தான் எழுதிய வரிகளுக்கு தன் வாழ்வால் அர்த்தம் செய்யும் வண்ணநிலவன்

வெகு சிலரை நினைத்த மாத்திரத்தில் ஒரு அன்பின் குளுமை மனசுக்குள் விரவிப் பரவும். அப்படி ஒரு மனிதர்தான் வண்ணநிலவன். நமக்குள் இப்படி ஒரு  உணர்வை ஏற்படுத்த அவருக்கு எப்படிச் சாத்தியமாயிற்று..! நம்மில் பலருக்கும் வார்த்தை வேறு செயல் வேறு இல்லையா… அவருக்கு இரண்டும் ஒரே நேர்க்கோடு. அன்பு பற்றிப் பேசும் வித்தார அலங்காரச் சொல் அழகர் அல்லர் அவர்; செயல் அழகர்.

அவர் கதைகளை, அதில் வரும் மனிதர்களை என் கல்லூரிக் காலம் முடிந்த பின் நான் வாசித்திருந்தேன். கம்பா நதி, கடல்புரத்தில் நாவல்களும் பாம்பும் பிடாரனும் சிறுகதைத் தொகுதியில் சில கதைகளும் மட்டுமே அப்போது படித்திருந்தேன். அவர் படைப்பில் நான் வாசித்ததில் மிக முக்கியமானது ‘எஸ்தர்’. அது என்னை ஸ்கிரிப்ட்டும் எழுத வைத்து, இன்றைக்கு வரைக்கும் தூங்கவிடவில்லை. அதைக் கையில் வைத்துக்கொண்டே ஒரு மாமாங்கமாகத் தயாரிப்பாளர்களைத் தேடி அலைந்துகொண்டிருக்கிறேன். இது போதாதா… அவர் படைப்பு ஒருவனைப் படுத்தும் பாட்டைச் சொல்ல..?

அந்தக் கதையை என் குருநாதர் எடிட்டர் லெனினிடம் தந்தபோது, அவர் முதலில் வாசிக்கவில்லை. ‘நீங்க வாசிச்சிட்டிங்கல்ல… சொல்லுங்கோ’ என்றார். நான் சொன்னேன். ‘இத திரைக்கதையா எழுதிப் பாருங்க’ என்றார். அதே காலகட்டத்தில் நண்பர் தி. ஜா. பாண்டியராஜன் இந்தக் கதையைப் பற்றி இன்னும் விரிவாகப் பேசி, ‘என். எஃப். டி. சிக்கு நாம இதைப் படமா பண்ணலாம்ண்ணே’ என்று பிள்ளையார் சுழி போட்டதோடு மட்டுமல்லாமல்,  வண்ணநிலவனது  ‘மிருகம்’, ‘மயானகாண்டம்’ – போன்ற மற்ற இரு கதைகளையும் திரைக்கதையில் இணைக்கச் சொல்லி அவர்தான் ஆலோசனையும் சொன்னார். பிறகு வண்ணநிலவனைத் தொடர்புகொண்டு பேசினேன்.

“என்னய்யா இதல்லாம் கேக்கணுமா… ஒரு வார்த்தை சொன்னா போறாதா… நல்ல விஷயம்தானய்யா. எடுத்து தாராளமா செய்ங்கய்யா. சந்தோஷமா தரேன். வாழ்த்துகள்ய்யா”

“எழுத்து பூர்வ அனுமதி வேணுமே. வீட்டுக்கு வரவா… எப்ப வரண்ணே?”

“யோவ் நான் சும்மா இங்க வீட்லதானய்யா கிடக்குதேன். எப்ப வேணா வாங்கய்யா. எப்ப வந்தாலும் சாப்பிடறமாரி வாங்கய்யா. என்ன வேணுமோ எழுதிட்டு வாங்க. கையெழுத்தப் போடுதேன் அவ்ளோதானய்யா.”

