பருவநிலை மாற்றமும் கடலும்
பெருங்கடல்கள் உலகின் பருவநிலையை ஒழுங்காற்றிவருகின்றன. கரியமிலவளி உள்ளிட்ட பசுங்குடில் வளிகளின் (Greenhouse gases) பெருக்கத்தால் புவிவெப்பம் உயர்ந்துகொண்டே போகிறது. இதன் விளைவாகக் கடலின் தன்மைகள் மாறிகொண்டிருக்கின்றன. வெப்ப மாறுபாடு, அமிலவயமாதல், உயிர்வளி வீழ்ச்சி, கடல் நீரோட்டங்கள், வேதிக்கூறுகளில் மாற்றம், கடல்மட்டம் உயர்தல், எகிறும் புயல் சீற்றம், கடலுயிர்ப் பன்மய வீழ்ச்சி, கடற்கரை, கடல் சூழலியல் சிதைவு- இவை பருவநிலை மாற்றத்தின் நேரடி விளைவுகளில் சில. பருவநிலை மாற்றம் உள்ளூர்ச் சமூகக் கட்டுமானம், பொருளாதாரம், உணவு உத்தரவாதத்தைப் பாதித்துள்ளது; உலக வணிகத்தின் மூலவளங்களைப் பாதித்துள்ளது; உணவு உற்பத்தி, கரிமச் சேர்மம், உயிர்வளி வழங்குதல் உள்ளிட்ட நெய்தல் திணையின் இயங்குதிறனைப் பாதித்துள்ளது. மனிதகுலத்துக்கு நேரவிருக்கும் பெருவீழ்ச்சியின் அபாயமணியாக இந்நிலையை நோக்குதல் வேண்டும்.
புகைவண்டி தொடங்கி, தொழிற்சாலைகள், வாகனங்கள், குளிர்ச்சாதனங்கள் உள்ளிட்ட வளர்ச்சிக்கூறுகள் அனைத்தும் காற்று மண்டலத்தின் கரிமவளி அடர்த்தியைப் பெருக்கிப் பூமியைச் சூடாக்கிக் கொண்டிருக்கின்றன. பசுங்குடில் வளிகள் இதனை மேலும் துரிதப்படுத்துகின்றன. வன அழிப்பு இயற்கையின் நீர்ச்சுழற்சிப் போக்குகளைப் பாதித்துள்ளது. துருவப் பனிப்பாறைகளின் இருப்பு பல்லாயிரம் ஆண்டுகளில் காணாத அளவு தேய்ந்துகொண்டிருக்கிறது.
உலகளாவிய தாக்கம்
பருவநிலை மாற்றம் இன்று உலக எதார்த்தம். அதன் தாக்கங்கள் நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு பரந்துபட்டவை. உலகம் முழுக்க உணவுப்பயிர் விளையும் நிலங்களை இழக்கநேரும், பலகோடி மக்கள் பருவநிலை அகதிகள் ஆகிவிடுவர். கி.பி.2040இல் கங்கைச் சமவெளியிலிருந்து மட்டும் 40 இலட்சம் வேளாண் மக்கள் பயிர்த் தொழிலை இழந்து புலம்பெயர்வார்கள்.
இந்த எதார்த்தத்துடன் இசைந்து வாழ்வது நம்முன்னால் நிற்கும் மிகப் பெரிய சவால்.
கடல் மையம், நிலம் அதன் விளிம்பு!
சமவெளி மக்கள் நிலத்தை மையமாகவும் கடலை விளிம்பாகவுமே பார்க்கிறார்கள். ஊடகர்களுக்கும் அதே பார்வை இருப்பதில் ஒன்றும் வியப்பில்லை. ஆனால் உண்மை அதுவல்ல. கடல் மையம், நிலம் அதன் விளிம்பு. கடலின் கரங்கள் மிக நீண்டவை. புவிக்கோளத்தின் எந்தத் தொலைவிலும் எத்தனை ஆழத்திலும் வாழ்கிற அனைத்து உயிர்களையும் கடல் இடையறாது வருடிக் கொண்டிருக்கிறது.
கடலைக் குறித்து மனிதகுலம் அக்கறைப்பட்டாக வேண்டும் என்று அமெரிக்க கடலுயிரியல் ஆய்வாளர் ரேச்சல் கார்சன் 1951இல் குறிப்பிட்டதை (Book: The Sea around us) இன்று உலகம் உணரத் தொடங்கியிருக்கிறது.
கடல் உலக மக்களின் வாழ்க்கைமுறையை, வாழ்வாதாரத்தை, உலகப் பருவநிலையை எவ்வாறு நிர்ணயிக்கிறது என்கிற அடிப்படைப் புரிதல் நமக்குத் தேவை. அதற்கு முன்னால் கடலுக்கும் சமவெளி நிலத்துக்குமான உறவைப் புரிந்துகொள்ள வேண்டும்.
கடற்கரையின் பல முகங்கள்
ஒரு பொழுதுபோக்குத் தலம் என்பதற்கு அப்பால் கடற்கரையின் சூழலியல், பொருளாதார, பண்பாட்டுப் பெறுமதிகள் ஏராளம். கடற்கரை, காற்றும் நிலமும் நீரும் கைகோர்க்கும் களம் (zone of interaction). அதனால் கலைஞர்கள் தொட்டு கடைசி மனிதர் வரை எல்லோரும் விரும்பும் மனமகிழ் மண்டலம் (recreation). கடற்கரை கடலின் நீக்குப்போக்குகளுக்கு ஒரு தணிப்பான் (Environmental Buffer). கடலொட்டிய நாடுகளைப் பொறுத்தவரை, கடல்தான் அவைகளின் முதல் அரண். ஆனால் கடற்கரையே சமவெளி நிலத்தின் அரணாய் நிற்கின்றது: மணல் மேடுகள், திறந்த மணல்வெளி, அலையாத்திகள், உவர்நீர்ச் சதுப்புகள், கழிமுகங்கள் அனைத்தும் பேரிடர்த் தணிப்பான்களாய்ச் செயல்படுகின்றன. ஆறுகள் கடலில் கலக்குமிடத்தில் (Point of confluence) கழிமுகம் (estuary) என்னும் புதிய சூழலியல் கட்டமைவு (Ecotone) உருவாகிறது. கடற்கரை நிலம் மருதமும் நெய்தலும் மயங்கும் பரப்பு (திணை மயக்கம்). அதனால் பல்லுயிர்ச்செறிவு மிகுந்து காணப்படுகிறது.
