சூழலியல் அக்கறை வெகுஜன ஈடுபாடாக ஏன் மாறவில்லை?

நான் கொலம்பியா பல்கலைகழகத்தில் ஆய்வுப் படிப்பை முடிக்கும் சந்தர்ப்பத்தில், 2008-ஆம் ஆண்டு, அறிவியலாளர் ஜேம்ஸ் ஹான்சன் என்பவர் நடத்திய கருத்தரங்கில் கலந்துகொண்டேன். அதற்கு முன்பே ப்ரூனோ லதூர் உள்ளிட்ட சிந்தனையாளர்களைப் படித்ததாலும், ஓரிரு சந்தர்ப்பங்களில் லதூரின் உரைகளை நேரில் கேட்டிருந்ததாலும் நவீன அறிவியலின், தொழில்நுட்பத்தின் தத்துவார்த்த அடிப்படைகள் மீதான விமர்சன நோக்கும், புவி வெப்பமடைதல் குறித்த பிரச்சினைகளில் ஈடுபாடும் உருவாகி இருந்தது.

ஜேம்ஸ் ஹான்சன் புவி வெப்பமடைதல் குறித்து எண்பதுகளில் அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்களிடையே உரையாற்றியவர். சூழலியல் மாற்றங்கள் குறித்த சிந்தனைகளில் ஒரு முன்னோடி. நான் சென்ற கருத்தரங்கில் ஹான்சனின் நீண்ட உரையில் அவர் பல்வேறு சூழலியல் பிரச்சினைகளைப் புள்ளிவிவரங்கள், புகைப்படங்களுடன் விளக்கினார். அவர் தன் உரையின் பகுதியாக இமயமலை தன் பனிப்படலங்களை முற்றாக இழந்துவிடும் என்று கூறி அதற்கு ஆதாரமாக இப்போதே நிகழ்ந்துவரும் மாற்றங்களை விளக்கியதும், கங்கை, யமுனை நதிகளில் முதலில் வெள்ளப்பெருக்கும் பின்னர் நீர்வரத்து வற்றிப் போதலும் நிகழலாம் என்றும் விளக்கியபோது எனக்கு மனம் கலங்கிவிட்டது.

இந்தக் கட்டுரையை எழுதத் துவங்கும்போது ஜார்க்கண்டில் நந்தாதேவி சிகரத்தில் பனிப்பாறை வெடிப்பு ஏற்பட்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதைத் தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தது. இது போன்ற நிகழ்ச்சிகள் அதிகரிக்கும் என்பதைத் தான் ஹான்சன் அன்று விளக்கினார்.

இதனால் மிகவும் தூண்டப்பட்ட நான் தமிழில் தொடர்ந்து சூழலியல் பிரச்சினைகள் குறித்துதான் எழுத வேண்டும் என்று நினைத்தேன். நான் இணையத்தில் எழுதிய சில சிறு கட்டுரைகளின் தொகுப்பொன்று முதலீட்டியமும், மானுட அழிவும் என்ற பெயரில் புலம் வெளியீடாக 2010-ஆம் ஆண்டு வெளியானது. இது குறித்து ஒரு சில விவாதங்கள் நடந்தாலும், என்னால் பிரச்சினையின் தீவிரத்தைச் சரியாக எடுத்துரைக்க முடியவில்லையென்றே தோன்றியது. பொதுவாகவே தோழர்கள், நண்பர்கள் பலருக்கும் சூழலியல் சீர்கேடுகள் குறித்து விவாதிப்பதில் அதிக ஆர்வம் இருக்கவில்லை.

என்னுடைய தனிப்பட்ட பார்வையில் முதலீட்டிய உற்பத்தி முறையை, நுகர்வுக் கலாசாரத்தை, உற்பத்தி-நுகர்வு சுழற்சியை முற்றிலும் மாற்றியமைக்காமல் சூழலியல் சீர்கேட்டைத் தடுத்து நிறுத்துவதோ, அழிவிலிருந்து மானுடத்தை காப்பதோ சாத்தியமேயில்லை. உண்மையான சூழலியல் அரசியல் என்பது சமரசமற்ற முதலீட்டிய எதிர்ப்பு என்பதுதான் என் எண்ணம். சில நண்பர்கள் முதலீட்டிய எதிர்ப்பு என்றாலே கம்யூனிசம் என்று நினைத்துக்கொண்டு பிரச்சினை செய்வார்கள். அவர்களிடம் சீனாவைப் பற்றி பேசி விளக்குவதற்கு அதிக சக்தி வேண்டும். எனக்கு சட்டென்று ஆர்வம் குறைந்துவிடும். மேலும் இந்தச் சூழலியல் அக்கறையின்மை உலகளாவியது. ஏதோ தமிழ்ச் சமூகம் மட்டும்தான் சூழலியல் பிரச்சினைகள் குறித்து அக்கறையற்று இருக்கிறது என்பதல்ல. நான் கொலம்பியா பல்கலைகழகத்தில் சென்ற ஜேம்ஸ் ஹான்சன் கருத்தரங்கத்திலேயே பாதி நாற்காலிகள் காலியாகத்தான் இருந்தன.

