போர்வைக்குள் புரண்டு கிடக்கும் குழந்தை உறக்கம் கலைந்து எட்டிப்பார்ப்பது போல, கருமேகங்களுக்குள் இருந்து சூரியன் மெல்லத் தலைகாட்டியது. நான்கு நாட்களுக்குப் பிறகு வெயில் சுளீரென அடித்தது. பஞ்சு பறப்பது போல வெண்மேகக் கூட்டங்கள் சென்று கொண்டிருந்தன. காலையில் மேகம் தெளித்த தூறலை, மரங்களில் இருந்து காற்று சிதறடித்தது. நீல நிறத் தார்ப்பாய் கூரையில் விழுந்து சொட்டு சொட்டாக வடிந்து தெறித்தது. ஆங்காங்கே தண்ணீர், திட்டு திட்டாகத் தேங்கியிருந்தது.
அடர் வனத்திற்குள் குலுக்கிப் போட்ட சோழிகளைப் போல அங்கொன்றும், இங்கொன்றுமாக மலைச்சரிவில் ஆறு குடில்கள் இருந்தன. தடுப்புகள் ஈத்தை இலைகளால் பின்னப்பட்டிருந்தன. நீலத் தார்ப்பாயினால் கூரை வேயப்பட்டிருந்தது. மணி, குடிலுக்குள் இருந்து எட்டிப் பார்த்தான். காட்டு மரம் போன்ற கட்டான உடல். சுருண்ட தலைமுடி, தடித்த உதடுகள். கூர்மையான மேல் பற்கள் உதட்டிற்கு வெளியே நீண்டிருந்தன. குடியில் ஆங்காங்கே ஆட்கள் நடமாடிக் கொண்டிருந்தனர். பச்சை முள்ளும், அடிப்பாகத்தில் மஞ்சள் நிற ஓடும் கொண்ட குரங்கு பலாக் காயில் தலை மூடியினை சீவியபடி, மணியின் மனைவி முருகாத்தா நின்றிருந்தாள். பத்து வருடங்களுக்கு முன் பரிசத்தொகையினைக் கொடுத்து கல்யாணம் கட்டிய போது இருந்த வனப்பு குறையாமல் இருந்தாள்.
முப்பத்தி ஐந்து வருடமாக இருந்த காடர் குடி செட்டில்மெண்டில் இருந்து கையில் கிடைத்ததை எடுத்துக்கொண்டு, குழந்தைகளை முதுகில் தூக்கிக்கொண்டு இங்கு வந்து ஒரு வாரம் ஆகியிருந்தது. இருபத்து மூன்று குடும்பங்களைச் சேர்ந்த எழுபத்து நான்கு பேர் குடியில் இருந்தனர். இடம் மாறிக் குடியிருக்க ரேஞ்சரிடம் எழுதிக் கொடுத்து வந்து ஐந்து நாட்களாகியும், எந்த பதிலுமில்லை. யாரும் எட்டிப் பார்க்கவும் இல்லை. ‘மழை ஓய்ந்திருப்பதால் இன்று எப்படியும் வந்துவிடுவார்கள், என்ன சொல்வார்களோ?’ என்ற பயம் மணியின் மனதில் எழுந்தது.
மணியின் கால்கள் நடந்து நடந்து காட்டை அறிந்து வைத்திருத்தன. அது ஓரிடத்தில் நிற்காமல் நடந்து கொண்டேயிருக்கும். எங்கு என்ன இருக்கும், என்ன கிடைக்கும் என்பதை அக்கால்கள் அறிந்து வைத்திருத்தன. மணி, அக்காட்டில் சுற்றி அலையும் ஒன்பதாவது தலைமுறை எனச் சொல்லக் கேட்டிருக்கிறான். மலைகளில் மழைக்காடுகளை அழித்து பயிரிடப்பட்ட தேயிலை, காப்பி தோட்டங்களினால் ஆண்டுக்கு ஆண்டு கால்கள் உலாவும் தூரம் குறைந்துவந்தது.
ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக ஓரிடத்தில் தங்கும் பழக்கம் இல்லாதவர்கள். மணியின் அப்பா காலத்தில் காடர் குடி செட்டில்மெண்டில் குடியேறியினர். ஒரே இடத்தில் தங்கியிருந்தால் வசதிகள் செய்து தரப்படுமென்ற சர்க்கார் அளித்த நம்பிக்கைகள், அவர்கள் கொடுத்த தகரச்சீட்டு போலவே ஈத்துப்போனது. குடியைச் சுற்றி குறுமிளகு, ஏலக்காய், மஞ்சள் எனப் பயிரிட்டு இருந்தனர். மணியும் கொஞ்சம் போட்டிருந்தான். அதற்கு பட்டா கேட்டு பத்து முறை மனு கொடுத்தும், ஒரு பலனும் இல்லை. இருப்பினும் அதில் விளையும் பொருட்களும், காட்டுத் தேனும் வருமானம் தந்தன.
அன்றிரவு மணி வீட்டிற்குள் உறக்கம் பிடிக்காமல் புரண்டு புரண்டு படுத்தான். மனைவியும் குழந்தைகளும் தூங்கியிருந்தனர். நான்கைந்து நாட்களாக ஓயாது மழை. திடீரென பேய் மழை கொட்டித் தீர்த்தது. மழையின் சத்தமும், காற்றின் வேகமும் மணியின் உறக்கத்தைப் பறித்தன. ஏதோ சத்தம் கேட்க எழுந்தான். மழையில் சுவர் சரிந்து விழுந்தது. தூரப்படுத்திருந்ததால் எதுவும் நேரவில்லை. மனைவியையும் குழந்தையையும் எழுப்பி வெளியேறினான்.
உறக்கம் தொலைத்து மழையில் நனைந்து கொண்டிருந்தது, குடி. அரிவாளுடன் மழையில் ஓடிய மணி, ஈத்தை இலைகளை வெட்டி எடுத்து வந்தான். ஐந்தாறு இலைகளை சேர்த்து குடை போல பிடித்துக் கொண்டனர். விடிய, விடிய மழை கொட்டித் தீர்த்தது. வீடுகளின் மீது மண் சரிந்து விழுந்தது. பாறைகள் உருண்டு விழுந்தன. பூமி வெடித்து மண் விரிசல் கண்டிருந்தது. மரங்கள் விழுந்து, வீடுகள் சேதமடைந்தன.
“இனி இங்கிருக்க முடியாது. பூமிக்கு ஆபத்து வந்திருக்கு. நாமதா நம்மள பாதுகாக்கணும். வூடுக எப்ப வேணா புதைஞ்சு போயிடலாம். நைட்டுல எதாச்சும் ஆச்சுனா என்ன பண்றது?” என்ற மூப்பன், குடியை இடமாற்றத் தீர்மானித்தான். இரண்டு கிலோ மீட்டர் மேல் இருந்த இவ்விடம், மண் சரிந்தாலும் பாதிப்பில்லாத வகையில் பாதுகாப்பாக இருந்தது.
“வா போலாம்” என மணி, ரவியை அழைத்தான். மணியின் கால்கள் நடக்க ஆரம்பித்தன. ஒரு கையில் நீண்ட ஈச்சை மரமும், மறு கையில் கூர்மையான அரிவாளும் இருந்தன. முதுகில் மகள் சுந்தரியும், வெள்ளை வேஷ்டிக்குள் தேவையான பொருட்களும் இருந்தன. மீண்டும் மழை வருவதற்குள் விறகும், கிழங்கும் சேகரித்து வரவேண்டுமெனக் கிளம்பினர். அவர்களோடு சேர்த்து நான்கைந்து பேர் அரிவாள், ஈச்சை மரம் சகிதம் கிளம்பினர். எப்போது காட்டிற்குள் கிளம்பினாலும் ‘மூங்கிலின் சக்காலத்தி’ ஈத்தை சிறியதாகவோ, பெரியதாகவோ மூன்றாவது கையாக இருக்கும். ஈர மண் பாதையெங்கும் இலைகள் நிரம்பியிருந்தன. அதனை மிதித்தபடி கால்கள் வரிசையாகச் சென்றன.
