கருப்பு ஸல்வார்

டெல்லிக்குக் குடிபெயர்வதற்கு முன்பு அம்பாலா கன்டோன்மெண்ட் பகுதியில் வசித்து வந்தாள் சுல்தானா.  அம்பாலாவில் அவளுடைய வாடிக்கையாளர்கள் பலரும் வெள்ளைக்கார துரைமார்கள்.   அவர்களிடம் இருந்து ஆங்கிலத்தை சுமாராக கற்றுக்கொண்டாலும் அன்றாடப் புழக்கத்தில் இல்லாது  தான் கற்றுக் கொண்டதை யாரிடமாவது எப்போதாவது மட்டுமே பிரயோகித்தாள்.  டெல்லியில், புதிதாகக் குடியேறிய இடத்தில் அவளுடைய தொழில் சுத்தமாக ஒன்றுமில்லாமல்  இருந்தது.  அண்டை வீட்டுக்காரி தமன்ச்சா ஜானிடம் ஒருநாள் ஆங்கிலத்தில், “திஸ் லாய்ஃப் வெரி பேட்” என்று சலித்துக் கொண்டாள்.   சுத்தமாகத் தொழிலே இல்லாமல்  அடுத்த வேளை சாப்பாடு எங்கிருந்து வரும் என்பது கூட நிச்சயமில்லாமல் இதுவெல்லாம் ஒரு வாழ்க்கையா? என்று அதற்கு அர்த்தம்.

அம்பாலா கன்டான்மெண்ட் பகுதி முற்றிலும் வேறாக இருந்தது.  அவளால் சமாளிக்க முடியாத அளவில் அங்கு தொழில் சக்கைப் போடு போட்டது.  வெள்ளைக்கார துரைமார்கள், அனைவரும் பட்டாளத்துக்காரர்கள், பொதுவாக மாலை நேரங்களில் மூக்கு முட்டக் குடித்து விட்டு  அவளை நாடி வருவார்கள்.  சிப்பாய்கள் பாசறை போகும் வழியில் வழக்கமாக நிற்கும்  அவளைப் பார்த்த மூன்று நான்கு மணி நேரத்துக்குள்       இருபதில் இருந்து இருபத்தி ஐந்து ரூபாய் வரை அவர்கள் பாக்கெட்டுகளில் பணம் குறைந்திருக்கும்.  எப்போதாவது உள்ளூர்க்காரர்கள் அவளிடம் வந்தாலும்   எப்போதும் வெள்ளைக்கார சிப்பாய்களையே பெரும்பாலும் வாடிக்கையாளர்களாக விரும்பினாள்.  அந்த வெள்ளைக்கார துரைமார்கள் பேசும் ஆங்கில உச்சரிப்பு அவளுக்குச் சுத்தமாகப் புரியாமல் இருந்தபோதும் அவர்கள் பேசுவது அவளுக்கு எப்போதும் மிகவும் பிடித்து இருந்தது.  அவர்கள் அவளிடம் ஆங்கிலத்தில் உரையாடும்போது, தலையைத் தலையை ஆட்டுவாள். அவர்களிடம் உருதுவில்  “சாஹேப்… நீ என்ன சொல்ல வர்றேன்னு புரியலை…  அவள் வழக்கமாக அனுமதிப்பதற்கு மேல் அவர்கள் அதிக உரிமை எடுத்துக் கொள்ள முயன்றால்,  நாராசமாக உருதுவில் சாபமிடுவாள்.  அவள் சொல்வது எதுவும் புரியாமல் அவர்கள் விழித்துக்கொண்டு நிற்கும் போது, “சாஹிப்… நீ சரியான உல்லூ கா பட்டா…. (ஆந்தைக்கு பிறந்தவன்) ஹராம்ஜாதா (தேவடியா மகன்).  நான் சொல்றது புரியுதா?  என்று சிரித்துக் கொண்டே கேட்பாள்.  இதற்கு வெள்ளைக்கார சிப்பாய்கள் வாய்விட்டுச் சிரித்தால்,  “அட பார்றா…. இவனுங்க சிரிக்கும்போது ஆந்தைக் குஞ்சு மாதிரியே இருக்கானுங்க…”

அவள் டெல்லிக்குக் குடிபெயர்ந்த பிறகு ஒரு வெள்ளைக்காரன் கூட அவள் வீட்டுக்கு வந்தது கிடையாது.  அம்பாலாவில் அவள் இருந்த போது    டெல்லியைப் பற்றி பலரும் அவளிடம் கூறிய கதைகள் எல்லாம் பொய்யாக  இருந்தது.  இந்த நகரத்தில் வாழ்ந்த லாட் சாஹிப்கள் எல்லாம் எங்கே போய்த் தொலைந்தார்கள்?   கோடைக்காலம் என்பதால் குளிர்ச்சி வேண்டி டெல்லியை விட்டு எல்லோரும் சிம்லாவுக்குப்   போயிருப்பதாகச் சொல்கிறார்கள்.  இங்கு டெல்லியில் கடந்த மூன்று மாதங்களில் தன்னிடம் வந்து போனதெல்லாம் வெறும் ஆறு வாடிக்கையாளர்கள் மட்டுமே.  வெறும் ஆறு. இந்த ஆறு வாடிக்கையாளர்களிடம் இருந்து அவளுக்குக் கிடைத்தது இதுவரை வெறும் 18 ரூபாய் எட்டணா மட்டுமே.   வந்தவர்கள் எல்லாம் என்ன செய்தாலும் மூன்று ரூபாய்க்கு மேல் ஒரு பைசா கூட கொடுக்க மாட்டேன் என்று அடம் பிடித்தார்கள்.  இதுதான் இங்கே அதிகபட்சமாக இருக்கும் போலும் என்று நினைத்தாள்.  முதலில் வந்த ஐந்து பேரிடம் பத்து ரூபாய் கேட்டுப் பார்த்தாள்.  ஆனால் அவர்கள் எல்லோரும்   மூன்று ரூபாய்க்கு மேல் ஒரு பைசா கூட கிடைக்காது என்று மிகவும் பிடிவாதமாக நின்றார்கள்.

அவளைத் தேடி அவர்கள் ஏன் வரவேண்டும் என்பதை அவளால் சொல்ல முடியவில்லை. இருந்தாலும் அந்த ஆறாவது ஆள் வந்தபோது அவனிடம் -“இதோ பார், நான் மூன்று ரூபாய்க்கு ஒரு பைசா கூட குறைவாக வாங்க மாட்டேன்” என்று மிகவும் கறாராகச் சொன்னாள்.  வேணும்னா வா.  இல்லைன்னா போயிக்கிட்டே இரு.  அந்த ஆள் எதுவும் பேசாமல் அறைக்குள் வந்தான்.   அவன் கோட்டைக் கழற்றத் தொடங்கியதும்,   “ஒரு ரூபாய் அதிகமாக வச்சிக்கலாமா?” என்று தயக்கத்துடன் கேட்டாள்.  அவன் பிரிட்டிஷ் ராஜா தலை பொறித்த பளபளக்கும் புதிய எட்டணா நாணயத்தைக் கொடுத்தான். எதுவும் இல்லாததற்கு ஏதாவது இருந்தால் போதும் என்ற சீரிய கொள்கையின் அடிப்படையில் தொழில் செய்பவள் சுல்தானா.