னக்கு அடிப்படையில் மனித குலத்தின்மீது அன்பும், பாசமும் அதிகம் இருந்தாலும், சரியானபடி சிந்திக்கும் ஆற்றல் மானுடர்களிடையே மேலோங்கும் என்ற நம்பிக்கை அதிகம் கிடையாது. எப்படியும் ஐம்பது முதல் நூறாண்டுகளில் இப்போதுள்ள வடிவில் மானுடம் அழிந்துபடும் என்றே தோன்றுகிறது. அதனால் சரி, சுற்றுச்சூழல் சீர்கெட்டு அழிவதுதான் மானுடர்களின் தேர்வென்றால் நான் ஏன் அதிகம் அலட்டிக்கொள்ள வேண்டும் என்று தோன்றியதால், எல்லோரும் ஆர்வம் காட்டும் வெகுஜன சினிமா, வெகுஜன அரசியல் குறித்து எழுதத் துவங்கிவிட்டேன்.

பொதுவாக என் சிந்தனைப் புலம் தத்துவார்த்த மானுடவியல் என்பதால் எதைக்குறித்து சிந்தித்தாலும், எழுதினாலும் எனக்குச் சில பார்வைகளும், கோணங்களும் இருந்ததால் அவற்றை எழுதலாம் என்று தோன்றியது. என் எழுத்துக்கள் எல்லாவற்றிற்கும் சில உள்ளார்ந்த தொடர்புகள் உண்டு என்று நம்புகிறேன். அதனால் நேரடியாகச் சூழலியல் குறித்து எழுதாவிட்டாலும் அதைப் புரிந்துகொள்ள தேவையான விமர்சன சிந்தனையை வலுப்படுத்தும் விதமாகவே எழுதிவருவதாக எண்ணுகிறேன்.

இந்தக் கட்டுரையில் சூழலியல் குறித்த அக்கறை நம் சமூகத்தின் வெகுஜன மனோவியலில் முக்கியத்துவம் பெறுவதில் என்னென்ன சிக்கல்கள் இருக்கின்றன என்பதைத் தொகுத்துக் கொள்ள விரும்புகிறேன். எத்தனையோ சிக்கல்கள் இருந்தாலும் ஒரு ஆறு அம்சங்களை விவாதிக்கலாம் என்று நினைக்கிறேன். 1) இயற்கையும், மானுடமும்; 2) மூட நம்பிக்கையும், அறிவியலும்; 3) ஏழ்மையும், வளர்ச்சியும்; 4) சமத்துவமும், மானுடவாதமும்; 5) பெண்மையும், ஆண்மையும்; 6) முதலீட்டியமும், மக்களாட்சியும். மிகவும் சுருக்கமாகத்தான் இந்தப் பிரச்சினைகளைப் பேச முடியும் என்றாலும் உரையாடல் பங்களிப்பாக சிலவற்றைச் சொல்லலாம் எனக் கருதுகிறேன்.

1. இயற்கையும் மானுடமும்

உலக அளவில் சூழலியல் செயற்பாட்டாளர்கள் பலரின் சிக்கல் அவர்கள் இயற்கையைக் காப்பாற்றுவோம் என்று பேசத் துவங்கியதுதான். மரங்களைக் காப்பாற்றுவது, துருவக்கரடிகளைக் காப்பாற்றுவது, நதிகளைக் காப்பாற்றுவது என்று எதையாவது காப்பாற்றுவதே சூழலியல் அரசியல் என்ற ஒரு எண்ணம் மக்களிடையே வேறூன்றிவிட்டது.

உதாரணமாக நாம் ஏன் மரங்களைக் காப்பாற்ற வேண்டும்? அவற்றை தாராளமாக வெட்டித்தள்ளி நமக்கு தேவையான வகையில் உபயோகப்படுத்தலாமே? மரங்கள் அழகாக இருக்கின்றன, அல்லது மரத்தை வெட்டும்போது அதற்கு வலிக்கும் என்பதற்காகவா மரங்களைக் காப்பாற்ற வேண்டும்? உண்மையிலேயே சிலர் இது போல செண்டிமெண்ட் காரணங்கள்தான் சூழலியல் அக்கறை என்று நினைக்கிறார்கள். மரங்கள் இல்லாவிட்டால் அது சூழலை பாதிக்கிறது; காற்றில் மாசு அதிகரிக்கிறது. காடுகளும், மரங்களும் மழைப் பொழிவதற்கு அவசியமானவை என்பன போன்ற அறிவியல் ஆய்வுகளால்தான் மரங்களைக் காப்பது குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. அதாவது மரங்கள் இல்லாவிட்டால் மனிதர்கள் வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதால்தான் மரங்களைக் காப்பது சூழலியல் அரசியல் நடவடிக்கை ஆகிறது.

ஒருமுறை நியூயார்க்கில் இளம் வயதினர் சிலர் துருவக்கரடிகளைக் காப்பது குறித்த கோரிக்கை மனுவில் கையெழுத்து கேட்டார்கள். நான் அவர்களிடம் ஏன் துருவக்கரடிகளைக் காக்க வேண்டும் என்று கேட்டேன். அவர்கள் பாவம், ஒரு உயிரினம் அழிந்துபடக்கூடாது என்றார்கள். நான் அவர்களிடம் “மனிதர்கள் நாம் அழிவதைப் பற்றி துருவக்கரடிகள் சிறிதும் கவலைப்படுவதில்லை; நான் ஏன் அவற்றிற்காக கவலைப்பட வேண்டும்?” என்று கேட்டேன். அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. விளையாட்டிற்குச் சொல்கிறேனா, அல்லது நான் கொஞ்சம் கிறுக்கா என்று பார்த்தார்கள்.

