கலை அறுதியாக அகவயமான ஒன்று-காலத்துகள்

அஜய் என்கிற இயற்பெயர் கொண்ட காலத்துகள் சமகால நவீனத் தமிழிலக்கியத்தில் அதிகம் வெளியே அறியாத குரல்களில் முக்கியமானது என்றே கருதுகிறேன். அடிப்படையில் காலத்துகள் மிகச்சிறந்த வாசகர். தனது வாசிப்பின் நிறைவான பிரதேசங்களில் கண்டுகொண்ட வெளிச்சத்தின் வழியாகவே எழுத வந்தவர். இதுவரை மூன்று சிறுகதைத் தொகுப்புகளும்,நாவல் ஒன்றும் அவரிடமிருந்து வெளிவந்திருக்கின்றன. மூன்று சிறுகதைத் தொகுப்புகள் வழியாகச் சிறுகதைகளின் அனைத்து வடிவங்களையும் ஓரளவுக்கு முயன்றுள்ளார். இத்தொகுப்புகளில் மனிதர்களின் கசடுகளை,உடல் மீதான அவர்களின் வேட்கையை,குடும்ப அமைப்பின் சிதறல்களை,மரணத்திற்கான அவர்களின் காத்திருப்பை அதன் வழியாக அவர்களின் பாடுகளைத் தனது வெவ்வேறு கதை வடிவங்களில் எழுதிப்பார்த்துள்ளார் என்பதை நான் நம்புகிறேன். அவரின் அனைத்துப் படைப்புகளையும் படித்துவிட்டு அவற்றின் மீதான என்னுடைய கருத்துக்களையும், எதிர்மறையான விமர்சனங்களைத் தொகுத்துக்கொண்டு அவற்றையெல்லாம் கேள்விகளாக மாற்றி நீண்ட உரையாடல் ஒன்றை அவருடன் செய்திருக்கிறேன். என்னுடைய கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் காலத்துகளும் தனக்குரிய இயல்பான முறையிலேயே நிதானமான பதில்களை அளித்துள்ளார். இனி நேர்காணல்

காலத்துகள் என்கிற புனைபெயரைச்  சூட்டிக் கொண்டதற்கான பின்புலம் என்ன? இப்பெயர் ஒருவிதமான சுவாரஸ்யம் தருவதால் கேட்கிறேன்.

முதல் முறையாகப் புனைவை எழுதி அனுப்பிய போது என் பெயரில் வெளியிட விரும்பவில்லை. ‘காலம்’ பற்றிய மயக்கம் எனக்குச் சிறு வயதிலிருந்தே உண்டு, எனவே யோசிக்காமல் அப்போது தோன்றிய பெயர் தான் காலத்துகள். காலப்பெருவெளியில் மிகச் சிறிய அல்லது அற்பமான ஒன்று என்ற எண்ணத்தில் தான் இதைத் தேர்வு செய்திருக்க வேண்டும். ஆனால் இப்போது பாசாங்குத்தனமான, pretentious (கருத்தார்ந்து இருப்பதாக) புனைபெயர் என்று தான் எனக்குத் தோன்றுகிறது.

முதல் வாசிப்பு முயற்சி முதல் தற்போதைய உங்களின் வாசிப்பு வரையிலான உங்களின் வாசிப்பு பயணத்தின் அனுபவங்கள் பற்றிக் கூறிட இயலுமா?

எனக்கு நினைவு தெரிந்ததிலிருந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன். இரு நாளிதழ்கள், விகடன்/கல்கி/குமுதம்/சாவி/இதயம் பேசுகிறது  முதற்கொண்டு ராணி காமிக்ஸ், பூந்தளிர், ஞானபூமி (மணியன் நடத்தியது என்று ஞாபகம்), மங்கையர் மலர்  வரை வாரா வாரம் எல்லா இதழ்களும் வீட்டிற்கு வந்து விடும். எல்லாவற்றையும் படித்து விடுவேன். அதிகபட்சம் ஒரு நாளிதழ் வாங்கும் வசதி இருந்த, கீழ் மத்தியத் தரக் குடும்பத்தைச் சேர்ந்த எங்களால் இத்தனையையும் எப்படி வாங்க முடிகிறது என்று நான் அப்போது யோசித்ததில்லை.  பல ஆண்டுகளுக்குப் பின்  தான், என் வீட்டிற்கு நாளிதழ் போட்ட ஸ்ரீதருடன், ஏதேனும் உடன்பாடு ஏற்பட்டிருக்கலாம் என்று  (இத்தனையையும் வாங்க  ஒரு மாதத்திற்கு  ஆகும் விலையில்  பத்தில் ஒரு பங்கை அவருக்குத் தந்திருக்கக் கூடும்) நானாகக் கற்பனை செய்து கொண்டேன்.

வீட்டிலும் சில நூல்கள் இருந்தன.  தனியார் நூலகமொன்றில் எடுத்து வந்து திருப்பிக் கொடுக்காமல், எப்படியோ எங்களுடன் தங்கி விட்ட, பழுப்புத் தாள்களுடன் இருந்த Asterix கதைகள் மூன்றையும், இரண்டு Tintin கதைகளையும் மீண்டும் மீண்டும் படித்தேன். இவற்றுடன் Tinkle போன்ற சித்திரக் கதைகளை மட்டுமே வாசித்துக் கொண்டிருந்தவன் படித்த முதல் நூல் வீட்டிலிருந்த Voodoo Plot என்ற Harby Boys புனைவு தான். அதன் பின் Omen முதல் பா பாகத்தைப் படித்துத்  திகிலடைந்தது நினைவில் உள்ளது.  வாசிப்பு தோல்வியடைந்த முயற்சிகளும் உண்டு. ஏழெட்டு வயதில்,அடர் நீலத்  தடிமனான அட்டை கொண்ட ஆங்கில நூலை வாசிக்க முயன்று, முதல் பக்கத்திற்குப் பின், இறுதிப் பக்கத்திற்குச் சென்று விட்டேன். அதில் மனைவி/காதலி இறந்து விட, நாயகன் மழையில் நனைந்தபடி தெருவில் நடப்பதாக அந்த நூல் முடிந்தது. ஹெம்மிங்வேவின் ‘A Farewell To Arms’ நாவல் அது. அவரைப் பற்றியோ, இலக்கியம் பற்றியோ எதுவும் புரியாத அந்த வயதில் அந்த இறுதிக் காட்சி மட்டும் நினைவில் தங்கி விட்டது.

நான்காம் வகுப்பு படிக்கும் போது செங்கல்பட்டு அரசு நூலகத்தில் உறுப்பினரானேன். எனக்கு இரண்டு அட்டைகள், வீட்டினருக்கு மூன்று. இரண்டு, மூன்று வருடத்திற்குள் ஐந்து அட்டைகளையுமே நானே உபயோகப்படுத்த ஆரம்பித்தேன். இதை இதை வாசிக்க வேண்டும் என்ற  எந்த வழிகாட்டுதலும் இல்லாமல் படித்தேன். தமிழ்வாணன், சுஜாதா, க்ரிஸ்டி, ஷெர்லாக் ஹோம்ஸ், Biggles, God Father, விக்கிரமாதித்தன் கதைகள், R.L.Stevenson,  சுருக்கப்பட்ட விக்கிரமாதித்தன், அரேபிய இரவு கதைகள், Enid  Blyton, தேவன், சாண்டில்யன், மாயாஜாலச் சாகச கதைகள், புராணக் கதைகள், தேவதைக் கதைகள், Irwing Wallace, Arthur Hailey, Alistair Mclean போன்ற அமெரிக்க  வெகுஜன எழுத்தாளர்கள், என்று எந்த ஒழுங்கோ, தர்க்கமோ இல்லாத வாசிப்பு.  ஹரால்ட் ராபின்ஸின் பாலியல் எழுத்துக்களைப் பத்து, பதினோர் வயதில் வாசித்தது, அந்த வயதிற்கேற்ற ஒன்றா என்று தெரியவில்லை. கல்கியின் சிவகாமியின் சபதம், அலை ஓசை எல்லாம் சலிப்பாக  இருந்தன, அவரை விட சாண்டில்யன் சுவாரஸ்யமாக இருந்தார்.  

அப்போது பிரசுரமாகியிருந்த அனைத்து Asterix, Tintin கதைகள் நூலகத்திலிருந்தன.  Stonehenge, Beatles, Normans, பிரமிடுகள் பற்றியெல்லாம் முதன் முதலில்  Astrerix கதைகளிலிருந்து தான் தெரிந்து கொண்டேன். வரலாற்றின் மீதான ஆர்வத்திற்கு இந்தக் கதைகளும் ஒரு காரணம். கோடைக் கால மதிய நேரங்களில் எலுமிச்சை மரத்தினடியில்  அமர்ந்து P.G.Wodehouseஐ படித்து உரக்கச் சிரித்திருக்கிறேன்

இன்று அவருடைய தாய்நாடான இங்கிலாந்திலேயே பெரும்பாலும் மறக்கப்பட்ட, ஆனால் இன்றளவும் எனக்கு நெருக்கமான, முக்கியமான எழுத்தாளராக இருக்கும் Richmal Cromptonஐ நான் அந்த நூலகத்தில் தான் கண்டடைந்தேன். ஐம்பதுகளிலேயே தனது பிரபலத்தை இழக்க துவங்கிவிட்ட  அவரை  முப்பது வருடங்கள் கழித்து, சிறிய டவுனொன்றில் ஒரு சிறுவன் பரவசமாக அந்த ஊரின்  நூலகத்திலிருந்த அவருடைய, பைண்டிங் பிய்ந்து போக ஆரம்பித்து, பக்கங்கள் பழுப்பேறிப் போன, அனைத்து நூல்களையும் படித்துக்  கொண்டிருந்தது (ஒவ்வொன்றையும் பல முறை மறுவாசிப்பு வேறு), எழுத்தின் வலிமையை, ஏதேனும் ஒரு வாசகனிடமாவது எப்போதாவது அது சென்றடைந்து, நித்தியத்துவம் பெறுகிறது என்பதை அப்போது நான் உணரவில்லை, அதற்கு இன்னும் பத்து பதினைந்து ஆண்டுகள் ஆனது.

அதே காலகட்டத்தில் ஜே.ஜே.சிறுகுறிப்புகளை எடுத்து வந்து, இது புனைவா அல்லது டைரியா என்று குழம்பியதும், ராஜமார்த்தண்டனின் புதுமைப்பித்தனும் கயிற்றரவும் படிக்க  – புதுமைப்பித்தன் யார் என்றோ, கயிற்றரவு என்றால் என்ற அர்த்தம் என்றோ தெரியாமல் – முயன்றதும், பள்ளியில் ஆங்கில பாடத்திலிருந்த  ஷேக்ஸ்பியரின் சானட்கள் மீது ஏற்பட்ட ஈர்ப்பால், அவருடைய நூல்களை எடுத்து நானாக புரிந்து கொள்ள முயன்றதும் நடந்தன. இரண்டாம் உலகப்போரை பற்றிய சர்ச்சிலின்  நூல் தொகுதியில் – பல நூறு பக்கங்கள் கொண்ட – ஒன்றை  எடுத்து வந்து, அடுத்த நாளே திரும்பிக் கொடுத்த அபத்தக் கூத்துக்களும் உண்டு.

கோடை விடுமுறை நாட்களில் காலை எட்டு மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி, எட்டரை மணிக்கு நூலகத்தை அடைந்து முந்தைய தினம் எடுத்து வந்த நூல்களைத் தந்து விட்டு, அன்றைக்கானவற்றை எடுத்து  வைத்து, மறுநாளுக்கான நூல்களை, அதற்குத் தொடர்பில்லாத நூல்கள் இருக்கும் அடுக்கில் வைத்து விட்டு வருவேன். அடுத்த நாளும் இதுவே நடக்கும். 