தான் போட்ட கணக்கு எல்லாம் தவறாகப் போய்விட்டதே என்று நினைத்தாள் சுல்தானா.  மூன்று மாதத்தில் வெறும் 18 ரூபாய் எட்டணா மட்டுமே.  இதை வைத்துக் கொண்டுதான்   அதன் சொந்தக்காரன்  கோட்டா  (வீடு)  என்று பெருமையாக அழைக்கும் குப்பை மேடு போன்ற இந்த இடத்துக்கு   வாடகை  இருபது ரூபாய் தந்தாக வேண்டும்.  அந்த வீட்டில் அவள் அதுவரை எங்கும் பார்க்காத தலைக்கு மேல் உள்ள சிறிய தொட்டியில் தொங்கும் சங்கிலியுடன்    நவீன கழிப்பறை இருந்தது.   அதை முதன்முதலாகப் பார்த்தபோது    காரியம் முடிந்ததும்  கையால் பிடித்துக்கொண்டு  எழுவதற்காக தொங்கவிட்ட சங்கிலி என்று நினைத்தாள்.   கடுமையான முதுகுவலி இருந்த அன்று அவள் அந்த சங்கிலியைக் கெட்டியாகப் பிடித்து எழுந்து நின்றபோது அது பயங்கரமாகச் சீறி  நீரை இறைத்தது.  பயத்தில்  பயங்கரமாக கிறீச்சிட்டாள்.

அடுத்த அறையில்  புகைப்படங்களை ஒவ்வொன்றாக அடுக்கிக் கொண்டிருந்த குதாபக்ஸ் என்னமோ ஏதோவென்று அந்த இடத்துக்கு பதறி அடித்துக்கொண்டு ஓடினான்.  “சுல்தானா” என்று இறைந்தான்.

“நீதானா?… படபடவென்று அடிக்கும் இதயத்துடன் வெளியில் வந்தாள் சுல்தானா.  “கடவுளே… இது என்ன கக்கூஸா அல்லது ரயில்வே ஸ்டேஷனா?  இப்படி இரைச்சல் போடுகிறதே?… செத்தேன்னு நினைச்சேன்…

குதாபக்ஸ் சத்தமாகச் சிரித்தான்.  “அல்பம்… பெரிய டவுன்லே எல்லாம் இருக்கும் துரைமார்கள் பாத்ரூம் இது… புரிந்ததா?

சுல்தானா – குதாபக்ஸ் இருவரும் சந்தித்தது மிகவும் சுவாரசியமான கதை.  அவன் ராயல்பிண்டியில் இருந்து வந்தவன்.  உயர்நிலைப்பள்ளி படிப்பை முடித்ததும் லாரி ஓட்டுனராகி பேருந்து கம்பெனி ஒன்றில் சேர்ந்தான்.  அந்த பேருந்து ராவல்பிண்டிக்கும் காஷ்மீருக்கும் இடையில் ஓடியது.    காஷ்மீரில் அவன் சந்தித்த திருமணமான ஒரு பெண்மணி அவனுடன் ராவல்பிண்டிக்கு ஓடிவந்தாள்.  அந்தப் புதிய ஊரில் பிழைப்புக்கு வழி எதுவும் கிடைக்காததால் உலகத்திலேயே மிகவும் புராதனமான தொழிலுக்கு அந்தப் பெண்மணியை அறிமுகப்படுத்தினான்.  அவள் அடுத்து ஒருவனுடன் ஓடிப்போகும் வரை இந்த ஏற்பாடு தொடர்ந்தது.  அந்தப் பெண்மணி அம்பாலாவில் இருப்பதாக யாரோ சொல்ல அவளைத் தேடிக் கொண்டு அம்பாலா வந்தான் குதாபக்ஸ்.  அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை.  ஆனால் சுல்தானாவைக் கண்டடைந்து அவள் மீது உடனடியாக மோகம் கொண்டான்.

குதாபக்ஸ் வருகை சுல்தானாவுக்கு அதிருஷ்டத்தை உடன் அழைத்து வந்தது.  தொழில் அமோகமாக பல்கிப் பெருகியது.  மூடநம்பிக்கைகள் நிறைந்தவள் என்பதால் அந்த அதிருஷ்டம் அத்தனையும் குதாபக்ஸ் மூலம் வந்ததாக நம்பினாள்.

குதாபக்ஸ் கடுமையான உழைப்பாளி.  வேலை எதுவும் செய்யாமல் சும்மா இருப்பதை அவன் வெறுத்தான்.  உள்ளூர் ரயில் நிலையத்துக்கு எதிரில் தொழில் செய்து கொண்டிருந்த  தெரு புகைப்படக்காரன் ஒருவனை  சிநேகம் செய்து கொண்டான்.   சில மாதங்களில் அவன் மூலம் புகைப்படம் எடுக்க கற்றுக் கொண்டான்.  சுல்தானா கொடுத்த அறுபது ரூபாயில் பழைய கேமரா, சீன் படுதாக்கள், அலங்கார நாற்காலிகள், கொஞ்சம் ரசாயனம் ஆகியவற்றை வாங்கி வந்தான்.   இவற்றைக் கொண்டு சொந்தமாகத் தொழில் தொடங்கினான்.  ஒருநாள் திடீரென்று தான் நகரத்தில் இருந்து கன்டோன்மெண்ட் இடம் மாறப்போவதாக சுல்தானாவிடம் கூறினான்.  ஒருமாதத்துக்குள் அங்கிருந்த வெள்ளைக்கார துரைமார்களை வாடிக்கையாளர்களாக ஆக்கிக் கொண்டான்.  அங்கு அவன் தொழில் செழித்து வளர்ந்தது.   சிறிது நாட்கள் கழித்து சுல்தானாவையும் நகரத்தை காலி செய்து விட்டு அம்பாலா கன்டோன்மெண்ட் பகுதிக்கு வந்து விடுமாறும் அங்கு நல்ல வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து சுல்தானாவும் தன்னுடைய தொழிலைத் தொடரலாம் என்று அவளைச் சம்மதிக்க வைத்தான்.  நாளடைவில் குதாபக்ஸின் வாடிக்கையாளர்களில் பலரும் சுல்தானாவுக்கும் வாடிக்கையாளர்களாக மாறினார்கள்.

இதைத் தொடர்ந்து   ஒரு ஜோடி வெள்ளி காதணி மற்றும் எட்டு தங்க வளையல்களை வாங்கும் அளவுக்கு சுல்தானாவின் சேமிப்பு வளர்ந்தது.  பதினைந்து நேர்த்தியான புடவைகள் அடங்கிய அழகிய வேலைப்பாடு மிகுந்த அலமாரி ஒன்றையும் அவளால் வாங்க முடிந்தது.  வீட்டுக்காக நல்ல வேலைப்பாடுள்ள மரச்சாமான்களையும் வாங்கினாள்.  இப்படி எல்லாம் நன்றாகப் போய்க் கொண்டிருந்த நிலையில்   திடீரென்று குதாபக்ஸ் யோசனையின் பேரில் மீண்டும் டெல்லிக்கு  குடியேற முடிவானது.    அவனுடைய அதிருஷ்டத்தில் வெகுவாக நம்பிக்கை வைத்து இருந்ததால் சுல்தானாவும் மிகவும் உற்சாகமாக அந்த யோசனையை ஏற்றுக் கொண்டாள்.

