மகனைச் சந்தித்தோ விடுமுறை பயணம் மேற்கொண்டோ ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. தடுப்பூசிச் சடங்குகளை முழுதாக செய்துமுடித்தது அதற்கெல்லாம் முற்றுப் புள்ளி வைப்பதற்கான ஒரு மங்கலத் தருணத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. பாஸ்டனில் எங்களுடன் சில வாரங்கள் தங்குவதற்காக மகன் திட்டமிட்டிருந்தான். அவனுடன் சில நாட்கள் கழிக்க வேண்டும் என்று டீசீயில் (Washington DC) வசிக்கும் என் தங்கையும் பிரியப்பட்டாள். கேப் காடின் கடற்கரையில் சிறு குடும்ப மீற்கூடல் ஒன்றை ஏற்பாடு செய்ய இதுவே உற்ற சமயம் என்பதில் நாங்கள் நால்வருமே உடன்பட்டோம். பயணத்திற்கான ஏற்பாடுகளை மனைவி மகனிடம் ஒப்படைத்துவிட்டு அடுத்த கட்டுரைக்கான ஆயத்தங்களில் மும்முரமாக இருக்கும் பாவனையில் லயித்திருந்தேன். பிரபலமான அந்தத் திமிங்கிலப் புத்தகத்தை அப்போதுதான் மீண்டும் படித்து முடித்திருந்தேன்; இம்முறை வாக்கியங்களின் செழித்த மோனைச் சந்தங்களை ரசித்தபடி. சந்தேகமின்றி அது சிறந்த நாவல்தான்; ஒருகால் அமெரிக்க நாவல்களில் தலைசிறந்ததாகவும் இருக்கலாம்; கண்டிப்பாக முதல் ஐந்து தலைசிறந்த அமெரிக்க நாவல்கள் பட்டியலில் அதற்கு இடமுண்டு; சர்வ நிச்சயமாக நல்ல கனமானதொரு கட்டுரையைப் பெறும் அருகதையும் அதற்குண்டு. அப்படிப்பட்ட கட்டுரையொன்றை எழுதலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கையில்தான் திமிங்கிலப் பரவசம் அளிக்கவல்ல அப்புத்தகத்தைப் பற்றி திமிங்கிலக் கனத்துடன் ஒரு நீள்கட்டுரை ஒன்றை வேறு ஒருவர் எழுதிக் கொண்டிருக்கிறார் என்று செய்தி வந்தது. அமெரிக்க இலக்கியத்தை அதிகம் சிலாகிக்காத ஒரு சூழலில் ஒரே சிறப்பிதழில் ஒரே புத்தகத்தைப் பற்றி இரண்டு நீள் கட்டுரைகள் தேவையல்ல என்று முடிவு செய்து ஹாதார்னைப் பற்றி எழுதும் நோக்குடன் அவரது ஸ்கார்லெட் லெட்டரை மீள்வாசிப்பு செய்யத் தொடங்கினேன்.
இது இவ்வாறு இருக்க, கடைசி நிமிட ஆயத்தங்களுக்குப் பேர்போன எங்கள் குடும்பத்தின் பெருமைக்குப் பங்கம் விளைவிக்காத வகையில், இடம், ஜாகை, விலை இத்யாதி குறித்த பல செல்லமான அம்மா-பிள்ளை கலந்துரையாடல்களுக்குப் பிறகு இருவரும் பிராவின்ஸ்டவுனில் ஒரு ஏர்பீஎன்பீயைத் (Airbnb) தேர்வு செய்தார்கள்.
கேப் டிராகன் தலையைத் திருப்பி விரிகுடாவிற்கு அப்பால் பரந்தலையும் வாலை நோக்கும் கணமே கேப்காடின் வடக்கு முனையில் அமைந்திருக்கும் பிராவின்ஸ்டவுன். “மாசசூஸட்ஸின் மடிந்துயரும் மொட்டைக்கரம்” என்று தொரோ(Thoreau) கேப் காடை அடையாளப்படுத்தினார். 1849 அக்டோபரில் தொடங்கி ஜூலை 1855 வரையில் அதற்கு மூன்று முறை பயணித்து அப்பயணங்கள் குறித்து பத்து கட்டுரைகளை (அவர் மறைவிற்குப் பின் அக்கட்டுரைகள் Cape Cod என்ற புத்தகமாகத் தொடுக்கப்பட்டன) எழுதிய தொரோவுடன் என் கட்டுரையைத் தொடங்குவது முரண்பட்ட வகையில் சரியும்கூட, ஏனெனில் அவர் பயணமும் (புத்தகமும்) நிறைவுபெறும் இடத்தில்தான் நான் என் விடுமுறைப் பயணத்தைத் தொடங்கவிருக்கிறேன். ஆனால் அவரைப் போலன்றி நான் பிராவின்ஸ்டவுனில் மட்டுமே தங்கப் போகிறேன் ஏனெனில் அவரைப் போலவே நானும் “அரிதாக பயணிப்பவன்தான்.”
கேப் காட் : “மாசசூஸட்ஸின் மடிந்துயரும் மொட்டைக்கரம்”
அதிபுத்திசாலித்தனமாக வாரயிறுதி போக்குவரத்து நெரிசலை தவிர்த்ததற்காக எங்களை நாங்களே பாராட்டிக்கொண்டு (எதிர்புறம் ஆமை வேகத்தில் ஊர்ந்து சென்ற வாரயிறுதிப் பயனர்களைப் போலியாகப் பரிதவித்துக்கொண்டும்), கடற்கரை வாசிப்பிற்குத் தேவையான புத்தங்களையும் இதர விடுமுறைப் பயண இத்யாதிகளையும் காரின் இடுங்கிய டிரங்கில் போட்டுக் கொண்டு ஞாயிறு மதியமொன்றில் கிளம்பினோம். கடற்கரை வாசிப்பை அதன் தளர்வான அர்த்தத்தில்தான் நான் பயன்படுத்தினேன் – அதாவது கடற்கரையில் நாங்கள் வாசிக்கப் போகும் புத்தகங்கள் என்ற அர்த்தத்தில்; படிப்பதற்காக நாங்கள் எடுத்துவந்த புத்தங்களில் ஒன்றுகூட அவ்வகைமையில் அடங்கா — இயல்பாகவே the Scarlet Letter -ஐ நானும், கடந்த காலத்தைக் குறித்த நினைவேக்கங்களை அற்புதமாகக் கிளர்ந்தெழச் செய்யும் எல்.பி. ஹார்ட்லியின் மும்மையான Eustace and Hilda-வை என் மனைவியும், அதற்கிணையான கிளர்வை அளிக்கவல்ல இசையையும் காதலையும் நெஞ்சைப் பிழியும் வகையில் பிணைக்கும் விக்ரம் சேத்தின் An Equal Music -ஐ ஒரு காலத்தில் பியானோ வாசித்துக் கொண்டிருந்த என் மகனும், பயண விவரிப்புகளில் தன் அபிப்பிராயங்களை முரட்டுப்பிடியாகத் திணிக்கும் பங்கஜ் மிஷ்ராவின் Temptations of the West- ஐ வாசக சாலைகளில் பங்கேற்கும் என் தங்கையும், பயணத்திற்காகத் தேர்வு செய்திருந்தோம். எங்களைக் காட்டிலும் தொரோவின் தேர்வுகள் பலதரப்பட்டதாக இருந்தது; இரண்டு தடிமனான ஆதார நூல்களையும் – மாசசூஸட்ஸ் வரலாற்றுச் சங்கத்தின் Collections பதிப்பின் எட்டாவது நூல் மற்றும் Gazetteer – ஹோமரின் Iliad மற்றும் வெர்ஜிலின் Eclogues – ஐயும் அவர் தன் கேப் காட் கால்வழிப் பயணத்தில் சுமந்து சென்றார்.
சம்பாஷணைகளை வளர்த்துக் கொண்டே செல்லும் என் தங்கை ஃபிலடெல்ஃபியாவிற்கு அண்மையில் சென்றதைப் பற்றிக் கதைத்துக் கொண்டிருந்தாள். சில நாட்களில் கேப் காடிற்கு விடுமுறைப் பயணம் மேற்கொள்ளப் போவதை அறிந்துகொண்ட அவளது சகபயணி ஒருவர் சட்டென்று கேப் காடின் வரைபடம் ஒன்றைப் பையிலிருந்து எடுத்து கேப் காட் கடற்கரையில் எந்தெந்த இடங்களில் அண்மையில் சுறாமீன்கள் காணப்பட்டன என்பதை அதில் சுட்டிக் காட்டினாராம். சுறாமீன்களிடமிருந்து திமிங்கிலங்களுக்கும் கேப் காடில் அண்மையில் திமிங்கிலத்தால் விழுங்கப்பட்டு அதிக சேதங்களின்றி வியக்கத்தக்க வகையில் அதிலிருந்து தப்பிப் பிழைத்த சிங்க இறால் பிடிப்பதற்காக முக்குளிக்கும் ஒருவரைப் பற்றிய செய்திக்கும், அதிலிருந்து ஆகமத்தில் வரும் ஜோனாவைப் பற்றிய கதைக்கும் உரையாடல் இயல்பாகவே தாவியது. ஆகம விஷயங்களில் தர்க்கபூர்வமான அறிவின்மையை வலிந்து கடைப்பிடித்த என் தங்கைக்கு ஜோனா கதையை நான் விளக்கினேன். தன் கத்தோலிக்க நண்பர்களைக் காட்டிலும் எனக்கு ஜோனாவை பற்றி அதிகம் தெரிந்திருக்கிறது என்று அவள் வியந்தாள். நான் சற்று கடுமையாக அவள் கத்தோலிய நண்பர்களைக் கடிந்து கொண்டேன். படித்தாக வேண்டிய பைபிளை அவர்கள் படிக்கவில்லை என்றாலும் மோபி டிக்கையாவது அவர்கள் படித்திருக்க வேண்டுமே. ஏனெனில் அந்நாவலில், தன் மகத்தான திமிங்கிலப் பயணத்தைத் தொடங்குவதற்கு முன் இஷ்மாயில் கேட்க நேரும் ஃபாதர் மாப்பிளின் பிரசங்கத்தில் இதை அவர்கள் எதிர்கொண்டிருப்பார்களே. பயணம் அப்போது நியூ பெட்ஃபொர்ட் எக்ஸிட்டை எட்டியிருந்தது, குதூகலத்துடன் என் பயணக் குழுவிற்குச் சுட்டிக் காட்டினேன்: “அதோ பாருங்கள் நியூ பெட்ஃபொர்ட், இங்குதான் மோபி டிக் தொடங்குகிறது, ஃபாதர் மாப்பில் இங்குதான் தன் பிரசித்தி பெற்ற பிரசங்கத்தைக் காத்திரமாக முழங்கினார்.” அந்த இறால் முக்குளிப்பர் தன்னையொரு மீண்டும்-அவதரித்த ஜோனாவாகப் பிரஸ்தாபித்துக் கொண்டு தொலைக்காட்சியில் சமயப் பரப்புரையாளராகக் கோடிக்கணக்கில் சம்பாதிக்க வேண்டும் என்று நக்கலடித்தோம்.