விளையாட்டு/சினிமா/திரையிசை என்று நட்பு வட்டம், அதில் மிக நெருங்கிய நண்பன், எனப் புற வாழ்க்கை,  யாரிடமும் நான் வாசிப்பதைப் பற்றி, அவை என்னுள் கிளர்த்துகிற எண்ணங்கள் பற்றி  முழுமையாகப் பகிர்ந்து கொள்ள முடியாமல் உள்முகமான மற்றொரு வாழ்க்கை என என் பால்யம், பள்ளி/கல்லூரி நாட்கள் கழிந்தன.

கல்லூரி கால ஆரம்பத்தில் எதேச்சையாக நூலகத்திலிருந்த பதினெட்டாவது அட்சக்கோட்டை வாசித்தேன். அதுவரை நான் படித்திருந்த புனைவுகளில், என்னைப் பொருத்திப் பார்ப்பது, அல்லது அந்த உலகின் கற்பனையில் மிதப்பது என்ற அந்த வயதிற்குரிய இயல்பான எதிர்வினையை மட்டுமே உணர்ந்திருந்த எனக்கு , முதல் முறையாக, இது என்னுடைய வாழ்க்கை என்று தோன்றியது. செகந்திராபாத்தும், லான்ஸர் பாரக்ஸும், எனக்குச் செங்கல்பட்டையும், நான் வசித்த பெரிய மணியக்கார தெரு போலவே தெரிந்தன. நான் தான் சந்திரசேகரன் (or vice versa) என்று தோன்றியது. அதைப் படித்த போது எனக்குள் உணர்ந்ததாக நான் இப்போது எண்ணுவதை இப்படி எழுதியிருக்கிறேன், ஆனால் அந்த காலத்தில் கேட்டிருந்தால் என்னால் இதை இப்படி விளக்கியிருக்க முடியுமா என்று தெரியவில்லை. இது தான் எழுத்து, இனி இதைத் தான் படிக்க வேண்டும் என்ற திறப்பெல்லாம் (epiphany) எனக்கு பிரக்ஞை பூர்வமாக ஏற்படவில்லை. ஆனால் நானறியாமல் உள்ளூர மாற்றம் நிகழ்ந்து விட்டது என்பது மட்டும் தெரிகிறது. அடுத்து பள்ளிகொண்டபுரம், சாயாவனம் படித்தேன். தொலைக்காட்சி தொடராக வெளிவந்த போது லயித்துப் பார்த்த, ‘தொலைந்து போனவர்களை’, நூலாக வாசித்தேன். அதன் பின் ‘One Hundred Years of Solitude’. அதன் பின்னட்டையில் ‘reader emerges from the book with his mind of fire’ என்பதாக ஏதோ எழுதியிருந்தது. வாசித்து முடித்தவுடன் என் மனமும் தீப்பற்றியிருப்பது போலவே  உணர்ந்தேன். அதன் பின் வெகுஜன எழுத்துக்கள் வெகு இயல்பாக என்னை விட்டு நீங்கின.

அதன் பின் மீண்டும் ஜே.ஜே.சிறுகுறிப்புகள். விட்டல் ராவ் தொகுத்த சிறந்த தமிழ்ச் சிறுகதைகள் நூல்களில் நிறைய எழுத்தாளர்கள் பெயர் கிடைத்தது.   நூலகத்திலிருந்த பிற இலக்கிய ஆக்கங்கள் பக்கம் என் வாசிப்பு சென்றது. வேலைக்குச் சென்ற பின், இணையம் பரவலான பின் உலகின் பிற பகுதியிலிருந்து எழுத்துக்கள் அறிமுகமாகின. 

நவீன இலக்கிய காலத்திற்கு முன்னால் சென்று, ஷேக்ஸ்பியர், செர்வாண்டஸ், François Rabelais போன்றவர்கள், க்ரிம் சகோதரர்கள் தொகுத்த தேவதைக் கதைகளின் முழு வடிவங்கள், அதற்கும் முன்னால், கிரேக்க  இதிகாசங்கள் , Beowulf,  முழுமையான, பெரியவர்களுக்கான  கதாசாகர சரிதம், பஞ்சதந்திர கதைகள், அரேபிய இரவுகள்  என வாசிப்பின் இன்னொரு இழை உருவானது. பின்-நவீனத்துவ அம்சங்கள் என்று சொல்லப்படுகின்றன எழுத்துக்களின் வடிவ உத்திகள்,  பல, நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே மிக இயல்பாக, எந்தத் துருத்தலும் இல்லாமல், எடுத்தாளப்பட்டு இருக்கின்றன என்பதை அவதானிக்க முடிந்தது.  பள்ளி காலத்தில் சுருக்கப்பட Lewis Caroll எழுத்துக்களைப் படித்து அவற்றை வெறும் அதி கற்பனை (fantasy) என்று மட்டுமே புரிந்து கொண்டிருந்த எனக்கு, அவற்றை அதன் மூல வடிவில் முழுதாக படித்த போது தான், அதில் பொதிந்துள்ள மொழி/தர்க்க நுட்பங்கள் புரிந்தன. மேலோட்டமாக பார்த்தால், விளையாட்டு போல் தோற்றமளிக்கும் எழுத்துக்களுக்கும் அவற்றிலிருக்கும் ஆழத்திற்கும் முரண்பாடு இல்லை என்பதை நவீன இலக்கியத்தை விட இந்த எழுத்துக்கள் தான் உணர்த்தின.

எத்தனை புதிய உறவுகள் உருவானாலும் க்ரிஸ்டி,  ஹோம்ஸ் , Asterix, Tintin, Richmal Crompton, P.G. Wodehouse போன்ற ஒரு சிலர் இன்றும் என்னுடனேயே உள்ளார்கள்.  Asterix, Richmal Crompton, P.G. Wodehouse இவர்களை இப்போதும் மீள் வாசிப்பு செய்கிறேன். Asterix கதைகள் அதன் மூல மொழியான பிரெஞ்சில் எப்படியோ தெரியாது, ஆனால் ஆங்கில மொழிபெயர்ப்பில் உள்ள மொழித் தரம், நுட்பமான நகைச்சுவை, வரலாற்று நிகழ்வுகளைப் போகிற போக்கில் சுட்டிச் செல்வது இப்போதும் என்னைப் பிரமிக்க வைக்கிறது.  P.G. Wodehouse உருவாக்கும் பாத்திரங்களின் குணாதிசயங்கள், அவர்கள் சிக்கிக் கொள்ளும் அபத்த சூழல்கள் இவையெல்லாம் நகைச்சுவையின் மிக உயர்நிலை என்பது ஒரு புறம். இவற்றை விட முக்கியமானது,  அவருடைய   ஆங்கில மொழி ஆளுமை, மொழியை அவர் பயன்படுத்துவதில் உள்ள அனாயாசம். அவருடைய  நடை  அசாத்தியமானது. ஆங்கில இலக்கியத்தின் மாபெரும் நடையாளர்களில்  (stylist)  முக்கியமானவராக அவரைப் பார்க்கிறேன்.  வாசகனுக்கு மகிழ்ச்சியைத் தரும் நூல்களும்  இலக்கியத் தரத்தை அடைய முடியும் என்பதை உணர்த்துகின்றன.

குற்றபுனைவுகள் மீதான ஈர்ப்பும் குறையவேயில்லை.  வேறு வகையான குற்றப் புனைவுகளும், அவற்றினுள் உள் வகைமைகளும்  உண்டு என்று தெரிந்து கொண்ட பின் அவற்றையும்  வாசிக்க ஆரம்பித்தது இப்போதும் தொடர்கிறது.

அல்புனைவு வாசிப்பும் எந்த குறிப்பிட்ட இலக்கும் இல்லாமல் ஆரம்பித்த ஒன்று தான். இதற்காக இதைப் படிக்கப் போகிறேன், இதைப்  பற்றித் தெரிந்து கொள்வதற்காக இதை வாசிக்க வேண்டும் என்றெல்லாம் முடிவு செய்யாமல், இயற்கை, பறவைகள்/மிருகங்கள், வரலாறு, தொன்மம் என என்னை ஈர்க்கும் சில துறைகளைப்  பற்றிய நூல்களை மட்டும் படிக்கிறேன். Catherine Nixeyன் The Darkening Age, Jennifer Ackermanன் ‘The Bird Way: A New Look at How Birds Talk, Work, Play, Parent, and Think’,  Ed Yong எழுதிய  An Immense World: How Animal Senses Reveal the Hidden Realms Around Us, போன்ற நூல்கள், அவற்றின் துறைகள் வேறு வேறாக இருந்தாலும்,  நம்மையும், சுற்றியுள்ளவற்றையும் புதிய கோணத்தில் மறுபரிசீலனை செய்ய வைக்கின்றன என்ற புள்ளியில் இணைகின்றன. பிரபஞ்ச இயக்கத்தில் நம்முடைய இடம், அதில் நாம் எந்தளவிற்குச் சாதாரணமானவர்கள், முக்கியமற்றவர்கள் என்பதை என்னுடைய அல்புனைவு வாசிப்பும் நினைவு படுத்திக் கொண்டேயிருக்கிறது.

உங்களின் கலவையான வாசிப்பின் பின்புலம் சுவாரஸ்யமான ஒன்றாக எனக்கு மனதில் தோன்றுகிறது. மீண்டும் உங்கள் பதிலை வாசிக்கும் போது இந்தக் கேள்வி மனதில் வந்துபோனது? தமிழில் விட ஆங்கிலத்தில் அதிகம் வாசிக்கும் பழக்கம் உங்களுக்கு இயல்பான ஒன்றாகவே இருக்கிறது. ஆங்கிலம் அல்லது தமிழில் வாசிப்பது எது உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது?

முந்தைய பதிலை மீண்டும் படிக்கும் போது நான் அதிகம் ஆங்கிலத்தில் வாசிப்பதாகத் தொனி இருப்பதை உணர முடிகிறது, ஒப்பீட்டளவில் அதிக ஆங்கில பெயர்களை உதிர்த்திருக்கிறேன். ஆனால் இரண்டிலும் சம அளவிலேயே வாசிக்கிறேன். அதுவும் இலக்கிய வாசிப்பின் ஆரம்பக் காலத்தில், தமிழில் தான் அதிகம் வாசித்தேன். அப்போது landmark, odyssey புத்தகக் கடைகளில்  லத்தீன் அமெரிக்க, ரஷ்ய இலக்கிய நட்சத்திரங்கள், ஒரு சில ஐரோப்பிய, அமெரிக்க எழுத்தளர்களின் நூல்கள் தான் கிடைக்கும். அமேசான் வந்த பிறகும், அதற்குப் பின் சில ஆண்டுகளில் மின்னூல்கள் பரவலான பிறகும் தான் ஆங்கில வாசிப்பும், குறிப்பாக மொழிபெயர்ப்புக்கள், பரவலானது.

தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் வாசிப்பது மகிழ்ச்சி தான்.  எதில், எதை வாசிப்பது என்ற தேர்விற்கு எந்த காரணமும் இருப்பதில்லை.  சிறுகதைகள் மட்டுமே படிக்க வேண்டும் என்று திடீரென்று தோன்றும், அப்போது நாவல்கள் எடுத்தால் உள்நுழைய முடியாது, சில நேரம் தமிழ் நூல்கள், தமிழ் நிலவியல்/வாழ்வியல் தான் படிக்க முடியும், சில காலம் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் புனைவுகள்,  அமெரிக்க சிறுநகரங்கள் பற்றிய நூல்கள், இரண்டு உலகப்போர்களுக்கு நடுவிலான காலகட்டம்,  எனக் குறிப்பிட்ட வகையான வாசிப்பு உந்துதல்கள் அடிக்கடி வரும். ஒரு மாதமோ, அல்லது தொடர்ச்சியாக நாலைந்து நூல்களோ அதில் வாசித்த பின், திகட்டி, வேறொரு உந்துதல் வரும். சில காலம் கழித்து மீண்டும் பழைய உந்துதல். இவை எதுவுமில்லாமல் படிப்பதும் உண்டு.

அதே நேரத்தில் இன்றைய சமகால வாசகனுக்கு ஆங்கிலத்தில் வாசிப்பது என்பது பெரும்பாலான நேரங்களில் சோர்வு தரும் ஒன்றாக இருக்கிறது என்று கருதுகிறேன்? அத்தகைய வாசகர்களுக்கு (ஆங்கில வழியிலான வாசிப்புக்கு முயற்சிக்கும் வாசகர்களுக்கு) உங்களின் அனுபவங்களின் வழியாக நீங்கள் கூற விரும்புவது?.