கடற்கரை மண்டலம்
கடல் விளிம்பிலிருந்து 60 கிலோமீட்டருக்கு உட்பட்ட பகுதி ‘கடற்கரை மண்டலம்’. இது மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதி. உலகின் 60% மக்கள் இங்கே வாழ்கின்றனர்; துறைமுகங்கள், தொழிலகங்கள், சமூக நிறுவனங்கள், குடியிருப்புகள் அனைத்தும் நிறைந்த பகுதி இது என்பதால் நன்னீர்த் தேவையும் பற்றாக்குறையும் மிகுந்த பகுதி. கடற்கரை நெய்தல் திணைக் குடிகளின் குடிமனை (homestead). அம்மக்களின் தொழிற்களமும் வாழிடமும் அதுதான். கடற்கரை ஒரு விளிம்புநிலப்பகுதி (Terminal Ecosystem). சமவெளி நிலத்தின் மீறல்களும் கசடுகளும் வந்துசேரும் நிலம். மலையும், வனமும், மருத நிலமும் சிதைவுறுவதன் விளைவாகக் கடற்கரையும் கரைக்கடலும் பாதிக்கப்படுகின்றன.
உலகக் கடல்களும் கடற்கரைகளும்
பருவநிலை மாற்றம் குறித்த பன்னாட்டு அரசுகளின் உயர் அமைப்பு (Inter-Governmental Panel on Climate Change- IPCC) அக்டோபர் 2018இல் ஓர் அபாய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது: ‘அடுத்த 10 ஆண்டு காலம் நாம் தீவிரமாய்ச் செயல்படவில்லையென்றால் புவி வெப்பநிலை இரண்டு டிகிரி உயர்ந்துவிடும், இதன் நேரடி விளைவு, கடலொட்டிய நிலப்பரப்புகளைக் கடல் விழுங்கிவிடும்’.
பெருநகரங்கள் உள்ளிட்ட மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகள் கடற்கரையில் அமைந்திருக்கின்றன என்னும் உண்மையை இங்குக் கவனப்படுத்த வேண்டும்.
வெப்ப மாறுபாடு, அமிலவயமாதல், உயிர்வளி வீழ்ச்சி, கடல் நீரோட்டங்கள், கடல் நீரின் வேதிக்கூறுகளில் மாற்றம், கடல்மட்டம் உயர்தல், எகிறும் புயல் சீற்றம், கடலுயிர்ப் பன்மய வீழ்ச்சி, கடற்கரை, கடல் சூழலியல் சிதைவு- இவை பருவநிலை மாற்றத்தின் பிற விளைவுகள்.
பருவநிலை மாற்றம் உள்ளூர்ச் சமூகக் கட்டுமானம், பொருளாதாரம், உணவு உத்தரவாதத்தைப் பாதித்துள்ளது; உலக வணிகத்தின் மூலவளங்களைப் பாதித்துள்ளது; உணவு உற்பத்தி, கரிமச் சேர்மம், உயிர்வளி வழங்குதல் உள்ளிட்ட நெய்தல் திணையின் இயங்குதிறனைப் பாதித்துள்ளது. மனிதகுலத்துக்கு நேரப்போகும் ருவீழ்ச்சியின் அபாயமணியாக இந்நிலையை நோக்குதல் வேண்டும்.
அச்சுறுத்தும் பருவமழைப் போக்குகள்
கடந்த 20 ஆண்டுகளில் அதிகபட்ச வெப்பம் உயர்ந்துகொண்டிருப்பதாக இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு மையத்தின் அண்மைக்கால ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. தென்மேற்கு, வடகிழக்குப் பருவமழைப் போக்குகளில் நேர்ந்துவரும் அதிரடி மாற்றங்களால் பெருவெள்ளப் பேரிடர்களும் பயிர்த்தொழில் பொருளாதார வீழ்ச்சியும் நேர்ந்துள்ளன. காலம் தவறியும் குறுகிய காலத்திற்குள்ளும் பருவமழை பெய்வதால் மழையின் பயனைப் பெறமுடியாமல் போகிறது; நிலத்தால் அந்த மழைவெள்ளத்தைத் தக்கவைத்துக்கொள்ள முடியாது. 80 நாட்களாகப் பெய்யவேண்டிய மழை சில வருடங்களில் 30 நாட்களுக்குள் கொட்டித் தீர்த்துவிடுகிறது. இவ்வாறு கொட்டும் மழை பெருவெள்ளப்பேரிடரை ஏற்படுத்தி மனித உயிரிழப்புக்கும் பொருளாதாரச் சீர்குலைவுக்கும் வழிவகுக்கிறது. கடற்கரை நிலங்கள் தாழ்வான பகுதி என்பதால் இதன் தாக்கம் இயல்பாகவே இங்கு மிகுதியாகிறது.
கடல் மட்டம் உயர்தல்
தொல்லியல் காரணிகளால் (geological factors) கடந்த பத்தாயிரம் ஆண்டுகளில் பூமிக்கு நேர்ந்துள்ள மாற்றங்களைவிடப் பன்மடங்கு தீவிரமான மாற்றங்கள் கடந்த 300 ஆண்டுகளில் நிகழ்ந்துள்ளன. இவை மனிதனின் கட்டற்ற அறிவியல்- தொழில்நுட்ப அணுகுமுறைகளின் உபவிளைவு என்றால் பிழையில்லை.
