பிறை நிலா
எவ்வளவு அது தன் முதுகில் சுமந்தே ஆகியிருக்க வேண்டும்,
அந்த நீல நிழலான ஒரு மகத்தான பந்து
என்றாலும் அது எப்படியோ பிரகாசிக்கிறது, ஒரு தோற்றத்தைத்
தக்க வைத்துக் கொள்கிறது. இன்றிரவு பல மணி நேரங்களாக,
அதன் கீழே நான் நடந்தேன், கற்றுக் கொண்டபடி.
துயர்களைச் சுமப்பதில் இன்னும் செம்மையாக நான் விரும்புகிறேன்.
என்னை நிரப்பியிருக்கும் நிழல்களால் உருவான
என் முகம் ஒரு முகமூடியெனில்,
நான் நிலவு போல இவ்வுலகை நோக்கி புன்னகை பூப்பேனாக
வருடங்களுக்குப் பின்
இன்று, நான், தொலைவிலிருந்து
நீ நடந்து அப்பால் போவதைப் பார்த்தேன், அரவம் ஏதுமற்று
ஒரு பனிப்பாறையின் மினுங்கும் முகம்
கடலுள் சரிந்தது. ஒரு கைப்பிடி உலர் இலைகளால் மட்டுமே
வாழ்ந்திருந்த பழமையான ஓக் ஒன்று
கம்பர்லேன்ட்சுக்குள் வீழ்ந்தது, அவளுடைய கோழிக் குஞ்சுகளுக்குச்
சோளம் இறைத்துக் கொண்டிருந்த ஒரு முதிய பெண்
உயரே பார்த்தாள், ஒரு கணம். பால்வெளியின்
இன்னொரு புறம், நம் சொந்த சூரியனைப் போல
முப்பதைந்து மடங்கு அளவுள்ள நட்சத்திரம்,
வானியலாளனின் விழித் திரையில் ஒரு சிறிய பசிய புள்ளியை விட்டு விட்டு
வெடித்துப் பின் மறைந்த அவ்வேளை
அவன் என் இதயமெனும் அந்த மகத்தான திறந்த குவிமாடத்தில் நின்றிருந்தான்,
பகிரக் கூட யாருமற்று.
துக்கம் அனுஷ்டிப்பவர்கள்
ஈமச் சடங்கிற்குப் பின், துக்கம் அனுஷ்டிப்பவர்கள்
தேவாலய வெளியின் மேப்பில்களின் சரசரப்பிற்கு கீழே கூடி
மெல்லிய குரலில் பேசுகிறார்கள், இலைக் கொத்துகள் போல.
வெண்ணிற கை மடிப்புகளும், கழுத்துப் பட்டைகளும் நிழலில் ஒளிவீசுகின்றன:
ஆழ்ந்த, பசிய நீரில் தனித்தொளிர்கின்றன
இன்று மதியம் அவர்கள் இறுதிவிடை கூற வந்திருந்தார்கள்
ஆனால் இப்போது அவர்கள் ஹலோ, ஹலோ என சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்,
ஒருவரையொருவர் உற்றுப் பார்த்தபடி,
ஒருவர், மற்றொருவரின் கரங்களைத் தாமதமாய் விடுவித்தபடி.
ஒரு முன் இலையுதிர்காலக் காலை
நூற்றுக்கணக்கான குருவிகள், ஒவ்வொன்றுக்கும் இரு மனங்கள்
ஒன்று, பிரயாசையற்றும், சுலபமாகவும், மின் கம்பிகளில் அமர்ந்துவிடல்,
இன்னொன்று, பசியோடு, வேற்றிடம் பறத்தல். நாளெல்லாம்
அவை இவற்றில்தான் இருக்கும், அவற்றில் பாதி வானை நிறைத்தபடி,
பூச்சிகளுக்காக விரைந்து, புல்வெளிக்கு அருகே தாழப் பறந்தபடி,
இன்னொரு பாதியோ, துணிக் கொக்கிகளின் முடிவற்ற வரிசை போல,
காற்றுள் ஒரே திசையில் சாய்ந்து கொண்டு.
எல்லாம் அப்படியே ஒன்றே போல் காட்சியளிப்பினும், ஒவ்வொன்றும்,
அருகிலிருப்பதற்கு அந்நியமாய்.
மழைத்துளி
ஒரு முறை, நான் மழைத் துளியொன்றைக் கண்டேன்,
ஒரு பழைய மகிழுந்து விற்பனையகத்திலிருந்த வாகனத்தின் முகப்பில்,
அது ஒரு பளபளப்பான துளி மட்டுமே, ஆனால் அது அதைச் சுற்றியிருந்த
எல்லாவற்றையும் –
மற்ற எல்லா மகிழுந்துகளையும், மேற்கூரை திறந்த உந்துகளையும்,
அதன் மேலே படபடக்கிற ஒவ்வொரு சிவப்பு, மஞ்சள், நீல நெகிழிக்
கொடிகளையும்,
நெடுஞ்சாலை அருகே கட்டுப் போட்ட தண்டும், தளர்ந்த தாங்குகம்பி வளையங்களும் உள்ள
புதிதாய் நடப்பட்ட கன்றுகளின் ஒரு வரிசையையும்,
சிணுங்கும் போக்குவரத்தையும், தலைக்கு மேல்
மழை போல மென்மேலும் தெரிகிற வானையும்
அதனுள் விரைகிற நான்கு அல்லது ஐந்து குருவிகளையும்
தன்னகத்தே கொண்டிருந்தது.
ஒற்றை மழைத்துளி எல்லாவற்றையும் தன்னுள் எடுத்துக்
கொண்டு விட்டது,
கொஞ்சம் குலைந்திருந்தது என்றாலும் அதில் இருந்தது என் முகமும்,
அந்த வளைந்த ஜன்னலை எதிர்பக்கம் அழுத்திக் கொண்டிருக்கும்
ஒரு தட்டையான, வெண்ணிறக் கன்னத்தோடு அது
முழு உலகையும், அதனுள்ளிருக்கும் அனைத்தையும் உற்றுப் பார்த்துக்
கொண்டிருந்தது,
உள்ளிருந்து வெளியே, முதன் முறையாக.
டெட் கூசர் கவிதைகள்
தமிழில்: மிருணா
________________________________________________________________________________
டெட் கூசர் (1939-): 2005-ல் புலிட்சர் விருது பெற்ற ஐக்கிய அமெரிக்கக் கவியான டெட் கூசரின் கவிதைகள், கிராமங்களின், சிறு நகரங்களின் குரலை வெளிப்படுத்தினாலும், உலகளாவிய கருப்பொருளையும், அனுபவத்தையும் பேசுகின்றன. Delights and Shadows, Hundred Postcards to Jim Harrison உள்ளிட்ட 13 கவிதைத் தொகுதிகளை எழுதியிருக்கும் இவர், அமெரிக்காவின் அரச கவியாக (2004) இருந்தவர். இவரின் புதினங்களும், அபுதினங்களும் வரவேற்பும், விருதுகளும் பெற்றுள்ளன.