அதைப் பற்றி எழுதுவதை பின்னொரு மங்களகரமான தருணத்திற்கு ஒத்திப்போட முடிவுசெய்த பின்பும் மீண்டும் மீண்டும் எதேச்சையாகத் தோன்றிக் கொண்டிருப்பதை என் வாசக மனதின் நனவிலி பதிவு செய்யத் தவறவில்லை. மோபி டிக்கைப் படித்தவர் எவருமே, அதனால், சிறிது காலத்திற்கேனும், ஆட்கொள்ளப்பட்டு, மோபி டிக்கே உலகம் என்பது போல், அதன் முடிச்சுகளை தம் வாழ்வுகளைக் கொண்டு அவிழ்க்க வேண்டும் என்பது போல், அதன் பித்தேறிய இருண்மையை அதற்கு புறத்தேயுள்ள அனைத்திலும் காணாமல் இருக்க இயலாது. கண்டெடுத்த கடிதத்தை தன் அலுவலக மூதாதைதயரின் அசரீரிக் குரலில் கற்பனையில் படித்தபின் Scarlet Letter-இன் கதைசொல்லி (ஹாதார்னைப் போல் அவரும் ஒரு சர்வேயர்) சக ஊழியர்களை எரிச்சலூட்டும் வகையில், சுங்க அலுவலகத்தின் முன் தாழ்வாரத்தில், இங்குமங்குமாக நடந்துகொண்டு, ஹெஸ்டர் ப்ரிண்ணின் கதையை அசைபோட்டுக் கொண்டிருக்கிறான். அதற்கடுத்து புத்தகத்தில் வரும் வரி நம்மை மோபி டிக்கின் Pequod கப்பலின் மேற்தளத்திற்கு இட்டுச் செல்கிறது: “ஒரு காலத்தில் கடலோடிகளாக இருந்து கொட்டை போட்டவர்கள் என்பதால் நான் கப்பல் மேற்தளத்தின் அலுவலகர்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் குவார்டர்-டெக்கில் நடந்து கொண்டிருப்பதாக அவர்கள் பேசிக் கொண்டார்கள்.” சிந்தனை தோய்ந்த அவர் காலடிச் சத்தத்தின் தாழ்வொலியில் நாம் அஹாபின் (Ahab) தந்தத்தாலான ஆப்புக் காலின் அதிரொலிக்கும் நடையைக் கேட்கிறோம். அவனுடையதும் சிந்தனை தோய்ந்த நடைதான்; காற்றுடன் கலந்த நீரை பீய்ச்சியடிக்கும் எதிரியைப் பற்றி அவன் உரக்கச் சிந்திக்கிறான். எப்போதும் உறங்காது விரையும் அச்சிந்தனை அதன் கால் தடங்களை நிரந்தரமாக அவனது ஒடுங்கிய விலாப் புருவத்தில் பொறித்துவிட்டுச் செல்கிறது. Walden புத்தகத்தின் Economy அத்தியாயம் நினைவுக்கு வந்தது; அதில் “பனிப் புயல்களையும் மழைப்-புயல்களையும் கண்காணிக்கும் சுய-நியமனம் செய்து கொண்ட பரிசோதகராகவும்”, “பொதுஜனத்தின் குதிகால்களால் சான்றளிக்கப்பட்ட பயன்மிகு கணவாய்ப் பாலங்களை அனைத்து பருவங்களிலும் கடக்கக் கூடியதாகவும், காட்டுப்பாதைகளும் அனைத்து குறுக்குப் பாதைகளும் எப்போதும் திறந்திருப்பதை ஊர்ஜிதம் செய்யும் ஒரு சர்வேயராகவும்” தொரோ தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார். தொரோவின் Cape Cod புத்தகம் கொஹாஸட்டின் கிராம்பஸ் பாறையில் தரைதட்டி உடையும் St. John கப்பலில் தொடங்குவது நிச்சயமாக ஒரு உடன் நிகழ்வாக மட்டுமே இருக்க முடியாது அல்லவா? ஏனெனில் மோபி டிக் புத்தகத்தின் ரிஷிமூலம்: அகுஷ்னெட் கப்பலில் தனது திமிங்கிலப் பயணத்தைத் தொடங்கி, அப்பயணத்தில் எஸ்ஸெக்ஸ் என்ற மற்றொரு திமிங்கில வேட்டைக் கப்பல் (மோபி டிக்கின் பெகுவாடைப் போல் அதுவும் நாண்டக்கட்டிலிருந்து புறப்பட்டது) கலாபகஸ் தீவுகளுக்கு மேற்கே இருபது ஆண்டுகளுக்கு முன் ஒரு ஸ்பெர்ம் திமிங்கிலத்தால் தாக்கப்பட்டு கடலில் நொறுங்கி மூழ்கிய கதையை மெல்வில் கேட்பதே மோபி டிக்கின் ஆரம்பம்.
சீர் வேகத்தில் ரூட் 6-இல் பயணித்துக் கொண்டிருக்கையில் ஆர்லீன்சுக்கான எக்சிட் கண்ணில் பட்டது. தொரோ இதுவரையில், அதாவது அந்த “மடிந்துயரும் மொட்டைக்கரத்தின்” முட்டி வரையிலும் அஞ்சல்முறை வண்டியில், விரிகுடா ஓரமாக பார்ன்ஸ்டபில், யார்மௌத், டெனிஸ், ப்ரூஸ்டர் ஊர்கள் வழியே (எனது Cape Cod புத்தகத்தின் முதல் பக்கத்தில் அங்கு முன்னாள் விடுமுறையொன்றைக் கழித்ததின் ஞாபகார்த்தமாக ப்ரூஸ்டர், 2009 என்று பொறிக்கப்பட்டிருக்கிறது) பயணித்தது நினைவிற்கு வந்தது. ஆர்லீன்சும் ஈஸ்ட்ஹாமும் சந்தித்துக்கொள்ளும் Nauset Lights-சில்தான் அவர் விரிகுடா பக்கத்திலிருந்து அட்லாண்டிக் கடற்கரை பக்கத்திற்கு மாறி, அதில் கால்நடையாக இருபத்து எட்டு மைல்கள் சென்று ரேஸ் பாயிண்ட என்ற பிராவன்ஸ்டவுன் ஊரில் அதன் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கலங்கரை விளக்கம்வரை நடக்க உத்தேசித்தார். அந்த “வினோதமான கடற்கரை” ஓரமாக நடந்து செல்கையில், “வெளியே கூற முடியாத அளவிற்கு கீழ்த்தரமாகவும் இழுக்காகவும்” உணரச் செய்த ஊர்களைத் துறந்ததால், அவர் தன் இயல்பான சுபாவத்திற்குத் திரும்புகிறார். இதற்கு முன் மூழ்கிய St. John கப்பலின் மீதங்களை எதிர்கொள்கையில் அவர் “அறத்தில் ஊன்றி நிற்கும் மனிதனின் குறிக்கோளை கிராம்பஸ்சோ அல்லது வேறொரு பருமையான பாறையோ பிளக்க முடியாது ஏனெனில் அதுவே தான் வெற்றி பெறும்வரை பாறைகளைப் பிளக்கும்” என்று கம்பீரமாக உணர்ச்சி மீதூரக் கூறினார். சகவாசத்தை வெறுத்த உரன்வலிமையுள்ள குறிக்கோள் பற்றுமிக்க மனிதர் அவர்: வணக்கம் திரு. அஹாப் அவர்களே, தங்களை மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