புதிதாக எதிர்கொள்ளும் வார்த்தைகளை இன்று வரை அவற்றை, அவை உபயோகிக்கப்படும் விதத்தை, சூழலைக் கொண்டே புரிந்து கொண்டிருக்கிறேன். சிறுவயதில் வாசித்த Enid Blyton கதைகளில் loo என்ற வார்த்தை அவ்வப்போது வரும், அது கழிவறையை குறிக்கிறது என்பதை அறிந்து கொண்டதும், அப்படித்தான். இது சரியான அணுகுமுறை என்று சொல்ல முடியாது,

‘One Hundred Years of Solitude தான் நான் முதல் முதலாக ஆங்கிலத்தில் வாசித்த இலக்கிய நூல்.  அதன் ஆரம்ப வரிகளில், சுட்டுக் கொல்லப்படுவதற்காக ஒருவன் நிற்கிறான், அடுத்த பத்தியில் அவன் முதல் முதலாக பனிக் கட்டியைப் பார்த்ததை பற்றி விவரமாகச் சொல்லப்படுகிறது. எனக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை, அந்த நாவலின் முதல் இரு பக்கங்களை இரண்டு மூன்று முறை வாசித்த ஞாபகம் இருக்கிறது. இது மொழி சார்ந்த ஒன்றாக இல்லாமல், நூலின் கட்டமைப்பு சார்ந்த விஷயமாக இருக்கக் கூடும், ஆனால் பிடி கிடைக்காமல் குழம்பும் இடத்தில், இன்னும் சிறிது தூரம் பயணித்தால் வாசிப்பின் சிடுக்குகள் விடுபடும் என்று நினைக்கிறேன்.

பிறமொழி ஆக்கங்களைப் பொறுத்தவரை எந்த ஆங்கில மொழிபெயர்ப்பைத் தேர்வு செய்கிறோம் என்பது எனக்கு முக்கியமான ஒன்று. குறிப்பாகச் செவ்வியல் ஆக்கங்களுக்கு நிறைய மொழிபெயர்ப்புகள் உள்ளன. அறுதியானது என்று எதுவும் இல்லை.

அவற்றின் நிறை, குறைகளை அலசும் விமர்சனங்களை கொண்டும், மொழிபெயர்ப்பில் வாசகனாக நாம் எதை எதிர்பார்க்கிறோம்  என்பதை நினைவில் கொண்டும் – மூல மொழியிலிருந்து அப்படியே வார்த்தைக்கு வார்த்தை மொழிமாற்றமா, அல்லது மூல மொழியின் ஒலிக்கு நிகரான ஒன்றா, அல்லது அதன் உணர்வைக் கடத்துவது முக்கியமா, ஆங்கில மொழி நடை எப்படியுள்ளது  – நமக்கான மொழிபெயர்ப்பைத் தேர்வு செய்வது நலம்.

ஒரு ஆக்கத்தின் இரு மொழிபெயர்ப்புகள் இருந்தால், அதில் ஒன்று பழமையான, 1800களின் ஆங்கிலத்திலும், இன்னொன்று இருபதாம் நூற்றாண்டு ஆங்கில மொழி நடையிலும் இருந்தால், என் தேர்வு இரண்டாவதாக இருக்கும். Thee என்பதை விட You எனக்கு நெருக்கமாக இருக்கிறது.

உலகெங்கும் இலக்கியம் என்பதற்கான பொதுவான அளவுகோல் ஒன்றுள்ளது. விமர்சகர்களால் முன்வைக்கப்படுவது மட்டுமின்றி, எல்லா வாசகர்களிடமும் அவரவர் நுண்ணுணர்வு சார்ந்தும் உள்ளது, கறாரான இந்த அளவுகோல்கள் தவிர்க்க முடியாத ஒன்று. இலக்கியம் என்பதற்குள்ளேயே எல்லோரும் எல்லா வகை எழுத்தையும் வாசிக்க முடியாது.

இங்குத் தமிழில் வகுக்கப்பட்டுள்ள எல்லைகளைக் கடந்தும், அல்லது அதன் வரையறைகளுக்குள் வராமலும், முக்கிய இலக்கியங்களாகக் கருதப்படும் ஆக்கங்கள் உலகெங்கும் உள்ளன. நம் அளவுகோல்களும், அங்குள்ளவையும் முற்றிலும் முரண்பாடானவை என்று சொல்லவரவில்லை, இரண்டும் தொட்டுச் செல்லும் இடங்களுக்கு இணையாக விலகிச் செல்லும் இடங்களும் உள்ளன. முன் தீர்மானங்களின்றி வாசிப்பது அவற்றுள் உள்நுழைய உதவும். உதாரணமாக Marcel Proustஐ பால்யத்தில் கேக் உண்டதைப் பல பக்கங்களில் மீள் நினைவு செய்பவராகவோ  ,நார்வே எழுத்தாளர் Karl Ove Knausgardஐ தன் வாழ்வை அப்படியே எழுதியவராக மட்டுமே அணுகுவதற்கும், அவர்களுடைய இலக்கிய ஆளுமையை உணர்வதற்கும் உள்ள வேறுபாடு அது. Karl Ove Knausgardஐ பற்றிய விமர்சனங்கள் அவர் எடுத்துக் கொண்ட கருப்பொருள் சார்ந்து இல்லை, அதை அவர் இலக்கியமாக்கிய விதம், அதில் அவர் அடைந்த வெற்றிகள்/அவர் எழுத்தின் போதாமைகள் பற்றியே உள்ளது என்பது தான் இங்குக் கவனிக்கத்தக்கது.

ஆங்கில வாசிப்பில் நீங்கள் கண்டடைந்த முக்கியமான எழுத்தாளர்களில் இவர்களை வாசிப்பில் தவறவிடாதீர்கள் என்கிற பட்டியல் ஒன்றைத் தர இயலுமா. (புதிய வாசகர்களுக்கு உதவும் அதனால் கேட்கிறேன்)

மிக நீண்ட இலக்கிய மரபில், அதுவும் உலகெங்கிலும் இருந்து குறிப்பிட வேண்டுமென்றால் மலைப்பாக இருக்கிறது. மிகக் பழங்காலம்,  நவீனத்துவத்திற்கு முந்தைய இடைக்காலம், இருபதாம் நூற்றாண்டுக்குப் பின் என்று என் வசதிக்காகப் பிரித்துக் கொள்கிறேன் என்றாலும், சட்டென்று தோன்றும் பெயர்கள் மட்டுமே இவை. புனைவெழுத்தை மட்டுமே பட்டியலிட்டுள்ளேன்.

மிகப் பழங்கால இலக்கியங்கள்

கிரேக்க இதிகாசங்கள் – (Robert Fagles மொழிபெயர்ப்பை நான் வாசித்தேன், அதையே பரிந்துரைக்கிறேன். தரமான மொழிபெயர்ப்புகள் வேறு சிலவும் உண்டு)

கிரேக்க நாடகங்கள் – (Penguin மொழிபெயர்ப்புகளைப் பரிந்துரைக்கிறேன்)

Metamorphoses – Ovid – (Charles Martin மொழிபெயர்ப்பு)

அதற்குப் பின்னான காலகட்டம்

ஷேக்ஸ்பியர்  – அவருடைய சானட்களுக்கு, John Keerigan பதிப்பாசிரியராக இருந்து  Penguin வெளியிட்ட Sonnets & Lover’s Complaint நூல் வாசிக்கலாம். அவர் நாடகங்களை Folger பதிப்புக்களை வைத்து வாசித்தேன். ஷேக்ஸ்பியர் படைப்புக்களுக்கென்று தனி தளங்கள் உள்ளன, அவற்றிலும் வாசிப்பைத் துவங்கலாம்.

Divine Comedy by Dante Alighieri  (New American Library/John Ciardi )

The Decameron by Giovanni Boccaccio (Penguin, G. H. MCWILLIAM)

The Manuscript Found in Saragossa – JAN POTOCKI – (Penguin/ IAN MACLEAN)

Don Quixote – Cervantes (Edith Grossman)

Alice’s Adventures in Wonderland AND Through the Looking-Glass and What Alice Found There – Lewis Caroll (HUGH HAUGHTON/Centenery Edition)

The Arabian Nights – (Penguin/MALCOLM C. LYONS)

THE LIFE AND OPINIONS OF TRISTRAM SHANDY, GENTLEMAN – Laurence Sterne (Penguin)

GARGANTUA AND PANTAGRUEL – FRANÇOIS RABELAIS (Penguin/M. A. SCREECH)

Dracula – Bram Stoker. இதற்கு முன்னொட்டாக Sheridan Le Fanu எழுதிய Carmilla குறுநாவல்.

இருபதாம் நூற்றாண்டுக்குப் பின்

லத்தீன் அமெரிக்க/ரஷ்ய மேதைகள் பற்றி நிறைய எழுத்தப்பட்டுவிட்டதால், பரவலாகப் பேசப்படும் பெயர்களை, நூல்களைத் தவிர்த்து விடுகிறேன்.

James Joyce – Dubliners

Jaroslav Hasek- The Good Soldier Svejk (Penguin edition/Paul Selver)

Mircea Cartarescu – Blinding

Milan Kundera – The Joke

Bohumil Hrabal – Closely watched trains

Milorad Pavic – The Dictionary of Khazars

Jose Saramoga – Blindess, The Stone Raft

Wieslaw Mysliwski – Stone Upon Stone

Alice Munro – அனைத்தும், குறிப்பாக, Hateship, Friendship, Courtship, Loveship, Marriage மற்றும் Runaway தொகுப்புகள்

Dubravka Ugresic – The Ministry of Pain

W.G Sebald – அனைத்தும்

Cormac Mccarthy – Blood Meridian

James Salter – Collected Stories, Light Years நாவல்.

Philip Roth – Sabbath’s Theatre

Jorge Amado- Dona Flor and Her Two Husbands

Carlos Fuentes – Terra Nostra

Juan Rulfo – Pedro Paramo, The Plain in Flames.

Jean-Baptiste Del Amo – Animalia

Duanwad Pimwana- Arid Dreams

P.G Wodehouse – அனைத்தும், அவற்றில் முக்கியமாக Jeeves மற்றும் Blandings Castle புனைவுகள்.

Agatha Christie – 1970களில் வெளியான அவருடைய இறுதி நாவல்கள் ஏமாற்றமளிக்கக் கூடுமென்றாலும், முழுமையாக வாசிக்கப்பட வேண்டியவர், குறிப்பாக  1921 முதல் 1950 வரையிலான சுமார் முப்பது  வருடங்களில் எழுதியவை.

Asterix Comics

Tintin Comics

பிற இந்திய மொழிகளிலிருந்து சிலரைக் குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன்.

A Window Lived in the Wall – Vinod Kumar Shukla. ஆங்கில மொழிபெயர்ப்பில் கண்டிப்பாக வாசிக்கப்பட வேண்டிய நூல் என்று இதைப் பரிந்துரைக்கிறேன்.

Ratno Dholi – The Best Stories of Dhumketu

The Escapist – Manoj Das

The Adivasi Will not Dance – Hansda Sowvendra Shekar

Cuckold – Kiran Nagarkar

நிறைய விடுபடல்கள் உள்ளன. ஒவ்வொரு கண்டமாக பிரித்து, அதில் ஒவ்வொரு நாட்டிற்கும் ஓர் எழுத்தாளர் என்ற விதியோடு பட்டியலிடலாம், அதுவே கூட கடினம் தான்.