பாதை நீண்டு மேட்டுப்பகுதியில் ஏறி, பள்ளத்தில் இறங்கி வளைந்து மீண்டும் மேடேறித் தொடர்ந்தது. மேட்டினை அடையும்போது, திடீரென யானையின் பிளிறல் கேட்டது. இறங்கி ஏறும் மேட்டில் எஸ்டேட்டிற்குள் இருந்து, ஒற்றைக் காட்டானை நேரெதிராக வந்துகொண்டிருந்தது. சட்டென யானையைப் பார்த்த மணியும், மற்றவர்களும் ஒரே குரலில்,
“ஆனோ… மேரோ…
அங்க போ, அங்கோ…
போய்க்கோ, போ…
ஆனெ…
நாங்களும் வாரதீயப்பரோ
நீயும் வாரதீயப்பரோ
போ… போ… போய்க்கோ…
போ… போ…
ஆதிபரமசிவன் ஆணா
ஆக்கினி தேவேந்திரன் ஆணா
ஏக நாராயண மூர்த்தி ஆணா
படைச்சவர் பழனி மலை ஆண்டவர் ஆணா
சுருளி மலை சுப்பிரமணி ஆணா
போ…
தெக்கத்தி தேசம்
வடக்க ஒரு தேசம்
கிழக்க ஒரு தேசம்
மேற்க தேசம் பாத்து போ…”
என உரக்கக் கத்தினர். சற்று நேரம் நின்றிருந்த யானை மெல்ல கிழக்கு நோக்கி நகர்ந்தது. கால்கள் நடையைத் தொடர்ந்தன.
ஓடையில் தண்ணீர் சலசலத்து ஓடியது. ஓடை நீரில் மணி முகத்தைக் கழுவினான். ஈத்தை மரத்தினை அரிவாளால் வெட்டி ஒரு பகுதியை எடுத்தான். அதன் மேல் பகுதி திறந்தும், கீழ் பகுதி மூடியும் இருந்தது. அதில் ஓடைத் தண்ணீரைப் பிடித்து அலசி ஊற்றினான். மீண்டும் ஓடையில் வைத்து தண்ணீரைப் பிடித்துவந்து மகளுக்கு கொடுத்தான். அவள் குடித்து முடித்ததும், மணி பருகினான்.
“காப்பி குடிக்கிறீயா?” என மகளிடம் மணி கேட்டான்.
“ம்ம்ம்… குடிக்கலாம்” மழலை மொழியில் சொன்னாள்.
ஓடைக்கரையில் தீ மூட்டினர். பச்சை ஈத்தை மரத்திற்குள் காப்பி தூளினைப் போட்டு, தண்ணீர் ஊற்றி தீயினில் செங்குத்தாக வைத்தான் மணி. ஈத்தையின் அடி நேரமெடுத்து மெல்ல கருக, காப்பி கொதித்து மேல் வாயில் புகை வந்தது. தண்ணீரை ஊற்றி வெளியே எடுத்தான். காப்பித் தூள் இருந்த ஈத்தையில் வட்டக்கன்னி இலையினை மடித்து வைத்தான். மற்றொரு ஈத்தையில் காப்பியை வடித்தான். தூள் இலைக்குள் தேங்கி நிற்க, காப்பி நீர் மற்றொரு ஈத்தைக்குச் சென்றது. சர்க்கரையைச் சேர்த்து காப்பியைப் பருகினர்.
“நாம சொல்லுறத ஆனெகூட புரிஞ்சுக்குது, ஆனா இந்த பாரெஸ்ட்காரங்க புரிஞ்சுக்க மாட்டீங்கராங்க” காப்பியைக் குடித்தபடி மணி சொன்னான்.
“ம்க்கூம்… அதுகளுக்கு நம்மள தெரியும். நமக்கு அதுகள தெரியும். இவனுகளுக்கு என்ன தெரியும்? அதயித பண்ணதா, அங்கயிங்க போகாதனு மிரட்ட தா தெரியும்” என்றான் ரவி.