1850-இல் மெல்வில் தன் திமிங்கில வேட்டைக் கதையின் முதல் படியை முடிக்கும் தறுவாயில் இருந்தார். அப்போது அதில் ஆஹாப் என்ற மாபெரும் இருப்பின் தடம் கிஞ்சித்தும் இல்லை. ஹாதார்னின் “இருமை எனும் பெரும் சக்தி” என்ற பட்டகத்தின் முறிவொளியில் நாவலை மீண்டும் சிந்தித்து அதை மீளுருவாக்கம் செய்த பிறகுதான் அவரால் ஹாதார்னுக்கு எழுதிய கடிதத்தில் தன்னால் ஒரு “தீய புத்தகம் ஒன்றை எழுதிய பின்னும் அப்பழுக்கற்ற செம்மறி ஆட்டை போல் புனிதமாக இருக்கிறேன்” என்று பெருமைப்பட்டுக் கொள்ள முடிகிறது. தொரோ, மெல்வில், ஹாதார்ன் — வெல்ஃப்லீட்டைத் தாண்டி விரைந்து செல்கையில் வருங்காலக் கட்டுரை ஒன்றிற்கான விதை என்னுள் துளிர்ப்பதை உணர முடிந்தது. அம்மூவரையும் எமர்சன், விட்மன் என்ற இரு துருவங்களுக்கு இடையே வைத்து அக்கட்டுரையை கற்பனை செய்ய வேண்டும் என்பதையும் இயல்பாகவே உணர்ந்துகொண்டேன். அமெரிக்க இலக்கியத்தின் தொடக்கப் புள்ளிகளை அக்கட்டுரை ஆராயும் – எமர்சனின் செல்ஃப்-ரிலையன்சில் தொடங்கி தொரோவினூடே விட்மனின் ஜனநாயக உத்வேகத்தின் உச்சத்திற்குச் செல்லுகையில் மெல்வில் ஹாதார்னின் இருண்மையான மீப்பொருண்மை தோய்ந்த தனிமனிதவாதத்தையும் உடனழைத்து வரும், அமெரிக்க இலக்கியம் இன்றும் தன் போஷாக்கைப் பெற்றுக்கொள்ளும் அந்தச் செழுமையான பசளை மண்ணை விவரிக்கும் விஸ்தாரமான கட்டுரையாக இருக்க வேண்டும் என்பதையும் அக்கார் பயணத்தில் முடிவு செய்தேன். ஆனால் அதற்கெல்லாம் கடும் உழைப்பு தேவை, ஏனெனில் பல ஆதார மூலப்பிரதிகளை நான் மீள்வாசிப்பு செய்தாக வேண்டும். ஆக, ஸ்கார்லட் லெட்டரும் இக்கட்டுரைக்கான கருப்பொருளாக இருக்கும் வாய்ப்பை இழந்தது. வேறு எதைப் பற்றி எழுதலாம் என்று அசைபோட்டபடியே காரை பிராவின்ஸ்டவனுக்குச் செல்லும் சாலையில் திருப்பினேன். ஃபிலிப் ராத்தின் நாவல்கள், வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸின் கவிதைகள் என்று தேர்வுகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டே இருந்தாலும் எதிலும் மனம் நிலைகொள்ளவில்லை… பிராவின்ஸ்டவுனே அகஸ்மாத்தாக அத்தேர்வைச் செய்யட்டும் என்று இறுதியில் விட்டுவிட்டேன்.
***
ஏர்பிஎன்பி காண்டோக்களின் முகப்பு சுமாராக இருந்தது, எதிரே சாலைக்கும் வேலிக்கும் அப்பால் ஏதோ ஒரு நீர்நிலையின் நீலக் கீற்று தெரிந்தது, எங்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த நேரத்திற்குச் சற்று முன்னதாகவே வந்துவிட்டோம். வீட்டுக்கார அம்மா எங்களை மிகப் பவ்யமாக லாங் பீச்சை போய் பார்த்துவிட்டு வரும்படி வழி அனுப்பி வைத்தார் – “உலகின் மிக அழகான கடற்கரை” என்று போகிற போக்கில் ஒரு தூண்டிலை எங்கள் முன் எறிந்துவிட்டு. ஐந்து மைல் கார் பயணம் எங்களை அந்த புகழ்பெற்ற கடற்கரையின் முகப்பு வரை இட்டுச் சென்றது. அங்கு மறைந்திருந்த கடலை நோக்கி வளைந்து நீண்ட ஒற்றை வரிசையில் நிறுத்தப்பட்டிருந்த கார்களுக்குப் பின் நானும் ஓர் இடத்தைப் பிடித்துவிட்டேன். காரை விட்டு இறங்குவதற்கு நாங்கள் தயாராகிக் கொண்டிருக்கையில் ஒரு இருபது வயது வாலிபன் ஜீப்பில் வந்திறங்கி அங்கு காரை நிறுத்துவதற்கு சிறப்பு பெர்மிட் வேண்டும் என்று கூறினான். பார்க் ரேஞ்சர் அங்கு வர நேர்ந்தால் பெர்மிட் இல்லாத வண்டிகளுக்கு நூறு டாலர் வரையிலும் அபராதம் போடக்கூடும் என்ற உபரித்தகவலையும் எங்களுக்குச் சிரித்துக் கொண்டே அளித்தான். “அங்கு நிற்கும் ஒருவன் அத்தனை அமெரிக்காவையுமே பின்னுக்குத் தள்ளிவிட முடியும் ” என்று தொரோ தன் கேப் காட் புத்தகத்தின் இறுதியில் கூறியது நினைவிற்கு வந்தது. இதோ அமெரிக்கா தன் பணித்துறை அதிகாரப் புதைமணலில் காலூன்றியபடி என்னை பின்தள்ளுகிறது. தேசிய வரலாற்றுப் பிரசித்தி பெற்ற ஒரு சில கடற்கரைகளைப் பாதுகாக்கும் நோக்கத்தோடுதான், அவர்கள் ஆள் நடமாட்டத்தைக் குறைக்க முயல்கிறார்கள் என்பதை நன்கறிந்திருந்தாலும் எங்களால் எரிச்சலுறாமல் இருக்க முடியவில்லை. ஏர்பிஎன்பி இடத்திற்கே திரும்பிச் சென்று அதற்குப் பின்னால் விரிந்த கடற்கரையில் ஒரு மணி நேரத்தைக் கழித்தோம். அதன் உரத்த அலைகள் கடற்பாசியையும் அல்காவையும் கரைமீதும் அங்குமிங்குமாக துருத்திக் கொண்டிருந்த பாறைகள் மீதும் ஓங்கி உமிழ்ந்தன. “Great brown apron drifting half -upright and quite submerged through the green water”, ” tails of seacows sporting in the brine” என்றெல்லாம் நினைவில் நிற்கும்படி தொரொ அவற்றை அற்புதமாக விவரித்திருக்கிறார்.
வீட்டிற்குள் நுழைந்த உடனேயே கீழ்த்தளத்தில் அமைந்திருந்த வாழ் அறையின் நழுவும் கண்ணடிக் கதவுகளின் வழியே கடலின் அகல்பரப்புக் காட்சியொன்று எங்களை வரவேற்றது. வீட்டைச் சுற்றிப்பார்க்கையில் ஒவ்வொரு அடியிலும் கடலை நினைவூட்டும் பொருட்கள் கண்ணில் பட்டபடியே இருந்தன: மேற்தளத்திற்கு இட்டுச் செல்லும் திமிங்கிலத்தின் எலும்பைப் போல் நளினமாக வளைந்திருந்த படிக்கட்டின் கைப்பிடியில் “நீ கடலின் மகள்” என்ற நெரூடா கவிதையின் முதல் வரி அதன் வளைவுகள் மீது ஒரு சிற்றலை போல் அமோகமாகத் தவழ்ந்து சென்றது, மோபி டிக்கில் தோய்ந்திருந்த என் விழிப்புணர்வு குளியலறையில் திமிங்கிலத்தின் வாலை நகலித்த துணிக்கொக்கிகளையும், பற்துலக்கிகளுக்கான சங்குக் குப்பியையும்,
கடல்/கப்பல் சார்ந்த அலங்காரங்கள் நிரம்பிய சுவர்த்தாளையும் அதன் மீது கழிவுக்கலனை ஒட்டிய பின்சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்த திமிங்கில ஓவியத்தையும் நினைவில் இருத்திக்கொள்ளத் தவறவில்லை. கீழ்த்தளத்தின் இடதுபுறத்தை, படிக்கட்டிற்கும் ஃபையர்பிளேசுக்கும் இடையே இருந்த அரைக்கோள் வடிவத்திலிருந்த அடுக்கம் ஆக்கிரமித்தது. அதில் பலகை விளையாட்டுகளும் புத்தகங்களும் நயமாக அடுக்கப்பட்டிருந்தன – க்ளூ, மொனோபொலி, பனானாகிராம்ஸ்… பைபில் காரெக்டர்ஸ், மார்க் குர்லான்ஸ்கியின் காட், உலகை மாற்றிய மீனின் சரிதை, காக்டெய்ல் செய்முறைக் கையேடுகள், லெவியாதன் என்ற அமெரிக்காவின் திமிங்கில வேட்டை வரலாற்றின் மீது மரத்தால் செய்யப்பட்ட திமிங்கிலமொன்றைச் சுமந்தபடி நீள் வடிவத்தில் அமைக்கப்பட்டிருந்த மோபி டிக்கின் வினோதமான பதிப்பு. அதன் மோனையிசைக்கு மீண்டும் மயங்கிவிடக் கூடாது என்ற திடமான உறுதியுடன் பார்வை சட்டென அதன் அருகே இருண்மையான விளக்கமொன்றை அட்டைப்படமாகக் கொண்டிருந்த, விசித்திரமாகத் தலைப்பிடப்பட்ட புத்தகத்திற்குத் தாவியது: Cape Cod Noir.