புதிய இடத்தில் தொழில் சூடு பிடிக்கச் சிறிது நாட்கள் எடுக்கும் என்பதை சுல்தானா நன்கு அறிந்திருந்தாள்.    முதல் மாதம் அவள் அத்தனை கவலைப்படவில்லை.  இரண்டாவது மாதத்தின் முடிவில் பயம் சற்று தலைதூக்கியது.  இதுவரை ஒரு வாடிக்கையாளன் கூட வரவில்லை.  என்னதான் நடக்குது?  ரெண்டு மாசம் ஆச்சு.   இதுவரை ஒருத்தன் கூட வரவில்லை.  நிலைமை கொஞ்சம் கடினமாகத்தான் இருப்பது தெரிகிறது.     ஆனால் இத்தனை மோசமாக இருக்கணுமா?” என்று குதாபக்ஸிடம் கூறினாள்.

அவளிடம்   இதுபற்றி இதுவரை ஒன்றும் சொல்லவில்லை என்றாலும் அவனுக்கும் நிலைமை சற்று புரியத் தொடங்கியது.  “நானே இதுபற்றி  சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.  இந்த நாசமாகப் போன யுத்தம் தொடங்கி விட்டதால் ஜனங்களுக்கு ஆர்வம் விட்டுப் போனது என்று நினைக்கிறேன்.  அப்புறம்… அவன் வார்த்தையை முடிப்பதற்கு முன்பு வாசலில் காலடிச் சத்தம் கேட்டது.    கதவு தட்டும் சத்தமும் கேட்டது.  குதாபக்ஸ் விரைந்து சென்று கதவைத் திறந்தான்.   சுல்தானாவின் முதல் வாடிக்கையாளன் வந்து விட்டான்.  ஆனால் மூன்று ரூபாய்தான் அவனிடம் கிடைத்தது.  அவனுக்குப் பிறகு வந்த ஐந்து பேரும் அதே மூன்று ரூபாய் தான் கொடுத்தார்கள்.  இந்த மூன்று மாதத்தில் அவளுக்குக் கிடைத்தது வெறும் பதினெட்டு ரூபாய் எட்டணா மட்டுமே.

நிலைமை மோசமானது.  அந்த வீட்டுக்கு மாத வாடகை இருபது ரூபாய்.  பிறகு மின்சாரம், தண்ணீருக்கான கட்டணம் – சாப்பாட்டுச் செலவு, துணி மணி இதர செலவுகள் என்று செலவினங்கள் மட்டும் அதிகரித்து வந்தன.  ஆனால் வருமானம் எதுவும் இல்லை.  பதினெட்டு ரூபாய் எட்டணாவை வருமானம் என்று சொல்ல முடியுமா?  அம்பாலாவில் கிடைத்த வருமானத்தைச் சேமித்து வாங்கிய எட்டு வளையல்களை ஒவ்வொன்றாக விற்க நேர்ந்தது.    எட்டாவது வளையலை விற்க முன்வந்தபோது அவள் குதாபக்ஸிடம், நாம் அம்பாலாவுக்கே திரும்பிப் போகலாம்.   இந்த ஊரில் நமக்கு ஒன்றும் இல்லை.  இதுவரை நல்லது எதுவும் நடக்கவில்லை.  நாம் இழந்தது இழந்ததுதான்.  இதை எல்லாம் தருமத்துக்குத் தந்ததாக நமக்கு நாமே ஆறுதல் கொள்ளலாம்.  இந்த கடைசி வளையலை விற்றுவிட்டு வா.  சாமான்களை மூட்டை கட்டி வைக்கிறேன்.  ராத்திரி ரயிலில் அம்பாலா போய்விடலாம்” என்றாள்.

வளையலை வாங்கிக் கொண்டான் குதாபக்ஸ்.  இல்லை பியாரிஜான்.  நாம் அம்பாலா போகப்போவது இல்லை.  டெல்லியிலேயே தங்கி பணம் சம்பாதிக்கலாம்.  உன்னோட தங்க வளையல்கள் எல்லாவற்றையும் திரும்ப வாங்கலாம்.  ஆண்டவன் மீது நம்பிக்கை வைப்போம்.  கண்டிப்பாக நமக்கு வழிகாட்டுவார்” என்றான்.  சுல்தானா எதுவும் எதிர்த்துப் பேசாமல் வளையல்கள் இன்றி மூளியாக இருந்த கையை நிராசையுடன் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

செலவின் ஒரு பகுதியை மட்டுமே ஈடுகட்டும் வகையில் கிடைத்த சிறு வருமானத்தில் மேலும் இரண்டு மாதங்கள் கழிந்தன.  என்ன செய்வது என்று அவளுக்குத் தெரியவில்லை.  குதாபக்ஸ் நாளின் பெரும்பகுதியை வீட்டுக்கு வெளியில் கழித்தான்.  இதுவும் அவள் துயரத்துக்கு மற்றொரு காரணமாக அமைந்தது.  ஆரம்பத்தில், அவள் அக்கம்பக்கத்தினருடன் அரட்டை அடித்து வந்தாள்.  ஆனால் சில நாட்கள் கழித்து அவர்கள் நடுவில் மிகவும் அசௌகரியமாக உணரத் தொடங்கினாள்.  எனவே, அவர்களைப் பார்ப்பதையும் தவிர்க்கத் தொடங்கினாள்.  நாள் முழுதும் வீட்டில் தனியாகவே உட்கார்ந்து காலம் கழித்தாள்.  வெற்றிலைகளை மடித்து பான் செய்வது, கிழிந்த  ஆடைகளைத் தைப்பது போன்ற காரியங்களில் ஈடுபட்டாள். சில நேரங்களில் பால்கனியில் நின்று சாலையின் மறுபக்கத்தில் இருந்த ரயில்வே மைதானத்தை மணிக்கணக்கில் வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பாள். நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ரயில் பெட்டிகளையும் ஓடும் ரயில் இன்ஜின்களையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பாள்.

ரயில்வே சரக்கு குடோனும் அந்த மைதானத்தின்  ஒரு பகுதியாக இருந்தது. தகரக்கூரை வேய்ந்த கூடத்தில் பல்வேறு அளவுகளில் நூற்றுக்கணக்கில் பண்டில்களும் பிரம்புக்கூடைகளும் மூலைக்கு மூலை சிதறிக்கிடக்கும்.  அதற்கு இடப்புறம் இருந்த வெட்டவெளியில் குறுக்கும் நெடுக்குமான தண்டவாளங்கள் காணக்கிடைக்கும்.  நண்பகல் வெய்யிலில் அந்த இரும்பு தண்டவாளங்கள் வெளிறிய நீலநிறத்தில் சுல்தானா கையில் ஓடும் நீலம் பாய்ந்த நரம்புகளைப் போலக் காட்சியளிக்கும்.  எப்போதும் அங்கே ஏதாவது நடந்து கொண்டிருந்தது.   ஏதாவது என்ஜின் தன்னை பெட்டிகளில் பூட்டிக் கொள்ள ஆயத்தம் செய்து கொள்ளும்.  அல்லது சரக்கு ரயில் பெட்டிகளில் இருந்து சரக்கு மூட்டைகளை இறக்கவோ ஏற்றவோ தயார் நிலையில் இருக்கும்.