“ஆனெ இருக்கு, புலி இருக்குனு நம்மல காட்ட விட்டு தொரத்த பாக்குற இவீங்க கண்ணுக்கு, எஸ்டேட்டு, ரிசார்டு எல்லா தெரியாது. நம்ம கிட்ட தா இந்த வீராப்பு எல்லா.”
“அவனுகள சொல்லி என்ன பண்ணுறது? சர்க்காரு சொல்லுறத தானே அவீங்க பண்ணுவாங்க” எனப் பேசியபடி நடந்தனர்.
விறகுகளையும் கிழங்குகளையும் சேகரித்தனர். ஓடையில் மூங்கில் குச்சிகளால் பின்னப்பட்ட கூடையில் மீன்களைப் பிடித்தனர். ஈத்தை தண்டைப் பிளந்து, கழுவிய கிழங்கை வைத்து, தீயில் வேக வைத்துச் சாப்பிட்டனர். தலைச்சுமையை எடுத்துக் கொண்டு கிளம்பினர். குடியை நெருங்கும்போது, இரண்டு ஜீப்கள் வனத்தடத்தில் சீறிச்செல்வது தெரிந்தது. ஆட்களின் கால்கள் வேகவேகமாக குடியிருப்பை நோக்கி ஓடின.
ரேஞ்சர் ஜீப்பில் இருந்து இறங்கிவந்தான். குடியே பயத்தில் உறைந்திருந்தது. மூப்பன் கூட்டத்திற்கு முன்பாக நின்றிருந்தான். அவனுக்குப் பக்கத்தில் மணி வேக வேகமாக வந்து நின்றதில், மூச்சிரைத்தது. ரேஞ்சரிடம் இருந்து வந்த மது வாடை மணியின் மூக்கை மூட வைத்தது. ரேஞ்சர் பார்வை மணியின் பக்கம் திரும்ப, சட்டென மூக்கில் இருந்து கைகளை எடுத்துக் கொண்டான்.
“என்ன சொல்லாம கொள்ளாம குடிசை போட்டு வச்சிருக்கீங்க? யாரு பர்மிசன் கொடுத்தா?” அதட்டியபடி ரேஞ்சர் கேட்டான்.
“உங்களுக்கு தெரியாதது இல்ல, செட்டில்மெண்ட்டுல வூடு சரிஞ்சு கெடக்கு, பூமி வெடிச்சு இருக்கு, அங்க இருந்தா ஆபத்துனு தா இங்க வந்திட்டோம். நீங்க மனசு வைச்சா நாங்க இங்கன இருந்துப்போம்” மூப்பன் தயங்கித் தயங்கி சொன்னான்.
“அது தெரியுது மூப்பா, பட்டா இல்லாத எடத்துல இருக்க எப்புடி பர்மிசன் கொடுக்குறது?… இந்த எடத்துக்கு பட்டா எதும் வைச்சிருக்கீங்களா?”
“அதெல்லா ஏதுங்க சாமீ? எங்க பாட்டன், பூட்டன் காலத்துல இருந்து இந்த காட்டுல தா கெடக்கோம். காடர்குடி செட்டில்மெண்ட்டுல இருந்த நேரத்துக்கு ஏழெட்டு எடம் மாறியிருப்போம். அஞ்சு வருசத்துக்கு மேலெ ஒரே எடத்துல இருந்தது இல்ல. அத பண்ணி தரோம், இத பண்ணி தரோம் ஒரே எடத்துல இருக்கனு சொல்லி, என்ன பண்ணுனீங்க? கடசீக்கு இங்கயாவது இருக்க விடுங்கய்யா.”
“இது ஆனெ, புலி இருக்குற காடு, ஏதாச்சும் ஆச்சுனா யாரு பதில் சொல்லுறது? அதுவும் இல்லாம இது புலிகள் காப்பகம். உங்க இஷ்டத்துக்கு எல்லா பண்ண முடியாது”
“நாங்க என்ன பண்ணுறது சாமீ?”
