பாவனையற்ற அன்பின் மொழி

ண்ணநிலவன், எனக்கு அவருடைய சிறுகதைகள் வழியாகவே அறிமுகம். அழியாச்சுடர்கள் தளத்தில் வாசித்த அவருடைய ‘பலாப்பழம்’ சிறுகதையே நான் வாசித்த அவரின் முதல் கதை. தமிழின் ஆகச்சிறந்த சிறுகதைகள் என்று பட்டியலிட்டால் அதில் நிச்சயம் இச்சிறுகதைக்கு ஓரிடம் உண்டு. எங்கள் நண்பர்கள் குழாமில் அதிகமாக விவாதிக்கப்பட்ட சிறுகதைகளுள் ஒன்று. இந்த இடத்தில் அழியாச்சுடர்கள் தளத்தைப் பற்றிக் குறிப்பிட வேண்டியது என் கடமை. தமிழில் வாசிப்புக்குப் புதியவர்களுக்கு நான் கண்ணை மூடிக்கொண்டு பரிந்துரைக்கும் தளம் அது. தமிழில் எழுதிய, எழுதிக்கொண்டிருக்கும் மாஸ்டர்கள் ஒவ்வொருவரின் ஒரு படைப்பாவது அதில் உண்டு. அவர்கள் இப்போது தொடர்ச்சியாகச் செயல்படவில்லை என்றாலும் அது ஒரு பொக்கிஷம். அழியாச்சுடர்கள் போன்றும் நம் சிற்றில் போன்றும் சத்தமில்லாமல் இலக்கியச் செயல்பாடுகளை முன்னெடுத்தவர்களையும் எடுத்துக்கொண்டு செல்பவர்களையும் இங்கே வணங்குகிறேன்.

வண்ணநிலவன், தன்னுடைய கடல்புரத்தில் நாவலின் முன்னுரையில் இப்படிக் குறிப்பிடுகிறார், “சொல்லுகிறதுக்கு எவ்வளவோ இருக்கிறது. ஓரத்தில் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்துப் பார்த்து இன்னும் அலுக்கவில்லை.” அவருடைய சிறுகதைகள், நாவல்கள், இப்போது அவர் சொல்வனம் இணைய இதழில் எழுதிக்கொண்டிருக்கும் ‘வாக்குமூலம்’ தொடர் உள்ளிட்ட அனைத்திலும் இந்தப் பண்பைக் காண முடியும்.

இங்கே “ஓரத்தில் ஒதுங்கி” என்கிறார். ஒரு கதையை எழுதும்போது நம்மை அறியாமலேயே அதில் வரும் ஏதேனும் ஒரு பாத்திரத்தின் மீதோ கருத்தாக்கத்தின் மீதோ ஒருவித பக்கச் சார்பெடுத்து எழுதிவிடுவதற்கானச் சாத்தியக் கூறுகள் அதிகம். அதை விடுத்து வெளியில் நின்று கதை சொல்லுவதென்பதே தனிக் கலை. நல்ல கலைஞனுக்கு அந்த விலகலும் இடைவெளியும் அவசியம். இதையே சு.ரா. இப்படிக் குறிப்பிடுகிறார். “எல்லாவற்றையும் நன்றாகப் பார்க்க அது அதற்கான இடைவெளி தேவைப்படுகிறது. சில சமயம் தூரத்தின் இடைவெளி. சில சமயம் காலத்தின் இடைவெளி”. பார்ப்பதற்கு மட்டுமல்ல. எழுத்துக்குமே இந்த இருவிதமான இடைவெளிகளும் தேவைப்படுகின்றன. வண்ணநிலவனின் கதைகளில் இப்படியான விலகி நின்று கதை சொல்லும் முறையை அவதானிக்க முடியும். வேறு யாருக்கோ நடந்தது போலத்தான் அவர் கதை சொல்கிறார். அதே நேரத்தில் வாசிப்பவன் அது தனக்கே நடந்ததுபோல உணர்கிறான். 