“இல்லை, முறைன்னு ஒண்ணு இருக்குல்ல…”

“முறையா..? சரியாப் போச்சு போங்க. யோவ்… பேசாம புறப்பட்டு வாங்கய்யா”

நான் அனுமதி வாங்கும் ஃபார்மெட்டை, டைப் செய்து ரெண்டு காப்பி எடுத்துக்கொண்டு போனேன். முதலில் காலைச் சாப்பாட்டை அண்ணி பரிமாற இருவரும் சாப்பிட்டோம். காபி குடித்தபின் ஏதோ பேச ஆரம்பித்தேன்.

“யோவ் வந்த வேலையப் பாத்து சட்புட்டுன்னு முடிங்கய்யா. என்ன அந்த பேப்பர எடுத்துட்டு வந்தியளாய்யா..?”

“ஆமா… பைல இருக்கு.”

“அத எடுங்க. முதல்ல கையெழுத்தப் போட்டுருவோம். எனக்கு என் கதை வரதெல்லாம் ஒரு இது இல்லைய்யா. எதாவது  நல்லது நடந்து பணம் எதும் உங்களுக்கு வந்தா அதான் எங்களுக்கு சந்தோஷம்”.

 அண்ணியும், “ஆமா, இன்னும் எவ்ளோ காலத்துக்குத்தான் உங்க அண்ணன் மாரியே இருப்பிங்க, வீட்ல ரெண்டு புள்ளைங்க இருக்குல்ல” என்று சொல்லிவிட்டு சம்பாஷணையில் கலந்துகொண்டே சாப்பிட்டார்.

ஃபார்மெட்டைப் பார்த்துவிட்டு, ஒரு தனி கைலெட்டராக எழுதி அனுமதி தந்தார். கையெழுத்துப் போட்டதும் தயங்கி ஒரு 5000 ரூபாய் பணத்தை எடுத்து, “இது இருக்கட்டும்” என இருவரும் அமர்ந்திருந்த அதே நீண்ட நாற்காலியின் நடுவில் வைத்தேன். அவருக்குக் கோபம் வந்துவிட்டது.

“யோவ்… என்னய்யா இதல்லாம். முதல்ல இத எடுத்து பைல வைங்கய்யா”.

“இல்லண்ணே… இருக்கட்டும்”.

“யோவ்… ரூவாய எடுத்து முதல்ல  பைல வைங்கய்யா. அப்பறம்தான் பேச முடியும். நீங்களே கஷ்ட்டப்படுதீய… ஏது பணம் உமக்கு..?”

“நீங்களும்தானண்னே கஷ்ட்டப்படறீங்க”.

“என்னய்யா பேச்சு இது. கஷ்ட்டம் எல்லாருக்கும்தான் இருக்கு… அதுக்காக… எவ்ளோ காரியங்களைச் செஞ்ச மனுஷன் நீங்க. சும்மா இருங்கய்யா”

நான் பணத்தை எடுத்து பையில் வைத்தவுடன்தான் பேசினார். பின்பு ஏதேதோ பேசினோம். அண்ணி சுப்புலட்சுமி அலுவலகத்துக்குக் கிளம்பிக்கொண்டிருந்தார்கள். நான் அவருக்குத் தெரியாமல் அண்ணியிடம் பேசுவது போல, மெல்ல அடுக்களை வாசலில் இருந்த ஃப்ரிட்ஜ் மேல் பணத்தை வைத்துவிட்டு, அண்ணியிடம் சைகையாய் பணம் வைத்ததைச் சொல்லிவிட்டுப் புறப்பட்டு வந்துவிட்டேன்.