பின்னர் எப்படி துருவப் பிரதேசத்தில் ஏற்படும் சூழலியல் மாற்றத்தால் துருவக்கரடிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதோ, அதே போல மானுடர் வாழ்வாதாரங்களும் அதே மாற்றத்தால் பாதிக்கப்படப் போகிறது என்பதைச் சுட்டிக்காட்டி விளக்கினேன். நாம் மனிதர்கள் மிகவும் புத்திசாலிகள், துருவக்கரடிகள்தான் பாவம் தங்களை காத்துக்கொள்ள முடியாதைவை என்ற மேட்டிமைத்தனத்திலிருந்து பேசக்கூடாது என்றும் வலியுறுத்தினேன். துருவக்கரடிகளும், மானுடமும் ஒரே சிக்கலைத்தான் சந்திக்கின்றன. எனவே மனிதர்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டே துருவக்கரடிகளையும் காப்பாற்ற வேண்டும், சூழலியல் சமநிலையைக் காப்பாற்ற வேண்டும், அதனால் நம்முடைய இனத்தின் எதிர்காலத்திற்காக, மானுடத்தைக் காப்பதற்காக கோரிக்கை மனுவை மாற்றி எழுதினால் கையெழுத்து போடுகிறேன் என்றேன். அவர்கள் புரிந்துகொண்டார்கள்.

சூழலியல் பிரச்சினையின் துவக்கம் என்பது மனிதர்கள் தங்களை இயற்கையிலிருந்து அன்னியப்படுத்திக் கொண்டதில் துவங்குகிறது. இயற்கை வேறு, மானுடக் கலாசாரம் வேறு என்று அர்த்தப்படுத்திக் கொண்டதில் இந்தப் பிரச்சினை துவங்குகிறது. உதாரணமாக என்ன சொல்வார்கள் என்றால், ஒரு மிருகம் தன்னுடைய இச்சையைக் கட்டுப்படுத்திக்கொள்ளாது. அதற்கு உடலில் பசியோ, பாலுறுவுத் தூண்டலோ தோன்றிவிட்டால் அவை இரையின் மீதோ, இணையின் மீதோ எந்தவிதக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் பாய்ந்துவிடும். ஆனால் மனிதர்கள் கடும்பசியில் இருந்தாலும் மற்றவரிடம் உணவைக் கேட்கத் தயங்குமளவு அற உணர்வு கொண்டவர்கள். தன்னுடைய உணவை விருந்தாளிக்குக் கொடுத்துவிட்டு இல்லத்தரசி பட்டினி கிடக்கும் பண்புடையவள். அதே போல காம இச்சையையும் நெறிப்படுத்தி, தன்னுடைய துணைவராக ஒப்பந்தம் செய்யப்பட்டவருடன் மட்டுமே உறவுகொள்ளும் பண்பும் மானுடருக்கு உண்டு. இவ்வாறு இச்சைகளைக் கட்டுப்படுத்தி அறநெறி சார்ந்து வாழும் ஆற்றல் மனிதருக்கு உண்டு என்பதால் அவர்கள் வெறுமனே இயற்கையின் அங்கமல்ல என்ற எண்ணம் மானுடவாத சிந்தனையின் அடிப்படையாக மாறியது.

இதில்தான் மிகப்பெரிய பிழை நிகழ்ந்தது. மனிதர்களால் இச்சைகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள இயல்வது என்பது அவர்களது நரம்பு மண்டலம் சாத்தியப்படுத்திய நினைவாற்றலால் விளைவது. அதே நினைவாற்றல் அவர்களை எல்லா நேரமும் இச்சை நிரம்பியவர்களாகவே மாற்றுகிறது. மானுடர் உண்பது, உறவுகொள்வது, துய்ப்பது எல்லாம் உடலியல் தேவைக்காக மட்டும் நடப்பதில்லை. உளவியல் தேவைகளுக்காகவே அதிகம் நடக்கிறது. அதிக இச்சை கட்டுப்படுத்தும் ஆற்றலால் சமன் செய்யப்படுகிறது. இதெல்லாம் இயற்கைக்கு வெளியில் நடக்கவில்லை. இயற்கையின் ஒரு பகுதியாக, அதன் சாத்தியங்களுள் ஒன்றாகத்தான் நடக்கிறது.

எனவே மானுடர் இயற்கையின் எஜமானர்கள் அல்ல. இயற்கையின் ஒரு அங்கம் மட்டுமே. உண்மையில் பலவீனமான ஒரு அங்கம். அதிக நினைவுகளாலும், அவை ஏற்படுத்தும் அழுத்தங்களாலும் கவலைகளாலும் அல்லலுறும் அங்கம். மனிதர்களால் இயற்கையை அழிக்க முடியாது. அது பலகோடி ஆண்டுகளாகப் பல வடிவமெடுத்து மாறி வந்துள்ளது. மானுடம் தன் வாழ்வாதாரத்திற்கான சூழலை, தன்னுடைய இருப்பைப் பாதுகாத்துக் கொண்டால் போதும்.