டேவிட் எல் உலினின் கச்சிதமான அறிமுகம் புத்தகத்திற்குள் என்னை ஈர்க்க போதுமான அளவிற்கு வசீகரமாக இருந்தது. நுவாரை பிரதானமாகத் திரைப்படங்கள் மூலமாகத்தான் அறிந்திருந்தேன். குறிப்பாக ஜான் பியேர் மெல்வில், ஜக் பெக்கேர், ஜான் ஹியூஸ்டன், ஹிட்ச்காக், ஆட்டோ ப்ரேமிங்கர் போன்றோரின் படங்கள்… இலக்கியத்தில் டாஷியல் ஹாமெட், ரேமண்ட் ஷாண்ட்லர், ஜார்ஜஸ் சிமிணன் பெயர்கள் நினைவிற்கு வந்தன. உலினே ஷாண்ட்லரின் Farewell my lovely புத்தகத்தை தன் முன்னுரையில் குறிப்பிடுகிறார். அப்புத்தகத்தின் நாயகன் ஃபிலிப் மார்லோ கச்சிதமாகக் கூறியதே நுவாரின் மிகச் சிறந்த வரையறையாகவும் இருக்கலாம்”I needed a drink, I needed a lot of life insurance, I needed a vacation, I needed a home in the country. What I had was a coat, a hat and a gun. I put them on and went out of the room.”எனக்கு மது தேவைப்பட்டது. பெருமளவில் உயிர் காப்பீடு தேவைப்பட்டது. விடுமுறை தேவைப்பட்டது. நாட்டுப்புறத்தில் இல்லம் தேவைப்பட்டது. என்னிடம் இருந்ததோ கோட்டும், தொப்பியும் ஒரு துப்பாகியும். அவற்றை எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறினேன்.” நுவார் என்பது விதி உங்களுக்கு ஒரு மெதுவான பந்தை வீசியிருப்பதை அறிந்தும்கூட நீங்கள் முன்னதாகவே தீர்மானித்திருந்த வேகமான பந்திற்கான ஷாட்டை அடித்துமுடித்தாக வேண்டிய நிர்ப்பந்தம். “படுகுழி திரும்பிப் பார்க்க அதை வெறித்திருக்கும் பாத்திரத்தின் பாழ்மையான தெளிவு” என்ற உலின் அதை வரையறுக்கிறார். ஒரு பெட்டிக் கடை வகைமை, ப்ளூஸ் இசையின் இலக்கிய வடிவம்.
அகாஷிக் புத்தகங்கள் பதிப்பித்திருக்கும் நுவார் வரிசைப் புத்தகங்கள் வாசகனுக்குப் பரிச்சயமான உள்ளூர் தகவல்களைக் கொண்டு படைப்பின் ஊடுபாவுதலை கனப்படுத்தி நுவார் வகைமையின் வீச்சை அதிகரிக்கிறது. புத்தகத்தில் பதிமூன்று கதைகள் உள்ளன. ஒவ்வொரு கதையும் குறிப்பிட்ட ஒரு கேப் காட் ஊரில் நிகழ்கிறது. இவ்வூர்கள் பலவற்றிலும் நான் பல விடுமுறைகளைக் கழித்திருக்கிறேன், அஞ்சல் வண்டி வழியாகவோ கால்நடையாகவோ தொரோவும் இவ்வூர்களைக் கடந்திருக்கிறார். கதைகள் மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன: Out of season, Summer People and End of the line
உலினின் முன்னுரையைப் படித்த கையோடு Out of season பாகத்தை ஒரே மூச்சில் படித்து முடித்தேன். ரணத்திலிருந்து பிளாஸ்திரியை உரித்தெடுப்பது போல் கேப்பின் அசலான முகத்தை அதன் ஒப்பனைகள் அழியும் தருணத்தில் காட்டும் இப்பாகமே புத்தகத்தில் என்னை மிகவும் கவர்ந்தது. கென்னடிகளின் கேப்பின் மறுபக்கத்தை, கோடை விருந்தினர்கள், பட்டம்விடும், சைக்கிலோட்டும் பயணிகள் அனைவரும் திரும்பிச் சென்ற பிறகு மீந்திருக்கும் கேப்பை அது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அவலமாகவே இருந்தாலும் சுவாரசியமாகவே இருக்கும் பரிசாரகர்கள், சமையலறையில் வேலை செய்பவர்கள், பரோலில் வெளிவந்திருக்கும் இளம் குற்றவாளிகள், போதைப்பழக்க அடிமைகள், வந்தேறிகள், பண நெருக்கடியிலிருக்கும் மாணவர்கள் என்று பலதரப்பட்ட வாழ்க்கைகளை நமக்கு நெருக்கமாகக் காட்டுகிறது. இதனால் கேப் கற்பனையில் வார்த்தெடுக்கப்படட வேறெங்கோ இருக்கும் ஆதர்ச விடுமுறை ஸ்தலத்திலிருந்து இன, மொழி, பால் மற்றும் வகுப்புப் பிரிவினைகள் அலக்கழிக்கும் இங்கு கண்முன் நடக்கும் நிதர்சனமாக உருமாறுகிறது.
ஃபால்மவுத்தில் நிகழும் வில்லியம் ஹேஸ்டிங்ஸ்சின் மனோதிடமிக்க Ten-Year Plan இப்படித் தொடங்குகிறது “there was a time, just after I was jailed, when all I did was work, deal with my p.o (i.e., his parole officer”) and keep my nose clean. No more shit, nothing. Just work, cash that pay check every two weeks, stuff the bills into my hollowed-out book beneath my bed and count the days.” சிறையில் நாட்களைக் கழிக்கும் பயத்திலிருந்து விடுபட நாட்களை எண்ணிக் கொண்டிருப்பதும் நுவார் கதையின் திகிலூட்டும் உத்திதான். நம்பிக்கை சொட்டு சொட்டாக வற்றுவதும் காலக்கெடு குறைந்து கொண்டே செல்வதும் அத்திகிலை மேலும் அதிகரிக்கிறது. கதைசொல்லியும் அவன் சக ஊழியர்களும் (பிரெசிலியர்கள், கிழக்கு ஐரோப்பியர்கள்) காய்கறி நறுக்குவதிலிருந்து பாத்திரம் கழுவுவது வரை உணவகச் சமையலறையின் சகலவிதமான காரியங்களைச் செய்கிறார்கள். இனவெறியனான அவர்கள் முதலாளி ஒரு சம-வாய்ப்பு துன்புறுத்தி. குறிப்பாக வந்தேறிகளைத் துன்புறுத்துவதில் அவனுக்குத் தனி இன்பம். (மேஜை துடைக்கும் பெண்கள் தங்கள் சம்பளக் காசோலைகளை பின்னால் கையில் பிடித்தபடியே அவனை ஊம்பியாக வேண்டும்.). இரையானவர்களுக்கு வேலையைத் துறப்பது ஒரு தேர்வல்ல, மீண்டும் சிறைக்குச் செல்லாதிருப்பதே வெள்ளைக்கார இளைஞனின் குறிக்கோள், பிரெசிலியர்களுக்கோ டாலர்கள் சேமித்து தாயகம் திரும்பி மீண்டும் தங்கள் குடும்பங்களுடன் இணைய வேண்டும். படுகுழியை வெறிதிருப்பது இருக்கட்டும், படுகுழி உங்கள் மீது மூத்திரத்தைப் பீச்சி அடிக்கையில் அதை வெறித்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம். நுவார் கதைகள் பெரும்பாலும் சந்தோஷமான முடிவுகளைத் தவிர்க்கின்றன. நம்பிக்கையற்ற பாழ்நிலையில் சிக்கியிருக்குப்பவர்கள் ஓரளவிற்கேனும், அது நிரந்தரமாக இல்லாமல் போனாலும்கூட, மனதளவினும் கௌரவத்தையும் தன்மானத்தையும் தக்கவைத்துக் கொண்டு, பாழின் மீது மூத்திரம் அடித்த நிறைவைப் பெறும் சாத்தியத்தைக் கண்டடைய நுவார் முற்படுகிறது. வெற்றி என்பது இக்கதைகளில், அது அரிதாக நிகழும் சில கணங்களில், பெரும் இழப்பையும் அபாயத்தையும் உடனழைத்து வருகிறது.
வர்க்க பிரிவினைகளைக் குறித்த நுட்பமான அவதானிப்புகள் மிக யதார்த்தமாக இப்புத்தகத்தின் பல கதைகளில் இடம்பெற்றிருப்பது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆர்ப்பாட்டமில்லாமல், சமையல் தயாரிக்க உதவும் ஒரு ப்ரெப் குக்கின் வார்த்தைகளில் வெளிப்படும் போது அது மிகவும் ரசிக்கத்தக்கதாக அமைகிறது “மழை என்றால் பீச்சுக்குப் போகமாட்டார்கள். மதிய உணவிற்காக உணவகம் சென்று விடுமுறைக் காலம் வீணாகிறதே என்று குறைபட்டுக் கொள்வார்கள்”
படிப்பதற்கே மனத்திடத்தைக் கோரும் இம்மாதிரியான கதையில், கதையின் களம் பிசுபிசுக்கும் உணவகச் சமையலறை என்றாலும்கூட, நுவாரால் ஒரு மின்னல் வெட்டில் ஆழ்ந்த அழகியல் அனுபவத்தை அளித்துவிட முடிகிறது: “வெளியே கிரகணம்… அதன் ஓரங்களிலிருந்து எட்டிப் பார்த்த வெளிச்சம் அதன் கருவிளிம்பு நெடுக உறைபனி நீலத்து வளர்பிறையொன்றை விட்டுச் சென்றது. எங்கள் சமையலுடை மேலங்கிகள், ரகசியங்கள் போல் அல்லாது அது இயல்பாகவே இருந்தது.”
