பாலகங்காதர திலகன் என்ற பெயர் எனக்குப் பொருத்தமானதல்ல. எனவே, பலமுறை அப்பெயரை மாற்றவேண்டுமென்று விரும்பியதுண்டு. அப்பா இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்து விட்டு திரும்பிய வேளையில் பிறந்த குழந்தை நான். எனவே, விருப்பமான விடுதலை வீரரின் பெயரை மகனுக்கு சூட்டியதாக, மாலைநேர அரட்டையின் போது அப்பா தனது நண்பர்களிடம் சொல்லக் கேட்டிருக்கிறேன். அப்பாவின் ஒரே தொனியிலான உரையாடலும் செய்கைகளும் எனக்கு மனப்பாடமாகி விட்டன. ஓர் அர்த்தத்தில் அத்தகைய பேச்சுகளும் பார்வைகளுமே என்னை சினிமாவின் வெள்ளி வெளிச்சத்திற்குள் வீழ்த்தின. ஆனால், இப்பெயரை மாற்றவேண்டுமென்று பலமுறை நினைத்ததுண்டு. அப்பா சாகும்வரை அது கைகூடவில்லை. அப்பாவின் இறப்புக்குப் பிறகு பெயர் மாற்றம் செய்தாலும் அதே பெயரிலேயே எல்லோரும் என்னை அழைப்பார்கள் என்பது புரிந்தது. ஆனால், விருப்பமற்ற பெயரில் அறியப்பட நேர்ந்ததற்காக உள்ளூர வருந்தி கண்ணீர் வடித்தேன்.
இவை பாலகங்காதர திலகன் என்ற திரைக்கதை எழுத்தாளனின் நாட்குறிப்பு ஒன்றில் எழுதப்பட்டிருந்த வரிகள்.
தொடர்ந்து டயரி எழுதிக் கொண்டிருந்த ஒருவனின் மனதில் தோன்றிய அத்தனையையும் கொட்டிக் குவிக்கப்பட்ட குப்பைகள். நிறைய கதைகள் எழுதி, பிரசுரித்து ஓரளவு பிரசித்திப் பெற்ற பிறகு, முற்றிலும் தற்செயலாக சின்னத்திரையுலகிற்கு வந்தடைந்த ஒருவனே பாலகங்காதர திலகன். தொலைக்காட்சி தொடர்களுக்கு சீன்களை எழுதிக் கொண்டிருந்தவன் எதிர்பாராமல் கதாபாத்திரமாகவும் மாறினான். இந்த பாலகங்காதர திலகனைப் பற்றி ஓர் ஆவணப்படம் எடுக்க தீர்மானித்ததற்கான காரணங்கள்:
1.முதல் படத்தில் நடிப்புக்காக ஜனாதிபதி விருது.
2.அத்திரைப்படத்தின் திரைக்கதை எழுத்தாளர் என்கிற வகையில் சிறப்புப் பாராட்டு.
3.பதினேழு அயல்நாட்டு திரைப்பட விழாக்களில் வெகுமதிகளும், நடுவர் குழுவின் பாராட்டுரையும்.
4.மாநில அரசாங்கம் பலமுறை பாராட்டு விழாக்களை நடத்தியது. 5.பல்வேறு அமைப்புகளில் உயரிய இடம்.
6.மனிதநேயத்திற்காகத் தொடர்ந்து உரையாற்றியதும், தொண்டாற்றியதுமான நற்பணிகள்.
7.ஆதரவற்றவர்களும், ஒடுக்கப்பட்டவர்களும் அவரைத் தெய்வமாகக் கண்டனர்.
8.இலக்கிய வாசகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றவர்.
- மனிதக்குலத்தின் சீர்திருத்தவாதியாகக் திகழ்ந்தவர்.