ரஷ்ய/ஐரோப்பிய/லத்தீன் அமெரிக்க இலக்கியங்கள் இங்குக் கொண்டாடப்படுமளவிற்கு அமெரிக்க எழுத்துக்கள் பேசப்படுவதில்லை. கட்டற்ற பாலியல்/வன்முறை கொண்ட, நுகர்வு கலசாரத்தை பிரதிபலிக்கும் மேலோட்டமான எழுத்துக்கள் என்பதாக அவற்றின் மீது ஒரு விலகல் இருப்பதாக தோன்றுகிறது. ஹெம்மிங்க்வே/பால்க்னர்/சால் பெல்லோ  போன்றோரைத் தாண்டி மிக மீண்ட, செறிவான நவீன இலக்கிய மரபு அங்குள்ளது. இலக்கிய நட்சத்திரங்கள் என்று குறிப்பிடப்படும், New Yorker போன்ற இதழ்களில் எழுதும், இன்றைய அமெரிக்க இலக்கிய எழுத்தாளர்களை விடவும் காத்திரமான படைப்பாளிகள் உள்ளனர்.  சிறு பதிப்பாளர்களால் (indie publishers) வெளியிடப்படும் நூல்கள் நாமறியாத மற்றொரு அமெரிக்காவைக் காட்டுபவை.  குறிப்பாக அமெரிக்க சிறு நகரங்கள்/கிராமங்களைக் களமாகக் கொண்ட எழுத்துக்கள். அமெரிக்க இலக்கியமும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

வாசிப்புக்குப் பிறகு எழுத வேண்டும் என்று ஏன் தோன்றியது. இப்படித்தான் எழுத வேண்டும் அல்லது இவரை மாதிரி எழுத வேண்டும் என்கிற லட்சியங்கள் எதாவது மனதில் அந்த நேரத்திலிருந்ததா? (வழக்கமான கேள்வியே ஆனால் தவிர்க்க முடியாத ஒன்றும்)

புதுப் புது அக உலகுகளை உருவாக்கிக் கொண்டிருப்பவனாகத் தான் ஆரம்பத்திலிருந்தே இருந்திருக்கிறேன். அவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாகவும், அவற்றின் ஆயுள் சில மாதங்கள் வரை நீடிப்பவையாகவும் இருந்துள்ளன. படித்த கதைகளை, பார்த்த திரைப்படங்களை மாற்றி அமைப்பதும் உண்டு. ஆனால் எதையும் எழுத்தாக்க வேண்டும் என்று தோன்றியதே இல்லை. கல்லூரி நாட்களில் erotic கவிதைகள், பிணக் கவிதைகள் போன்ற விபரீத முயற்சிகளில் சில காலம் ஈடுபட்டு மீண்டுவிட்டேன்.

அதன் பின் வாசிப்பு மட்டும் தான். பாஸ்கரின் தொடர்பு கிடைத்த பின் நான் வாசித்த நூல்கள் பற்றி கட்டுரைகள் எழுதத் தொடங்கினேன். அது சில வருடங்கள் நடந்தது. அதன் பின் தான் புனைவு எழுத ஆரம்பித்தேன். அல்புனைவு/புனைவு, ஏதுவாக இருந்தாலும், எழுதுவது என்பது நான் தேர்வு செய்த ஒன்று கிடையாது. எழுதலாமா, வேண்டாமா, அதற்கு எப்படி தயார் செய்து கொள்வது என்றெல்லாம் யோசிக்கவில்லை. எழுதவேண்டுமென்ற முடிவிற்குச் செலுத்தப்பட்டேன் என்று தான் கூற முடியும். ஒரு விஷயம், உணர்வு, குறிப்பிட்ட மனநிலை, சூழல் பற்றிய கரு உருவாகிறது, அதை யாரிடமாவது பகிர்ந்து கொண்டேயாகவேண்டும் என்ற அலைக்கழிப்பு தான் எழுத்தாகிறது. எனவே இவரைப் போல, இதைப் போல எழுத வேண்டும் என்று பிரக்ஞை பூர்வமாகத் தோன்றவில்லை, என்னையறியாமல் இருந்திருக்கக் கூடும்.

முதலில் பாஸ்கரிடம் தான் எழுதியதை அனுப்பினேன், திருத்தங்கள் சொல்வார். அதன் பின் அவருடைய ப்ளாக் ஒன்றில் சில புனைவுகளை வெளியிட்டார். சில காலம் கழித்து அவரே, பதாகையில் வெளியிடலாம் என்று சொன்னார்.

பாஸ்கர் போன்றவர்களின் தொடர்பு கிடைத்திருக்காவிட்டால் இது நடந்திருக்காது என்றும், புனைவெழுத்திற்கு நான் வந்தடைந்தது தவிர்க்க முடியாத ஒன்று என்றும் ஒரு சேர தோன்றுகிறது.

பதாகை இணைய இதழில் இணைந்து செயல்பட்டீர்கள் இல்லையா. அந்த அனுபவங்கள் எப்படியான ஒன்றாக இருந்தது? பாஸ்கர் போன்றவர்களின் தொடர்புகளின் வழியாக நீங்கள் பெற்றவை எப்படிப்பட்டவை?

பாஸ்கருடனான நட்பு நீண்ட மின்னஞ்சல் உரையாடலுடன் ஒரு ஞாயிறு மதியம் உருவானது. முதலில் நான் வாசித்த குற்றப்புனைவுகள் குறித்து சொல்வனத்தில் எழுதினேன். அதன் பின்னர் பதாகையில் எழுத ஆரம்பித்தேன்.

பதாகையில் பாஸ்கர் தான் மையம், அவரைச் சுற்றி நாங்கள் சிலர்  இருந்தோம். எழுத்தாளர்களுக்கான incubator என்பதாகத் தான் பதாகையை அவர் உருவாக்கினார். அதற்கு அனுப்பப்படும் படைப்புகள் (கதைகள், கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புக்கள்) குறித்த எங்களுடைய கருத்துக்களை எழுதி அனுப்புவோம், அவை சில நேரம் மிக நீண்டு விடுவதும் உண்டு. குழு உரையாடல் போல் அது நிகழும்.

நாங்கள் கூறுவதைத் தொகுத்து, அதை தன் கருத்துக்களுடன் பாஸ்கர் எழுத்தாளருக்கு அனுப்புவார். ஒரு படைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அதற்கான காரணங்கள், ஏற்றுக்கொண்டால், அதைப் பற்றிய கருத்துகள், சந்தேகங்கள், பரிந்துரைக்கப்படும் மாற்றங்கள் என மிக விரிவான பதில்கள் அனுப்பப்படும். அதற்கு எழுத்தாளர் பதில் அளிக்க, பதாகை  தரப்பிலிருந்து இன்னொரு நீண்ட பதில். சில நேரம் நான்கைந்து நீண்ட மின்னஞ்சல் பரிமாற்றங்களுக்குப் பின் தான் படைப்பின் இறுதி வடிவம் வரும். பொதுவாக இது தான் எல்லா படைப்புக்களுக்கும் நடக்கும்.

ஒரு படைப்பை எப்படி அணுக வேண்டும், எப்படி அதை மேம்படுத்தலாம் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணங்களாக பாஸ்கரின் கருத்துக்களை, அவர் பலருக்கும் அனுப்பியவற்றைப் படித்தவன் என்ற முறையில் உறுதியாகச்  சொல்வேன். எட்டு வரி கவிதைக்கு இவ்வளவு நீண்ட, செறிவான feedback கொடுப்பதெல்லாம் சாதாரணமான ஒன்று அல்ல. ஆனால் ஒரே மட்டையடியாக அடிக்காமல், இந்தக் கோணத்திலும் நீங்கள் பார்க்கலாமே என்ற தொனியில் தான் அவர் தன் கருத்தை முன்வைப்பார்.

இலக்கிய mentor என்றளவில், புனைவு, கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என்று எல்லா வகைமையிலும் அவருடைய ஆளுமை, பங்களிப்பு எங்கும் பெரிதாகப் பதிவு செய்யப்படவில்லை. அவர்  தன்னை எங்குமே முன்னிறுத்தியதில்லை, இப்போது நான் எழுதியிருப்பதைக் கூட அவர் விரும்ப மாட்டார் தான், இருந்தாலும் அவரைப் பற்றி, ஒரு சிறு வட்டத்திற்குள் மட்டும் தெரிந்திருப்பதை, பலருக்கும் சொல்ல வேண்டும் என்று தான் எழுதுகிறேன்.

கிரி, சுனில், ஸ்ரீதர், நடராஜன், சிவா, நம்பி, அனுக்ரஹா எல்லோரும் பதாகை குழுவில் ஈடுபட்டு கதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புக்கள் என இயங்கினார்கள்.  நாஞ்சில் நாடன், சுரேஷ்குமார் இந்திரஜித், சு.வேணுகோபால், பாவண்ணன் படைப்புக்கள் பற்றிய சிறப்பிதழ்களை சுனில், கிரி, உருவாக்கினார்கள். எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகள் எழுதுவது, பிறரிடம் கேட்டுப் பெறுவது, நேர்காணல் செய்வது என பெரும் உழைப்பைக் கோரும் செயல்பாடு. மேலும் அவர்கள் சொல்வனத்திலும் இயங்கிக் கொண்டிருந்தார்கள்.

வரும் படைப்புக்கள் பற்றிய கருத்துக்களை சொல்வது, கட்டுரைகள் எழுதுவது என்றளவில் தான் பதாகையில் என் பங்களிப்பு. பின்னர் தான் அங்கேயே  புனைவுகள் எழுத ஆரம்பித்தேன்.

தொடர் வாசிப்பு, அதைப் பற்றித் தொடர் உரையாடல் என மிக உற்சாகமான, செயலூக்கம் நிறைந்த காலகட்டம் அது. ஒரு கட்டத்தில் சூழல் காரணமாக அனைவரின் பங்களிப்பும் குறைந்து, பின் இல்லாமல் ஆகிப்போனது. கடந்த சில ஆண்டுகளில் முதல் நூல்களை வெளியிட்டவர்களில் பலர் பதாகையில் எழுதியுள்ளார்கள். அந்த வகையில் incubator என்ற பாஸ்கரின் நோக்கம் ஓரளவிற்கு நிறைவேறியது என்று தான் நினைக்கிறேன், அவருடைய தொடர் முயற்சியால் தான் இந்தளவிற்குச் சாத்தியமானது.

சில மாதங்களுக்கு முன் நண்பரொருவரை சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன். ஏன் இப்போது பதாகை இயங்குவது இல்லை, இன்னும்  புதிய எழுத்தாளர்களை உருவாக்கலாமே என்று அவர் கேட்டது bittersweet தருணம்.  

வேதாளத்தின் மோதிரம் உங்களின் முதல் சிறுகதைத் தொகுப்பு.இந்தத் தொகுப்பை எப்படி வகைப்படுத்துவது என்கிற சிக்கல் வருகிறது,தனிப்பட்ட வாழ்வின் அனுபவப் பதிவுகளாக,மீபுனைவு சிதறல்களா,நாவலுக்கும் சிறுகதைக்கு இடையான ஒருவிதமான பரிசோதனை முயற்சியா?

பரிசோதனை முயற்சி இல்லை. செங்கல்பட்டு தொடர்பான முதல் கதையை எழுதிய போது, அந்த நகரைப் பின்தொடர்வேன் என்று எனக்குத் தெரியாது. தொகுப்பிலுள்ள இரண்டு மூன்று கதைகளை எழுதும் வரை அவற்றை ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத ஒன்றாகத் தான் பார்த்தேன். அதன் பின் தான் ஒரே களத்தைச் சார்ந்த கதைகள் இவை என்ற உணர்வோடு பிற கதைகளை எழுதினேன். அப்போதும் அவை நூல் வடிவம் பெறும் என்று நினைக்கவில்லை. இவற்றுக்கிடையே சமீபத்திய தொகுப்புகளின் கதைகளையும்  எழுதிக் கொண்டிருந்தேன்.

கதைகளைத் தொகுக்கும் போது, novel in stories என்று குறிப்பிட்டிருக்கலாம், இத்தகைய தொகுப்புகள் இப்போதும் எழுதப்படுகின்றன, அல்லது வெளியாகும் போது அவ்வாறு சுட்டப்படுகின்றன. ஆனால் பிரக்ஞை பூர்வமாக அவ்வாறு  உருவாகவில்லை என்பதால் அப்படிக் கூறிக் கொள்ள மாட்டேன். இயர் ஜீரோ நாவலுக்கான முன்கதையாக, அது நடக்கும் ஆண்டிற்கு முந்தையை பத்து-பன்னிரண்டு வருடங்களில், காலத்தில் முன், பின் செல்லும் புனைவுகளாக, அதே நேரம் நாவலுடன் நேரடித் தொடர்பில்லாத, தனியாகவும் படிக்கக் கூடிய தொகுப்பாக அமைத்து விட்டது.

