மலையாளத்தின் குறிப்பிடத்தக்க இளங்கவிஞர்களில் ஒருவர் சியாம் சுதாகர். 16-10-1983-இல் பிறந்தவர். சொந்த ஊர் பாலக்காடு. இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு ஈர்ப்பம் (ஈரம்) 2001-ல் வெளிவந்தது. இரண்டாவது தொகுப்பு அச்சிலிருக்கிறது. இளங்கவிஞர்களுக்கான வள்ளத்தோள் கவிதை விருதும், நத்திதா கவிதை விருதும், சென்னை மலையாள சமாஜம் விருதும் பெற்றிருக்கிறார். மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் பரவலாக எழுதி வருகிறார்.
வேண்டுகோள்
திரும்பிப் போவதற்கு
வேண்டுமென்றே
மறந்து
வானவில்லை மலர்த்தி
தண்ணீரிலிட்டு
ஒரு அனாதை தோணிக்காரன்
துடுப்பிற்குக் கெஞ்சுகிறான்,
மூழ்குகிற கப்பலின்
அறிமுகமற்ற மாலுமியிடம்.
மழையில்
வடக்கிலிருந்து
மேற்கு நோக்கிப் போகிற
ஆறு கால்களுள்ள ஒரு
டிரக் வாகனம்.
மழைக்காலக் குளிர்மையில்
தான் லயித்து
கிழக்கிலிருந்து
தெற்கு நோக்கிப் போகிற
ஒரு மொபெட்டின்
எளிமையான தாளம்.
பரஸ்பரம் காணாமல்
மதிமறந்து முத்தமிட்டு
வழுக்கிச் செல்கிற எதிரொலி.
படபடத்துப் பறக்கின்ற
மினுமினுப்பான உடைகள்.
கண் பொத்திக்கொண்டு
ஆழ்ந்த பாவனையில்
மேற்கை இலக்கு வைத்து
தொடர்கிற
ஆறு கால்களுடைய வாகனம்
கருப்புத் தளத்தில்
பீறிட்ட ரத்தமும்
பெட்ரோல் படிந்த மூளையும்
வண்டியுடன்
சிதறித் தெறித்த
திணறும் இதயமும் கைவிட்டு
மொபெட் உரிமையாளன்
சாலையின் தெற்குப் புறத்தே
விலகி நின்றான்.
ஒற்றையாள் நாடகம்
சீஸர்
என்றஇந்தத் தீவில்
நான் தனியே இருக்கிறேன்.
சமுத்திரம்
எனும்
கொந்தளிப்பில்
சூரியன்
எனும்
எதிர்க் கலவரம்
மூழ்கிவிட்டிருந்தது.
அறிவின் அடையாளம் கொண்டிருக்கிற
கொலையாளித் திமிங்கிலமோ
ஒற்றைக் கண்ணுள்ள யவனனோ
ஏறி வரலாம்.
நான்
வெளிச்சம்
வைத்திருக்கவில்லை.
காஸ்கா எனும் காற்று
புரூட்டஸ் எனும்
பனி,
பயம் எனும்
இருட்டு.
கவசம் அணிந்த
மனதின்
உறுதியான நடத்தையில்
கசிகிற
கிளியோபாட்ரா
எனும் நிலா.
-உருகிப் போகலாம்
சிலவேளை
தனிமையான
இத்தீவில்
நான் கட்டிச் சமைக்கின்ற
பற்றற்ற வாழ்க்கையின்
இந்த மணல் வீடுகள்.
மிருகப் பார்வை
உன் தலைதானா சுவரில்?
வேட்டைக்காரர்களின்
புகைப்படங்களுக்கு நடுவே
வாயிலின் மேல்பகுதியில் இருக்கிறது,
உடல் சுவருக்குள் மறைக்கப்பட்டு
உன் கழுத்தில் உள்ள
புள்ளிகளுக்கு
அன்றைய பளபளப்போ
பார்வைக்கு
பழைய கருணையோ
இல்லை.
கண்களில் பதிக்கப்பட்ட
ஒளிர்கின்ற கோலிகள்
என்னை
பார்த்ததாகக்கூட
காட்டுக்கொள்ளவில்லை.
அன்பு
இப்போது
பயத்தின்
பிரதிபிம்பமாகிறது.
இதோ
புலனாகாச் சிலந்தி வலையில் சிக்கி
நெரிபட்டு வற்றி
நிறம் மங்கிய
மிருகத்தோல்,
உயிரற்ற முகம்,
பெரிய வீட்டின் சுவர்!
குளம்
மங்கிய தாமரையின் கீழே
சிந்திக்கின்ற மீன்கள்.
நடுவிலிருக்கும் பாறையினடியில்
ஒதுங்கியிருக்கும் நீர்ப் பாம்புகள்.
முட்டையிட்டு விளையாடுகின்ற கொசுக்கள்.
முடியை விரித்துப் போட்டுச் சிரிக்கின்ற
பாறையின் எழுத்துகள்.
கரம் சிரம்
புறம் நீட்டாதீர்
என்றது ஆமை.
குளத்தின் துக்கத்தை
மோட்டார்கள் குடித்துத் துப்பின.
கூட்டம் எதிர்பார்ப்பில் இருமடங்கானது.