பாலகங்காதர திலகனைப் பற்றிய திரைக்கதை எழுத வேண்டுமென்று என்னிடம் வந்தவர்கள் தந்த தோராயமான நகல் இவ்விதமாக இருந்தது. பாலகங்காதர திலகன் யார் என்கிற கேள்வியுடன் நான் அணுகவில்லை. பாலகங்காதர திலகன் என் தந்தை என்பதைத் தெரிந்து வைத்திருந்தவன் நான் மட்டுமே. ஒரு தந்தையைப் பற்றி மகன் எதை எழுத வேண்டும்? நல்லதும் தீயதுமான நிறைய விஷயங்கள். நேரில் பார்த்ததும் ஆட்கள் மூலமாகத் தெரிந்து கொண்டதுமான தகவல்கள். அவற்றில் எத்தனை சரி, எத்தனை தவறு என்பதை அடையாளம் காண வேண்டியுள்ளது. பாலகங்காதர திலகனின் மரணம் இயற்கையானது என்று பலர் சொன்னபோதிலும் அதுவொரு சாதாரண மரணமாக இருக்கவேண்டுமென நான் உள்ளூர விரும்பினேன். கடைசி திரைப்படம் வெளியிடப்பட்ட தினம். ரசிகர்கள் அதைச் சரியான முறையில் ஏற்றுக்கொள்ளவில்லையென்று முதல் காட்சி முடிந்தபோதே கேரளத்தின் பல்வேறு மையங்களிலிருந்து தொலைபேசி தகவல்கள் வந்தவண்ணம் இருந்தன. அன்று நான் ஃபிளாட்டில் இருந்தேன். அவர் என் எதிரிலேயே மதுவருந்தினார். முன்பெல்லாம் அவர் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நாளில் என்னை அவ்விடத்தில் காண நேர்ந்தால் யாரும் கவனிக்காத இடத்திற்குக் கூட்டிவந்து சொல்வார்: ‘புரோகிராம் எல்லாத்தையும் பார்த்து முடிச்சிட்ட தானே, இனி தாமதம் பண்ணாதே… வீட்டுக்குப் போறதுக்குப் பார்… அங்க தேவு தனியா இருப்பாள்….‘ அப்போது நான் பதில் சொல்ல மாட்டேன்.
பிறகு பாக்கெட்டிலிருந்து கொஞ்சம் காசை எடுத்து நீட்டி, ‘இதைக் கையில வெச்சுக்க. அடுத்த தடவை பார்க்கறப்ப நானும் கூட வர்றதா அவள்கிட்ட சொல்லு….‘ என்று சொல்லி காசை என் பாக்கெட்டில் திணிப்பார். பின்னர் ஒரு நிமிடம் கூட அங்கு நிற்க அனுமதிக்க மாட்டார். அப்படிக் கவனிக்க நேர்ந்தால் ஒரு பார்வை. அந்தப் பார்வை மனிதனை வேகவைத்து சுண்ணாம்பாக்கி விடும். அதைத் தெரிந்து வைத்திருந்ததால் இனி என்றைக்கு வரவேண்டும் என்று கேட்டுத் திருப்பி நடப்பேன். ஒருபோதும் அக்கேள்விக்குப் பதில் கிடைத்ததில்லை.
அப்பாவின் மரணத்திற்கு மறுநாள் தொலைக்காட்சியில் ஒரு பிரபல இயக்குநர் கூறினார்: ‘பால அண்ணன் ஒரு மகாமேதையாக திகழ்ந்தார். மது அந்த மேதையை இல்லாமல் செய்து விட்டது. இன்னும் நீண்டகாலம் பால அண்ணனின் திறமைகளை மலையாளிகள் பயன்படுத்தி இருக்கலாம். அதை அவர் புரிந்து கொள்ளவில்லை என்கிற வருத்தமே எனக்குள்ளது.‘ ஆனால் அதைக் கேட்டு நான் கவலையடைந்தேன். ஆட்கள், அதுவும் அப்பாவுடன் இருப்பவர்கள் எதற்காக இப்படியெல்லாம் சொல்கிறார்களென்று எனக்குத் தெரிந்த பலரிடம் விசாரித்தேன். அவர் மதுவருந்தி மோசமான நிலைமையில் இருந்ததை ஒருமுறை கூட நானும் எனக்கு அறிமுகமானவர்களும் பார்த்ததில்லை. பிறகு எதற்காக மற்றவர்களைப் பற்றி, குறிப்பாக இறந்து போனவர்களைப் பற்றி இவர்கள் பேசுகிறார்கள்.