நீராவியை  வேகத்துடன் வெளியேற்றும் என்ஜின்களின் ஆயத்த சங்கொலியுடன் தாளலயத்தோடு ரயில்கள்  ஸ்டேஷனுக்குள் நுழைவதும் கிளம்புவதும் முறைவைத்து நடக்கும்.   விடியற்காலையில்   பால்கனிக்கு வரும்போது சுல்தானாவுக்கு காணக்கிடைக்கும் வழக்கமான காட்சி இது.  மங்கலான விடியற்காலை வெளிச்சத்தில் ரயில் சீறி வரும் போது தலையை உயர்த்தி அது கக்கிச் செல்லும் அடர்த்தியான கரும்புகையை ஆச்சரியமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பாள்.  சில நேரங்களில் என்ஜினில் இருந்து கழற்றி விட்ட நீளமான சரக்கு பெட்டி தனியாகத் தண்டவாளத்தில்   உருண்டு செல்வதைப் பார்க்கும் போது அவளுக்கு தன்னுடைய நினைவு வரும்.  வாழ்க்கையின் தண்டவாளத்தில் தானும் உருட்டி விடப்பட்டோமா? அவளும் உருண்டு கொண்டிருக்கிறாள்.  ஆனால் இதே போல தன்னுடைய இச்சையின்றி உருண்டு கொண்டிருக்கிறாள்.  அடுத்தவர்கள் கைகளில் நெம்புகோல் இருக்கிறது.    இந்த ஓட்டம் பலவீனம் அடையும்.  ஏதோ ஒரு குறிப்பற்ற புள்ளியில்   என்றேனும் ஒருநாள் அவள் ஓட்டம் அடையாளமற்ற ஏதேனும் ஓரிடத்தில் எப்போதும் நகர முடியாமல் செயலற்று நின்றுவிடும்.

பால்கனியில் நின்று ரயில் தண்டவாளத்தை வெறித்து வேடிக்கை பார்த்தே அவளுடைய பெரும்பாலான நேரம்    கழிந்தது.  தூரத்தில் இருந்து   சீறிவரும் என்ஜின் சத்தம் அவள் சலனமற்ற நிலையைச் சீர்குலைத்தது.  ஏதேதோ வினோதமான எண்ணங்கள் அவள் மண்டைக்குள் குடைந்து கொண்டிருந்தது. சில நேரங்களில் அந்த ரயில்வே யார்டு பரந்து விரிந்த, புகை மண்டிய வேசியின் வீடு போலவும் கொழுத்த ரயில் என்ஜின்கள் அம்பாலாவில் எப்போதாவது அவளிடம் வரும் பணக்கார வியாபாரிகளாகவும் கற்பனை செய்து கொள்வாள்.

சரக்கு ரயில் பெட்டிகளைத் தள்ளிவரும் என்ஜின், வாடிக்கையாளர்களுக்காக ஜன்னலோரம் காத்திருக்கும் பெண்களைக் கடந்து போகும் ஆண்களைப் போல அவளுக்குக் காட்சியளிக்கும்.  இது போன்ற எண்ணங்கள் அவளை மிகவும் படுத்தி எடுத்தது.  அதனால் இப்போதெல்லாம் பால்கனிக்குப் போய் நிற்பதை முற்றாகத் தவிர்த்து வந்தாள்.

ஒரு முறை-இருமுறை அல்ல.  குதாபக்ஸோடு பேசுவதற்குப் பலமுறை முயற்சித்தாள்.  “இதோ பார்… என்னைப் பார்த்து இரக்கப்படு.    நாளெல்லாம் இங்கே நான் என்ன செய்கிறேன் என்று நினைக்கிறாய்?  படுக்கையில் விழுந்த நோயாளி மாதிரி நாள் முழுதும் வீட்டிலேயே அடைபட்டுக் கிடக்கிறேன்.  தயவு செய்து புரிந்து கொள்” என்று கெஞ்சத் தொடங்கினாள்.  ஆனால் ஒவ்வொரு முறையும் அவன், “ப்யாரிஜான், நான் சில விஷயங்களை முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.  கொஞ்ச நாட்கள்தான்.  அப்புறம் நம்முடைய நிலை முற்றாக மாறிவிடும்” என்று சமாளிப்பான்.

ஐந்து மாதங்கள் கழிந்தன.  எதுவும் மாறவில்லை.  இப்போதும் குதாபக்ஸ் எங்காவது ஏதாவது வாய்ப்புக் கிடைக்கும் என்று நாள் முழுக்க வீட்டுக்கு வெளியிலேயே நேரம் கழித்தான்.  அவள் வீட்டிலேயே அடைபட்டுக் கிடந்தாள்.  முஹர்ரம் மாதத்துக்கு சில நாட்களே இருந்தன.   நபிகள் நாயகத்தின் பேரன் ஹுஸைன் இப்னு அலி மற்றும் சகாக்களின் உயிர்த்தியாகத்தை  நினைவு கூறும் வகையில் வருஷத்துக்கு ஒருமுறை முஹர்ரம் தொடர்பான அனைத்து நோன்புகளையும் சுல்தானா ஒவ்வொரு வருஷமும் தவறாமல் கடைப்பிடித்து வந்தாள்.   அந்த மாதத்தின் முதல் நாளில் எப்போதும் துக்கத்தை அனுஷ்டிக்கும் வகையில் புதிய கருப்பு ஆடைகளையே அணிந்து வந்தாள்.

ஆனால் இந்த ஆண்டு என்ன செய்யப்போகிறாள்?  புதிய ஆடைகள் வாங்க அவளிடம் பணம் இல்லை.  தெருவுக்கு அந்தப்புறம் வசிக்கிறவளும் இவளுடைய தொழிலையே செய்து வரும்  முக்தார்,  முஹர்ரம் நோன்பு கடைப்பிடிக்க கைகளில் ஜார்ஜெட் துணியால் ஆடம்பரமாக எம்பிராய்டரி செய்யப்பட்ட   ஹாமில்டன் சட்டையை கருப்பு நிறத்தில் தைத்துக் கொண்டாள்.     அதற்கு ஜோடியாக பளபளப்பான கருப்பு சல்வாரையும் தைத்து இருந்தாள்.  மற்றொரு பெண் அன்வரி கருப்பு ஜார்ஜெட் புடவை வாங்கிக் கொண்டாள். அதனுடன் வெள்ளை பெட்டிகோட்டு தைத்து அணியப் போவதாகவும் அதுதான் இப்போது புதிய மோஸ்தர் என்றும் சுல்தானாவிடம் சொன்னாள்.  மென்மையான   கருப்பு நிறத்தில் தோலால் தைத்த புதிய காலணி ஜோடி ஒன்றையும் அன்வரி விலைக்கு வாங்கினாள்.  இப்போது போல சுல்தானா எப்போதும் இந்த அளவு விரக்தி அடைந்தது இல்லை.  வாழ்க்கையில் முதன்முதலாக முஹர்ரத்தில் அணிய அவளிடம் புதிய ஆடை எதுவும் இல்லை.