முப்பந்தைந்து இலட்சம் வருடங்களில் கடல் மட்டம் 25மீட்டர் உயர்ந்திருப்பதாய்த் தொல்லியல் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. பூமிப்பரப்பின் 78 விழுக்காடு பரப்பில் 25மீட்டர் உயரத்துக்குத் தண்ணீர் பெருகிச் சேர்ந்திருக்கிறது. எங்கிருந்து வந்தது இவ்வளவு வெள்ளம்? புவிப்பரப்பின் வெப்பநிலை மாற்றத்தைப் பொறுத்துத் துருவப் பனிப்பாறைகள் இளகிவிடுகின்றன. முப்பத்தைந்து இலட்சம் வருடங்களில் நிகழ்ந்திருக்கும் இந்த 25 மீட்டர் கடல் மட்ட உயர்வு என்பது சிறிதுசிறிதாக ஏற்பட்டதல்ல. கடந்த சில ஆயிரம் வருடங்களில் மூன்று டிகிரி செல்சியஸ் வெப்பம் கூடியபோது விளைந்த மாற்றமிது. தொல்லியல் காரணிகளால் (geological factors) கடந்த பத்தாயிரம் ஆண்டுகளில் பூமிக்கு நேர்ந்துள்ள மாற்றங்களைவிடப் பன்மடங்கு தீவிரமான மாற்றங்கள் கடந்த 300 ஆண்டுகளில் நிகழ்ந்துள்ளன. இவை மனிதனின் கட்டற்ற அறிவியல்- தொழில்நுட்ப அணுகுமுறையின் விளைவு என்றால் பிழையில்லை.
மூழ்கும் கடற்கரைகள்
உலக வெப்பநிலை ஏற்றத்தால் கிரீன்லாந்து உள்ளிட்ட பனிப்பாறைகள் உருகி ஓடத்தொடங்கும்; கடல் மட்டம் பல அடிகள் எகிறும். அதன் முதல் பலி கடலோரப் பகுதிகள்: ஈரநிலங்கள், தாழ்ந்த நிலங்கள், கடற்கரை மணல்வெளிகள். கடல்வெள்ளம் உள்ளேறி கழிமுகங்கள், நிலத்தடிநீர், ஈரநிலங்களை உவர்ப்பாக்கிவிடும். உலக அளவில் சராசரியாக கடல்மட்டம் 0.6 – 2.0 அடி உயரும் அபாயம் இருப்பதாகப் பன்னாட்டுப் பருவநிலை மாற்ற நிபுணர்குழு கணித்துள்ளது. இந்தியத் தீபகற்பத்தைப் பொறுத்தவரை மேற்குக் கடற்கரைகளை விட சாய்பரப்பான (low relief) கிழக்குக் கடற்கரைகள் மிகுதியாக மூழ்கிப்போகும்.
பனிப்பாறைகள் கரைந்து கொண்டிருப்பதோடு, கடல்நீர் வெப்பத்தை உள்வாங்கி விரிவடையும்போது கடல்நீரின் அளவு மிகுதியாகிறது. இதில் முதல் காரணியின் பங்கு 55%; இரண்டாவது காரணியின் பங்கு 30%. இவை தவிர, நிலப்பகுதிகளில் அணைகள், கண்மாய்கள், நிலத்தடிநீர்ச் சேமம் உள்ளிட்ட நன்னீர் இருப்பு தேய்ந்துவருவதும் கடல்மட்டம் உயர்வதற்கு மற்றொரு காரணமாய்ச் சுட்டப்படுகிறது. கடலின் 750 மீட்டர் ஆழப்பகுதியில் வெப்பநிலை 0.5 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளதாய்க் கணக்கிட்டுள்ளார்கள்.
உருவாகும் மரண மண்டலங்கள்
கரிமவளி மிகுதியால் கடல் அமிலவயமாகி (acidification) வருவதாக ஆய்வுகள் சுட்டுகின்றன. கடந்த 250 ஆண்டுகளில் கடற்பரப்பின் கார-அமிலச் சமநிலை 8.1க்குக் கீழே இறங்கியதில்லை. ஆனால் நடப்பு நூற்றாண்டில் இது 7.7 ஆக வீழ்ச்சியடையும் அபாயம் எழுந்துள்ளது. இதன் நேரடி விளைவுகளில் முதன்மையானது மீன்வள வீழ்ச்சி.
கடல் அமிலமயமானால் பவளப்பாறைகள் அழிந்துபோகும். இதன் ஆரம்ப அடையாளங்கள் கிரேட் பாரீயர் ரீஃப் (ஆஸ்திரேலியா) போன்ற பவளப்பாறைகளில் வெளிப்படத் தொடங்கிவிட்டன. பவளப்பாறைகள் இயல்பாக நிறமற்றவை. அவற்றின்மீது பரவிக் கிடக்கும் சூசாந்தெலே உயிரினங்கள்தான் அவற்றுக்கு நிறமூட்டுகின்றன. வெப்பநிலை உயரும்போது சூசாந்தெலே அழிவுக்குள்ளாகிறது. 60-90% சுசாந்தெலே அழிந்துவிடும்போது பவளப்புற்றுகள் வெளிறிவிடுகின்றன. அது பவளப்பாறை அழிவின் தொடக்கம். சுண்ணாம்புத் தோடு அமைந்த உயிரினங்களான சிப்பிகள் (shell fishes), மிதவை உயிரிகள் (zooplankton) அழிவின் விளிம்புக்குத் தள்ளப்படும்; பவளப்புற்றுகள் மிதவை உயிரிகளை உண்டு வாழ்பவை. அவற்றின் அழிவினால் கடலின் உணவுச்சங்கிலி துண்டிக்கப்படும்.
உயிர்வளி வீழ்ச்சி, மீன்வள வீழ்ச்சி
புவி வெப்பநிலை உயர்வின் விளைவாக உலகக் கடல்களின் பல பகுதிகளில் உயிர்வளி வீழ்ச்சி நேர்ந்துவருகிறது. கடலுயிரினங்களுக்கு இது அபத்தான அறிகுறி. வெப்பநிலை ஒரு டிகிரி உயரும்போது உயிர்வளி வீழ்ச்சி 10% அதிகரித்துவிடும். உயிர்வளி வீழ்ச்சி மீத்தேன்வாயு உற்பத்தியைத் தூண்டி, கடலாழங்களில் மீத்தேன் ஹைட்ரேட் வேதிமமாகப் படியவிடும். கடல் வெப்பநிலை உயர உயர, மீத்தேன் ஹைட்ரேட் பசுங்குடில் வாயுவாக வெளியேறி புவிவெப்பநிலை ஏற்றத்தைத் தீவிரப்படுத்தும்.