மரணம் என்பது அழகிய, கவர்ச்சியான ஒரு பெண். ஒரே படுக்கையில் எப்போதும் உடன் படுக்கக் கூடிய ஒரு துணை. உலகின் எந்த மூலையில் இருந்தாலும் என்னுடன் படுக்க ஒருத்தி இருக்கிறாளென்று மனதில் தீர்மானிப்பேன். அது எனது பேரழகியான மரணம். அவள் எந்நிமிடமும் என்னுடன் இருப்பாள். சர்வ சராசரங்களைக் காட்டிலும் பேரழகி என் மரணம். மனதில் குரூரம் கொண்டவர்களின் முகத்தில் பொலிவைத் தூவுவாள். அந்த அழகு, பொய்யும் ஈர்ப்பும் கொண்டது என்பது எனக்குத் தெரியும். எனவேதான் மற்றவர்கள் பார்க்கும் கண்ணோட்டத்தில் நான் அவளை துணையாக கொள்ளவில்லை. அவள் எனது எல்லாப் பிரச்சினைகளினுடைய கடைசி புகலிடம். என் மரணம் நிகழ்ந்த பிறகு மக்கள் எப்படி எதிர்வினையாற்றுவார்களென அறிய ஆவலாக உள்ளேன். ஆனால் அதற்குச் சாத்தியமில்லையே. இருப்பினும் நான் சில கனவுகளைக் காண்பதுண்டு. மருத்துவமனைக்கெல்லாம் எடுத்துச் செல்லாமல் நிம்மதியான ஓர் உறக்கத்தில் எதுவுமறியாமல் கண்விழிக்காத ஆட்கள். சிலசமயம் வீட்டில் நிகழ்ந்தால் மனைவி, ஓட்டல் அறையில் நிகழ்ந்தால்… விடிந்த பின்பும் கதவு திறக்காததை அறிந்து நம்முடன் தங்கியிருப்பவர்களும், அல்லது ஓட்டல் மேலாளரும், அவரைச் சார்ந்தவர்களும் போலீஸைக் கூப்பிட்டு சுற்றிலும் கூடுவார்கள். சிலர் வருந்துவார்கள். சிலர் அழுவார்கள். மற்றவர்கள்… மிகுந்த அன்பு காட்டுபவர்களாக இருந்தால் ததும்பும் கண்களைத் துடைத்து… ஆனால் அதிலொரு சங்கடம் உள்ளது. ஓட்டல் அறையாக இருந்தால், போலீஸ் வந்து சேர்ந்ததும் போஸ்ட்மார்ட்டம், ஆம்புலன்ஸ், சந்தேகங்கள், ,விசாரணை, கேள்விகள், அப்போது அவர்கள் பேசும் தேவையற்ற வார்த்தைகள், ‘அந்த ஆள் வீணா இப்பிடி மத்தவங்க பொழப்பைக் கெடுத்திட்டு…‘ சலசலப்பில் மரணம் கொண்டாடப்படும். மரணம் யாருமறியாமல் வீட்டில், படுக்கையில் தன்னுடன் உறங்கும் மனைவிக்குக் கூட தெரியாமல் எல்லையற்ற உறக்கமாக நிறைவு பெற வேண்டும். பத்திரிகையில் அச்சிட்ட செய்திகளைப் படிக்க வேண்டும். புலனாத வெளிப்பாடாக மரணவீட்டு ஆள்கூட்டத்தில் இருக்க வேண்டும். இறந்த மனிதனைப் பற்றி மற்றவர்கள் சொல்லும் ரகசியமும் பகிரங்கமான வார்த்தைகளைக் கேட்க வேண்டும். ஒருபோதும் நடக்காத இந்த ஆசைகள் எனக்குத் தோன்றக் காரணம், முன்பு சூப்பர் ஆக்டராக விளங்கிய ஜீவன் தாமஸின் இறுதிச்சடங்கில் பங்கெடுத்த காரணத்தால்தான்.