நான் என் நினைவிலுள்ளதை அப்படியே பிரதியெடுக்க விரும்பவில்லை. பால்யம் என்பது பொற்காலம் என்ற கற்பிதமோ, நாஸ்டாலஜியாவோ, எதிர் பாலின ஈர்ப்பு, அந்த வயது ‘காதல்,’ ‘அந்த காலத்துல எப்படி….’ போன்ற க்ளிஷேக்கள் மீதும் எனக்கு ஈர்ப்பில்லை. கடந்த காலம் கசப்புகள், சந்தோஷங்கள், இழிவாகப்  பெருமிதமாக உணரும் கணங்கள் என அனைத்தும் கொண்ட  ஒன்று தான், இத்தனை ஆண்டுகள் கழித்து, தூரத்திலிருந்து பார்க்கும் போதும் இவை அனைத்துமே எனக்குத் தென்படுகின்றன.

நினைவுகள் எனும் பனித்திரையின் மீது எனக்கு ஈர்ப்புண்டு. கடந்த காலத்தின் ஏதேனும் நிகழ்வை, அதில் நம்முடன் பங்கு கொண்டவர்களிடம் பேசினால், அதே நிகழ்வு சிற்சில வேறுபாடுகளுடன் ஒவ்வொருவரால் நினைவு கூறப்படும். சில நேரங்களில், நம் நினைவுகளில் உள்ளதற்கு முற்றிலும் நேர்மாறான ஒன்றையும் அவர்கள் கூறக் கூடும். எது, எப்படி நம் நினைவுகளில் தேங்குகிறது, எந்த நினைவுகளை, ஏன், எப்படி நாம் தேர்வு செய்து எந்த முறையில் ஞாபகம் வைத்திருக்கிறோம் என்பது எனக்கு சுவாரஸ்யமான, முக்கியமான ஒன்று. அதைப் ‘புனைவெழுத்து’, ‘புனைவு தருணம்’ கதைகளில் எழுதியிருக்கிறேன்.

ஒரு கணம், ஒரு உணர்வு, ஒரு நிகழ்வு, அவையும் கூட என் நினைவில் உள்ளவை மட்டுமே, அவை நிஜமா என்று நான் ஆராயவில்லை, அவற்றைக் கொண்டு எழுதியவை இந்தக் கதைகள்.  இந்தக் கதைகளில் நானிருக்கிறேன், பால்ய காலத்திலிருந்து இன்றும் என்னுடனுள்ள நண்பன் இருக்கிறான், சில மனிதர்கள் இருக்கிறார்கள், சில தெருக்கள் உள்ளன என்று மட்டும் தான் உறுதியாகச் சொல்ல முடியும். இவை எந்தளவிற்கு உண்மை அல்லது புனைவு என்பதைப் பற்றி என்னாலேயே உறுதியாகச் சொல்ல முடியாது.

தொகுப்பில், ‘புனைவுத் தருணம்’ போன்ற சில கதைகளின் மீபுனைவு அம்சம் நான் சொல்ல விரும்பியதைச் சார்ந்து உருவானது. ‘அதிநாயகனின் குதிகால்’, கற்பனையில் ஒரு கால், நிதர்சனத்தில் ஒரு கால் வைத்திருக்கும் சிறுவனைப் பற்றியது என்பதால் அதற்கான வடிவம் அது. மற்றபடி குறிப்பிட்டு இப்படி எழுத வேண்டும் என்று யோசிக்கவில்லை.

இத்தொகுப்பு மையங்கள் எதுவுமின்றி தமிழ்ச்  சிறுகதைகளின் பொதுவான இலக்கணங்களைச்  சிறிதளவு கலைக்க முற்படுகிறது? சில இடங்களில் அது வாசகனுக்கு ஆர்வம்  அளிக்கிறது சில இடங்களில் பிரதி மீதான விலக்கமும் அளிக்கிறது. சுவாரஸ்யம் அற்ற ஒருவிதமான சுவாரஸ்யம் என்கிற  வகைப்பாட்டில் இதன் மீதான ஒரு கருத்தை நான் முன்வைத்தால் உங்கள் எதிர்வினை எப்படியிருக்கும்?

நீங்கள் சொல்வது போன்ற பார்வை இருக்க கூடும். ஆழமான Plot என்று பெரிதாக இந்தக் கதைகளிலும் எதுவுமில்லை. முதல் பார்வைக்கு மிகச் சாதாரணமானவையாகத் தெரியும் கணங்கள்,  அவை வெளிப்படையாகவும் சொல்லப்படுவதில்லை. அறுதியான, அழுத்தமான முடிவு என்ற ஒன்று இந்த கதைகளில் எனக்குத் தேவைப்படவேயில்லை. இறுதியில் திறப்பு, தரிசனம் எனத் துலக்கமாக எதுவும் கிடையாது. எனவே சராசரி நிகழ்வுகள் கொண்டவை என இவற்றை வாசிக்க வாய்ப்புள்ளது என்பதை உணர்கிறேன், நீங்கள் சொல்வது போல் சில தருணச் சிதறல்களைத் தொகுக்க முயல்வதாகவும் பார்க்கக் கூடும்.

முதன்மையாக, இந்தக் கதைகள் அடங்கிய தொனியில், சற்றுத் தட்டையான உணர்வு நிலையில் தான் எழுதப்பட வேண்டும், அது தான் அவற்றுக்கு நியாயம் செய்வதாக இருக்கும் என்று எனக்கு ஆரம்பத்திலேயே தோன்றியது. எனவே எழுதும் போதே, அதை மீறிச் செல்லக் கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். சுவாரஸ்யம் அற்ற/சுவாரஸ்யம் நீக்கப்பட்ட சுவாரஸ்யம் என்று அதனால் தோன்றலாம்.

தொகுப்பின் ரெண்டு மூன்று கதைகள் எழுதியப் பின்பு அவற்றின், ஸ்தூலமாக தென்படாத, மையத்தைக் கண்டு கொண்டேன். அடுத்து எழுதியவையிலும் அதே மையத்தை வந்தடைந்த போது செங்கல்பட்டைப் பற்றி எழுதும் போது, எங்குச் சென்றாலும், அங்கு தான் இறுதியில் வருவேன் என்பது எனக்குப் புரிந்தது. முழு தொகுப்பாகப் பார்க்கும் போதும் அந்த மையத்தை உணர்கிறேன். எழுதியவனே அதைக் குறிப்பிடுவது சரியாக இருக்காது. மையமில்லாத உணர்வு ஏற்படுவது என் எழுத்தின் போதாமையினாலும் கூட இருக்கலாம்.

செங்கல்பட்டு போன்ற ஒரு சிறுநகரம் உங்களின் படைப்புகளில் தொடர்ந்து வருகிறது,இன்னும் அந்த நகரத்தின் நினைவுகளின் எச்சம் அல்லது ஏக்கமும் உங்களைத்  தொந்தரவு செய்கிறதா அல்லது ஓரளவுக்கு அவற்றை எழுதிக் கடந்துவிட்டீர்களா?

செங்கல்பட்டிலிருந்து குடிபெயர்ந்து 21 வருடங்கள் ஆகிவிட்டது. அதன் பின் நான் அங்குச் சென்றது ஐந்தாறு வருடங்களுக்கு முன்பு, அன்றும் அரை நாள் மட்டுமே அங்கிருந்தேன். ஏக்கம், எச்சம் என்பதை விடச் செங்கல்பட்டு இன்னும் என்னுள், அதனுடன் எனக்குள்ள அனைத்து விதமான, நேர்மறை/எதிர்மறை, அனுபவங்களுடன், உயிர்ப்புடன் உள்ளது என்று சொல்லலாம். நான் அங்கு வசித்த காலகட்டத்தின் ஒரு பகுதியைப் பற்றித் தான் இதுவரை எழுதியிருக்கிறேன். எஞ்சியுள்ளதைப் பற்றி, அந்தக் களத்தில் இன்னும் நிறைய எழுதலாம், குறைந்தபட்சம் இரு சிறு நாவல்கள். செய்வேனா என்று தான் தெரியவில்லை.

பின் நவீனத்துவத்தின் போக்கு ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது என்று அஜிதன் தனது இலக்கிய நிகழ்வில்  அறிவிக்கிறார். ஏற்கனவே அவரின் தந்தை கூறிக்கொண்டிருக்கும் கருத்தின்  இணைப்பு குரலாகவே இதை நான் பார்க்கிறேன். உண்மையில் பின்நவீனத்துவ எழுத்து அல்லது போக்கு தமிழில் முடிவுக்கு வந்துவிட்டதா.? உங்களின் சமீபத்திய சிறுகதைத் தொகுப்பிலும் பின்நவீனத்துவ கூறுகள் காணப்படுவதால் உங்களிடம் இக்கேள்வியை முன்வைக்கிறேன்.

‘அனுமனின் வால் நீண்டது தான் உலகின் முதல் மேஜிக் ரியலிசம்’ என்று இந்திரா பார்த்தசாரதி சிறுகதையொன்றில் எழுதியிருப்பார். (பின்நவீனத்துவத்தையும், மாய யதார்த்தத்தையும் இணைப்பது, அல்லது ஒன்றின் தொடர்ச்சியாக மற்றொன்றை காண்பது என்ற போக்கு உள்ளதால்  இதைக் குறிப்பிடுகிறேன்)  Don Quixote ,  Tristram Shandy போன்ற, பின்நவீனத்துவ கூறுகள் கொண்டதாக  இன்று  சுட்டப்படும் படைப்புக்கள்,   பின்நவீனத்துவம் என்ற சொல்லாடல் உருவாகுவதற்கு சில நூற்றாண்டுகள் முன்பே எழுதப்பட்டு விட்டன. கதைக்குள் கதை (frame story), போன்ற யுத்திகள் அதற்கும் முன்னரே அரேபிய இரவுகள், விக்ரமாதித்யன்/வேதாளம் கதைகளில் உள்ளன. 

பெயர் சூட்டப்படுவதற்கு  வெகு காலம் முன்பிலிருந்தே எல்லா வகையான எழுத்துப் போக்குகளும் இருந்துள்ளன என்று பார்க்க முடிகிறது. இந்தப் பெயர் சூட்டுதல் என்பதே கூட அறுதியான ஒன்றாகத் தெரியவில்லை, ஒரு வகைமையின் சாயலை மற்றொன்றில் காண முடிகிறது.  எந்த எழுத்து முறையும்  முற்றிலும் முடியாது என்று தான் என் எண்ணம். ஒரு காலகட்டத்தில் ஒரு குறிப்பிட வகைமைக்குத் தொய்வு ஏற்படக் கூடும், பின் அந்த வகைமையில் உயர் தரப் படைப்பொன்று வந்தவுடன் அது முழு வீச்சுடன் மீண்டெழும்

ஒரு digression. வகைமை என்றில்லாமல், இலக்கிய அலை தொடர்பாக இதை குறிப்பிட விரும்புகிறேன். Dead White Male என்ற சொல்லாடல்/விமர்சனம், மேற்குலகில் எல்லாத் துறைகளிலும் உண்டு. இறந்த, வெள்ளையின ஆண்களே முன்னிருத்தபடுகிறார்கள் என்பதும் அமெரிக்க/ஐரோப்பிய இலக்கியத்திலும் விமர்சனமாக முன்வைக்கப்படுகிறது. கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக ஒரு வரவேற்கத்தக்க மாற்றம் நிகழ ஆரம்பித்துள்ளது. தற்பால் ஈர்ப்பாளர், மூன்றாம் பாலினத்தவர், ஆசியர், கறுப்பினத்தவரின், அமெரிக்க பூர்வ குடிகளின் புனைவுகள் முன்பை விட அதிகமாக வெளியிடப்பட்டு கவனம் பெற ஆரம்பித்துள்ளன. ஒட்டுமொத்தமாக பார்த்தால், இன்னுமே கூட மிகக் குறைவான சதவீதம் தான். இந்த மாற்றம் நீடித்து பொது போக்காக மாறுமா என்றும் இப்போது சொல்ல இயலாது. இவற்றில் எவை உண்மையான மாற்றத்திற்கான செயல்பாடுகள், எவை புதிய அலையில் சவாரி செய்பவை என்பது ஒரு புறம், (American Fiction திரைப்படம் இதைப் பகடி செய்கிறது) இருந்தாலும், இன்றைய அரசியல், கலாச்சார சூழல்களால், அதற்கான எதிர்வினைகளால்  உருவான நேர்மறை மாற்றத்தின் முதல் படி இது. இந்தப் புனைவுகள் எதார்த்தவாத எழுத்தாகவும், அதி புனைவுகளாகவும் என எல்லா வகைமைகளிலும் எழுதப்படுகின்றன.