இந்திய முற்றுரிமைப் பொருளாதார மண்டலத்தின் வங்காள விரிகுடாக் கடற்பகுதியில் 65,000ச.கி.மீ. கடற்பரப்பில் உயிர்வளி வீழ்ச்சி காரணமாக சூரைமீனினங்கள் நிரந்தரமாக இடம்பெயர்ந்துவிட்டன.
இந்தியப் பெருங்கடலில் கடந்த 50 ஆண்டுகளில் சூரைமீன் அறுவடை படிப்படியாகக் வீழ்ச்சியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. 2048இல் ’மீன்களற்ற கடல்’ என்னும் நிலைமை உருவாகலாம் என்கின்றனர் பருவநிலை ஆய்வாளர்கள்.
இந்தியக் கடற்கரை எதிர்கொள்ளும் சிக்கல்
நாடாளுமன்றத்தின் டிசம்பர் 2018 குளிர்காலக் கூட்டத்தில் சுற்றுச்சூழல், காடுகள், பருவநிலை மாற்றத் துறையின் இணை அமைச்சர் மகேஷ் ஷர்மா முக்கியமான ஒரு குறிப்பை முன்வைத்தார்:
“1990-2100 காலகட்டத்தில் பருவநிலை மாற்றத்தால் கடல் மட்டம் 34.6 இஞ்ச் வரை உயர வாய்ப்பிருக்கிறது; அவ்வாறு நேர்ந்தால் கேரளா, கொங்கண், கம்பாட், கட்ச் உள்ளிட்ட மேற்குக் கடற்கரைப் பிரதேசங்களும் கங்கை, கிருஷ்ணா, மகாநதி, கோதாவரி, காவேரி வடிநிலங்களின் கடற்கரைப் பகுதிகளும் கடலுக்கு இரையாகும். இப்பகுதிகளிலுள்ள கடலோர வாழிடங்களை நாம் மொத்தமாக இழந்துவிட நேரும். இந்த அபாயத்திலிருந்து கடற்கரைகளைக் காக்க நம் கையிலுள்ள ஒரே பாதுகாப்பு 2011 கடற்கரை ஒழுங்காற்று அறிவிக்கையில் உள்ள (தடை) விதிகள்தான்.” ஆனால் 2019இல் வெளியிடப்பட்ட கடற்கரை ஒழுங்காற்று அறிவிக்கை இந்த எச்சரிக்கையைக் கிஞ்சித்தும் கணக்கில் கொள்ளவில்லை.
ஒழுங்கின்மையின் புதிய ஒழுங்கு
உலக அளவில் அமேசான் காடுகளுக்கு அடுத்தபடியாக ஆய்வாளர்களால் புரிந்துகொள்ள முடியாத பகுதியாக வங்கக் கடற்பரப்பைச் சொல்லுகிறார்கள். புயல் சூழல் தொடர்ந்து உருவாவதும், புயல்களின் கணிப்பிற்கு அடங்காப் போக்குகளும் மர்மமாகவே நீடிக்கின்றன. பிரம்மபுத்திரா தொடங்கி, வங்கக் கடலில் கலக்கும் ஆறு ஆறுகள் வெப்பநிலையின் பருவச் சுழற்சியைத் தீர்மானிக்கும் முக்கியமான கூறாக அமைகின்றது. இவ்வாறு கடலில் சேரும் நன்னீர் அடர்த்திநிலை மாறுபாட்டின் காரணமாக ஒரு திரவ அடுக்காக நீடித்து கடலாழத்தின் வெப்பச் சலனங்களை இடைமறிக்கிறது. கடலின் மேலடுக்குகளில் இயல்பான வெப்பச் சுழற்சி தடைப்படும் நிலையில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்களும் மேலடுக்குச் சுழற்சியும் மாற்றமடைகின்றன என்கிறார் பருவநிலை ஆய்வாளர் வெங்கடேசன்.
2013 ஒடிசா புயலின்போது துல்லியமான புயல் முன்கணிப்பும் பேரிடர் எச்சரிக்கையும் 11 இலட்சம் மக்களைப் பத்திரமாக இடம்பெயர்க்க உதவியது.
2017 ஒக்கிப் புயலின்போது 450க்கு மேற்பட்ட மீனவர்கள் நடுக்கடலில் உயிரிழக்க நேர்ந்தது. 17 மணி நேர புயல் எச்சரிக்கை ஆழ்கடல் மீனவர்களைச் சென்றடையவில்லை. நவம்பர் 25இல் தாய்லாந்துக் கடலில் உருக்கொண்டு, இலங்கை, இந்தியத் தீபகற்பத் தென்முனை, அரபிக் கடல் வழியாகப் பயணித்து, டிசம்பர் 6இல் குஜராத்தில் வலுவிழந்து கரைகடந்த ஒக்கிப்புயல் 75 ஆண்டு பதிவுகளில் நிகழ்ந்த சேட்டைக்காரப் புயல் (freakish cyclone). அறிவியல் மொழியில்- கணிப்பிற்கடங்காப் புயல். 2018 கஜாப் புயல் கணித்தவாறு நாகப்பட்டினத்தில் கரைகடக்காது வேதாரண்யத்தில் கரையேறியது; நவம்பர் 2020 நிவர் புயல் கடலூர் புதுவைப் பகுதியில் கரைகடக்கும் என்னும் கணிப்பும் பொய்த்தது; நிவர் கரையேறியது மரக்காணம் (விழுப்புரம் மாவட்டம்) பகுதியில். வெங்கடேசன் சுட்டுவது போல, புயல் கணிப்புகள் பொய்ப்பது தொழில்நுட்பத்தின் பிழையல்ல, காற்றழுத்தத் தாழ்வுமண்டலங்களின் கணிப்புக்கு அடங்காப் போக்குதான்.