ஜீவன் தாமஸ் தற்கொலை செய்து கொண்டான். ஒரு காலத்தில், வருடத்திற்கு இருபத்தி இரண்டு படங்கள் வெளியாயின. அவற்றில் பெரும்பாலானவை ஹிட் மற்றும் சூப்பர் ஹிட் படங்கள். பல்லாயிரக் கணக்கான மக்களை மகிழ்ச்சிக் கடலில் நீராட்டிய ஒரு மகாசான்னித்யம். தயாரிப்பாளர்களின் கண்ணீரைத் துடைத்தவன். கடைசிக்காலத்தில் பின்தொடர்ந்தவர்கள் ஒளிவீசும் நட்சத்திரங்கள் ஆனார்கள். ஜீவன் ஒரு கருப்புச்சுழலாகப் பிரபஞ்சக் கடலில் அமிழ்ந்து போனான். நினைவில் இப்போதும் பழையவற்றை விடாமல் பாதுகாக்கும் புதிய தலைமுறையைச் சேர்ந்த ஓர் இளைஞனின் படத்தில் நடிக்க மீண்டும் வாய்ப்பு கிடைத்தபோது அதை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டு, படப்படிப்பின் முடிவில் எல்லோரிடமும் விடைபெற்றுக் கொண்டான். வீட்டுக்குத் திரும்பும் வழியில் யாரும் தங்க விரும்பாத லாட்ஜ் அறையில் மின்விசிறியில் வேட்டியால் வாழ்க்கையை மறைத்துக் கொண்டான். அவன் எதற்காக மரணத்தை தானாகவே வரிந்து கொண்டானென எவ்வளவு யோசித்தும் எனக்கு எந்த பிடிப்பும் கிடைக்கவில்லை. ஒவ்வொரு மனிதனுக்கும் மனஅழுத்தமும் விரக்தியும் இருக்கும். அதற்காக எல்லா மனிதர்களும் தற்கொலை செய்து கொள்வார்களா… தெரியாது. சில வாழ்க்கைகள் அப்படி முடிந்து போகும். மரணம் என்கிற அழகியை வன்புணர்ச்சி செய்வதைப் போன்றது தற்கொலை. பிறகு எப்போதாவது அவர்களின் மரணக்குறிப்புகளை வாசிக்க நேரும்போதுதான் நிலவொளியின் ஒளிவளையத்தில் மறைந்த விண்மீன் ஒளியின் அடையாளம் தெரியும். அவர்கள் நடித்த படங்கள், அவர்கள் நடித்த வேடங்கள், அவர்களைப் பற்றி வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் சொல்லும் வார்த்தைகள்… குறைவின்றி அள்ளி இறைக்கும் முத்துகள் அவை. ஆனால், அம்மனிதன் இறக்கும்வரை அம்மனிதனுக்கு ஏதேனும் தேவை இருக்கிறதா அல்லது இப்படி ஒருவர் இருந்தாரே அவர் இப்போது என்ன செய்கிறார் என்றெல்லாம் சிந்திக்காத ஒரு கலையுலகம். அது அப்படித்தான், யாருக்கும் பிறரது செயல்களைப் பற்றிச் சிந்திக்க நேரம் கிடைப்பதில்லையே. எல்லா மனிதர்களும் ஒரு குழு ஓட்டத்தில் பங்கேற்கிறார்கள். யாரெல்லாம் விழுகிறார்கள், யாரெல்லாம் பின்வாங்குகிறார்கள், இனி யார் இலக்கை அடைவார்கள் என்பதையெல்லாம் யாராலும் முன்கூட்டி உரைக்க முடியாதபடி ஊடாகப் பாய்ந்து செல்லும் வாழ்க்கை. ஜீவன் தாமஸ் எனக்கொரு தரிசனமாக இருந்தான். வாழ்ந்து கொண்டிருப்பவர்களை அடையாளம் காண்பதற்கான தொலைநோக்கு. முன்பு ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது செய்தி வாசிப்பாளர் அழுதபடி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பதைக் கண்டு உள்ளூர சிரிப்பு எழுந்தது. அன்றைய வயது அப்படி. இன்று வாழ்ந்து முடித்து மரணம் என்கிற அழகியுடன் உறங்க முற்படுகிறேன். செயல்களுக்கும் மனதிற்கும் ஓர் அடித்தளம் உண்டாகி விட்டதற்கான அடையாளங்கள் இவையெல்லாம். ஒருவனுடைய மரணம் அடுத்தவனின் கண்களைத் திறப்பதற்கானது என்று புரிந்து கொள்ளாதவர்கள் வாழத் தகுதியற்றவர்கள்.