‘முற்றுப்புள்ளியுடன் முயல் வலைக்குள் ஒரு பயணம்’ தொகுப்பில் உள்ள கதைகளில் பெரும்பாலானவை, என்னுடைய முதலிரு நூல்கள் எழுதப்பட்ட காலத்தில் எழுதப்பட்டவை தான். செங்கல்பட்டு கதைகளுடன் தான் இவையும் உருவாகின. வேறு வேறு பாணியில் எழுத வேண்டும் என்ற திட்டமிடலுடன் எழுதப்பட்டவை அல்ல. நான் சொல்ல விரும்பும் ஒன்றுக்குப் பொருத்தமாக எனக்குத் தோன்றும் வடிவத்திலும், கூறு கூறுமுறையில்  எழுதுகிறேன். அது எந்த பிரயத்தனமும் இன்றி இயல்பாக நிகழும் ஒன்று தான்.  பின் நவீனத்துவ எழுத்தாக ‘முற்றுப்புள்ளியுடன்..’ தொகுப்பை நான் பார்க்கவில்லை, அதன் கூறுகள் கதைகளில் இருந்தால், அந்தக் கதைகளுக்கு அவை தேவைப்பட்டதால் அவை வந்தமர்ந்தன என்று தான் சொல்ல முடிகிறது.

நீங்கள் திட்டமிட்டு பின்நவீனத்துவ சிறுகதைகள் எழுதவில்லை என்பது புரிகிறது இருந்தாலும் உங்கள் வாசிப்பின் வழியாக இயல்பாகப் புகுந்து அவை இன்று உங்கள் படைப்புகளில் வெளிப்படலாம் இல்லையா.

நிச்சயமாக. சிறார் பதிப்புகளாக வாசித்த இலக்கியங்களில் இந்த அம்சத்தை முதலில் எதிர்கொண்டிருப்பேன். இலக்கிய வாசிப்புக்குள்  நுழைந்த பின், பெரியவர்களுக்கான முழுமையான பதிப்புகளாக அவற்றை வாசித்ததும், இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தங்களில், அன்றாட வாழ்வின் அதி விசித்திர சர்ரியல்  தருணங்களுடன் கூடிய புனைவுகளை எழுதிய Witold Gombrowicz, Bruno Schulz போன்றவர்கள், அவர்களுக்கு சில நூற்றாண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட ‘The Manuscript Found in Saragos’ போன்ற புனைவுகள், எல்லாம் எந்த எழுத்து முறையையும் அன்னியமாக உணர வைக்கவில்லை.  எனவே அவை இயல்பாக வெளிப்பட்டிருக்க கூடும்.

பெரும்பாலான எழுத்தாளர்கள் இயல்புவாத கதைகளை எழுதுவதை அதிகம் விரும்புகிறார்கள். சவால்கள் குறைவானது என்பதாலா அல்லது உடனடியான வாசக கவனம் கிடைக்கும் என்கிற காரணமா?

இது குறித்து உறுதியாகக் கூற முடியாது. முதலில் எழுத ஆரம்பிக்கும் போதே வடிவம் சார்ந்த பரிசோதனைகள் செய்யும் மனநிலை  வாய்க்காமல் இருப்பது,  கூறல் முறை எளிமையாக இருக்கலாம் என்று நினைப்பது என்பன காரணமாக இருக்கலாம். அதன் பின் எழுத்து முறை முதன்மையாகத் தன்னியல்பு சார்ந்த தேர்வாக மாறிவிடுகிறது. ‘கதை’யை முதன்மையாக வைப்பவர்கள், இயல்புவாத எழுத்தை நோக்கி மட்டுமே தன்னிச்சையாக செல்ல கூடும். கூறல் முறையைக் கலைத்துப் போடும் மனநிலை, வடிவம் சார்ந்த ஈர்ப்பு உள்ளவர்கள் மற்றொரு வழியில் யணிக்கலாம், அல்லது இரண்டிலுமே கூட.  வடிவம் மட்டுமே பின்நவீனத்துவம் இல்லை, எதை, எந்த சூழலில், காலகட்டத்தில்  சொல்கிறோம் என்பதும் ஒரு காரணம், அரசதிகாரம் மிதமிஞ்சிய அழுத்தத்தை, கண்காணிப்பைச் செலுத்தும் போது, அதற்கெதிரான எதிர்வினை பின்நவீனத்துவ பாணியில் எழுதுவதும் இயல்பான ஒன்று. வாழைப்பழ தோட்டத்தில் நடந்த படுகொலையை மார்க்வெஸ் மீட்டுருவாக்கம் விதம், Wizard of the Crow நாவல் போன்றவை உடனடியாக நினைவுக்கு வருகின்றன.

ஆரம்பத்திலிருந்தே பின்நவீனத்துவ எழுத்தினுள் செல்பவர்களும் இருந்துள்ளார்கள்.அந்த வகைமையிலும் மொழி சார்ந்த செழுமையும், பிரத்தியேக நடையும், உள்ளடக்கம் சார்ந்த செறிவும் உள்ளது என்பதையும் இலக்கியத்தில் நான் காண்கிறோம்.

எளிதில் கவனம் கிடைக்கும் என்பது காரணமாக இருக்காது என்று நினைக்கிறேன். இயல்புவாத எழுத்தை வெறும் சுய அனுபவக் குறிப்புக்கள், புனைவாகவில்லை, குமாஸ்தா கதைகள், என்ற முத்திரை குத்திடவும் அதிக வாய்ப்புள்ளது, இங்கு Karl Ove Knausgardகுமே அந்த முத்திரை குத்தப்படலாம், எனவே அது எதிர்மறையாகக் கூட சென்று முடியலாம்.  மாறாக எளிதில் கவனிக்கப்படலாம் என்று வடிவ பரிசோதனைகளில் ஈடுபடுவதும் கூட நடக்கலாம்.

இதெல்லாம் யூகங்கள் தான், கலை அறுதியாக அகவயமான ஒன்று.

அகவயமான அல்லது புறவயமான கதைகள் என்கிற வேறுபாடுகள் எழுத்தாளர்களுக்கு எந்தவகையில் முக்கியமான ஒன்றாக மாறுகிறது. உங்கள் கதையாடல்கள் தொண்ணூறு சதவீதம் அகவயமானவை அல்லவா? புறவயமான கதைகள் தரமான இலக்கியம் அல்ல என்கிற கருத்தும் இங்கு நிலவுகிறது.

எழுத்தாளன் எதை, எப்படி எழுதத் தேர்வு செய்கிறான் என்பதையும், வாசகன் எப்படி ஒரு படைப்பை உள்வாங்குகிறான் என்பதையும் குறிப்பிடவே ‘அகவயமான’ என்று கூறினேன். ஒரு படைப்பு ஏன் மேன்மையானது என்றோ அல்லது ஏன் சராசரியானது என்றோ என்பதைப் பற்றி ஓரளவிற்கு மேல் உரையாட முடியாது. என்னதான் விமர்சனப் பார்வைக்கான புறக் காரணங்களை கூறினாலும், அதையும் கடந்து அகவயமான ஒன்று தான் ஒரு படைப்பை அணுகும் விதத்தைத் தீர்மானிக்கின்றது. இப்படியொரு பார்வையும் உள்ளது என்ற புரிதலைத் தருகின்றன என்றளவில் இத்தகைய இலக்கிய உரையாடல்கள் முக்கியமானவை. எழுதுவதிலும் ஓரளவிற்கு மேல் அதற்கான காரணங்களை அணுக முடியாது.

நான் குற்றபுனைவுகள் வாசிக்கிறேன், ஆனால் அறிவியல் புனைவுகள் போன்ற பிற ழானர் எழுத்துக்களுள் என்னால் எப்போதும் நுழைய முடிந்ததில்லை. அதுவும் என் நுண்ணுணர்வு சார்ந்த ஒன்றாகத் தான் இருக்கும். மற்றபடி அகவயமான, புறவயமான எழுத்து என்று எனக்கு எந்த வேறுபாடும் இல்லை. வாசிக்கும் போது எழுத்தாக மட்டுமே அணுகுகிறேன்.  எனக்குத் தெரிந்த அல்லது தெரியாத வாழ்க்கை, தெரிந்த/தெரியாத நிலவியல், உள்முக எழுத்து, அரசியல் எழுத்து, அரசியல் நீக்கம் செய்யப்பட்டவை, minimalism, maximalism நடைகள் என வாசிக்க எனக்குக் குறிப்பிட்ட தேர்வுகள் மட்டுமோ, அல்லது தடைகளோ இருந்ததில்லை. நான் அவற்றை உள்வாங்குவது நான் இலக்கியம் என்று எண்ணும், உணரும் விஷயம் சார்ந்த ஒன்றாக இருக்கிறது. இரண்டிலுமே மிகத் தரமான, சராசரியான எழுத்துக்கள் உள்ளன.

நீங்கள் சொல்வது போல் என்னுடைய பெரும்பாலான புனைவுகள் அகவயமானவையே. செங்கல்பட்டை களமாகப் புனைவுகளில் மட்டும், காலத்தையும், நிலவியலையும் ஓரளவிற்கு விரிவாகச் சொல்ல முயன்றிருக்கிறேன், அவை எந்தளவிற்கு அவற்றில் வெளிப்பட்டுள்ளன  என்பதை வாசிப்பவர்கள் தான் சொல்ல வேண்டும். பிற புனைவுகளில் எந்த காலகட்டத்தில் நிகழ்கிறது (கொரோனா) போன்ற சிறு சுட்டுதல்கள் மட்டுமே உள்ளன.

சில்லுகளில் அலைகழியும் பிம்பங்கள் இயல்புவாத கதையாடல்கள் அடங்கிய தொகுப்பாக இருந்தாலும் மனித வாழ்வின் இருளை மிகவும் மெல்லிய குரலில்  இயல்பாகப் பேசுகிறது? முழுத்தொகுப்பும் இருண்மை நோக்கி நகர்வது  கொஞ்சம் துணிச்சலான முயற்சி இல்லையா?

தனித் தனி அடுக்குகளாக தங்கள் புற/அக வாழ்க்கையைப் பிரித்துக் கொள்வது, compartmentalize செய்வது மனிதர்களுக்கு இயல்பான ஒன்று. எந்த முக்கியத்துவமும் இல்லாத விஷயங்களையும் எந்தக் காரணமும் இன்றி ஒரு அடுக்கில் போட்டு வைத்திருப்பவர்கள்   இருக்கிறார்கள். பொதுவாக இதில் பெரிய சிக்கலெதுவும் ஏற்படுவதில்லை. ஆனால் மிக எளிய விஷயத்தைச் சுரண்டி சுரண்டி, சீழ் பிடிக்கச் செய்பவர்களும், உண்மையில் மிக உளைச்சலைத் தரும் நிகழ்வுகளை, அது உருவாக்கிய உணர்வுகளை தன்னுள் தேக்கி வைத்திருப்பவர்களுக்குள், மிக இருண்மையான அக அடுக்கு உண்டாகிறது, அதை அவர்களே கூட அறியாமலிருக்கக் கூடும். அதன் சுவர்கள் வலிமையாக இருக்கும் வரை தங்களுடைய அன்றாட வாழ்வை எப்போதும் போல் கடந்து செல்ல முடிகிறது.