கடந்த ஐநூறு ஆண்டுகளாக உருவான மானுடவாதம் (humanism), வரலாற்றுவாதம் (historicism), அறிவியல்வாதம் (scientism) போன்றவை மானுடர்களுக்கு புஜகீர்த்தி, கிரீடம் எல்லாம் அணிவித்து இயற்கை உனக்கு வெளியே இருக்கும் ஜடப்பிரபஞ்சம், நீ அதை விரும்பும்படி ஆண்டு அனுபவிக்கலாம் என்று கூறிவிட்டன. அந்த மனப்பான்மையிலிருந்து முற்றிலும் விடுபடாமல் சூழலியல் குறித்துப் பேசும்போது இயற்கையின் மீது பாசம் வைத்து இரக்கப்பட்டு அதைக் காப்பது போன்ற தொனி உருவாகிறது. பிச்சையெடுப்பவருக்குச் சிலர் தானம் போடுவார்கள், சிலர் போடமாட்டார்கள் என்பது போல சிலர் சூழலியல் பாதுகாப்பிற்காகக் கவலைப்படுகிறார்கள், சிலர் கவலைப்படுவதில்லை. இந்த தர்ம சிந்தனை மனப்போக்கு மாறவேண்டுமானால் சூழலியல் அரசியல் என்பது மானுடம் தன்னைக் காத்துக்கொள்வதற்கான அரசியல், இயற்கையைக் காப்பாற்றும் அரசியல் அல்ல என்பதை உரத்துச் சொல்லவேண்டும்.

மேற்சொன்ன வாதங்களை விரிவாக வாசித்து புரிந்துகொள்ள ப்ரூனோ லதூரின் We Have Never Been Modern, Politics of Nature, Facing Gaia உள்ளிட்ட நூல்களை வாசிப்பது பயன்தரும்.

2. மூட நம்பிக்கைகளும், அறிவியலும்

தமிழ்ச் சமூகமும் சரி, இந்தியச் சமூகமும் சரி பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் அறிவியல் பார்வைகள் தோன்றிப் பரவாத மூடநம்பிக்கைகள் நிறைந்த சமூகங்களாக இருந்தன. உதாரணமாக பாரம்பரிய மருத்துவ முறைகள் பல இருந்தாலும், மாந்திரீகம், மந்திரித்தல் போன்ற நடைமுறைகள் பரவலாக இருந்தன. இப்போது உடற்கூற்று ஆய்வின் துணையுடன் அலோபதி மருத்துவமும், சில பாரம்பரிய முறைகளும் அறிவியல்பூர்வமாக வளர்ந்திருந்தாலும், ஹீலர் பாஸ்கர் போன்ற நவீன மந்திரவாதிகளும், பலவிதமான போலி மருத்துவர்களும் சாமியார்களும் பிரபலமாக இருக்கத்தான் செய்கிறார்கள். நரபலியில் இருந்து பலவிதமான மூடநம்பிக்கை சார்ந்த விபரீத செயல்பாடுகள் தொடரத்தான் செய்கின்றன.

இது போன்ற ஆரோக்கியமற்ற நடைமுறைகளை எதிர்ப்பவர்கள் அறிவியல் நோக்கு என்ற பெயரில் இயற்கையை முற்றிலும் அஃறியணையாக்கி அதை முழுமையாக ஆக்கிரமிப்பதை நியாயமெனக் காண்கிறார்கள். இயற்கையைக் கவின்மையுடன் உயிர்ப்புள்ள சக்தியாகக் காண்பதையும் மூடநம்பிக்கையாக எண்ணுகிறார்கள். உதாரணமாக ஆதிவாசி சமூகங்கள் மரங்களைத் தங்கள் மூதாதையரின் ஆவிகளின் வசிப்படமாகக் காணலாம். அதனால் அவர்கள் மரங்களை வெட்டக் கூடாது, காட்டை அழிக்கக் கூடாது எனலாம். இதைத்தான் கவின்மைநோக்கு (enchantment) என்று சமூகவியலில் அழைக்கிறார்கள்.

அறிவியல் நோக்கு தன்னுடைய அனுபவவாதத்தில் இந்தக் கவின்மைநோக்கையும் நரபலி கொடுப்பது போன்ற மூடநம்பிக்கையுடன் இணைத்துப் பார்க்கிறது. அறிவியல் நோக்கில் மரங்கள் என்பவை வெறும் மரங்கள்தான் எண்ணும்போது, கவின்மைநீக்கம் (disenchantment) நடக்கும்போது, அவற்றை எப்படி வேண்டுமானாலும் வெட்டித்தள்ளுவது காடுகளை அழிப்பது முற்போக்காகவே காணப்படுகிறது. ஆனால் அறிவியலை மூடநம்பிக்கையாக மாற்றிக்கொள்ளாமல், தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளும்போது எப்படி மரங்கள் காற்றிலுள்ள கார்பன் அளவை மட்டுப்படுத்தி புவி வெப்பமடைவதைத் தடுக்கவும், மழைப் பொழிவதற்கும் அவசியமானவை என்று அறியும்போது பழைய கவின்மை நிரம்பிய பார்வையில் ஒரு பொருளிருப்பதைக் காண்கிறோம்.

காலனிய நோக்கில் இந்தியச் சமூகம் பின்தங்கியதாக சாதுக்களும், மகாராஜாக்களும். பாம்புப் பிடாரன்கள் நிரம்பியதாக, எல்லாவற்றையும் இறைவன் செயல் என்றும் விதி என்றும் முன்ஜென்ம பலன் என்றும் இருப்பதாக விமர்சனம் எழுந்ததால் இந்தியப் பிற்காலனிய அரசும் சமூகமும் தன்னை அறிவியல் தொழில்நுட்பத்தில் யாருக்கும் சளைக்காதவர்களாக மாற்றிக் காட்ட வேண்டும் என்று எண்ணியதில் இயற்கையின் மீதான கரிசனங்கள் அனைத்தையும் மறந்து தீவிரமான அறிவியல் தொழில்நுட்ப நோக்கினைச் சுவீகரித்தது. அதிலிருந்து அணைகள், நீர்மின், அணுமின் நிலையங்களுக்கு எதிரான சூழலியல் அக்கறை சார்ந்த போராட்டங்கள் அனைத்தும் வளர்ச்சிக்கு எதிரான போராட்டங்களாகவே பார்க்கப்படுகின்றன.

