்க முயல்கின்றன. இதனாலேயே பல கவிதைகள் ஒரு முழுமையுறாத் தன்மையினைக் கொண்டிருக்கின்றன. ஆனால் அது தான் அவற்றின் யுக்தியும் வெற்றியும் எனத் தோன்றுகிறது. இத்தொகுப்பின் பலமும் பலவீனமும் என நான் கருதுவது இதைத் தான்.
தமிழ் கவிதைகளில் இனியும் நவீன கவிதை என்ற ஒரு வகைமை பிரித்து லேபிள் ஒட்ட வேண்டுமா எனத் தெரியவில்லை. எனவே இப்படிச் சொல்கிறேன் – சமகாலத் தமிழ் கவிதைகளில் ஜீவன் பென்னி கவனம் கொள்ளத் தக்க ஒரு முக்கிய கவிஞராக உருவாகியிருக்கிறார் என்பதை மறுப்பதற்கில்லை. ஜீவன் பென்னி தொடர்ந்து ஊக்கத்துடன் தமிழில் கவிதைகள் எழுத என் பிரார்த்தனைகளும் வாழ்த்துகளும்.
நூல்: அளவில் மிகச்சிறியவை அக்கறுப்பு மீன்கள்
நூல் வகைமை: கவிதைத் தொகுப்பு
எழுதியவர்: ஜீவன் பென்னி
பதிப்பகம்: மணல்வீடு
பக்கங்கள்: 96
விலை: ரூ.90
நூல் பெறத் தொடர்பு கொள்ள:
தொலைபேசி – 9894605371 / மின்னஞ்சல் – [email protected]
நந்தாகுமாரன்