படமும் ஓ.கே ஆகிவிட்டது. காரணம் நடுவர் குழுவில் இருந்தவர்கள். லெனின், பி.ஸி. ஸ்ரீராம், பிரபஞ்சன். ஒருவர் ஆசான். மற்ற இருவர் நண்பர்கள். வண்ணநிலவன் கதையின் தரம், அதைத் திரைக்கதையில் கொண்டு செலுத்திய விதம் எல்லாம் சேர்ந்து, படம் சாங்ஷன் ஆகியிருந்தது. ஒரு வழியாய் 11 மாதம் கழித்து 35 லட்சம் பணம் சாங்ஷன் ஆனதாய் ஆபீஸில் சொன்னார்கள். போய்க் கேட்டால், அதைத் தர அவர்கள் கேட்ட 40 % லஞ்சப்பணம் அதிர்ச்சியாக்கிவிட்டது. ‘நல்லா இருங்க சார்… நன்றி’ என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். ஆக முதல் பட முயற்சியே, சிறப்பான தொடக்கமாக அமைந்துவிட்டது. இந்தச் சேதியை நான் வண்ணநிலவனிடம் சொல்லவில்லை. ஆறுமாசம் கழித்து அவருக்குத் தெரிய வந்து, “என்னய்யா இப்படி ஆயிடுச்சாமே” என்றார். “ச்சை. என்னய்யா இது… இவ்ளோ மோசமா இருக்காங்க. சரி… அந்தப் பணத்தைக் கொஞ்சம் வந்து வாங்கிட்டுப் போயிடுங்க. நான் எடுத்து வச்சிருக்கேன்.”

“அண்ணே… நான் ஒண்ணுமே தரல, கொஞ்சம் சும்மா இருங்கண்ணே.”

“யோவ். இதல்லாம் நல்லா இல்லய்யா. வந்து வாங்கிட்டுப் போங்க. இல்ல நான் வரவா..?”

“சரிண்ணே… விடுங்க… நானே வரேன்”.

அவரும் இரண்டுமுறை அதற்காக ஃபோன் செய்தார். மூன்று மாதம் ஆகிவிட்டது. நான் போகவில்லை. ராயப்பேட்டை பீட்டர்ஸ் காலனி வீட்டில் காலை அஞ்சரை மணிக்கு ஒருநாள் நல்ல தூக்கத்திலிருந்தேன். காலங்காத்தால யார் அழைப்பு மணியை அடிப்பது என்று பார்த்தால் வண்ணநிலவன்.

“சாரிய்யா. தூக்கத்துல எழுப்பிட்டேன்.”

“இல்ல… இல்ல… வாங்க ப்ளீஸ்”.

நான் அவரை அமர வைத்துவிட்டு, பல்துலக்கி முகம் கழுவி வந்தேன். ‘அண்ணியோடு எதும் சண்டையோ… என்ன இவ்வளவு அதிகாலையில் வந்திருக்காரே’ என்ற யோசனையோடு, காப்பியை போடச்சொல்லி வாங்கி எடுத்துக்கொண்டு அவரிடம் போனேன்.

“எதுக்கய்யா காலைல அவங்களுக்கு சிரமம். வெளில போய் சாப்பிட்ருக்கலாமேய்யா.”

“இருக்கட்டும்ண்ணே. அதனால என்ன, இதல்லாம் ஒரு சிரமமாண்ணே…”

“பொம்பளை ஆட்கள், அவங்களுக்கு காலைல எவ்ளோ வேலைகள் இருக்கும்யா…” என்று சொல்லிக்கொண்டே காபி சாப்பிட்டுவிட்டு வீட்டம்மாவிடம்,“யம்மா நல்லா இருக்கியளா. காப்பி ரொம்ப நல்லா இருந்திச்சும்மா” என்றார்.

“அண்ணே என்ன விஷயம்ண்ணே, இவ்ளோ அதிகாலைல…”

“யோவ்… விடிஞ்சி எவ்ளோ நேரம் ஆகுது?” என்று சொல்லிவிட்டு ஒரு கவரில் 5000 ரூபாயை எடுத்துத் தந்தார்.

“ஏண்ணே இப்படில்லாம் பாடாப் படுத்துறீங்க..? குடுத்தது குடுத்ததுதான்… விடுங்கண்ணே”.

“இல்லய்யா. படம் எடுத்திருந்தாக்கூட பரவாயில்லைய்யா. எடுக்காத படத்துக்கு எனக்கெதுக்கு பணம்? எனக்கு பெரிய உறுத்தலா இருக்கு. சரியா தூக்கம் வரலய்யா. இத வாங்கிக்கிட்டு என்னை விடுதலை பண்ணிவிடுங்கய்யா.”