இந்த ரகசியங்களைச் சீர்திருத்தப் பள்ளியின் (எங்குமில்லா வெற்றிடத்திற்கு நடுவே அமைந்துள்ள பஸ்ஸார்ட்ஸ் பேயின் பெனிகீஸ் ஐலண்டில், ஒழுக்குநீர், இணைய அலைபேசி தொடர்பு கிடையாது, கெஞ்சிப் பயணித்தோ, நீந்திச் செல்லவோ முடியாத இடம்) முறைப்படுத்தப்பட்ட கடுமையான வழக்கங்கள்கூட மறக்கடிக்க முடியாது. எலிஸ்ஸா ஈஸ்ட் எழுதிய Second Chance-இல் வரும் இப்பள்ளி பால்யக் குற்றவாளிகள் “தங்கள் கடந்தகாலத்திலிருந்து தங்களை முற்றிலும் துண்டித்துக் கொள்வதற்காக” அமைக்கப்பட்டது. ஜான் கிளாட் வான் டாம் சாண்டா கிளாஸ் கலவையைப் போல் தோற்றம்தரும் அதன் தோற்றுனர் ஒரு முன்னாள் ஈருடகப்படை வீரர். 1800-களில் வாழ்வதைப் போல் வாழ்வதே இவ்விளைஞர்களுக்கான விமோசனம் என்று உறுதியாக நம்புபவர்: தேவையானது அனைத்தையும் சொந்தக் கைகளால் உருவாக்கினால் அடி ஆழத்தில் புதைந்திருக்கும் சுயத்தை சீர்திருத்தி ஒருவரின் செயலே அவரை சூழ்ந்திருக்கும் உலகை உருவாக்குகிறது என்பதைக் கற்றறிய முடியும் என்பதே அந்நம்பிக்கையின் சாரம். இயல்பாகவே வாசகருக்கு ராபின்சன் க்ரூசோவும் தொரோவின் வால்டன் பாண்டும் நினைவுக்கு வரலாம், ஆனால் எனக்கோ அவற்றைக் காட்டிலும் இருண்மையான பால் தொரொவின் Mosquito Coast-இல் வரும் யாங்கீ க்ரூசோவான ஆலி ஃபாக்சே நினைவிற்கு வருகிறார். தொரோவின் கேப் காட் புத்தகத்திற்குப் பால் தொரோ முன்னுரை எழுதியிருக்கிறார் என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். நுவாரின் “வெளிசெல் வழிகள் கிடையாது” உத்தியை பொருண்மையாகவும் அதன் மீப்பொருண்மை அர்த்தத்திலும் இக்கதை கச்சிதமாகக் கைப்பற்றுகிறது. ஆனால் கடுமையான அந்நிதர்சனத்தையும் தாண்டி (“தலை வெடித்துவிடும் போல் கோபமுற்றிருக்கும் ஃப்ரெட்டியைப் பார்த்து கடவுள் தொடைதட்டிச் சிரிப்பது போல் வானம் கொக்கரிப்புகளால் நிறைந்தது“), எவ்வளவுதான் பயனற்றதாக இருந்தாலும், ஃப்ரெட்டி “முண்டைகளா கீழ வந்தா தெரியும், என்னயா யாருன்னு கேக்கறீங்க, வாங்க, காட்டறேன் நான் யாருன்னு” என்று மேகங்களை நோக்கி கோடாலியை ஆட்டி மலம் கழிக்கும் பறவைகளைப் பார்த்து அஹாபைப் போல அலறுவதைப் படிக்கையில் ஒரு துளி கௌரவம் மீட்கப்படுவதை நாமும் உணர்கிறோம். அதேபோல் கதையின் இறுதியில் கடினமாக வெல்லப்பட்ட அந்த சிசிபிய இன்பதுன்ப நடுநிலைமையையும்: “எதையுமே கூறாது எங்கள் பணிகளை அல்லது அது போல் ஏதோவொரு இழவைச் செய்தோம் என்று கூறுவதே அதிகம் கூறுவதுபோல்தான். ஏனெனில் குறைந்தபட்சத்தில் பேசக்கூடிய ஒருவருடன் இருந்து கொண்டு பேசாமலிருப்பது போல் இது இல்லையே. பரவாயில்லை அனேகமாக எல்லாம் சரியாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது.”
இப்பகுதியில் மேலும் பல இன்பங்கள் காத்திருக்கின்றன. டானா காமெரனின் காலனிய நுவாரான Ardent -இல் ஆனா ஹாய்ட் “தன் சொத்தை அபகரிப்பதற்காகச் சூழ்ச்சி செய்யும்” ஆண்களையும் “பெண்ணாகத் தன்னைக் கட்டுப்படுத்திய காலனிய சட்டங்களையும்” மனத்திட்பத்துடன் சாதுரியமாகத் தோற்கடிக்கிறாள். ஆனால் இம்மாதிரியான வெற்றிக்கு ஒரு மிகப் பெரிய விலையையும் கொடுத்தாக வேண்டியிருக்கிறது. பால் டிரெம்ப்லேயின் Nineteen Snapshot’s of Dennisport கதையை புகைப்பட வர்ணனைகளாகக் கூறுகிறது. ஒவ்வொரு புகைப்படமும் கதையின் பின்புலத்தை படிப்படியாக அதிகரித்து வாசகருக்கு ஒரு திருகுவெட்டுப் புதிரைப் பூர்த்தி செய்யும் அனுபவத்தை அளிக்கிறது. கடைசி துண்டத்தை தப்பிச் செல்லும் மையத்தில் பொருத்துகையில் புதிரைச் சரியாக முடிச்சவிழ்த்திருக்கிறோமா என்ற சந்தேகமும் அவனுள் எழுகிறது. ஆடம் மென்ஸ்பாக்கின் நூதனமான Variations on a Fifty-pound Bale மார்தாஸ் வின்யார்ட் அருகே, மெனெம்ஷா பீச்சிற்கு ஆயிரம் அடி தூரத்தில் அலைகள் கரையில் விட்டுச் சென்ற ஒரு கஞ்சா மூட்டையின் கதியை விவரிக்கிறது.
* * *
இரவில் கடல் எங்கள் மீது மிக நெருக்கத்தில் உருமியது போலவும், மேற்தளமே கடல் மீது மிதந்து கொண்டிருந்தது போலவும் இருந்தது. உயரலையின் தெரிப்பு டெக்கின் ரிக்லைனரையும் சோஃபா குஷன்களையும் நனைத்தது. உருமல் முதலில் அலைக்கழிப்பதாக இருந்தது. அதன் சத்தத்துடன் உறங்க நாங்கள் பழகிக் கொண்டோம். Reverend Poluphloisbos Thalassa (கிரேக்க மொழியில் மிகவும் சத்தமான கடல்) என்று தொரோ அதை அழைத்தார், அதன் உரத்த பிரசங்கங்களை ஈஸ்தம் முகாம் சந்திப்புகளில் நடத்தப்பட்ட மெதடிஸ்ட் பிரசங்கங்களுடன் ஒப்பிட்டபடியே; “inspiriting” என்ற அடைமொழியையும் அவற்றிற்கு அளித்துவிட்டு அதைக்காட்டிலும் வேரூன்றிய ஒரு உவமையை முன்வைத்தார் “உங்கள் கதவிற்கு வெளியே ஒரு நாய் உருமிக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, கேப் முழுவதற்குமே உருமும் அட்லாண்டிக் கடற்கரையே அக்கதவிற்கு புறத்தே இருப்பது போல.” ஆனால் எனக்கோ மாபெரும் சங்குச்சிற்பி ஒன்றின் எதிரொலிக்கும் சுருள்களுக்குள் உறங்கிக் கொண்டிருப்பது போலிருந்தது. இறுதியில் இதுவும் பழகிப்போனது.