மேலும் அவர் அதை அத்தனை சுலபமாகச் செய்வதைப் போல் “வேடிக்கை பார்ப்பது” என்று குறிப்பிடுகிறார். எல்லோரும்தான் வேடிக்கை பார்க்கிறோம். இலக்கியம் அறிந்தவர்கள் அறியாதவர்கள் என எல்லோரும். ஏன் எல்லோராலும் இப்படி கடல்புரத்தைப் போலவோ, கம்பா நதியைப் போலவோ ஒரு படைப்பை அளிக்க முடியவில்லை? நாம் வெறுமே வேடிக்கை மட்டும் பார்க்கிறோம். அவரோ, அவர்களோடு ஒருவராக குறுக்குத்துறையிலும் ரெயினீஸ் அய்யர் தெருவிலும் காந்திமதி சன்னதியிலும்  நடமாடுகிறார். அதைவிட முக்கியமாக வாசிப்பவர்களையும் உடன் அழைத்துக்கொண்டு நடமாடச் செய்கிறார். புகைப்படக் கலையில் ‘தெருவோரப் புகைப்படக் கலை’ என்றொரு வகைமை உண்டு. நகரத்தின் பரபரப்பான வீதிகளில் எடுக்கப்படும் புகைப்படங்களாக அவை இருக்கும். நீங்கள் பல ஆண்டுகளாக அதே வீதியில் வசித்துக்கொண்டிருப்பவராக இருக்கலாம். தினம் நூறுமுறை அந்த வீதியை குறுக்கும் நெடுக்குமாக உங்கள் கால்களால் அளந்திருக்கலாம். அதுவரை நீங்கள் கவனிக்கத் தவறிய காட்சியை அவர்கள் தங்கள் புகைப்படங்களில் படம் பிடித்திருப்பார்கள். தங்களின் புகைப்படங்களின் வழியே அந்தத் தருணத்தை வரலாற்றில் இடம் பெறச் செய்திருப்பார்கள். இதைத்தான் வண்ணநிலவன் தன் கதைகளில் செய்கிறார்.

வண்ணநிலவன் கதைகளில் வருபவர்கள் அத்தனை பேரும் நாம் அன்றாடம் சந்திக்கும் எளிய மனிதர்கள். அவர்களைத்தாம் நாம் தினம் சந்திக்கிறோம். சந்தோஷக் கணங்களில் தழுவி அணைத்துக்கொள்கிறோம். கோபத்தில் ஏசிவிட்டு துக்கத்தில் கண்ணீர் சிந்துகிறோம். வண்ணநிலவனுக்கு அவர்களைப் பற்றிச் சொல்வதற்கு நிறைய இருக்கிறது. அவருடைய நாவல்களில் மனிதர்கள் கொட்டிக் கிடக்கிறார்கள். அவர்கள் யாருமே நாம் சந்தித்திராத புதியவர்கள் கிடையாது. எளியவர்கள். சாதாரணமானவர்கள். திருமணத்துக்காகவும் வேலைக்காகவும் பல நேரங்களில் அன்புக்காகவும் காத்திருக்கிறார்கள். ஆனால், நாம் அவர்களிடம் அன்றாடத்தின் சுழலில் கவனிக்கத் தவறிய சில அபூர்வ குணங்களை அவை வெளிப்படும் அற்புதக் கணங்களை ஒரு தேர்ந்த கேமராமேனைப் போலப் படம்பிடித்துத்தர வண்ணநிலவனால் மட்டுமே முடிந்திருக்கிறது. அவ்விடத்தில் அவர் ஒரு மாஸ்டர்.

வண்ணநிலவனுடைய சிறுகதைகள், நாவல்கள் ஆகிய படைப்புகளை ஒட்டுமொத்தமாகத் தொகுத்துக்கொள்ள முனையும்போது கல்யாண்ஜியின் கீழ்க்கண்ட கவிதை மனத்துள் இயல்பாக எழுந்து வந்தது.