3. ஏழ்மையும், வளர்ச்சியும்

ஏழ்மை என்பதைப் புரிந்துகொள்வதிலும் பல சிக்கல்கள் உள்ளன. முக்கியமான சமூக இலட்சியங்கள் என்னவாக இருக்கவேண்டும்? அனைவருக்கும் உணவு, உடை, வசிப்பிடம் போன்றவை உறுதி செய்யப்பட வேண்டும்; அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். துப்புரவு தொழிலாளியின் மகன் கணித பேராசிரியராக, மாவட்ட ஆட்சியராக வர இயலவேண்டும். இவையே சம வாய்ப்பின் (equity) இலட்சியங்கள்.

ஆனால் இந்தச் சம வாய்ப்பு இலட்சியத்தைக் கற்பனாவாத சமத்துவமாக நுகர்வுக் கலாசாரம் மாற்றுகிறது. அது அனைவருக்கும் இரு சக்கர வாகனங்களை வழங்குவோம்; அனைவருக்கும் மலிவு விலையில் கார் தயாரிப்போம். அனைத்து ஏழைகளும் விமானத்தில் பயணம் செய்ய வழிவகுக்கும் சூரரை போற்றுவோம் என்றெல்லாம் அபத்தமான ஒரு நுகர்வுச் சமத்துவத்தை உருவாக்க விரும்புகிறது.

இது முதலீட்டிய சந்தைப்படுத்தலுக்கு தேவையாக இருக்கிறது. விளம்பரங்களின் மூலம் மக்கள் அனைவரையும் நுகர்வுக் கலாசாரத்தில் இழுத்தபிறகு அவர்களுக்குக் கடன் கொடுத்து கொத்தடிமைகளாக்கி உழைப்பை உறிஞ்சி உபரிகளைப் பெருக்கி முதலீட்டியம் புதியதொரு செல்வச் சீமான்களின் ஆளும் வர்க்கத்தை உருவாக்கி மகிழ்கிறது. இந்த நுகர்வுப் பெருக்கம் – உற்பத்திப் பெருக்கம் – முதலீட்டிய குவிப்பு என்ற சுழற்சியில் சூறையாடப்படுவது இயற்கை வளங்கள்தான். கார்ப்பரேட் விவாசயத்திற்கு நிலம் தேவை என்பதால் பிரேசிலின் மழைக்காடுகள் தாங்களாகவே தீப்பிடித்து எரிந்துவிட்டன.

எளிமை என்பதும் ஏழ்மை எனபதும் ஒன்றல்ல. ஐந்து ரூபாய் சாக்லெட்டை தறிவேலைக்குப் போகும் தாயும் தகப்பனும் வாங்கி தரவில்லையென்றால் மனமுடைந்து அழும் பேரனை, தன் பால்யத்தில் கொடுக்காப்புள்ளியும் புளியங்காயும் பறித்துத் தின்று மகிழ்ந்திருந்த தாத்தா பார்த்து விக்கித்துப் போகிறார். தன்னுடைய பால்யத்தில் வாழ்க்கையில் இந்த வசதிகளும், வாய்ப்புகளும் இல்லை; ஆனாலும் கடன் சுமையும், EMI கவலைகளும் இருந்தது இல்லை; சாக்லெட்டிற்காக அழ வேண்டி இருந்ததில்லை என்கிறார். தன் மகனும், மருமகளும் எவ்வளவு சம்பாதித்தாலும் மகிழ்ச்சியாக இல்லை என்கிறார். அந்தக் காலத்தில் நாங்கள் இதைவிட மகிழ்ச்சியாக இருந்தோம் என்கிறார். இன்று எளிய வாழ்க்கை என்பது பரிகசிப்பிற்குரியதாக மாறியுள்ளது. அது ஏழ்மை, இல்லாமை என்றே புரிந்துகொள்ளப்படுகிறது. ஸ்மார்ட்ஃபோன் இல்லாவிட்டால் தற்கொலை செய்துகொள்ளவும் முனைகிறார்கள் இளம் வயதினர்.

சைக்கிளில் செல்வது என்பது வசதியானது. கிராமங்களிலும், சிற்றூர்களிலும் சைக்கிள் கடைகள் இருந்தன. ஓரிரு மணிநேரங்கள் சைக்கிளை வாடகைக்கு எடுத்துக்கொண்டு செல்லும் பழக்கம் இருந்தது. ஆனால் அதை இன்று பல இளைஞர்களால் யோசித்துப் பார்க்கவே முடிவதில்லை. கடனில் வாங்கிய பைக்கும், பெட்ரோல் போட்டுக்கொண்டு சுற்றுவதும் இல்லையென்றால் அவர்கள் கெளரவமாக உணர்வதில்லை.

நுகர்வுக் கலாசாரம் அவர்கள் உளவியலை அப்படி வடிவமைக்கிறது. வளர்ச்சி என்ற பெயரில் தேவையற்ற நுகர்விற்கு அடிமைப்பட்டு நிற்கிறது சமூகம். யாருக்கும் அறிவுரை சொல்ல யாருக்கும் தகுதியின்றி மொத்தமாக நுகர்வுச் சமூகமாக, பணத்தின் அடிமைகளாக அனைவரும் மாறிவிட்டனர். இன்றியமையாதது எது, தேவையானது எது என்ற இரு கேள்விகளுக்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கிறது. சோறு அல்லது உணவு இன்றியமையாதது; பிரியாணி ருசிக்கான ஒரு தேவை மட்டுமே. ஆனால் எளிமையை ஏழ்மையாகக் கருதும் சமூகம் அனைத்திற்கும் ஆசைப்படும் உரிமை அனைவருக்கும் இருப்பதாகக் கருதத் துவங்குகிறது. நுகர்வும், துய்ப்புமே வாழ்வில் வெற்றியாகவும், இலக்காகவும் கூறப்படுகின்றன.