மறுநாள் வெய்யில் பலமாக அடித்தது. அதை வீட்டிற்குள் கழிப்பது பெரும்பாவம் என்பதை இயல்பாகவே உணர்ந்திருந்ததால் ஹெட் ஆஃப் மெடோஸ் பீச்சிற்குக் காலை உணவிற்குப் பிறகு நாங்கள் கிளம்பினோம். ட்ரிப் அட்வைசரின் #1 ரேட்டட் என்று என் தங்கை குதூகலமாக அறிவிக்க, அவர்கள் பரிந்துரைகள் சற்று “Sus” ஆனவை (சந்தேகத்திற்குரியவை) என்று என் மகன் அவள் மகிழ்ச்சியைச் சிறிது மட்டுப்படுத்தினான். கேப் மடிந்துயரும் கரம் என்றால் ஹெட் ஆஃப் மெடோ பீச் கிட்டத்தட்ட அதன் உச்சியில், அதன் மணிக்கட்டில் அமைந்திருந்தது. கடலறியா நிலவாசிகளான எங்களுக்கு தைரியமளிக்கும் அளவிற்கும் கடல் அமைதியாக இருந்ததால் நாங்கள் அதனுள் சிறிது தூரம்வரைச் செல்ல முற்பட்டோம். மேலும் இக்கடலின் கரைக்கு அருகேயே மறைவான பல மணற்திட்டுகள் இருந்ததால் அவை இடுப்புவரை ஆழமான காயல் போன்ற நீர்நிலைகளைக் கடலில் உருவாக்கி இருந்தன, திட்டுகள் அளித்த பாதுகாப்பில் அக்காயல்களில் ஆசைதீர முங்கிக் குளித்தபடியே எதிர்வரும் அலைகளுக்காகக் காத்திருந்தோம். ஆனால் கீழலை சமயத்தில் அம்மணற்திட்டுகள் சீல்கள் எனப்படும் கடல்நாய்களுக்கும் உறைவிடமாக அமையலாம் என்பதையும், சீல்களைத் தேடி சுறாமீன்களும் அங்கு வர நேரிடும் அபாயத்தையும் நாங்கள் அறிந்திருந்தோம். ஆனால் அன்று ஒரு சீல்கூட தென்படவில்லை. ஒரு மணி நேரம் ஆரவாரமாக முங்கிக் குளித்துவிட்டு மனற்குன்றுகலினூடே Pilgrim Spring Trail – லிற்குப் புறப்பட்டோம். பில்க்ரிம்கள் முதன்முதலில் பிராவின்ஸ்டவுனில்தான் தரையிறங்கினார்கள். அதன்பின்னரே ப்லிமத் போன்ற இடங்களுக்குப் பெயர்ந்து குடியேற்ற நடவடிக்கைகளைத் தொடங்கினார்கள். நாங்கள் நடை செல்லவிருந்த அந்த Pilgrim Spring Trail எங்களை அப்புனித பயணர்கள் நவ உலகில் நன்னீர் ஊற்றை முதன்முதலில் கண்ணுற்ற இடத்திற்கு இட்டுச் சென்றது. நடைபாதைக்குச் செல்லுகையில் என்னையே அறியாது பைபிங் ப்லாவர்கள் என்ற அருகிவரும் பறவையினத்தின் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்டிருந்த வேலியிட்ட இடத்திற்குள் நுழைந்துவிட்டேன். மெய்க்காப்பாளர்கள் என்னைக் கத்தித் துரத்துவதற்கு முன் இரண்டு பிளாவர்களை வெகு அண்மையில் காணும் அதிர்ஷ்டம் கிட்டியது. பின்னால் மறைந்திருந்து பிடித்திழுத்த ஏதோவொரு விசையின் பிடியிலிருந்து தப்பிக்க முயல்வது போல் அவை அந்தரத்தில் க்ரீச்சிட்டபடியே வெறித்தனமாகச் சிறகடித்துக் கொண்டிருந்தன. Charadrius melodus, என்று தொரோ நமக்கு பாடமெடுத்தார், அவற்றின் “dreary peeps” -சை ” the fugacious part of the dirge played along the shore for the mariners lost in the deep since first it was created” – உடன் கற்பனையில் இணைத்துச் செவிக்க முற்படுகையில்.
மறுநாள் கதவுத் திரைகளை விலக்கித் தூக்கக் கலக்கத்துடன் டெக்குக்குச் சென்றபோது வடக்குக் கடற்கரைகளுக்கே உரிதான கடும் அழகு, இருண்ட வானத்திற்கு கீழே, எனக்காகக் காத்திருந்தது. டெரெக் வால்காட்டின் டு நார்லைன் (To Norline) கவிதை வரிகள் நினைவிற்கு வந்தன:
This beach will remain empty
for more slate-coloured dawns
of lines the surf continually
erases with its sponge…
கடற்பஞ்சுகளால் நுரை
தொடர்ந்தழிக்கும் கோடுகளுக்காகவும்
பட்டுக்கருநீல விடியல்களுக்காகவும்
கரை வெறித்திருக்கும்
அனிச்சையாகத் திரும்பி போர்வைக்கடியே கைகால்கள் பரப்பிக்கிடந்த என் மனைவியின் மெல்லிய உருவத்தைப் பார்த்தது ஏதோ விதத்தில் எனக்கு உறுதியளித்தது.
and someone else will come
from the still-sleeping house,
a coffee mug warming his palm
as my body once cupped yours,
to memorize this passage
of a salt-sipping tern,
like when some line on a page
is loved, and it’s hard to turn.
என் உடல் உன்னை உட்குவிழ்ந்ததுபோல்
வெதுவெதுக்கும் காப்பிக் கோப்பையை
உள்ளங்கைகளில் உட்குவிழ்த்தபடி
இன்னும் துஞ்சும் விட்டிலிருந்து
வேறெவரோ வருவார்
ஆலாவின் உப்புசூப்பும்
நுரைநடையை மனனம் செய்ய
தாளின் ஏதோவொரு வரியை நேசித்து
அதைத் திருப்ப முடியாததைப் போல்.
படுக்கையறைக்குள் செல்வதற்கு முன் வாசிப்பினால் உருவாகிய என் பிறழ்வச்சத்தை, மோபி டிக் அஹாபை வானுலகிலும் ஆட்கொண்டிருப்பதை, புகைப்படம் எடுக்கும் வாய்ப்பு கிட்டியது. போர்வைக்கடியில் சுகமாக ஒடுங்கிக் கொண்டு Cape Cod Noir-இன் இருண்மையான இன்பங்களை அனுபவிக்கச் சரியான நாளாக இருந்தது.
* * *
Summer People (கோடை மக்கள்) என்று தலைப்பிடப்பட்ட இரண்டாம் பாகம், என் போல், கேப் காடில் வசிக்காது அங்கு வந்து போய்க் கொண்டிருப்பவர்களைப் பற்றியது. கோடை மக்களையும் உள்ளூர் வாசிகளையும் Cape Cod Noir அப்பட்டமாகவே வரையறுக்கிறது: “கோடை வாசிகள் எவ்வளவு நாள் இங்கு தங்கினாலும் உள்ளூர்வாசிகளாக முடியாது. பனியை வாரிக் கொட்டி பனிப்புயலைச் சமாளிக்கவில்லை என்றால் நீங்கள் உள்ளூர் ஆசாமி கிடையாது. அவ்வளவுதான்.” உலின் தன் முன்னுரையில் இதை வேறு விதமாகக் கூறுகிறார். லேபர் டேயிற்குப் பிறகு, சுற்றுலாவாசிகள் அனைவரும் அவரவர் இடங்களுக்குத் திரும்பிப் போய்விட்ட பின் எஞ்சியிருப்பவர்களே கேப்காட் வாசிகள். அவர்களுக்கு “இப்போதும் அனேகமாக எப்போதும் போலத்தான், பாழ்மையுடன் சன்னமான சாம்பலொளியில் வெறுமையாக மெதுவாக நகரும் குளிர்கால மாதங்களில் செய்வதற்கு ஏதுமின்றி… நீங்கள் குடிக்கிறீர்கள், இருட்சிந்தனைகளை அசைபோடுகிறீர்கள், கோடையை எதிர்பார்த்தபடி காத்திருக்கிறீர்கள், அந்தத் தொடர்சுழற்சி மீண்டும் தொடங்குவதற்காக…” விசித்திரமான இருவழிப் பயனளிக்கும் முரண் அங்கு நிலவுகிறது: “தங்கள் விடுமுறை எதிர்பார்த்த மகிழ்ச்சியை அளிக்க வேண்டும் என்ற கோடை மக்களின் அவாவிற்கும்”, “தங்கள் அன்றாடத்தைக் குலைத்தாலும் ஜீவனத்திற்காகக் கோடை மக்களை நம்பியிருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கும் year rounders-சின் இறுக்கத்திற்கும்” இடையே நிலவும் முரண்.
அருவருப்பும்கூட அங்கு பரஸ்பரமாகிவிட்டது என்பதை செத் க்ரீண்லாண்டின் Bad Night in Hyannisport தெளிவாகவே காட்டுகிறது. நுவார் தொடக்கங்களைப் பொறுத்தவரையில் இதை விஞ்ச முடியாது: “I was dead. That was the main thing. and I never saw it coming.” (“நான் இறந்துவிட்டேன். இங்கு அதுதான் முக்கியமான விஷயம். அதை நான் எதிர்பார்க்கவே இல்லை”). பிரசித்தி பெற்ற பல்கலை ஒன்றில் (“அதைப் பற்றி இதை மட்டும்தான் என்னால் கூற முடியும். அனேகமாக உங்களுக்கு அங்கே சீட் கிடைக்காது!”) முதல் வருடத்தை முடித்துவிட்டு கோடை விடுமுறைக்காக ஹையானில்போர்ட்டில் கட்டிடம் கட்ட வரும் ஒர் அடாவடித்தனமான வாலிபனின் குரலில் கதை சொல்லப்படுகிறது. ஓ, மறந்து விடுவதற்குள் இதையும் கூறிவிடுகிறேன், அவன் ஒரு முடாக் குடியனும் கூட. இம்மாதிரி கதைகளில் பேச்சுமொழியின் தொனியும் அதன் ஆச்சரியமளிக்கும் சுவாரஸ்யமுமே கதையை வெற்றி பெறச் செய்கிறது. சேத் க்ரீண்லாண்டால் இதை அலட்டிக் கொள்ளாமல் செய்ய முடிந்திருப்பதே பக்கத்திற்குப் பக்கம் அருவருக்கச் செய்யும் வாலிபனின் அத்துமீறல்களையும் மீறி நம்மைக் கதையை ரசிக்கச் செய்கிறது. மதுவின் கிறுகிறுக்கும் மூட்டத்தினூடேயும் அவனால் “ஆகஸ்ட் மாதத்தில் கேப் காடை காட்டிலும் அழகாக இருக்கும் இடங்களைப் பட்டியலிட்டால் அது மிகச் சிறியதாகவே இருக்கும். உப்புக்காற்று நாசியை நிரப்புகையில் இலைகளினூடே காவி மஞ்சள் கீற்றுகள் எட்டிப்பார்ப்பதைக் கவனித்தேன்” என்று நம்முடன் அன்யோன்யமாகவும் பேச முடிகிறது. சமூக, வர்க்கப் பிளவுகளை வெளிப்படும் விதமும் நுட்பமான முடிவும் கதையை நினைவில் நிற்கச் செய்கின்றன.