சராசரி சமூக மனிதனாக மற்றவர்களுடைய கணிப்பில் தெரிபவர்கள், குடிமைச் சமூகத்தின் அங்கமாகத் தன்னைப் பொருத்திக் கொண்டவர்கள், தங்களுக்குள் அத்தகைய அடுக்கைக் கொண்டிருப்பார்கள் என்பதையும்,  ஒரு கட்டத்தில் அதன் இருள்,  சுவர்களினூடே அடுத்த அடுக்குகளுள் கசிய ஆரம்பிப்பதை, அதற்கடுத்த கட்டமாகச் சுவர்கள் வீறல் விழுந்து உடைய ஆரம்பிப்பதையும், அதன் அடுத்த கட்டமாக, அவர்கள் உருவாக்கியுள்ள வாழ்கையை, உறவுகளை, அவர்களே அழித்து கொள்ளும் செயல்பாடுகளை நோக்கி அவர்கள் நகர்வதையும் பற்றி இந்தப் தொகுப்பில் பேசுகிறேன்.

மனதின் பாழ் இருளை, அந்த abyssக்குள் எட்டிப் பார்த்துக் கொண்டேயிருப்பவர்கள், அதில் விழ ஆரம்பித்திருப்பவர்கள், எப்போதுமிருப்பார்கள், எனவே இந்த இருண்மை கலையில் தவிர்க்க முடியாத ஒன்று.

ஆண் பெண் உறவுச்சிக்கல்களின் எதிர்மறை தன்மை அல்லது மீறல்கள் உங்கள் சிறுகதைகளில் வரும்போது கழிவிரக்கம்,குற்றவுணர்வு,உளவியல் சிக்கல்கள் அக்கதாபாத்திரங்கள் அதீதமாக   வெளிப்படுத்துவது இல்லை என்பது சற்று முரண்பாடான ஒன்றாக சில நேரங்களில் தோன்றுகிறதே?

பரஸ்பர அன்போ, மரியாதையோ இல்லாத தம்பதியர், அது வேறு யாருக்கும் புலப்படாமலேயே தாங்கள் மண வாழ்வைக் கழித்து விடுகிறார்கள். கழிவறையில், சிறுநீர் துளிகளைத் தரையில், கழிப்பறை பேஸினில் சிந்தி விட்டு வருவது, அறையை விட்டு வெளியேறும் போது விளக்கை அணைக்காதது என அந்த விலகலுக்கான காரணங்களை என்னவாகும் இருக்கக் கூடும். அவற்றை விட தங்களுக்கிடையேயான  கசப்பை ஒவ்வொரு நொடியும் உணர்ந்து கொண்டே, அவர்கள் எப்படி அன்றாடத்தைக் கடக்கிறார்கள், வேண்டுமேன்றேவோ, தன்னிச்சையாகவோ, உள்ளே ததும்பிக் கொண்டிருக்கும் காழ்ப்பைப் பூடகமாக தங்களுடைய இணையரிடம் எப்படி வெளிப்படுத்துகிறார்கள் என்பதைப் பதிவு செய்ய விரும்பினேன்.

திருமணம் கடந்த உறவுகளிலும், அந்த உறவு எப்படி ஏற்பட்டது, உடல் ஈர்ப்பா, ரசனை சார்ந்த ஒன்றா, இணையர் மீது குற்றமா போன்ற அதற்கான காரணங்களை விட, உறவு ஏற்பட்ட பின், எப்படி, எங்குச் சந்தித்துக் கொள்வது போன்ற நடைமுறை சிக்கல்களையும், மீறலை வெற்றியாகப் பார்க்கும் ஆண், அதனாலேயே அந்த வெற்றி கைநழுவிப் போய்விடும் என்ற பயத்தில் இருப்பதையும், அதே நேரம் பெண் அந்த உறவை இயல்பாக எதிர்கொள்வதையும் பற்றித் தான் எழுத நினைத்தேன்.

இவை ஆண்-பெண் உறவுச் சிக்கல்களில் ஒரு கோணம் மட்டுமே. தம்பதியருக்கிடையேயான வெளித்தெரியா யுத்தத்தை உணர்ந்து விடும் அல்லது புரியாமலேயே குழம்பும் அவர்களுடைய குழந்தைகளின் பார்வை முக்கியமான ஒன்று. மண உறவை மீறிச் செல்லும் போது, அது உருவாக்கும் குற்றவுணர்வு, உடல்//மன உருக்குலைவை  மட்டுமே உருவாக்கும் என்று கூற முடியாது. தன் குற்ற உணர்வை ஈடுகட்டும் விதமாக, தங்கள் இணையிடம் இன்னும் நெருக்கத்தையும், அன்பையும் பொழிவதும் என இன்னும் பல கோணத்தில் எழுத முடியும், எழுதும் எண்ணமிருக்கிறது.

முற்றுப்புள்ளியுடன் முயல் வளைக்குள் ஒரு பயணம் தொகுப்பிலிருக்கும் இன்ஸ்பெக்டர் எக்ஸ் துப்பறியும் கதைகள் வாசிப்பில் ஆர்வத்தைத் தூண்டுகின்றன முழுமையான துப்பறியும் கதைகளாக அவை மாறவிட்டாலும் நுண்ணுணர்வு தளத்தில் அக்கதைகள் வெளிப்படுத்தும் இலக்கியப் பார்வை முக்கியமான ஒன்றாகக் கருதுகிறேன். இன்ஸ்பெக்டர் எக்ஸைப் பயன்படுத்தி இன்னும் தீவிர இலக்கியப் போக்கில் அல்லது அதன் மையத்திற்கு நகரும் துப்பறியும் அல்லது குற்றவியல் கதைகளை உருவாக்கும் எண்ணம் ஏதேனும் உள்ளதா?

ஆம், அவை முழு துப்பறியும் புனைவுகள் அல்ல, அவற்றை நான் மிகவும் நேசிக்கும் சில குற்றபுனைவு உள்வகைமைகளுக்கு ஒரு tributeஆக மட்டுமே பார்க்கிறேன். கொஞ்சம் இலக்கிய பார்வையும் அவற்றில் வந்து விடுகின்றன.

இலக்கியப் போக்கில் செல்லாமல், அதே நேரம் இறுதிப் பக்கத்திற்கு முந்தையதில் புதிய பாத்திரத்தைக் கொண்டு வந்து குற்றவாளியாக்கி அல்லது அது வரை கவனமே பெறாதவரை, அல்லது அதுவரை மிக நல்லவர் என்று சுட்டப்பட்டவரை,  குற்றவாளி என்று முடிப்பது என்றுமில்லாமல், ஒரு குற்றம், அதைச் செய்திருக்கக் கூடிய நாலைந்து பேர், யார்/எதன் மீது கவனம் செலுத்த என வாசகனைத் திசை திருப்புதல் என வாசகனையும் புத்திசாலியாக கருதும், கறாரான ‘யார் செய்தது’/whodunnit உள்வகைமை புனைவை எழுத வேண்டும் என்ற விழித்துக் கொண்டே காணும் பகற்கனவு அவ்வப்போது வருவதுண்டு. சிறந்த ‘யார் செய்தது’ எளிதில் கண்டு பிடிப்பதாக இருக்கக் கூடாது, அதற்காக வாசகனிடம் அவன் துப்பறியத் தேவையான எந்த தகவலையும் மறைக்கவும் கூடாது.  ஒவ்வொரு கட்டத்திலும், அவனுக்கான துப்புக்கள் கொடுத்துக் கொண்டேயிருக்க வேண்டும், சாதாரண தகவல்களுக்கிடையே அவற்றைக் கண்டுணர்வது அவன் பாடு. இவையனைத்தும் சரியாக அமைந்து, ‘என்னால் யூகிக்கவே முடியவில்லை’ என வாசகனை வியக்க வைப்பது எளிதல்ல.  எழுத்தாளன்/வாசகன் இணைந்து ஆடும் இந்த விளையாட்டு, கனவாகவே நீடிக்கும் என்று நினைக்கிறேன்.

உங்கள் சிறுகதைகள் வாழ்வின் மீதான நம்பிக்கைகளை விதைப்பது இல்லை,ஒருவிதமான அசெளகிரயத்தை சிலநாட்களுக்கு அளித்து விடுகிறது? முக்கியமாக மணம் மற்றும் புதைமணல் போன்ற கதைகளைக் கூறலாம். அவநம்பிக்கை நகர்ந்து மீண்டும் அவநம்பிக்கையை நோக்கித் திரும்பும் போது எழுத்தாளராக நீங்கள் வெற்றி பெறலாம் ஆனால் வாசகப் பரப்பில் நீங்கள் கைவிடப்படும் அபாயம் நிகழலாம் இல்லையா?

மரணத்தை எதிர்கொள்ளுதல் பற்றிய எண்ணங்களினால் உருவானவை மணம், புதைமணல் கதைகள். அருண் ஷோரியின் ‘Preparing for Death’ நூலில் விவரிக்கப்பட்டுள்ளதைப் போல், மரணத்திற்காகத் தயார்ப் படுத்திக் கொள்ளுதல், ஞானிகளுக்கும், லௌகீகத்தினூடேயும் தங்கள் மனதை ஓரளவிற்கேனும் பழக்கப் படுத்தியவர்களுக்கே சாத்தியம்.  இறப்பு தவிர்க்க முடியாதது என்பதையும், காலப்பெருவெளியில் நாமனைவரும் சிறு துகள்களே என்பதையும் உணர்ந்திருந்தாலும், பெரும்பாலோனோர், தான் இல்லாத உலகைப் பற்றி யோசிக்கும் போது, சில கணங்களுக்கேனும் அச்சத்தையே அடைகிறார்கள். முதியவர்கள் மட்டுமல்ல, எந்த வயதினரையும் பீடிக்கக் கூடிய பீதி இது.  எனவே, மணம் கதையில் முதியவர், புதைமணலில் முப்பதுகளில் இருப்பவர்

சுரங்கப்பாதையின் முடிவிற்கு தட்டுத் தடுமாறிச் சென்று, வெளிச்சக் கீற்றைப் பார்க்கும் நல்லூழ் எல்லோருக்கும் கிட்டுவதில்லை, இந்தக் தொகுப்பிலுள்ள பாத்திரங்கள் தனியர்கள், மிகவும் உள்முக நோக்கு உடையவர்கள், பிறரிடம் தங்களுடைய உணர்வு நிலையைப் பற்றி, உளக் கொந்தளிப்பைப் பற்றி,  சின்ன சுட்டுதலைக் கூட பகிர்ந்து கொள்ள இயலாதவர்கள். பகிர்தல் மூலம் கிடைக்கக் கூடிய சிறு ஆசுவாசம் கூட அவர்களுக்குச் சாத்தியமில்லாத ஒன்று. எனவே அவர்கள் எப்போதும் சுரங்கத்தின் இருட்டினுள் உழல்பவர்களாக இருக்கிறார்கள். அதனால் நீங்கள் சொல்வது போல் அவநம்பிக்கையை நோக்கிய வட்டப் பயணமாக இந்தக் கதைகள் அமைந்து விடுகின்றன.

இந்தக் கதைகள் வாசகர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துமா என்று தெரியவில்லை, ஆனால் நம்பிக்கையின் சிறு கீற்றை இவற்றினுள் அனுமதித்தால் இவை தங்கள் நேர்மையை இழந்து விடும்.