இதை எழுதி முடித்தபோதுதான் புத்தாண்டின் முதல் பக்கத்தில் நான் எழுதியவை மரணக்குறிப்பு இல்லை என்பதைத் தெரிந்து கொண்டேன். இருக்கட்டும், மனிதன் வாழ்வது இறப்பதற்குத்தானே.
2002, ஜனவரி ஒன்றாம் தேதி முதல் பக்கத்தில் எழுதியவை:
பாலகங்காதர திலகன் மறைந்தார்:
கனவுகளை மிச்சம் வைத்து பாலகங்காதர திலகன் விண்ணை அடைந்தார்.
நடிப்பின் மகுடத்தைக் கழற்றி வைத்து மகாநடிகன் நினைவுகள் ஆனான்.
இப்படிப்பட்ட தலைப்புச்செய்திகள் அவர் மரணடைந்த மறுநாள் நாளிதழ்களில் கருப்பு எழுத்துகளாக மாறியதைப் பார்த்தேன். நினைவஞ்சலி குறிப்புகளின் ஊடாக, நீளமானதும் அலுப்பூட்டுவதுமான மொழியை வாசித்து எனக்குக் குமட்டியது. எல்லோரும் ஒரேமாதிரி சிந்திப்பதும் எழுதுவதும் நடிகர்களின் மரணத்திற்குப் பிற்பாடுதான். நடிகைகளுக்கு என்றுமே நினைவஞ்சலிக் குறிப்புகள் இருக்காது. எனவே இது ஓர் ஆணாதிக்க அமைப்பாக உள்ளதென்று பிரபல விமர்சகரும், பெண்ணியவாதியுமான ஹரிதா நாசரின் கட்டுரையை வேண்டுமானால் கருத்து என்கிற நிலையில் பயன்படுத்தலாம். நானதைத் தேடியெடுத்து அத்துடன் இணைத்துக் கொண்டேன். ஆரம்ப நாட்கள் தொட்டு பாலகங்காதர திலகனுடன் இருந்த தொலைக்காட்சி தொடர் இயக்குநர் ஒருவர் மட்டுமே உருப்படியான குறிப்பை எழுதியிருந்தார். பாலகங்காதர திலகனை அதிகம் நடிக்க வைத்தவர் அவர்.
நடிப்பின் நாடித்துடிப்பை அறிந்தவன்- என் அன்பிற்குரிய நண்பன்
சி.கே. பிரதீப் (தொலைக்காட்சித் தொடர் இயக்குநர்)
எழுத்து அவனது வலிமை என்றெல்லாம் எழுதினால் அவை நபர்களைத் தொடர்ந்து புகழ்வதாகத் ஆகிவிடும். பாலனுக்கு நன்கு உரையாடத் தெரியும். அவனது வார்த்தைகள் இறைவன் சொல்வதைப் போன்றிருப்பதாக பலமுறை தோன்றியதுண்டு. நடக்கக்கூடாததென்றும், இனி வேறுவழியில்லையென்றும் கவலைப்படும்போது ஆறுதல் வார்த்தைகளுடன் ஒவ்வொன்றும் எளிமையானவை என்கிற விதமாக அவதரிப்பான். அவனது வார்த்தைகளில் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்து விடும். அடுத்தவனின் மனம் அறிந்து அவனுக்காகத் துணைநிற்கும் ஒருவனை மட்டுமே எனது வாழ்க்கையில் பார்த்திருக்கிறேன். எப்போதும் மற்றவர்களின் ஊன்றுகோலாக துணைநிற்கும் ஓருயிரையே பார்த்திருக்கிறேன். அவன்தான் பாலன். ஒருபோதும் இப்பெயரை விரும்பாத யாரும் அப்படி முழுப்பெயரைச் சொல்லி அழைக்கவேண்டாமென்று கடிந்து கொள்ளும் பாலகங்காதர திலகன். பிரபஞ்சத்தில் அரிதாக நிகழக் கூடிய ஓர் அவதாரம்.