வங்காள விரிகுடாக் கடற்கரை
உலகிலேயே வறுமை மிகுந்த கடற்கரைப் பகுதியாக டாக்கா முதல் குமரிமுனை வரையிலான வங்கக் கடற்கரைதான் என்று ஓர் ஆய்வு குறிப்பிடுகிறது. பருவநிலை மாற்றத்தினால் அண்மைக் காலங்களில் அதிக பட்சப் பாதிப்புகளைச் சந்திக்கும் கடற்கரையும் இதுதான்.
வங்கதேசக் கடற்கரைகளில் வாழும் பெண்களுக்குக் கர்ப்பப்பை நீக்குச் சிகிட்சைகள் மிக அதிக எண்ணிக்கையில் நிகழ்வதாக ஒரு ஊடகர் தனது ஆய்வில் கண்டுபிடித்திருக்கிறார். கடலோர உவர்நீர் இறால் பண்ணைகளில் பணிபுரியும் பெண்களுக்கு ஏற்படும் தோல்நோய்தான் கர்பப்பைக் கோளாறுக்குக் காரணம் என்பதை அங்குள்ள ஆரம்ப சுகாதார மையங்களிலிருந்து திரட்டிய தரவுகளின் அடிப்படையில் அந்த ஊடகர் வெளியிட்டுள்ளார். இந்தியாவின் கிழக்குக் கடற்கரைகளில் இதுபோன்ற ஓர் ஆய்வுக்கான தேவை உள்ளது. கடலோர உவர்நீர் இறால் பண்ணைகளுக்கெதிரான நீண்ட நெடிய போராட்ட வரலாறு இக்கடற்கரைக்கு உண்டு. கடலோர நிலத்தடி நன்னீர் உவர்ப்பாகிக் கொண்டிருக்கும் சூழலில் கடல்மட்டம் உயர்தல் இச்சிக்கலை மேலும் தீவிரப்படுத்தும். நிலத்தடி நீரின் உவர்தன்மை உயரும் நிலையானது மலேரியா, டெங்கு போன்ற தொற்றுப் பரப்பிகளின் பரவலுக்கு ஏதுவாகிறது.தீபகற்ப மேற்குக் கடற்கரையைப் போலன்றி, கிழக்குக் கடற்கரை நிலம் பொதுவாக கடல்மட்டத்துக்கு நெருக்கமாக அமைந்திருக்கிறது. (low relief topography) இந்த நிலை கடல் உள்ளேற்றத்துக்கு ஏதுவானது.
சென்னை, கடலூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி போன்ற நகர்ப்புறப் பகுதிகளை எடுத்துக் கொண்டால், கடல் மட்டம் 25 சென்டிமீட்டர் ஏறினால் சில கிலோமீட்டர் தொலைவுக்குக் கடல் உள்ளேறிவிடும். நிலத்தடிநீர் உவர்ப்பாகும். நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத சமூக, பொருளாதார நெருக்கடி இது.
சுனாமி, கஜாப் பேரிடர்களின்போது புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் போன்ற ஊர்களைக் கடல் மூழ்கடித்தது நினைவிருக்கலாம்.
சோழமண்டலம்: முன்னர் குறிப்பிட்டது போல, கடலோர நன்னீர்நிலைகள் ஒரு தணிப்பானாகச் செயல்படுகின்றன. பழவேற்காடு ஏரி, பக்கிங்ஹாம் கால்வாய் ஆகிய கடலோர நீர்நிலைகளும் கொற்றலையாறு, பாலாறு, பரவனாறு, வெள்ளார் வடிநிலங்களும் சோழமண்டலக் கரைக்கடலைச் செழுமைப்படுத்திக் கொண்டிருப்பவை.
பாக் நீரிணை: காவிரி வடிநிலமும் அலையாத்திகளும் பாக் நீரிணைக் கடல் சூழலியலைச் செழுமைப்படுத்துகின்றன. ஆழம் குறைந்த குடாக் கடல் போன்ற இப்பகுதியில் மீன்வளம் சிறக்கவும் இவை காரணமாகின்றன.
மன்னார் வளைகுடா: வைகை, தாமிரபரணி வடிநிலங்களோடு தொடர்புள்ள மன்னார்க் கடல் பரப்பு உலகின் ஐந்தாவது கடலுயிர்செறிவு மிக்க பகுதி. பவளப்பாறைகள், கடற்கோரைகள், கடற்பாசிகள், பாலூட்டியினங்கள் உள்ளிட்ட 3600 கடலுயிரின வகைகள் இங்கு வாழுகின்றன. முத்துக்குளித்துறை ஒரு நிலவியல் விபத்து என்று வரலாறு குறிப்பிடுகிறது. உலகக் கடல்களின் சூழலியல் சுட்டிகள் என அறியப்படுகிற பவளப்புற்று இனங்கள் மென்மையான சூழலியலை விரும்புபவை. 21(+/-2)oC வெப்பநிலையில் இவை செழித்து வளர்கின்றன.
பாலாறு, காவிரி, வைகை, தாமிரபரணி ஆற்றுப் படுகைகளிலும் திருநெல்வேலி மாவட்டக் கடற்கரைகளிலும் தொடர்ந்துவரும் மணலகழ்வு கரைக்கடல் சூழலியலையும் மீன்வளத்தையும் பாதித்துள்ளது. கடல் மட்டம் உயர்ந்துவரும் சூழலில், இக்கடற்கரைப் பகுதிகள் மூழ்கிப்போகும் அபாய நிலையில் உள்ளன.
தாமிரபரணி வடிநிலத்தின் வனப்பரப்புகளில் நேர்ந்த மாற்றங்களின் விளைவாகக் கடந்த 2000 ஆண்டு காலத்தில் கொற்கைத் துறைமுகத்திலிருந்து கடல் ஆறு கிலோமீட்டர் தொலைவு பின்வாங்கிவிட்டது. கொற்கை இன்று ஒரு நிலப்பகுதி. நிலத்தைக் கையாளும் முறைகளில் ஏற்படும் மாற்றங்களால் கடலின் போக்குகள் மாறுகின்றன என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்.