வாசகர்களுக்கு ஒவ்வாமை அளிக்கும் என்றும் நான் கருதவில்லை. இதை இப்படி எடுத்துக் கொள்ளலாம் தற்போதைக்கு வேகமாக கவனம் கிடைக்கும் சிறுகதைகள் சில  மீட்சி என்கிற ஒற்றைத் தத்துவத்தை நோக்கி நகரக்கூடியதாகப் பல நேரங்களில் உள்ளது.சமகால வாழ்வில் மீட்சியைத் தேடி அலைந்து கொண்டிருக்கும் வாசகர்களும்  இப்படிப்பட்ட கதைகளுடன் தங்களை பொருத்திக்  கொள்வதை விரும்புகிறார்கள்.  இருண்மை என்பதை நிஜ வாழ்வில்,வாசிப்பில் தவிர்க்க அல்லது கடக்க விரும்பும் ஒரு வாசக பரப்பாக மாறிக் கொண்டிருக்கும் நவீனத் தமிழிலக்கிய சூழலில் முற்றிலும் இருண்மை கதைகள் கவனம் பெறும் என்று நினைக்கிறீர்களா?

ஆம், நீங்கள் குறிப்பிடுவது போல் மீட்சி என்ற ஒன்று என் கதைகளில் இல்லை. அது குறித்த அவநம்பிக்கை எனக்கில்லை, மீட்சியின் தருணங்கள் சிலருக்கு, அல்லது நிறைய பேருக்கு வாய்க்கக் கூடும், வாய்க்கின்றது என்பதை ஏற்றுக் கொள்கிறேன், என்னுடைய புனைவுலகின்  அதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டதாக இல்லை. இதற்கான வாசகர்களும் இருப்பார்கள் என்று தான் நினைக்கிறேன்.

இயர்ஜீரே நாவல் படிக்க துவங்கிய நேரத்தில் இக்கேள்வி தோன்றியது  உங்கள் படைப்புகளில் பால்யத்தின் நினைவுகள் புனைவாக மாறுகிறது.ஒரு வகையில் பால்யத்தின் காலம் என்கிற சூழலை நீங்கள் முடிக்க விரும்புவதில்லை அதைக்  கொந்தளிப்பான ஒன்றாக அல்லது இனிய இன்பமான நினைவுகளாக மாற்றாமல் அதைச் சூழலான ஒரு பாதையில் மீண்டும் மீண்டும் அழைத்துச் செல்வது மாதிரி எனக்குத் தோன்றுகிறது,இதைப்பற்றி நீங்கள் கூற விரும்புவது?

நீங்கள் குறிப்பிட்டுள்ளது சரி, முற்றிலும் இன்பமாகவோ, துயரமாகவோ பால்யத்தை நான் பார்க்கவில்லை. குடும்ப அழுத்தம், வன்முறை, அந்த வயதில் சந்திக்க நேரிடும் அவமானங்கள், இவற்றை ஈடு செய்யும் நட்பு, அது தரும் ஆசுவாசம், வாசிப்பு தரும் தற்காலிக விடுதலை என்ற சுழற்சியாகவே ‘அவனின்’ வாழ்க்கை இருக்கிறது. இயர் ஜீரோவின் முடிவில், அவன் வாழ்வின் புதிய அத்தியாயத்திற்குள் நுழைகிறான் என்றாலும், அவன் அப்போதும் அதே சுழற்சியில் தான் இருக்கின்றான், அந்த அத்தியாயத்தைப் பற்றி இனிமேல் எழுதும் போதும் இந்தத் தன்மை இருக்கும்.

செங்கல்பட்டை களமாகக் கொண்ட புனைவுலகை உருவாக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றிய பின் அதே பாத்திரங்கள், வேறு வேறு கதைகளில் தலை காட்டுவது, அதே இடங்கள் அவ்வப்போது இடம் பெறுவது என்பதை உணர்ந்தே செய்தேன். அப்போது இயர் ஜீரோ எழுதும் எண்ணமில்லை. அன்றாடம் நாம் பார்க்கும் ஒரு சிறு நிகழ்வை எப்போதும் போல் ஒரு மாலை கவனிக்கும் போது அன்று உருவாகிய எண்ணத்தில் தான் இயர் ஜீரோ ஆரம்பித்தது. அப்போதும் நாவலாக எழுத வேண்டுமென்ற எண்ணமில்லை, நண்பர் அதற்கான சாத்தியக்கூற்றைச் சுட்டிய பின்னரே விரிவாக்க ஆரம்பித்தேன். அதிலும் சில பொது அம்சங்கள் தவிர்க்க முடியாமல் வந்தமர்ந்தன. இவை இந்த இழை கதைகளுக்கு அத்தியாவசியமான ஒன்றாக எனக்குத் தோன்றுகிறது.

இந்தச் சுழலின் முடிவுக்கு நான் இன்னும் வரவில்லை. செங்கல்பட்டின் புனைவுலகில்  ஒன்றையொன்று தொட்டும் விலகியும் செல்லும் பாதைகள் பல இன்னும் நான் எழுத்தில் பயணிக்காமல் உள்ளன.

இயர்ஜீரே நாவலின்  அத்தியாயங்கள் தனித்தனியாக வசிக்கும் நேரங்களில் அளிக்கும்  சுவாரசியம் எனக்குப் பிடித்திருக்கிறது, முழுமையான நாவல் வடிவாக அது மாறவில்லையோ என்கிற கருத்தும் உடனே தோன்றுகிறது? நாவலுக்கு உண்டான சரியான அழுத்தம் மற்றும் வடிவம் சார்ந்து  இன்னும் அழுத்தமான ஒன்றாக அது  வெளிப்பட்டிருக்கலாம் இல்லையா? அல்லது என் கருத்து தவறா?

இயர் ஜீரோ, எபிசோடிக் தன்மையைக் கொண்டது தான். இறுதி பகுதியை, அந்த கல்வியாண்டின் இறுதி மாதங்களை, இன்னும் நிதானமாகக் கொண்டு சென்றிருக்கலாம் என்று எண்ணுகிறேன், முந்தைய பகுதிகளை ஒப்பிடும் போது விரைவாக முடிந்து முடிகிறது. அந்தப் பகுதிகள் இன்னும் அழுத்தமாக இருந்திருக்கலாம்.

உங்கள் படைப்புகளில் அந்த நேர்மை என்கிற தன்மை அதிகம் வெளிப்படுகிறது.எப்படியெனில் வாசகர்களுக்குக் குளிர்ச்சியான அல்லது கிளர்ச்சி அளிக்கும்  மனதை நெகிழ வைக்கும் இலக்கிய கீற்றுகள் வெளிப்படுவது இல்லை. எனது அகவெளிப்பாடு இவை வேண்டுமென்றால் எடுத்துக் கொள்ளுங்கள் இல்லையென்றாலும் சிக்கல் இல்லை என்கிற ஒதுக்கல் ஒன்று உள்ளது? அது இயல்பான ஒன்றா அல்லது நீங்களாகவே எடுத்துக் கொண்ட முடிவா?

ஒதுக்கல் இல்லை, எழுதுவதை நிறைய பேர் வாசிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவன் தான் நானும். ஆனால் எழுத்தின் தரம், தரமின்மை என்பதைக் கடந்து, அந்த எழுத்து என் அகவெளிப்பாடாக மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். எனவே தான் ‘எளிய, உப்பு சப்பற்ற பால்யத்தின் கதைகள்’ என்று சுட்டப்படக் கூடிய கதைகளையும், இருண்மையான புனைவுகளையும், முற்றுப்புள்ளி பற்றியும் எழுத முடிகிறது. இது இயல்பாக அமைந்தது தான்.

சமகால இலக்கியத்தில்  முகம் கூட அதிகம் தெரியாமல் ஒதுக்கியே நிற்கும்  நபர் நீங்கள், இந்த அம்சம் எந்தளவிற்கு இலக்கியச் செயல்பாடுகளுக்கு உதவுகிறது அல்லது இழப்புகளைத் தருகிறது?

ஒதுங்கி இருப்பது தன்னிச்சையாக நேர்ந்துவிட்ட ஒன்று தான். அது எந்த வகையிலும் உதவுவதில்லை. இழப்பென்றும் பெரிதாக ஒன்றுமில்லை. அன்றாடம் நிகழக்கூடிய இலக்கியம் சார்ந்த உரையாடல்கள் இன்னும் அதிகமாக இருந்திருக்கும் என்று வேண்டுமானால் கூறலாம். நம்மைப் பாதித்த, பிடித்த புனைவுகள், கவிதைகள் குறித்துப் பேசுவது, ‘இன்று ஒரு சிறந்த கவிதையைப் படித்தேன்’ என்று சொல்வதே கூட உற்சாகமான விஷயம் இல்லையா.

உற்சாகமான ஒன்றே ஆனால் சமகால இலக்கியச் சூழலில் அப்படிப்பட்ட கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள இயலும் என்பதை நம்புகிறீர்களா? அறிமுகம் மற்றும் நட்பு வட்டாரத்தில் இல்லாத சக எழுத்தாளரிடம் இத்தகைய உரையாடல்களை முன்வைப்பது என்பது தற்போது எப்படிப்பட்டதாக உள்ளது?

வாசித்த நூல்கள் பற்றி கட்டுரைகளாக பதாகை, சொல்வனம் இதழ்களில் எழுதியிருக்கிறேன், மற்றபடி எழுத்தாளர்களுடன் நேரடி உரையாடல்கள் நடந்ததில்லை, எனவே இது குறித்துச் சொல்லத் தெரியவில்லை.

தொடர்ந்து புனைவுகளில் சுழல்வது தனிப்பட்ட வாழ்விற்கு எவ்வளவு ஆக்கப்பூர்வமான ஒன்றாக உள்ளது?அல்லது கடினமான ஒன்றாக உள்ளதா?எழுத்தில் எதிர்கால இலக்குகள் உள்ளனவா?

எழுதுவதால், தனி வாழ்வில் நேர்மறை, எதிர்மறை விளைவுகள் எதுவும் இதுவரை நேரவில்லை. அரை பக்கமோ, ஒரு பக்கமோ எழுதினால், – அது புனைவன்றி, நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வேறேதேனும் சிறு குறிப்பாக இருந்தாலும் கூட-, அல்லது எழுதியதை அழித்தாலும் கூட, தனிப்பட்ட முறையில் அன்றைய பொழுதை பயனுள்ளதாக உணர்கிறேன்.

தங்களது சமீபத்திய சிறுகதைகள் படிக்கும் போது  சரியான மேம்பட்ட கதைகள் உங்களிடமிருந்து வர ஆரம்பித்துள்ளது. மனிதர்களின் கசடுகளை இயல்பாகக் கூறும் நேரத்தில் பாசாங்குகள் எதுவுமற்ற மொழி நடையும் கூடிவந்திருக்கிறது?இன்னும் அற்புதமான சில கதைகள் அல்லது நாவல்கள் இந்த வரிசையில் தொடரும் எண்ணம் உள்ளதா? எதிர்காலத்திற்கான கனவுகள் திட்டமிடல்கள் பற்றியும் கூறலாம்

தொடர்ந்து எழுதுவதால் உண்டான மாற்றமாக இருக்கலாம். சமீபத்திய கதைகள், தன்னுள் ஒரு வலுவான அடித்தளத்தைக் கொண்டிருப்பதும் ஒரு காரணம். ஒப்பீட்டளவில், கடந்த காலம், பால்யம் என்று செல்லும் போது, அது இலகுவான ஒன்றாகத் தோன்றுவதும் இயல்பே.

வாழ்வின் எண்ணற்ற சிக்கல்கள், மனநிலைகள், விழைவுகள், பிழற்வுகள், அபத்தங்கள் அவை வெளிப்படும் தருணங்கள், பற்றி எழுத நிறையவே உள்ளது.

லட்சியம், அதற்கான திட்டமிடல் என்று சொல்லிக் கொள்ளும்படி பெரிதாக எதுவுமில்லை. செயலூக்கத்துடன் தொடர்ச்சியாக எழுத வேண்டும், அது எங்கு இட்டுச் செல்கிறதோ, அந்தப் பாதையில்  பயணப்பட வேண்டியது தான்.

Previous articleபுடுக்காட்டி
க.விக்னேஸ்வரன்
தி.ஜானகிராமன் நூற்றாண்டுச் சிறப்பிதழ், நகுலன் நூற்றாண்டுச் சிறப்பிதழ், ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி 200 ஆவது ஆண்டுச் சிறப்பிதழ், கனலி நேர்காணல்கள் போன்ற நூல்களைத் தொகுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.