டேவிட் உலினின் La Jetée க்ரிஸ் மார்க்கரின் 1962-இல் வெளிவந்த அறிபுனைப் படத்துடன் தன் பெயரைப் பகிர்ந்து கொள்கிறது. மார்க்கரின் படத்தில் தான் சாட்சியாக இருந்த ஓர் மரணத்தைப் பற்றிய ஒரு குறிப்பிட்ட நினைவிற்கு ஒருவன் கடந்தகாலத்திற்குச் சென்று அம்மரணம் தன்னுடையதுதான் என்பதை உணர்ந்து கொள்கிறான். படம் நாகரிகம் முற்றிலும் அழிக்கப்பட்டிருக்கும் ஊழிக்கால பரீ நகரத்தில் நிகழ்கிறது. அதில் கடந்தகாலம் நிகழ்காலம் இரண்டையும் தேடிப்போவதே நிகழ்காலத்தின் பிழைத்தல் உத்தியாகிறது. உலினின் கதையில் ஊழிகூறுகள் வெளிப்படையாக இல்லாவிட்டாலும் அவை ஒரு தனிப்பட்ட வாழ்வின் வதைமிக்க பேரதிர்ச்சியாக மாற்றப்பட்டிருக்கிறது என்றும் கூறலாம். திரும்பிப் போகும் உத்தி இதிலும் வருகிறது, “வெளியில்” திரும்பிப் போய் காலத்திற்கான மீட்சியைக் கண்டடைய முயல்கிறது. ஸ்கார்லெட் லெட்டரின் அற்புதமான வரி ஒன்றை நினைத்துக் கொண்டேன் “விதிக்கப்பட்டதை போன்ற ஒரு உணர்வு, எதிர்க்கவோ தவிர்க்கவோ இயலாததால் பேரழிவின் விசையைப் பெற்றுவிடும் உணர்வொன்று இருக்கிறது; மாற்றமுறா திடத்துடன் அது மனிதர்களை ஏதோவொரு குறிப்பிட்ட மனதில் பொறிக்கப்பட்ட மாபெரும் சம்பவம் ஒன்று, அவர்கள் வாழ்நாளைச் சற்று வண்ணமயமாக்கிய சம்பவமொன்று, நிகழ்ந்த இடத்திற்கு அருகேயே தாமசித்து, ஆவியின் பிடிவாதத்துடன் அதற்கு மீண்டும் மீண்டும் திரும்பி வரக் கட்டாயப் படுத்துகிறது.” உலின் தன் நாயகனை காலத்தின் ஒரு தருணத்தில் பேய்போல் தாமசிக்கச் செய்கிறார்.
லிஸ்சி ஸ்கர்மிக்கின் Spectacle Pond நம்மை வெல்ஃப்லீட்டிற்கு அழைத்துச் செல்கிறது. வெல்ஃப்லீட்டின் தனித்துவமே அதில் விரவியிருக்கும் அதன் கெட்டில்-குளங்கள்தான் (கல், டக், ஹெர்ரிங், க்ரேட், லாங், ஸ்பெக்டகில்… இப்படிப் பல). தொரோ அதை தன் கேப் காட் புத்தகத்தின் Wellfleet Oysterman அத்தியாயத்தில் அப்பெயரிலேயே வரலாற்றில் இடம்பெற்றுவிட்ட மனிதருடன் விவாதிக்கிறார். இக்கதையில் ஒரு வாலிபன் வெல்ஃப்லீட்டிலிருக்கும் தன் அத்தையின் வீட்டை காலி செய்யப் போகிறான். அங்கு சாமன்களுடன் நினைவுகளையும் துருவி அடுக்குகையில் இரண்டகத்தையும் இழவிற்கான துக்கத்தையும் எதிர்கொள்கிறான்.
மூன்றாம் நாள் வெல்ஃப்லீட் உணவகம் ஒன்றில் டேஸ்டிங் மெனூ வகை இரவு உணவுடன் நிறைவுபெற்றது. 6.30 மணிக்கு எங்களுக்கு ரிசெர்வேஷன் இருந்தது. நான் அவ்வுணவகத்தின் முகநூல் பக்கத்தை மேய்ந்து கொண்டிருக்கையில் உடன்நிகழ்வொன்றால் துனுக்குற்றேன். உணவகத்தின் ஷெஃப் சிங்க இறால் முக்குளிப்பர் ஒருவருக்கு உணவகத்தில் சமைக்கப்படும் அபாரமான இறாலுக்குக்காக்க நன்றி தெரிவித்திருந்தார். அம்முக்குளிப்பர் வேறு யாரும் இல்லை, நாங்கள் முன்னர் நக்கலடித்த திமிங்கிலத்தால் விழுங்கப்பட்டு உயிர்பிழைத்த நம் பின்னாள் ஜோனாதான்!
ஏழு உணவுகள் கொண்ட எங்கள் டின்னரின் முதல் டிஷ்ஷாக மூன்று ஆய்ஸ்டர்கள் மூன்று விதமான சாஸ்களுடன் பரிமாறப்பட்டன. அடுத்தடுத்து வந்த உணவுகளும் அவற்றுடன் பொருந்தியிருக்கும் மதுபானத்துடன் பரிமாறப்பட்டன. ஷெஃப் மைகல் டின்னர் தொடங்குவதற்கு முன்னால் ஒரு முகவுரை வழங்கி இருந்தார். அதில் உணவின் பதார்த்தங்கள் எந்தெந்த இடத்திலிருந்து வந்ததென்பதை மிக சுவாரஸ்யமாக விவரித்தார். டாட்டூ செய்யப்பட்டிருந்த தன் வலது கரத்தை மடக்கி கேப் காடில் அவை எங்கு இடம்பெற்றிருக்கின்றன என்பதை அதில் சுட்டிக் காட்டினார். நான் எனக்குள்ளேயே சிரித்துக் கொண்டேன். பிரசித்திபெற்ற Economy கட்டுரை ஆசிரியர் ஸ்கார்லெட் லெட்டர் காலத்துப் பகட்டுச் செலவு வரிவிதிப்புச் சட்டங்களைக் கொண்டு என்னை தண்டிப்பதாக கற்பனை செய்து கொண்டேன், என்ன சொல்ல, அவர் வார்த்தைகளையே சற்று மாற்றிக் கூறுவதானால், some of us relish being cooked a la mode !
* * *
கட்டுரையும், என் விடுமுறையும், புத்தகமும் நிறைவடையும் தருணத்திற்கு வந்துவிட்டோம். அவிழ்ந்து கொண்டே செல்லும் காலத்தின் நூற்கண்டில் நூல் தீர்ந்துவிடுகிறது. “End of the line” என்ற தலைப்பிடப் பட்டிருக்கும் மூன்றாம் பாகம் ஃபிரெட் ஜீ லீப்ரானின் Exchange Student கதையுடன் தொடங்குகிறது. டென்மார்க்கிலிருந்து பிராவின்ஸ்டவுனிற்கு வரும் பரிமாற்ற மாணவரின் குரலில் கதை சொல்லப்படுகிறது. கதை என்னவோ அவ்வளவாகப் பிடிக்கவில்லை என்றாலும் இங்கு குறிப்பிடுவதற்கான காரணம், அதைப் பி-டவுனின் டவுண்டௌனின் அமைதியான யூனிடேரியன் தேவாலயத்தின் பெஞ்சில் அமர்ந்து படித்ததும், அக்கதையில் வரும் போர்சுகீஸ் பேக்கரியிலிருந்து வாங்கிய இனிப்புக்களை உண்டதையும் பற்றிப் பேசுவதற்காகத் தான். மேலும் அக்கதையில் திமிங்கிலங்களைப் பார்வையிடுவதற்காகப் படகுகள் ஓட்டும் “gnarled pontificator” ஆக வரும் அப்பா பாத்திரத்திற்கு ஒரு கட்டைவிரல் கிடையாது என்பதிலிருந்த ஒரு முரணான சீர்மை எனக்கு உவப்பாக இருந்தது.
பென் க்ரீன்மானின் Viva Regina வுட்ஸ்ஹோலில் “தானுண்டு தன் வேலையுண்டு” என்றிருக்கும் நாயகனுடன் தொடங்குகிறது. அவ்வேலை என்ன என்பதை நாம் உணரும் கிளாசிக் நுவார் தருணமே கதையின் உச்சம். சாண்ட்விச்சில் நிகழும் டானியல் செட்ஸ்மனின் When Death Shines Bright கதை “கதையை இவ்வாறு எழுதியிருக்கலாமோ…” என்று யோசிக்கத் தொடங்குகையில், சில பத்திகளிலேயே ஆசிரியரும் கதையை அப்படித்தான் எழுதியிருக்கிறார் என்பதை நாம் உணர்ந்து கொள்ளும் அம்மாதிரிக் கதைகளில் ஒன்று.