சி.கே. பிரதீப்பின் அழைப்பு எண்கள்- 9447188888, 0471-3245678
எழுதிய திரைக்கதைகளின் சில உரையாடல்கள்
ஒரு சிறிய மெழுகுவர்த்திக்கு இத்தனை இருட்டையும் அகன்ற இயல்வது அசாதாரணமான ஒன்றுதான்… அப்படியெனில் எங்கோ வெளிச்சம் இருளுக்குள் மறைந்து கொள்கிறது. யதார்த்தத்தில் இருட்டுக்கு அதற்குரிய வெளிப்பாடு கிடையாது. அது வெளிச்சமின்மை மட்டுமே. (அவள் என்னும் திரைப்படத்தில் ஃபாதர் ஸ்டீபன் சொல்கிறார்- தேசிய விருது பெற்ற திரைப்படம்).
மனிதனைப் பாதுகாப்பவை அவனுடைய கைகள். உண்பதற்கும் பருகுவதற்கும் மட்டுமல்ல… தேவைப்பட்டால் ஒருவனை அடிக்கும் ஆற்றல் வாய்ந்த நண்பர்களாக பத்து விரல்கள் (திரைச்சீலை என்ற சினிமாவில் ஒரு உளவியலாளர் கதாநாயகனிடம் சொல்கிறார்).
வீட்டையும் கூட்டையும் இழந்தாலும் உதவிக்கு யாரேனும் இருப்பார்களென நினைப்பதைக் காட்டிலும் சிறந்தது, தன்னிடம் உள்ள நம்பிக்கை… செல்ஃப் கான்ஃபிடன்ஸ்…அது இன்லைன்னா போய் சாவுடா…(செளமியம் என்ற படத்தில் சிற்பி).
ஓரளவு தெளிவாகவும் கொஞ்சம் மறைவாகவும் இருக்கும் ஒருவனின் வாழ்க்கைக்கதையை எழுதுவது மிகவும் சிரமம் என்பதைத் தெரிந்து கொண்டேன். அப்பா என்கிற அறிவு முற்றிலும் வரையறைக்குட்பட்டது. நடித்த படங்களிலும், எழுதிய கதைகளிலும் பாலகங்காதரனின் வாழ்க்கை இருக்கவில்லை என்பது அப்பாவுக்கு நெருக்கமானவர்கள் சொல்லும் போது புரிகிறது. அதில் கூட ஒவ்வொரு நபரின் பார்வைகளும் வித்தியாசமானவை. அவர்கள் சொல்வதையெல்லாம் தொகுத்துப் படித்தப் போதிலும் நிறைவு பெறாத ஒரு வாழ்க்கை. இழை நெருக்கமில்லாத ஒரு கதை. குடும்பம் என்கிற அமைப்பில் மனைவியும் மகனும் சொல்கிற கதை. சற்குணம் நிரம்பிய ஒரு கணவனின், மகனுக்குத் தேவைப்படுவதையெல்லாம் வாங்கிக் கொடுத்த ஒரு தகப்பனின் சித்திரம் விரிகிறது. நண்பர்கள் யாரும் இல்லாத, ஆனால் இருப்பவர்களுக்கு எல்லா நம்பிக்கைகளையும் அர்ப்பணிக்கக் கூடியவர். குடும்பத்தினரும் நண்பர்களும் ஒன்றிணையும் கொண்டாட்டங்களில் குடும்பத்தினரைப பங்கேற்க வைக்காதவர். நட்புகளில் மாறுபட்ட அணுகுமுறைகளைக் கொண்ட, திரைச்சீலையில் ஒருபோதும் வெளியே தெரியும் ஆள் அல்லாதவர். சின்னத்திரை தொடரையும் திரைப்படத்தையும் இரண்டு தட்டுகளாக வித்தியாசப்படுத்திய ஒரு மனிதன். மது அருந்துவதாகச் சிலர் சொல்வதை, பெண்களின் தொடர்பைப் பற்றி சிலர் குற்றம்சாற்றுவதை… ஆனால், எதற்கும் வெளிப்படையான சான்றுகள் இல்லாமல் நானெப்படி இதை உண்மையின் பாதைக்கு எடுத்துப் போவேன்…?