கன்னியாகுமரிக் கடற்கரை: 68 கி.மீ. நீளமுள்ள கன்னியாகுமரி மாவட்டக் கடற்கரை 8கி.மீ. கிழக்குக் கடற்கரையும் 60கி.மீ. மேற்குக் கடற்கரையும் கொண்டது. மாவட்டத்தின் பெரும்பான்மையான மக்கள் கடலை ஒட்டிய 15கி.மீ. தொலைவுக்குள் வாழ்கின்றனர். குழித்துறையாறு, வள்ளியாறு, பழையாறு, பன்றிவாய்கால், பாம்பூரிவாய்க்கால் ஆகிய சிற்றாறுகளுடன் அனந்த விக்டோரியா மார்த்தாண்டவர்மா கால்வாய் கடலோர என்னும் நீராதாரமும் கொண்டது. மணக்குடி பழையாற்றுக் கழிமுகத்தில் அண்மைக்காலத்தில் சூழலியல் ஆர்வலர்களின் இடையீட்டினால் அலையாத்தி வனப் பரப்பு உருவாகியுள்ளது.
மாவட்டத்தின் 1684கி.மீ. நிலப்பரப்பில் ஒரு காலம் வரை 980கி.மீ. வனப்பரப்பும் 3200க்கு மேற்பட்ட ஏரி, குளங்களும் அமைந்திருந்தன. இப்போதைய நிலவரப்படி, வனப்பரப்பு பாதியாய்க் குறைந்துவிட்டது; 2000 குளங்கள் மறைந்துவிட்டன; பாசனப் பரப்பு தரிசுநிலங்களாக மாறிக் கொண்டிருக்கிறது. நாகர்கோவில் நகர்ப்புறத்தின் திறந்த கிணறுகள் மறைந்துவிட்டன; நிலத்தடி நீர்மட்டம் தாழ்ந்துகொண்டே போவதால் குழாய்க்கிணறுகளின் பயன்பாடும் குறைந்துகொண்டிருக்கிறது.
பயிர் நிலங்கள் வீட்டுமனைகளாகவும் தரிசு நிலங்களாகவும் மாறிவிட்ட நிலைலையில் நன்னீர்ப் பரப்புகளும் நிலத்தடி நீர்வளமும் அழிந்து கொண்டிருக்கின்றன. வளர்ச்சித் திட்டங்களை முன்னிட்டு ஏராளம் ஏரி, குளங்கள் தூர்க்கப்பட்டுவிட்டன. நகரம் குடிநீருக்காக முக்கடல் அணையை நம்பியிருக்கிறது. வனப்பரப்புகளும் பயிர்நிலங்களும் குடியிருப்புகளாக, பொறியியல் கல்லூரிகளாக, நான்குவழிச் சாலைகளாக மாறிக் கொண்டிருக்கின்றன. இந்த அழுத்தம் கடற்கரையில் வந்துசேர்கிறது.
தமிழ்நாட்டின் கடலோர மீனவர்களில் 22% கன்னியாகுமரிக் கடற்கரையில் உள்ளனர். 40000 மீனவர்களில் பெரும்பகுதியினர் பிற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் புலம்பெயர்ந்து மீன்பிடிக்கின்றனர். விவேகானந்தர் நினைவு மண்டபப் போக்குவரத்துக்காக பூம்புகார்க் கப்பல் போக்குவரத்து நிறுவனம் குமரிமுனைக் கடல்விளிம்பில் 1974இல் நிறுவிய கடத்துப் படகணையும் துறையிலிருந்து கன்னியாகுமரிக் கடற்கரையின் கடலரிமானத் துயரம் தொடங்குகிறது.
1970களில் தொடங்கி மாவட்டத்தின் பல்வேறு கடற்கரைகளில் போடப்பட்ட கடலரிப்புத் தடுப்புச் சுவர்கள் சிக்கலுக்குத் தீர்வு தருவதற்குப் பதிலாக பெரிதாக்கிக்கொண்டே போனது. கன்னியாகுமரி தொடங்கி சங்குத்துறை, சொத்தவிளை, இராஜாக்கமங்களம் வரையிலான இடைப்பாடுகளில் அமைந்திருந்த கடற்கரை மணல்மேடுகள் அழிந்துவிட்டன. 1978இல் முழுமை பெற்ற விழிஞ்சம் மீன்பிடி துறைமுகத் திட்டத்தின் அலைத்தடுப்புச் சுவர் நீரோடி தொடங்கி குறும்பனை வரையுள்ள கடற்கரைகளில் கடலரிமானத்தைத் தீவிரப்படுத்தியது. இந்த அனுபவத்தின் அடிப்படையில் பார்க்கும்போது, விழிஞ்ஞத்தில் நிறுவப்பட்டுவரும் சரக்குப்பெட்டக முனையம் கன்னியாகுமரிக் கடற்கரைக்கு ஏற்படுத்தப்போகும் பேரழிவு பலமடங்காக இருக்கும் என்பதை மட்டும் குறிப்பிட்டுச் சொல்ல முடியும்.
கன்னியாகுமரிக் கடற்கரைச் சமூகம் கடந்த 15 ஆண்டுகளில் மூன்று இயற்கைச் சீற்றங்களைச் சந்தித்துள்ளது. 824 பேரைப் பலிகொண்ட 2004 சுனாமிப் பேரிடர், எட்டுப்பேரைப் பலிகொண்ட 2009 ஃபியான் புயல், 224 பேரைக் கொன்றழித்த 2017 ஒக்கிப் பேரிடர். நிகழ்காலத்தைப் பொறுத்தவரை, கோவிட்-19 பெருந்தொற்றுப் பேரிடரின் பொருளாதாரத் தாக்கங்களையும் எதிர்கொண்டு வருகிறார்கள்.
கடற்கரையும் பேரிடர்களும்
ஒரு திணைநிலத்தில் இயற்கைச் சீற்ற அபாயக் குறைப்பு, தாக்கத் தவிர்ப்பு, மீண்டெழும் திறன் – இந்த மூன்றும் அந்த நிலம் கடந்த காலத்தில் எவ்வாறு கையாளப்பட்டு வந்தது என்பதைப் பொறுத்தது.