இதற்கு மேல் அவரிடம் சொல்வதற்கு என்னிடம் எதுவும் இல்லை என்று பணத்தை வாங்கிக்கொண்டேன்.

வண்ணநிலவன் கதைகளும் அவரும் வேறு வேறு அல்ல. நல்லது எதையெல்லாம் அவர் அந்த கதைகளில் வலியுறுத்துகிறாரோ அதுவே அவராகவும் இருப்பது எத்தனை பெரிய உன்னதம்!

அந்த உன்னதம்தான் எல்லோரையும் அவர்பால் ஈர்க்கிறது. இல்லையென்றால், அன்றாடப்பாட்டுக்கே அல்லலுறும் அய்யனார் அவருக்காக நேர்காணல் இதழ் ஒன்றைச் சமர்ப்பித்திருப்பாரா..? மறு பிரசுரம் காணாத அவர் கவிதைத் தொகுப்பை அப்போது அவர் தேடித் தேடி பதிப்பித்திருப்பாரா..? ருத்ரய்யா “அவள் அப்படித்தான்” படத்துக்கு வசனம் எழுதச்  சொல்லியிருப்பாரா…? வெங்கட்சாமிநாதன் டெல்லியில் இருந்துகொண்டே மனித நேய விருதுக்கு பரிந்துரைத்திருப்பாரா..? இளையராஜா தனது அஞ்சு லட்சரூபாய் இலக்கியப் பரிசை வாங்க மறுத்த இந்த மனிதரைப் பார்க்க வேண்டுமே என்று சொல்லியிருப்பாரா..? “ராமச்சந்திரன் (வண்ணநிலவன் இயற்பெயர்) வேற மனுஷன். அவர் முன்ன நாம ஒண்ணுமே இல்ல ரவி” என்று வண்ணதாசன் சொல்வாரா..?

“நான் அவரை யோவ் போய்யா வாய்யான்னுதான் பேசுவேன். சண்டை போடுவேன். ஆனா, அவன் ஒரு மௌன ஞானிங்க. டேய்… போங்கடா உங்களை எல்லாம் தெரியும்ன்னு சொல்லாம சொல்லி, எந்த ஒண்ணுமே ஒரு மசிரும் இல்லன்னு சாதாரணமா அமுக்குணிமாதிரி இருப்பான் பாருங்க. அந்த மௌனம் கொன்னுடுங்க நம்மளை. அவந்தான்ங்க எங்க யூனிட்லயே எல்லார்க்கும் ஞானகுரு. அவர் எங்களோடதான் இருப்பாரு. ஆனா, அவர் ரெண்டு அடி மேலதான் இருந்துகிட்டே இருப்பார். நாங்க சும்மா அவரைச் சீண்டுவோம். நெருப்பை கறையான்கள் அரிக்க முடியுங்களா..?” என்று அதை அப்படியே வசனம் போல் பேசிக் காண்பிப்பார் ருத்ரய்யா.

இப்படி அவர் வாழ்வில் சந்தித்த சிநேகம்கொண்ட பாத்திரங்கள் மட்டுமல்ல; அவரது கதாபாத்திரங்களும்கூட அப்படித்தான். ‘இருப்புப் பாதை கண்காணிப்பாளன்’ என்று ஒரு பாத்திரம் அவரது ‘காலம்’ கவிதைத் தொகுப்பில் வரும். நாமும்தான் பார்த்திருக்கிறோம். ஆனால் அவர் கண்களில் எப்படி அது பட்டு, இலக்கிய நிரந்தரம் கொள்கிறது..! அவர் குறைந்த கவிதைகளே எழுதியுள்ளார். ஆனால் செறிவானவை. அவரது கவிதைகளில் எனக்கு மிகவும் பிடித்தவற்றுள் ஒன்று  இது.