அன்று காலை முக்தார் மற்றும் அன்வரி வீட்டுக்குச் சென்று சிறிது நேரம் அரட்டை அடித்து விட்டு வீடு திரும்பிய பிறகு தரையில் விரித்த கிழிந்து நைந்து போன  பருத்தி ஜமுக்காளத்தில் உடலை நீட்டி தன்னுடைய நிலை குறித்து யோசித்துக் கொண்டே மிகுந்த வருத்தத்துடன் படுத்துக் கிடந்தாள் சுல்தானா. வீடு காலியாக இருந்தது.    குதாபக்ஸ் வழக்கப்படி எங்கோ வெளியில் போயிருந்தான்.  பெரிய தலையணையில் முட்டுக் கொடுத்தபடி நீண்ட நேரம் அசைவின்றி படுத்திருந்தாள்.  கழுத்துப் பகுதியில் விறைத்து வலி கிளம்பியதால் மெல்ல எழுந்து தன்னிச்சையாக பால்கனிக்கு சென்றாள்.  மிகுந்த துயரத்துடன் இருந்தாள்.

ரயில்வே மைதானம் எந்த நடமாட்டமும் இன்றி சூனியமாகக் காட்சியளித்தது.  என்ஜின் இல்லாத சில பெட்டிகள் அனாதையாக நின்றிருந்தன.  அன்றாடம் செய்வது போல தெருவில் தண்ணீர் தெளிக்கப்பட்டிருந்தது.  அதனால் தெருவில் தூசு எதுவும் பறக்காமல் சுத்தமாக இருந்தது. சில ஆண்கள் வேகமாகச் சாலையைக் கடந்து போனார்கள்.  சுல்தானா போன்ற பெண்களைக் காதல் கசியப் பார்த்து விட்டு நேராக வீட்டுக்கு ஓடி மனைவியுடன் படுத்துக் கொள்கிற ஆசாமிகள் இவர்கள்.  அவர்களில் ஒருவன் சுல்தானாவை நிமிர்ந்து பார்த்தான்.  அவள் அவனை நோக்கி லேசான புன்னகையை வீசினாள்.  பின்னர் மைதானத்தை நோக்கி பார்வையைத் திருப்பினாள்.  அவன் அங்குதான் இன்னும் நின்று கொண்டிருப்பான் என்றும் அவளை வெறித்துக் கொண்டிருப்பான் என்றும் அனுமானித்தாள். அவன் அங்கேயே நின்று அவளையே வெறித்துக் கொண்டிருந்தான். அவள் மாடிப்படியை சுட்டிக்காட்டி மேலே வருமாறு அவனை நோக்கி சைகை காட்டினாள்.

அவன் மெல்ல படியேறி வீட்டுக்கு வந்தான்.  சற்று பதட்டமாக இருந்தான்.   “இங்கே வர பயமாக இருந்ததா?   என்று கேட்டாள்.  “ஏன் அப்படிச் சொல்கிறாய்?” என்று சிரித்துக் கொண்டே பதிலளித்தான். “தெருவில் தயங்கிக் கொண்டே ரொம்ப நேரமாக  நின்று கொண்டிருந்தாய்.  அதனால் கேட்டேன்”.   மீண்டும் புன்னகைத்தான்.  “அப்படி எல்லாம் இல்லை.  உன் பிளாட்டுக்கு மேற்புற மாடியில் ஒரு பெண்மணி எதிர்வீட்டு மாடியில் நின்றிருந்த ஆளுக்கு என்னேமா ஜாடை காட்டிக் கொண்டிருந்தாள்.  அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.  அப்புறம் நீ உன் அறையின் பச்சை விளக்கை அணைத்து விட்டு பால்கனிக்கு வந்தாய்.  எனக்குப் பச்சை நிறம் ரொம்ப பிடிக்கும்.  கண்ணுக்கு ரொம்ப குளிர்ச்சியான நிறம்” என்றான்.  அறையைச் சுற்றி நோட்டம் விட்டான்.  “என்ன கிளம்பி விட்டாயா?” என்றாள்.  “இல்லை.  உன் வீட்டை முழுதாகப் பார்க்கலாம் என்று நினைத்தேன்.   எனக்கு வீட்டைக்  காட்டுவாயா?” என்றான்.

சுல்தானா அவனை உள்ளே அழைத்துச் சென்று வீட்டின் மூன்று அறைகளையும் சுற்றிக் காட்டினாள்.  பிறகு மெத்தை விரிக்கப்பட்ட பெரிய அறைக்கு இருவரும் வந்தார்கள்.

“என் பெயர் ஷங்கர்” என்றான்.

முதன்முறையாக சுல்தானா அவனை முழுமையாகப் பார்த்தாள்.  சுமாரான உயரத்தில் பார்க்க சுமாராக இருந்தான். அவன் கண்கள் மிகவும் தெளிவாகவும் பளபளவென்றும் இருந்தன.  லேசான நரை இருந்தது.   கச்சிதமான கால்சராயும் பெரிய கழுத்துப் பட்டை கொண்ட வெள்ளை சட்டையும் அணிந்திருந்தான்.

எளிய பருத்தி ஜமுக்காளம் விரிக்கப்பட்ட தரையில் உட்கார்ந்தான் சங்கர்.  ஏதோ இருவரின் பாத்திரங்கள் ஒன்றுக்கொன்று மாறியதைப் போல அவன் மிகவும் சகஜமாக அவளுக்கு உபச்சாரம் செய்வதுபோன்ற பாவனையில் இருந்தான்.  அவள் ஏதோ வாடிக்கையாளராகவும் அவன் சேவை செய்கிறவனாகவும் தோன்றுவது போல நடந்து கொண்டான்.  ஒருவழியாக, “அப்புறம் உனக்கு நான் என்ன செய்ய வேண்டும்?” என்று சுல்தானா கேட்டாள்.  அவன் தரையில் தன் உடலைக் கிடத்தினான்.    “என்ன சொல்லட்டும்?  உன் இஷ்டத்துக்கே விட்டு விடுகிறேன்.    சரி.  இருக்கட்டும்.  நீ கேட்டதால் சொல்கிறேன்.  நான் என்னவென்று நீ நினைத்தாயோ நான் அது கிடையாது.  உன்னிடம் எதையாவது எடுத்துக் கொண்டு என் பணத்தைக் கொடுத்து விட்டுப் போகிற ஆசாமி இல்லை நான்.  நான் ஒரு மருத்துவனைப் போன்றவன்.  எனக்கென்று ஒரு கட்டணம் இருக்கிறது.  நான் கேட்கும் போது அந்தக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்” என்றான்.

சுல்தானா  சத்தமாக சிரிக்கத் தொடங்கினாள்.  “உன்னுடைய தொழில் என்ன?”

“நீ செய்யும் அதே தொழில்தான்”

“என்ன?”

“நீ என்ன செய்கிறாய்?”

“நான்… நான்… நான்… ஒன்றும் செய்யவில்லை”

“நானும் ஒன்றும் செய்வது இல்லை”

“இதுக்கு என்ன அர்த்தம்?  நீ ஏதாவது செய்துதானே ஆகணும்?”