4. சமத்துவமும், மானுடவாதமும்

மானுடவாதம் எல்லா பழைய சமூகத் தளைகள், ஆதிக்க மரபுகளிலிருந்தும் விடுபட்டு தன் வாழ்வைத் தானே தீர்மானிக்கும் தனி மனிதனை யோசித்தது. அந்த மனிதன் சுதந்திரமானவன். அவன் அனைவருக்கும் சமமானவன் என்ற இலட்சியத்தை முன்வைத்தது. Liberty, Equality, Fraternity என்று ஃபிரெஞ்சுப் புரட்சியில் முழங்கப்பட்டது.

இது அற்புதமான ஒரு சிந்தனைதான். ஆனால் இதில் சில எதிர்பாராத பக்கவிளைவுகள் இருந்தன. அவை என்னவென்றால் சுதந்திர மனிதனின் பல்வேறு உரிமைகளில் ஒன்று சொத்துரிமை என்பதாக இருந்ததால் விளைந்தவை. அது செல்வத்தை ஈட்டுவதில் ஒரு போட்டியையும், இயல்பாக சமனற்ற நிலையையும் தோற்றுவித்தது.

கோவணம் தரித்தவனுக்கும் ஒரு ஓட்டு, பேச்சுரிமை எழுத்துரிமை எல்லாம் உண்டு; கோடீஸ்வரனுக்கும் ஒரு ஓட்டு, பேச்சுரிமை, எழுத்துரிமை எல்லாம் உண்டு என்று சொல்லும்போது யார் சுதந்திரத்தையும், உரிமைகளையும் அதிகம் பயன்படுத்த முடியும் என்ற கேள்வி எழுகிறது. இதற்குத் தீர்வாக முதலீட்டியம் என்ன கூறியது என்றால் உற்பத்தி பெருகும்போது செல்வம் மேலிருந்து கசிந்து பரவி (trickle down) சமூகம் முழுவதற்கும் ஊடுறுவும் என்று சொல்லியது. ஆனால் அப்படி நடக்கவில்லை, செல்வம் ஒரு சிலரிடமே குவிகிறது என்று தாமஸ் பிக்கெட்டி போன்ற ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இந்தச் சுதந்திர தனி மனிதன் என்ற அடிப்படைக்கு பதிலாக, சமூகம் என்று எடுத்துக்கொண்டு, தனியுடமைக்குப் பதிலாக பொதுவுடமை என்று சிந்தித்த கம்யூனிஸ அரசுகள் சந்தித்த பிரச்சினை என்னவென்றால் பொதுவுடமை என்பது உண்மையில் அரசுடமையாக இருந்ததும் அதனால் அரசிடம் அதிகாரங்கள் குவிந்ததும் அதனால் அரசாங்கத்தில் இருப்பவருக்கும், பிறருக்கும் இடையில் ஏகப்பட்ட ஏற்றத் தாழ்வுகளும், அதிகார சமமின்மையும் ஏற்பட்டது. மேலும் கம்யூனிச அரசுகளும் உற்பத்தி நுகர்வுப் பெருக்கத்தில் ஈடுபட்டதால் அவை அரசு முதலீட்டிய சமூகங்களாகவே விளங்கின. அவையும் சூழலியல் அக்கறையுடன் உற்பத்தி நுகர்வை கட்டுப்படுத்தவில்லை.

இந்த இரண்டு சிந்தனைகளுக்கும் மாறாக வழமைகளின் பிடியில், மரபுகளின் கட்டுப்பாட்டில் மனிதன் வாழ்வதே நல்லது என்று நினைப்பவர்கள் பாதுகாப்புவாதிகள் (conservatives) எனப்பட்டார்கள். இவர்கள் நுகர்வு, உற்பத்திப் பெருக்கத்திற்கு பதிலாக எளிய கூட்டுவாழ்க்கையைப் பரிந்துரைத்தபோது சூழலியல் ரீதியாக நல்ல பாதுகாப்புவாதிகளாக இருந்தார்கள். ஆனால் கலாசார ரீதியாக சில ஏற்றத்தாழ்வுகளை, கட்டுப்பாடுகளை ஆதரிப்பது என்பது பழமையைப் பாதுகாப்பதாக கருதப்பட்டது.