“எதையேனும் சார்ந்திரு

கவித்துவம்,

தத்துவம்,

காதல்

இங்கிதம்

சங்கீதமிப்படி

எதன் மீதேனும் சாய்ந்திரு…

இல்லையேல்

உலகம் காணாமல் போய்விடும்.”

இதைப் பாடலாகவும் மெட்டமைத்தேன். ஆனால், ஏனோ அது சரியாய் கூடி வரவில்லை. மறுபடியும் மெட்டமைக்க முகூர்த்தம் அமைய வேண்டும்.

எம்.வி. வெங்கட்ராம் மிகச் சிலரை மட்டுமே அவர் வயதுக்கு சிறந்த இளம் சிறுகதை எழுத்தாளர்களாகக் குறிப்பிடுவார். அவர்களில் கோபி கிருஷ்ணன், வண்ணநிலவன், பாவண்ணன், ஜெயமோகன் போன்றவர்கள் முதன்மையானவர்கள். எம்.வி.விக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தபோது, வண்ணநிலவன் சுபமங்களாவுக்காக அவரைப் பேட்டிகாண கும்பகோணம் வந்திருந்தார். நம் செல்லம் லாட்ஜில்தான் அந்த பேட்டி நடந்தது. வண்ணநிலவன் ஊருக்குத் திரும்பிய பின், ரெண்டு நாள் கழித்து லாட்ஜுக்கு வந்திருந்த எம்.வி.வி, வண்ணநிலவனைப் பற்றி இப்படிச் சொன்னார். “இவ்ளோ நல்லவனா இருந்தா நிம்மதியாவே இருக்கமுடியாதே ரவி…”

வண்ணநிலவன் மட்டும் இப்படியல்ல அந்த அண்ணி ஒரு அன்னபூரணி. வீட்டுக்கு வருபவர்கள், ஏதாவது சிறு பண்டமாவது சாப்பிடாமல் காபியோ டீயோ குடிக்காமல் வெளியில் வரமுடியாது. அப்படி ஒரு உபசரிப்பை பெரும்பாலும் எழுத்தாளர்கள் வீடுகளில் காண முடியாது. சம்பாதிக்கத் தெரியாத எழுத்தாளன் அந்த வீட்டுக்கே சுமை. ‘இதுல இவங்களத் தேடி வர்ற இதுங்களுக்கெல்லாம் உபசரிப்பு வேறயா?’ என்ற நினைப்பே பலருக்கு இருக்கும். அதைக் குறை சொல்வதற்கும் இல்லை. அதனால், டீக்கடைகள்தான்  நமக்கெல்லாம் சந்திக்கும் மையம். இந்தச் சூழலில்தான் அண்ணி, வீட்டுக்கு வருகிறவர்களுக்கு சாப்பாடும் போடுவார்கள்; அண்ணனோடு வீட்டு விஷயங்களுக்கு சண்டையும் போடுவார்கள். வீட்டுக்கு வீடு வாசப்படி!

அண்ணிதான் இப்படியென்றால் அண்ணனின் அம்மாவும் அண்ணியின் அம்மாவும் உபசரிப்பதில் அரசிகள். எப்படி இந்த நவநாகரீகச் சென்னையில் இவர்கள் இதையெல்லாம் தக்க வைத்துக்கொண்டு இருந்தார்கள் என்று ஆச்சரியமாக இருக்கும்.

நானும் என் பேராசிரியர் மது.ச.விமலானந்தமும் அவர் நங்கநல்லூரில் குடியிருந்தபோது அங்கு சென்றோம். அது ரொம்பவும் சிறிய வீடு. வெய்யில் கால மாதம். நல்ல பசி. எங்கெங்கோ அலைந்து திரிந்து ஒரு வழியாய் அந்த வீட்டைக் கண்டுபிடித்தோம். மதியம் சரியாக ஒரு மணி. உடனே தண்ணீர் கொண்டுவந்து தந்தார்கள். நாங்கள் யார் என்ன விவரம் என்பதை இருவரும் கேட்டு அறிந்தார்கள். வந்திருப்பவர்களில் ஒருவர் பேராசிரியர் என்பது அவர்களுக்கு சந்தோஷமாகவும் இருந்தது. அவரைச் சரியாக உபசரிக்க முடியாதே என்ற சிறு பதற்றமும் இருந்தது. அப்போது அண்ணனும் அண்ணியும் வீட்டில் இல்லை. வீட்டிலிருந்தது ரெண்டு பேரின் அம்மாக்களான இவர்கள் மட்டுமே. இருவருமே பழுத்து, வெள்ளைப் புடவையில் இருந்தார்கள். நாங்கள் அவர்களை அதற்கு முன் சந்தித்ததில்லை.