“இருந்து என்ன ஆகப்போகிறது

செத்துத் தொலைக்கலாம்

செத்து என்ன ஆகப் போகிறது

இருந்து தொலைக்கலாம்”

வண்ணநிலவனின் படைப்புகளில் இப்படியான ஒரு மெல்லிய சலிப்பும் விரக்தியும் விரவி வருவதை அவதானிக்க முடியும். அதே நேரத்தில் அவற்றையெல்லாம் மீறி பற்றிக்கொள்ள, வாழ்வின் மீது பிடிப்பு கொள்ள அன்பும் கருணையும் மிச்சமிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டத் தவறுவதில்லை. சாரதா கதையில் அவள் வீட்டைவிட்டு வெளியேறக் காரணமாகும் சித்தியை மட்டும் காட்டுவதில்லை. அழகம்மாளையும் சேர்த்தே காட்டுகிறார். எஸ்தர் கதையில், அத்தனை வறுமைக்கும் துயருக்கும் இடம் மாறிப்போகும் இழிநிலைக்கும் அப்பால் அவர்களோடு அன்பின் உருவமாய் எஸ்தர் சித்தி உடன் இருக்கிறாள். சாமிதாஸை இழந்து நிற்கும் பிலோமியைத் தோளணைத்து ஆறுதல்படுத்த வாத்தி வருகிறார்.

கால மாற்றங்களைக் கிரகித்துக்கொள்ளவியலாத பலர், இவரது படைப்புகளில் தொடர்ந்து வருகிறார்கள். அவர்கள் அங்கிருந்து முன்னே நகரவியலாமல் அங்கேயே தேங்கிவிடுகிறார்கள். லாஞ்சுகளுக்கு ஈடுகொடுக்க முடியாத வல்லத்தைக் கொண்டிருக்கும் குரூசும், பழம் பெருமையை விட்டுவிடாத பவிசுடன் திரியும் சங்கரன்பிள்ளையும் அப்படியானவர்களே. அவர்களைக் கரையேற்ற பிலோமியும் மரியம்மையும் சௌந்திரமும் சிவகாமியும் உடன் இருக்கிறார்கள். இப்பெண்களே பாரம் தாங்குகிறார்கள். ரஞ்சி, பிலோமி, எஸ்தர் என்று இவருடைய பெண் பாத்திரங்கள் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள். இரு பெண்களுக்கிடையேயான பிரியம் என்பது ரொம்பவும் அன்யோன்யமானதாகவும் வெளியிலிருந்து பார்க்கும் ஓர் ஆணால் புரிந்துகொள்ள முடியாத புதிராகவும் இருக்கிறது. ரஞ்சிக்கும் பிலோமிக்குமான பிரியத்தை வண்ணநிலவன் வெளிப்படுத்தும் இடங்கள் ஒவ்வொன்றும் அற்புதமானவை.

உயிராய்க் காதலித்த சாமிதாஸ் தன் சூழலின் நிமித்தம் வேறொரு திருமணத்துக்கு இசையும்போதும் பிலோமிக்கு அவன் மீது கோபமோ வெறுப்போ எழுவதில்லை. மாறாக, அவளால் அதை மெல்லிய வருத்தத்துடன் கடந்து வர முடிகிறது. சொல்லப்போனால், அவள் இப்படியான முடிவை முன்பே எதிர்பார்த்தவளாகத்தான் இருக்கிறாள். அதே போலத்தான் பாப்பையாவை நேசிக்கும் கோமதியால், அவனை மறந்துவிட்டு மற்றொரு திருமணத்துக்குத் தன்னை ஒப்புக்கொடுக்க முடிகிறது. திரைப்படங்களிலும் காவியக் காதல் கதைகளிலும் காட்டப்படுவதைப் போலக் காதலுக்காக தன் வாழ்வை அர்ப்பணிக்கும் ஆடம்பரமெல்லாம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. சமூகத்தின் ஆகப்பெரும்பான்மை இப்படித்தான் இருக்கிறோம். மறுபக்கம், தீவிர மனநிலை கொண்டவர்களின் கதைகள் கேட்பதற்கும் வாசிப்பதற்கும் சுவாரஸ்யமானவை. உணர்வு பொங்க எழுதுவதற்குச் சுலபமானவையும்கூட. அவற்றை விடுத்து சக மனிதர்களின் எளிய வாழ்வில் தென்படும் நுட்பமான தருணங்களைக் காட்சிப்படுத்துவது அத்தனை எளிதான காரியம் இல்லை. அதை, வெகு இயல்பாகச் செய்த விதத்தில் வண்ணநிலவனின் படைப்புகள் மிக முக்கியமான இடத்தைப் பெறுகின்றன.