விழித்துப் பார்க்கும் கண்களில்
காட்சிகளின் வெறுமை
கையில்லாத விரல்கள்
துழாவியெடுத்தது
செலாவணி கரையேறிய
ஒரு சிறிய மனித நாணயம்.
ஈரம்
எதிர்பாராமல் நடந்தது:
என் உறக்கத்தின்
எரிபொருளை அணைப்பதற்கு
யாருடையவோ டைம்பீஸ்
குரூரமாக வெடித்துச் சிரித்தது.
குளிரைத் தடுக்க
மெல்லிய ஒரு போர்வையே
எனக்குச்
சொந்தமாக இருக்கிறது.
வறண்ட உதடுகளுக்குச்
சற்று மேலே உள்ள
பஞ்சுகளில்
ஈரம் உண்டு.
இனி எத்தனை நாள் –
தசையை மரத்துப்போகச் செய்த
மார்ச்சுவரி விட்டு
அது தின்னப்படுகிற
வேறு எங்காவது சென்றடைய?
வாசலில் விக்கல்கள்
வாசலில் விக்கல்கள்
பாத்திரம் கழுவிய பருக்கைகளை
கொத்தி விழுங்குகின்றன.
கண் தெரியாத மழைக்கு
தாளம் தட்டிக்கொண்டு
ஆர்வத்தின்
ரம்பப் பூக்கள்
கொக்கரிக்கின்றன.
மேல் நோக்கிச் செல்கிற ஒரு ஆழத்திலிருந்து
அடைகாப்பதன் இடத்தில்
முளைக்காத வித்து
உருண்டிறங்கும் முன்பு
ஒரு பேறுபார்ப்பவளை நான்
அழைத்து வருவேன்.
காலதீபம்
வறண்ட இலைகளின்
வெளியே உந்திய விலா எலும்புகளூடே
ஊர்வலமாய் மரணம் நடக்கிறது.
துடிப்பு வற்றிய மயில்
மெல்ல அலகு பிளக்கிறது.
துடிக்கிற மரணத்தின்
நீலக் கழுத்து.
காலில் சுற்றிய பாம்புச் சட்டை
அரித்துப்போன ஒரு வேல்.
ஹைவே ஒர்க்ஷாப்
ஒர்க்ஷாப்காரன்
அவனது கருவியை
கூர் தீட்டிக்கொண்டிருக்கிறான்.
நகரம் கைகால்களை நீட்டி வைத்து
மல்லாந்து படுத்திருக்கிறது.
பிறவி மச்சங்களும் தழும்புகளும்போல
அங்கங்கே காண்கின்ற
இருண்ட சித்திரக் கலைகளை
குளிர்பானம் விற்பவர்கள்
நிழல் என்று அழைக்கிறார்கள்.
வெப்பத்தின் அலைகளைப் பற்றி
இந்த நிழல்களுக்குத்தான்
சரியாக சொல்லமுடியும்.
ஒர்க்ஷாப்காரன்
கருவியைக் கூர்தீட்டுவது
நிழலில் உரசிதான்.
சாலையருகிலுள்ள
கூழாங்கற்களென்று
நாம் நினைப்பவற்றில் சில
விபத்துகளில்
ஆவியாகிப் போகின்றவர்களின்
பல வயதுகளிலுள்ள
பற்களாகலாம்.
கருவி தேய்வதன்
நாராசமான சப்தம் கேட்டு
அந்தப் பற்கள் கூசிப்போகலாம்.
ஒர்க்ஷாப்காரன்
அவனது ஆயுதத்தைக் கூர்தீட்டும்போது
சாலையிலுரசி
விரல்களிலிருந்து ரத்தம் துளிர்க்கிறது.
உரசி உரசி வெளிவருகிற
இரும்பின் பளபளப்பு
இனிப்பு தின்று பூச்சியரித்த
பால்பற்களுக்கும்
பிசாசின் புகை ரூபத்தில் உருட்டி
ஆகாயத்தில் எறிகிற
பெரும் பற்களுக்கும்
அவற்றின் பொற்காலத்தை
நினைவூட்டுகிறது.
காற்றின் சூட்டில்
பற்கள் இழந்தவர்களின் மோகங்கள் வந்து
ஒர்க்ஷாப்காரனின் வியர்வையில்
பற்றிப் படிந்திருக்கின்றன
கிரீஸ் படிந்த துண்டுகொண்டு
அவன் அதை துடைத்தகற்றும்போது அவர்கள்
அவன் செவிகளுக்குச் சுற்றிலும் பறந்து
ஆரத்தழுகிறார்கள்
ஒர்க்ஷாப்காரன்
அவன் வேலையை
தொடர்ந்து கொண்டேயிருக்கிறான்.
ஒருபோதும் தேய்ந்து தீராத
அந்த ஆயுதத்தை
சீர்கெட்ட வண்டிகளுடன் வருகின்றவர்களின்
முகத்தில்
அவன் வீசுகிறான் அவர்களின் மேலண்ணத்தில்
அது
அழந்திறங்கும்போது
பொடிந்து விழுந்த இரும்புத் துகள்களில்
கருத்த விரல் முக்கி
ஒர்க்ஷாப்காரனின் மகள்
மகள் பல்துலகுகிறாள்.
தமிழில் : யூமா வாசுகி.
கவிஞர், புனைகதையாளர், மொழிபெயர்ப்பாளர், ஓவியர் எனும் பன்முகத் திறன்கொண்டவர் யூமா வாசுகி.