“உங்க நெலம புரியுது. ஆனா, நாங்க நெனச்சாலும் எதுவும் பண்ணித் தர முடியாது. நீங்க அதைப் புரிஞ்சுக்கணும்”
“சாமீ”
“மூப்பா… இந்த காட்டுல இருக்குற வரீக்கும் எந்த வசதியும் பண்ணித் தர முடியாது. உங்க புள்ளைக எல்லா படிச்சு மேல வர வேண்டாமா? நீங்க எல்லா நிம்மதியா வாழ வேண்டமா? அதுக்கு தா சென்ட்ரல் கவர்மெண்ட் கோல்டன் ஹேண்ட்ஷேக்னு ஒரு திட்டம் கொண்டு வந்திருக்கு. காட்டுல இருந்து வெளிய நீங்க வந்தா பத்து இலட்ச ரூபா பணமும், வூடும் கெடைக்கும். என்ன நம்பி வாங்க, நா ரெடி பண்ணித்தரேன். என்ன சொல்லுறீங்க?” ரேஞ்சர் ஆசை வார்த்தைகளை கொட்டினான்.
“இல்ல சாமீ…” என மூப்பன் இழுத்தான்.
“காட்டுக்குள்ள இருந்தா தா நாங்க நல்லபடியா ஜீவிக்க முடியும். அதுதா எங்காளுகளுக்கு நிம்மதி. அதவிட்டிட்டு எங்க போறது?” கூட்டத்தில் இருந்து முருகாத்தா கேட்டாள்.
“பிரிட்டிஸ்காரங்க, பாரெஸ்ட்காரங்க வரதுக்கு முன்னால இருந்து நாங்க காட்டுல இருக்கோம். பாரெஸ்ட்காரங்க நீங்க வந்து வேட்டையாடக் கூடாதுனீங்க, தீப்போட்டு வெவசாயம் பண்ணக் கூடாதுனீங்க, அப்புறம் காட்டுல எடம் மாறாம ஒரே எடத்துல இருக்கோனும்னு சொன்னீங்க, சரினோம்… இப்போ காட்ட விட்டு போனு சொல்லுறீங்க, இது நியாயமா?” என்றான் மணி.
“இது புலிகள் காப்பகம்னாலும் வன உரிமைச் சட்டப்படி பட்டா கொடுங்கனு பல தடவ மனு கொடுத்தும், ஒராளுக்குக் கூட பட்டா கொடுக்கல. ஏதோ எதுவுமே தெரியாத மாதிரி பேசிறீங்க?” ரவி கோபமாகக் கேட்டான்.
“வன உரிம சட்டமாவது, மசுரு சட்டமாது? பட்டா இல்லாத பரதேசிகள காட்ட விட்டு வெரட்ட சொல்லி சுப்ரீம் கோர்ட் ஆர்டர் போட்டிருக்கு தெரியுமா? சென்ட்ரல் கவர்மெண்டு சொன்னா நாளீக்கே நீங்க வெளிய போயாகணும். அப்படி விரட்டுனா ஒரு பைசாகூட கெடைக்காது. ஒன்னு மொதல்ல இருந்த எடத்துக்கே ஒழுங்கா போங்க, இல்லனா நாங்க சொல்லுறத கேளுங்க” ரேஞ்சர் பேச்சில் கோபமிருந்தது.
“டைகர் ரிசர்வ்னு அறிவிச்சப்போ பணமும், வூடும், வசதியும் தரனு சொல்லித்தா பக்கத்துல ஒரு செட்டில்மெண்ட்ட காலி பண்ணுனீங்க. நீங்களும் கடைசிவர எதும் பண்ணித் தரல. அவீங்கனாலும் வெளிய வாழ முடியலானு காட்டுக்கு திரும்ப வந்தவீங்களா, அடிச்சு வெரட்டுனீங்க. அது எங்களுக்கும் நடக்காதுங்கறது என்ன நிச்சயம்?” மணி கேட்டான்.
நீண்ட யோசனைக்குப் பிறகு, “அப்போ, ஒண்ணு பண்ணலாம். பழைய எடம் ரெடி பண்ணுற வரீக்கும் எஸ்டேட்டுல வூடு வாங்கி தாரோம். அங்க ஒரு பத்து பதினாஞ்சு நாளு இருங்க” என்றான் ரேஞ்சர்.