இங்கே நிலவும் ஒழுக்க விதிகள் யாவும் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டும், பழி பாவங்களைக் காட்டி அச்சுறுத்தப்பட்டும் வழி வழியாக ஏற்படுத்தப்பட்டவை. மனிதன் இயல்பிலேயே மீறல்களுக்குத் தலைப்பட்டவன். சமூகத்தின் சட்டதிட்டங்களை மீறி நிகழும் அப்படியான உறவுகளை ‘ரொமாண்ட்டிசைஸ்’ செய்யாமல், அவை நிகழும் போக்கில் இயல்பாகச் சொல்லிச் செல்கிறார். அதிலும் முகம் சுளிக்கும் அசூயையோ மனம் கவரும் கொண்டாட்டமோ வந்துவிடாமல் வெகு நேர்த்தியாக அவ்வுறவுகளைக் கட்டமைத்திருக்கிறார். கடல்புரத்தில் வரும் மரியம்மைக்கும் வாத்திக்கும் இடையிலான உறவையும் கம்பாநதியில் சங்கரன்பிள்ளைக்கும் சௌந்திரத்துக்குமான உறவையும் அப்படித்தான் படைத்திருப்பார். திருமண பந்தத்தால் இணைந்திருந்தவர்களைவிட இவர்களிடையேயான பிணைப்பும் புரிதலும் பிரியமும் இன்னும் தீர்க்கமாக ஊடாடியபடி இருப்பதை அறியலாம். அதிலும் குறிப்பாக சௌந்திரத்தின் முன்னாள் கணவன் இறப்புக்கு சங்கரன்பிள்ளையிடத்தே அவள் அழுது நிற்கும் காட்சியைச் சொல்ல முடியும்.

அதே போல சில உறவுகள் கூச்சத்துடன் கூடிய மரியாதைக்கும் அன்புக்கும் உரியன. கடல்புரத்தில் நாவலில் வரும் ரஞ்சிக்கும் அவளுடைய கொழுந்தனுக்கும் உள்ளதைப் போல. வெளியே கொண்டாடித் தீர்க்க முடியாத பிரியம் ஒன்று மண்கொண்ட ஈரம் போல வரும் உறவு அது. பிள்ளைப்பேற்றின் கழிவுக் குழி வெட்டுமிடத்தில் அந்தப் பிரியம் அத்தனை அழகாக வெளிப்படுவதைக் காண முடியும். அதேபோலத்தான் சௌந்திரம் சங்கரன்பிள்ளையின் மக்களிடத்தே கொள்ளும் பாசம். உரிமை எடுக்கவியலாத உள்ளோடும் அன்பு. இதையெல்லாம் இத்தனை நுணுக்கமாக வாசிப்பவனுக்குக் கடத்த வண்ணநிலவனுக்கு ஓரிரு பக்கங்களே போதுமாக இருக்கிறது.

உணர்வு ததும்பி நிறையும் கணங்களைக்கூட அடக்கமாக, அதே நேரத்தில் அவ்வுணர்வைக் கடத்தியும் விடும்படியாகச் சொல்லும் வித்தையை அவர் தொடர்ந்து தம் கதைகளில் பயின்று வந்திருக்கிறார். அவ்வகையில்தான் கடல்புரத்தினை ஒரு காதல் கதை என்றோ, கம்பாநதியை ஒரு குடும்பத்தின் கதையென்றோ குறுக்கிப் பார்த்துவிட முடிவதில்லை.

வடிவம் சார்ந்து தமிழ் நாவல்களில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, அவற்றுள் சில அசாதாரண வெற்றிகளையும் பெற்றுள்ளன. நாவல் என்பது விரித்துச் சொல்வதன் வழியே நிதானித்துக் கதை சொல்லும் மரபின் தொடர்ச்சியே என்பது என் புரிதல். அவ்வகையில் வண்ணநிலவனின் கடல்புரத்தில், கம்பா நதி, ரெயினீஸ் அய்யர் தெரு ஆகியன ஒவ்வொன்றும் நூற்றுச் சொச்சம் பக்கங்களுக்கு மிகாமல் உள்ள சிறிய படைப்புகள். விரித்துச் சொல்வதற்கான கதையும் அதைப் பிசிரின்றி நேர்த்தியாகச் சொல்வதற்கான எழுத்து வன்மையும் அமைந்தும்கூட  வண்ணநிலவன் சுருங்கச் சொல்லும் முறையையே தேர்வு செய்திருக்கிறார்.