இந்தியாவில் மோஹன்தாஸ் காந்தி ஒரு மாபெரும் ஆற்றலாக, நவீன உலகின் திசைக்கு மாற்றாக சிந்திப்பவராக விளங்கினார். இங்கிலாந்து போன்ற ஒரு சிறிய தீவு தொழில்மயமானதே இவ்வளவு பிரச்சினைகளைத் தோற்றுவித்தால் இந்தியா, சீனா போன்ற பெரிய நாடுகள் இயந்திர/ தொழில்மயமானால் உலகம் வெட்டுக்கிளிகள் புகுந்த வயல் போல் சீரழிந்துவிடும் என்றார். இருபதாம் நூற்றாண்டில் சூழலியல் பாதுகாப்பில் காந்தி போன்று சிந்தித்த ஒரு தேசியத் தலைவரை காண்பது கடினம். அனால் அவரது பாதுகாப்புப் பார்வை சமூக மரபுகளுக்கு வந்தபோது அவர் சாதிய ஏற்றத்தாழ்வின் வன்முறைகளைக் காணாது புறக்கணிப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டார். அம்பெத்கர், பெரியார் உள்ளிட்ட பலர் காந்தியின் சமூகப் பாதுகாப்பு நோக்கினை (social conservatism) கடுமையாக எதிர்த்தனர். இதுபோன்ற முன்னுதாரணங்களால் சூழலியல் பாதுகாப்பு நோக்கு (environmental conservation) சமூகப் பாதுகாப்பு நோக்குடன் (social conservatism) இணைத்தே பார்க்கப்படுகிறது. பணம் படைத்தவர்கள் ஆண்டு அனுபவித்துவிட்டு எழைகளுக்கு எளிமையை போதிப்பது மோசடி என்று கருதப்படுகிறது. பொருளாதார, தொழில் வளம் மிகுந்த மேற்கத்திய நாடுகள் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளிடம் சூழலியல் சீர்கேடு குறித்து கவலைகொள்ளச் சொல்வதும் இவ்விதமாக மோசடியாகப் பார்க்கப்படுகிறது.

5. பெண்மையும், ஆண்மையும்

இயற்கையைப் பெண்ணாகவும், மானுடச் செயலாற்றலை ஆணாகவும் உருவகிப்பது என்பது நெடுங்காலப் பழக்கமாக பல்வேறு மானுடப் பண்பாடுகளில் நிலவி வருகிறது. “அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல” என்னும் வள்ளுவர் “நிலம் என்னும் நல்லாள் நகும்” என்றும் கூறுகிறார். இதன் விளைவாக இயற்கை வழிபாடு, இயற்கையை ரசிப்பது நேசிப்பது, இயற்கை அழகை ஆராதிப்பது என்றெல்லாம் பண்பாடு வளர்த்தெடுத்தாலும் பெண்களை ஆண்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போல இயற்கையையும் கட்டுப்படுத்தி வைத்திருக்க வேண்டும் என்னும் எண்ணமே வலுப்பெற்றது பெண்கள் மீது ஆண்கள் வன்முறையைச் செலுத்துவதுபோல இயற்கையின் மீதும் வன்முறையைச் செலுத்துவது இயல்பாக்கம் பெற்றது.

பெண் = செயலூக்கமின்மை (passive) = இயற்கை

ஆண் = செயலாற்றல் (active, agentive) = மானுடம்

என்ற சமன்பாடுகள் பல்வேறு பண்பாடுகளிலும், கலாசாரங்களிலும் விரவிப் பரவிவிட்ட ஒரு சிந்தனையாகும். இது அடிப்படையில் மிகவும் பிழையானது. ஆண், பெண் இருவரிடமும் பாலுறுப்புகள் வேறுபட்டு இருப்பதைத் தவிர வேறு வித்தியாசங்கள் கிடையாது. பெண் மிகுந்த செயலூக்கத்துடன் இயங்க முடியும்.

அதே போல இயற்கைதான் மனிதனையும் இயக்குகிறது. தன்னுடைய இயக்கத்தின் எல்லைகளைத் தாண்டி மனிதர்கள் செயல்பட்டால் இயற்கை அவர்களை அழித்து அப்புறப்படுத்திவிட்டு வேறு உயரினங்களைத் தோற்றுவிக்கும். இதைத்தான் Revenge of Gaia (2006) என்ற பெயரில் James Lovelock என்ற பிரிட்டிஷ் அறிவியலாளர் எழுதினார்.

கயா (Gaia) என்பது கிரேக்க புராணங்களில் பூமியை உருவகிக்கும் பெண் தெய்வம். லவ்லாக் உலகின் சூழலியல் கட்டமைப்பு ஒரு பெரிய வாழும் உயிரியைப் போன்றது எனவும் அது மிகவும் தொந்தரவுக்கு ஆட்பட்டால் அதற்கான காரணங்களை நீக்கி அது தன்னைத்தானே சரிசெய்து கொள்ளும் என்றார். ஆனால் நமது பேச்சு வழக்குகளில் இயற்கையை அகழ்வாரைத் தாங்கும் நிலமாகவே தாய்மையுணர்வுள்ள பெண்ணாக சிந்திப்பது அதைச் செயலூக்கமுள்ள கயாவாக, மானுடரை அப்புறப்படுத்திவிட்டு தன் பயணத்தைத் தொடரவல்ல பெரும் உயிரியாகக் காண முடிவதில்லை.