“எஸ்டேட் எல்லா எங்களுக்கு சரிப்பட்டு வராதுங்க. எங்களுக்கு வேணும்கிறது காட்டுல தா கெடைக்கும். எஸ்டேட்னா எதுவும் கெடைக்காது. அங்க அடைஞ்சு இருக்க முடியாது. அதுவுமில்லமா எஸ்டேட்ங்கிறது காட்டோட வாசம் இல்லாத சுடுகாடு” என்றான் மூப்பன்.
“இதே மாரி தா கல்லார் குடி செட்டில்மெண்ட் காரங்களா எஸ்டேட் வூட்டுக்கு அனுப்புனீங்க. வருசமாயும் இன்னும் ஒன்னும் நடக்கல” என்றான், ரவி.
“இப்படி பேசுனா என்ன பண்ணுறது, முடிவா என்ன தா சொல்லுறீங்க?”
“காடும், காடரும் ஒன்னு. காடு இல்லனா காடர் இல்ல. நாட்டு ஆளு காட்டுல இருக்க மாட்டான். காட்டாளுக்கு காடு தா சொந்தம். இத யாராலும் மாத்த முடியாது” என்றாள் முருகாத்தா. ஆளாளுக்கு பேச வாக்குவாதமானது.
அனைவரையும் அமைதிபடுத்திய மூப்பன், “தண்ணீல கெடக்குற மீன தூக்கி தரையில போட்டா கெடக்காதுலா, அதுமாரி தா நாங்களும். எங்கள தரையில தூக்கி போட்டுறாதீங்கய்யா” கைகளை கூப்பியபடி வேண்டினான்.
“என்ன பண்ணுறதுனு தெரியும். எப்புடி இருக்கீங்கனு பாக்குறேன்” என அசட்டு சிரிப்புடன் ரேஞ்சர் ஜீப்பினை நோக்கி சென்றான்.
“என்ன பண்ணுவீங்களோ தெரியாது, எஸ்டேட் வூட்டுக்கு போக வைக்குறது உங்க பொறுப்பு. விடியறக்குள்ள இங்க ஒத்தக் குடிசையும் இருக்கப் புடாது” என தன் சகாக்களிடம் ரேஞ்சர் கோபமாக சொல்லியபடி கிளம்பினான். வனத்தடத்தில் புகையினை கிளப்பியபடி ஜீப் சீறியது.
சிறு தூறலாகத் துவங்கி, மழை கொட்டியது. பெருங்காற்று வீசி ஓய்ந்திருந்தது. போர்த்தியிருந்த இருளில் மழையில் நனைந்தபடி, மணியின் கால்கள் தடுமாறித், தடுமாறி நடந்தன. அவனுக்கு முன்பும் பின்பும் கால்கள் நடந்தன. மூப்பன் முன்னால் சென்றான். ஒவ்வொருவர் முதுகிலும் குழந்தைகளும், மூட்டை முடிச்சுகளும் இருந்தன. காயம்பட்ட மணியின் முகம் கூட்டத்தில் இருந்து, குடியைத் திரும்பிப் பார்த்தது. பிய்த்து எறியப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்ட குடியின் சாம்பல் மழை நீரில் கரைந்தோடியது. “காடு தா எங்க பூமி, உசுரு. எங்க மூச்சு அடங்குனா இந்த காட்டுக்குள்ள தா அடங்கணும்” என கால்கள் காடர் குடியை நோக்கி நடந்தன.
பிரசாந்த் வே – காடர் சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர்.
இக்கதை எதிர் வெளியீடு வெளியிட்டிருக்கும் காடர் தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது. சிறப்பிதழில் வெளியிட அனுமதியளித்த எதிர் வெளியீடு, கதையாசிரியர் வே. பிரசாந்த் ஆகியோருக்கு நன்றி.
பிரசாந்த் வே சிறுகதை ‘காடர்குடி’ காடுகளில் வாழும் மக்களின் வாழ்வியல் மற்றும் உணர்வுகளை வெளிப்படுத்தும் யதார்த்தமான கதை.