சிவராம் கரந்தின் ‘மண்ணும் மனிதரைப்’ போலத் தலைமுறை தலைமுறையாக விரித்துச் சொல்லத் தகுதிகொண்ட கதைக்களம் கம்பா நதியிலும் உண்டு. கம்பா நதியில் வரும் சூரி, குத்தாலம், வேணுச் செட்டியார் ஆகியோரின் கதைகள் எல்லாம் ஓரிரு வரிகளில் கோடிட்டுக் காட்டப்படுவதோடு நின்று விடுகின்றன. வண்ணநிலவன் கங்கையைப் போல ஆர்ப்பரித்து ஓடும் பிரவாகத்தைவிட அலுங்காமல் ஓடும் கம்பா நதியையே மனத்துள் விரும்பியிருக்கிறார். ஒரு படைப்பை எழுதுகிறவனுக்கு அதை எப்படி அளிக்க வேண்டும் என்பதற்கான முழுச் சுதந்திரம் உண்டு. அதை மதிக்கிறேன். அதே நேரத்தில் அப்படியான தேர்வுகள் வாசகப் பார்வையில் ஏற்படுத்தும் தாக்கங்களையும் இங்கே சொல்லிவிட விரும்புகிறேன். கம்பா நதியிலும் சரி கடல்புரத்திலும் சரி நிறைய மனிதர்கள் தொடர்ச்சியாக வந்துகொண்டே இருக்கிறார்கள். அவர்களில் சிலருக்குக் கொடுத்த இடத்தையும் முக்கியத்துவத்தையும் மற்றவர்களுக்குக் கொடுக்கத் தவறுவதால் அவர்களில் பெரும்பாலானோர் வெறும் பெயர்களாக மட்டுமே வந்து போய்விடுகிறார்கள். மாறாக, பெரிய நாவல்களில் வரும் சிறு சிறு பாத்திரங்கள்கூட துலக்கமாக எழுந்து வருவதற்கான இடம் அவற்றில் இருக்கிறது. இது போன்ற சிறிய நாவல்களில் அதற்கான இடம் இல்லை.

அதிலும் குறிப்பாக, ரெயினீஸ் அய்யர் தெருவை எழுதி முடிக்கப்படாத நாவலாகவோ அல்லது ஒரு நாவலுக்காக எழுதப்பட்ட குறிப்புகள் என்றோதான் என்னால் பார்க்க முடிகிறது. வடிவம் சார்ந்து இதை அசோகமித்திரனின் ‘இன்று’ நாவலுடன் ஒப்பிட்டுக்கொள்ளலாம். பின்னதில், தனித்தனியாகத் தொக்கி நிற்கும் கதைகளை அவசரநிலைப் பிரகடனம் என்ற கண்ணுக்குத் தெரியாத சரடு இணைத்துச் செல்வதைப் போல, இங்கே ரெயினீஸ் அய்யர் தெரு இருக்கிறது. இதிலும்கூட ரெயினீஸ் அய்யர் தெருவே முதலில் வந்தது. பெல்ஜியத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ட்மிட்ரி வெர்ஹல்ஸ்ட் எழுதி, தமிழில் லதா அருணாச்சலத்தால் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்திருக்கும் ‘பிராப்ளம்ஸ்கி விடுதி’யும் இதே வகையில் அமைந்த மற்றொரு நாவல். இதில் பல்வேறு நாடுகளிலிருந்து தஞ்சம் கோரி பெல்ஜியம் வந்தடைந்த அகதிகளின் வாழ்வு துண்டு துண்டான அத்தியாயங்களாகச் சொல்லப்பட்டிருக்கும். புகலிடம் தேடி அலைபவர்களின் துயரே இவ்வத்தியாயங்களை இணைக்கிறது. ப்ராப்ளம்ஸ்கி விடுதியும் நூற்றுச் சொச்சம் பக்கங்கள் கொண்ட சிறிய நாவலே. அதில் கிடைத்த முழுமையும் நிறைவும் மற்ற இரண்டிலும் கிட்டாதது ஒரு குறை. 