அப்பா நடித்த படங்களின் டிவிடி நகல்களை மீண்டுமொருமுறை ரீவைண்ட் செய்தேன். அபாரமான நடிப்புப் பதிவுகளின் முகூர்த்தங்களை எடிட் செய்து பயன்படுத்த வேண்டியவற்றின் பட்டியலை எழுதிச் சேர்த்தேன். எந்த டெலிவிஷன் சேனலிலும், சினிமா வெளியீடுகளிலும் நேர்காணல் செய்யப்படாத, அதற்காக ஒருபோதும் முன்வராத இம்மனிதனின் வாழ்க்கைக்கதையின் தொடக்கமும் முடிவும் எப்படியிருக்க வேண்டுமென்று சிந்தித்தேன். வாழ்க்கை உண்மையிலும் அதனுடைய வெளிச்சத்திலும் நிறைய வேண்டுமென்று விரும்பினேன். பாலகங்காதர திலகன் என்ற மனிதனை எப்படி அடையாளப்படுத்துவேன்…?
யாரும் அடையாளம் காணாத விஷ்ணு கங்காதரன் என்ற திரைக்கதை எழுத்தாளன் திரைக்கதையின் முதல்காட்சியை இப்படித் தொடங்கினான்:
நதியோர மேகங்களுக்கிடையில் வித்தை காட்டிக் கொண்டிருக்கும் நிலவொளி விழுந்த குறுக்குவழியின் ஊடாக ஒரு டார்ச் வெளிச்சம் விரைகிறது. முள்வேலியின் மறுப்பக்கத்தில் நடந்து கொண்டிருக்கும் டார்ச் பிடித்த ஆள். நிலவொளியில், இருட்டில் ஓர் ஓடு வேய்ந்த வீடு அவனது பார்வையில். அவன் சுற்றிலும் பார்க்கிறான். இருட்டில் அவனைத் தெளிவாகப் பார்க்க முடிவதில்லை. இருட்டிலும், செய்யக் கூடாத எதையோ செய்யப் போகிறான் என்கிற பாவனை அவனது கண்களில் தெரிகிறது. அத்தனை தெளிவாக அக்கண்கள் காட்சியளிக்கின்றன. வேலியின் நடுவில் ஏற்படுத்தப்பட்ட இடைவெளியின் ஊடாக நுழைகிறான். ஒளிந்தும் பதுங்கியும் வீட்டின் ஓர் ஓரமாக சுவரையொட்டி நடக்கிறான். லேசாகத் திறந்திருந்த ஜன்னல் அருகில் நின்று செருமுகிறான். பிறகு மெதுவாக அழைக்கிறான்: தேவு…தேவு… உள்ளே யாரோ எழும் சத்தம். அந்தச் சத்தம் நகர்வதற்கேற்ப சுவரையொட்டி நடந்து கதவை நெருங்குகிறான். அதே வேளையில் கதவும் திறக்கிறது. முரட்டுத்தனமான அன்புடன் காற்றாக உள்ளே நுழைகிறான். தேவுவைக் கட்டித்தழுவுகிறான். அவள் உதட்டில் மூச்சிரைப்புடன் கூடிய ஓர் அழைப்பு எழுந்தது. என்னோட… இருள் வீட்டை மூடியது. வானில் கருமேகங்கள் பாய்ந்தன.
தமிழில்: நிர்மால்யா
மலையாளம் : மதுபால்
மதுபால்: 1985 முதல் சிறுகதைகள் எழுதி வருகிறார். 80க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ‘பாரதியம்’ என்ற படத்தின் திரைக் கதை ஆசிரியர். இவர் இயக்கிய ‘ஒழிமுறி’ திரைப்படம் தேசிய விருதைப் பெற்றது. சிறுகதைத் தொகுப்புகள், நாவல்கள் என பத்துக்கு மேற்பட்ட நூல்கள் வெளியாகி உள்ளன. தற்போது திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார். |