“நிச்சயமாக நீயும் அதேதான்”

“என்னை நானே பலகாரமாகப் படைத்துக் கொள்வேன்”

“நானும் அதேதான்”

“சரி.  நாம் ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் பலகாரம் படைக்கலாம்”

“எனக்கு விருப்பம்தான்.  ஆனால் அதற்கு நான் பணம் எதுவும் தரமாட்டேன்”

“உனக்கென்ன பைத்தியமா?  இது ஒன்னும் வீடு இல்லாதவர்களுக்கான தரும சத்திரம் கிடையாது”.

“நானும் ஒன்றும் இலவச சேவை செய்கிற தொண்டன் இல்லை”

“தொண்டன் என்றால்?”

“தொண்டன் என்றால் ஆந்தைக்குப் பிறந்தவன்”

“அப்போது நானும் ஒன்றும் ஆந்தைக்குப் பிறந்தவள் இல்லை”

“ஆனால் உன்கூட வீட்டில் இருக்கானே குதாபக்ஸ்…”

“ஏன்?”

“ஏனென்றால் அவன் ஒரு போலி பக்கீருடன் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறான்.  ஏதோ அவனால் அதிருஷ்டம் கிடைக்கும் என்று நம்பிக் கொண்டு… தன்னோட அதிருஷ்டமே துருப்பிடித்த பூட்டு போல ஆகிப்போனது என்ற அறிவில்லாமல் தன்னைக் கடவுளோட தூதன் என்று சொல்லிக் கொள்கிற ஒரு ஜென்மத்துடன் இவன் ஒட்டிக் கொண்டிருக்கிறான்” என்றான்.

“நீ இந்து என்பதால் உனக்கு இதுவெல்லாம் புரியாது.  எங்கள் இஸ்லாமிய பக்கிரிகளைப் பற்றி இப்படி கேலிதான் செய்யமுடியும்” என்றாள்.

“இது இந்துவா அல்லது முஸ்லீமா என்ற பிரச்சினையே இல்லை”

“நீ என்ன உளறுகிறாய் என்று கடவுளுக்குத்தான் தெரியும்.  அதை விடு. உனக்கு வேண்டும் என்றால்….”

“என்னுடைய நிபந்தனைப்படி தான்”

சுல்தானா விருட்டென்று எழுந்து நின்றாள்.  “அப்போது கிளம்பு”

ஷங்கர் எழுந்து நின்றான்.   பேண்டு பாக்கெட்டுகளில் இரு கைகளையும் உள்ளே விட்டவாறு, “உனக்கு எப்போது ஏதாவது தேவையென்றால் தாராளமாக  என்னிடம் சொல்லலாம்.  நான் உனக்கு மிகவும் பயன்படுவேன்”

ஷங்கர் வெளியேறியதும், முஹர்ரத்துக்கான கருப்பு ஆடைகளைப் பற்றி தற்காலிகமாக மறந்த சுல்தானா அவனைப் பற்றி யோசிக்கத் தொடங்கினாள்.  மனநிலை ஏதோ சற்று தேவலையாக இருந்தது.   தான்  அம்பாலாவில் இருந்தபோது இவன் அங்கு வந்திருந்தால் தூக்கி வெளியில் தூக்கி எறிந்திருப்பாள்.  ஆனால் இது அம்பாலா அல்ல.  டெல்லி வேறு மாதிரி இருந்தது.  மிகவும் தனிமையாக உணர்ந்தாள்.  ஆனால் ஷங்கரின் வேடிக்கையான பேச்சுக்கள் அவளைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்தியது போலவும் இருந்தது.

குதாபக்ஸ் மாலையில் வீடு திரும்பிய போது, அவன் நாள் முழுதும் எங்கே போயிருந்தான் என்று சுல்தானா கேட்டாள்.  மிகவும் களைப்படைந்து இருந்தான். “ பழைய டெல்லியில் செங்கோட்டை பகுதியில் இருந்தேன்.  பக்கிரி ஒருவர் சில நாட்களாக அங்கே தங்கி இருக்கிறார்.  நம்முடைய அதிருஷ்டத்தில் ஏதாவது மாற்றம் நடக்கட்டுமே என்று அவரை தினமும் சந்திக்கிறேன்” என்றான்.

“அவர் இதுவரை ஏதாவது சொன்னாரா?” என்று கேட்டாள்

“இல்லை.  இதுவரை எதுவும் சொல்லவில்லை.  என்னைப் பற்றி அவர் இதுவரை எதுவும் தீர்மானம் செய்யவில்லை.  ஆனால் சுல்தானா, நன்றாகக் கேட்டுக்கொள்.   அவர் மீதான என்னுடைய பக்தி என்றும் வீண் போகாது.  ஆண்டவன் அருளால் நம்முடைய தலைவிதி மாறப்போகிறது.

சுல்தானாவுக்கு மீண்டும் முஹர்ரம் நினைவில் வந்தது.  அவனிடம் கண்ணீர் மல்க துயரம் தோய்ந்த குரலில், “நான் முழுவதும் நீ வெளியில் இருக்கிறாய்.   கூண்டில் அடைபட்டது போல இங்கே துடித்துக் கொண்டிருக்கிறேன்.    என்னால் எங்கும் வெளியில் போகக்கூட முடியவில்லை.  முஹர்ரம் நெருங்கி விட்டது.  எனக்கு புதிய கருப்பு ஆடை தேவைப்படுகிறது என்று நீ உணரவில்லையா?  வீட்டில் ஒரு பைசா கூட இல்லை.  கடைசியாக இருந்த ஒரே வளையலையும் இழந்தாகி  விட்டது.  நமக்கு என்ன நடக்கப்போகிறது என்று சொல்.  உன்னைப் பொறுத்தவரை நாள் முழுக்க வீட்டில் இல்லாமல் பிச்சைக்காரர்களையும் போலியான பக்கிரிகளின் பின்னால் அலைகிறாய்.  நீ ஏன் மீண்டும் தெருவில் போட்டோ எடுக்கும் வேலையைத் தொடங்கக் கூடாது?  ஏதாவது ஒரு சிறிய வருமானமாவது கிடைக்குமே” என்றாள்.

குதாபக்ஸ் தரையில் கால் நீட்டிப் படுத்துக் கொண்டான்.  “அப்படி மீண்டும் தொடங்க வேண்டும் என்றால் சிறிய அளவில் முதல் தேவைப்படுகிறது.  அம்பாலாவை விட்டு வந்தது தவறான முடிவாக இருக்கலாம்.  ஆனால் அது ஆண்டவன் சித்தம்.  எல்லாம் நல்லதற்கே.  யாருக்குத் தெரியும்.  அவன் நம்மை சோதிக்கவும் செய்யலாம் இல்லையா?