கடல்புரத்தில், கம்பா நதி நாவல்களை வாசித்து முடிக்கும்போது இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாமே என்ற ஏக்கம் எழுவதைத் தவிர்க்க முடிவதில்லை. அதையே இந்நாவல்களின் வெற்றியாகவும் பார்க்கக்கூடிய கோணம் இருப்பதையும் மறுப்பதற்கில்லை. ஏனெனில், இத்தனை குறைவான பக்கங்களில்கூட அவரால், தன் நுட்பமான அவதானிப்புகளின் வழியே ஆழமாக வாசகனைப் படைப்புடன் ஒன்றச் செய்ய முடிகிறது. ஒரு வீட்டை விவரிப்பதென்றாலும் அறைவீடு, பட்டகசாலை, அங்கணம் என்று துலக்கிச் சொல்லும் துல்லியமும், தண்ணீர் தெளிக்கும் போது எழும் சத்தத்தின் வழியே தெளிப்பவரை அடையாளம் காணும் நுணுக்கமும், பலாப்பழம் கதையில் வருவதைப் போலவே அவரவருக்கான பிரத்தியேக வாசனை வரை சொல்லப்படும் அவதானிப்பும்  அக்கதைகளோடு வாசகப் பிணைப்பை உறுதிப்படுத்துகின்றன.

பெரும்பாலும் வாழ்வின் வெற்றியையும் மகிழ்ச்சியையும் ஒருவர் பார்க்கும் வேலை, கையில் வாங்கும் சம்பளம், மனதுக்குப் பிடித்த வாழ்க்கைத் துணை, கசப்பில்லாத உறவுகள், பிணியற்ற உடல் போன்ற காரணிகளைக்கொண்டு பொதுவில் நாம் எளிதாக எடைபோட்டுவிட விழைகிறோம். ஒப்பிட்டுக்கொண்டு போதாமையில் புழுங்குபவர்களும் உண்டு. ஆனால், வாழ்க்கை ஒன்றும் அத்தனை கறுப்பு வெள்ளையாக இருப்பதில்லை. ஒரே வீட்டில் வசிக்கும் ஒருவர் வாழ்வை அணுகும் விதம் அதே வீட்டில் வசிக்கும் மற்றொருவரின் பார்வையிலிருந்து முற்றிலும் வேறுபடுகிறது. அப்படியிருக்கையில் அத்தனை பேரையும் ஒரே நேர்கோட்டில் நிறுத்தி மதிப்பிடுவது போன்ற அபத்தம் ஒன்று இருக்க முடியாது. வண்ணநிலவன், அப்படி ஒரே வீட்டில் வசித்தாலும் பார தூர மனப்போக்குகளைக் கொண்டவர்களைப் பற்றித் தொடர்ந்து எழுதியிருக்கிறார்.

அவருடைய வாக்குமூலம் தொடரில் வரும் ஒரு வரி இது – “பூனை நடப்பது போலச் சத்தமில்லாமல் வாழ்க்கை ஊர்ந்துபோய்க்கொண்டிருக்கிறது.”

அப்படிப் பூனை நடக்கும்போது எழும் மிதமெல்லிய ஓசையை, அன்றாடத்தின் பரபரப்பில் நாம் கவனிக்கத் தவறிய அச்சலனத்தை வண்ணநிலவனின் கதைகள் நமக்குக் கவனப்படுத்துகின்றன. புயலில் விழுந்த பெரு மரங்களுக்கு இரங்குபவர்களிடத்தே இவர் மென்காற்றுக்குப் படபடக்கும் தளிர்களைக் காட்டுகிறார். சிகரங்களை அண்ணாந்து பார்த்து வியப்பவர்களிடம் அவர்தம் கால்களுக்கு அடியில் கிடக்கும் கூழாங்கற்களின் வழவழப்பையும் குளுமையையும் பற்றிப் பேசுகிறார். இப்படியாகச் சிறிய விசயங்களில் ஒளிந்திருக்கும் அற்புதங்களைச் சொல்லி, வாசிப்பவன் மனத்துள் இன்னும் நெருக்கமான இடத்தைப் பிடித்துக் கொள்கின்றார்.

அவருக்கு என் வணக்கங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.