அப்போதுதான் அவர்கள் ஏதோ சாப்பிடத் தட்டில் எடுத்து வைத்த நேரம். “நீங்கள் சாப்ட்டிங்களா?” என்று கேட்டார்கள். இல்லை என்றோம்.

“இப்ப வந்துருவான்… செத்த இப்படி இருங்க”  என்று சொல்லிவிட்டு  எதோ சில புத்தகங்கள் கொண்டுவந்து தந்தார்கள். இருபது நிமிடங்கள் காத்திருந்தோம்.

“நாங்க புறப்பட்றோம்மா” என்று உள்ளே எட்டிப் பார்த்துச் சொன்னதும் இரண்டு இலைகள் அங்கு போடப்பட்டு தண்ணீர் வைக்கப்பட்டிருந்தது.

“கையலம்பிட்டு வாங்க… சாப்பிடலாம்” என்று ஒரு செம்பில் தண்ணீர் தந்து இருவரும் அழைக்கிறார்கள்.

“அண்ணன் வரட்டுமே” என்றோம்.

“வந்திருவாங்க… நீங்க வாங்க” என்றார்கள்.

நாங்கள் இருவரும் தயங்கி உள்ளே போனோம். சாதம், ஒரு குழம்பு,  ஊறுகாய் அவ்வளவுதான்.

“வேற எதும் செய்ய முடியல தப்பா நினைச்சுக்காதீங்க” என்று திரும்பத் திரும்ப ஏதோ மன்னிப்பு கேட்கும் த்வனியில் இருவரும் சொல்கிறார்கள்.

“நீங்க சாப்ட்டீங்களா?” என்று கேட்டேன்.

“நீங்க சாப்டுங்க நாங்க இதோ எடுத்து வச்சிருக்கோம்” என்று அவர்கள் பிசைந்த சாதத்தை எடுத்துக் காண்பிக்கிறார்கள்.

எங்களுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. நல்ல பசி சாப்பிட்டோம். மறுபடி தண்ணீர் கொண்டுவந்து தந்தார்கள்.

அண்ணனின் அம்மா அவரது ஆபீஸ் அட்ரஸ் சொல்லி, “அங்க சாயந்தரம் வரை இருப்பான். அங்க போய்ப் பாருங்க” என்று சொன்னார்கள்.

“வருவார்ன்னீங்களே..?”

“நீங்க சாப்பிடாம போய்ட்டீங்கன்னா…” என்றதும் சட்டென என் ஆசிரியர் இருவரது கால்களையும் தொட்டுக் கும்பிட்டார்.  அவர்கள் பதறி விலக நானும் அப்படிக் கும்பிட்டேன். இதுபோன்ற இளையான்குடி மாற நாயனார்களை இனி எந்த ஜென்மத்தில் நாம் காணப்போகிறோம்..?

அந்த குணத்தை அப்படியே கொண்டுவந்த அண்ணி சுப்புலட்சுமியும் அப்படித்தான் உபசரிப்பார்கள். நம் வீட்டு மனிதர்களைப் பேர் சொல்லி விசாரித்துப் பேசுவார்கள். அண்ணனும் வீட்டில் நன்றாகப் பேசுவார். வெளியில் கம்மென்று இருப்பார். அவருக்குப் பேச்சு திக்கும் என்பதும் ஒரு காரணம். அவர் முதன்முதலில் ஒரு மணிநேரம் பேசிய அதிசயம் ஞாநி நடத்திய கேணி கூட்டத்தில்தான் நடந்தது. அதீத கூச்சம். பழகாதவர்களோடு பேசத் தயங்கி ஒதுங்கி இருப்பார். அவர் பாத்திரங்களும் சதா சளசளப்பவை அல்ல.