சுல்தானா சட்டென்று குறுக்கிட்டு, “உன்னை கெஞ்சிக் கேட்கிறேன். தயவு செய்து முஹர்ரத்துக்கு சல்வார் தைக்க புதிய கருப்புத்துணி ஒன்று வாங்கித்தா.  என்னிடம் ஏற்கனவே வெள்ளை சாட்டின் மேலங்கி ஒன்று இருக்கிறது.  அதில் கருப்பு சாயம் ஏற்றிக் கொள்கிறேன். அம்பாலாவில் தீபாவளிக்கு நீ வாங்கிக் கொடுத்த வெள்ளை ஷிபான் துப்பட்டா இன்னும் என்னிடம் அப்படியே இருக்கிறது.  அதிலும் கருப்பு சாயம் ஏற்றிக் கொள்கிறேன்.  நீ எங்காவது திருடினாலும் எனக்கு அக்கறை இல்லை.  எனக்கு அந்த சல்வார் வேண்டும்.  புதிதாக வாங்கித் தருவேன் என்று என் தலை மீது சத்தியம் செய்.  இல்லை என்றால் நான் செத்துப் போய்விடுவேன்” என்றாள்.

குதாபக்ஸ் விருட்டென்று எழுந்து நின்றான்.  “தயவு செய்து நிறுத்து.  எங்கிருந்து பணம் கொண்டு வருவது?  என்னிடம் ஒரு தம்படி கூட கிடையாது”

என்ன வேண்டுமானாலும் செய்து கொள்.  எனக்கு நான்கரை முழத்தில் கருப்பு சாட்டீன் துணி வேண்டும்” என்று இறுதியாகச் சொன்னாள் சுல்தானா.

“இன்று இரவு மூன்று அல்லது நான்கு வாடிக்கையாளர்களை அனுப்பி வைக்குமாறு ஆண்டவனை வேண்டிக் கொள்ளலாம்.  அதைத்தான் நான் செய்ய முடியும்” என்று குதாபக்ஸ் யோசனை கூறினான்.

“அதற்காக நீ ஒன்றும் செய்யப் போவது இல்லையா?  முயற்சி செய்தால் தேவையான பணத்தை உன்னால் ஏற்பாடு செய்ய முடியும்.   யுத்தத்துக்கு முன்பு ஒரு முழம் துணி பன்னிரெண்டில் இருந்து பதினான்கு அணாவுக்கு விற்றது.  இப்போது ஒன்று அல்லது ஒன்றே கால் ரூபாய் இருக்கலாம்.  நான்கரை முழத்துக்கு  எத்தனை ஆகும் என்று நீயே கணக்குப் போட்டுக் கொள்”

“சரி.  நீ வற்புறுத்துவதால் நான் ஏதாவது யோசித்துப் பார்க்கிறேன். இப்போதைக்கு தெருக்கடைக்குப் போய் உனக்கு சாப்பிடுவதற்கு ஏதாவது வாங்கி வருகிறேன்” என்றான் குதாபக்ஸ்.  இருவரும் தெருவில் இருந்து வாங்கி வந்த சாப்பாட்டை முடித்து விட்டுப் படுக்கச் சென்றார்கள்.  காலையில் சுல்தானாவை தனியாக விட்டுவிட்டு குதாபக்ஸ் மீண்டும் அந்த பக்கீரைப் பார்க்கக் கிளம்பினான்.  அவள் சிறிது நேரம் தூங்கி எழுந்து பின்னர் நேரத்தைக் கடத்துவதற்காக அறை விட்டு அறை குறுக்கும் நெடுக்குமாய் நடந்தாள்.  மதியம் சாப்பிட்டு விட்டு அலமாரியில் இருந்து தன்னுடைய வெள்ளை ஷிபான் துப்பட்டாவையும் வெள்ளை சாட்டின் சட்டையையும் எடுத்துக்கொண்டு துணிகளுக்கு சாயம் ஏற்றும் லாண்டரி கடைக்குப் போனாள். பின்னர் திரும்பி வந்து அவளுக்கு மிகவும் பிரியமான சினிமாக்களின் கதை வசனம் பாடல்கள் அடங்கிய புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினாள்.  படித்துக் கொண்டே நன்கு தூங்கி விட்டாள் போல இருந்தது.  தூக்கம் விழித்த போது மாலை நான்கு மணியாகி இருந்தது.  எழுந்து குளித்த பிறகு துவைத்த ஆடைகளை அணிந்துகொண்டு பால்கனி பக்கம் வந்தாள்.  அங்கு ஒருமணி நேரம் நின்று கொண்டிருந்தாள்.  தெருவில் மாலை நேர வாழ்க்கைக்கான பரபரப்பு  துவங்கியது.  லேசாகக் குளிர் காற்று வீசியது.  திடீரென்று தன்னை நோக்கிப் புன்னகைத்து நின்று கொண்டிருந்த ஷங்கரை பார்த்தாள்.  அவனை மேலே வருமாறு   ஜாடை செய்தாள்.

ஷங்கர் வீட்டுக்குள் வந்தபோது அவனிடம் என்ன பேசுவது என்று புரியாமல் சற்று தர்மசங்கடமாக இருந்தது.  ஆனால் அவன் எதுவும் அலட்டிக் கொள்ளாமல் மிகவும் சாதாரணமாக ஏதோ தன்னுடைய சொந்த வீட்டில் இருப்பது போல சகஜமாக இருந்தான்.  எந்த சம்பிரதாயமும்  இன்றி தலைக்கு ஒரு தலையணை வைத்துக் கொண்டு தரையில் காலை நீட்டிப் படுத்தான். இதுவரை சுல்தானா அவனிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.  “இதோ பார்… நீ   நூறு முறை மேலே வரச்சொல்லிக் கூப்பிட்டு ஒவ்வொரு முறையும் என்னை வெளியே போகவும் சொல்லலாம்.  நான் அதை பொருட்படுத்த மாட்டேன்” என்றான்.

“யாரும் உன்னைப் போகச்சொல்லவில்லை” என்றாள் சுல்தானா.

“அப்போ நான் போட்ட நிபந்தனைதான்” என்று புன்னகைத்தபடியே சொன்னான் ஷங்கர்.

“என்ன நிபந்தனை?  உன்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டுமா?  என்று சிரித்தபடி கேட்டாள் சுல்தானா.

“கல்யாணமா?  நாம் இரண்டு பேரும் உயிர் உள்ளவரை அது போன்ற முட்டாள்தனத்தை செய்ய மாட்டோம்.  அது நம்மைப் போன்றவர்களுக்கானது இல்லை” என்றான்.

“இந்த குப்பை பேச்செல்லாம் விடு.  ஏதாவது பிரயோஜனமானதைச் சொல்” என்றாள் சுல்தானா.

“நான் என்ன சொல்ல வேண்டும் என்று நினைக்கிறாய்?  நீ ஒரு பெண்.  நேரத்தை சந்தோஷமாகக் கழிக்கிற மாதிரி ஏதாவது பேசு.  வீணாக வேறு ஏதாவது பேசுவதை விட வாழ்க்கையில் எத்தனையோ பிரயோஜனமான விஷயங்கள் இருக்கே” என்றான்.

“வெளிப்படையாகச் சொல்… உனக்கு என்ன வேண்டும்?”

எழுந்து உட்கார்ந்து, “மற்ற எல்லா ஆண்களுக்கும் வேண்டியது”

“அப்போது அவர்களுக்கும் உனக்கும் என்ன வித்தியாசம்?”

“உனக்கும் எனக்கும் நடுவில் எந்த வித்தியாசமும் இல்லை.  ஆனால் என்னுடையதும் அவர்களுடையதும் முற்றிலும் வேறுபட்ட உலகங்கள்.  எல்லாவற்றையும் கேள்விகளால் சுருக்க முடியாது.  தானாகப் புரியும் விஷயங்கள் பல இருக்கின்றன”

சற்று தயங்கி நிறுத்தி, “எனக்குப் புரிந்தது” என்றாள் சுல்தானா.