பொதுவாக, சமூகப் பொருளாதார வளர்ச்சி சீர்நிலையில் உள்ள அடித்தளச் சமூகங்கள் இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்ளவும், பாதிப்புகளிலிருந்து மீண்டெழவும் நெகிழ்தன்மை கொண்டிருக்கும். சமூகப் பொருளாதார வலுவற்ற, பேரிடர்ப் பாதுகாப்பு விழிப்புணர்வற்ற ஒரு சமூகத்தின் மீது பேரிடர்த் தாக்கம் மிகுதியாக இருக்கும். கடல்மட்ட உயர்தலை ஒரு நிகழ்காலப் பேரிடராகக் கருதவேண்டும். அதனை சமூக ரீதியாக, கட்டமைப்பு ரீதியாக எதிர்கொள்வதற்குக் கடலோர சமூகங்களைத் தயார்ப்படுத்த வேண்டியுள்ளது.
நிலநடுக்கம் தவிர, கடற்கரைகளின் பேரிடர் அபாயப் பட்டியலில் மேலும் மூன்று வகை இயற்கைச் சீற்றங்கள் உள்ளன- பெருவெள்ளம், புயல், கடற்கோள் (சுனாமி). புயல் கரைகடக்கும் நிலப்பகுதி என்கிற அளவில் கிழக்குக் கடற்கரைகள் பேரிடர் அபாயப் பகுதிகளாகும்.
வங்கக் கடல்பகுதியில் ஆண்டுதோறும் ஐந்து முதல் ஏழு புயல்கள் வீசுகின்றன. உலக அளவில் 7% புயல்கள் வங்கக்கடலில் ஏற்படுபவை. வெப்பநிலை உயர்வு புயலின் வீரியத்தைப் பெருக்குகிறது என்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. 1974-2014 காலத்தில் இந்தியா 30க்கு மேற்பட்ட இயற்கைச் சீற்றங்களைச் சந்தித்துள்ளது. முக்கியமாக, 2010-2014க்கு இடைப்பட்ட நான்காண்டு காலத்தில் நிகழ்ந்த ஒன்பது பேரிடர்களில் ஆறு ஒடிசா, ஆந்திரா, தமிழகக் கடற்கரைகளில் நேர்ந்தவை.
2015 சென்னைப் பெருவெள்ளப் பேரிடருக்கு முதன்மைக் காரணம் பெருமழையல்ல, பொது இடங்களின் கட்டற்ற ஆக்கிரமிப்புதான். மழைவெள்ளம் வடிந்து வெளியேறும் பாதைகள் தடைபட்டுப் போயின! 2015 சென்னைப் பெருவெள்ளம், 2016 வர்தாப் புயல், 2017 ஒக்கி, 2018 கஜாப் புயல் ஆகிய அனைத்துப் பேரிடர்களும் கடற்கரைகளை ஒட்டி நேர்ந்தவை. வெப்ப மண்டலப் புயல்களை எதிர்கொள்ள நமது அரசுகள் தயார்நிலையில் இல்லை. பருவநிலை மாற்றப் பேரிடரை மேலாண்மை செய்வதற்கான செயல்திட்டத்தை தேசிய அளவிலும் சரி, மாநில அளவிலும் சரி நாம் இன்னும் யோசிக்கத் தொடங்கவில்லை! குதிரை ஓடிய பிறகு இலாயத்தைப் பூட்டுவதால் என்ன பயன்?
தமிழகக் கடற்கரைச் சமூகங்களைப் பொறுத்தவரை வாழ்வாதார, வாழிட நெருக்கடிகளால் பலவீனமாகிக் கிடப்பவை. உவர்நீர் இறால் பண்ணைகள், தொழில்பேட்டைகள், துறைமுகங்கள், அணு/அனல் மின்நிலையம் உள்ளிட்ட அரசுக் கட்டுமானங்களால், பெருந்தொழில்களால் புண்பட்டுக் கிடப்பவை. இக்கடற்கரைகள் கடந்த 15 வருடங்களில் ஆறு புயல்களையும் பெருவெள்ளப் பேரிடர்களையும் எதிர்கொண்டுள்ளன.
உயர் சேத அபாயம்
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தமிழ்நாட்டுக்கான புயல் அபாய வரைபடத்தை முன்னரே வெளியிட்டிருந்தது (பார்வை: அருண் நெடுஞ்செழியன், பேரிடர் மேலாண்மை ஆணையம் – கொள்கையும் செயலாக்கமும். பூவுலகின் நண்பர்கள்/ ஜனவரி- பிப்ரவரி 2019). கடந்த 140 ஆண்டுகால வானிலைத் தரவுகளை அடிப்படியாகக் கொண்டது இந்த வரைபடம் புயல் அபாயநிலையை முன்வைத்து மாநிலத்தை உயர் சேத, சேத, மித சேத, சிறு சேத அபாயப் பகுதிகளாக வகைப்படுத்தியுள்ளது. இவ்வரைபடத்தில் திருவள்ளூர் முதல் கடலூர் வரையுள்ள கடலோர மாவட்டங்களின் கிழக்குப் பகுதிகள் உயர் சேத அபாய பகுதி (காற்றின் வேகம்: 117கிமீ/மணி); நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், சேலம், கரூர், ஈரோடு மாவட்டங்கள் சேத அபாய பகுதி (காற்றின் வேகம்:74 கிமீ/மணி) எனவும் கணிக்கப்பட்டுள்ளது (கஜாப் புயலின்போது வெள்ளப்பள்ளத்தில் பதிவான காற்று வேகம் மணிக்கு 230 கிமீ; வெளிவயல் பகுதியில் பதிவான வேகம் மணிக்கு 138 கிமீ). தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டக் கரைக்கடற்பகுதிகள் ஆறு மீட்டர் உயரத்தில் (புயல்) அலைகளை எதிர்கொண்டுள்ளன.
இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் 2013 ஆண்டைய அறிக்கை, தமிழ்நாட்டில் பேரிடர் மேலாண்மை ஏற்பாடுகள் மோசமான நிலையில் இருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக, கடலூர், நாகை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய கடலோர மாவட்டங்களில் பேரிடர்/ அவசரகால நடவடிக்கை மையங்கள் தயார் நிலையில் இல்லை என்பதை அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தது. இந்த உண்மையைத் தானே (2011), ஒக்கி (2017), கஜா (2018) புயல் சேதங்களோடு இணைத்துப் பார்க்க வேண்டியுள்ளது.
கடற்கரைப் பேரிடர் அபாயக் குறைப்புத் திட்டம் (2012)
உலக வங்கியின் 23.6 கோடி நிதிநல்கையுடன் 33 கோடி செலவில் தமிழ்நாடு, புதுவைக் கடற்கரைகளில் பேரிடர் அபாயத்தைக் குறைப்பதற்கான இந்தத் திட்டத்தில் மாநில அரசுகள் அலட்சியம் காட்டின. அதன் விளைவை ஒக்கி (2017), லுபான் (2018), கஜா (2018) புயல்களின்போது பார்க்க முடிந்தது.
கடற்கரை நிலப்பகுதிகளில் நிலத்தடி மின்விநியோகக் கேபிள் பதித்தல், பன்முனை அவசரகால இயக்ககங்கள், 450 பேரிடர் முன்னெச்சரிக்கை அலகுகள் அமைத்தல், 5000 மீனவர்களுக்கு வயர்லெஸ் கருவிகள் வழங்குதல்- இத்தனைப் பணிகளையும் 2018க்குள் செய்து முடித்திருக்க வேண்டும். ஆனால் அரசுகள் அதில் முனைப்புக் காட்டவில்லை.
தாரைவார்க்கப்படும் கடற்கரை நிலம்
கரைக்கடலையும் கடற்கரையையும் தந்திரமான சட்டங்களின் மூலம் தனது அதிகார வரம்பிற்குள் கொணர்ந்து, அவற்றை சாகர்மாலா போன்ற பகாசுரத் திட்டங்களுக்குத் தாரைவார்க்கிறது மைய அரசு. தேசிய கடல் உயிரின வளர்ப்பு மசோதா (2018), கடற்கரை ஒழுங்காற்று அறிவிக்கை (2019), தேசிய மீன்வளக் கொள்கை (2020) உட்பட கடற்கரை சார்ந்த எந்த ஆவணத்திலும் கடல் பேரிடர் அபாயங்களை எதிர்கொள்வது பற்றிய குறிப்புகள் ஏதுமில்லை.
கிழிருந்து மேலாக…
இயற்கைச் சீற்றங்கள், காலநிலை மாற்றம் குறித்த ஆய்வுகளுக்குப் பன்னாட்டளவில் பெருந்தொகைகள் செலவிடப்படுகின்றன. ஏராளம் கண்டுபிடிப்புகள் ஆய்வுக் கட்டுரைகளாக வெளிவந்துள்ளன. பன்னாட்டு, தேசிய அரங்குகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. ஆனால் செய்தி கடைசி மனிதனைச் சென்றடையாதவரை ஆய்வுகள் பலன் தருவதில்லை.
பிற துறைகளைப் போல, பருவநிலை மாற்றத் தகவல்கள் மேலிருந்து கீழே வழங்கப்படுகின்றன. பருவநிலை மாற்ற ஒருபோதும் அடித்தள மக்களின் மரபறிவுகளோடு இணைக்கப் படுவதில்லை. மக்களின் அனுபவ அறிவின் (citizen science) அடிப்படையில் பகிரப்படும் தகவல்கள் மட்டுமே மக்களால் ஏற்கப்படுகின்றன. பருவநிலை மாற்றம் குறித்த ஆதாரங்கள் மக்கள் களங்களிலிருந்து திரட்டப் படவேண்டும்; அதன் அடிப்படையில் இந்தச் சிக்கலை எதிர்கொள்வதற்கான கொள்கைகளை அரசு வகுக்க வேண்டும் (evidence-based policy making). கடலோர நிலத்தடிநீர் எப்போது எப்படி உவர்ப்பாகத் தொடங்கியது, அதன் தாக்கம் எப்படி இருக்கிறது என்று அவர்கள்தான் சொல்ல முடியும். இத்தகவலை உயர்நிலை ஆய்வுகளோடு இணைத்தால் முழுமையான சித்திரம் கிடைக்கும். பருவநிலை மாற்றம் குறித்து மக்களைப் பேசவைப்பதுதான் அடுத்த கட்ட நகர்வுக்கு உதவும்.
ஊடகம்
நிகழ்வைச் செய்தியாக்குதல் மட்டுமல்ல ஊடகப் பணி. வரும்பொருள் உரைப்பதிலும், செயல்ரீதியான தீர்வுகளை முன்வைப்பதிலும் அவர்களின் பங்கு உள்ளது. அதற்கான வாய்ப்புகளைப் பருவநிலை மாற்றச் சூழல் உருவாக்கியுள்ளது. மக்களைத் தொடுகின்ற பிரச்சினைகளை மக்களைத் எட்டும் வடிவத்தில், முன்கணிப்போடு வழங்குவது சமூகப் பொறுப்புள்ள ஊடகர்களின் கடமை. பெரும்பாலான ஊடகங்கள் பெருமுதலாளிய நிறுவனங்களாய் மாறியுள்ள இன்றைய சூழலிலும்கூட ஊடகர்கள் அந்த அற்புதத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றனர். கடந்த ஐந்தாறு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பசுமை ஊடகர்களும் பசுமை இளைஞர் குழுக்களும் பெருகிவரும் இப்போதைய போக்கு, மந்தாரமான எதிர்காலத்தின்மீது வெளிச்சக்கீற்றாய் விழுகிறது.
வறீதையா கான்ஸ்தந்தின் – பேராசிரியர், கடல் சூழலியல் – வள அரசியல் ஆய்வாளர், மூதாய் மரம், கடற்கோள் காலம் உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.