வண்ணநிலவன் ஒரு கூட்டத்துக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டு வரமாட்டார். எழுதித் தருகிறேன் என்று சொல்லிவிட்டுத் தரமாட்டார்.  அரசியல் கருத்து ரீதியாக அவர் நம்மோடு முரண்படுவார். துக்ளக் துர்வாசரின் சாபங்களும் சந்திரனின் சில சமய வெம்மையும் கலை குறித்த பார்வைகளும், பிராமணிய நோக்கும் எனக்கும் சேர்த்து சிலருக்கு ஆவதில்லை. அவர் எப்படி  ஒரு விஷயத்துக்கு ரியாக்ட் செய்வார் என்று நம்மால் கணிக்க முடியாது. சில காலம் தொடர்பே இல்லாமல் இருப்பார். துக்ளக் வேலைக்கு ஒரு மாசம்  போவார். இன்னொரு மாசம் போகமாட்டார். அண்ணியோடு இவரும் மல்லுக்கு நிற்பார். இப்படியான குறைகளே இல்லையா அவரிடம்..? பலவீனம் இல்லையா..? உண்டு; அதெல்லாம் நம்மில் யாரிடம் இல்லை..? அதற்காகவெல்லாமா நாம் அவரைக் கொண்டாடுகிறோம்? அவர் ரஷ்யக் கதாசிரியர்கள் போல சிருஷ்டித்த கதைகளும், நவநவமாய் அதில் உலவ விட்ட அந்தக் கதாபாத்திரங்களும் பைபிள் வாசகங்கள் போல அவர்கள் பேசும் உரையாடல்களும், அடுத்த மனசுக்குள் ஊடாடி ஆழ்மனச் சிக்கல்களை வெளியே எடுத்துப் போட்டு, ‘இதல்லாம் ஒண்ணுமே இல்லைய்யா… சும்மா வெளில வாங்கய்யா’ என்று தோளணைத்து கதையிலும் நேரிலும் சொல்லி இதம் செய்யும் அந்த மனம்கொண்ட வண்ணநிலவனைத்தானே நாம் கொண்டாடுகிறோம்..!

பெருமாள் கோயில் பட்டர் போல ஒரு குவளையில் எல்லோர்க்காகவும் அன்பென்ற ஒரு கரண்டி துளசித் தீர்த்தத்தோடும் நாலைந்து துளசி இலைகளோடும்தான் அவர் அந்த சின்முத்ரா அப்பார்ட்மென்ட்டில் இன்றைக்கும் நின்றுகொண்டே இருக்கிறார்.

 “ஸ்நேகிதம் என்றால் அது அவ்வளவு பெரியது. அதற்கு வயசு என்ற ஒன்று உண்டா என்ன?”

“மனிதர்களுக்கு அன்பு என்கிற பெரிய வஸ்து அளிக்கப்பட்டிருக்கிறது. இன்னொரு மனிதனை நெருங்குவதற்கு எவ்விதத் தடையுமில்லை. எவ்வளவோ இழந்தாலும் பெறுவதற்கும் ஏதாவது இருந்துகொண்டேதான் இருக்கிறதென்று நான் நினைக்கிறேன்.”

இப்போது சொல்லுங்கள்…. இந்த வரிகள் எல்லாம் அவரால்  எழுதப்படும்போதுதானே சத்திய அர்த்தம் கொள்கின்றன!

(தண்பொருநையின் வெம்மை மனிதர்கள்  என்ற தலைப்பில் சிற்றில் நடத்திய வண்ணநிலவன் கதையுலகு பற்றிய கருத்தரங்கத்திற்காக எழுதப்பட்ட கட்டுரை.)

13. 10. 2022 வியாழன்.

மாலை 6 : 26.

சென்னை – 10.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.