“அப்புறம் என்ன?”

“நீ ஜெயித்தாய்.  ஆனால் இப்படி எல்லாம் கூட நடக்குமா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது”

“இங்கே தவறு செய்கிறாய்.   அக்கம்பக்கத்தில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இருக்கலாம்.  அத்தனை குடும்பங்களிலும் நீ செய்வதுபோல யோசனை எதுவும் இல்லாமல் ஒரு பெண்ணால்  தன் உடம்பை இத்தனை அவமானங்களுக்கு உட்படுத்த முடியுமா என்பதை அவர்கள் நம்பமாட்டார்கள்.  இருந்தாலும் இந்த நகரத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் உன்னுடைய தொழிலில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.  உன் பெயர் சுல்தானா தானே?”

“ஆமாம்.  சுல்தானா தான்”

“ஷங்கர் உரக்கச் சிரித்தான்.  என் பெயர் ஷங்கர்.  பெயர்கள் எல்லாம் அபத்தமானவை.    வா,   அடுத்த அறைக்குப் போவோம்”.

திரும்பி வந்தபோது அவர்கள் இருவரும் ஒருவரைப் பார்த்து ஒருவர் சிரித்துக் கொண்டிருந்தனர்.

ஷங்கர் கிளம்பிய போது, “எனக்காக ஒரு காரியம் செய்ய முடியுமா?”

“என்ன என்று முதலில் சொல்”

சுல்தானா தயங்கியவாறு, நாம் இப்போது செய்த காரியத்துக்கு உன்னிடம் இருந்து வசூல் செய்கிறேன் என்று நீ நினைக்கலாம்” என்றாள்.

“பரவாயில்லை.  சொல்” என்று அவளை ஊக்கப்படுத்தினான்.

சுல்தானா தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, முஹர்ரம் நெருங்கி வருகிறது.   ஒரு புதிய கருப்பு சல்வார் தைத்துக் கொள்ள என்னிடம் பணம் இல்லை.  என்ன சொல்ல முடியும்?  என்னிடம் இருந்த துப்பட்டாவும் சட்டையும் கருப்பு சாயம் ஏற்றுவதற்காக லாண்டரியில் இருக்கிறது”

“புதிய கருப்பு சல்வார் தைத்துக்கொள்ள நான் ஏதாவது பணம் கொடுக்கட்டுமா?

“நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை.  எனக்கு நீ ஒரு புதிய கருப்பு ஸல்வார் வாங்கித் தரலாம்.”

ஷங்கர் சிரித்துக் கொண்டே, “என்னிடம் பணம் இருப்பது மிகவும் அபூர்வம்.  முஹர்ரம் மாதத்தின் முதல் நாள் உன்னிடம் நிச்சயம் ஒரு புதிய கருப்பு ஸல்வார் இருக்கும் என்று சத்தியம் செய்கிறேன்.  சந்தோஷமாக இரு” என்றவன் அவள் அணிந்த வெள்ளி காதணியைப் பார்த்து, “அந்த காதணிகளை எனக்குத் தரமுடியுமா?  என்று கேட்டான்.

“அதை வைத்து என்ன செய்யப்போகிறாய்?  சாதாரண வெள்ளியால் செய்தது.  ஐந்து ரூபாய்  கூடப் பெறாது” என்றாள்.

“உன்னிடம் காதணி தான் கேட்டேன். அதன் விலையைக் கேட்கவில்லை”.

“அப்படி என்றால் இதோ எடுத்துக் கொள்” என்று அவற்றைக் கழற்றி அவனிடம் கொடுத்தாள் சுல்தானா.  அவன் வெளியேறிய பிறகு அந்த காதணிகளைக் கழற்றிக் கொடுத்தது பற்றி சற்று கவலைப்பட்டாள்.  ஆனால் அதற்குள் நேரம் கடந்து விட்டது.

ஷங்கர் நிச்சயம் சொன்ன சொல்லைக் காப்பாற்ற மாட்டான் என்று சுல்தானா மிகவும் உறுதியாக இருந்தாள்.  முஹர்ரம் மாதத்தின் முதல் நாளில்  காலையில் வீட்டுக் கதவு தட்டப்பட்டது.  அது ஷங்கர்.  எதையோ செய்தித்தாளில் சுருட்டி எடுத்து வந்திருந்தான்.  “கருப்பு சாட்டீன் ஸல்வார்.  கொஞ்சம் நீளமாக இருக்கும். வைத்துக் கொள்.   அப்புறம் பார்க்கலாம்”

அவன் சற்று அலங்கோலமாகக் காணப்பட்டான். அப்போதுதான் படுக்கையில் இருந்து எழுந்து வந்ததுபோல இருந்தான்.  இருவரும் எதுவும் அதிகம் பேசிக் கொள்ளவில்லை.

அவன் போனதும் அந்த பொட்டலத்தைப் பிரித்துப் பார்த்தாள்.  அது ஒரு அழகான கருப்பு பட்டுத் துணியால் தைக்கப்பட்ட ஸல்வார்.  அவளுடைய தோழி முக்தார் ஒருமுறை அவளிடம் காண்பித்த அதே கருப்பு ஸல்வார் போல இருந்தது.  காதணிகள் பற்றி அவள் மறந்து போனாள்.

பிற்பகலில், லாண்டரியில் கருப்பு சாயம் ஏற்றுவதற்குத் தந்திருந்த துப்பட்டாவையும் சட்டையையும் வாங்க லாண்டரிக்கு கிளம்பினாள்.  வீட்டுக்குத் திரும்பி வந்து     அந்த புதிய கருப்பு ஸல்வார் மற்றும் கட்டை துப்பட்டா ஆகியவற்றை அணிந்து இருந்தாள்.  கதவு தட்டும் சத்தம் கேட்டது.  வாசலில் முக்தார் நின்றிருந்தாள்.  சுல்தானாவை தலையிலிருந்து கால்வரை கவனமாக உற்று நோக்கிய முக்தார், துப்பட்டாவும் சட்டையும் சாயம் ஏற்றியதைப் போல இருக்கிறது.  ஆனால் ஸல்வார் புதிதாக இருக்கிறது.  என்ன புதிதாகத் தைத்தாயா? என்று கேட்டாள்.

“இன்றுதான்.  டைலர் முதல் காரியமாகக் காலையில் இதை எடுத்து வந்தான்” என்று சுல்தானா பொய் சொன்னாள்.  சடாரென்று அவள் முக்தாரின் காதுகளைப் பார்த்தாள். “நீ எப்போது இந்த காதணிகளை வாங்கினாய்?

“இன்று காலையில்தான்”

நீண்ட நேரம் இருவரும் எதுவும் பேசவில்லை.

——————————————————————————————————————————

ஸதத் ஹஸ்ஸன் மண்ட்டோ

https://bit.ly/3vJcIpJ


பென்னேசன்

[email protected]

1 COMMENT

  1. அற்புதமான மொழிபெயர்ப்பு… பிரமாதமான கதை.. நன்றி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.