6. முதலீட்டியமும், மக்களாட்சியும்

இறுதியாக நாம் சந்திக்கும் முக்கியப் பிரச்சினை நமது மக்களாட்சியின் வடிவம். அது தேர்தல் என்பதை மையப்படுத்தியதாக இருக்கிறது. பெருவாரியான ஏழை, எளிய மக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து ஆட்சியை அமைக்கிறார்கள். இந்த ஆட்சியாளர்கள் முதலீட்டு நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் துணையுடன் பொருளாதார வாழ்க்கையை நிர்வகிக்கிறார்கள், அரசின் முக்கியச் செயல்பாடே பொருளாதார வளர்ச்சி என்பதாகத்தான் இருக்கிறது. பெருவாரியான மக்களின் ஆதரவை முதலீட்டிய செயல்பாடுகளுக்குப் பெறுவதற்காக மக்கள் நல அரசாக இயங்கி மக்களுக்குக் குறைந்தபட்ச வாழ்வாதாரத்தை உறுதி செய்கிறது. அதனால் மக்களும் வளர்ச்சி என்ற மந்திரச் சொல்லுக்கு கட்டுப்பட்டவர்களாக இருக்கிறார்கள். இவ்வாறான போக்கில் தோன்றும் முக்கிய முரண் மக்களின் சுற்றுச்சூழல், வாழ்வாதாரம் பாதிக்கப்படுதலாக இருக்கிறது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் ஒரு சிறந்த உதாரணம். ஆலை ஒன்று தொடங்கப்படுவது தொழில்வளர்ச்சி, வேலைவாய்ப்பு என்ற அளவில் வரவேற்கப்பட்டது. ஆனால் அந்த ஆலையால் நிலத்தடி நீரும், காற்றும் மாசுபடுவது கண்டவுடன் மக்கள் போராடத் துவங்கினார்கள். ஆனால் முதலீடு போட்டவர்கள் அதனை இழக்கத் தயாராக இல்லை. ஒரு குறிப்பிட்ட நாளில் கதவடைப்பு போராட்டம் நடத்தியபோது, மக்களைக் காவல்துறை குருவிகளைச் சுடுவதுபோல சுட்டுத் தள்ளியது. அதனால் ஏற்பட்ட கொந்தளிப்பிற்கு அஞ்சி அரசு ஆலையை மூடிவிட்டது. ஆனாலும் வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் இருப்பதால் இறுதி முடிவு என்னவாகும் என தெரியவில்லை.

இப்படி மக்களின் சூழலியல் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கும், முதலீட்டிய வளர்ச்சி நடைமுறைகளுக்குமான முரண்பாடு வலுக்கும்போது அரசியல் கட்சிகளும், ஆட்சியாளர்களும் என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை. பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்ற நிலையில்தான் அவர்கள் இருக்கிறார்கள்.

ஆனால் பிரச்சினை நிதர்சனமாக ஏற்படும்வரை மக்களும் பொருளாதார வளர்ச்சி முக்கியம் என்றுதான் நினைக்கிறார்கள். உலகளாவிய நோக்கு, நீண்டகால நோக்கு ஆகியவை பெரும்பாலானோரைக் கவர்வதில்லை. அவர்கள் அறிவியல் எல்லாவற்றிற்கும் தீர்வு கண்டுவிடும் என நம்புகிறார்கள். அணுக்கழிவுகளை என்ன செய்வது என்பதற்குச் சரியான தீர்வு இல்லை என்று சொன்னால் நம்புவதற்கு அவர்களுக்குக் கடினமாக இருக்கிறது. முன்பு கடவுளை நம்பியது போல இன்று அறிவியலை நம்புகிறார்கள்.

இவ்வாறான பழைய, புதிய மனப்போக்குகளின் இணைவால் சூழலியல் அக்கறை என்பதில் வெகுஜன ஈடுபாட்டை ஏற்படுத்த முடியாமல் இருக்கிறது, ஒரு அழகியல் அல்லது தர்ம சிந்தனை என்ற அளவில் மரம் நடுவிழா எல்லாம் செய்கிறார்களே தவிர தங்களுடைய நுகர்வு-உற்பத்தி பெருக்கத்தைச் சீர்தூக்கிப் பார்க்கத் தயாராக இல்லை. ஞெகிழி என்னும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு எதிராகக் கூட பொதுக்கருத்தை உருவாக்க முடியவில்லை என்பதுதான் உண்மையாக இருக்கிறது.

தொடந்து நாம் எழுதுவதும், பேசுவதும், விவாதிப்பதும் மக்களின் மன்நிலையில் மாற்றத்தைக் கொண்டுவரலாம். தமிழகத்திலும் ஒரு கிரெட்டா துன்பர்க் தோன்றலாம். ஏதாவது நடந்து மானுடம் தழைத்தால் எனக்கு மகிழ்ச்சிதான். ஒருவகையில் பார்த்தால் சுவாரசியமான, அழகிய உயிரினம். அதனுடைய அடிப்படைப் பிரச்சினையான தற்காமத்தை துறந்து இயற்கையைச் சிந்திக்கக் கற்றால் மனித ஆதிக்க யுகம் (Anthropocene) என்ற பூகோளவியல் காலத்தை மானுடப் பேரழிவை நோக்கி நகராமல் தடுக்கலாம்.


ராஜன் குறை – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி; முதலீட்டியமும், மானுட அழிவும், மானுட யத்தனம் என்றால் என்ன?, கதாநாயகனின் மரணம் உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

2 COMMENTS

  1. அடிப்படைகளை விளக்கும் தெளிவான கட்டுரை. எளிமையே இன்று ஏழ்மையாக இருக்கிறது. இன்றியமையாமையின் பட்டியல் நீண்டு விட்டது. நாம் பணத்தின் பிடியில் இருக்கிறோம். பணம் நம் பிடியில் இல்லாமல் ஊதிப் பெருகிவிட்டது

  2. மிக சிறப்பான கட்டுரை. ஆழமான அலசல். அறிவியல், மூட நம்பிக்கை மற்றும் காந்தியின் சூழல் குறித்த சிந்தனையும் மரபுப்பார்வையால் வர்ணாச்சரம ஆதரவு போக்கு என முரண்களை விவரித்த விவாதித்த பாங்கு அருமை. ஆயினும் நம்பிக்கையுடன் முடித்தது மகிழ்ச்சி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.