புத்தகத்தையும் வீட்டையும் விட்டுச் செல்லும் நேரம் வந்துவிட்டதால் என்னால் கடைசிக் கதையை வாசிக்க முடியவில்லை. ஆனால் அப்படி அரையும் குறையுமாக வாசிப்பை விட்டுவருவது நெருடியதால் ஆமசானில் ஏற்கனவே வாசிக்கப்பட்ட புத்தகமொன்றை ஆர்டர் செய்தேன். திரும்பிச் செல்கையில் ஹெட் ஆஃப் மெடோ பீச்சிற்கு மீண்டுமொரு முறை சென்றோம். இம்முறை கடல் நடுவே மணற்திட்டுகளில் குதித்தபடியே சீல்கள் எங்களுக்காகக் காத்திருந்தன. அவை மெர்மனை (ஆணின் உடம்பும் மீனின் வாலையும் உடைய ஒரு கற்பனை விலங்கு) போல் வினோதமாக இருந்தன என்று தொரோ ஒரு முறை கூறியிருக்கிறார். எனக்கு அவை செல்லமாக இருந்தன. தியக்க வளைவுகளை வான்நீலத்தில் நெசவும் கிரீச்சிடும் சீகல்கள் உண்மையிலேயே “கடலிசையின் கரகரப்பான ஒரு சரடு நெரிநீரின் உச்சத்தில் சுண்டி எறியப்பட்டது” போலிருந்தன. தற்காலிகமாகவே இருந்தாலும், உண்மையிலேயே இங்கே கால் ஊன்றியபடி ஒருவரால் பின்னால் விரிந்திருக்கும் அத்தனை அமெரிக்காவிலிருந்தும் மீண்டு விடமுடியும்.
ஆனால் தொரோவைப் புறந்தள்ளுவது கடினம்தான், குறிப்பாக கேப் காடில். என்னுடனும், இந்த வினோதமான நுவார் புத்தகத்திலும் அவர் உடனிருந்தார். ஏனெனில் கிட்டத்தட்ட நூற்றைம்பது வருடங்களுக்கு முன்னரே அவர் கேப்பை இவ்வாறு நுட்பமாக அவதானித்திருக்கிறார்: “”But there are many holes and rents in this weather- beaten garment not likely to be stitched in time, which reveal the naked flesh of the cape and its extremity is completely bare.”
ஆனால் வீட்டிற்குத் திரும்பிப் பயணிக்கையில் அவருடன் முரண்படுவதையும் உணர்ந்து கொண்டேன். நானுமே அவர் கடுமையாக நக்கல் செய்த “உப்புப்பானத்தைக் காட்டிலும் மதுபானத்தைப் பற்றி அதிகமாகச் சிந்திக்கும்”, அந்த நுவார் புத்தகம் “கோடை மக்கள்” என்று வகைப்படுத்திய ஒருவன்தான். ஆனால் தொரொ அனுமானித்ததைப் போல் இவ்விடம் எனக்கு ஏமாற்றத்தை அளிக்கவில்லை. நாங்களும் எங்கள் “கோடை மக்கள்” உடைகளைச் சுருட்டி வைத்துவிட்டு எங்கள் “year-rounder” வழக்கங்களுக்குத் திரும்பி விட்டோம். புத்தகத்தையும் ஆமசான் துரிதமாகவே கொண்டு சேர்த்துவிட்டது. ஜெட்டையா பெரியின் Twenty-Eight Scenes for neglected guests கதையைப் பெருந்தீனிக்காரனின் வேட்கையோடு படித்து முடித்தேன். கடற்கரையில் நடக்கும் ஒரு குற்றத்திற்கான காட்சியமைப்பு, டாட்டூ செய்யப்பட்ட ஒரு உடல், மற்றும் பருமனான குட்டை கால்களுடைய ஒரு கருப்பு நாயுடன் கதை தொடங்குகிறது. பொம்மலாட்ட நாடகத்திற்கான ஒத்திகைகள் (Neglected guests), மாந்திரீகம், காதல் முக்கோணங்கள் என்று கிறுகிறுக்க வைக்கும் ஒரு காக்டெய்ல் பானகமாக விரிந்து இறுதியில் கடற்கரைக்கும் மறைந்துவிடும் ஒரு நபருக்கும், அக்கடற்கரையில் தனியே நடந்தபடி முக்கியமான ஏதோவொன்றை கண்டுபிடிக்கும் தறுவாயில் இருக்கும் ஒரு கருப்பு நாய்க்கும் நம்மை மீண்டும் அழைத்து வந்துவிடுகிறது.
புத்தகத்தைப் படித்துமுடித்து கீழே வைக்கையில் என் மகன் அறைக்குள் நுழைந்தான். புத்தகத்தை அடையாளம் கண்டுவிட்டு நான் அதைக் களவாடிவிட்டேனா என்று கேட்டான். கண்டிப்பாக இல்லை, ஆமசானிலிருந்து வாங்கினேன் என்று அவனுக்கு உத்தரவாதம் அளித்தேன். Very Sus! என்று அவனுடைய வினோதமான ஆங்கிலத்தில் இடைமறித்தான். அதைக் களவாடிக் கொண்டுவந்திருப்பதே அப்புத்தகத்திற்கு பொருத்தமாக இருந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டு மர்மமாக முறுவலித்தேன். அடுத்தமுறை, ஒருக்கால்!
புத்தகத்தை எதேச்சையாகக் கண்டெடுத்து அதன் இன்பங்களில் லயித்திருந்தது நிறைவாகவே இருந்தது. பாழாய்ப் போன வாழ்நாள் வாசிப்புத்திட்டப் பட்டியலைப் போட்டதிலிருந்து இம்மாதிரியான இன்பங்களை நான் அனேகமாகத் துறந்துவிட்டேன். கேப்பை அனுபவித்தபடியே அதன் இருண்மையான ஆழங்களை Cape Cod Noir-இல் படித்தது சுவாரஸ்யமாக இருந்தது. மேற்பரப்பிற்கு அடியே ஏதோவொன்று நடந்துகொண்டே இருப்பதை, டேவ் செல்ட்ஸர்மனின் நாயகன் கூறுவது போல் “ஊரின் ஜொலிக்கும் மென்பூச்சில் தெரியும் சிறு உடைசல்கள்” பற்றிய உணர்வு. நம் விழைவுகளின் ஆதர்ச ஒளியில் மிளிரும் நம் “வேறெங்கோ”க்களின் ‘இங்கே’ யை எதிர்கொள்வதைப் போல். பால் தொரோ கேப் காட் புத்தகத்தில் தொரோவின் மாபெரும் கண்டுபிடிப்பு என்று அவதானித்ததைத் திருப்பிப் போடுவது போல்
“கடற்கரை ஒண்டித்திரிதலைக் குருத்துவ நிலைக்கு உயர்த்தி கரையிலிருந்து கூர்ந்து ஆராய்வதே கடலை அறிந்துகொள்வதற்கான ஒரே வழி.”
வேற்றிடத்தை இங்கு கண்டெடுப்பது என்றே நான் அக்கண்டுபிடிப்பை அர்த்தப்படுத்திக் கொண்டேன். உலின் நுவாரை “ப்ளூஸ் இசையின் இலக்கிய வடிவம்” என்று கூறியது நினைவிற்கு வருகிறது. கிரிஸ் கிருஸ்டொஃபரின் “ME and Bobby Mcgee பாடலை கசப்பும் இனிப்பும் பின்னிப் பிணைந்திருக்கும், நம்மை அலைக்கழிக்கும் ஜானிஸ் ஜாப்லினின் குரலில் முதல் தடவையாகக் கேட்டதை நினைத்துக் கொள்கிறேன். அதில் அவரும் பாபியும் “thumb a diesel down”, பாபி ப்ளூஸ் பாடுகிறான், அவர்கள் “ஓட்டுநர் அறிந்திருந்த அனைத்துப் பாடல்களையும் பாடுகிறார்கள்”. “நான் தப்பி ஓடுகிறேன். ஓடுவதில்தான் சுதந்திரம் இருக்கிறது” என்று Cape Cod Noir புத்தகத்தில் வில்லியம் ஹேஸ்டிங்சின் நாயகன் கூறுகிறான். ஆனால் நுவார் என்பது ஓடுவது மட்டுமல்ல, ஹார்பூனை தூக்கி எறிகையில் அதன் கயிறு உங்கள் கழுத்தில் சிக்கிக்கொண்டு அந்த “nameless, inscrutable, cozening, hidden thing” கிற்கு பின்னே (அதன் பெயர் மோபி டிக் என்பதும் நமக்குத் தெரியும்) கடலின் ஆழங்களுக்கு உங்களை இழுத்துச் செல்வதும் நுவார்தான். இப்போது இதை எழுதுகையில் ஜாப்லினின் பாடலின் ஒரு வரியை எண்ணிச் சிரித்துக் கொள்கிறேன்: “I pull my harpoon out of my red bandana”. அற்புதமான அந்த பாடல் கூறுவது போல், நுவார் என்பது “போகமாக உணர்வதே போதுமானது” (“feeling good was good enough”) என்று உணரும் தறுவாயில் ஒரு சித்தரைப் போல் “சுதந்திரம் என்பது இழப்பதற்கு ஏதுமில்லை என்ற நிலைக்கான மற்றொரு பெயரும்தான்.” என்பதையும் உணர்ந்து கொள்வதுதான்.
———-
நம்பி கிருஷ்ணன்,
July 16, 2021
மூலநூல்கள் / மேலும் படிக்க:
- Ulin, David L et al, Cape Cod Noir, Akashic Books, 2011
- Thoreau, Henry David, Cape Cod, Penguin, 1987
- Thoreau, Henry David, Walden and Other writings, Barnes & Noble Books, 1992
- Melville, Herman, Moby Dick, Modern library, 2000
- Hawthorne, Nathaniel, The Scarlet Letter, Modern Library, 2000